Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் நோக்கம் மகிமையான வெற்றியடைகிறது

யெகோவாவின் நோக்கம் மகிமையான வெற்றியடைகிறது

அதிகாரம் 24

யெகோவாவின் நோக்கம் மகிமையான வெற்றியடைகிறது

அறிவுள்ள சிருஷ்டிகள் யாவரும் உண்மையான வணக்கத்தில் ஒன்றுபட்டு அவர்களெல்லாரும் கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை அனுபவிப்பது—இதுவே யெகோவாவின் ஞானமும் அன்புமுள்ள நோக்கம். நீதியை நேசிக்கிறவர்கள் எல்லாரும் மனமார விரும்புவதும் இதுவே.

2 யெகோவா தம்முடைய படைப்பு வேலையைத் தொடங்கினபோது இந்த மகத்தான நோக்கத்தை நிறைவேற்றத் தொடங்கினார். அவருடைய முதல் படைப்பு ஒரு குமாரன், இவர் “அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாய்” நிரூபித்தார். (எபி. 1:1-3) கடவுள் மாத்திரமே தனியாக இவரைப் படைத்ததனால் இவர் தனிச் சிறப்புடையவர். இவரைக் கொண்டு மற்றக் குமாரர்கள் உண்டாக்கப்பட்டார்கள்—முதல் பரலோகங்களில் தூதர்கள், பின்பு பூமியில் மனிதன். (யோபு 38:7; லூக்கா 3:38) இந்த எல்லாக் குமாரர்களும் ஒரே குடும்ப அமைப்பாக இருந்தார்கள். இவர்களெல்லாருக்கும் யெகோவா தேவனே கடவுள், அவர் ஒருவரையே வணங்க வேண்டும். அவர் சர்வலோக ஈடற்றப் பேரரசர். அவர் அவர்களுடைய அன்புள்ள தகப்பனாகவும் இருந்தார். அவ்வாறே அவர் உங்களுடைய தகப்பனாக இருக்கிறாரா, நீங்கள் அவருடைய பிள்ளைகளில் ஒருவரா? இது எத்தகைய அருமையான உறவாயிருக்கும்!

3 எனினும், நம்முடைய முதல் மனித பெற்றோர் துணிகர பாவிகளாக மரணத் தீர்ப்பளிக்கப்பட்டபோது, அவர்கள் ஏதேனிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள், கடவுள் அவர்களைத் தம்முடையவர்களல்லவென்று கைவிட்டார். அவர்கள் யெகோவாவின் சர்வலோகக் குடும்பத்தின் பாகமாக இனிமேலும் இல்லை. (ஆதி. 3:22-24; உபாகமம் 32:4, 5-ஐ ஒத்துப் பாருங்கள்.) நாமெல்லாரும், பாவியாகிய ஆதாமின் சந்ததியாராதலால், பாவப் போக்குகளுடன் பிறந்திருக்கிறோம். நாம் கடவுளுடைய குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பெற்றோரின் பிள்ளைகளாதலால், வெறுமென மனிதப் பிறப்பின் ஆதாரத்தின் பேரில் கடவுளுடைய குமாரரென நாம் உரிமைபாராட்ட முடியாது. ஆனால் ஆதாமின் சந்ததியாருக்குள் சிலர் நீதியை நேசிப்பார்களென யெகோவா அறிந்திருந்தார், இவர்கள் கடவுளுடைய பிள்ளைகளின் மகிமையான சுயாதீனத்தை அடையக் கூடியதற்கேதுவாக அவர் அன்புடன் ஏற்பாடு செய்தார்.—ரோமர் 8:20, 21.

இஸ்ரவேலின் தயவுகூரப்பட்ட நிலை

4 ஆதாம் படைக்கப்பட்டு ஏறக்குறைய 2,500 ஆண்டுகளுக்குப் பின், யெகோவா, தம்முடைய குமாரராகத் தம்மோடு உறவு கொண்டிருக்கும் சிலாக்கியத்தை சில மனிதருக்கு மறுபடியும் நீட்டினார். ஆபிரகாமோடு செய்தத் தம்முடைய உடன்படிக்கைக்குப் பொருந்த, யெகோவா இஸ்ரவேலைத் தம்முடைய ஜனமாயிருக்கும்படி தெரிந்து கொண்டார். ஆகவே, எகிப்தின் பார்வோனிடம் இஸ்ரவேலை “என்னுடைய குமாரன்” என்று குறிப்பிட்டுப் பேசினார். (யாத். 4:22, 23; ஆதி. 12:1, 2) பின்னால் அவர் சீனாய் மலையில் இஸ்ரவேலுக்குத் தம்முடைய நியாயப்பிரமாணத்தைக் கொடுத்து, அந்த மக்களை ஒரு ஜனமாக அமைத்து, தம்முடைய நோக்கத்தின் சம்பந்தமாக அவர்களைப் பயன்படுத்தினார். ஒரு ஜனமாகக் கருதுகையில், அவர்கள் யெகோவாவின் “சொந்த ஜனமாக” (“தனிப்பட்ட உடைமையாக,” NW) இருந்ததனால், அவர்கள் கடவுளுடைய “பிள்ளைகள்” (“குமாரர்,” NW) என பேசப்பட்டனர். (உபா. 14:1, 2; ஏசா. 43:1) அந்த ஜனத்துக்குள் குறிப்பிட்ட சில நபர்களுடன் தாம் வைத்துக்கொண்ட விசேஷித்தத் தொடர்புகளின் காரணமாக, யெகோவா அவர்களைக் குமாரரெனக் குறிப்பிட்டார். (1 நாளா. 22:9, 10) இந்த நிலைநிற்கை கடவுளுடன் கொண்டிருந்த உடன்படிக்கை உறவின் பேரில் ஆதாரம் கொண்டது. எனினும் கடவுளுடைய குமாரனாக ஆதாம் கொண்டிருந்த அந்த மகிமையான சுயாதீனத்தை இவர்கள் அனுபவித்தார்களென இது பொருள்படவில்லை. இவர்கள் பாவத்துக்கும் மரணத்துக்கும் இன்னும் அடிமைப்பட்டிருந்தார்கள்.

5 இருந்தபோதிலும், குமாரராக அவர்களுக்குக் கடவுளுடன் தயவுகூர்ந்த நிலைநிற்கை இருந்தது. மேலும் தங்கள் பரம தகப்பனுக்கு மரியாதை கொடுத்து அவருடைய நோக்கத்துக்குப் பொருந்தியவாறு உழைக்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருந்தது. கடவுளைத் தங்கள் தகப்பனென்று உரிமை பாராட்டுவது மட்டுமல்லாமல், அவருடைய குமாரராகத் ‘தங்களை நிரூபிக்க’ வேண்டிய—இந்தக் கடமையை அவர்கள் நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தை இயேசு அறிவுறுத்திக் கூறினார். (மத். 5:43-48, NW; மல்கியா 1:6) எனினும், ஒரு ஜனமாக யூதர்கள் இதைச் செய்யத் தவறினார்கள். ஆகவே, இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்தின் கடைசி ஆண்டின்போது, இயேசுவைக் கொல்ல வகைத்தேடின யூதர்கள், “ஒரே பிதா எங்களுக்குண்டு, அவர் தேவன்,” என்று சொன்னபோது, அவர்களுடைய செயல்களும் அவர்கள் காட்டின ஆவியும் அத்தகைய உரிமை பாராட்டலைப் பொய்யாக்கினவென்று இயேசு உறுதியாய்ச் சுட்டிக்காட்டினார். (யோவான் 8:41, 44, 47) பொ.ச. 33-ல் நியாயப்பிரமாண உடன்படிக்கையைக் கடவுள் முடிவு செய்தார், இஸ்ரவேல் அனுபவித்து மகிழ்ந்த அந்தத் தனிப்பட்ட உறவுக்குரிய ஆதாரம் முடிவுற்றது. என்றாலும், மனிதவர்க்கத்துக்குள் யெகோவாவினால் எற்கப்பட்ட குமாரர்கள் யெகோவாவுக்கு இல்லாமற் போகவில்லை.

யெகோவா தம்முடைய ஜனத்தை ஒற்றுமைப்படுத்துகிறார்

6 அப்போஸ்தலனாகிய பவுல் எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு, யெகோவா தம்முடைய ஜனத்தை ஒற்றுமைப்படுத்துவதற்குக் கெண்டிருந்தத் திட்டத்தைப் பற்றி—அதாவது, செயலில் விசுவாசங் காட்டுகிறவர்கள் தம்முடைய குடும்பத்தின் நேசிக்கப்படும் உறுப்பினராவதற்கேதுவான கடவுளுடைய ஏற்பாட்டைப் பற்றிப் பின்வருமாறு எழுதினான்: “காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி [நிர்வாகத்தின்படி, NW] பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று, தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை [கடவுள்] எங்களுக்கு அறிவித்தார்.” (எபே. 1:9, 10) இந்த “நிர்வாகம்” இயேசு கிறிஸ்துவைச் சுற்றி ஒருமுகப்படுகிறது. அவர் மூலமாய், மனிதர் கடவுளுக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்ட நிலைமைக்குள் கொண்டுவரப்படுகிறார்கள்—சிலர் பரலோகத்தில் வாழும் எதிர்பார்ப்புடன் மற்றவர்கள், பூமியில் வாழும் எதிப்பார்ப்புடன்—யெகோவாவுக்கு உண்மைத் தவறாமையை நிரூபித்திருக்கிற கடவுளுடைய தூதர் குமாரர்களுடன் ஒற்றுமையில் சேவிப்பதற்கு இவ்வாறு கொண்டுவரப்படுகிறார்கள்.

7 முதலாவது, பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே தொடங்கி “பரலோகத்திலிருக்கிறவைக”ளுக்கு, அதாவது பரலோக ராஜ்யத்தில் கிறிஸ்துவோடு உடன்சுதந்தரவாளிகளாக இருக்கப்போகிறவர்களுக்குக் கவனம் செலுத்தப்பட்டது. இயேசுவின் பலியின் விலைமதிப்பில் அவர்களுக்கு இருந்த விசுவாசத்தின் ஆதாரத்தின் பேரில் கடவுள் அவர்களை நீதிமான்களாகத் தீர்த்தார். (ரோமர் 5:1, 2) பின்பு அவர்கள் “மறுபடியும் பிறந்தார்கள்,” அல்லது பரலோக வாழ்க்கையின் எதிர்பார்ப்புடன் கடவுளுடைய குமாரராகப் பிறப்பிக்கப்பட்டார்கள். (யோவான் 3:3; 1:12, 13) ஆவிக்குரிய ஜனமாக இவர்களுடன் கடவுள் புதிய உடன்படிக்கை செய்தார். உரிய காலத்தில், யூதரும் புறஜாதியாரும் அதில் சேர்க்கப்பட வேண்டும், இவர்கள் மொத்தம் 1,44,000 பேராவர்.—கலாத். 3:26-29; வெளி. 14:1.

8 பரலோக ராஜ்யத்தின் இத்தகைய சுதந்தரவாளிகளின் மீதிபேர், மாம்சத்தில் இன்னும் அபூரணராக இருந்தாலும், பரம தகப்பனோடு அருமையான மிக நெருங்கிய உறவை அனுபவித்து மகிழ்கின்றனர். இதைக் குறித்துப் பவுல் பின்வருமாறு எழுதினான்: “நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால் அப்பா பிதாவே என்று கூப்பிடும் தமது குமாரனின் ஆவியைக் கடவுள் உங்கள் இருதயங்களில் அனுப்பினார். ஆகையால் இனி நீ அடிமையல்ல, புத்திரனே. நீ புத்திரனேயானால் கடவுளின் மூலமாய்ச் சுதந்தரனுமாம்.” (கலாத். 4:6, 7, தி.மொ.) “அப்பா” என்ற அரமேயிக் சொல்லின் பொருள் “தகப்பன்” என்பதாகும், ஆனால் இது பேரன்புடன் அழைக்கும் முறை—இளம்பிள்ளை தன் தகப்பனை அழைப்பதற்குப் பயன்படுத்தும் வகையான சொல்லாகும். இயேசுவின் பலியின் மிக உயர்ந்த மதிப்பின் காரணமாகவும் கடவுளுடைய சொந்தத் தகுதியற்றத் தயவின் காரணமாகவும், ஆவியால் அபிஷேகஞ்செய்யப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்கள், நியாயப்பிரமாணத்தின் கீழ் அபூரண மனிதருக்குக் கூடியதாயிருந்த எதைப் பார்க்கிலும் அதிக நெருங்கிய உறவைக் கடவுளுடன் அனுபவித்து மகிழ்கிறார்கள். எனினும், அவர்களுக்கு இனிமேலும் வைக்கப்பட்டிருப்பது இன்னும் மிக அதிசயமானது.

9 அவர்கள் மரணம் வரையில் உண்மையுள்ளவர்களாக நிரூபித்தால், பரலோகங்களில் சாவாமையுடைய வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவதனால் தாங்கள் குமாரராயிருக்கும் நிலையை முழுமையாயும் மெய்யாகவும் அனுபவிக்கும் உணர்வைப் பெறுவார்கள். அங்கே, யெகோவா தேவனின் முன்னிலையில்தானே ஒற்றுமையுடன் சேவிக்கும் சிலாக்கியம் அவர்களுக்கு இருக்கும். ஒப்பிட்டுப் பார்க்கையில், கடவுளுடைய இந்தக் குமாரரின் ஒரு சிறு தொகையினரே இன்னும் பூமியில் இருக்கிறார்கள்.—ரோமர் 8:14, 23; 1 யோவான் 3:1, 2.

“பூலோகத்திலிருக்கிறவைகளைக்” கூட்டிச்சேர்த்தல்

10 பரலோக வாழ்க்கையை எதிர்நோக்காகக் கொண்டு கடவுளுடைய குடும்பத்துக்குள் மனிதர் கூட்டிச் சேர்க்கப்படுவதைச் சாத்தியமாக்குகிற இதே “நிர்வாகம்” “பூலோகத்திலிருக்கிறவைக”ளுக்கும் கவனத்தைச் செலுத்துகிறது. கிறிஸ்துவின் பலியில் விசுவாசங்கொண்டுள்ள ஆட்கள், முக்கியமாய் பொ.ச. 1935 முதற்கொண்டு, பூமியில் நித்திய ஜீவனையடையும் எதிர்நோக்குடன் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள். அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேருடன் இவர்கள் ஒன்றுசேர்ந்து உழைத்து யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்துகிறார்கள், அவருடைய வணக்கத்தை உயர்த்துகிறார்கள். (செப். 3:9; ஏசா. 2:2, 3) இவர்களும், யெகோவாவே உயிரின் ஊற்றுமூலமென்பதை மதித்துணர்ந்து, ஆழ்ந்த மரியாதையுடன் அவரைத் “தகப்பனே” என்றழைக்கிறார்கள், மேலும் தம்முடைய குமாரர் செய்யவேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறபடி அவருடைய பண்புகளை வாழ்க்கையில் பிரதிபலிக்கவும் இவர்கள் ஊக்கமாய்ப் பிரயாசப்படுகிறார்கள். இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தில் கொண்டுள்ள தங்களுடைய விசவாசத்தின் ஆதாரத்தின் பேரில் இவர்கள் அவருக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்ட நிலைநிற்கையை அனுபவித்து மகிழ்கிறார்கள். (மத். 6:9, NW; வெளி. 7:9, 14) ஆனால், கடவுள் இவர்களைத் தம்முடைய பிள்ளைகளென முழுமையாய் ஒப்புக்கொள்ளும் மகிழ்ச்சி இவர்களுக்கு இன்னும் எதிர்காலத்தில் இருக்கிறதென்று இவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

11 ரோமர் 8:19-21-ல் காட்டியிருக்கிறபடி, இவர்கள் “தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்கு” மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறார்கள், ஏனென்றால், மனித சிருஷ்டியாகிய இவர்கள் “அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்”படுவதற்கான அந்தக் காலம் அப்பொழுது வரும். தங்கள் பரலோகப் பரிசை அடைந்த ஆவியால் அபிஷேகஞ் செய்யப்பட்ட கடவுளுடைய குமாரர்கள், மகிமைப்படுத்தப்பட்ட கார்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உடனுழைப்பாளராகப் போர் நடவடிக்கையில் ஈடுபட தொடங்கிவிட்டதன் அத்தாட்சியை இங்கே பூமியிலிக்கும் மனிதர் காண்கையில் இந்த “வெளிப்படுவது” நடந்தேறும். இது இந்தப் பொல்லாதக் காரிய ஒழுங்குமுறை முழுவதும் அழிக்கப்படுவதிலும், அதைப் பின்தொடர்ந்து கிறிஸ்துவுடன் அரசராகவும் ஆசாரியராகவும் இந்தக் “கடவுளின் குமாரர்கள்” பங்குகொள்கிற கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சியின் ஆசீர்வாதங்கள் வருவதிலும் தெளிவாக காணப்படும்.—வெளி. 2:26, 27; 20:6.

12 இந்த மிகுந்த உபத்திரவம் கடந்து சென்றபின், கிறிஸ்துவுடன் ஒற்றுமைப்படுத்தப்பட்டிருக்கிற கடவுளுடைய இந்தக் குமாரர் கடவுளைத் துதிப்பதில் தங்கள் குரல்களை ஒருமிக்க எழுப்பி, மகிழ்ச்சியுடன் பின்வருமாறு அறிவிக்கையில் எத்தகைய உயிர்ப்பூட்டும் களிப்பாயிருக்கும்: “யெகோவா தேவனே, சர்வ வல்லமையுள்ளவரே, உம்முடைய செயல்கள் மகத்துவமும் அதிசயமுமானவை. நித்தியத்தின் ராஜாவே, உம்முடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவை. யெகோவாவே, நீர் ஒருவரே உண்மைத் தவறாதவராதலால், யார் உமக்கு உண்மையில் பயப்படாமலும், உம்முடைய பெயரை மகிமைப்படுத்தாமலும் இருப்பான்? உம்முடைய நீதியுள்ள கட்டளைகள் வெளிப்படுத்தப்பட்டிருப்பதால், சகல தேசத்தாரும் வந்து உமக்கு முன்பாக வணங்குவார்கள்.”! (வெளி. 15:3, 4, NW) ஆம், முன்னிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து வந்த ஆட்களாலாகிய மனிதவர்க்கம் முழுவதும், ஊண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுவார்கள். ஞாபகார்த்தக் கல்லறைகளிலிருப்போரும் உயிர்த்தெழுப்பப்பட்டு யெகோவாவைத் துதிப்பதில் தங்கள் குரல்களை ஒன்றுசேர்க்க வாய்ப்பளிக்கப்படுவார்கள்.

13 பிசாசாகிய சாத்தான் “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுளாக” இனிமேலும் இரான். இங்கே பூமியில் யெகோவாவை வணங்குகிறவர்கள் அவனுடைய இழிவான செல்வாக்கை எதிர்த்து இனிமேலும் போராட வேண்டியதில்லை. (2 கொரி. 4:4; வெளி. 20:1-3) இனிமேலும் பொய் மதம் நம்முடைய அன்புள்ள கடவுளைத் தவறாக எடுத்துரைத்து மனித சமுதாயத்தைப் பிரிக்கும் செல்வாக்காக சேவிக்காது. உண்மையான கடவுளுடைய ஊழியர்கள் அரசாங்க அதிகாரத்திலிருக்கும் மனிதரின் கைகளில் அநீதியையும் விடாத் தொந்தரவையும் இனிமேலும் அனுபவியார். மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப் பிழைப்போருக்கு இது எத்தகைய அதிசயமான விடுதலையைக் குறிக்கும்!

14 இயேசு கிறிஸ்து, “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி”யாக, மனிதவர்க்கத்தின கடந்த கால பாவங்களையெல்லாம் நீக்கிப்போட தம்முடைய பலியின் விலைமதிப்பைப் பிரயோகிப்பார். (யோவான் 1:29) பூமியில், இயேசு ஓர் ஆளின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதென்று கூறினபோது, அதை நிரூபிக்க மன்னிக்கப்பட்டவனைச் சுகப்படுத்தினார். (மத். 9:1-7) இவ்வாறே, பரலோகத்திலிருந்தும் அவர், குருடர், செவிடர், ஊமையர், உடல் ஊனமுள்ளவர்கள், மனநோயுற்றோர், மற்றும் எவ்வகை நோயுற்றிருந்தாலும் எல்லாரையும் அற்புதமாய்ச் சுகப்படுத்துவார். படிப்படியாய், கடவுளுடைய நீதியுள்ள வழிகளுக்குத் தங்களை உண்மையுடன் மாற்றியமைத்து வருவதன் மூலம், மனமுவந்த கீழ்ப்படிதலுள்ள எல்லாரும், தங்களிலுள்ள “பாவப்பிரமாணம்” முற்றிலும் நீக்கி இல்லாமற்போகச் செய்யப்படுவர், இவ்வாறு அவர்களுடைய எல்லா செயல்களும், அவர்களுடைய நினைவுகளும், அவர்களுடைய இருதயத்தின் விருப்பங்களும் தங்களுக்கும் கடவுளுக்கும் பிரியமானவையாக இருக்கும். (ரோமர் 7:21-23; ஏசாயா 25:7, 8-ஐயும் வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐயும் ஒத்துப் பாருங்கள்.) ஆயிரம் ஆண்டுகளின் முடிவுக்கு முன்பாக, அவர்கள் முழு மனித பரிபூரணமடைவதற்கு உதவிசெய்யப்பட்டிருப்பார்கள். பாவத்திலிருந்தும் அதன் துயரமளிக்கும் எல்லா விளைவுகளிலிருந்தும் அவர்கள் முற்றிலும் விடுதலையாக்கப்படுவார்கள். பூகோள முழுவதையும் அளாவும் பூமிக்குரிய பரதீஸின் மத்தியில் அவர்கள் ‘கடவுளுடைய சாயலையும் ரூபத்தையும்’ சரியான வகையில் பிரதிபலிப்பார்கள்.—ஆதி. 1:26.

15 கிறிஸ்து, மனிதவர்க்கத்தைப் பரிபூரணத்துக்குக் கொண்டு வந்தப் பின், இந்த வேலைக்காகக் கடவுள் அவருக்குக் கொடுத்த, அதிகாரத்தைத் திரும்ப பிதாவிடம் ஒப்படைப்பார். 1 கொரிந்தியர் 15:28-ல் முன்னறிவித்துள்ளபடி: “சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு; குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.”

16 இப்பொழுது பரிபூரணமாக்கப்பட்ட மனிதவர்க்கம், உயிருள்ள ஒரே உண்மையான கடவுளை என்றென்றும் சேவிப்பதே தங்களுடைய மாற்றமுடியாதத் தெரிவு என்பதை மெய்ப்பித்துக் காட்ட வாய்ப்பு கொடுக்கப்படுவர். ஆகவே, இயேசு கிறிஸ்துவின் மூலமாய் அவர்களைத் தம்முடைய குமாரராக சுவீகாரம் செய்துகொள்வதற்கு முன், யெகோவா, பரிபூரணமாக்கப்பட்ட இந்த மனிதர் எல்லாரையும் முழுதீர்வான, கடைசி பரீட்சைக்குட்படுத்துவார். சாத்தானும் அவனுடைய பேய்களும் காவலிலிருந்து (அபிஸ்ஸிலிருந்து) விடுதலையாக்கப்படுவார்கள். யெகோவாவை உண்மையில் நேசிக்கிறவர்களுக்கு இது நிலையான தீங்கை விளைவிக்காது. ஆனால் உண்மைப் பற்றுறுதியில்லாமல் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமற் போவதற்குத் தங்களை வழிநடத்த அனுமதிக்கிறவர்கள், அந்த முதல் கலகக்காரனோடும் அவனுடைய பேய்களோடும் என்றுமாக அழிக்கப்பட்டுப்போவர்.—வெளி. 20:7-10.

17 இந்தக் கடைசி, தீர்வான பரீட்சையில் உறுதியாய் நிலைநிற்கும் பரிபூரணமாக்கப்பட்ட மனிதர் எல்லாரையும் யெகோவா அப்பொழுது, கிறிஸ்துவின் மூலமாய்த் தம்முடைய குமாரராக அன்புடன் சுவீகாரம் செய்து கொள்ளுவார். அப்பொழுது அவர்கள் “கடவுளின் பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்”தில் முழுமையாய்ப் பங்குகொள்வார்கள். (ரோமர் 8:20) கடைசியாக அவர்கள் கடவுளுடைய ஒற்றுமைப்பட்ட சர்வலோகக் குடும்பத்தின் பாகமாகிறார்கள், அவர்களெல்லாருக்கும், யெகோவாவே என்றென்றும் ஒரே கடவுளும், ஈடற்ற சர்வலோகப் பேரரசரும், அவர்களுடைய அன்புள்ள தகப்பனுமாயிருப்பார். அப்பொழுது பரலோகத்திலும் பூமியிலும் இருக்கும் யெகோவாவின் அறிவுள்ள சிருஷ்டிகள் யாவரும் ஒரே உண்மையுள்ள கடவுளின் வணக்கத்தில், மறுபடியும் ஒன்றுபட்டிருப்பார்கள்.

மறு கலந்தாலோசிப்பு

● ஏதேனில் நடந்த கலகத்துக்கு முன்னால், யெகோவாவை வணங்கின எல்லாருக்கும் அவருடன் என்ன உறவு இருந்தது?

● கடவுளுடைய குமாரரின் பேரில் என்ன பொறுப்பு தங்கியிருக்கிறது?

● இன்று கடவுளுடைய குமாரர் யாவர்? எவர்களும் இனியும் கடவுளுடைய பிள்ளைகளாவார்கள், ஒற்றுமைப்பட்ட வணக்கத்தைக் குறித்த யெகோவாவின் நோக்கத்துடன் இது எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது?

[கேள்விகள்]

1, 2. (எ) தம்முடைய அறிவுள்ள சிருஷ்டிகளைக் குறித்ததில் யெகோவாவின் நோக்கமென்ன? (பி) கடவுளுடைய ஒற்றுமைப்பட்ட குடும்பத்தில் அடங்கியிருந்தவர்கள் யாவர்? (சி) இதைக் குறித்து, ஆழ்ந்து ஆலோசிக்கத்தகுந்த தனிப்பட்ட கேள்வி என்ன?

3. (எ) நாம் பிறந்தபோது, நம்மில் எவரும் ஏன் கடவுளுடைய குமாரராக இல்லை? (பி) ஆனால் ஆதாமின் சந்ததியாருக்கு யெகோவா என்ன அன்புள்ள ஏற்பாட்டைச் செய்தார்?

4. (எ) எந்த ஆதாரத்தின் பேரில் இஸ்ரவேலர் கடவுளுடைய “குமாரராக” இருந்தார்கள்? (பி) இது எதைக் குறிக்கவில்லை?

5. கடவுளுடன் கொண்டிருந்த தன்னுடைய தனிப்பட்ட நிலைநிற்கையை இஸ்ரவேல் எப்படி இழந்தது?

6. எபேசியர் 1:9, 10-ல் என்ன “நிர்வாகத்தைப்” பவுல் விவரித்தான்? அதன் நோக்கம் என்ன?

7. “பரலோகத்திலிருக்கிறவைகள்” எவை? ஒன்றாகக் கூட்டிச்சேர்க்கப்படுவது அவர்களுக்கு எதைக் குறிக்கிறது?

8. பரம தகப்பனோடு இந்த ராஜ்ய சுதந்தரவாளிகளின் உறவு மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் யூதருக்கு இருந்த உறவோடு ஒப்பிட எவ்வாறு இருக்கிறது?

9. தாங்கள் குமாரராயிருக்கும் நிலையை முழுமையாயும் மெய்யாகவும் உணர்ந்தனுபவிப்பது எதைக் குறிக்கிறது?

10. (எ) “பூலோகத்திலிருக்கிறவைகள்” யாவை, எப்பொழுது முதற்கொண்டு இவர்கள் வணக்க ஒற்றுமைக்குள் கூட்டிச்சேர்க்கப்பட்டு வருகிறார்கள்? (பி) யெகோவாவுடன் அவர்களுக்கிருக்கும் உறவு என்ன?

11. ரோமர் 8:19-21-ல் என்ன வாக்கு மனிதவர்க்கத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது? (பி) அவர்கள் ஆவலோடு காத்திருக்கும் “தேவனுடைய புத்திரர் வெளிப்படுவது” என்ன?

12. மிகுந்த உபத்திரவத்தைப் பின்தொடர்ந்து, வெற்றிச் சிறந்த ஆவியால்—அபிஷேகஞ் செய்யப்பட்ட கடவுளுடைய குமாரர் என்ன துதி பாடலில் ஒருமிக்கக் குரலெழுப்புவார்கள், இது எதைக் குறிக்கும்?

13. மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப் பிழைக்கிறவர்கள் என்ன அதிசயமான விடுதலையை உடனடியாக அனுபவித்து மகிழ்வார்கள்?

14. எந்த வழிவகையினால் அவர்கள் பாவத்திலிருந்தும் அதன் எல்லா விளைவுகளிலிருந்தும் விடுதலையாக்கப்படுவார்கள்?

15. ஆயிர ஆண்டுகால முடிவில், கிறிஸ்து, என்ன நடவடிக்கை எடுப்பார், என்ன நோக்கத்துடன்?

16. பரிபூரணமாக்கப்பட்ட மனிதர் யாவரும் எதற்கு உட்படுத்தப்படுவார்கள், ஏன்?

17. யெகோவாவின் நோக்கத்தின் நிறைவேற்றமாக, என்ன நிலைமை மறுபடியும் அவருடைய அறிவுள்ள சிருஷ்டிகள் யாவருக்குள்ளும் நிலவியிருக்கும்?