Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா தம்முடைய அமைப்பை எப்படி நடத்துகிறார்?

யெகோவா தம்முடைய அமைப்பை எப்படி நடத்துகிறார்?

அதிகாரம் 15

யெகோவா தம்முடைய அமைப்பை எப்படி நடத்துகிறார்?

தேவாவியால் ஏவப்பட்ட வேத எழுத்துக்களின் மூலமாய் யெகோவா தம்முடைய அதிசயமான பரலோக அமைப்பைப் பற்றி மங்கலான சிறு சிறு தோற்றங்களை நமக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசா. 6:2, 3; எசேக். 1:1, 4-28; தானி. 7:9, 10, 13, 14) ஆவி சிருஷ்டிகளை நாம் காணமுடியாத போதிலும், பரிசுத்த தூதர்களின் நடவடிக்கை பூமியிலிருக்கும் உண்மையான வணக்கத்தாரைப் பாதிக்கிற வழிகளைக் குறித்து அவர் நமக்கு விழிப்பூட்டுகிறார். (ஆதி. 28:12, 13; 2 இரா. 6:15-17; சங். 34:7; மத். 13:41, 42; 25:31, 32) மேலும் யெகோவாவின் அமைப்பின் காணக்கூடிய பகுதியையும் பைபிள் விவரித்து அதை அவர் எப்படி நடத்துகிறார் என்பதையும் விளங்கிக்கொள்ள நமக்கு உதவி செய்கிறது. இந்தக் காரியங்களைப் புரிந்துகொள்ளும் ஆவிக்குரிய தெளிந்துணர்வு நமக்கு உண்மையில் இருந்தால், “கர்த்தருக்குப் [யெகோவாவுக்குப், NW] பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ள” இது நமக்கு உதவி செய்யும்.—கொலோ. 1:9, 10.

காணக்கூடிய பகுதியை அடையாளங்கண்டுகொள்ளுதல்

2 இஸ்ரவேல் ஜனம் 1,545 ஆண்டுகள் கடவுளுடைய சபையாக இருந்தது. ஆனால் அவர்கள் நியாயப்பிரமாண உடன்படிக்கையைக் கைக்கொள்ளத் தவறினர், மேலும் கடவுளுடைய சொந்தக் குமாரனை ஏற்க மறுத்துவிட்டனர். ஆகவே யெகோவா புதிய சபையைப் பிறப்பித்து அதோடு புதிய உடன்படிக்கை செய்தார். இந்தச் சபை, கிறிஸ்துவின் “மணவாட்டி”யென வேத எழுத்துக்களில் அடையாளங் காட்டப்பட்டிருக்கிறது, இது, பரலோகத்தில் தம்முடைய குமாரனோடு ஒன்றுபடும்படி கடவுள் தெரிந்தெடுத்த 1,44,000 பேராலாகியது. (எபே. 5:22-32; வெளி. 14:1; 21:9, 10) இந்தச் சபையின் முதல் உறுப்பினர் பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியினால் அபிஷேகஞ் செய்யப்பட்டார்கள். யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தாம் பயன்படுத்தப்போகிற சபை இப்பொழுது இதுவேயென எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லாமல் தெளிவான அத்தாட்சியை யெகோவா தம்முடைய பரிசுத்த ஆவியைக் கொண்டு கொடுத்தார்.—எபி. 2:2-4.

3 இன்று 1,44,000 பேரில் ஒரு மீதிபேர் மாத்திரமே பூமியில் இருக்கிறார்கள். ஆனால், பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக ‘மற்றச் செம்மறியாடுகளாலாகிய’ ஒரு திரள் கூட்டம் அவர்களோடு செயல்படும் கூட்டுறவுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். நல்ல மேய்ப்பர் இயேசு கிறிஸ்து இந்த “மற்றச் செம்மறியாடுகளைத்” தம்மைப் பின்பற்றும், ஆவியால் பிறப்பிக்கப்பட்ட மீதிபேருடன் ஒன்றுபட சேர்த்திணைத்து இவ்வாறு அவர்களுடைய “ஒரே மேய்ப்பனாகிய” தமக்குக் கீழ் அவர்கள் “ஒரே மந்தை”யாகும்படி செய்திருக்கிறார். (யோவான் 10:11, 16; வெளி. 7:9, 10) இவர்களெல்லாரும் ஒற்றுமைப்பட்ட ஒரே அமைப்பாகிறார்கள், யெகோவாவின் இன்றைய காணக்கூடிய அமைப்பாகிறார்கள்.

தேவாட்சி அமைப்புமுறை

4 “ஜீவனுள்ள தேவனுடைய சபை” என்ற இந்த வேதப்பூர்வ சொற்றொடர் அதை நடத்துகிறவர் யாரெனத் தெளிவாகக் காட்டுகிறது. இந்த அமைப்பு தேவாட்சியை உடையது, அல்லது கடவுளால் ஆளப்படுகிறது. யெகோவாவே, சபையின் காணக்கூடாதத் தலையாகத் தாம் நியமித்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாயும், தம்முடைய சொந்த ஏவப்பட்ட வாத்தையாகிய பைபிளைக் கொண்டும், தம்முடைய ஜனத்துக்கு வழிநடத்துதலை அளிக்கிறார்.—1 தீமோ. 3:14, 15; எபே. 1:22, 23; 2 தீமோ. 3:16, 17.

5 பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில் இந்தச் சபையின் முதல் உறுப்பினர் பரிசுத்த ஆவியால் செயல்படும்படி தூண்டப்பட்ட போது இத்தகைய தேவாட்சி வழிநடத்துதல் வெகு அதிகமாய்த் தெளிவாகியது. (அப். 2:1-4, 32, 33) ஆப்பிரிக்காவுக்குள் நற்செய்தி பரவுவதில் பலனடைந்த சம்பவங்களை யெகோவாவின் தூதன் வழிநடத்தினபோது இது வெளிப்படுத்தப்பட்டது. (அப். 8:26-39) மேலும், தர்சு பட்டணத்தானாகிய சவுல் மதமாறிய சமயத்திலும் இன்னும் புறஜாதியாருக்குள் மிஷனரி வேலை தொடங்கப்பட்டபோதும் இயேசுவின் குரல் கட்டளைகளைக் கொடுத்தபோது தேவாட்சி வழிநடத்துதல் வெளியாகியது. (அப். 9:3-7, 10-17; 10:9-16, 19-23; 11:12) ஆனால் தேவைப்பட்ட வழிநடத்துதல் எப்பொழுதுமே இத்தகைய காணக்கூடிய கவர்ச்சிகரமான முறைகளில் அளிக்கப்படவில்லை. காலப்போக்கில் இனிமேலும் பரலோகத்திலிருந்து குரல்களில் கேட்டகப்படவில்லை, இனிமேலும் தூதர்கள் கண்களுக்குத் தோற்றமளிக்கவில்லை, இனிமேலும் ஆவியின் அற்புத வரங்கள் கொடுக்கப்படவில்லை. என்றபோதிலும் இயேசு தம்மைப் பின்பற்றினவர்களுக்கு: “இதோ உலகத்தின் [இந்தக் காரிய ஒழுங்கு முறையின், NW] முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்,” என்று வாக்குக் கொடுத்திருந்தார். அவர் அவ்வாறு அவர்களுடன் இருக்கிறார் என்று உண்மை நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. (மத். 28:20; 1 கொரி. 13:8) யெகோவாவின் சாட்சிகள் அவருடைய தலைமை வகிப்பை ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், அவருடைய உதவியில்லாமல், கடுமையான எதிர்ப்புக்கெதிரில் ராஜ்ய செய்தியைத் தொடர்ந்து யாவருக்கும் அறிவித்து வர முடிந்திராதெனவும் தெளிவாகத் தெரிகிறது.

6 இயேசு தாம் எஜமானாக விசேஷித்த பொறுப்பை ஒப்படைக்கப் போகிற ஒரு “உண்மையும் விவேகமுமுள்ள அடிமையைப்” பற்றித் தம்முடைய மரணத்துக்கு முன்பு தம்முடைய சீஷர்களிடம் பேசினார். இயேசுவின் விவரிப்பின்படி இந்த “அடிமை” கர்த்தர் பரலோகத்துக்குப் புறப்பட்டுப் போகையில் அங்கிருப்பான், கிறிஸ்து திரும்பிவரும் சமயத்திலும் இன்னும் உயிரோடிருப்பான். இத்தகைய விவரிப்பு ஒரு தனி மனிதனுக்குப் பொருந்த முடியாது. ஆனால் கிறிஸ்துவின் உண்மையுள்ள அபிஷேகஞ் செய்யப்பட்ட சபையை முழுமையாகக் கருதுகையில் அதற்கு இது நிச்சயமாகவே பொருந்துகிறது. தம்முடைய சொந்த இரத்தத்தைக் கொண்டு தாம் அவர்களை விலைக்கு வாங்கப் போவதை இயேசு அறிந்திருந்தார், ஆகவே அவர் அவர்களை மொத்தமாய்த் தம்முடைய “அடிமை”யென பொருத்தமாகவே குறிப்பிட்டார். அவர்கள் செய்வதற்கு வேலையைக் கொடுத்தார், சீஷராக்கி, பின்பு “ஏற்றவேளையிலே . . . [ஆவிக்குரிய] போஜனங்கொடுத்து” இவர்களைப் படிப்படியாய்ப் போஷித்து வரும்படி அவர்களெல்லாருக்கும் கட்டளையிட்டு பொறுப்பளித்தார். அவர்களுடைய நியமிப்பு பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியால் உறுதிப்படுத்தப்பட்டது.—மத் 24:45-47; 28:19, 20; 1 கொரி. 6:19, 20; ஏசாயா 43: 10-ஐ ஒத்துப் பாருங்கள்.

7 எஜமான் திரும்பி வருகையில் இந்த “அடிமை” உண்மையுடன் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தால் மேலும் விரிவான பொறுப்புகளை அவனிடம் ஒப்படைப்பார். இதைப் பின்தொடரும் ஆண்டுகள் ராஜ்யத்தைப் பற்றி பூகோள முழுவதும் சாட்சிபகரும் காலமாயிருக்கும், மேலும் யெகோவாவை வணங்கும் ஒரு “திரள் கூட்டம்” “மிகுந்த உபத்திரவத்தினூடே” அவர்களைப் பாதுகாத்து வைக்கும் நோக்கத்துடன் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள். (மத். 24:14; வெளி. 7:9, 10) இவர்களுக்கும் ஆவிக்குரிய உணவு தேவை, இதை, கூட்டு “அடிமை”யாகிய கிறிஸ்துவின் ஆவியால்—அபிஷேகஞ் செய்யப்பட்ட ஊழியர் அவர்களுக்குப் பகிர்ந்தளிப்பார். யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்கு, இந்த ஏதுவின் மூலமாய் அவர் அளிக்கிற போதனையை நாம் ஏற்று அதற்கு முழுவதும் ஒத்திசைய நடக்க வேண்டும்.

8 சில சமயங்களில், நிச்சயமாகவே, கோட்பாட்டையும் செயல்படும்முறையையும் பற்றிய கேள்விகள் எழும்பலாம். அப்பொழுது என்ன செய்வது? அப்போஸ்தலர் 15-ம் அதிகாரத்தில், புறஜாதிகளிலிருந்து மதமாறியவர்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளைக் குறித்து எழுப்பின ஓரு விவாதம் தீர்க்கப்பட்ட விதத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. தலைமை நிர்வாகக் குழுவாகச் சேவித்த, எருசலேமிலிருந்த அப்போஸ்தலரும் மூப்பரும் அடங்கிய குழுவினிடம் விசாரிக்கும்படி இந்தக் கேள்வி கொண்டுபோகப்பட்டது. அந்த மூப்பர்கள் தவறு செய்யமுடியாத ஆட்களல்லர்; அவர்கள் ஒருபோதும் பிழை செய்திராத ஆட்களல்லர். (கலாத்தியர் 2:11-14-ஐ ஒத்துப் பாருங்கள்.) ஆனால் கடவுள் அவர்களை உபயோகித்தார். அப்போது விவாதத்திலிருந்த விஷயத்தின்பேரில் தேவாவியால் ஏவப்பட்ட வேத எழுத்துக்களில் சொல்லப்பட்டிருந்தவற்றையும் அதோடு புறஜாதியாருக்குள் ஊழியத்தைத் திறந்து வைத்ததில் கடவுளுடைய ஆவி செயல்பட்டதன் அத்தாட்சியையும் ஆழ்ந்து கவனித்து, பின்பு முடிவு செய்தார்கள். கடவுள் அந்த ஏற்பாட்டை ஆசீர்வதித்தார். (அப். 15:1-29; 16:4, 5) மேலும், கர்த்தர்தாமே அதிகாரங் கொடுத்தற்குப் பொருந்த, இந்த நற்செய்தி பிரசங்கிப்பதை மேலும் விரிவாக்குவதற்கு இந்தத் தலைமைக் குழுவிலிருந்தே சிலர் அனுப்பப்பட்டார்கள்.—அப். 8:14; கலாத். 2:9.

9 நம்முடைய நாளில் இந்த நிர்வாகக் குழு பல்வேறு நாடுகளிலிருந்து வரும், ஆவியால்—அபிஷேகஞ் செய்யப்பட்ட சகோதரராலாகியது. இது யெகோவாவின் சாட்சிகளின் உலகத் தலைமை அலுவலகத்தில் இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் தலைமை வகிப்பின் கீழ் தூய்மையான வணக்கத்தின் அக்கறைகளை இது உண்மையுடன் விரிவாக்குகிறது. இந்தச் சகோதரர்கள் அப்போஸ்தலனாகிய பவுலின் நோக்குநிலையில் பங்குகொள்ளுகிறார்கள், பவுல் உடன் கிறிஸ்தவர்களுக்கு ஆவிக்குரிய அறிவுரையை அனுப்புகையில் பின்வருமாறு எழுதினான்: “விசுவாச விஷயத்தில் நாங்கள் உங்களை ஆளுகிறவர்களல்ல, உங்கள் சந்தோஷத்திற்கோ நாங்கள் உடன் ஊழியர்; [உங்கள், NW] விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்கள்”—2 கொரி. 1:24.

10 இந்தத் தேவாட்சிக்குரிய ஏற்பாட்டை உலகமெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அங்கங்குள்ள அவர்களுடைய உள்நாட்டு சபைகள் எல்லாம் அதோடு நெருங்கிய ஒத்துழைப்பில் வேலை செய்கின்றன. சபைகள் இணக்கமாய்ச் செயல்படும்படி கவனிப்பதற்கு மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் நியமிக்க அவை இந்த நிர்வாகக் குழுவையே நோக்கியிருக்கின்றன. இத்தகைய நியமிப்புக்கு எந்த அடிப்படையின்பேரில் ஆட்கள் தெரிந்தெடுக்கப்படுகிறார்கள்? அதற்குத் தேவைப்படும் தகுதிகள் பைபிளில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. சிபாரிசுகளைச் செய்கிற மூப்பர்களும் நியமிப்பு செய்ய அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறவர்களும் இவற்றைக் கடைப்பிடிப்பதற்குக் கடவுளுக்கு முன்பாகக் கனமான பொறுப்பைத் தாங்குகிறார்கள். (1 தீமோ. 3:1-10, 12, 13; 5:22; தீத்து 1:5-9) சபையின் உறுப்பினருக்குள் எந்தத் தேர்தல் ஈடுபாடுங் கிடையாது. சபையாக எந்த வாக்களித்தலுங் கிடையாது. அதற்குப் பதிலாக, முதல் நூற்றாண்டில் நியமிப்புகள் செய்யப்பட்டபோது அப்போஸ்தலர் செய்ததற்கு ஒத்திசைய, சிபாரிசு செய்யும் பொறுப்புடைய கண்காணிகளும், பின்னால் நியமிப்புகளைச் செய்கிறவர்களும் கடவுளுடைய ஆவியின் உதவிக்காக ஜெபித்து அவருடைய ஏவப்பட்ட வார்த்தையிலிருந்து வழிநடத்துதலைத் தேடுகிறார்கள். (அப். 6:2-4, 6; 14:23; சங்கீதம் 75:6, 7-ஐ ஒத்துப் பாருங்கள்.) ‘விசுவாசத்தில் ஒருமைப்பட’ நம்மெல்லாருக்கும் உதவி செய்வதற்கு “மனிதரில் வரங்களாக” இவர்களைக் கொடுத்திருக்கும் கிறிஸ்துவின் அன்புள்ள ஏற்பாட்டுக்காக நம்முடைய நன்றியறிதலை, இந்த மூப்பர்கள் கொடுக்கும் வழிநடத்துதலுக்கு நாம் பிரதிபலிக்கும் முறையில் காட்டலாம்.—எபே. 4:8, 11-16.

11 சபையில் கண்காணிக்கும் பொறுப்பு நிலைகளை ஆண்களே ஏற்று நடத்த வேண்டுமென வேத எழுத்துக்களில் கட்டளையிடப்பட்டிருக்கிறது. இது பெண்களை எவ்விதத்திலும் மதிப்புக் குறைவாக்குகிறதில்லை, ஏனெனில் அவர்களில் பலர் பரலோக ராஜ்யத்தின் சுதந்தரவாளிகளாகவும் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் அடக்க ஒடுக்கம், கற்புள்ள நடத்தை, தங்கள் குடும்பத்தைக் கவனிப்பதில் ஊக்கமாய் உழைத்தல் ஆகியவற்றின் மூலமும் கிறிஸ்தவ பெண்கள் சபையின் நற்பெயருக்குத் தங்கள் பங்கைச் செய்கிறார்கள். (தீத்து 2:3-.5) புதிதாய் அக்கறை காட்டுகிறவர்களைக் கண்டுபிடித்து அவர்களை அமைப்புடன் தொடர்புகொள்ளும்படி கொண்டுவரும் வேலையில் பெரும்பாலும் அதிகம் அவர்கள் செய்கிறார்கள். (சங். 68:11) ஆனால் அமைப்புக்குள் கற்பிப்பதை நியமிக்கப்பட்ட ஆண்கள் கவனித்து நடத்துகிறார்கள். (1 தீமோ. 2:12, 13) சபை ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் தகுதிபெற்ற ஆண்கள் இல்லாமல், ஒரு பெண் கூட்டத்தை நடத்துகையில் அல்லது ஜெபிக்கையில் அவள் தலையில் முக்காடிட்டுக்கொள்ள வேண்டும். a இவ்வாறு அவள், இயேசு தம்முடைய பிதாவுக்குத் தம்மைக் கீழ்ப்படுத்தி எல்லாருக்கும் முன்மாதிரியை வைத்தபடி, யெகோவாவின் ஏற்பாட்டுக்கு மரியாதை காட்டுகிறாள்.—1 கொரி.11:3-16; யோவான் 8:28, 29.

12 இவ்வுலகத்தில் முதன்மை நிலையிலிருக்கும் ஒருவனே பெரும் மதிப்புள்ளவனென்று கருதப்படுகிறான், ஆனால் கடவுளுடைய அமைப்புக்குள்ளிருக்கும் முறைமை என்னவெனில்: “உங்களெல்லாரிலும் சிறியவனாகத் தன்னை நடத்திக் கொள்ளுகிறவனே பெரியவன்,” என்பதாகும். (லூக்கா 9:46-48, NW; 22:24-26) ஆகவே, கடவுளுடைய சுதந்தரமாக இருக்கிறவர்கள்மேல் இறுமாப்பாய் ஆளாதபடி கவனமாயிருக்கவும், அதைப் பார்க்கிலும், மந்தைக்கு மாதிரிகளாக இருக்கும்படியும் கண்காணிகளுக்கு வேத எழுத்துக்களில் அறிவுரை கொடுக்கப்பட்டிருக்கிறது. (1 பேதுரு 5:2, 3) சர்வலோக ஈடற்ற பேரரசரைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கும், அவருடைய பெயரில் மனத்தாழ்மையாய்ப் பேசுவதற்கும், அவருடைய ராஜ்யத்தைப் பற்றி எங்குமுள்ள ஜனங்களுக்குச் சொல்வதற்குமுரிய மிகச் சிறந்த சிலாக்கியம், தெரிந்தெடுத்த ஒரு சிலருக்கு அல்ல, யெகோவாவின் சாட்சிகள் எல்லாருக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கின்றன.

13 நம்மைநாமே பின்வருமாறு கேட்டுக்கொள்வது நல்லது: “யெகோவா தம்முடைய காணக்கூடிய அமைப்பை நடத்தும் முறையை நாம் உண்மையில் நன்றியோடு மதித்துணருகிறோமா? நம்முடைய மனப்பான்மையும், பேச்சும், நடத்தையும் அதைப் பிரதிபலிக்கிறதா?” பின்வரும் குறிப்புகளை ஆலோசிப்பது இவ்வாறு பகுத்தாராய்வதற்கு நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்யும்:

சபையின் தலையாகக் கிறிஸ்துவுக்கு நாம் நம்மை உண்மையில் கீழ்ப்படுத்தினால், அப்பொழுது, பின்வரும் வேத வசனங்களில் காட்டப்பட்டிருக்கிறபடி, நாம் என்ன செய்துகொண்டிருப்போம்? (மத். 24:14; 28:19, 20; லூக்கா 21:34-36; யோவான் 13:34, 35)

பலன்தரும் கிறிஸ்தவர்களாயிருக்கத் தாங்கள் எடுக்கும் முயற்சிகளில், அமைப்பின் பாகமாயிருக்கிற எல்லாரும் எந்த அளவுக்குக் கடவுள் மீதும் கிறிஸ்துவின்மீதும் சார்ந்திருப்பதாக உணரவேண்டும்? (யோவான் 15:5; 1 கொரி. 3:5-7)

அமைப்பின் மற்ற எல்லாப் பகுதியோடும் ஒத்திருக்கும் வகையில் காரியங்களைக் கருதும்படி ஆட்களின் சிந்தனையை திரும்பச் சரிப்படுத்த மூப்பர்கள் முயற்சி செய்கையில், யாருடைய தயவான அக்கறையை நாம் இதில் தெரிந்துணரவேண்டும்? (எபே. 4:7, 8, 11-13; 2 கொரி. 13:11)

“அடிமை” வகுப்பின் மற்றும் அதன் நிர்வாகக் குழுவின் மூலமாய் வருகிற ஆவிக்குரிய ஏற்பாடுகளை நாம் நன்றியோடுமதித்து ஏற்கையில் யாருக்கு மரியாதை காட்டுகிறோம்? ஆனால் இவற்றைப் பற்றி மதிப்புக்குறைவாகப் பேசினால் என்னவாகும்? (லூக்கா 10:16; 3 யோவான் 9, 10-ஐ ஒத்துப் பாருங்கள்)

நியமிக்கப்பட்ட மூப்பரை கடுமையாய்க் குற்றங்கண்டு பிடிக்கிறவர்களாக நாம் ஏன் இருக்கக்கூடாது? (அப். 20:28; ரோமர் 12:10)

14 நியமிக்கப்பட்ட தலைவராகிய கிறிஸ்துவின் கீழுள்ள தம்முடைய காணக்கூடிய அமைப்பைக் கருவியாகக் கொண்டே யெகோவா இன்று நம்முடன் நடைமுறைத் தொடர்பு கொள்ளுகிறார். ஆகவே இந்த அமைப்பினிடம் நாம் கொண்டுள்ள மனப்பான்மை, இந்த ஈடற்ற அரசாட்சி சம்பந்தப்பட்ட விவாதத்தில் நாம் ஏற்கும் நிலைநிற்கையை நடைமுறையான வகையில் மெய்ப்பித்துக் காட்டுகிறது. (எபி. 13:17) நாம் எல்லாரும் அவரவருடைய சொந்த இலாபத்திற்கான ஆசையால் தூண்டப்படுகிறோம் என்றும், நம்முடைய முதன்மையான அக்கறை தன்னலமே என்றும் சாத்தான் வாதாடுகிறான். தான் என்று தனக்கு மட்டுக்குமீறிய கவனத்தை இழுக்கும் காரியங்களைச் சொல்வதையும் செய்வதையும் தவிர்த்து, தேவைப்படுகிற எந்த வகையிலாயினும் சேவிப்பதற்கு நாம் மகிழ்ச்சியுடன் நம்மை முன்வந்து அளிக்கிறோமென்றால், பிசாசானவனைப் பொய்யனென்று நாம் நிரூபிக்கிறோம். ‘சுய ஆதாயத்தின் பொருட்டு முகஸ்துதி பேசும்’ வகையான ஆட்களாக இருக்க மறுத்து, நமக்குள் ‘வழி நடத்துகிறவர்களை’ நாம் நேசித்து மதித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றினால் நாம் யெகோவாவுடைய இருதயத்துக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறோம். (எபி. 13:7; யூதா 16) யெகோவாவின் அமைப்புக்கு ஆரோக்கியமான நன்மதிப்பை நம்மில் வளர்த்து, அவர் வழிநடத்துகிற வேலையை முழு இருதயத்துடன் செய்து வருவதன் மூலம், யெகோவா உண்மையில் நம்முடைய கடவுள் என்பதற்கும் நாம் அவருடைய வணக்கத்தில் ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதற்கும் அத்தாட்சியைக் கொடுக்கிறோம்.—1 கொரி. 15:58

[அடிக்குறிப்புகள்]

a என்றபோதிலும், வீடுவீடாகப் பிரசங்கிக்கையில் அவளுக்கு முக்காடு தேவையில்லை, ஏனெனில் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டிய பொறுப்பு எல்லாக் கிறிஸ்தவர்கள் மீதும் தங்கியிருக்கிறது. ஆனால் (கிறிஸ்தவனாக இராதபோதிலும் தன்தலையாக இருக்கும்) தன் கணவனுடைய முன்னிலையில் வீட்டு பைபிள் படிப்பை அவள் நடத்தும்படி சூழ்நிலைமைகள் அவசியப்படுத்தினால், அவள் முக்காடிட்டுக் கொள்ளவேண்டும். மேலும், வழக்கத்துக்கு மீறிய ஒரு சூழ்நிலையில் சபையின் ஒப்புக்கொடுத்த ஓர் ஆண் அங்கத்தினர் முன்னிலையில் அவள், முன்னேற்பாடு செய்யப்பட்ட வீட்டு பைபிள் படிப்பை நடத்துகையில் தன் தலையை மூடிக்கொள்ளவேண்டும், ஆனால் அவர் ஜெபம் செய்ய வேண்டும்.

மறு கலந்தாலோசிப்பு

● இன்று யெகோவாவின் காணக்கூடிய அமைப்பு எது? அதன் நோக்கம் என்ன?

● சபையின் நியமிக்கப்பட்ட தலை யார்? எந்தக் காணக்கூடிய ஏற்பாடுகளின் மூலமாய் அவர் நமக்கு அன்புள்ள வழிநடத்துதலைக் கொடுக்கிறார்?

● அமைப்பிலுள்ள பொறுப்பினிடமும் ஆட்களைப் பொறுத்ததிலும் எந்த ஆரோக்கியமான மனப்பான்மைகளை நாம் வளர்க்கவேண்டும்?

[கேள்விகள்]

1. யெகோவாவின் அமைப்பைப் பற்றி என்ன தகவலை பைபிள் வெளிப்படுத்துகிறது, இது ஏன் நமக்கு முக்கியம்?

2. பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே முதற்கொண்டு எது கடவுளின் சபையாக இருந்து வருகிறது?

3. இன்று யெகோவாவின் காணக்கூடிய அமைப்பு யாராலாகியது?

4. இந்த அமைப்பை யார் நடத்துகிறார், எப்படி?

5. (எ) முதல் நூற்றாண்டில் சபைக்குப் பரலோக வழிநடத்துதல் இருந்தது எப்படி வெளிப்படுத்திக் காட்டப்பட்டது? (பி) இயேசு இன்னும் சபையின் தலையாக இருப்பதை எது காட்டுகிறது?

6. (எ) “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” யாராலாகியது, ஏன்? (பி) இந்த “அடிமைக்கு” என்ன வேலைநியமிப்பை அவர் கொடுத்தார்?

7. (எ) இப்பொழுது இந்த “அடிமைக்கு” என்ன விரிவான பொறுப்புகள் இருக்கின்றன? (பி) இந்த ஏதுவின் மூலமாய்க் கொடுக்கப்படும் போதனைக்கு நம்முடைய பிரதிபலிப்பு ஏன் முக்கியமானது?

8, 9. (எ) முதல் நூற்றாண்டில், கோட்பாட்டைப் பற்றிய கேள்விகளைத் தீர்ப்பதற்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதைக் குறித்ததில் தேவைப்பட்ட வழி நடத்துதலைக் கொடுப்பதற்கும் என்ன ஏற்பாடு இருந்தது? (பி) அதைப்போன்ற என்ன ஏற்பாடு இன்று இருக்கிறது?

10. (எ) யார் மூப்பர் அல்லது உதவி ஊழியராக இருப்பர் என்பது எப்படித் தீர்மானிக்கப்பட்டது? (பி) இப்படிப்பட்ட பொறுப்பு நிலைகளுக்கு நியமிக்கப்பட்டவர்களுடன் நாம் ஏன் நெருங்கிய வண்ணமாய் ஒத்துழைக்க வேண்டும்?

11. (எ) தேவாட்சிக்குரிய ஏற்பாட்டுக்குள் பெண்கள் நடப்பிக்கும் மதிப்புள்ள சேவைகள் யாவை? (பி) அவர்கள் எப்பொழுது முக்காடிட்டுக்கொள்ள வேண்டும், ஏன்?

12. மூப்பர்கள் தங்கள் பொறுப்பு நிலையை எவ்வாறு கருதும்படி பைபிள் அறிவுரை கூறுகிறது? (பி) எந்த மிகச் சிறந்த சிலாக்கியத்தில் நாமெல்லாரும் பங்குகொள்ளலாம்?

13. இடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள வேதவசனங்களைப் பயன்படுத்தி, இந்தப் பத்தியின் முடிவில் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளைக் கலந்தாராயுங்கள்.

14. (எ) தேவாட்சிமுறை அமைப்பினிடம் கொண்டுள்ள நம்முடைய மனப்பான்மை எதை நிரூபித்துக் காட்டுகிறது. (பி) இதைக் குறித்ததில் பிசாசானவனைப் பொய்யனென்று நிரூபிப்பதற்கும் யெகோவாவின் இருதயத்துக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்கும் நமக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன?