Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘ராஜ்யத்தை முதலாவது தொடர்ந்து தேடுங்கள்’

‘ராஜ்யத்தை முதலாவது தொடர்ந்து தேடுங்கள்’

அதிகாரம் 11

‘ராஜ்யத்தை முதலாவது தொடர்ந்து தேடுங்கள்’

இயேசு கலிலேயாவில் 1,900-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னால், கொடுத்த ஒரு பிரசங்கத்தில்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் [தொடர்ந்து, NW] தேடுங்கள்,” என்று தமக்குச் செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தவர்களை ஊக்கப்படுத்தினார். ஆனால் ஏன்? கிறிஸ்து சிங்காசனத்திலேற்றப்படுவதற்கான காலம் பல நூற்றாண்டுகளுக்கு அப்பால் வரவிருந்ததல்லவா? ஆம். ஆனால் அந்த மேசியானிய ராஜ்யமே, யெகோவாவின் சொந்தப் பரிசுத்தப் பெயர் நியாயம் நிரூபிக்கப்படுவதற்கும் பூமியில் அவருடைய மகத்தான நோக்கம் நிறைவேற்றப்படுவதற்கும் வழிவகையாக இருக்கிறது. இதன் முக்கியத்துவத்தை உண்மையில் மதித்துணருகிற எவனும் தன்னுடைய வாழ்க்கையில் இந்த ராஜ்யத்துக்கு முதலிடத்தைக் கொடுப்பான். முதல் நூற்றாண்டில் அவ்வாறே இருந்தது, இப்பொழுது ராஜ்யம் ஆட்சிசெய்கையில் நிச்சயமாகவே அவ்வாறு இருக்கிறது. கடவுளுடைய ராஜ்யத்தை முதலாவது நீங்கள் தேடுகிறீர்களென்று உங்கள் வாழ்க்கைமுறை காட்டுகிறதா?—மத். 6:33.

2 பொதுவில் மக்கள் மற்றக் காரியங்களில் அதிக அக்கறைக் கொண்டிருக்கிறார்கள். செல்வங்களையும் உடையையும், உணவையும், பணம் வாங்கக்கூடிய மற்றப் பொருளுடைமைகளையும் இன்பங்களையும் அவர்கள் மிகுந்த ஆவலோடு நாடித்தேடுகிறார்கள். (மத். 6:31, 32) தன்னலத்திலும் இன்பத்திலுமே மனதை முழுவதும் ஈடுபடுத்தியிருப்பதை அவர்கள் வாழ்க்கைமுறை பிரதிபலிக்கிறது. அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை ஏதாவது இருந்தால் அவரை தங்களுடைய வாழ்க்கையில் இரண்டாவது இடத்தில் வைக்கிறார்கள்.

3 ஆனால் இயேசு தம்முடைய சீஷருக்குப் பின்வரும் அறிவுரையைக் கொடுத்தார்: “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம்,” ஏனென்றால் அப்படிப்பட்ட உடைமைகள் எதுவும் என்றும் நிலைத்திருப்பதில்லை. அதற்குப் பதிலாக, யெகோவாவைச் சேவிப்பதன் மூலம் “பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்,” என்று அவர் சொன்னார். ஒரே காரியத்தின் பேரில், அதாவது, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதன் பேரில் தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தி தங்கள் கண்ணைத் “தெளிவாக [சிக்கலற்றதாக, NW]” வைக்கும்படி அவர் தம்மைப் பின்பற்றினவர்களை அறிவுறுத்தினார். “தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் [செல்வங்களுக்கும், NW] ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது,” என்று அவர் அவர்களுக்குச் சொன்னார். ஆனால், உணவு, உடை, இருப்பிடம் போன்ற பொருள் சம்பந்தத் தேவைகளைப் பற்றியதென்ன? “கவலைப்படாதிருங்கள்,” என்று இயேசு அறிவுரை கூறினார். பறவைகளைக் கவனிக்கும்படி அவர்கள் கவனத்தைத் திருப்பினார்—கடவுள் அவற்றிற்கு உணவளிக்கிறார். பூக்களிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளும்படி தம்மைப் பின்பற்றினவர்களை ஊக்கப்படுத்தினார்—கடவுள் அவற்றை அழகாய் உடுத்துவிக்கிறார். யெகோவாவின் அறிவுத்திறமையுள்ள மனித ஊழியர்கள் இவற்றில் எதையும்விட அதிக மதிப்புடையவர்களல்லவா? அப்படியானால், “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது [அவசியமான] இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்,” என்று இயேசு சொன்னார். (மத். 6:19-34) நீங்கள் இதை நம்புகிறீர்களா? நீங்கள் நம்புவதை உங்கள் செயல்கள் காட்டுகின்றனவா?

ராஜ்ய சத்தியம் நெருக்கி வெளியில் தள்ளப்பட அனுமதியாதீர்கள்

4 ஒருவன் பொருள்சம்பந்தக் காரியங்களில் மட்டுக்குமீறி அக்கறைக் கொண்டிருந்தால் அதன் விளைவுகள் நாசகரமாயிருக்கும். ராஜ்யத்தில் அக்கறை கொண்டிருப்பதாக அவன் சொல்லிக் கொண்டாலும், தன்னுடைய இருதயத்தில், மற்றக் காரியங்களை முதல் வைத்திருந்தால், ராஜ்ய சத்தியம் நெருக்கி வெளியில் தள்ளப்படும். (மத். 13:18, 19, 22) உதாரணமாக, ஒரு சந்தர்ப்பத்தில், மிகுந்த செல்வமுடைய இளம் அதிபதி ஒருவன்; “நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும்?” என்று இயேசுவைக் கேட்டான். இயேசுவின் பதிலுக்கு அவன் கொடுத்த மறுமொழி, அவன் ஒழுக்கமுறைப்படி வாழ்ந்து மற்றவர்களை நல்ல முறையில் நடத்தினவன் என்று காட்டினது. ஆனால் தன் பொருளுடைமைகளிடம் அவன் மட்டுக்கு மீறி பற்றுதலுள்ளவனாக இருந்தான். கிறிஸ்துவைப் பின்பற்றுவதைத் தெரிந்து கொண்டு தன் பொருளுடைமைகளை விட்டுப் பிரியும்படி அவன் தன் மனதைக் கொண்டுவர முடியவில்லை. ஆகவே அவன் பரலோக ராஜ்யத்தில் கிறிஸ்துவுடன் ஆளும் ஓரு அரசனாவதற்கு வழிநடத்தியிருக்கக் கூடிய வாய்ப்பைக் கடத்திவிட்டான். அந்தச் சந்தர்ப்பத்தில் இயேசு சொன்னபடி: “ஐசுவரியமுள்ளவர்கள் தேனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது”!—மாற்கு 10:17-23.

5 பல ஆண்டுகளுக்குப் பின்பு, அப்போஸ்தலனாகிய பவுல், செல்வம் மிகுந்த ஒரு வியாபார மையமான எபேசுவில் அப்பொழுது இருந்த தீமோத்தேயுவுக்குக் கடிதம் எழுதினான். அதில் அவனைப் பின்வருமாறு நினைப்பூட்டினான்: “உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை . . . உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்”. தனக்கும் தன் குடும்பத்துக்கும் தகுந்தபடி “உண்ணவும் உடுக்கவும்” தேவையானவற்றை அளிப்பதற்கு வேலைசெய்வது சரியானதே. ஆனால்: “ஐசுரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்,” என்று பவுல் எச்சரித்தான். சாத்தான் வஞ்சக சூழ்ச்சி செய்பவன். முதன் முதலில் சிறிய வழிகளில் ஓர் ஆளைக் கவர்ச்சியூட்டி இழுப்பான். அநேகமாய் இதைத் தொடர்ந்து மேலுமதிக வற்புறுத்தல் உண்டாகும்—ஒருவேளை அதிக சம்பளம் கிடைக்கிற வேலைக்குப் பதவி உயர்வு வாய்ப்பாக இருக்கலாம், ஆனால் முன்பு ஆவிக்குரிய காரியங்களுக்கு ஒதுக்கி வைத்த நேரத்தை அதற்குச் செலவிட வேண்டியதாக இருக்கலாம். நாம் எச்சரிக்கையாயிராவிடில், “பண ஆசை” மிக அதிக முக்கியமான ராஜ்ய அக்கறைகளை நெருக்கி வெளியில் தள்ளிவிடும். பவுல் சொல்லுகிற பிரகாரம், “சிலர் இதை [பணத்தை] இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி அநேக வேதனைகளாலே தங்களை உருவக்குத்திக் கொண்டிருக்கிறார்கள்.”—1 தீமோ. 6:7-10.

6 தன்னுடைய கிறிஸ்தவ சகோதரனின் பேரில் உண்மையான அன்புடன் பவுல் தீமோத்தேயுவை: “இவைகளை விட்டோடி, . . . விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு,” என்று ஊக்கப்படுத்தினான் (1 தீமோ. 6:11, 12) நம்மைச் சுற்றியுள்ள இவ்வுலகத்தின் பொருளாசைக்குரிய வாழ்க்கை முறையுடன் வாரிக்கொண்டு போகப்படுவதை நாம் தவிர்க்க வேண்டுமானால் ஊக்கமான முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் நாம் நம்முடைய விசுவாசத்துக்கிணங்கக் கடும் முயற்சியுடன் போராடினால், யெகோவா நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். விலைவாசிகள் உயர்ந்து கொண்டும் வேலையில்லாமை விரிவாய்ப் பரவிக்கொண்டும் இருக்கிறபோதிலும், நமக்கு உண்மையில் தேவையானவை கிடைக்கும்படி அவர் நிச்சயமாய் பார்த்துக்கொள்வார்.—எபி. 13:5, 6.

பூர்வீக சீஷர்கள் மாதிரி அளிக்கின்றனர்

7 இயேசு தம்முடைய அப்போஸ்தலருக்குத் தகுந்த பயிற்றுவிப்பு கொடுத்தப் பின்பு, நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி அவர்களை இஸ்ரவேலுக்குள் அனுப்பினார். “பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது.” எப்பேர்ப்பட்ட கிளர்ச்சியூட்டம் செய்தி அது! மேசியானிய அரசராகிய இயேசு கிறிஸ்து அவர்கள் மத்தியில் இருந்தார். அப்போஸ்தலர் கடவுளுடைய சேவைக்குத் தங்களை முழுவதும் ஒப்புக்கொடுத்திருந்ததால் கடவுள் அவர்களை கவனித்துக் கொள்வார் என்ற உறுதிநம்பிக்கைக் கொண்டிருக்கும்படி இயேசு அவர்களை ஊக்கப்படுத்தினார். ஆகவே அவர் சொன்னதாவது: “வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டுபோக வேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம். எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள்.” (மத். 10:5-10; லூக்கா 9:1-6; 10:4-7) அந்நியரை உபசரிப்பது இஸ்ரவேலருக்குள் வழக்கமாயிருந்தது, உடன் இஸ்ரவேலரின் கைகளின் மூலமாய் அவர்களுடைய தேவைகள் திருப்தி செய்யப்படுவதை யெகோவா பார்த்துக்கொள்வார்.

8 பின்னால் தம்முடைய மரணத்துக்குச் சற்று முன்பு, இயேசு, அவர்கள் மாறின சூழ்நிலைமைகளின் கீழ் வேலைசெய்வார்கள் என்ற உண்மையைக் குறித்துத் தம்முடைய அப்போஸ்தலரை எச்சரித்தார். அதிகாரிகளின் எதிர்ப்பின் விளைவாக, இஸ்ரவேலில் உபசரிப்பு ஒருவேளை அவ்வளவு தடையில்லாமல் கொடுக்கப்படாது. மேலும், சீக்கிரத்தில் அவர்கள் இந்த ராஜ்ய செய்தியைப் புறஜாதியார் தேசங்களுக்குக் கொண்டு செல்வார்கள். இப்பொழுது அவர்கள் “பணப்பையும்” “உணவு பையும்” தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். இருந்த போதிலும், அவர்கள், உண்ணவும் உடுக்கவும் தேவையானவற்றை அடைவதற்குத் தாங்கள் எடுக்கும் முயற்சிகளைக் கடவுள் ஆசீர்வதிப்பார் என்ற திட நம்பிக்கையுடன் முதலாவது யெகோவாவின் ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்க வேண்டும்.—லூக்கா 22:35-37.

9 இயேசுவின் அறிவுரையைப் பொருத்திப் பிரயோகிப்பது எவ்வாறு என்பதற்கு அப்போஸ்தலனாகிய பவுல் நல்ல முன்மாதிரியை வைத்தான். பவுல் தன் வாழ்க்கையை ஊழியத்தைச் சுற்றிக் கட்டினான். (அப். 20:24, 25) பிரசங்கிப்பதற்காக ஓரிடத்துக்குச் செல்கையில் கூடாரம் செய்யும் தொழில் செய்து பொருள் சம்பந்தமான தன்னுடைய சொந்தத் தேவைகளைத் தானே கவனித்துக் கொண்டான். மற்றவர்கள் தன்னைக் கவனிக்கும்படி அவன் எதிர்பார்க்கவில்லை. (அப். 18:1-4; 1 தெச. 2:9; 1 கொரி. 9:18) என்றபோதிலும், மற்றவர்கள் தங்கள் அன்பையும் மதித்துணர்வையும் உபசரிப்பின் மூலமாயும் நன்கொடைகள் மூலமாயும் காட்ட விரும்பினபோது அவன் அவற்றை நன்றியோடு ஏற்றுக்கொண்டான். (அப். 16:15, 34; பிலிப். 4:15-17) பிரசங்கம் செய்வதற்காகத் தங்கள் குடும்பக் கடமைகளைக் கவனிக்காமல் விடும்படி கிறிஸ்தவ ஆண்களையும் பெண்களையும் அவன் ஊக்கப்படுத்தவில்லை, அதற்கு மாறாகத் தங்கள் பலவித பொறுப்புகளைச் சமநிலையான ஒரு முறையில் கையாளும்படி ஊக்கப்படுத்தினான். தங்கள் கைகளால் வேலைசெய்யவும், தங்கள் குடும்பங்களை நேசிக்கவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் தாராளமாயிருக்கவும் அவர்களுக்கு அறிவுரை கூறினான். (எரே. 4:28; 2 தெச. 3:7-12; தீத்து 2:3-5) மேலும் தங்கள் நம்பிக்கையைப் பொருளுடைமைகளில் அல்ல, கடவுள் பேரில் வைக்கும்படியும் வாழ்க்கையில் அதிமுக்கியமான காரியங்கள் எவை என்று தாங்கள் உண்மையில் விளங்கிக் கொண்டிருப்பதைக் காட்டும் முறையில் தங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்தும்படியும் அவன் அவர்களை ஊக்குவித்தான். இது இயேசுவின் போதகங்களுக்கு ஒத்திசைவாக, முதலாவது கடவுளுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடிக்கொண்டிருப்பதைக் குறித்தது.—பிலிப். 1:9-11.

ராஜ்யத்தை உங்கள் வாழ்க்கையில் முதலாவது வையுங்கள்

10 நாம் ஒவ்வொருவரும் இந்த ராஜ்ய நற்செய்தியை மற்றவர்களுடன் எந்த அளவில் பகிர்ந்து கொள்ளுகிறோம்? இது ஓரளவில் நம்முடைய சூழ்நிலைமைகளின் பேரிலும் பேரளவாக நம்முடைய மதித்துணர்வின் ஆழத்தின் பேரிலும் சார்ந்திருக்கிறது. ‘உங்களுக்கு வேறு எதுவும், செய்வதற்கு இல்லாதபோது ராஜ்யத்தைத் தேடுங்கள்,’ என்று இயேசு சொல்லவில்லை என்பதை மனதில் வையுங்கள் ‘எப்போதாவது ஒரு முறை ராஜ்யத்தைப் பற்றி நீங்கள் பேசிவரும் வரையில், வேண்டியதை நீங்கள் செய்கிறீர்கள்,’ என்றும் அவர் சொல்லவில்லை. ‘ராஜ்ய அக்கறைகளைச் சேவிக்க ஆர்வத்துடன் தொடங்குங்கள்; ஆனால் புதிய ஒழுங்குமுறை வருவதற்குக் காலம் நீடிப்பதாகத் தோன்றினால் கடவுளுடைய சேவையில் ஏதோ கொஞ்சம் செய்யுங்கள் அநேகமாய் மற்ற ஆட்களைப்போல் வாழுங்கள்,’ என்றுங்கூட அவர் சொல்லவில்லை. ராஜ்யத்தில் முக்கியத்துவத்தை நன்றாய் அறிந்து, இந்தக் காரியத்தில் பிதாவின் சித்தத்தை வெளிப்படுத்தி: “அவருடைய ராஜ்யத்தைத் தொடர்ந்து தேடுங்கள்,” என்று, அல்லது, அப்போஸ்தலனாகிய மத்தேயு அதைப் பதிவு செய்தபடி: “முதலாவதாக ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தொடர்ந்து தேடிக்கொண்டிருங்கள்” என்று சொன்னார். (லூக்கா 12:31; மத். 6:33, NW) நமக்கும் நம்முடைய குடும்பங்களுக்கும் வேண்டிய சரீர தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்கு ஏதோ ஒரு வகையான வேலை செய்வது அவசியமென நம்மில் பெரும்பான்மையர் காண்கிற போதிலும், நமக்கு உண்மையில் விசுவாசம் இருந்தால், கடவுள் தம்முடைய ராஜ்யம் சம்பந்தமாக நமக்குக் கொடுத்திருக்கிற வேலையைச் சுற்றியே நம்முடைய வாழ்க்கைச் சுற்றிக்கொண்டிருக்கும், அதே சமயத்தில் நாம் நம்முடைய குடும்பப் பொறுப்புகளையும் கவனிக்கத் தவறமாட்டோம்.—1 தீமோ. 5:8; நீதி. 29:15.

11 நம்மில் சிலர் மற்றவர்களைப் பார்க்கிலும், அதிக நேரம் வெளி ஊழியத்துக்கு ஒதுக்கிவைக்க முடியும். ஆனால் பல்வேறு வகையான நிலத்தைப் பற்றிய தம்முடைய உவமையில், இயேசு, நல்ல நிலத்தைப்போன்ற இருதயங்களுள்ள யாவரும் கனி கொடுப்பார்கள் என்று காட்டினார். எந்த அளவுக்கு? ஒவ்வொருவரின் சூழ்நிலைமைகளும் வேறுபடுகின்றன. வயது, உடல்நலம், குடும்பப் பொறுப்புகள் எல்லாம் காரணங்களாக இருக்கின்றன. என்றாலும் உண்மையான மதித்துணர்வு இருக்கையில் அதிகம் நிறைவேற்றப்படலாம்.—மத். 13:19, 23.

12 ராஜ்ய ஊழியத்தில் நம்முடைய பங்கை விரிவாக்குவதற்கு உதவி செய்யும் இலக்குகளைக் கொண்டிருப்பது நல்லது. ஆர்வமுள்ள இளம் கிறிஸ்தவனான தீமோத்தேயுவின் மிகச் சிறந்த முன்மாதிரியைப் பற்றி இளைஞர்கள் கருத்துடன் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். (பிலிப். 2:19-22) தங்களுடைய உலகப்பிரகாரமான பள்ளிக் கல்வியை முடிக்கையில் முழுநேர ஊழியத்தை மேற்கொள்வதைப் பார்க்கிலும் சிறந்தது ஏதேனும் உண்டா? முதியோருங்கூட நற்பலன் தரும் ஆவிக்குரிய இலக்குகளை வைப்பதன் மூலம் நன்மை அடைவார்கள்.

13 அவர்கள் இன்னுமதிகம் செய்யலாம் என்பதாக நாம் உணரக்கூடிய மற்றவர்களைக் குறைசொல்வதைப் பார்க்கிலும், நம்முடைய சொந்த சூழ்நிலைமைகள் அனுமதிக்கும் முழு அளவுக்கு நாம் கடவுளைச் சேவிக்கும்படி நம்முடைய சொந்த முன்னேற்றத்துக்காக உழைக்க விசுவாசத்தால் நாம் தூண்டப்படவேண்டும். (ரோமர் 14:10-12; கலாத். 6:4) யோபின் காரியத்தில் காட்டப்பட்டபடி, சாத்தான், நாம் முக்கியமாய் நம்முடைய பொருளுடைமைகளிலும், நம்முடைய சொந்த செளகரியத்திலும் ஆரோக்கியத்திலுமே அக்கறை கொண்டிருக்கிறோமென்றும், கடவுளைச் சேவிப்பதில் நம்முடைய உள்நோக்கம் தன்னலமானதே என்றும் வாதாடுகிறான். ஆனால், நாம் உண்மையில் ராஜ்யத்தை முதலாவது தேடினால், பிசாசை, அவன் நிச்சயமாக இருக்கிறபடி முழுபொய்யன் என்று நீரூபிப்பதில் பங்குகொள்ளுகிறோம். நம்முடைய வாழ்க்கையில் முதலாவது வருவது பொருளுடைமையுமல்ல, நம் சொந்த செளகரியமுமல்ல கடவுளுடைய சேவையே என்பதற்கு அத்தாட்சியைக் கொடுக்கிறோம். இவ்வாறு வார்த்தையிலும் செயலிலும் யெகோவாவுக்கு நம்முடைய ஆழ்ந்த அன்பையும் அவருடைய அரசாட்சிக்கு நம்முடைய உண்மைத் தவறாத ஆதரவையும், உடன் தோழரான மனிதருக்கு நம்முடைய அன்பையும் நிரூபிக்கிறோம்.—நீதி. 27:11; யோபு 1:9-11; 2:4, 5.

14 ஒரு கால அட்டவணையைத் தயாரித்துப் பின்பற்றுவது நாம் மற்றப்படி நிறைவேற்றக் கூடியதைப் பார்க்கிலும் அதிகத்தை நிறைவேற்றுவதற்கு நமக்கு உதவி செய்யும். யெகோவா தாமே தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்குக் ‘காலங்களைக் குறித்திருக்கிறார்,’ அவருடைய மாதிரியை நாம் பின்பற்றவேண்டும். (யாத். 9:5; மாற்கு 1:15; கலாத். 4:4) கூடுமானால், ஒவ்வொரு வாரமும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறித்தக் காலங்களில் வெளி ஊழியத்தில் பங்கு கொள்வது நல்லது. உலகமெங்கும் ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் துணைப் பயனியர்களாகப் பெயர் பதிவுசெய்து, நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் ஒவ்வொரு நாளும் சராசரி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரங்கள் செலவிடுவதில் மகிழ்ச்சியடைகிறார்கள். சிலர் இதைத் தவறாமல் தொடர்ந்து செய்து வருகிறார்கள்: மற்றவர்கள், ஆண்டுதோறும் ஒரு சில தடவைகள் செய்கிறார்கள், இன்னும் பல ஆயிரக்கணக்கானவர்கள் ஒழுங்கான பயனியர்களாக சேவை செய்கிறார்கள். ராஜ்ய செய்தியைப் பிரஸ்தாபிக்க ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் சராசரி மூன்று மணி நேரம் செலவிடுகிறார்கள். மற்றவர்கள், விசேஷித்தப் பயனியர்களாகவும் மிஷனரிகளாகவும் அதைவிட அதிக நேரம் ராஜ்ய சேவையில் செலவிடுகிறார்கள். வெளி ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறோமோ இல்லையோ, கிடைக்கும் ஒவ்வொரு தகுந்த சந்தர்ப்பத்திலும், ராஜ்ய செய்தியை, செவிகொடுக்க மனமுள்ள எவரிடமும் பகிர்ந்துகொள்ள நாம் வாய்ப்புகளைத் தேடலாம். (யோவான் 4:7-15-ஐ ஒத்துப் பாருங்கள்) “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்,” என்ற இயேசுவின் தீர்க்கதரிசனம் குறிப்பிட்டுக் காட்டுபவற்றை நாம் எல்லாரும் கவனத்துடன் சிந்தனை செய்யவேண்டும். நம்முடைய சூழ்நிலைமைகள் அனுமதிக்கிற அளவுக்கு இந்த வேலையில் முழு பங்குகொள்ள வேண்டுமென்பது நம்முடைய ஆவலாக இருக்கவேண்டும்.—மத்.24:14; எபே. 5:15-17.

15 யெகோவாவின் சாட்சிகள் எந்தத் தேசத்தில் வாழ்ந்தாலும் பூமியின் எல்லாப் பாகங்களிலும், ஒற்றுமையாய் இந்தச் சேவை செய்யும் மகத்தான சிலாக்கியத்தில் சுறுசுறுப்பாய்ப் பங்குகொள்ளுகிறார்கள். தேவாவியால் ஏவப்பட்ட பைபிளின் பின்வரும் ஆலோசனையைத் தங்களுக்குப் பொருத்திப் பிரயோகிக்கிறார்கள். “கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும் கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.”—1 கொரி. 15:58.

மறு கலந்தாலோசிப்பு

● ராஜ்யத்தை முதலாவது தேடும்படி இயேசு சொன்னபோது எது இரண்டாவது இடத்தில் வைக்கப்பட வேண்டுமென்று அவர் உணர்த்திக் காட்டினார்?

● நம்முடைய மற்றும் நம்முடைய குடும்பத்தாருடைய சரீரப்பிரகாரமான தேவைகளைக் கவனிப்பதைக் குறித்ததில், என்ன நோக்குநிலை நமக்கு இருக்க வேண்டும்? கடவுள் நமக்கு என்ன உதவி செய்வார்?

● ராஜ்ய சேவையில் நாம் ஏதோ ஓரளவான பங்குகொள்ளும் வரையில் அதில் எவ்வளவு செய்கிறோமென்பது ஏதாவது வேறுபாட்டை உண்டுபண்ணுகிறதா? ஏன்?

[கேள்விகள்]

1. (எ) 1,900 ஆண்டுகளுக்கு முன்பு, இயேசு ஏன் ராஜ்யத்தை முதலாவது தேடும்படி சொன்னார்? (பி) நம்மை நாமே என்ன கேள்விகள் கேட்டுக் கொள்ள வேண்டும்?

2. பொதுவில் மக்கள் ஆவலுடன் நாடித்தேடும் காரியங்கள் யாவை?

3. (எ) என்ன வகையான பொக்கிஷங்களைத் தேடும்படி இயேசு தம்முடைய சீஷர்களை ஊக்கப்படுத்தினார், ஏன்? (பி) பொருள் சம்பந்தமான தேவைகளைப் பற்றி மட்டுக்கு மீறி கவலைப்படுவதற்கு ஏன் அவசியமில்லை?

4. ஒருவன் பொருள் சம்பந்தமானக் காரியங்களில் மட்டுக்கு மீறி அக்கறை கொண்டிருந்தால் அதன் விளைவு என்னவாகலாம்? உதாரணத்துடன் விளக்குங்கள்.

5. எந்தக் காரியங்களுடன் திருப்தியாயிருக்கும்படி பவுல் தீமோத்தேயுவை ஊக்கப்படுத்தினான், ஏன்? (பி) சாத்தான் எப்படி, “பண ஆசை”யை அழிவைக் கொண்டுவரும் கண்ணியாக பயன்படுத்துகிறான்?

6. (எ) இந்தக் கண்ணியில் அகப்படுவதைத் தவிர்க்க, நாம் என்ன செய்ய வேண்டும்? (பி) இந்த உலகத்தின் இன்றைய பொருளாதார நிலைமையைக் கருதுகையில் இது நடைமுறையானதாகத் தோன்றுகிறதா?

7. இஸ்ரவேலில் பிரசங்கிக்கும்படி இயேசு அப்போஸ்தலரை அனுப்பினபோது என்ன கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்தார், இவை ஏன் பொருத்தமாக இருந்தன?

8. (எ) தம்முடைய மரணத்துக்குச் சற்று முன்பு இயேசு ஏன் வேறுபட்ட கட்டளைகளைக் கொடுத்தார்? (பி) இருந்தபோதிலும், எது இன்னும் அவர்களுடைய வாழ்க்கையில் முதலிடத்தில் இருக்க வேண்டும்?

9. (எ) பவுல் எப்படி ராஜ்யத்தை முதலிடத்தில் வைத்தான்? (பி) அவனுடைய சரீரப்பிரகாரமான தேவைகள் எப்படிக் கவனிக்கப்பட்டன? (சி) இந்தக் காரியங்களின் பேரில் அவன் மற்றவர்களுக்கு என்ன அறிவுரை கொடுத்தான்?

10. (எ) ‘ராஜ்யத்தை முதலாவது தேடுங்கள்’ என்பதன் அர்த்தமென்ன? (பி) ஆனால் எதைக் கவனிக்கத் தவறக்கூடாது?

11. (எ) ராஜ்ய செய்தியைப் பரவச் செய்வதில் எல்லாரும் ஒரே அளவாகச் செய்ய முடியாதென்ற உண்மையை இயேசு எப்படி உவமையைக் கொண்டு விளக்கினார்? (பி) என்ன காரணங்கள் இதைப் பாதிக்கின்றன?

12. முக்கியமாய் இளைஞர்கள் எந்த ஆரோக்கியமான ஆவிக்குரிய இலக்கைப் பற்றிச் சிந்திக்கும்படி ஊக்கமூட்டப்படுகிறார்கள்?

13. (எ) ராஜ்ய சேவையில் நீங்கள்தாமே என்ன செய்யக்கூடுமென்பதை யார் தீர்மானிப்பது? (பி) நாம் உண்மையில் ராஜ்யத்தை முதலாவது தேடினால், இது எதற்கு அத்தாட்சியாக இருக்கிறது?

14. வெளி ஊழியத்துக்கு ஒரு கால அட்டவணை வைத்திருப்பது ஏன் நன்மை பயக்குவிக்கிறது? பி) சாட்சிகள் பலர் எந்த அளவுக்கு வெளி ஊழியத்தில் பங்கு கொள்கின்றனர், ஏன்?

15. நம்முடைய ஊழியம் சம்பந்தமாக, 1 கொரிந்தியர் 15:58-ல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரை சமயோசிதமாய் இருக்கிறதென்று நீங்கள் ஏன் உணருகிறீர்கள்?