Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வீட்டில் தெய்வபக்தியை நாம் பழக்கமாய் அனுசரிக்க வேண்டும்

வீட்டில் தெய்வபக்தியை நாம் பழக்கமாய் அனுசரிக்க வேண்டும்

அதிகாரம் 18

வீட்டில் தெய்வபக்தியை நாம் பழக்கமாய் அனுசரிக்க வேண்டும்

தொடக்கத்தில் நம்முடைய பைபிள் படிப்பின்போது நாம் கற்ற, இருதயத்துக்கு மகிழ்ச்சியூட்டின சத்தியங்களில் சில, திருமணமும் குடும்ப வாழ்க்கையும் சம்பந்தப்பட்டவை யாகும். யெகோவாவே திருமணத்தைத் தொடங்கி வைத்தவரென்று நாம் தெரிந்து கொண்டோம், மேலும் குடும்பங்களுக்கு மிகச் சிறந்த வழிநடத்துதலை அவர் பைபிளில் அளித்திருக்கிறாரெனவும் நாம் கண்டறிந்தோம். இந்த வழிநடத்துதலின் பலனாக, போற்றத்தக்க வண்ணமாய்ப் பலர், பாலுறவு ஒழுக்கக்கேடான வாழ்க்கையை விட்டுவிட்டு தங்கள் திருமணத்தைச் சரியான முறைப்படி பதிவு செய்தார்கள். ஆனால், கிறிஸ்தவ குடும்ப வாழ்க்கைக்கு இன்னும் அதிகம் உண்டு. திருமண இணைப்பின் நிலையான தன்மையையும், குடும்பத்தில் நம்முடைய பொறுப்புகளை நிறைவேற்றுவதையும், குடும்பத்தின் மற்ற உறுப்பினருடன் நாம் நடந்துகொள்ளும் முறையையும் குறித்த நம்முடைய மனப்பான்மை இதில் உட்பட்டிருக்கிறது.—எபே. 5:33-6:4.

2 இந்தக் காரியங்களைப் பற்றி பைபிள் சொல்வதை இலட்சக்கணக்கான ஆட்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால் தங்கள் சொந்த வீட்டில் பிரச்னைகளை எதிர்ப்படுகையில், அவர்கள் அதைப் பொருத்திப் பயன்படுத்துகிறதில்லை. நம்மை பற்றியதென்ன? பிள்ளைகள் தங்கள் பெற்றோரைக் கனம்பண்ண வேண்டுமென்ற கடவுளுடைய கட்டளையை, ஏதோ மதபக்தி பாசாங்கு போதுமானதென நியாயங்கூறி, மீறினதன் காரணமாக இயேசு கண்டனம் செய்த ஆட்களைப் போலிருக்க நம்மில் எவரும் நிச்சயமாகவே விரும்புகிறதில்லை. (மத். 15:4-9) தெய்வ பக்தியின் வேஷத்தைத் தரித்து “தங்கள் சொந்தக் குடும்பத்தில்” அதைப் பழக்கமாய் அனுசரிக்கத் தவறுகிற ஆட்களைப் போலிருக்க நாம் விரும்புகிறதில்லை. “மிகுந்த ஆதாயத்தைக்” குறிக்கிற உண்மையான தெய்வபக்தியைக் காட்டவே நாம் விரும்ப வேண்டும்.—1 தீமோ. 5:4; 6:6; 2 தீமோ. 3:5.

திருமணம் எவ்வளவு காலம் நீடித்திருக்கும்?

3 அடுத்தடுத்து மேலும் மேலுமதிகமாய்த் திருமண பிணைப்புகள் மிக எளிதில் முறிந்து போய்க் கொண்டிருக்கின்றன. 20, 30, அல்லது 40 ஆண்டுகள் ஒன்றாய் வாழ்ந்தத் தம்பதிகள் சிலர், இப்பொழுது வேறொருவருடன் “புதிய வாழ்க்கையைத்” தொடங்கத் தீர்மானிக்கின்றனர். மேலும், மணமாகி ஒருசில மாதங்களுக்குள் இளம் தம்பதிகள் பிரிந்து விட்டனரென்று கேள்விப்படுவது இனிமேலும் அசாதாரணமாயில்லை. மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், யெகோவாவை வணங்கும் நாம் கடவுளைப் பிரியப்படுத்தவே விரும்ப வேண்டும். அவருடைய வார்த்தை இதை பற்றி என்ன சொல்லுகிறது?

ஓர் ஆணும் பெண்ணும் மணம் செய்துகொள்கையில், அவர்கள் எவ்வளவு காலம் ஒன்றாக நிலைத்திருக்க எதிர்பார்க்க வேண்டும்? (ரோமர் 7:2, 3; மாற்கு 10:6-9)

கடவுளுக்கு முன்பாகச் செல்லத்தக்க திருமணவிலக்குச் செய்வதற்கு ஒரே ஆதாரம் என்ன? (மத். 19:3-9; 5:31, 32)

தம்முடைய வார்த்தையில் அதிகாரங் கொடுக்கப்பட்டிராத திருமண விலக்குகளைப் பற்றி யெகோவா எவ்வளவு கண்டிப்பாய் உணருகிறார்? (மல்கியா 2:13-16)

மண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கும் வழிவகையாகப் பிரிந்து போதலை பைபிள் சிபாரிசு செய்கிறதா? (1 கொரி. 7:10-13)

4 ஏன் திருமணங்களில் சில நிலைத்திருக்கின்றன, மற்றவை—கிறிஸ்தவர்களென்று உரிமைபாராட்டுகிறவர்கள் மத்தியிலும்—முறிந்து போகின்றன? திருமணம் செய்வதற்கு, இருதரப்பினரும் முதிர்ச்சியடையும் வரையில் காத்திருப்பது அநேகமாய் அடிப்படை காரணமாயிருக்கிறது. தன் அக்கறைகளைப் பகிர்ந்துகொள்ளுகிறவரும் காரியங்களைத் தான் திறந்த மனதுடன் கலந்துபேசக் கூடியவருமான ஒரு துணையைக் கண்டுபிடிப்பதும் முக்கியம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அதிக முக்கியமானது உண்மையான தெய்வபக்தியைப் பழக்கமாய் அனுசரிக்கிற ஆளாக ஒருவர் இருப்பதேயாகும். ஒருவர் உண்மையில் யெகோவாவை நேசித்து, அவருடைய வழிகளே சரியானவை என்று உறுதியாய் நம்பினால், எழும்பும் பிரச்னைகளைக் கையாளுவதற்கு ஆரோக்கியமான ஆதாரம் இருக்கும். (சங்கீதம் 119:97, 104; நீதி. 22:19) இத்தகைய ஒருவன் தன் திருமணம் வெற்றிகரமாயில்லையென்றால், பிரிந்து கொள்ளலாம் அல்லது மணவிலக்குச் செய்து கொள்ளலாமென்ற மனப்பான்மையுடன் இரான், இவ்வாறு அவன் மணவாழ்க்கை கெடுக்கப்படுகிறதில்லை. தன் சொந்தப் பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதற்கு ஒரு சாக்குப்போக்காகத் தன் துணைவியின் குறைபாடுகளை அவன் பயன்படுத்திக்கொள்ள மாட்டான். அதற்குப் பதிலாக, வாழ்க்கையின் பிரச்னைகளை எதிர்ப்படவும் அவற்றைத் தீர்ப்பதற்கு நடைமுறையான பரிகாரங்களைத் தேடவும் அவன் கற்றுக்கொள்வான்.

5 நாம் தாமே துன்பம் அனுபவிக்கையில் யெகோவாவின் வழிகளைப் புறக்கணித்து எது நல்லது எது கெட்டதென்பதை நமக்கு நாமே தீர்மானித்துக் கொள்வதே மேம்பட்டதென்ற முடிவுக்கு வருவோமென பிசாசானவன் வாதிடுவதை நாம் நன்றாய் அறிந்திருக்கிறோம். ஆனால் யெகோவாவுக்கு உண்மைத் தவறாதிருக்கும் ஆட்கள் அவ்வாறில்லை. (யோபு 2:4, 5; நீதி. 27:11) அவிசுவாசிகளாயுள்ள மணத் துணைவர்களிடமிருந்து துன்புறுத்தலை அனுபவித்திருக்கிற யெகோவாவின் சாட்சிகளின் மிகப் பொரும்பான்மையர் தங்கள் திருமண வாக்குறுதிகளை விட்டுப் பின்வாங்கிக் கொள்ளவில்லை. (மத். 5:37) சிலர், பல ஆண்டுகளுக்குப்பின், தங்களை எதிர்த்த மணத் துணைவர்களும் யெகோவாவை சேவிப்பதில் தங்களைச் சேர்ந்து கொண்ட மகிழ்ச்சியை அனுபவித்தனர். (1 கொரி. 7:16; 1 பேதுரு 3:1, 2) தங்கள் மணத் துணைவர்கள் எந்த மாற்றத்தையும் காட்டாத அல்லது தங்கள் விசுவாசத்தில் விடாமல் உறுதியாய் நிலைநின்றதன் காரணமாக அவர்கள் துணைவர்கள் அவர்களைக் கைவிட்டுச் சென்ற இத்தகைய மற்றவர்களைக் குறித்ததில், இவர்களுங்கூட யெகோவாவின் தராதரங்களை விடாமல் கடைப்பிடித்ததனால் தாங்கள் நிறைவாய் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதை அறிந்திருக்கிறார்கள். எவ்வகையில்? அவர்களுடைய சூழ்நிலைமைகள் யெகோவாவிடம் நெருங்கிவரும்படி அவர்களுக்குக் கற்பித்திருக்கின்றன. துன்பத்தின் கீழும் தெய்வீகப் பண்புகளைப் பிரதிபலிக்க அவர்கள் கற்றிருக்கின்றனர். தெய்வபக்தியின் வல்லமைக்கு அத்தாட்சியளிக்கும் வாழ்க்கையையுடைய ஆட்களாக அவர்கள் இருக்கிறார்கள்.—சங். 55:22; யாக். 1:2-4; 2 பேதுரு 1:5, 6.

ஒவ்வொருவரும் அவரவர் பாகத்தை நிறைவேற்றுதல்

6 உண்மையில் வெற்றிகரமான மணவாழ்க்கை நடத்த வெறுமென ஒன்றாய்த் தங்கியிருப்பதைப் பார்க்கிலும் அதிகம் நிச்சயமாகவே வேண்டியதாயிருக்கிறது. தலைமை வகிப்புக்குரிய யெகோவாவின் ஏற்பாட்டைக் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் மதிப்பது ஓர் அடிப்படையான தேவையாகும். இது, வீட்டில் நல்ல ஒழுங்குக்கும் பாதுகாப்பான உணர்ச்சிக்கும் உதவிசெய்கிறது.—1 கொரி. 11:3; தீத்து 2:4, 5; நீதி. 1:8, 9; 31:10, 28.

7 தலைமை வகிப்பை எப்படிச் செலுத்தவேண்டும்? இயேசு கிறிஸ்துவின் பண்புகளைப் பிரதிபலிக்கிற முறையில் செலுத்த வேண்டும். யெகோவாவின் வழிகளைக் கடைப்பிடிப்பதில் இயேசு உறுதியாயிருக்கிறார்; அவர் நீதியை நேசித்து அக்கிரமத்தை வெறுக்கிறார். (எபி. 1:8, 9) மேலும் அவர் தம்முடைய சபையை மிக ஆழ்ந்த அன்புடன் நேசிக்கிறார், அதற்குத் தேவையான வழிநடத்துதலை அளித்து அதைக் கவனித்துக் காக்கிறார். அவர் அகந்தையுடனும் பிறருணர்ச்சியைக் கருதாமலும் இல்லை, ஆனால், அதற்குமாறாக, “சாந்தமும் மனத்தாழ்மையுமாய்” இருக்கிறார், அவருடைய தலைமை வகிப்பின் கீழ் வருகிறவர்கள் ‘தங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலைக் கண்டடைகிறார்கள்.’ (மத். 11:28, 29; எபே. 5:25-33) கணவனும் தகப்பனுமாயிருக்கிறவன் தன் வீட்டாரிடம் இந்த முறையில் நடந்துகொள்கையில், தெளிவாகவே, தெய்வ பக்கியுடன் நடப்பதில் பரிபூரண முன்மாதிரியை வைத்த கிறிஸ்துவுக்குத் தன்னைக் கீழ்ப்படுத்துகிறான். நிச்சயமாகவே, கிறிஸ்தவ தாய்மாரும் தங்கள் பிள்ளைகளைக் கையாளுவதில் இதே பண்புகளைப் பிரதிபலிக்க வேண்டும்.

8 எனினும், மனித அபூரணத்தின் காரணமாகப் பிரச்னைகள் எழும்பலாம். குடும்பத்திலுள்ள எவரும் பைபிள் நியமங்களைப் பொருத்திப் பிரயோகிக்கத் தொடங்குவதற்கு முன்பாக, சிலருக்கு மற்றவர்களிடமிருந்து வழிநடத்துதலைப் பெறுவது மனதின் ஆழத்தில் ஓரளவு மனக்கசப்பை ஏற்கெனவே பதிய வைத்திருக்கலாம். தயவாக நயந்து கேட்பதும் அன்புள்ள முறையைக் கையாளுவதும் நல்ல பலன்களைக் கொண்டுவராததுபோல் தோன்றலாம். “கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும்” ஆனவற்றை நம்மைவிட்டு நீக்கிப்போடும்படி பைபிள் சொல்வதை நாம் அறிந்திருக்கிறோம். (எபே. 4:31) ஆனால் சிலர் வேறு எவ்விதமும் விளங்கிக் கொள்வதில்லையெனத் தோன்றினால் என்ன செய்யவேண்டும்? கடுமையான நெருக்கடியின் கீழ் இருந்தபோது இயேசு எப்படி, நடந்துகொண்டார்? தம்மைப் பயமுறுத்தித் திட்டினவர்களின் மாதிரியை அவர் பின்பற்றவில்லை. அதற்குப் பதிலாக, அவர் தம்முடைய தகப்பனிடம் தம்மை ஒப்புவித்து, அவரில் முழுமையாய் நம்பியிருந்தார். (1 பேதுரு 2:22, 23) அதைப்போல் வீட்டில், தொல்லைதரும் சூழ்நிலைமைகள் எழும்பினால் இவ்வுலகத்தின் முறைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, யெகோவாவிடம் திரும்பி, அவருடைய உதவிக்காக நாம் ஜெபித்தால் தெய்வபக்தியின் அத்தாட்சியைக் கொடுக்கிறோம்.—நீதி. 3:5-7.

9 மாற்றங்கள் எப்பொழுதும் விரைவாய் வருகிறதில்லை, ஆனால் பைபிள் அறிவுரை உண்மையில் வெற்றிகரமாய்ச் செயலாற்றுகிறது. மனைவியின் குற்றங்களைப்பற்றி மனக்கசப்புடன் குறைகூறிக் கொண்டிருந்த கணவர் பலர், கிறிஸ்து தம்முடைய சபையுடன் நடந்து கொள்ளும் முறையைத் தாங்கள் தாமே மேலும் முழுமையாய் மதித்துணர்ந்த போது, முன்னேற்றம் உண்டாகத் தொடங்கினதைக் கண்டிருக்கிறார்கள். சபை பரிபூரண மனிதர் அடங்கியதாயில்லை. என்றபோதிலும் இயேசு சபையை நேசிக்கிறார், அதற்குச் சரியான முன்மாதிரியை வைத்தார், அதற்காகத் தம்முடைய உயிரையும் கொடுத்தார், அது தமக்கு முழுமையாய்ப் பிரியமுள்ளதாயிருக்கும்படி முன்னேற்றமடைய அதற்கு உதவி செய்வதற்கு அவர் வேத எழுத்துக்களைக் கருவியாகப் பயன்படுத்துகிறார். (எபே. 5:25-27; 1 பேதுரு 2:21) முன்னேற்றமடைய உதவி செய்வதற்குக் கிறிஸ்தவ கணவர்கள் பலர் நல்ல முன்மாதிரியை வைக்கவும் தனிப்பட்ட அன்புள்ள உதவியை அளிக்கவும் உழைக்க, அவருடைய முன்மாதிரி அவர்களுக்கு ஊக்கமளித்திருக்கிறது. இத்தகைய முறைகள், மனக்கசப்புடன் குற்றங்கண்டுபிடிப்பது அல்லது வெறுமென பேச மறுப்பது கொண்டுவருவதைப் பார்க்கிலும் மிக மேம்பட்ட பலன்களைத் தருகின்றன.

10 வீட்டில் பிரச்னைகள் எழும்பச் செய்வது கணவனும் தகப்பனுமானவனின் குற்றங்குறைகளாகவும் இருக்கலாம். அவன் தன் குடும்பத்தின் உணர்ச்சிவச தேவைகளை உணராமலிருந்தால் அல்லது குடும்பமாக பைபிளைக் கலந்தாலோசிப்பதற்கு அல்லது மற்ற நடவடிக்கைகளுக்கு, ஏற்பாடு செய்து உண்மையில் தலைமைத் தாங்குகிறதில்லையென்றால் என்ன செய்வது? இந்தப் பிரச்னையை, மரியாதையுடன் மனம் விட்டுப் பேசி கலந்தாலோசித்தப் பின்பு நல்ல பலன்களைச் சில குடும்பங்கள் கண்டிருக்கின்றன. (நீதி. 15:22; 16:23; 31:26) அதன் பலன்கள் நாம் நினைத்தப்படி முழுமையாக இல்லையென்றாலும், குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் ஆவியின் கனிகளை வளர்த்து, குடும்பத்தின் மற்ற உறுப்பினருக்கு அன்புள்ள அக்கறையையும் தயவான கவனிப்பையும் காட்டுவதனால் வீட்டின் சூழ்நிலை முன்னேற்றமடைவதற்கு அவரவர் தங்கள் விலைமதியா பங்கை செய்யலாம். மற்றவர் ஏதாவது செய்யும்படி காத்திருப்பதனால் அல்ல, நம்முடைய சொந்தப் பாகத்தை நன்றாய்ச் செய்வதன் மூலமே படிப்படியான முன்னேற்றம் வரும், இவ்வாறு வீட்டில் நாம் தாமே தெய்வபக்தியை நடைமுறையில் அனுசரிக்கிறோமெனக் காட்டுகிறோம்—கொலோ. 3:18-20, 23, 24.

பதில்கள் எங்கே கிடைக்கும்

11 தங்கள் குடும்ப விவகாரங்களின் பேரில் ஆலோசனைபெற மக்கள் நாடிச் செல்லும் ஊற்றுமூலங்கள் பல உண்டு. ஆனால் கடவுளுடைய வார்த்தையிலேயே மிகச் சிறந்த அறிவுரை அடங்கியிருக்கிறதென்று நாம் அறிந்திருக்கிறோம், மேலும் அதைப் பொருத்திப் பிரயோகிப்பதற்குக் கடவுள் தம்முடைய காணக்கூடிய அமைப்பின் முலமாய் நமக்கு உதவி செய்வதற்காகவும் நாம் நன்றியுடனிருக்கிறோம். இந்த உதவியிலிருந்து நீங்கள் முழுமையாய்ப் பயனடைகிறீர்களா?—சங். 119:129, 130; மீகா 4:2.

12 சபை கூட்டங்களுக்கு வருவதோடு கூட குடும்ப பைபிள் படிப்புக்கு நிலையாக நேரங்கள் ஒதுக்கி வைத்திருக்கிறீர்களா? ஒவ்வொரு வாரமும் தவறாமல் ஒழுங்காய் இதைச் செய்துவரும் குடும்பங்கள் தங்கள் வணக்கத்தில் ஒன்றுபடுகின்றனர். தங்கள் சொந்த சூழ்நிலைமைகளுக்குக் கடவுளுடைய வார்த்தையைப் பொருத்திப் பிரயோகிப்பதை அவர்கள் கலந்துபேசி வருகையில் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை வளம் பெருகுகிறது.—உபாகமம் 11:18-21-ஐ ஒத்துப் பாருங்கள்.

13 ஒருவேளை உங்களைப் பாதிக்கும் மணவாழ்க்கைச் சார்ந்த அல்லது குடும்பக் காரியங்களைப் பற்றிய தனிப்பட்ட கேள்விகள் இருக்கலாம். உதாரணமாக, பிறப்புக் கட்டுப்பாட்டைப் பற்றியதென்ன? கருத்தடை அறுவை மருத்துவம் செய்துகொள்வது கிறிஸ்தவர்களுக்குச் சரியானதா? குழந்தை உருக்குலைந்த நிலையில் பிறக்கலாமெனத் தோன்றினால் கருச்சிதைவு செய்து கொள்ளுதல் நியாயமாகுமா? கணவன் மனைவிக்கிடையில் சரியானபடி கொள்ளும் பாலுறவு வகையைக் குறித்ததில் ஏதாவது கட்டுப்பாடுகள் இருக்கின்றனவா? இருபதுக்குட்பட்ட வயதிலிருக்கும் ஓர் இளைஞன் ஆவிக்குரிய காரியங்களில் அதிக அக்கறை காட்டுகிறதில்லையென்றால், வணக்கத்தில் குடும்பத்துடன் எந்த அளவுக்குப் பங்கு கொள்ளும்படி அவன் கேட்கப்படவேண்டும். நிச்சயமாகவே இந்த ஒவ்வொன்றின் பேரிலும் உங்களுக்குத் தனிப்பட்ட எண்ணம் இருக்கலாம். ஆனால் பைபிள் நியமங்களை ஆதாரமாகக் கொண்டு நீங்கள் பதிலளிக்கக்கூடுமா? இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றும் காவற்கோபுரத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய விஷயத்தைக் கண்டுபிடிப்பதற்கு கிடைக்கக்கூடிய பொருளடக்க அட்டவணைகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். பொருளடக்க அட்டவணை குறிப்பிடும் பழைய பிரசுரங்கள் உங்களிடம் இல்லையென்றால், ராஜ்ய மன்றத்திலுள்ள நூல் நிலையத்தில் பாருங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் ஆம் அல்லது இல்லை என்ற பதிலை எதிர்பார்க்க வேண்டாம். சில சமயங்களில் நீங்கள்தாமே—தனித்தோ அல்லது மணமாகிய தம்பதிகளாயோ—தீர்மானிக்க வேண்டும். ஆனால் யெகோவாவின் பேரிலும் உங்கள் குடும்ப உறுப்பினர் பேரிலும் இருக்கும் உங்கள் அன்பைப் பிரதிபலிக்கிற தீர்மானங்களைச் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். யெகோவாவுக்கு மிகவும் பிரியமாயிருக்க வேண்டுமென்ற உங்கள் ஊக்கமான ஆவலுக்கு அத்தாட்சியைக் கொடுக்கும் தீர்மானங்களைச் செய்யுங்கள். அப்படி நீங்கள் செய்தால், யாவர் முன்பும் மட்டுமல்லாமல் உங்கள் சொந்த வீட்டிலும் தெய்வபக்தியைப் பழக்கமாய் உண்மையாகவே அனுசரிக்கிறீர்கள் என்பது யெகோவாவுக்கும் உங்களை நன்றாய் அறிந்திருக்கிற மற்றவர்களுக்கும் தெளிவாகத் தெரியும்.—எபே. 5:10; ரோமர் 14:19.

மறு கலந்தாலோசிப்பு

● ஒருவர் தன் திருமண வாக்குக்கு உண்மையாயிருப்பதில் யெகோவாவுக்கு உண்மைத்தவறாதிருப்பது எப்படி உட்பட்டிருக்கிறது?

● குடும்பப் பிரச்னைகளினால் வரும் நெருக்கடியின் கீழ் இருக்கையில் கடவுளுக்குப் பிரியமானதைச் செய்ய எது நமக்கு உதவி செய்யும்?

● குடும்பத்திலுள்ள மற்றவர்கள் தவறினாலும் நிலைமையை முன்னேற்றுவிக்க நாம் என்ன செய்யலாம்?

[கேள்விகள்]

1. (எ) திருமணத்துக்குரிய யெகோவாவின் தராதரங்களைக் கற்றறிந்தபின் என்ன மாற்றங்களைப் பலர் செய்திருக்கின்றனர்? (பி) ஆனால் கிறிஸ்தவ குடும்ப வாழ்க்கையில் மேலும் என்ன உட்பட்டிருக்கிறது?

2. (எ) பைபிளிலிருந்து தாங்கள் அறிந்திருப்பதை எல்லோரும் வீட்டில் பொருத்திப் பயன்படுத்துகிறார்களா? (பி) அப்படிச் செய்வதன் முக்கியத்துவத்தை இயேசுவும் பவுலும் எப்படி அறிவுறுத்தினார்கள்?

3. (எ) திருமணங்கள் பலவற்றிற்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்கவேண்டும்? (பி) திருமணம் நீடித்து நிலைத்திருக்கவேண்டியதைப் பற்றி மேலே வரிசையாகக் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க உங்கள் பைபிளைப் பயன்படுத்துங்கள்.

4. தற்காலத்திய மனப்போக்கு இவ்வாறிருந்தாலும், சில திருமணங்கள் சகித்து நிலைத்திருப்பதேன்?

5. (எ) இதில் யெகோவாவுக்கு உண்மைத்தவறாமை எப்படி உட்பட்டிருக்கிறது? (பி) கடுமையான துன்புறுத்தலை எதிர்ப்படுகையிலும், யெகோவாவின் தராதரங்களை விடாமல் உறுதியாய்க் கடைப்பிடிப்பது என்ன நன்மைகளைக் கொண்டுவரும்?

6. மணவாழ்க்கை வெற்றிகரமாயிருக்க, எந்த ஏற்பாட்டை மதிக்க வேண்டும்?

7. குடும்பத்தில் தலைமை வகிப்பை எப்படிச் செலுத்த வேண்டும்?

8. (எ) சில குடும்பங்களில், ஏன், கிறிஸ்தவ முறைகள் விரும்பப்படும் பலன்களைக் கொண்டுவராததுபோல் தோன்றலாம்? (பி) இப்படிப்பட்ட நிலைமையை எதிர்ப்பட்டால் நாம் என்ன செய்யவேண்டும்?

9. குற்றங்கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, கிறிஸ்தவ கணவர்கள் பலர் என்ன முறைகளைப் பயன்படுத்தக் கற்றிருக்கின்றனர்?

10. (எ) கணவனும் தகப்பனுமானவன்—கிறிஸ்தவனென உரிமை பாராட்டுகிறவனுங்கூட—என்ன வழிகளில் தன் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு வாழ்க்கையை கடினமாக்கிக் கொண்டிருக்கக் கூடும்? (பி) நிலைமை சரிபடும்படி முன்னேற்றுவிக்க என்ன செய்யலாம்?

11, 12. (எ) குடும்ப வாழ்க்கையின் பிரச்னைகளைச் சமாளிக்க நமக்கு உதவி செய்வதற்கு யெகோவா என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்? (பி) முழுமையாய் பயனடைய, என்ன செய்யும்படி நமக்கு ஆலோசனை சொல்லப்படுகிறது?

13. (எ) மணவாழ்க்கை அல்லது குடும்பக் காரியங்களைச் சார்ந்த தனிப்பட்ட கேள்விகள் நமக்கிருந்தால், தேவைப்படும் உதவியை நாம் அநேகமாய் எங்கு காணலாம்? (பி) நாம் செய்யும் எல்லாத் தீர்மானங்களிலும் எது பிரதிபலிக்க வேண்டும்?