Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆலோசனையைக் கேட்டு சிட்சையை ஏற்றுக்கொள்ளுங்கள்

ஆலோசனையைக் கேட்டு சிட்சையை ஏற்றுக்கொள்ளுங்கள்

அதிகாரம் பதினைந்து

ஆலோசனையைக் கேட்டு சிட்சையை ஏற்றுக்கொள்ளுங்கள்

“நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்” என பைபிள் யாக்கோபு 3:2-⁠ல் சொல்கிறது. கடவுளுடைய வார்த்தை அறிவுறுத்துவதற்கு ஏற்ப நாம் நடந்துகொள்ளத் தவறிய சந்தர்ப்பங்கள் பல நம் நினைவுக்கு வரலாம். ஆகவே, “உன் அந்திய காலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக் கேட்டு, சிட்சையை (NW) ஏற்றுக்கொள்” என பைபிள் சொல்வதை நாம் சரியென ஒத்துக்கொள்கிறோம். (நீதிமொழிகள் 19:20) பைபிள் போதனைகளுக்கு இசைவாக வாழ நாம் ஏற்கெனவே அநேக மாற்றங்களை செய்திருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் சக கிறிஸ்தவர் ஒருவர் ஆலோசனை தருகையில் நாம் எப்படி பிரதிபலிக்கிறோம்?

2சிலர் தங்களை நியாயப்படுத்த முயலுகிறார்கள், சூழ்நிலையின் வினைமை தன்மையை குறைக்க முயலுகிறார்கள், அல்லது பழியை மற்றவர்கள் மேல் போட முயலுகிறார்கள். ஆனால் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடப்பதே சிறந்தது. (எபிரெயர் 12:11) இருந்தாலும் யாருமே மற்றவர்களிடம் பரிபூரணத்தை எதிர்பார்க்கக் கூடாது; அற்ப விஷயத்திற்கெல்லாம் அல்லது தனிப்பட்டவரின் விருப்பத்திற்கு பைபிள் விட்டுவிடுகிற காரியங்களுக்கெல்லாம் சதா ஆலோசனை கொடுக்கவும் கூடாது. அதோடு ஆலோசனை கொடுப்பவர் ஒருவேளை எல்லா உண்மைகளையும் சீர்தூக்கிப் பார்க்காமல் இருந்திருக்கலாம்; ஆகவே அவற்றை மரியாதையுடன் அவருடைய கவனத்திற்குக் கொண்டுவரலாம். ஆனால் பின்வரும் கலந்தாலோசிப்பில், பொருத்தமான, பைபிள் அடிப்படையிலான ஆலோசனை அல்லது சிட்சை கொடுக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் ஒருவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

அறிவு புகட்டும் உதாரணங்கள்

3தேவையான ஆலோசனைகளை பெற்றவர்களின் நிஜ அனுபவங்கள் கடவுளுடைய வார்த்தையில் உள்ளன. சில சமயங்களில் ஆலோசனையோடு சிட்சையும் கொடுக்கப்பட்டது. அவற்றை பெற்றவர்களில் ஒருவர்தான் இஸ்ரவேல் ராஜாவாகிய சவுல். அமலேக்கியர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவர் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய தவறினார். அமலேக்கியர்கள் கடவுளின் ஊழியர்களுக்கு விரோதிகள்; ஆகவே, அந்த அமலேக்கியர்களையோ அவர்களுடைய ஆடு மாடுகளையோ தப்பவிடக்கூடாது என்பதே யெகோவாவின் நியாயத்தீர்ப்பு. ஆனால் ராஜாவாகிய சவுலோ அவர்களின் ராஜாவையும் மிருகங்களில் தரமானவற்றையும் கொலை செய்யாமல் விட்டுவிட்டார்.​—1 சாமுவேல் 15:1-11.

4சவுலை கண்டிப்பதற்காக யெகோவா சாமுவேல் தீர்க்கதரிசியை அனுப்பினார். சவுல் அதற்கு எப்படி பிரதிபலித்தார்? அமலேக்கியர்களை அவர் உண்மையில் முறியடித்ததாகவும், ஆனால் அவர்களின் ராஜாவை சும்மாதான் தப்ப வைத்ததாகவும் விவாதித்தார். ஆனால் அது யெகோவாவின் கட்டளைக்கு முரணாக இருந்தது. (1 சாமுவேல் 15:20) ஆடு மாடுகளை தப்பவிட்டதைக் குறித்தோ, “நான் ஜனங்களுக்குப் பயந்து அவர்கள் சொல்லைக் கேட்டேன்” என்று ஜனங்கள் மேல் சவுல் பழியை போட்டார். (1 சாமுவேல் 15:24) சுய கெளரவத்தைக் காத்துக்கொள்வதே அவருக்கு பெரிய விஷயமாக இருந்ததாக தெரிகிறது; ஆகவேதான் ஜனங்களுக்கு முன்பாக தன்னை கனம்பண்ணும்படியும் சாமுவேலிடம் கேட்டார். (1 சாமுவேல் 15:30) முடிவில், சவுலை ராஜாவாயிராதபடிக்கு யெகோவா புறக்கணித்தார்.​—1 சாமுவேல் 16:1.

5யூதாவின் அரசனாகிய உசியா, “தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.” (2 நாளாகமம் 26:16) சட்டப்படி ஆசாரியர்கள் மட்டுமே தூபங்காட்ட முடியும். உசியாவை பிரதான ஆசாரியர் தடுக்க முயன்றபோது அவர் கோபப்பட்டார். அதன் விளைவாக என்ன நடந்தது? ‘அவருடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று. . . . கர்த்தர் தன்னை அடித்ததினால் . . . ராஜாவாகிய உசியா தன் மரண நாள் மட்டும் குஷ்டரோகியாயிருந்தார்’ என பைபிள் சொல்கிறது.​—2 நாளாகமம் 26:19-21.

6ஆலோசனையை ஏற்றுக்கொள்வது சவுலுக்கும் உசியாவுக்கும் ஏன் கடினமாக இருந்தது? அவர்களுடைய அடிப்படை பிரச்சினையே அகந்தைதான், இருவருமே தங்களைக் குறித்து மிதமிஞ்சி உயர்வாக எண்ணினார்கள். இந்தக் குணத்தால்தான் பலரும் தங்களுக்கு மனவருத்தத்தை வரவழைத்துக் கொள்கிறார்கள். ஆலோசனையை ஏற்றுக்கொள்வது தங்களிடத்தில் ஏதோ குறை இருப்பதை சுட்டிக்காட்டுவதாக அல்லது தங்கள் கௌரவத்தைக் குறைப்பதாக அவர்கள் உணர்வதுபோல் தெரிகிறது. ஆனால் அகந்தை ஒரு பலவீனமான குணம். அகந்தை ஒருவரின் எண்ணத்தையே மறைத்துவிடுவதால், தம்முடைய வார்த்தை மற்றும் அமைப்பு மூலமாக யெகோவா அளிக்கும் உதவியை அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். ஆகவேதான், “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை” என யெகோவா எச்சரிக்கிறார்.​—நீதிமொழிகள் 16:18; ரோமர் 12:3.

ஆலோசனையை ஏற்றுக்கொள்ளுதல்

7ஆலோசனையை ஏற்றுக்கொண்டவர்களின் சிறந்த உதாரணங்களும் பைபிளில் உள்ளன, அவற்றிலிருந்து நாம் பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். மோசேயை எடுத்துக் கொள்ளுங்கள், அவர் செய்து வந்த பாரமான வேலையை சமாளிப்பதற்கு அவருடைய மாமன் அவருக்கு ஆலோசனை கொடுத்தார். மோசே அதைக் கேட்டு உடனடியாக பின்பற்றினார். (யாத்திராகமம் 18:13-24) மோசேக்கு மிகுந்த அதிகாரம் இருந்தபோதிலும் அந்த ஆலோசனையை ஏன் ஏற்றுக்கொண்டார்? ஏனென்றால் அவர் தாழ்மையுள்ளவர். “மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.” (எண்ணாகமம் 12:3) மனத்தாழ்மை எந்தளவு முக்கியமானது? இது நம் ஜீவனை உட்படுத்தும் ஒரு குணம் என செப்பனியா 2:3 காட்டுகிறது.

8தாவீது ராஜா பத்சேபாளுடன் வேசித்தனம் செய்ததோடு அதை மூடி மறைப்பதற்காக அவளுடைய கணவன் உரியாவையும் கொன்றார். தாவீதை கண்டிப்பதற்காக நாத்தான் தீர்க்கதரிசியை யெகோவா அனுப்பினார். அவர் மனந்திரும்பி, “நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்” என உடனடியாக ஒப்புக்கொண்டார். (2 சாமுவேல் 12:13) தாவீதின் மனந்திரும்புதலை கடவுள் ஏற்றுக்கொண்ட போதிலும் அவர் செய்த தவறின் விளைவுகளை அனுபவிப்பார். ‘பட்டயம் என்றைக்கும் அவர் வீட்டை விட்டு விலகாதிருக்கும்’ என்றும் அவருடைய மனைவிமார் “அடுத்தவனுக்குக்” கொடுக்கப்படுவார்கள் என்றும் வேசித்தனத்தினால் பிறந்த மகன் ‘நிச்சயமாய் சாவான்’ என்றும் யெகோவா அவரிடம் சொன்னார்.​—2 சாமுவேல் 12:10, 11, 14.

9சிறந்த ஆலோசனைக்கு செவிகொடுப்பதன் பலனை தாவீது ராஜா அறிந்திருந்தார். மற்றவர்களின் மூலம் தனக்கு ஆலோசனை அளித்ததற்காக கடவுளுக்கு அடிக்கடி நன்றி தெரிவித்தார். (1 சாமுவேல் 25:32-35) நாமும் அப்படித்தானா? அப்படியானால், மனவருத்தம் தரும் அநேக காரியங்களை சொல்லாமலும் செய்யாமலும் இருப்போம். ஆனால் நமக்கு ஆலோசனை அல்லது சிட்சை கொடுக்கப்படும் சூழ்நிலைகளை எதிர்ப்படுகையில் நாம் என்ன செய்வோம்? அது, நம்முடைய நித்திய நலனை கருத்தில் கொண்டு யெகோவா காட்டும் அன்புக்கு அத்தாட்சி என்பதை மறந்துவிடாதிருப்போமாக.​—நீதிமொழிகள் 3:11, 12; 4:13.

வளர்ப்பதற்கான மதிப்புமிக்க பண்புகள்

10யெகோவாவிடமும் நம் கிறிஸ்தவ சகோதரர்களிடமும் நல்லுறவை காத்துக்கொள்வதற்கு நாம் சில பண்புகளை வளர்ப்பது அவசியம். இயேசு ஒரு சிறுபிள்ளையை சீஷர்களுக்கு நடுவே நிறுத்தி, “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள். . . . ஆகையால் இந்தப் பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோக ராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்” என்று சொன்னபோது இந்தப் பண்புகளில் ஒன்றைக் குறிப்பிட்டார். (மத்தேயு 18:3, 4) இயேசுவின் சீஷர்கள், யார் பெரியவன் என்று தங்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் செய்ததால் மனத்தாழ்மையை வளர்ப்பது அவர்களுக்கு அவசியமாக இருந்தது.​—லூக்கா 22:24-27.

11“நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் . . . மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” என அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதினார். (1 பேதுரு 5:5) கடவுளுக்கு முன்பு தாழ்மையாக இருக்க வேண்டும் என்பது நமக்குத் தெரியும்; ஆனால் சக விசுவாசிகளிடத்திலும் தாழ்மையாக இருப்பதன் அவசியத்தை இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது. அவ்வாறு தாழ்மையாக இருந்தோமென்றால் மற்றவர்கள் ஆலோசனை தருகையில் நாம் கோபப்பட மாட்டோம், ஆனால் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வோம்.​—நீதிமொழிகள் 12:15.

12மற்றவர்களுடைய நலனில் அக்கறை காட்டுவது, மனத்தாழ்மையோடு நெருங்கிய தொடர்புடைய பண்பு. “ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன். . . . ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். . . . யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்” என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 10:24-33) நம்முடைய விருப்பங்களையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிடும்படி பவுல் சொல்லவில்லை; ஆனால், மற்றொருவருடைய மனசாட்சிக்குத் தவறாக படும் எந்தக் காரியத்தையும் செய்யும்படி நாம் அவரை ஊக்குவிக்காமல் இருக்குமாறே நமக்கு அறிவுறுத்தினார்.

13உங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களைக் காட்டிலும் மற்றவர்களின் நலனை நீங்கள் முதலிடத்தில் வைக்கிறீர்களா? அனைவரும் அதைச் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். இதைச் செய்வதற்கு அநேக வழிகள் உள்ளன. உதாரணமாக உடை மற்றும் சிகை அலங்காரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இவை தனிப்பட்ட ரசனைக்குரிய விஷயங்கள்; அதேசமயம், அடக்கமாகவும் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும் என்ற பைபிள் வழிமுறைகளுக்கு உட்பட்டவை. உங்கள் சமுதாயத்தில் வாழும் ஜனங்களுடைய பின்னணியின் காரணமாக, உங்களுடைய உடையும் சிகை அலங்காரமும் ராஜ்ய செய்திக்கு அவர்கள் செவிசாய்ப்பதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறதென்றால் அவற்றை மாற்றிக்கொள்வீர்களா? நிச்சயமாக, நம்மைப் பிரியப்படுத்திக் கொள்வதைவிட பிறர் நித்திய ஜீவனை அடைய உதவுவதே மிகவும் முக்கியம்.

14தாழ்மையாக இருப்பதிலும், மற்றவர்களிடத்தில் அக்கறை காட்டுவதிலும் இயேசு முன்மாதிரி வைத்தார்; தம்முடைய சீஷர்களின் கால்களையும் கழுவினார். (யோவான் 13:12-15) “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷ ரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம் . . . கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” என அவரைக் குறித்து கடவுளுடைய வார்த்தை கூறுகிறது.​—பிலிப்பியர் 2:5-8; ரோமர் 15:2, 3.

யெகோவாவின் புத்திமதியை புறக்கணிக்காதீர்கள்

15நாம் அனைவரும் பாவிகளாதலால், கடவுளுடைய ஆள்தன்மையை பின்பற்றுவதற்கு நம் மனப்பான்மையிலும் நடத்தையிலும் மாற்றம் செய்வது அவசியம். நாம் “புதிய ஆள்தன்மையை” (NW) தரித்துக்கொள்வது அவசியம். (கொலோசெயர் 3:5-14) எந்த விஷயங்களில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்பதை கண்டுபிடித்து, அவற்றை எப்படிச் செய்வது என்பதைக் காண்பதற்கு ஆலோசனைகளும் புத்திமதிகளும் நமக்கு உதவுகின்றன. நமக்குத் தேவையான அறிவுரைகளுக்கு முக்கிய ஊற்றுமூலமாய் இருப்பது பைபிள்தான். (2 தீமோத்தேயு 3:16, 17) யெகோவாவின் அமைப்பு தயாரித்து அளிக்கும் பைபிள் பிரசுரங்கள் மற்றும் கூட்டங்கள் கடவுளுடைய வார்த்தையை கடைப்பிடிக்க நமக்கு உதவுகின்றன. இந்த ஆலோசனையை இதற்கு முன்பு கேட்டிருந்தாலும், அது நமக்கு தேவையானது என அறிந்து அதில் முன்னேறுவதற்கு முயலுவோமா?

16நாம் பிரச்சினைகளை சமாளிக்க யெகோவா கனிவான அக்கறையோடு உதவுகிறார். வீட்டு பைபிள் படிப்புகள் மூலம் லட்சக்கணக்கானோர் உதவியை பெற்றிருக்கிறார்கள். வேதனை உண்டாக்கும் நடத்தையிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க பெற்றோர் அவர்களுக்கு ஆலோசனையும் புத்திமதியும் கொடுக்கிறார்கள். (நீதிமொழிகள் 6:20-23) சபையிலுள்ள சிலர், வெளி ஊழியத்தில் நன்கு முன்னேறுவதற்கு, அனுபவம் வாய்ந்த ஊழியர்களிடம் ஆலோசனையையும் அறிவுரைகளையும் கேட்கிறார்கள். சில சமயங்களில் மூப்பர்களும் ஒருவருக்கொருவர் அல்லது ஊழியத்தில் அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். ஆவிக்குரிய தகுதி பெற்றவர்கள், தேவைப்படுவோருக்கு பைபிளிலிருந்து உதவியளிக்கிறார்கள்; சாந்தகுணத்தோடு அதைச் செய்கிறார்கள். நீங்கள் ஆலோசனை கொடுக்கிறீர்களென்றால், “நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு” என்ற புத்திமதியை நினைவில் வையுங்கள். (கலாத்தியர் 6:1, 2) ஆம், ஒரே மெய்க் கடவுளை ஒற்றுமையுடன் வணங்குவதற்கு நம் அனைவருக்கும் ஆலோசனையும் புத்திமதியும் அவசியம்.

மறுபார்வை

• தனிப்பட்ட விதமாக நாம் எந்த விஷயங்களில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதை காண்பதற்கு யெகோவா எப்படி அன்புடன் உதவுகிறார்?

• தேவையான ஆலோசனையை ஏற்றுக்கொள்வது ஏன் பலருக்கும் கடினமாக இருக்கிறது, இது எந்தளவு வினைமையானது?

• ஆலோசனையை ஏற்றுக்கொள்வதற்கு என்ன மதிப்புமிக்க பண்புகள் நமக்கு உதவும், இவற்றை வெளிக்காட்டுவதில் இயேசு எப்படி மாதிரி வைத்தார்?

[கேள்விகள்]

1. (அ) ஆலோசனையும் சிட்சையும் நம் அனைவருக்கும் ஏன் தேவை? (ஆ) என்ன கேள்வியை நாம் சிந்திப்பது அவசியம்?

2. தனிப்பட்ட ஆலோசனையை பெறுகையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

3, 4. (அ) ஆலோசனையையும் புத்திமதியையும் குறித்ததில் சரியான நோக்குநிலையை வளர்த்துக்கொள்ள பைபிளில் என்ன உதாரணம் இருக்கிறது? (ஆ) ஆலோசனைக்கு சவுல் எப்படி பிரதிபலித்தார், அதன் விளைவு என்ன?

5. ஆலோசனையை புறக்கணித்தபோது ராஜாவாகிய உசியாவுக்கு என்ன நேர்ந்தது?

6. (அ) சவுலும் உசியாவும் ஏன் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்? (ஆ) ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் இன்று அதிக ஆபத்தானது?

7. ஆலோசனைக்கு மோசே பிரதிபலித்த விதத்திலிருந்து என்ன அருமையான பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்?

8. (அ) தாவீது என்னென்ன பாவங்களை செய்தார்? (ஆ) நாத்தான் கண்டித்த போது தாவீது எப்படி பிரதிபலித்தார்? (இ) தாவீது செய்த பாவங்களின் விளைவுகள் யாவை?

9. நமக்கு ஆலோசனையோ புத்திமதியோ அளிக்கப்படுகையில் எதை மறந்துவிடக் கூடாது?

10. ராஜ்யத்திற்கு செல்பவர்களுக்கு என்ன பண்பு அவசியம் என இயேசு காட்டினார்?

11. (அ) யாருக்கு முன்பு தாழ்மையாக இருப்பது அவசியம், ஏன்? (ஆ) நாம் தாழ்மையுள்ளோராக இருந்தால் ஆலோசனைக்கு எப்படி பிரதிபலிப்போம்?

12. (அ) மனத்தாழ்மையோடு நெருங்கிய தொடர்புடைய முக்கியமான பண்பு எது? (ஆ) நம் நடத்தை மற்றவர்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பைக் குறித்து நாம் ஏன் கவனமாயிருக்க வேண்டும்?

13. பைபிளின் ஆலோசனையை கடைப்பிடிக்கிறோமா இல்லையா என்பதை என்ன உதாரணம் குறிப்பிட்டுக் காட்டலாம்?

14. மனத்தாழ்மையையும் மற்றவர்களிடம் அக்கறையையும் வளர்ப்பது ஏன் முக்கியம்?

15. (அ) கடவுளுக்குப் பிரியமான ஆள்தன்மையை தரித்துக் கொள்வதற்கு நாம் என்ன மாற்றங்களை செய்வது அவசியம்? (ஆ) நம் அனைவருக்கும் எதன் மூலமாக யெகோவா ஆலோசனையையும் புத்திமதியையும் அளித்திருக்கிறார்?

16. நம் ஒவ்வொருவருக்கும் யெகோவா என்ன உதவியை அளிக்கிறார்?

[பக்கம் 142-ன் படம்]

ஆலோசனையை புறக்கணித்ததால் உசியா குஷ்டரோகத்தால் பீடிக்கப்பட்டார்

[பக்கம் 142-ன் படம்]

எத்திரோ கொடுத்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டதால் மோசே நன்மையடைந்தார்