Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் வலிமை

உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் வலிமை

அதிகாரம் ஒன்பது

உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் வலிமை

நீங்கள் அன்பானவர்களை மரணத்தில் பறிகொடுத்திருக்கிறீர்களா? உயிர்த்தெழுதல் இல்லையேல், அவர்களை மறுபடியும் பார்ப்போம் என்ற நம்பிக்கையே இராது. பைபிள் பின்வருமாறு விவரிக்கிற நிலையிலேயே அவர்கள் எப்போதும் இருப்பார்கள்: “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; . . . நீ போகிற பாதாளத்திலே [“ஷியோலிலே,” NW] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.”​—பிரசங்கி 9:5, 10.

2ஆகவே உயிர்த்தெழுதலின் மூலம் யெகோவா கருணையோடு, மரித்த எண்ணிறந்தோர் மீண்டும் உயிரடைந்து நித்திய ஜீவனை அனுபவித்து மகிழும் அரியதோர் வாய்ப்பைப் பெற வழிதிறந்திருக்கிறார். அப்படியென்றால், மரணத்தில் நித்திரையடைந்த அன்பானவர்களுடன் கடவுளுடைய புதிய உலகில் ஒருநாள் மீண்டும் ஒன்றுசேரலாம் என்ற இதயத்திற்கு இதமளிக்கும் நம்பிக்கையோடு நீங்கள் இருக்கலாம்.​—மாற்கு 5:35, 41, 42; அப்போஸ்தலர் 9:36-41.

3உயிர்த்தெழுதல் என்ற இந்த நம்பிக்கை இருப்பதால் மரணத்தை எண்ணி பயந்து நடுங்க வேண்டியதில்லை. “ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் மனுஷன் கொடுத்துவிடுவான்” என்ற தீய குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய சாத்தானை யெகோவா அனுமதிக்கலாம்; என்றாலும் தமது உண்மை ஊழியர்களுக்கு நிரந்தரமாக தீங்கு ஏற்படாதபடி அவரால் பார்த்துக்கொள்ள முடியும். (யோபு 2:4) இயேசு மரணம் வரை கடவுளுக்கு உண்மையோடு இருந்தார்; ஆகவே கடவுள் அவரை பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பினார். இவ்வாறு, இயேசு தம்முடைய பரிபூரண மனித பலியின் மதிப்பை தம் தகப்பனின் பரலோக சிங்காசனத்திற்கு முன் சமர்ப்பிக்க முடிந்தது; இதன் பயனாக நம் ஜீவன் காக்கப்படுகிறது. கிறிஸ்துவின் உடன் சுதந்தரவாளிகளான ‘சிறு மந்தையினருக்கு’ உயிர்த்தெழுதலின் வாயிலாக அவரோடு பரலோக ராஜ்யத்தில் ஒன்றுசேரும் நம்பிக்கை இருக்கிறது. (லூக்கா 12:32) மற்றவர்களுக்கோ பரதீஸிய பூமியில் என்றென்றும் வாழ்வதற்கு உயிர்த்தெழுப்பப்படும் நம்பிக்கை உள்ளது. (சங்கீதம் 37:11, 29) மரணத்தை சந்திக்கும் சோதனைகளை எதிர்ப்படுகையில் கிறிஸ்தவர்கள் அனைவரும் உயிர்த்தெழுதல் நம்பிக்கை ‘இயல்புக்கு அப்பாற்பட்ட’ சக்தி அளிப்பதை உணருகிறார்கள்.​—2 கொரிந்தியர் 4:7, NW.

கிறிஸ்தவ விசுவாசத்திற்கு ஏன் அடிப்படையானது

4எபிரெயர் 6:1, 2-⁠ல் குறிப்பிட்டிருக்கிறபடி உயிர்த்தெழுதல் நம்பிக்கை ஒரு ‘மூல உபதேசம்.’ அது விசுவாசம் என்ற அஸ்திவாரத்தின் ஒரு பாகமாகும்; அந்த அஸ்திவாரமின்றி நாம் ஒருபோதும் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக முடியாது. (1 கொரிந்தியர் 15:16-19) என்றாலும், உயிர்த்தெழுதலைப் பற்றிய பைபிளின் போதனை பொதுவாக இந்த உலக சிந்தனைக்கு வினோதமாக இருக்கிறது. அதிகமதிகமானோர் ஆன்மீகத்தில் குறைவுபடுவதால் இன்றைய வாழ்க்கையையே மெய் வாழ்க்கையென நினைக்கிறார்கள். ஆகவே, வாழ்க்கையில் அவர்கள் இன்பத்தையே நாடுகிறார்கள். பாரம்பரியமாய் ஒரே மதத்தைப் பின்பற்றி வருகிறவர்களோ​—⁠அவர்கள் கிறிஸ்தவமண்டலத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும்சரி, வேறெந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும்சரி​—⁠தங்களுக்குள் அழியாத ஆத்துமா இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால் அந்த நம்பிக்கை உயிர்த்தெழுதலைப் பற்றிய பைபிளின் போதனைக்கு முரணானது; ஏனெனில் அழியாத ஆத்துமா மனிதருக்குள் இருந்தால் உயிர்த்தெழுதலுக்கான அவசியமே இல்லை. இந்த இரண்டு கருத்துக்களையும் ஒன்றிணைப்பது நம்பிக்கையூட்டுவதற்கு பதிலாக குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. சத்தியத்தை அறிய விரும்பும் நல்மனமுடையவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?

5உயிர்த்தெழுதல் எப்பேர்ப்பட்ட அருமையான ஏற்பாடு என்பதை புரிந்துகொள்வதற்கு முன்பாக ஆத்துமாவைப் பற்றியும் மரித்தவர்களின் நிலை பற்றியும் அவர்கள் சரியாக புரிந்துகொள்வது அவசியம். பைபிள் சத்தியத்தின்மீது பசியார்வத்துடன் இருப்பவருக்கு இந்த விஷயங்களை தெளிவாக்குவதற்கு பொதுவாக ஒருசில வேத வசனங்களே போதுமானது. (ஆதியாகமம் 2:7; சங்கீதம் 146:3, 4; எசேக்கியேல் 18:4) இருந்தாலும் சில நவீன மொழிபெயர்ப்புகளும் பைபிள் பொழிப்புரைகளும் ஆத்துமாவைப் பற்றிய சத்தியத்தை மூடி மறைக்கின்றன. அப்படியானால் பைபிளின் மூல மொழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளை ஆராய்வது அவசியமாக இருக்கலாம்.

6முக்கியமாக புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிள் இவ்விஷயத்தில் அதிக பயனுள்ளதாக இருக்கிறது; ஏனெனில் நெஃபெஷ் என்ற எபிரெய பதமும் அதற்கு இணையான சைக்கீ என்ற கிரேக்க பதமும் உபயோகிக்கப்பட்ட இடங்களில் ஒரேவிதமாக “ஆத்துமா” என அது மொழிபெயர்த்திருக்கிறது. இந்த பைபிள் மொழிபெயர்ப்பின் பிற்சேர்க்கையில் இப்பதங்கள் காணப்படும் வசனங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வேறு பல மொழிபெயர்ப்புகள் இந்த வார்த்தைகளை “ஆத்துமா” என எல்லா இடங்களிலும் ஒரேவிதமாக மொழிபெயர்ப்பதில்லை. அந்த மூல வார்த்தைகளை “ஆத்துமா” என்று மட்டுமல்ல, “பிராணி,” “ஜீவ ஜந்து,” “உயிர்” என்றும் மொழிபெயர்த்திருக்கின்றன. வேறு மொழிபெயர்ப்புகளை புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது, “ஆத்துமா” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள மூல மொழி பதங்கள் மனிதரையும் மிருகங்களையும் குறிக்க பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிந்துகொள்ள நேர்மை மனமுள்ள மாணாக்கருக்கு உதவும். ஆனால் ஆத்துமா என்பது காண முடியாத, உணர முடியாத ஒன்று, மரணத்தின்போது உடலைவிட்டு பிரிந்து எங்கோ தொடர்ந்து வாழும் ஒன்று போன்ற கருத்தை இப்பதங்கள் ஒருபோதும் அளிப்பதில்லை.

7அவ்வாறே ஷயால் என்ற எபிரெய பதத்தை “ஷியோல்” என்றும் ஏதிஸ் என்ற கிரேக்க பதத்தை “ஹேடீஸ்” என்றும் ஈயனா என்ற கிரேக்க பதத்தை “கெஹென்னா” என்றும் எல்லா இடங்களிலும் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் குறிப்பிட்டிருக்கிறது. “ஷியோல்” என்ற பதத்திற்கு இணையான வார்த்தையே “ஹேடீஸ்.” (சங்கீதம் 16:10, NW; அப்போஸ்தலர் 2:27, NW) ஷியோலும் ஹேடீஸும் மனிதகுலத்தின் பொதுவான கல்லறையைத்தான் குறிப்பிடுகின்றன என்றும் அவை உயிருடன் அல்ல சாவுடன் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் என்றும் பைபிள் தெளிவுபடுத்துகிறது. (சங்கீதம் 89:48, NW; வெளிப்படுத்துதல் 20:13, NW) உயிர்த்தெழுதல் மூலம் பொது கல்லறையிலிருந்து மரித்தோர் திரும்பிவரும் நம்பிக்கையையும் வேதவசனங்கள் அளிக்கின்றன. (யோபு 14:13; அப்போஸ்தலர் 2:31) அதற்கு நேர்மாறாக, கெஹென்னாவுக்கு செல்பவர்களுக்கு எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய எந்த நம்பிக்கையும் அளிக்கப்படவில்லை, அங்கு செல்பவர்களின் ஆத்துமா உணர்வுடன் இருப்பதாகவும் எங்கும் குறிப்பிடப்படவில்லை.​—மத்தேயு 10:28, NW.

8இந்த விஷயங்களையெல்லாம் தெளிவுபடுத்திய பின்னர், உயிர்த்தெழுதல் எதைக் குறிக்கும் என்பதை ஒருவருக்கு புரிய வைக்க முடியும். இப்படிப்பட்ட ஓர் அருமையான ஏற்பாட்டை செய்ததில் யெகோவாவின் அன்பை அவர் மதித்துணர ஆரம்பிக்கலாம். கடவுளுடைய புதிய உலகில் மறுபடியும் ஒன்றுசேரலாம் என்ற மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு, தங்கள் அன்பானவர்களை மரணத்தில் இழந்தவர்களின் துயரத்தை தணிக்கலாம். கிறிஸ்துவின் மரணம் எதைக் குறிக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்கும் இந்த விஷயங்கள் இன்றியமையாதவையாக இருக்கின்றன. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு அடிப்படையானது, மற்றவர்களின் உயிர்த்தெழுதலுக்கு வழி திறக்கிறது என்பதை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலையும் அது அளிக்கிற நம்பிக்கையையும் குறித்து வைராக்கியமாக பிரசங்கித்தனர். அவ்வாறே இன்றும் உயிர்த்தெழுதல் நம்பிக்கைக்கு மதித்துணர்வை காட்டுபவர்கள் இந்த மதிப்புமிக்க சத்தியத்தை பிறருக்கு அறிவிக்க ஆவலாக இருக்கிறார்கள்.​—அப்போஸ்தலர் 5:30-32; 10:42, 43.

‘ஹேடீஸின் திறவுகோலை’ பயன்படுத்துதல்

9கிறிஸ்துவுடன் பரலோக ராஜ்யத்தில் ஒன்றுசேரப் போகிறவர்கள் அனைவரும் இறுதியில் மரிக்க வேண்டும். ஆனால் அவர் கொடுத்த பின்வரும் உறுதியை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்: “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், . . . மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய [“ஹேடீஸுக்குமுரிய,” NW] திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.” (வெளிப்படுத்துதல் 1:18) இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? அவர் தமது சொந்த அனுபவத்திற்குத்தான் கவனத்தை திருப்பினார். அவரும்கூட மரணத்தை ருசிபார்த்தவர். ஆனால் கடவுள் அவரை ஹேடீஸில் அப்படியே விட்டுவிடவில்லை. மூன்றாம் நாளில், யெகோவாவே அவரை ஆவி வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பினார், அழிவில்லா வாழ்க்கையையும் அவருக்கு அளித்தார். (அப்போஸ்தலர் 2:32, 33; 10:40) அதோடு, மனிதகுலத்தின் பொது கல்லறையிலிருந்தும் ஆதாமிலிருந்து சுதந்தரித்த பாவத்தின் பாதிப்புகளிலிருந்தும் மற்றவர்களை விடுவிப்பதற்கு ‘மரணம் மற்றும் ஹேடீஸின் திறவுகோல்களை’ கடவுள் அவருக்குக் கொடுத்தார். அந்தத் திறவுகோல்கள் இயேசுவின் கைவசம் இருப்பதால் தம்மை உண்மையுடன் பின்பற்றுகிறவர்களை மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்ப அவரால் முடிகிறது. தம் சபையிலுள்ள ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களை அவர் முதலில் உயிர்த்தெழுப்புகிறார்; பிதா தமக்கு அழிவில்லா வாழ்க்கையை தந்தது போலவே அவர்களுக்கும் அவர் பரலோகத்தில் அழிவில்லா வாழ்க்கை எனும் மதிப்புமிக்க பரிசை அளிக்கிறார்.​—ரோமர் 6:5; பிலிப்பியர் 3:20, 21.

10அபிஷேகம் பண்ணப்பட்ட உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் எப்போது பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள்? அந்த உயிர்த்தெழுதல் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டதாக பைபிள் குறிப்பிடுகிறது. ‘கிறிஸ்துவின் பிரசன்னத்தின்போது’ அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவர் என அப்போஸ்தலன் பவுல் விளக்கினார்; அந்தப் பிரசன்னம் 1914-⁠ல் ஆரம்பமானது. (1 கொரிந்தியர் 15:23, NW) இப்போது அவருடைய பிரசன்னத்தின் போது மரிக்கிற அபிஷேகம் பண்ணப்பட்ட உண்மையுள்ளோர், கர்த்தர் திரும்பிவரும் வரை மரித்த நிலையிலேயே இருக்க வேண்டியதில்லை. அவர்கள் மரித்த உடனேயே ஆவியில் உயிர்த்தெழுப்பப்பட்டு ‘இமைப்பொழுதிலே மறுரூபமாக்கப்படுவார்கள்.’ அவர்களுடைய நற்செயல்கள் ‘அவர்களோடே கூடப்போவதால்’ அவர்கள் எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள்!​—1 கொரிந்தியர் 15:51, 52; வெளிப்படுத்துதல் 14:13.

11ராஜ்ய சுதந்திரவாளிகள் பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவது மட்டுமே உயிர்த்தெழுதல் அல்ல. வெளிப்படுத்துதல் 20:6 இதை ‘முதலாம் உயிர்த்தெழுதல்’ என அழைப்பதுதானே மற்றொரு உயிர்த்தெழுதலும் இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த உயிர்த்தெழுதலை பெறவிருப்பவர்களுக்கு பரதீஸிய பூமியில் என்றென்றும் வாழும் மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு இருக்கும். அந்த உயிர்த்தெழுதல் எப்போது நடைபெறும்? இந்தப் “பூமியும் வானமும்”​—⁠தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையும் அதன் ஆட்சியாளர்களும்​—⁠நீக்கப்பட்ட பின்பு அது நடைபெறும் என வெளிப்படுத்துதல் புத்தகம் காட்டுகிறது. அந்தப் பழைய ஒழுங்குமுறையின் முடிவு வெகு சமீபம். அதற்குப்பின், கடவுளுடைய குறித்த காலத்தில் பூமிக்குரிய உயிர்த்தெழுதல் ஆரம்பமாகும்.​—வெளிப்படுத்துதல் 20:11, 12.

12பூமிக்குரிய அந்த உயிர்த்தெழுதலில் யாரெல்லாம் உட்படுவர்? பூர்வ காலங்கள் முதற்கொண்டு யெகோவாவுக்கு உண்மையுடன் இருந்த ஊழியர்களாகிய ஆண்களும் பெண்களும் உட்படுவர்; உயிர்த்தெழுதலில் வைத்திருத்த உறுதியான விசுவாசத்தின் காரணமாக அவர்கள் ‘எதையாகிலும் விட்டுக்கொடுத்து விடுதலை பெற சம்மதிக்கவில்லை.’ (NW) அதாவது, ஒரு கோரமான, அகால மரணத்திலிருந்து விடுபடுவதற்காக கடவுள் மீதுள்ள தங்கள் உத்தமத்தை அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை. அவர்களை நேரடியாக பார்த்துப் பழகவும், அவர்களைப் பற்றி பைபிளில் சுருக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்களை அவர்களிடமிருந்தே நேரடியாக கேட்டுத் தெரிந்துகொள்வதும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்! பூமியில் உயிர்த்தெழுந்து வரப்போகிறவர்களில் இவர்களும் அடங்குவர்: யெகோவாவின் உண்மையுள்ள முதல் சாட்சியாகிய ஆபேல்; ஜலப்பிரளயத்திற்கு முன்பு கடவுளுடைய எச்சரிப்பின் செய்தியை தைரியமாக அறிவித்த ஏனோக்கும் நோவாவும்; தேவதூதர்களை உபசரித்த ஆபிரகாமும் சாராளும்; சீனாய் மலையில் நியாயப்பிரமாணத்தை பெற்ற மோசே; பொ.ச.மு. 607-⁠ல் எருசலேமின் அழிவை கண்ணாரக் கண்ட எரேமியாவைப் போன்ற தைரியமிக்க தீர்க்கதரிசிகள்; இயேசுவை தம்முடைய குமாரனாக கடவுளே அடையாளம் காட்டியதை காதாரக் கேட்ட முழுக்காட்டுபவனாகிய யோவான். அவர்களோடு, இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் கடைசி நாட்களில் உண்மைப் பற்றுறுதியோடிருந்து மரித்த ஆண்களும் பெண்களும் உயிர்த்தெழுப்பப்படுவர்.​—எபிரெயர் 11:4-38; மத்தேயு 11:11.

13நாளடைவில் கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களைத் தவிர மற்றவர்களும்​—⁠மனிதகுலத்தின் பொது கல்லறையில் இருக்கும் அனைவரும்​—⁠உயிர்த்தெழுப்பப்படுவார்கள். கல்லறை எந்தளவுக்கு வெறுமையாக்கப்படுகிறது என்பதை மனிதகுலத்தின் சார்பாக இயேசு ‘ஹேடீஸின் திறவுகோலை’ பயன்படுத்தப் போவதிலிருந்து காணலாம். அப்போஸ்தலனாகிய யோவானுக்கு காட்டப்பட்ட தரிசனத்தில், ஹேடீஸ் ‘அக்கினிக் கடலில் தள்ளப்பட்டதை’ அவர் கண்டார். (வெளிப்படுத்துதல் 20:14) அது எதைக் குறிக்கிறது? ஹேடீஸ், அதாவது மனிதகுலத்தின் பொது கல்லறை முற்றிலும் அழிக்கப்படுவதை குறிக்கிறது. அது மரித்தவர்கள் ஒருவரும் இல்லாதபடி வெறுமையாக்கப்பட்டு முற்றிலும் இல்லாமல் போய்விடுகிறது; ஏனெனில் யெகோவாவின் உண்மை வணக்கத்தார் அனைவரையும் இயேசு உயிர்த்தெழுப்புவதோடு அநீதிமான்களுக்கும் இரக்கம் காட்டி அவர்களையும் உயிர்த்தெழுப்புவார். ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பார்கள்’ என கடவுளுடைய வார்த்தை உறுதியளிக்கிறது.​—அப்போஸ்தலர் 24:15.

14அநீதிமான்களில் யாருமே மீண்டும் மரண தண்டனையை பெறுவதற்கென உயிர்த்தெழுப்பப்பட மாட்டார்கள். ராஜ்யத்தில் பூமி முழுவதிலும் நிலவும் நீதியான சூழலில் யெகோவாவின் வழிகளுக்கு இணங்க வாழ்வதற்கு அவர்களுக்கு உதவியளிக்கப்படும். “ஜீவ புஸ்தகம்” திறக்கப்படும் என தரிசனம் காட்டியது. ஆகவே, அவர்களுடைய பெயர்களும் அதில் எழுதப்படும் வாய்ப்பைப் பெறுவர். உயிர்த்தெழுதலுக்குப் பின்பு அவர்கள் செய்யும் ‘கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைவார்கள்.’ (வெளிப்படுத்துதல் 20:12, 13) இவ்வாறாக, முடிவான பலனை எண்ணிப் பார்க்கையில், இவர்களுடைய உயிர்த்தெழுதல் தவிர்க்க முடியாத ‘[கண்டனத்] தீர்ப்புக்குரிய உயிர்த்தெழுதலாக’ அல்ல, ‘ஜீவனுக்குரிய உயிர்த்தெழுதலாக’ நிரூபிக்கலாம்.​—யோவான் 5:28, 29, NW.

15இருந்தாலும், இதுவரை வாழ்ந்து மரித்த அனைவருமே உயிர்த்தெழுப்பப்பட மாட்டார்கள். சிலர் மன்னிக்க முடியாத பாவங்களை செய்திருக்கின்றனர். அவர்கள் ஹேடீஸுக்கு அல்ல, கெஹென்னாவுக்கு செல்கிறார்கள், அங்கே நித்திய அழிவை சந்திக்கிறார்கள். இப்போது மிக சமீபித்துவரும் ‘மிகுந்த உபத்திரவத்தில்’ மரண தண்டனை பெறுபவர்களும் இதில் உட்படுவர். (மத்தேயு 12:31, 32; 23:33, NW; 24:21, 22; 25:41, 46; 2 தெசலோனிக்கேயர் 1:6-10) இவ்வாறு, ஹேடீஸில் இருக்கிற எல்லாரையும் விடுதலை செய்வதற்கு யெகோவா விசேஷித்த இரக்கத்தை காட்டும்போது, நாமோ இப்போதைய வாழ்க்கை முறையைப் பற்றி அசட்டையாக இருப்பதற்கு உயிர்த்தெழுதல் எந்த ஆதாரத்தையும் அளிப்பதில்லை. யெகோவாவின் பேரரசுரிமையை எதிர்த்து வேண்டுமென்றே கலகம் செய்பவர்களுக்கு உயிர்த்தெழுதல் கிடையாது. இதை அறிவது, கடவுளுடைய சித்தத்திற்கு ஏற்ப வாழ்வதன் மூலம் அவருடைய தகுதியற்ற தயவை வெகுவாய் மதித்துணருவதைக் காட்டுவதற்கு நம்மை தூண்ட வேண்டும்.

உயிர்த்தெழுதல் நம்பிக்கையால் பலப்படுத்தப்படுதல்

16உயிர்த்தெழுதல் என்ற எதிர்பார்ப்பில் நம்பிக்கை வைப்பவர்கள் அதிலிருந்து மிகுந்த பலத்தைப் பெற முடிகிறது. இப்போது நாம் முதுமையடைகையில், எவ்வளவுதான் வைத்தியம் பார்த்தாலும் மரணத்தை என்றென்றைக்குமாக தள்ளிப்போட முடியாது என்பதை அறிந்திருக்கிறோம். (பிரசங்கி 8:8) யெகோவாவை அவரது அமைப்போடு சேர்ந்து நாம் உண்மையுடன் சேவித்திருந்தால் எதிர்காலத்தை முழு நம்பிக்கையோடு எதிர்நோக்கலாம். உயிர்த்தெழுதலின் வாயிலாக கடவுளுடைய உரிய காலத்தில் நாம் வாழ்க்கையை மீண்டும் அனுபவித்து மகிழுவோம் என்பதை அறிவோம். அது எப்பேர்ப்பட்ட வாழ்க்கையாக இருக்கும்! அப்போஸ்தலனாகிய பவுல் அழைத்தபடி அதுவே “மெய்யான வாழ்க்கை.”​—1 தீமோத்தேயு 6:19, NW; எபிரெயர் 6:10-12.

17உயிர்த்தெழுதலையும், அதன் ஊற்றுமூலரையும் பற்றி அறிவது நாம் விசுவாசத்தில் உறுதியாய் இருப்பதை சாத்தியமாக்குகிறது. கடுமையாக துன்புறுத்துவோர் கொன்றுபோடுவதாக பயமுறுத்தினாலும் கடவுளிடத்தில் உண்மைப் பற்றுறுதியோடிருக்க இது நம்மை பலப்படுத்துகிறது. மக்களை அடிமைத்தனத்திற்குள் அடக்கி வைத்திருப்பதற்கு வசதியாக அகால மரணத்தை குறித்த பயத்தை வெகு காலமாகவே சாத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறான். இயேசுவுக்கு அப்படிப்பட்ட பயம் இருக்கவில்லை. அவர் மரணம் வரை யெகோவாவுக்கு உண்மையோடு இருந்தார். இயேசு தம்முடைய மீட்கும் பலியினால் மற்றவர்களையும் அப்படிப்பட்ட பயத்திலிருந்து விடுவிப்பதற்கு வழிசெய்தார்.​—எபிரெயர் 2:14, 15.

18கிறிஸ்துவுடைய பலியின் ஏற்பாட்டிலும் உயிர்த்தெழுதலிலும் யெகோவாவின் ஊழியர்கள் விசுவாசம் வைப்பதால் அவர்கள் உத்தமத்தை காப்பவர்கள் என்ற சிறந்த பேரெடுத்திருக்கிறார்கள். கஷ்டங்களின் மத்தியிலும், யெகோவாவைவிட அதிகமாக ‘தங்கள் ஜீவனை நேசிப்பதில்லை’ என்பதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 12:11, NW) தங்கள் தற்போதைய ஜீவனை காப்பாற்றிக்கொள்வதற்காக கிறிஸ்தவ நியமங்களை மீறாமல் ஞானமாக செயல்படுகிறார்கள். (லூக்கா 9:24, 25) யெகோவாவின் பேரரசுரிமையை உண்மைப் பற்றுறுதியோடு ஆதரிப்பதால் இப்போது அவர்கள் தங்கள் ஜீவனை இழந்தாலும் உயிர்த்தெழுதல் மூலம் அவர் பலனளிப்பார் என்பதை அறிந்திருக்கிறார்கள். உங்களுக்கு அப்படிப்பட்ட விசுவாசம் இருக்கிறதா? நீங்கள் உண்மையில் யெகோவாவை நேசித்து, உயிர்த்தெழுதல் நம்பிக்கை எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை மதித்துணர்ந்தால் உங்களுக்கு அப்படிப்பட்ட விசுவாசம் இருக்கும்.

மறுபார்வை

• உயிர்த்தெழுதலைப் பற்றி ஒருவர் புரிந்துகொள்வதற்கு முன்பாக, ஆத்துமாவையும் மரித்தவரின் நிலையையும் பற்றி அறிந்துகொள்வது ஏன் அவசியம்?

• யாரெல்லாம் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து வருவார்கள், இதை அறிந்திருப்பது நம்மை என்ன செய்ய தூண்ட வேண்டும்?

• உயிர்த்தெழுதல் நம்பிக்கை நம்மை எப்படி பலப்படுத்துகிறது?

[கேள்விகள்]

1. உயிர்த்தெழுதல் நம்பிக்கை இல்லையேல் மரித்தவர்களின் நிலை எப்படியிருக்கும்?

2. உயிர்த்தெழுதல் மூலம் சாத்தியமாகும் மகத்தான எதிர்பார்ப்பு என்ன?

3. (அ) யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் உயிர்த்தெழுதல் என்ன வழிகளில் முக்கியமானதாக இருந்திருக்கிறது? (ஆ) குறிப்பாக எப்போது உயிர்த்தெழுதல் நம்பிக்கை நமக்கு சக்தியளிப்பதாக இருக்கிறது?

4. (அ) என்ன கருத்தில் உயிர்த்தெழுதல் ஒரு ‘மூல உபதேசமாக’ இருக்கிறது? (ஆ) பொதுவில் உலகத்தார் உயிர்த்தெழுதலை குறித்து என்ன நினைக்கிறார்கள்?

5. (அ) உயிர்த்தெழுதலைக் குறித்து ஒருவர் புரிந்துகொள்வதற்கு முன்பு எதை அறிந்துகொள்வது அவசியம்? (ஆ) ஆத்துமாவை பற்றியும் மரித்தோருடைய நிலை பற்றியும் விளக்குவதற்கு நீங்கள் எந்த வசனங்களை பயன்படுத்துவீர்கள்? (இ) சத்தியத்தை மூடிமறைக்கும் பைபிள் மொழிபெயர்ப்பை ஒருவர் பயன்படுத்துகையில் என்ன செய்யலாம்?

6. ஆத்துமா என்பது என்னவென்பதை புரிந்துகொள்ள ஒருவருக்கு நீங்கள் எப்படி உதவலாம்?

7. ஷியோலுக்கு, ஹேடீஸுக்கு, கெஹென்னாவுக்கு செல்பவர்களின் நிலை பற்றி பைபிளிலிருந்து நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?

8. உயிர்த்தெழுதலைப் பற்றிய சரியான புரிந்துகொள்ளுதல் ஒருவருடைய மனப்பான்மையையும் செயல்களையும் எப்படி பாதிக்கலாம்?

9. ‘மரணம் மற்றும் ஹேடீஸின் திறவுகோல்களை’ இயேசு முதலில் எப்படி பயன்படுத்துகிறார்?

10. அபிஷேகம் பண்ணப்பட்ட உண்மை கிறிஸ்தவர்கள் எப்போது உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள்?

11. பொதுவில் மக்களுக்கு என்ன உயிர்த்தெழுதல் இருக்கும், அது எப்போது ஆரம்பமாகும்?

12. பூமியில் வாழ்வதற்கு உயிர்த்தெழுப்பப்படும் உண்மையுள்ளவர்களில் யாரெல்லாம் இருப்பர், அது சிலிர்ப்பூட்டும் எதிர்பார்ப்பாக இருப்பது ஏன்?

13, 14. (அ) ஹேடீஸுக்கும் அதிலுள்ள மரித்தவர்களுக்கும் என்ன நேரிடும்? (ஆ) உயிர்த்தெழுதலில் யாரும் உட்படுவர், ஏன்?

15. (அ) யார் உயிர்த்தெழுப்பப்பட மாட்டார்கள்? (ஆ) உயிர்த்தெழுதலைப் பற்றிய சத்தியத்தை அறிவது நம்மை எப்படி பாதிக்க வேண்டும்?

16. உயிர்த்தெழுதல் நம்பிக்கை எப்படி மிகுந்த பலத்திற்கு அடிப்படையாக அமையலாம்?

17. யெகோவாவுக்கு உத்தமத்தைக் காத்துக்கொள்ள எது நமக்கு உதவும்?

18. உத்தமத்தை காப்பவர்கள் என பேரெடுப்பதற்கு யெகோவாவின் ஊழியர்களுக்கு எது உதவியிருக்கிறது?

[பக்கம் 8485-ன் படம்]

நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பார்கள் என யெகோவா உறுதியளிக்கிறார்