Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘ஒருவருக்கொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்’

‘ஒருவருக்கொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்’

அதிகாரம் பதினாறு

‘ஒருவருக்கொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்’

முதன்முதலில் யெகோவாவின் சாட்சிகளுடைய சபை கூட்டத்திற்கு வருபவர்கள் பெரும்பாலும் அங்கு நிலவும் அன்பினால் மிகவும் கவரப்படுகிறார்கள். தங்களுக்கு கிடைக்கும் வரவேற்பிலும் கனிவான கூட்டுறவிலும் இந்த அன்பை இவர்கள் காண்கிறார்கள். நம் மாநாடுகளுக்கு வருகை தருபவர்களும் இந்த அன்பை கவனிக்கிறார்கள். ஒரு மாநாட்டை பற்றி நிருபர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: ‘போதைப் பொருட்களை பயன்படுத்தியவர்களோ மதுபானத்தை அருந்தியவர்களோ அங்கு இல்லை. கூச்சல் கூப்பாடு இல்லை. ஒருவரையொருவர் இடித்துத் தள்ளுவதும், முண்டியடிப்பதும் இல்லை. ஒருவரையொருவர் திட்டுவதோ சபிப்பதோ இல்லை, கீழ்த்தரமான ஜோக்குகளோ ஆபாசப் பேச்சோ இல்லை. புகைபிடிப்பவர்கள் இல்லை. திருட்டும் இல்லை. ஆங்காங்கே தூக்கியெறியப்பட்ட காலி டப்பாக்கள் இல்லை. அது உண்மையிலேயே விசித்திரமாக இருந்தது.’ ‘அயோக்கியமானதைச் செய்யாத, தற்பொழிவை நாடாத’ அன்புக்கு அத்தாட்சிகளே இவை.​—1 கொரிந்தியர் 13:4-8.

2சகோதர அன்பே உண்மையான கிறிஸ்தவர்களின் அடையாளச் சின்னம். (யோவான் 13:35) நாம் ஆவிக்குரிய விதத்தில் வளர வளர, இன்னும் முழுமையாக அன்பு காட்ட கற்றுக்கொள்கிறோம். சக கிறிஸ்தவர்களின் அன்பு “இன்னும் அதிகமதிகமாய்ப் பெருக” வேண்டுமென அப்போஸ்தலனாகிய பவுல் ஜெபம் செய்தார். (பிலிப்பியர் 1:9) நாம் சுயதியாக அன்பை காட்ட வேண்டுமென அப்போஸ்தலனாகிய யோவான் காண்பித்தார். “அவர் [கடவுளுடைய குமாரன்] தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” என அவர் எழுதினார். (1 யோவான் 3:16; யோவான் 15:12, 13) நம் சகோதரர்களுக்காக உண்மையிலேயே உயிரைக் கொடுப்போமா? அப்படிப்பட்ட சூழ்நிலைகள் பெரும்பாலும் வராது என்றாலும், நமக்கு சௌகரியப்படாத சமயத்திலும்கூட அவர்களுக்கு உதவ நாம் இப்பொழுது எந்தளவுக்கு முயலுகிறோம்?

3சுயதியாக அன்பை வெளிக்காட்டும் செயல்களோடு நம் சகோதரர்களிடம் இருதயப்பூர்வ பாசத்தை வைத்திருப்பதும் அவசியம். “சகோதர அன்பில் ஒருவருக்கொருவர் கனிவான பாசமுள்ளவர்களாயிருங்கள்” என கடவுளுடைய வார்த்தை நமக்கு அறிவுறுத்துகிறது. (ரோமர் 12:10, NW) நாம் எல்லாரும் சிலரிடத்தில் இப்படி பாசமாக இருக்கிறோம். இன்னும் அநேகரிடத்திலும் இப்படி பாசமாயிருக்க நாம் கற்றுக்கொள்ள முடியுமா? இந்த ஒழுங்குமுறையின் முடிவு நெருங்க நெருங்க, சக கிறிஸ்தவர்களுடன் நாம் இன்னும் நெருங்கி வருவது மிகவும் முக்கியம். பைபிள் நம்மை இவ்வாறு எச்சரிக்கிறது: “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; . . . எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.”​—1 பேதுரு 4:7, 8.

பிரச்சினைகள் தலைதூக்குகையில்

4நாம் அபூரணராக இருக்கும்வரை, மற்றவர்களுக்கு சங்கடத்தை உண்டாக்கும் விதத்தில் அவ்வப்போது நடந்துகொள்வோம் என்பதில் சந்தேகமில்லை. நம் சகோதரர்களும்கூட பல வழிகளில் நமக்கு விரோதமாக பாவம் செய்யலாம். (1 யோவான் 1:8) அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? பைபிள் நமக்கு தேவையான வழிநடத்துதலை அளிக்கிறது. ஆனால், அபூரணர்களாகிய நாம் செய்ய விரும்புவது பைபிளோடு ஒத்துப்போகாமல் இருக்கலாம். (ரோமர் 7:21-23) எனினும், பைபிளிலுள்ள ஆலோசனையை முழுமனதுடன் கடைப்பிடிப்பது, யெகோவாவை மனதார பிரியப்படுத்த விரும்புவதைக் காட்டும். அவ்வாறு செய்வது பிறரிடத்தில் நாம் காட்டும் அன்பின் தரத்தையும்கூட உயர்த்தும்.

5சிலர் புண்படுத்தப்படும்போது பதிலடி கொடுக்க வழி தேடுகிறார்கள். அது நிலைமையை இன்னும் மோசமடையவே செய்கிறது. ஆனால் தக்க தண்டனை கிடைக்க வேண்டுமென்றால் நாம் அதை கடவுளிடம் விட்டுவிட வேண்டும். (நீதிமொழிகள் 24:29; ரோமர் 12:17-21) இன்னும் சிலரோ புண்படுத்தியவரிடம் பேசுவதையே நிறுத்திவிடலாம். ஆனால், உடன் வணக்கத்தாரிடத்தில் நாம் அப்படி நடந்துகொள்ளக் கூடாது; நம்முடைய வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு, சகோதரரிடத்தில் அன்பு காட்டுவதும் அவசியம். (1 யோவான் 4:20) ஆகவே, “ஒருவரையொருவர் பொறுத்து ஒருவன் மேல் ஒருவனுக்குக் குறையுண்டானால் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்; ஆண்டவர் [“யெகோவா,” NW] உங்களுக்கு மன்னித்தது போலவே நீங்களும் மன்னியுங்கள்” என பவுல் எழுதினார். (கொலோசெயர் 3:13, தி.மொ.) உங்களால் அதைச் செய்ய முடியுமா?

6ஒருவர் சபைநீக்கம் செய்யப்படும் அளவுக்கு மோசமான பாவங்களை செய்யாவிட்டாலும், அடிக்கடி நமக்கு தீங்கிழைத்தால் அப்போது என்ன செய்யலாம்? அப்படிப்பட்ட சிறு சிறு பாவங்களை ‘ஏழுதரம்’ மன்னிக்க வேண்டுமென அப்போஸ்தலனாகிய பேதுரு தெரிவித்தார். ஆனால், “ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும்” என இயேசு கூறினார். எந்த ஒரு மனிதனும் நமக்குக் கடன்பட்டிருப்பதோடு ஒப்பிட நாம் யெகோவாவுக்குக் கடன்பட்டிருப்பது எவ்வளவு அதிகம் என்பதை அவர் கோடிட்டுக் காட்டினார். (மத்தேயு 18:21-35) தினந்தினம் நாம் பல வழிகளில் கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்கிறோம்; சில சமயங்களில் சுயநலமான நடத்தையால், சொல்லால், எண்ணத்தால், அல்லது செய்யத் தவறும் காரியங்களால் உணராமலேகூட பாவங்களை செய்கிறோம். (ரோமர் 3:23) ஆனாலும் கடவுள் தொடர்ந்து நம்மிடத்தில் இரக்கம் காட்டுகிறார். (சங்கீதம் 103:10-14; 130:3, 4) அப்படியே நாமும் பிறரிடம் நடந்துகொள்ளும்படி அவர் எதிர்பார்க்கிறார். (மத்தேயு 6:14, 15; எபேசியர் 4:1-3) அப்போது, ‘தீங்கை கணக்கு வைக்காத’ அன்பை நாம் காண்பிப்பவர்களாக இருப்போம்.​—1 கொரிந்தியர் 13:4, 5, NW; 1 பேதுரு 3:8, 9.

7சிலசமயங்களில் ஒரு சகோதரரிடத்தில் நமக்கு எந்தப் பகைமை உணர்ச்சியும் இல்லாவிட்டாலும் அவருக்கு நம்மிடம் ஏதாவது விரோதம் இருப்பதாக நாம் உணரலாம். அப்போது, 1 பேதுரு 4:8 குறிப்பிடுகிற விதமாக ‘அன்பினால் அதை மூடுவதற்கு’ நாம் முயலலாம். அல்லது நாமே முன்வந்து அவருடன் பேசி சமரசம் செய்துகொள்ள முயலலாம்.​—மத்தேயு 5:23, 24.

8சக விசுவாசி செய்யும் ஏதோ ஒன்று உங்களை மட்டுமல்ல மற்றவர்களையும் சங்கடப்படுத்துவதாக இருக்கலாம். அவரிடம் இதைக் குறித்து பேசுவது பயனளிக்குமா? அளிக்கலாம். அவரிடம் தனிப்பட்ட விதமாக இந்தப் பிரச்சினையைக் குறித்து அன்பாக பேசினால், அது நல்ல பலன்களைத் தரலாம். ஆனால், அவ்வாறு பேசுவதற்கு முன்பு உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘அவர் செய்வது உண்மையில் வேதப்பூர்வமற்ற காரியமா? அல்லது என்னுடைய பின்னணியும் வளர்ப்பு சூழலும் அவருடையதிலிருந்து வித்தியாசப்படுவதே இந்தப் பிரச்சினைக்கு பெரும்பாலும் காரணமா?’ நீங்களே தராதரங்களை வகுத்து அவற்றின் அடிப்படையில் தீர்ப்பு செய்யாதபடி கவனமாயிருங்கள். (யாக்கோபு 4:11, 12) எல்லா விதமான பின்னணியிலிருந்து வருபவர்களையும் யெகோவா பாரபட்சமில்லாமல் ஏற்றுக்கொள்கிறார்; மேலும் அவர்கள் ஆவிக்குரிய விதமாக வளர்ந்து வருகையில் அவர்களிடத்தில் பொறுமையாயுமிருக்கிறார்.

9சபையிலுள்ள ஒருவர் பாலுறவு ஒழுக்கக்கேடு போன்ற பெருந்தவறை செய்கையில் அதற்கு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். யார்? மூப்பர்கள். (யாக்கோபு 5:14, 15) இருந்தாலும், ஒருவேளை வியாபார விஷயத்தில் அல்லது நாவைப் பிரயோகிக்கும் விஷயத்தில் ஒருவருக்கு விரோதமாக பாவம் செய்யப்பட்டால், பாதிக்கப்பட்டவர் தனக்கு விரோதமாய் பாவம் செய்தவரை முதலாவது தனிமையில் சந்தித்து பேச வேண்டும். (மத்தேயு 18:15) அது பிரச்சினையை தீர்க்காவிடில், மத்தேயு 18:16, 17-⁠ல் குறிப்பிட்டிருக்கிறபடி அடுத்தடுத்த படிகளை எடுப்பது அவசியம். தவறு செய்த சகோதரரிடமுள்ள அன்பும், அவரை ‘ஆதாயப்படுத்த’ வேண்டும் என்ற ஆவலும் அவருடைய இருதயத்தை தொடும்படி இதைச் செய்வதற்கு நமக்கு உதவும்.​—நீதிமொழிகள் 16:23.

10ஒரு பிரச்சினை​—⁠அது சிறியதோ பெரியதோ​—⁠தலைதூக்கும்போது, யெகோவா அதை எப்படி கருதுகிறார் என புரிந்துகொள்ள முயலுவது நமக்கு நன்மை பயக்கும். அவர் எந்த வித பாவத்தையும் அங்கீகரிப்பதில்லை; மனந்திரும்பாமல் பெரும் பாவத்தை செய்துவருபவர்கள் உரிய காலத்தில் அவருடைய அமைப்பிலிருந்து நீக்கப்படுகிறார்கள். என்றாலும், நாம் அனைவரும் சிறு சிறு பாவங்களை செய்பவர்கள் என்பதையும் அவரது நீடிய பொறுமையும் இரக்கமும் நமக்கு தேவை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இவ்வாறு மற்றவர்கள் நமக்கு விரோதமாக பாவம் செய்கையில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு யெகோவா முன்மாதிரி வைக்கிறார். நாம் இரக்கம் காட்டுகையில் அவருடைய அன்பை வெளிக்காட்டுகிறோம்.​—எபேசியர் 5:1, 2.

“விரிவாகுவதற்கு” வழிகளை தேடுங்கள்

11கிரீஸிலுள்ள கொரிந்து சபையை பலப்படுத்துவதற்கு பவுல் அங்கே பல மாதங்களை செலவிட்டிருந்தார். அங்குள்ள சகோதரர்களுக்கு உதவ அவர் அரும்பாடுபட்டார், அவர்களை அவர் நேசித்தார். ஆனால் அவர்களில் சிலருக்கோ அவரிடம் பாசம் இருக்கவில்லை. அவர்கள் அதிக குறைகாண்பவர்களாய் இருந்தார்கள். பாசத்தை காட்டுவதில் ‘விரிவாகும்படி’ அவர் ஊக்குவித்தார். (2 கொரிந்தியர் 6:11-13, NW; 12:15) நாம் எந்தளவுக்கு மற்றவர்களிடம் அன்பு காட்டுகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்த்து அதை விரிவாக்குவதற்கு வழிகளைத் தேடுவது நம் எல்லாருக்கும் நல்லது.​—1 யோவான் 3:14.

12சபையிலுள்ள சிலரிடம் நெருங்கி பழகுவது நமக்கு கஷ்டமாக இருக்கிறதா? அவர்கள் நம்மிடம் நடந்துகொள்ளும்படி நாம் விரும்புவதுபோல், நாமும் ஆள்தன்மையில் காணப்படும் எந்த வேறுபாடுகளையும் பெரிதுபடுத்தாதிருக்க முயற்சி செய்தால், நமக்கும் அவர்களுக்கும் இடையே உறவு கனியும். அவர்களிடத்திலுள்ள நல்ல பண்புகளை கண்டுபிடித்து அவற்றிற்கு கவனம் செலுத்தினால் அவர்களிடம் நம் உணர்ச்சிகளும் மேம்படும். அவர்களிடம் அன்பை மேன்மேலும் வளர்ப்பதற்கு இது நிச்சயமாகவே வழிவகுக்கும்.​—லூக்கா 6:32, 33, 36.

13மற்றவர்களுக்காக நாம் செய்யும் காரியங்களில் வரையறைகள் இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஒவ்வொரு கூட்டத்தின்போதும் எல்லாரையும் பார்த்துப் பேச நம்மால் முடியாது. நண்பர்களை சாப்பாட்டுக்கு அழைக்கையில் எல்லாரையும் சேர்த்து அழைப்பது முடியாத விஷயம். ஆனால், சபையிலுள்ள ஒருவரை இன்னும் நன்கு அறிந்துகொள்ள சில நிமிடங்களை செலவிடுவதன் மூலம் நம்மால் விரிவாக முடியுமா? நமக்கு நன்கு பழக்கமில்லாத ஒருவரை வெளி ஊழியத்தில் நம்முடன் சேர்ந்து ஊழியம் செய்ய அவ்வப்போது அழைக்க முடியுமா?

14அன்பை விரிவாக்குவதற்கு கிறிஸ்தவ மாநாடுகள் சிறந்த சந்தர்ப்பங்களை அளிக்கின்றன. மாநாடுகளுக்கு ஆயிரக்கணக்கானோர் ஆஜராகலாம். அனைவரையும் சந்திக்க முடியாவிட்டாலும், நம்முடைய சௌகரியத்தைவிட அவர்களுடைய நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் நடந்து கொள்ளலாம். இடைவேளையின் போது சுற்றும் முற்றும் இருப்பவர்களிடம் நாமே வலிய சென்று பேசுவதன் மூலம் தனிப்பட்ட அக்கறையைக் காட்டலாம். ஒரு நாள் பூமியில் வாழும் அனைவருமே சகோதர சகோதரிகளாக இருப்பார்கள்; எல்லாருக்கும் பிதாவாயிருக்கிற மெய்க் கடவுளை வணங்குவதில் ஒன்றுபட்டிருப்பார்கள். அப்போது ஒருவரையொருவர் அறிந்துகொள்வது எவ்வளவு மகிழ்ச்சி தருவதாய் இருக்கும்! ஊக்கமான அன்பே அதை செய்ய நம்மை தூண்டும். அதை ஏன் இப்போதே துவங்கக் கூடாது?

மறுபார்வை

• கிறிஸ்தவர்களுக்கிடையே பிரச்சினைகள் எழும்புகையில் அவற்றை எப்படி தீர்க்க வேண்டும், ஏன்?

• ஆவிக்குரிய விதத்தில் வளர வளர எவ்விதங்களிலெல்லாம் நம் அன்பும் வளர வேண்டும்?

• நெருங்கிய நண்பர்களிடத்தில் மட்டுமல்லாமல் மற்றவர்களிடத்திலும் ஊக்கமான அன்பை எப்படி இன்னும் அதிகமாய் காட்டலாம்?

[கேள்விகள்]

1. யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு புதிதாக வருபவர்களின் மனதை பெரும்பாலும் கவருவது எது?

2. (அ) காலப்போக்கில் நாம் காட்டும் அன்புக்கு எது அத்தாட்சியளிக்க வேண்டும்? (ஆ) கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி எத்தகைய அன்பை நாம் வளர்ப்பது அவசியம்?

3. (அ) எவ்விதத்தில் நம் அன்பை முழுமையாக வெளிக்காட்டலாம்? (ஆ) ஒருவருக்கொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருப்பது ஏன் மிகவும் முக்கியம்?

4. (அ) சபையில் இருப்பவர்களிடையே பிரச்சினைகள் ஏன் தலைதூக்கலாம்? (ஆ) பைபிளின் ஆலோசனை எப்போதுமே நம் விருப்பங்களோடு ஒத்துப்போகாமல் இருந்தாலும் அதை நாம் கடைப்பிடிக்கையில் என்ன சிறந்த பலன் கிடைக்கும்?

5. ஒருவர் நம்மை புண்படுத்தினால், நாம் ஏன் பதிலடி கொடுக்கக் கூடாது?

6. (அ) நம் சகோதரரை எத்தனை முறை நாம் மன்னிக்க வேண்டும்? (ஆ) எதை மதித்துணர்வது நமக்கு விரோதமாக செய்யும் பாவத்தை பொறுத்துக்கொள்ள உதவும்?

7. சகோதரர் ஒருவருக்கு நம்மிடத்தில் ஏதாவது விரோதம் இருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?

8. சக விசுவாசி செய்யும் காரியம் நம்மை சங்கடப்படுத்துகையில் என்ன செய்யலாம்?

9. (அ) சபையில் நடக்கும் பெருந்தவறுகளுக்கு யார் கவனம் செலுத்துகிறார்கள்? (ஆ) பாதிக்கப்பட்டவர் முதல் படியை எப்போது எடுக்க வேண்டும், என்ன நோக்கத்தோடு?

10. ஒரு பிரச்சினை எழும்புகையில் அதை சரியாக புரிந்துகொள்வதற்கு எது நமக்கு உதவும்?

11. ‘விரிவாகும்படி’ கொரிந்தியர்களை பவுல் ஏன் உற்சாகப்படுத்தினார்?

12. சபையில் எல்லோரிடத்திலும் நாம் எப்படி அன்பை வளர்க்கலாம்?

13. சபையாரிடத்தில் அன்பு காட்டுவதை நாம் எப்படி விரிவாக்கலாம்?

14. இதுவரை அறிமுகமாகாத கிறிஸ்தவர்கள் மத்தியில், நாம் ஒருவருக்கொருவர் எப்படி ஊக்கமான அன்பை காட்டலாம்?

[பக்கம் 148-ன் படம்]

கிறிஸ்தவ அன்பு சபை கூட்டங்களிலும் இன்னும் பல வழிகளிலும் காட்டப்படுகிறது