Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தீர்க்கதரிசிகள் அனைவராலும் சாட்சி கொடுக்கப்பட்டவர்

தீர்க்கதரிசிகள் அனைவராலும் சாட்சி கொடுக்கப்பட்டவர்

அதிகாரம் நான்கு

தீர்க்கதரிசிகள் அனைவராலும் சாட்சி கொடுக்கப்பட்டவர்

“பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்.” (யோவான் 5:20) தம் பிதாவாகிய யெகோவாவுடன் எப்பேர்ப்பட்ட பாசபந்தத்தை குமாரன் அனுபவித்து மகிழ்ந்தார்! அந்த நெருக்கமான பந்தம் அவர் படைக்கப்பட்டபோது, அதாவது அவர் மனிதனாக பிறப்பதற்கு யுகா யுகங்களுக்கு முன்பு ஆரம்பமானது. அவர் கடவுளுடைய ஒரேபேறான குமாரன், யெகோவாவால் நேரடியாக சிருஷ்டிக்கப்பட்ட ஒரே நபர். பரலோகத்திலும் பூமியிலும் உள்ள மற்ற அனைத்தும் மிகவும் நேசத்திற்குரிய இந்த முதற்பேறான குமாரன் மூலமாகவே சிருஷ்டிக்கப்பட்டன. (கொலோசெயர் 1:15, 16) அவர் கடவுளுடைய வார்த்தையாகவும், அல்லது கடவுள் சார்பாக பேசுபவராகவும் இருந்தார்; அதாவது, அவர் மூலமாகவே கடவுளுடைய சித்தம் மற்றவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. கடவுள் மிகவும் நேசித்த இந்த குமாரனே இயேசு கிறிஸ்து என்ற மனிதரானார்.​—நீதிமொழிகள் 8:22-30; யோவான் 1:14, 18; 12:49, 50.

2கடவுளுடைய முதற்பேறான குமாரன் ஒரு மனிதனாக அற்புதமாய் உருவாவதற்கு முன்பே அவரைப் பற்றிய எண்ணற்ற ஏவப்பட்ட தீர்க்கதரிசனங்கள் பைபிளில் பதிவு செய்யப்பட்டன. அப்போஸ்தலனாகிய பேதுரு கொர்நேலியுவுக்கு இதை இவ்வாறு உறுதிப்படுத்தினார்: “தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக் குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள்.” (அப்போஸ்தலர் 10:43) இயேசு வகித்த பாகத்தை பைபிள் அந்தளவுக்கு சிறப்பித்துக் காட்டியிருப்பதால், “இயேசுவைப் பற்றிய சாட்சியே தீர்க்கதரிசனத்தை ஏவுகிறது” என ஒரு தூதன் அப்போஸ்தலனாகிய யோவானிடம் கூறினார். (வெளிப்படுத்துதல் 19:10, NW) அந்தத் தீர்க்கதரிசனங்கள் அவரை மேசியா என தெளிவாக அடையாளம் காட்டின. கடவுளுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதில் அவர் வகிக்கப் போகும் வெவ்வேறு ஸ்தானங்கள் மீது கவனத்தை திருப்பின. இவை யாவும் இன்று நமக்கு அதிக அக்கறைக்குரியவை.

தீர்க்கதரிசனங்கள் எதை வெளிப்படுத்தின

3அவற்றில் முதல் தீர்க்கதரிசனம் ஏதேனில் கலகம் ஏற்பட்ட பின் உரைக்கப்பட்டது. அத்தீர்க்கதரிசனத்தில் சர்ப்பத்திடம் யெகோவா இவ்வாறு கூறினார்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” (ஆதியாகமம் 3:15) உண்மையில் அந்தத் தீர்க்கதரிசனம், சர்ப்பத்தை பிரதிநிதித்துவம் செய்த சாத்தானிடமே சொல்லப்பட்டது. அந்த “ஸ்திரீ” யெகோவாவின் உண்மைப்பற்றுறுதியுள்ள பரலோக அமைப்பைக் குறிக்கிறது; அது விசுவாசமுள்ள அவருடைய மனைவி போல் இருக்கிறது. ‘சர்ப்பத்தின் வித்து’ யெகோவாவையும் அவருடைய ஜனங்களையும் எதிர்க்கிறவர்களை குறிக்கிறது; அதாவது, சாத்தானின் மனப்பான்மையை வெளிக்காட்டுகிற எல்லா தூதர்களையும் மனிதரையும் இது உட்படுத்துகிறது. ‘சர்ப்பத்தின் தலையை நசுக்குவது’ என்பது யெகோவாவை பழிதூற்றி மனிதகுலத்திற்கு கடும் துயரத்தை ஏற்படுத்திய கலகக்காரனாகிய சாத்தான் முடிவில் அழிக்கப்படுவதை அர்த்தப்படுத்துகிறது. ஆனால் சர்ப்பத்தின் தலையை நசுக்கப்போகிற அந்த ‘வித்துவின்’ பிரதான பாகத்தை வகிப்பவர் யார்? பல நூற்றாண்டுகளுக்கு அது “பரிசுத்த இரகசிய”மாகவே இருந்தது.​—ரோமர் 16:20, 25, 26; NW.

4மனித சரித்திரத்தில் சுமார் 2,000 ஆண்டுகளுக்குப் பின்பு, யெகோவா மேலுமான தகவல்களை கொடுத்தார். அந்த வித்து ஆபிரகாமின் வம்சாவளியில் வருவார் என அவர் குறிப்பிட்டார். (ஆதியாகமம் 22:15-18) இருந்தாலும், அந்த வித்துவின் வம்சாவளி வாரிசுப்படி இல்லாமல் கடவுளுடைய தெரிவின்படி இருக்கும். ஆகாரிடம் பிறந்த தன் மகன் இஸ்மவேலை ஆபிரகாம் நேசித்தபோதிலும், “சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்” என யெகோவா சொன்னார். (ஆதியாகமம் 17:18-21) பின்னால், இந்த உடன்படிக்கை ஈசாக்கின் மூத்த மகனாகிய ஏசாவிடத்தில் அல்ல, ஆனால் யாக்கோபிடத்தில் உறுதிப்படுத்தப்பட்டது; அவரிடமிருந்தே இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் வந்தன. (ஆதியாகமம் 28:10-14) காலப்போக்கில், யூதா கோத்திரத்தில் தாவீதின் வம்சத்தில் அந்த வித்து வரும் என தெரிவிக்கப்பட்டது.​—ஆதியாகமம் 49:10; 1 நாளாகமம் 17:3, 4, 11-14.

5அந்த வித்து யார் என்பதை கண்டுகொள்ள வேறு என்ன தகவல்கள் கொடுக்கப்பட்டன? 700-⁠க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பே, வாக்குப்பண்ணப்பட்ட வித்து மனிதராக பிறக்கப்போகும் இடம் பெத்லகேம் என பைபிள் குறிப்பிட்டது. அவர் “அநாதிநாட்களாகிய பூர்வத்திலி”ருந்தே, அதாவது பரலோகத்தில் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே இருப்பவர் எனவும் அது குறிப்பிட்டது. (மீகா 5:2) அவர் மேசியாவாக பூமிக்கு வரும் சரியான காலமும் தீர்க்கதரிசியாகிய தானியேல் மூலம் முன்னறிவிக்கப்பட்டது. (தானியேல் 9:24-26) இயேசு பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டபோது​—⁠உண்மையில் யெகோவாவின் மேசியாவாக ஆனபோது​—⁠பரலோகத்திலிருந்து கேட்ட கடவுளின் குரல் அவரை தம்முடைய குமாரன் என தெளிவாக அடையாளம் காட்டியது. (மத்தேயு 3:16, 17) வித்து யார் என்பது வெளிப்படுத்தப்பட்டது! ஆகவேதான், ‘நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிற . . . இயேசுவை கண்டோம்’ என பிலிப்புவால் உறுதியாக கூற முடிந்தது.​—யோவான் 1:45.

6அதற்குப்பின், அவரைக் குறிக்கும் பற்பல தீர்க்கதரிசன குறிப்புகள் ஏவப்பட்ட வேத எழுத்துக்களில் பின்னிப்பிணைந்திருப்பதை இயேசுவின் சீஷர்கள் உணர ஆரம்பித்தார்கள். (லூக்கா 24:27) சர்ப்பத்தின் தலையை நசுக்கப்போகிற, அதாவது சாத்தானின் தடயமே இல்லாதவாறு அவனை நசுக்கப்போகிற அந்த ‘ஸ்திரீயினுடைய வித்துவின்’ முக்கிய பாகமானவர் இயேசுவே என்பது மேலும் தெளிவானது. மனிதகுலத்திற்கு கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் அனைத்தும்​—⁠நாம் மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் காரியங்கள் அனைத்தும்​—⁠இயேசு கிறிஸ்து மூலமாக நிறைவேற்றப்படும்.​—2 கொரிந்தியர் 1:20.

7இதை அறிவது நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்? எத்தியோப்பிய மந்திரி ஒருவர், மீட்பரும் மேசியாவுமாக வரவிருந்தவரைப் பற்றிய தீர்க்கதரிசனங்களில் சிலவற்றை வாசித்துக்கொண்டிருந்ததாக பைபிள் சொல்கிறது. குழப்பமடைந்த அவர் சுவிசேஷகனாகிய பிலிப்புவிடம், “தீர்க்கதரிசி யாரைக் குறித்து இதைச் சொல்லுகிறார்?” என கேட்டார். ஆனால் அந்த மந்திரி தனக்கு பதில் கிடைத்ததோடு திருப்தி அடைந்துவிடவில்லை. பிலிப்பு கொடுத்த விளக்கத்தை கவனமாக கேட்ட பின்பு, நிறைவேறிய இந்தத் தீர்க்கதரிசனத்திற்கான போற்றுதலை செயலில் காட்ட வேண்டும் என்பதையும் அவர் உணர்ந்தார். முழுக்காட்டுதல் பெற வேண்டிய அவசியத்தையும் புரிந்துகொண்டார். (அப்போஸ்தலர் 8:32-38; ஏசாயா 53:3-9) இதே மனநிலையை நாமும் காட்டுகிறோமா?

8சாராளிடம் பிறந்த தன்னுடைய ஒரே மகனான ஈசாக்கை பலிகொடுக்க ஆபிரகாம் முன்வந்ததை பற்றிய மனதைத் தொடும் பதிவையும் கவனியுங்கள். (ஆதியாகமம் 22:1-18) யெகோவா தம் ஒரேபேறான குமாரனை பலி கொடுக்கவிருந்ததற்கு அது முன்நிழலாக இருந்தது: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) யெகோவா தம் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தம்முடைய ஒரேபேறான குமாரனை கொடுத்தது போலவே, ‘மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளுவார்’ என்ற நம்பிக்கையை இது அளிக்கிறது. (ரோமர் 8:32) அப்படியானால், நம் பங்கில் என்ன தேவைப்படுகிறது? ஆதியாகமம் 22:18-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, ஆபிரகாம் “[கடவுளுடைய] சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால்,” அவர் வழியாக வரும் அந்த வித்துவின் மூலம் சகல தேசத்தாரும் தங்களை ஆசீர்வதித்துக் கொள்வார்கள் என யெகோவா அவரிடம் சொன்னார். நாமும்கூட யெகோவாவும் அவருடைய குமாரனும் சொல்பவற்றிற்கு செவிசாய்க்க வேண்டும்; ஏனெனில், “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்.”​—யோவான் 3:36.

9இயேசுவின் பலியின் மூலம் கிடைத்திருக்கும் நித்திய ஜீவன் என்ற நம்பிக்கையை நாம் போற்றுகிறோமென்றால், அவர் மூலமாக யெகோவா கட்டளையிட்டிருக்கும் காரியங்களை செய்வதற்கு நாம் விரும்புவோம். கடவுளிடத்திலும் பிறரிடத்திலும் நமக்கிருக்கும் அன்போடு இக்காரியங்கள் நெருங்கிய தொடர்புடையவை. (மத்தேயு 22:37-39) யெகோவாவின் மீதுள்ள அன்பு, “[இயேசு நமக்கு] கட்டளையிட்ட யாவையும் . . . கைக்கொள்ளும்படி” பிறருக்கு போதிக்க நம்மை தூண்டும் என இயேசு காட்டினார். (மத்தேயு 28:19, 20) யெகோவாவை வணங்கும் சக ஊழியர்களுடன் தவறாமல் ‘கூடிவருவதன்’ மூலம் அந்த அன்பை அவர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். (எபிரெயர் 10:25; கலாத்தியர் 6:10) கடவுளுக்கும் அவருடைய குமாரனுக்கும் செவிசாய்க்கும் விஷயத்தில், அவர்கள் நம்மிடத்தில் பரிபூரணத்தை எதிர்பார்ப்பவர்கள் என நாம் நினைக்கக்கூடாது. பிரதான ஆசாரியராகிய இயேசு ‘நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கிறவர்’ என எபிரெயர் 4:15 கூறுகிறது. முக்கியமாக நம் பலவீனங்களை சமாளிக்க உதவி கேட்டு கிறிஸ்துவின் மூலம் கடவுளை அணுகுகையில் இது எவ்வளவாய் ஆறுதல் அளிக்கிறது!​—மத்தேயு 6:12.

கிறிஸ்துவில் விசுவாசம் வையுங்கள்

10இயேசுவில் நிறைவேறியிருந்த பைபிள் தீர்க்கதரிசனத்தை எருசலேம் யூத உயர்நீதி மன்றத்தைச் சேர்ந்தவர்களிடம் விளக்கிய பிறகு அப்போஸ்தலனாகிய பேதுரு முடிவில் இவ்வாறு ஆணித்தரமாக சொன்னார்: “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.” (அப்போஸ்தலர் 4:12) ஆதாமின் சந்ததியார் அனைவரும் பாவிகளாக இருப்பதால், அவர்களுடைய மரணம் எவரையும் மீட்பதற்கு தகுந்ததாக இல்லை. இயேசுவோ பரிபூரணராக இருந்தார், அவரது உயிர் பலிக்குரிய மதிப்பை பெற்றிருந்தது. (சங்கீதம் 49:6-9; எபிரெயர் 2:9) அவர் ஆதாம் இழந்த பரிபூரண ஜீவனுக்கு சரிசமமான மதிப்புடைய மீட்கும்பொருளை கடவுளுக்கு செலுத்தினார். (1 தீமோத்தேயு 2:5, 6) கடவுளுடைய புதிய உலகில் நித்திய வாழ்க்கையை பெறுவதற்கான வழியை இது நமக்கு திறந்து வைத்தது.

11இன்னும் பிற நன்மைகளை இப்போதே பெறுவதற்குக்கூட இந்த மீட்கும்பலி நமக்கு வழி செய்திருக்கிறது. உதாரணமாக, நாம் பாவிகளாக இருந்தாலும், இயேசுவின் பலியினால் சுத்தமான மனசாட்சியைப் பெற்றிருக்கிறோம்; ஏனெனில் நம் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைத்திருக்கிறது. இது மோசேயின் நியாயப்பிரமாணம் செலுத்தும்படி சொல்லியிருந்த மிருக பலிகள் மூலம் இஸ்ரவேலர் அடைந்த எவ்வித நன்மையைக் காட்டிலும் மிக மிக மேலானது. (அப்போஸ்தலர் 13:38, 39; எபிரெயர் 9:13, 14; 10:22) என்றாலும், அப்படிப்பட்ட மன்னிப்பைப் பெறுவது, கிறிஸ்துவின் பலி நமக்கு எந்தளவுக்கு அவசியம் என்பதை உண்மை மனதுடன் ஒப்புக்கொள்வதைத் தேவைப்படுத்துகிறது: “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”​—1 யோவான் 1:8, 9.

12பாவிகள் எவ்வாறு கிறிஸ்துவிலும் அவருடைய பலியிலும் விசுவாசம் வைக்கலாம்? முதல் நூற்றாண்டில் இருந்தவர்கள் விசுவாசிகளாக மாறியபோது, அவர்கள் அதை வெளிப்படையாக காட்டினார்கள். எப்படி? அவர்கள் முழுக்காட்டுதல் பெற்றார்கள். ஏன்? ஏனெனில் தம்முடைய சீஷர்கள் முழுக்காட்டப்பட வேண்டுமென இயேசு கட்டளையிட்டிருந்தார். (மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 8:12; 18:8) இயேசுவின் மூலமாக யெகோவா செய்துள்ள இந்த அன்பான ஏற்பாட்டிற்கு ஒருவருடைய இருதயம் உண்மையிலேயே தூண்டப்படுமானால் அவர் உடனடியாக செயல்பட தொடங்குவார். தன்னுடைய வாழ்க்கையில் செய்ய வேண்டிய எந்த மாற்றங்களையும் அவர் செய்வார், ஜெபத்தில் கடவுளுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து, அதை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்துவார். இப்படி தன்னுடைய விசுவாசத்தை மெய்ப்பித்துக் காட்டுவதன் மூலம், ‘நல்மனச்சாட்சிக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறார்.’​—1 பேதுரு 3:21, திருத்திய மொழிபெயர்ப்பு.

13முழுக்காட்டுதலுக்குப் பின்பும்கூட நம்மில் பாவ இயல்புகள் இருக்கலாம். அப்படியானால் என்ன செய்வது? “நீங்கள் பாவஞ் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ் செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே” என அப்போஸ்தலனாகிய யோவான் சொன்னார். (1 யோவான் 2:1, 2) ஆகவே, நாம் எப்படிப்பட்ட பாவத்தை செய்தாலும் மன்னிப்புக்காக கடவுளிடத்தில் ஜெபித்துவிட்டால் அவர் மன்னித்துவிடுவார் என்றா அர்த்தம்? இல்லை. மன்னிப்பைப் பெறுவதற்கு மிகவும் முக்கியமானது உள்ளப்பூர்வமான மனந்திரும்புதல். கிறிஸ்தவ சபையிலுள்ள வயதானவர்கள் மற்றும் அனுபவமுள்ளவர்களின் உதவியும் தேவைப்படலாம். தவறை உணர்ந்து அதை ஒப்புக்கொண்டு அதற்காக உண்மையிலேயே வருந்த வேண்டும்; அப்போதுதான் இனிமேலும் அதைச் செய்யாமலிருப்பதற்கு ஊக்கமாக முயலுவோம். (அப்போஸ்தலர் 3:20; யாக்கோபு 5:13-16) அவ்வாறு செய்தோமானால், இயேசு நமக்கு உதவி செய்வார் என நாம் உறுதியாக இருக்கலாம், யெகோவாவின் தயவையும் திரும்பப் பெறலாம்.

14ஆதியாகமம் 3:15-⁠ல் குறிப்பிடப்பட்டுள்ள அந்த வித்துவின் இரண்டாம் பாகமான “சிறுமந்தை,” பரலோகத்தில் நித்திய ஜீவனை பெறுவதற்கு இயேசுவின் பலி வழிவகுத்துள்ளது. (லூக்கா 12:32; கலாத்தியர் 3:26-29) கோடிக்கணக்கான மற்றவர்கள் பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனை அனுபவிப்பதற்கும் இது வழிவகுத்துள்ளது. (சங்கீதம் 37:29; வெளிப்படுத்துதல் 20:11, 12; 21:3, 4) ‘நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் . . . கடவுள் தரும் பரிசே’ நித்திய ஜீவன். (ரோமர் 6:23, NW; எபேசியர் 2:8-10) அந்தப் பரிசின்மீது விசுவாசமும் அதை நமக்கு கிடைக்கும்படி செய்த விதத்திற்கு நன்றியுணர்வும் இருந்தால் அதை நாம் வெளிக்காட்டுவோம். யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இயேசுவை எவ்வளவு அற்புதமாக பயன்படுத்தியிருக்கிறார் என்பதையும் நாம் அனைவரும் இயேசுவின் அடிச்சுவடுகளை நெருக்கமாக பின்பற்றுவது எவ்வளவு முக்கியம் என்பதையும் பகுத்துணர்ந்து, கிறிஸ்தவ ஊழியத்தை வாழ்க்கையின் மிக முக்கியமான காரியங்களில் ஒன்றாக ஆக்குவோம். கடவுள் தந்திருக்கும் இந்த மகத்தான பரிசை குறித்து மற்றவர்களிடத்தில் நம்பிக்கையுடன் சொல்லும்போதுதான் நம் விசுவாசம் வெளிப்படும்.​—அப்போஸ்தலர் 20:24.

15இத்தகைய விசுவாசத்திற்கு எப்பேர்ப்பட்ட சிறந்த, ஒன்றுபடுத்தும் வல்லமை! அதனால், நாம் யெகோவாவிடத்திலும் அவருடைய குமாரனிடத்திலும் கிறிஸ்தவ சபையில் உள்ளவர்களிடத்திலும் நெருங்கி வருகிறோம். (1 யோவான் 3:23, 24) ‘இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும்படிக்கும், [கடவுளுடைய நாமத்தைத் தவிர] எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை [யெகோவா] அவருக்குத் தந்தருளியிருப்பது’ நமக்கு மகிழ்ச்சியை தருகிறது.​—பிலிப்பியர் 2:9-11.

மறுபார்வை

• மேசியா தோன்றியபோது, கடவுளுடைய வார்த்தையை உண்மையில் நம்பினவர்களுக்கு அவரைப் பற்றிய அடையாளம் ஏன் தெளிவாக இருந்தது?

• இயேசுவின் பலிக்கு போற்றுதலைக் காட்ட நாம் செய்ய வேண்டிய சில காரியங்கள் யாவை?

• இயேசுவின் பலி என்ன வழிகளில் ஏற்கெனவே நமக்கு நன்மை அளித்திருக்கிறது? பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு யெகோவாவிடத்தில் ஜெபம் செய்யும்போது இது நமக்கு எப்படி உதவுகிறது?

[கேள்விகள்]

1. இயேசு மனிதனாக பிறப்பதற்கு முந்தைய வாழ்க்கை யெகோவாவோடு உள்ள அவருடைய பந்தத்தைப் பற்றி என்ன காட்டுகிறது?

2. பைபிள் தீர்க்கதரிசனங்கள் எந்தளவுக்கு இயேசுவை பற்றி குறிப்பிட்டிருக்கின்றன?

3. (அ) ஆதியாகமம் 3:15-லுள்ள தீர்க்கதரிசனத்தில், சர்ப்பத்தை, ‘ஸ்திரீயை,’ ‘சர்ப்பத்தின் வித்துவை’ பிரதிநிதித்துவம் செய்பவர்கள் யார்? (ஆ) ‘சர்ப்பத்தின் தலை நசுக்கப்படுவது’ யெகோவாவின் ஊழியர்களுக்கு ஏன் மிகுந்த அக்கறைக்குரியதாக இருக்கும்?

4. இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட வித்து என அடையாளம் கண்டுகொள்வதற்கு அவரது வம்சாவளி எப்படி உதவியது?

5. இயேசு தம் பூமிக்குரிய ஊழியத்தை ஆரம்பித்தபோது அவரே மேசியா என்பதை எது தெளிவுபடுத்தியது?

6. (அ) லூக்கா 24:27-⁠ன் படி, அவருடைய சீஷர்கள் எதை உணர ஆரம்பித்தார்கள்? (ஆ) ‘ஸ்திரீயினுடைய வித்துவின்’ முக்கியமான பாகம் யார், சர்ப்பத்தின் தலையை அவர் நசுக்குவது எதை அர்த்தப்படுத்துகிறது?

7. தீர்க்கதரிசனங்களில் குறிப்பிடப்பட்டவரை அடையாளம் கண்டுகொள்வதோடு வேறெதையும் உணர்ந்துகொள்வது நல்லது?

8. (அ) ஆபிரகாம் ஈசாக்கை பலிகொடுக்க முன்வந்தது எதற்கு முன்நிழலாக இருந்தது? (ஆ) சகல தேசத்தாரும் அந்த வித்துவின் மூலம் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என ஆபிரகாமிடம் யெகோவா ஏன் சொன்னார், இது இன்று நமக்கு எப்படி பொருந்துகிறது?

9. இயேசுவின் பலி மூலமாக கிடைத்திருக்கும் நித்திய ஜீவ நம்பிக்கையை போற்றினால் நாம் என்ன செய்வோம்?

10. ஏன் இயேசு கிறிஸ்து தவிர வேறு யாராலும் இரட்சிப்பை அளிக்க முடியாது?

11. இயேசுவின் பலி நமக்கு எவ்வாறு பெரிதும் நன்மை பயக்கலாம் என்பதை விளக்குங்கள்.

12. கடவுளுக்கு முன்பாக நல்மனச்சாட்சியை பெற்றிருக்க தண்ணீர் முழுக்காட்டுதல் ஏன் முக்கிய அம்சமாக இருக்கிறது?

13. நாம் பாவம் செய்துவிட்டதாக உணர்ந்தால், என்ன செய்ய வேண்டும், ஏன்?

14. (அ) இயேசுவின் பலி நமக்கு பயனளித்திருக்கிற ஒரு முக்கியமான வழியை விளக்குங்கள். (ஆ) நமக்கு உண்மையில் விசுவாசம் இருந்தால் என்ன செய்வோம்?

15. இயேசு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசம் எப்படி ஒன்றுபடுத்தும் வல்லமையுடையதாய் இருக்கிறது?

[பக்கம் 36-ன் படம்]

கடவுளுடைய கட்டளைகளை பிறர் கைக்கொள்ளும்படி போதிக்க வேண்டும் என இயேசு தம்மை பின்பற்றியவர்களிடத்தில் சொன்னார்