Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

துன்மார்க்கத்தை கடவுள் அனுமதித்திருப்பதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்

துன்மார்க்கத்தை கடவுள் அனுமதித்திருப்பதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்

அதிகாரம் ஏழு

துன்மார்க்கத்தை கடவுள் அனுமதித்திருப்பதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்

“என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது” என்று முற்பிதாவாகிய யாக்கோபு சொன்னார். (ஆதியாகமம் 47:9) அவ்வாறே, மனிதன் “வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்” என யோபு குறிப்பிட்டார். (யோபு 14:1) அவர்களைப் போலவே, நம்மில் பெரும்பாலானோர் கஷ்டங்களையும் அநியாயங்களையும் துயரங்களையும்கூட எதிர்ப்பட்டிருப்போம். ஆனாலும், நாம் இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறந்திருப்பது கடவுள் பங்கில் எந்த விதத்திலும் அநீதி அல்ல. ஆதாமும் ஏவாளும் தொடக்கத்தில் பெற்றிருந்த பரிபூரணமான உடலும் உள்ளமும் பரதீஸிய வீடும் நமக்கு இல்லை என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் கலகம் செய்தபோதே உடனடியாக அவர்களை யெகோவா அழித்திருந்தால்? அப்படி செய்திருந்தால் எந்தவொரு வியாதியோ கவலையோ மரணமோ இருந்திருக்காது, ஏன் மனிதகுலமே இருந்திருக்காது. நாமும் பிறந்திருக்க மாட்டோம். ஆனால் ஆதாமும் ஏவாளும் பிள்ளைகளை பெற்றெடுப்பதற்கு கடவுள் கருணையோடு காலத்தை அனுமதித்தார்; அப்பிள்ளைகள் அபூரணத்தை சுதந்தரித்த போதிலும் அவர்கள் பிறப்பதற்கு வழிசெய்தார். மேலும் ஆதாம் இழந்ததை​—⁠பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனை​—⁠நமக்கு மீண்டும் அளிப்பதற்கு கிறிஸ்து மூலமாக யெகோவா ஏற்பாடும் செய்தார்.​—யோவான் 10:10; ரோமர் 5:12.

2வியாதி, கவலை, வேதனை, மரணம் ஆகியவற்றிலிருந்தும் கெட்ட ஜனங்களிலிருந்தும்கூட விடுபட்ட புதிய உலகில், பரதீஸிய சூழலில் என்றென்றும் வாழ்வதை எதிர்நோக்கியிருப்பது நமக்கு எவ்வளவு உற்சாகத்தை அளிக்கிறது! (நீதிமொழிகள் 2:21, 22; வெளிப்படுத்துதல் 21:4, 5) நாம் இரட்சிப்படைவது நமக்கும் சரி யெகோவாவுக்கும் சரி மிகவும் முக்கியமானது என்றாலும், அதோடு சம்பந்தப்பட்ட இன்னும் முக்கியமான வேறொன்றும் உண்டு என்பதையும் நாம் பைபிளிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.

அவரது மகத்தான பெயரின் நிமித்தம்

3பூமியையும் மனிதகுலத்தையும் பற்றிய கடவுளுடைய நோக்கம் நிறைவேறுவதில் அவருடைய பெயர் உட்பட்டுள்ளது. அவருடைய பெயர், யெகோவா; அதன் அர்த்தம், “ஆகும்படி செய்பவர்.” ஆகவே அவருடைய பெயர் அவர் சர்வலோக பேரரசர், நோக்கமுள்ளவர், சத்தியபரர் என அவரைக் குறித்து பறைசாற்றுகிறது. யெகோவா இந்த உயர்ந்த ஸ்தானத்தை வகிப்பதால், அவருடைய பெயருக்கும் அது பிரதிநிதித்துவம் செய்வதற்கும் முழு மரியாதை காட்ட வேண்டும்; அதோடு அனைவரும் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும்; அப்போது மட்டுமே இந்த சர்வலோகம் முழுவதிலும் சமாதானமும் செழிப்பும் நிலவும்.

4ஆதாமையும் ஏவாளையும் படைத்த பின்பு, அவர்களுக்கு ஒரு வேலையை யெகோவா கொடுத்தார். பூமியை கீழ்ப்படுத்துவது​—⁠அதன்மூலம் பரதீஸின் எல்லைகளை விரிவுபடுத்துவது​—⁠மட்டுமல்ல, அவர்களுடைய சந்ததியாரால் பூமியை நிரப்புவதும் அவருடைய நோக்கமாயிருந்தது என்பதை அவர் தெளிவுபடுத்தினார். (ஆதியாகமம் 1:28) அவர்கள் பாவம் செய்த காரணத்தால் அந்த நோக்கம் நிறைவேற வாய்ப்பில்லாமல் போனதா? பூமியையும் மனிதரையும் குறித்த தமது நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் போயிருந்தால் சர்வவல்லமையுள்ள யெகோவாவின் பெயருக்கு அது எத்தகைய இழுக்காக இருந்திருக்கும்!

5ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமல் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்தால் அதே “நாளில்” சாவார்கள் என யெகோவா எச்சரித்திருந்தார். (ஆதியாகமம் 2:17) தாம் சொன்னபடியே அவர்கள் பாவம் செய்த அதே நாளிலே யெகோவா அவர்களை விசாரித்து மரண தண்டனையை அறிவித்தார். கடவுளுடைய நோக்குநிலையில் ஆதாமும் ஏவாளும் அதே நாளில் மரித்துவிட்டனர். என்றாலும், பூமியைக் குறித்த தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவர்கள் சொல்லர்த்தமாக மரிப்பதற்குமுன் ஒரு குடும்பத்தை உருவாக்க யெகோவா அவர்களை அனுமதித்தார். இருந்தாலும், 1,000 ஆண்டுகள் கடவுளுக்கு ஒரு நாளாக இருப்பதால், ஆதாமின் வாழ்க்கை 930-⁠ம் வயதில் முடிவடைந்தபோது அவன் அந்த ஒரு ‘நாளுக்குள்’ மரித்தான். (2 பேதுரு 3:8; ஆதியாகமம் 5:3-5) இவ்வாறாக தண்டனை வழங்கும் காலத்தைக் குறித்ததில் யெகோவாவின் உண்மைத்தன்மை நிரூபணமானது; அவர்களுடைய மரணம் பூமியைக் குறித்த அவருடைய நோக்கத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கவில்லை. ஆனால் பொல்லாதவர்கள் உட்பட அபூரண மக்கள் சிறிது காலத்திற்கு வாழும்படி அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

6மோசேயின் காலத்தில் எகிப்திய அரசனிடம் யெகோவா சொன்ன விஷயம், கடவுள் அக்கிரமத்தை தொடர்ந்து அனுமதிப்பதற்கான காரணத்தை மேலும் விளக்குகிறது. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்படுவதை பார்வோன் தடைசெய்த போது யெகோவா அவனை உடனடியாக அழித்துவிடவில்லை. அவர் தேசத்தின்மீது பத்து வாதைகளைக் கொண்டுவந்தார்; அவை அவரது வல்லமையை பிரமிப்பூட்டும் விதங்களில் மெய்ப்பித்துக் காட்டின. ஏழாம் வாதையைக் குறித்து எச்சரிக்கையில், பார்வோனையும் அவனுடைய ஜனங்களையும் தம்மால் பூமியிலிருந்து எளிதில் ஒழித்துக்கட்ட முடியும் என யெகோவா அவனிடம் கூறினார். ஆனால், “என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்” என யெகோவா சொன்னார்.​—யாத்திராகமம் 9:15, 16.

7இஸ்ரவேலரை யெகோவா விடுவித்தபோது, அவருடைய பெயர் உண்மையில் எங்கும் பிரஸ்தாபமாயிற்று. (யோசுவா 2:1, 9-11) அவர் அன்று செய்தது, இன்று சுமார் 3,500 ஆண்டுகளுக்குப் பின்பும் மறக்கப்படவில்லை. யெகோவா என்ற பெயர் மட்டுமல்ல அப்பெயருக்கு உரியவரை பற்றிய சத்தியமும் அறிவிக்கப்பட்டது. இது, யெகோவா வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற கடவுள், தம் ஊழியக்காரரின் சார்பாக நடவடிக்கை எடுக்கிற கடவுள் என்பதை உறுதிப்படுத்தியது. (யோசுவா 23:14) அவர் சர்வ வல்லவராக இருப்பதால் அவரது நோக்கம் நிறைவேறுவதை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை அது நிரூபித்தது. (ஏசாயா 14:24, 27) ஆகவே, அவர் சாத்தானின் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறை முழுவதையும் அழிப்பதன் மூலம் தம்முடைய உண்மையுள்ள ஊழியர்கள் சார்பாக விரைவில் நடவடிக்கை எடுப்பார் என நாம் உறுதியாக நம்பலாம். யெகோவாவுடைய சர்வ வல்லமையின் அந்த வெளிக்காட்டும் அதனால் அவரது பெயருக்கு ஏற்படும் மகிமையும் ஒருபோதும் மறக்கப்படாது. அதன் பலனாக வரும் நன்மைகளுக்கும் முடிவிராது.​—எசேக்கியேல் 38:23; வெளிப்படுத்துதல் 19:1, 2.

‘ஆ! தேவனுடைய ஞானத்தின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!’

8அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதிய கடிதத்தில், “கடவுளிடத்தில் அநீதி இருக்குமென்போமோ?” என்ற கேள்வியை கேட்கிறார். “அல்லவே அல்ல” என அவர் உறுதியாக பதிலளிக்கிறார். அதற்குப் பின்பு அவர் கடவுளுடைய இரக்கத்தை வலியுறுத்திக் காட்டி, பார்வோனை இன்னும் கொஞ்ச காலம் வாழ அனுமதித்ததற்கு யெகோவா சொன்ன காரணத்தையும் குறிப்பிடுகிறார். மனிதராகிய நாம் குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போன்று இருக்கிறோம் எனவும் பவுல் காண்பிக்கிறார். பின்பு அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “கடவுள் தமது கோபத்தைக் காண்பிக்கவும் தமது வல்லமையைத் தெரிவிக்கவும் அதோடுகூடத் தாம் மகிமைக்காக ஆயத்தமாக்கின இரக்கப் பாத்திரங்கள்மேல், அதாவது யூதரிலிருந்து மாத்திரமல்ல புறஜாதிகளிலிருந்தும் அவர் அழைத்த நம்மேல், தமது மகிமையின் ஐசுவரியத்தைத் தெரிவிக்கவும் சித்தங்கொண்டு அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாயிருந்தாரானாலென்ன?”​—ரோமர் 9:14-24, தி.மொ.

9ஏதேனில் கலகம் ஆரம்பித்தது முதற்கொண்டு, யெகோவாவையும் அவரது சட்டங்களையும் எதிர்த்த எவரும் ‘அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்களாக’ இருந்திருக்கின்றனர். அன்று முதல் யெகோவா நீடிய பொறுமையை காட்டியிருக்கிறார். துன்மார்க்கர் அவருடைய வழிகளை பரிகசித்து, அவருடைய ஊழியர்களை துன்புறுத்தி, அவரது குமாரனை கொலையும் செய்தனர். தமக்கு விரோதமான கலகத்தாலும் மனிதனுடைய சுயேச்சையான ஆட்சியாலும் வரும் நாசகரமான விளைவுகளை சிருஷ்டிகள் யாவும் முழுமையாக காண்பதற்கு யெகோவா மிகுந்த கட்டுப்பாட்டுடன் போதுமான காலத்தை அனுமதித்திருக்கிறார். அதேசமயத்தில் இயேசுவின் மரணம், கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்தை விடுவித்து, ‘பிசாசின் கிரியைகளை அழிப்பதற்கு’ வழி செய்தது.​—1 யோவான் 3:8; எபிரெயர் 2:14, 15.

10இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் 1,900-⁠க்கும் மேலான ஆண்டுகளாக ‘கோபாக்கினை பாத்திரங்களை’ யெகோவா மேலுமாக சகித்து, அவர்களை அழிக்காமல் விட்டு வைத்திருக்கிறார். ஏன்? அதற்கு ஒரு காரணம் இயேசு கிறிஸ்துவுடன் பரலோக ராஜ்யத்தில் ஆளப் போகிறவர்களை அவர் தயார்படுத்திக் கொண்டிருந்தார். இவர்கள் 1,44,000 பேர்; அப்போஸ்தலன் பவுல் சொன்ன “இரக்கப் பாத்திரங்கள்” இவர்களே. இந்தப் பரலோக வகுப்பில் அங்கம் வகிக்க முதலில் யூதர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிற்பாடு புறதேசத்தாருக்கு கடவுள் அழைப்பு விடுத்தார். தம்மை வணங்கும்படி இவர்களில் எவரையுமே யெகோவா வற்புறுத்தவில்லை. ஆனால், தமது அன்பான ஏற்பாடுகளுக்கு நன்றியுணர்வை காண்பித்தவர்களில் சிலருக்கு தம்முடைய குமாரனோடு சேர்ந்து பரலோக ராஜ்யத்தில் ஆளும் சிலாக்கியத்தை அவர் அருளினார். அந்தப் பரலோக வகுப்பாரை தயார்படுத்தும் வேலை இப்போது ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது.​—லூக்கா 22:29; வெளிப்படுத்துதல் 14:1-4.

11அப்படியானால் பூமியில் வசிப்போருக்கு என்ன எதிர்பார்ப்பு உள்ளது? யெகோவாவின் நீடிய பொறுமை சகல தேசத்தாரிலுமிருந்து ‘திரள் கூட்டத்தாரை’ கூட்டிச் சேர்க்கவும் வழி செய்திருக்கிறது. அவர்கள் இப்போது லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். இந்த பூமிக்குரிய வகுப்பார் இந்த ஒழுங்குமுறையின் முடிவை தப்பிப்பிழைத்து பரதீஸான பூமியில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பர் என யெகோவா வாக்குறுதி அளித்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 7:9, 10; சங்கீதம் 37:29; யோவான் 10:16) மரித்த திரளான ஜனங்கள் கடவுளுடைய உரிய காலத்தில் உயிர்த்தெழுப்பப்பட்டு, அந்தப் பரலோக ராஜ்யத்தின் பூமிக்குரிய குடிமக்களாக வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்படுவர். அப்போஸ்தலர் 24:15-⁠ல் கடவுளுடைய வார்த்தை இவ்வாறு முன்னறிவிக்கிறது: ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பார்கள்.’​—யோவான் 5:28, 29.

12இந்த எல்லா காரியங்களிலும் ஏதாவது அநீதி இருக்கிறதா? இல்லை, துன்மார்க்கரின் அல்லது ‘கோபாக்கினை பாத்திரங்களின்’ அழிவை நிறுத்தி வைத்திருப்பதன் மூலம், தம்முடைய நோக்கத்திற்கு இசைய கடவுள் மற்றவர்களுக்கு பரிவு காட்டுகிறார். இது அவர் எந்தளவுக்கு இரக்கமும் அன்பும் உள்ளவர் என்பதைக் காட்டுகிறது. மேலும், அவருடைய நோக்கம் படிப்படியாக உச்சக்கட்டத்தை நெருங்குவதைக் காண காலத்தை பெற்றிருப்பதால் நாம் யெகோவாவைப் பற்றி அதிகத்தைக் கற்றுக்கொள்கிறோம். அவருடைய ஆள்தன்மையின் பலதரப்பட்ட அம்சங்கள்​—⁠அவருடைய நீதி, இரக்கம், நீடிய பொறுமை, நானாவித ஞானம் போன்றவை⁠—⁠வெளிக்காட்டப்படுவதைப் பார்த்து நாம் அதிசயிக்கிறோம். சர்வலோக பேரரசுரிமையை, அதாவது ஆட்சிசெய்ய தமக்கிருக்கும் உரிமையைப் பற்றிய விவாதத்தை யெகோவா ஞானமாக கையாண்டது, அவருடைய ஆட்சியே மிகச் சிறந்தது என்ற உண்மைக்கு நித்திய அத்தாட்சி அளிக்கும். ஆகவே அப்போஸ்தலன் பவுலுடன் சேர்ந்து நாமும் இப்படி சொல்லலாம்: “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!”​—ரோமர் 11:33.

பக்தியை வெளிக்காட்ட சந்தர்ப்பம்

13கடவுளுடைய ஊழியர்கள் பலரும் தனிப்பட்ட வாழ்க்கையில் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். கடவுள் துன்மார்க்கத்தை அழித்து, முன்னறிவித்தபடி மனிதகுலத்திற்கு புதிய உலகை இன்னும் கொண்டுவராததால் அவர்களுடைய கஷ்டங்கள் ஓய்ந்தபாடில்லை. இது நம்மை சோர்வடையச் செய்ய வேண்டுமா? அல்லது பிசாசை பொய்யனாக நிரூபிப்பதற்கு தகுந்த சந்தர்ப்பங்களாக அச்சூழ்நிலைகளை நாம் கருத வேண்டுமா? “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து” என்ற அழைப்பை நாம் மனதில் வைத்தோமானால் அதைச் செய்வதற்கு பலப்படுத்தப்படுவோம். (நீதிமொழிகள் 27:11) யெகோவாவை நிந்திக்கிற சாத்தான், ஜனங்கள் சொத்து சுகத்தை இழக்கையிலோ உடல் உபாதைகளை அனுபவிக்கையிலோ கடவுளை குற்றப்படுத்தி சபிக்கவும் செய்வார்கள் என கூறினான். (யோபு 1:9-11; 2:4, 5) கஷ்டங்களின் மத்தியிலும் யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதியை காண்பிப்பதன் மூலம் சாத்தானின் குற்றச்சாட்டு நம்மைப் பொறுத்தவரை பொய்யென நாம் நிரூபிக்கும்போது யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துகிறோம்.

14சோதனைகளை அனுபவிக்கையில் யெகோவாவை சார்ந்திருப்போமானால், நாம் மதிப்புமிக்க பண்புகளை வளர்த்துக்கொள்ளலாம். உதாரணமாக, இயேசு தாம் பட்ட கஷ்டங்களாலே, அதுவரை அறிந்திராத விதத்தில் ‘கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.’ நாமும்கூட நமக்கு நேரிடும் சோதனைகளிலிருந்து கற்றுக்கொள்ள முடியும்; எப்படியெனில், நீடிய பொறுமையையும், சகிப்புத்தன்மையையும், யெகோவாவின் நீதியான வழிகளுக்கு அதிக போற்றுதலையும் வளர்த்துக்கொள்ள முடியும்.​—எபிரெயர் 5:8, 9; 12:11; யாக்கோபு 1:2-4.

15நாம் செய்வதை மற்றவர்கள் கவனிப்பார்கள். நீதியை நேசிப்பதன் நிமித்தம் நாம் படும் கஷ்டத்தைக் கண்டு நாளடைவில் அவர்களில் சிலர் இன்று உண்மை கிறிஸ்தவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். நம்மோடு வணக்கத்தில் ஒன்றுபடுவதன் மூலம் அவர்களுக்கும் நித்திய ஜீவனின் ஆசீர்வாதங்களைப் பெறும் வாய்ப்பு கிடைக்கலாம். (மத்தேயு 25:34-36, 40, 46) ஜனங்கள் இந்த வாய்ப்பைப் பெறவே யெகோவாவும் அவருடைய குமாரனும் விரும்புகிறார்கள்.

16கடினமான சூழ்நிலைகளையும்கூட, யெகோவாவுக்கு பக்தியை காட்டுவதற்கும், அவருடைய சித்தத்தை செய்வதற்குமான சந்தர்ப்பங்களாக கருதுவது எவ்வளவு மெச்சத்தக்கது! உண்மையில் அது நாம் கடவுளோடும் கிறிஸ்துவோடும் ஒன்றுபடுவதில் முன்னேறுகிறோம் என்பதற்கு அத்தாட்சி அளிக்கலாம். எல்லா உண்மை கிறிஸ்தவர்களின் சார்பாகவும் இயேசு இவ்வாறு ஜெபம் செய்தார்: “நான் இவர்களுக்காக [தம்முடைய நெருங்கிய சீஷர்களுக்காக] வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன். அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, . . . நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.”​—யோவான் 17:20, 21.

17நாம் யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதியோடு இருந்தோமானால் அவர் நம்மை அபரிமிதமாக ஆசீர்வதிப்பார். அவருடைய வார்த்தை இவ்வாறு சொல்கிறது: “கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும் கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.” (1 கொரிந்தியர் 15:58) “உங்கள் கிரியையையும், . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே” என்றும் அது சொல்கிறது. (எபிரெயர் 6:10) யாக்கோபு 5:11 இவ்வாறு குறிப்பிடுகிறது: “இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.” யோபுவுக்கு என்ன பலன் கிடைத்தது? “கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்.” (யோபு 42:10-16) ஆம், யெகோவா ‘தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர்.’ (எபிரெயர் 11:6) எதிர்காலத்தில் நமக்கு எப்பேர்ப்பட்ட பலன்​—⁠பரதீஸிய பூமியில் நித்திய ஜீவன்!

18கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட எல்லா தீங்கையும் கடவுளுடைய ராஜ்ய ஆட்சி நீக்கிவிடும். அந்த சமயத்தில் நாம் அனுபவிக்கப்போகும் இன்பம், இப்போது அனுபவித்துவரும் எந்தத் துன்பத்தையும் விஞ்சிவிடும். இன்றைய கசப்பான நினைவுகள் எதுவும் அன்று நம்மை தொல்லைப்படுத்தாது. புதிய உலகில் நல்ல யோசனைகளும் செயல்களுமே அனுதின வாழ்க்கையின் சகஜமான அம்சங்களாக இருக்கும்; இதனால் வேதனை தரும் நினைவுகள் படிப்படியாக மறைந்துவிடும். “இதோ, நான் புதிய வானத்தையும் [மனித குலத்தின் மீது ஒரு புதிய பரலோக ராஜ்ய அரசாங்கத்தையும்] புதிய பூமியையும் [நீதியுள்ள ஒரு மனித சமுதாயத்தையும்] சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்” என யெகோவா அறிவிக்கிறார். ஆம், யெகோவாவின் புதிய உலகில் நீதிமான்களால் இவ்வாறு கூற முடியும்: “பூமி முழுவதும் தொல்லைகளிலிருந்து விடுபட்டு இளைப்பாறுகிறது; ஜனங்கள் ஆனந்தத்தோடு ஆர்ப்பரிக்கிறார்கள்.”​—ஏசாயா 14:7, NW; 65:17, 18.

மறுபார்வை

• யெகோவா தீமையை அனுமதிக்கிறபோதிலும், எவ்வாறு தமது பெயருக்கு மிகுந்த மரியாதையை காண்பித்திருக்கிறார்?

• ‘கோபாக்கினை பாத்திரங்களை’ கடவுள் பொறுத்து வந்திருப்பதால் எவ்வாறு நமக்கு அவருடைய இரக்கம் கிடைத்திருக்கிறது?

• தனிப்பட்ட விதத்தில் துன்பத்தை அனுபவிக்கும்போது நாம் எதை புரிந்துகொள்ள முயல வேண்டும்?

[கேள்விகள்]

1, 2. (அ) ஏதேனில் கலகம் செய்தவர்களை யெகோவா உடனடியாக அழித்திருந்தால் அது நம்மை எவ்வாறு பாதித்திருக்கும்? (ஆ) யெகோவா நமக்கு என்ன அன்பான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்?

3. பூமியையும் மனிதகுலத்தையும் பற்றிய யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவதில் எது உட்பட்டுள்ளது?

4. பூமியைக் குறித்த யெகோவாவின் நோக்கத்தில் எது உட்பட்டிருந்தது?

5. (அ) நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை ஆதாமும் ஏவாளும் சாப்பிட்டால் எப்போது மரிப்பார்கள் என சொல்லப்பட்டது? (ஆ) பூமியைக் குறித்த தம் நோக்கம் சம்பந்தமாக ஆதியாகமம் 2:17-⁠ல் உள்ள வார்த்தையை யெகோவா எப்படி நிறைவேற்றினார்?

6, 7. (அ) யாத்திராகமம் 9:15, 16-⁠ன்படி யெகோவா ஏன் துன்மார்க்கரை சிறிது காலத்திற்கு அனுமதிக்கிறார்? (ஆ) பார்வோனின் விஷயத்தில் யெகோவாவின் வல்லமை எவ்வாறு காண்பிக்கப்பட்டது, அவருடைய பெயர் எவ்வாறு பிரஸ்தாபமாக்கப்பட்டது? (இ) இன்றைய பொல்லாத ஒழுங்குமுறை முடிவடைகையில் என்ன நடக்கும்?

8. என்ன காரணிகளை சிந்தித்துப் பார்க்கும்படி பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார்?

9. (அ) ‘அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்’ யார்? (ஆ) தம்முடைய விரோதிகளிடம் யெகோவா ஏன் நீடிய பொறுமையை பெருமளவில் காட்டியிருக்கிறார், இறுதியில் அது எவ்வாறு அவரை நேசிப்போருக்கு நன்மை அளிக்கும்?

10. கடந்த 1,900-⁠க்கும் அதிக ஆண்டுகளாக துன்மார்க்கரை யெகோவா ஏன் சகித்து வந்திருக்கிறார்?

11. (அ) யெகோவாவின் நீடிய பொறுமையால் இப்போது எந்த வகுப்பாரும் நன்மையடைகிறார்கள்? (ஆ) மரித்தோர் எவ்வாறு நன்மையடைவர்?

12. (அ) துன்மார்க்கத்தை யெகோவா சகித்திருப்பதிலிருந்து நாம் என்ன கற்றிருக்கிறோம்? (ஆ) இக்காரியங்களை யெகோவா கையாண்ட விதத்தைப் பற்றி நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?

13. கஷ்டங்களை அனுபவிக்கையில் நமக்கு என்ன வாய்ப்பு அளிக்கப்படுகிறது, அதற்கு ஞானமாக பிரதிபலிக்க எது நமக்கு உதவும்?

14. சோதனைகளை அனுபவிக்கையில் நாம் யெகோவாவை சார்ந்திருந்தோமானால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?

15. நாம் கஷ்டங்களை பொறுமையோடு சகிக்கையில் மற்றவர்கள் எப்படி நன்மையடையலாம்?

16. கடினமான சூழ்நிலைகளைப் பற்றிய நம் கருத்து ஒற்றுமையுடன் எப்படி சம்பந்தப்பட்டுள்ளது?

17. யெகோவாவிடத்தில் உண்மைப் பற்றுறுதியோடு இருந்தால் நாம் என்ன நம்பிக்கையை கொண்டிருக்கலாம்?

18. நமக்கிருக்கும் எந்த வேதனையான நினைவுகளுக்கும் முடிவில் என்ன சம்பவிக்கும்?

[பக்கம் 67-ன் படங்கள்]

யெகோவா, “யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்”