Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நமது நாளில் ஒன்றுபட்ட வணக்கம்—எதைக் குறிக்கிறது?

நமது நாளில் ஒன்றுபட்ட வணக்கம்—எதைக் குறிக்கிறது?

அதிகாரம் ஒன்று

நமது நாளில் ஒன்றுபட்ட வணக்கம்​—⁠எதைக் குறிக்கிறது?

இன்று ஒன்றுபட்ட வணக்கம் உலகெங்கும் முன்னேறி வருவதைக் காண்பது மலைக்க வைக்கிறது. இது எல்லா தேசங்களையும் இனங்களையும் மொழிகளையும் சேர்ந்த லட்சக்கணக்கானோரை ஒன்றுசேர்க்கிறது. ஒவ்வொரு ஆண்டும் திரளான ஜனங்கள் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள். இவர்களை யெகோவாவின் “சாட்சிகள்” என பைபிள் அடையாளம் காட்டுகிறது; இவர்கள் ‘திரள் கூட்டத்தார்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் “இரவும் பகலும்” கடவுளுக்கு பரிசுத்த சேவை செய்கிறார்கள். (ஏசாயா 43:10-12; வெளிப்படுத்துதல் 7:9-15) ஏன்? ஏனெனில் யெகோவாவே ஒரே மெய்க் கடவுள் என்பதை அறிந்திருக்கிறார்கள்; இது அவருடைய நீதியான வழிகளுக்கு இசைவாக வாழ இவர்களை உந்துவிக்கிறது. அதோடு, இந்தப் பொல்லாத உலகின் “கடைசி நாட்களில்” நாம் வாழ்கிறோம் என்பதையும், கடவுள் இதை வெகு விரைவில் அழித்து பரதீஸிய புதிய உலகை ஸ்தாபிப்பார் என்பதையும் இவர்கள் கற்றிருக்கிறார்கள்.​—2 தீமோத்தேயு 3:1-5, 13; 2 பேதுரு 3:10-13.

2கடவுளுடைய வார்த்தை இந்த வாக்குறுதிகளை அளிக்கிறது: “இன்னுங் கொஞ்ச நேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:10, 11) “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29) “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”​—வெளிப்படுத்துதல் 21:4.

3மெய் வணக்கத்தில் இப்போது ஒன்றுபடுகிறவர்கள் அந்தப் புதிய உலகின் ஆரம்ப குடிமக்களாகிறார்கள். கடவுளுடைய சித்தம் என்ன என்பதை இவர்கள் கற்றிருக்கிறார்கள், தங்களால் முடிந்தவரை அதை சிறப்பாக கடைப்பிடிக்கிறார்கள். இதன் முக்கியத்துவத்தைப் பற்றி இயேசு கூறினார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வாறு எழுதினார்: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”​—1 யோவான் 2:17.

இது உண்மையில் எதைக் குறிக்கிறது

4இன்று அநேகர் ஒன்றுபட்ட வணக்கத்திற்குள் கூட்டிச் சேர்க்கப்படுவது உண்மையில் எதைக் குறிக்கிறது? நாம் இந்தப் பொல்லாத உலகின் முடிவுக்கு வெகு அருகில் இருப்பதையும் அதைத் தொடர்ந்து புதிய உலகம் ஆரம்பிக்கப் போவதையும் இது தெளிவாக காட்டுகிறது. இந்த விசேஷித்த கூட்டிச் சேர்ப்பைப் பற்றிய பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி வருவதை நாம் கண்கூடாக காண்கிறோம். அந்தத் தீர்க்கதரிசனங்களில் ஒன்று இப்படி சொல்கிறது: “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் [மேலோங்கியிருக்கும் அவரது உண்மை வணக்கம்] பர்வதங்களின் கொடுமுடியில் [எல்லா வணக்கத்திற்கும் மேலாய்] ஸ்தாபிக்கப்பட்டிருக்கும், . . . எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள். திரளான ஜாதிகள் [“தேசங்கள்,” NW] புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்.”​—மீகா 4:1, 2; சங்கீதம் 37:34.

5தேசங்கள் ஒட்டுமொத்தமாக யெகோவாவின் ஆவிக்குரிய ஆலயத்தில் அவரை வணங்குவதற்கு வராதபோதிலும், அவற்றிலுள்ள தனிநபர்கள் லட்சக்கணக்கில் வருகிறார்கள். யெகோவா தேவனின் அன்பான நோக்கத்தையும் இனிய பண்புகளையும் கற்றுக்கொள்கையில் அவர்களுடைய இருதயங்கள் நெகிழ்ந்துபோகின்றன. கடவுள் தங்களிடத்தில் எதிர்பார்ப்பதை அவர்கள் மனத்தாழ்மையுடன் அறிய முயலுகிறார்கள். “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்” என்ற சங்கீதக்காரனுடைய ஜெபத்தைப் போலவே அவர்களுடைய ஜெபமும் இருக்கிறது.​—சங்கீதம் 143:10.

6ஒன்றுபட்ட வணக்கத்திற்குள் யெகோவா இப்போது கூட்டிச் சேர்க்கிற திரள் கூட்டத்தாரில் நீங்களும் இருப்பதை கற்பனை செய்ய முடிகிறதா? யெகோவாவின் வார்த்தையிலிருந்து பெற்ற போதனைகளுக்கு இசைய நீங்கள் நடப்பது, அவரே அதன் ஊற்றுமூலர் என மனதார போற்றுவதை காட்டுகிறதா? நீங்கள் எந்தளவுக்கு ‘அவருடைய பாதைகளில் நடப்பீர்கள்’?

வணக்கத்தில் ஒற்றுமையை அடைந்திருப்பது எப்படி

7புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகள் அனைத்தும் மெய் வணக்கத்தில் ஒன்றுபட வேண்டும் என்பதே யெகோவாவின் நோக்கம். அனைவரும் ஒரே மெய்க் கடவுளை வணங்கும் அந்த நாளுக்காக நாம் எவ்வளவாய் ஏங்குகிறோம்! (சங்கீதம் 103:19-22) ஆனால் அந்த நாள் வருவதற்கு முன்பு, தமது நீதியுள்ள சித்தத்தைச் செய்ய மறுப்பவர்களை யெகோவா ஒழித்துக்கட்ட வேண்டும். எதிர்காலத்தில் தாம் செய்யப் போவதை அவர் முன்கூட்டியே இரக்கத்துடன் அறிவிக்கிறார்; அதன் மூலம் எங்குமுள்ள ஜனங்கள் தங்கள் வாழ்க்கைப் போக்கை மாற்றிக்கொள்ள வாய்ப்பு அளிக்கிறார். (ஏசாயா 55:6, 7) இவ்வாறு நம்முடைய நாளில், “சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும்” இந்த அவசரமான அழைப்பு விடுக்கப்படுகிறது: “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள்.” (வெளிப்படுத்துதல் 14:6, 7) இந்த அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், மெய்க் கடவுளை அறிந்து அவரை வழிபட மற்றவர்களுக்கும் அழைப்பு விடுப்பது உங்கள் பாக்கியம்.

8தம்மை விசுவாசிப்பதாக சொல்லிக் கொண்டு அதே சமயத்தில் தங்களுடைய இஷ்டப்படி வாழ்கிறவர்களின் வணக்கத்தை யெகோவா விரும்புவதில்லை. ஜனங்கள் ‘தம்முடைய சித்தத்தை அறிகிற [“திருத்தமான,” NW] அறிவை’ அடைந்து அதை தங்களுடைய வாழ்க்கையில் பின்பற்ற வேண்டுமென்றே யெகோவா விரும்புகிறார். (கொலோசெயர் 1:9, 10) ஆகவே, பைபிளின் அடிப்படை போதனைகளைக் கற்றுக்கொள்கிற நன்றியுணர்வுள்ள ஜனங்கள் கிறிஸ்தவ முதிர்ச்சியை அடைய விரும்புகிறார்கள். யெகோவாவை நன்கு அறிந்துகொள்ளவும், அவருடைய வார்த்தையின் அகலத்தையும் ஆழத்தையும் புரிந்துகொள்ளவும், அதை வாழ்க்கையில் முழுமையாக கடைப்பிடிக்கவும் அவர்கள் ஆசைப்படுகிறார்கள். நம் பரலோகத் தகப்பனின் குணங்களைப் பின்பற்றவும், காரியங்களை அவர் நோக்கும் விதமாக நோக்கவும் அவர்கள் பிரயாசப்படுகிறார்கள். இந்தப் பூமியில் இன்று யெகோவா ஏற்பாடு செய்திருக்கும் உயிர்காக்கும் வேலையில் பங்குபெற பல்வேறு வழிகளைத் தேட இது அவர்களை உந்துவிக்கிறது. உங்களுடைய ஆசையும் அதுதானா?​—மாற்கு 13:10; எபிரெயர் 5:12–6:3.

9யெகோவாவை சேவிப்போர் ஒன்றுபட்ட ஜனங்களாக இருக்க வேண்டும் என பைபிள் காட்டுகிறது. (எபேசியர் 4:1-3) பிளவுற்ற ஓர் உலகில் நாம் வாழ்ந்தாலும், நம்முடைய அபூரணங்களால் நாம் இன்னும் அல்லல்பட்டுக் கொண்டிருந்தாலும் இந்த ஒற்றுமை இன்றும் நம் மத்தியில் நிலவ வேண்டும். தம்முடைய சீஷர்கள் அனைவரும் ஒன்றாயிருந்து, மெய்யான ஒற்றுமையை அனுபவித்து மகிழ வேண்டுமென இயேசு ஊக்கமாக ஜெபித்தார். இது எதை குறிக்கிறது? முதலாவதாக, யெகோவாவுடனும் அவரது குமாரனுடனும் அவர்கள் நல்ல உறவை அனுபவிப்பதையும், இரண்டாவதாக அவர்கள் ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டவர்களாக இருப்பதையும் குறிக்கிறது. (யோவான் 17:20, 21) இந்த இலக்கை அடைவதற்காகவே, கிறிஸ்தவ சபை ஓர் அமைப்பு போல் இயங்கி வருகிறது, இதன் வாயிலாகவே யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு போதிக்கிறார்.

ஒற்றுமைக்கு பங்களிக்கும் காரணிகள் யாவை?

10ஒன்றுபட்ட வணக்கத்திற்கு பங்களிக்கிற ஏழு முக்கிய காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிற்குரிய கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கையில், ஒவ்வொரு குறிப்பும் யெகோவாவிடமும் சக கிறிஸ்தவர்களிடமும் உள்ள உங்கள் உறவை எப்படி பாதிக்கின்றன என சிந்தியுங்கள். இந்தக் குறிப்புகளை பகுத்தாராய்வதும் மேற்கோள் காட்டப்படாத வசனங்களை எடுத்துப் பார்ப்பதும் நம் எல்லாருக்கும் தேவைப்படும் பண்புகளை​—⁠தெய்வீக ஞானம், சிந்திக்கும் திறன், பகுத்துணர்வு போன்ற பண்புகளை​—⁠வளர்க்க உதவும். (நீதிமொழிகள் 5:1, 2, NW; பிலிப்பியர் 1:9-11) பின்வரும் இந்தக் காரணிகளை ஒவ்வொன்றாக சிந்தியுங்கள்.

(1) நன்மை தீமைக்கான தராதரத்தை வைக்கும் யெகோவாவின் உரிமையை நாம் ஒப்புக்கொள்கிறோம். “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”​—நீதிமொழிகள் 3:5, 6.

தீர்மானங்களை எடுக்கையில் நாம் ஏன் யெகோவாவின் ஆலோசனையையும் வழிநடத்துதலையும் நாட வேண்டும்? (சங்கீதம் 146:3-5; ஏசாயா 48:17)

(2) நம்மை வழிநடத்துவதற்கு கடவுளுடைய வார்த்தை இருக்கிறது. “நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்[டீர்கள்]; . . . அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.”​—1 தெசலோனிக்கேயர் 2:13.

நாம் சரி என “உணருவதை” வெறுமனே செய்வதில் என்ன அபாயம் இருக்கிறது? (நீதிமொழிகள் 14:12; எரேமியா 10:23, 24; 17:9)

ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் பேரில் பைபிள் என்ன ஆலோசனை அளிக்கிறதென நமக்கு தெரியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? (நீதிமொழிகள் 2:3-5; 2 தீமோத்தேயு 3:16, 17)

(3) நாம் அனைவரும் ஒரே ஆவிக்குரிய உணவுத் திட்டத்திலிருந்து நன்மையடைகிறோம். ‘உன் பிள்ளைகளெல்லாரும் [யெகோவாவால்] போதிக்கப்பட்டிருப்பார்கள்.’ (ஏசாயா 54:13) “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம்; [அழிவுக்குரிய] நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்ல வேண்டும்.”​—எபிரெயர் 10:24, 25.

ஆவிக்குரிய விதமாக உணவளிக்க யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறவர்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கின்றன? (ஏசாயா 65:13, 14)

(4) எந்த மனிதனுமல்ல இயேசு கிறிஸ்துவே நம் தலைவர். “நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.”​—மத்தேயு 23:8-10.

மற்றவர்களைவிட நாம் உயர்ந்தவர்கள் என நம்மில் யாரேனும் நினைக்க வேண்டுமா? (ரோமர் 3:23, 24; 12:3)

(5) கடவுளுடைய ராஜ்யமே மனிதகுலத்தின் ஒரே நம்பிக்கை என நாம் கருதுகிறோம். “நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்.”​—மத்தேயு 6:9, 10, 33.

‘ராஜ்யத்தை முதலாவது தேடுவது’ நம் ஒற்றுமையை காத்துக்கொள்ள எப்படி உதவுகிறது? (மீகா 4:3; 1 யோவான் 3:10-12)

(6) கிறிஸ்தவ ஒற்றுமைக்கு இன்றியமையாத பண்புகளை பரிசுத்த ஆவி யெகோவாவின் வணக்கத்தாரில் பிறப்பிக்கிறது. “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்.”​—கலாத்தியர் 5:22, 23.

கடவுளுடைய ஆவி அதன் கனிகளை நம்மில் பிறப்பிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (அப்போஸ்தலர் 5:32)

கடவுளுடைய ஆவியை பெற்றிருப்பது சக கிறிஸ்தவர்களுடன் நம் உறவை எப்படி பாதிக்கிறது? (யோவான் 13:35; 1 யோவான் 4:8, 20, 21)

(7) கடவுளை உண்மையோடு வணங்குவோர் அனைவரும் அவருடைய ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பதில் கலந்துகொள்கிறார்கள். “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”​—மத்தேயு 24:14.

இந்தப் பிரசங்க வேலையில் முழுமையாக பங்கு கொள்ளும்படி எது நம்மைத் தூண்ட வேண்டும்? (மத்தேயு 22:37-39; ரோமர் 10:10)

11ஒன்றுபட்டு யெகோவாவை வணங்குவது அவரிடத்தில் நெருங்கி வரச் செய்கிறது, புத்துணர்ச்சியளிக்கும் கூட்டுறவை சக விசுவாசிகளுடன் அனுபவித்து மகிழ்வதையும் சாத்தியமாக்குகிறது. சங்கீதம் 133:1 இவ்வாறு கூறுகிறது: “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” சுயநலம், ஒழுக்கக்கேடு, வன்முறை போன்ற இவ்வுலகத்திற்குரிய எல்லாவற்றிலிருந்தும் விலகி உண்மையில் யெகோவாவை நேசித்து அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களோடு ஒன்றாக கூடிவருவது எவ்வளவாய் புத்துணர்ச்சி அளிக்கிறது!

பிரிவினை உண்டாக்கும் செல்வாக்குகளைத் தவிருங்கள்

12மதிப்புமிக்க நம் உலகளாவிய ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படாதிருக்க பிரிவினை உண்டாக்கும் செல்வாக்குகளைத் தவிர்க்க வேண்டும். அவற்றில் ஒன்று, கடவுளையும் அவருடைய சட்டங்களையும் புறக்கணிக்கும் சுதந்திர மனப்பான்மை. இதற்கு மூலகாரணமாக விளங்கும் பிசாசாகிய சாத்தானை அம்பலப்படுத்துவதன் மூலம் இந்த மனப்பான்மையை தவிர்க்க யெகோவா நமக்கு உதவுகிறார். (2 கொரிந்தியர் 4:4; வெளிப்படுத்துதல் 12:9) கடவுளுடைய சொல்லை மீறி அவருடைய சித்தத்திற்கு எதிராக தீர்மானம் எடுப்பதற்கு ஆதாமையும் ஏவாளையும் தூண்டியது சாத்தானே. அதன் விளைவாக அவர்களுக்கும் நமக்கும் பேரிடர் உண்டானது. (ஆதியாகமம் 3:1-6, 17-19) இந்த உலகம் கடவுளையும் அவருடைய சட்டங்களையும் புறக்கணிக்கும் சுதந்திர மனப்பான்மையில் ஊறிப்போய் இருக்கிறது. ஆகவே நம்மிடமிருக்கும் அத்தகைய மனப்பான்மையை கட்டுப்படுத்துவது அவசியம்.

13உதாரணமாக, தற்போதைய பொல்லாத உலகை நீக்கிவிட்டு, “நீதி வாசமாயிருக்கும்” புதிய வானங்களையும் புதிய பூமியையும் ஸ்தாபிப்பதைப் பற்றிய சிலிர்ப்பூட்டும் யெகோவாவின் வாக்குறுதியை சற்று சிந்தித்துப் பாருங்கள். (2 பேதுரு 3:13) நீதி வாசமாயிருக்கும் அந்த சமயத்தில் வாழ்வதற்கு இப்போதே தயாராக அது நம்மை தூண்ட வேண்டாமா? அப்படியானால் இது பைபிளின் இந்த எளிய அறிவுரைக்கு கவனம் செலுத்துவதை குறிக்கிறது: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.” (1 யோவான் 2:15) ஆகவே, இந்த உலகின் மனப்பான்மையை​—⁠சுதந்திர மனப்பான்மை, மிதமிஞ்சிய தன்னல அக்கறை, ஒழுக்கக்கேடு, வன்முறை ஆகியவற்றை​—⁠அறவே விட்டு விலகுகிறோம். அபூரண மாம்சத்தின் தீய தூண்டுதல்கள் எதுவாக இருந்தாலும், இருதயப்பூர்வமாக யெகோவாவுக்கு செவிசாய்ப்பதையும் கீழ்ப்படிவதையும் நாம் பழக்கமாக்கிக் கொள்கிறோம். நம்முடைய சிந்தனைகளும் உள்நோக்கங்களும் கடவுளுடைய சித்தத்தை செய்வதை சார்ந்தே இருக்கின்றன என்பதற்கு நம் முழு வாழ்க்கைப் போக்கும் சான்று பகருகிறது.​—சங்கீதம் 40:8.

14இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையையும் அதன் வழிகளை விரும்புகிறவர்களையும் அழிப்பதற்கு யெகோவா குறித்திருக்கும் காலம் வருகையில் அவர் தாமதிக்க மாட்டார். தம்முடைய சித்தத்தை அரைமனதுடன் கற்றுக் கடைப்பிடித்து, அதே நேரத்தில் இந்த உலகத்தை முற்றிலும் விட்டு விலகாதிருப்போருக்காக யெகோவா காலத்தை தள்ளிப்போட மாட்டார், தம் தராதரங்களை மாற்றவும் மாட்டார். நாம் நடவடிக்கை எடுப்பதற்கு இதுவே காலம்! (லூக்கா 13:23, 24; 17:32; 21:34-36) ஆகவே, திரள் கூட்டத்தினர் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, யெகோவா தம்முடைய வார்த்தை, அமைப்பு ஆகியவற்றின் வாயிலாக அளிக்கிற போதனைகளை ஊக்கமாக நாடி, புதிய உலகின் பாதையில் ஒற்றுமையுடன் நடப்பதைக் காண்பது இதயத்துக்கு எவ்வளவாய் இதமளிக்கிறது! யெகோவாவைப் பற்றி எந்தளவுக்குக் கற்றுக்கொள்கிறோமோ அந்தளவுக்கு அவரை நேசிப்போம், அவருக்கு சேவை செய்யவும் விரும்புவோம்.

மறுபார்வை

• வணக்கத்தைக் குறித்ததில் யெகோவாவின் நோக்கம் என்ன?

• பைபிளின் அடிப்படை போதனைகளைக் கற்ற பின்பு, என்ன முன்னேற்றத்தை செய்ய நாம் ஊக்கமாக முயல வேண்டும்?

• யெகோவாவின் வணக்கத்தாருடன் ஒன்றுபடுவதற்கு நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம்?

[கேள்விகள்]

1, 2. (அ) நமது நாளில் ஏற்பட்டு வரும் மலைக்க வைக்கும் முன்னேற்றம் யாது? (ஆ) நேர்மை இருதயமுடையோருக்கு என்ன அருமையான நம்பிக்கை உள்ளது?

3. வணக்கத்தில் உண்மையான ஒற்றுமை எவ்வாறு சாத்தியமாகிறது?

4. (அ) நமது நாளில் அநேகர் ஒன்றுபட்ட வணக்கத்திற்கு கூட்டிச் சேர்க்கப்படுவது உண்மையில் எதைக் குறிக்கிறது? (ஆ) இந்தக் கூட்டிச் சேர்ப்பை பைபிள் எவ்வாறு விவரிக்கிறது?

5, 6. (அ) தேசங்கள் யெகோவாவிடம் வருவது உண்மை என எப்படி சொல்லலாம்? (ஆ) நாம் என்ன கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும்?

7. (அ) முடிவாக, வணக்கத்தில் எந்தளவு ஒற்றுமை நிலவும்? (ஆ) யெகோவாவை வணங்குவோராக ஆவது இப்போது ஏன் அதிக அவசரமானது, மற்றவர்களுக்கும் நாம் எப்படி உதவலாம்?

8. பைபிளின் அடிப்படை போதனைகளை கற்ற பின்பு, என்ன முன்னேற்றங்களை செய்ய நாம் ஊக்கமாக முயல வேண்டும்?

9. என்ன வழிகளில் மெய்யான ஒற்றுமை இப்போது சாத்தியமாகிறது?

10. (அ) நம்மை பாதிக்கும் கேள்விகளுக்கு பதில்களை கண்டாராய பைபிளை பயன்படுத்துகையில் நாம் எவற்றை வளர்க்கிறோம்? (ஆ) இந்தப் பாராவில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் கிறிஸ்தவ ஒற்றுமைக்குப் பங்களிக்கிற முக்கிய காரணிகளை ஆராயுங்கள்.

11. பைபிள் சத்தியங்களை நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்போது என்ன பலன் கிடைக்கிறது?

12. சுதந்திர மனப்பான்மையை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?

13. கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகில் வாழ நாம் உள்ளப்பூர்வமாக தயாராகிறோமா என்பதை எது காட்டும்?

14. (அ) யெகோவாவின் வழிகளை கற்றுக்கொள்வதற்கும் அவற்றை நமது வாழ்க்கையில் பின்பற்றுவதற்கும் கிடைத்திருக்கிற வாய்ப்பை இப்போதே பயன்படுத்திக்கொள்வது ஏன் முக்கியம்? (ஆ) பாராவில் குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் நமக்கு தனிப்பட்ட விதமாக எதைக் குறிக்கின்றன?

[பக்கம் 4-ன் படம்]

“சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்”