யெகோவாவின் சிங்காசனத்திற்கு முன் திரள் கூட்டம்
அதிகாரம் பதிமூன்று
யெகோவாவின் சிங்காசனத்திற்கு முன் திரள் கூட்டம்
ஆபேல் முதற்கொண்டு முழுக்காட்டுபவனாகிய யோவான் வரையான கடவுளுடைய உண்மை ஊழியர்கள் அவரது சித்தத்தை செய்வதை தங்கள் வாழ்க்கையில் முதலிடத்தில் வைத்தனர். ஆனாலும் அவர்கள் அனைவரும் மரித்தனர், பூமியில் கடவுளுடைய புதிய உலகில் உயிர்த்தெழுதலைப் பெற காத்திருக்கின்றனர். கடவுளுடைய பரலோக ராஜ்யத்தில் கிறிஸ்துவுடன் ஆட்சி செய்யப் போகிற 1,44,000 பேரும் தங்கள் பலனை பெறுவதற்கு முன்பு மரித்தாக வேண்டும். என்றாலும், இந்தக் கடைசி நாட்களில் எல்லா தேசங்களிலிருந்தும் வரும் ‘திரள் கூட்டத்தாருக்கு’ மரணத்தை ருசிபார்க்காமலேயே பூமியில் என்றென்றைக்கும் வாழும் எதிர்பார்ப்பு இருப்பதை வெளிப்படுத்துதல் 7:9 காட்டுகிறது. அவர்களில் நீங்களும் ஒருவரா?
திரள் கூட்டத்தாரை அடையாளம் கண்டுகொள்ளுதல்
2மத்தேயு 25:31-46-லுள்ள இயேசுவின் உவமையில் வரும் ‘செம்மறியாடுகளும்’ யோவான் 10:16-ல் (NW) குறிப்பிடப்பட்டுள்ள “மற்ற செம்மறியாடுகளும்” பூமியில் என்றென்றும் வாழும் வாய்ப்பை பெறப்போகிறவர்கள் என்பதை 1923-ல் யெகோவாவின் ஊழியர்கள் கண்டறிந்தனர். தங்கள் நெற்றியில் அடையாளம் போடப்படுபவர்களாக எசேக்கியேல் 9:1-11-ல் விவரிக்கப்பட்டவர்களும் பூமிக்குரிய நம்பிக்கை உடையவர்கள் என்பது 1931-ல் கண்டறியப்பட்டது. இயேசு சொன்ன மற்ற செம்மறியாடுகளின் பாகமானோரே திரள் கூட்டத்தார் என்பது பிற்பாடு 1935-ல் அறிந்துகொள்ளப்பட்டது. இன்று இந்த பாக்கியம் பெற்ற திரள் கூட்டத்தார் லட்சக்கணக்கில் உள்ளனர்.
3வெளிப்படுத்துதல் 7:9-ல் அந்தத் திரள் கூட்டத்தார் பரலோகத்தில் இருப்பதுபோல் விவரிக்கப்படவில்லை. அவர்கள் கடவுளுடைய ‘சிங்காசனத்திற்கு முன்பாக நிற்பது’ பரலோகத்தில் இருப்பதை அர்த்தப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் வெறுமனே கடவுளுடைய பார்வையில் இருக்கிறார்கள். (சங்கீதம் 11:4) “ஒருவனும் எண்ணக்கூடாததுமான” திரள் கூட்டமாகிய ஜனங்கள் என விவரிக்கப்பட்டிருக்கும் இவர்கள் பரலோக வகுப்பார் அல்ல; திட்டவட்டமாக குறிப்பிடப்படாத திரள் கூட்டத்தாரின் எண்ணிக்கையை வெளிப்படுத்துதல் 7:4-8 மற்றும் 14:1-4-ல் திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இது தெளிவாக தெரிகிறது. பூமியிலிருந்து பரலோகத்திற்கு மீட்டுக்கொள்ளப்படுபவர்களின் எண்ணிக்கை 1,44,000 என அந்த வசனங்கள் வெளிப்படுத்துகின்றன.
4திரள் கூட்டத்தாரைப் பற்றி வெளிப்படுத்துதல் 7:14 இவ்வாறு கூறுகிறது: “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்.” மனித சரித்திரம் கண்டிராத மிக மோசமான துன்பத்திலிருந்து அவர்கள் தப்பிப்பிழைக்கிறார்கள். (மத்தேயு 24:21) தங்களின் இரட்சிப்பு கடவுளுக்கும் கிறிஸ்துவுக்குமுரியது என அவர்கள் நன்றி பொங்க கூறுகையில் பரலோகத்திலுள்ள உண்மையுள்ள சிருஷ்டிகள் அனைவரும் இவர்களுடன் சேர்ந்து, “ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென்” என்று சொல்வார்கள்.—வெளிப்படுத்துதல் 7:11, 12.
தப்பிப்பிழைப்பதற்கு தகுதி பெறுதல்
5இந்தத் திரள் கூட்டத்தார் யெகோவாவின் நீதியுள்ள தராதரங்களுக்கு
ஏற்பவே மிகுந்த உபத்திரவத்திலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள். அதிலிருந்து தப்புவிக்கப்படுவோரை அடையாளம் காட்டும் பண்புகளை பைபிள் தெளிவாக விளக்குகிறது. ஆகவே நீதியை நேசிப்போர், தப்பிப்பிழைப்பதற்கு தகுதி பெற இப்போது நடவடிக்கை எடுப்பது சாத்தியமே. இவர்கள் என்ன செய்ய வேண்டும்?6செம்மறியாடுகள் சாந்தமும் கீழ்ப்படிதலும் உள்ளவை. ஆகவே பரலோக வகுப்பாரல்லாத மற்ற செம்மறியாடுகளும் தமக்கு இருப்பதாக இயேசு சொன்னபோது, அவர்கள் பூமியில் என்றென்றும் வாழ விரும்புவதோடு தம் போதனைகளுக்கு கீழ்ப்படிகிறவர்களாயும் இருப்பார்கள் என்பதை அவர் அர்த்தப்படுத்தினார். “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது” என இயேசு சொன்னார். (யோவான் 10:16, 27) இவர்கள் உண்மையிலேயே இயேசுவுக்கு செவிகொடுத்து அவருக்கு கீழ்ப்படிந்து அவருடைய சீஷர்கள் ஆகிறார்கள்.
7இயேசுவைப் பின்பற்றும் இவர்கள் ஒவ்வொருவரும் வேறு என்ன பண்புகளையும் வளர்ப்பது அவசியம்? கடவுளுடைய வார்த்தை இவ்வாறு பதிலளிக்கிறது: “முந்தின நடக்கைக்குரிய . . . பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு . . . மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.” (எபேசியர் 4:22-24) கடவுளுடைய ஊழியர்களின் ஒற்றுமையை மேம்படுத்தும் “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” போன்ற பண்புகளை அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள்.—கலாத்தியர் 5:22, 23.
8பிரசங்க வேலையில் முன்நின்று வழிநடத்துகிற, பரலோக நம்பிக்கையுடைய சொற்ப எண்ணிக்கையானோருக்கு திரள் கூட்டத்தார் ஆதரவளிக்கிறார்கள். (மத்தேயு 24:14; 25:40) கிறிஸ்து இயேசுவும் அவருடைய தூதர்களும் இந்தக் கடைசி நாட்களின் ஆரம்பத்தில் சாத்தானையும் அவனுடைய பேய்களையும் பரலோகத்திலிருந்து பூமிக்கு தள்ளியதால் எதிர்ப்புகள் வரும் என்பதை அறிந்திருந்தும் இந்த வேறே செம்மறியாடுகள் ஆதரவளிக்கிறார்கள். “பூமியி[ல்] . . . குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்கால மாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:7-12) ஆகவே, இந்த ஒழுங்குமுறையின் முடிவு நெருங்க நெருங்க, கடவுளுடைய ஊழியர்களுக்கு சாத்தான் அதிகமதிகமான எதிர்ப்புகளை கொண்டுவருகிறான்.
9கொடூரமான எதிர்ப்பின் மத்தியிலும் பிரசங்க வேலை ஏசாயா 54:17) கடவுளுடைய வேலை முறியடிக்கப்பட முடியாதது என்பதை யூத உயர்நீதி மன்றத்தின் ஓர் உறுப்பினரும்கூட அறிந்துகொண்டார். சீஷர்களைக் குறித்து முதல் நூற்றாண்டிலிருந்த பரிசேயர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்: “இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்; தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர் செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள்.”—அப்போஸ்தலர் 5:38, 39.
தொடர்ந்து முன்னேறி வருகிறது. முதல் உலகப் போரின் முடிவில் சில ஆயிரங்களே இருந்த ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள் இப்போது லட்சங்களாக எண்ணிக்கையில் அதிகரித்திருக்கிறார்கள்; ஏனெனில் யெகோவா இவ்வாறு வாக்குறுதி அளித்திருந்தார்: “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்.” (10திரள் கூட்டத்தார் தப்பிப்பிழைப்பதற்கு அடையாளம் போடப்பட்டவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். (எசேக்கியேல் 9:4-6) அவர்கள் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, இயேசுவின் சீஷர்களாக முழுக்காட்டுதல் பெற்று, கிறிஸ்துவைப் போன்ற ஆள்தன்மையை வளர்த்துக்கொள்ள போராடுபவர்கள் என்பதற்கு அத்தாட்சியே அந்த “அடையாளம்.” அவர்கள் ‘வானத்திலிருந்து உண்டான சத்தத்திற்குக்’ கீழ்ப்படிகிறார்கள், அந்த சத்தம், சாத்தானின் பொய்மத உலகப் பேரரசைக் குறித்து இவ்வாறு சொல்கிறது: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.”—வெளிப்படுத்துதல் 18:1-5.
11“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” எனவும் இயேசு தம் சீஷர்களிடம் சொன்னார். (யோவான் 13:35) இதற்கு நேர்மாறாக, இந்த உலகின் மதங்களோ தங்கள் மதத்தவரையே போரில் கொல்கின்றன, அதுவும் அவர்கள் வேறு நாட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக! இதைப் பற்றி கடவுளுடைய வார்த்தை இவ்வாறு குறிப்பிடுகிறது: “இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. நாம் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டு[ம்]. . . . பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலை செய்த காயீனைப் போலிருக்க வேண்டாம்.”—1 யோவான் 3:10-12.
12இயேசு இவ்வாறு அறிவித்தார்: “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்க மாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்க மாட்டாது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” (மத்தேயு 7:17-20) இந்த உலகின் மதங்கள் பிறப்பிக்கும் கனிகளே, அவற்றை கெட்ட ‘மரங்களாக’ அடையாளம் காட்டுகின்றன; விரைவில் மிகுந்த உபத்திரவத்தின்போது அவை யெகோவாவால் அழிக்கப்படும்.—வெளிப்படுத்துதல் 17:16.
13திரள் கூட்டத்தார் பாதுகாக்கப்படுவதற்கு வழிநடத்துகிற அம்சங்களிடம் வெளிப்படுத்துதல் 7:9-15 கவனத்தைத் திருப்புகிறது. யெகோவாவுடைய சர்வலோக பேரரசுரிமைக்கு ஆதரவளிப்பவர்களாய் அவர்கள் ஒற்றுமையுடன் அவரது ‘சிங்காசனத்திற்கு முன்பாக நிற்பதாய்’ காட்டப்படுகின்றனர். அவர்கள் ‘தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்திருப்பது’ இயேசுவின் பாவ நிவாரண பலியை ஏற்றுக்கொள்வதைக் காட்டுகிறது. (யோவான் 1:29) அவர்கள் கடவுளுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து அதற்கு அடையாளமாக தண்ணீர் முழுக்காட்டுதல் பெற்றிருக்கிறார்கள். ஆகவே வெள்ளை அங்கிகள் சித்தரித்துக் காட்டுகிறபடி, அவர்கள் கடவுளுக்கு முன்பாக சுத்தமான நிலைநிற்கையை காத்துக்கொள்கிறார்கள், அவருக்கு ‘இரவும் பகலும் பரிசுத்த சேவையையும்’ (NW) செய்கிறார்கள். இங்கு விவரிக்கப்பட்டுள்ளவற்றிற்கு இசைவாக நீங்கள் இன்னும் முன்னேற வழி இருக்கிறதா?
இப்பொழுதே நன்மைகள்
14யெகோவாவை சேவிப்பவர்கள் இப்பொழுதே அனுபவிக்கும் ஈடிணையற்ற நன்மைகளை நீங்கள் ஒருவேளை கவனித்திருப்பீர்கள். உதாரணமாக, யெகோவாவின் நீதியுள்ள நோக்கங்களைப் பற்றி கற்றுக் கொண்டபோது ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை புரிந்துகொண்டீர்கள். ஆகவே இப்போது உங்கள் வாழ்க்கைக்கு உண்மையான நோக்கம் இருக்கிறது; அதாவது பரதீஸிய பூமியில் என்றென்றும் வாழும் மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் மெய்க் கடவுளை சேவிக்கிறீர்கள். ஆம், ராஜாவாகிய இயேசு கிறிஸ்து திரள் கூட்டத்தாரை “ஜீவத் தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்.”—வெளிப்படுத்துதல் 7:17.
15உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் ஊழியர்கள் மத்தியில் காணப்படும் அன்பும், ஐக்கியமும், ஒத்திசைவுமே திரள் கூட்டத்தார் அனுபவிக்கிற மகத்தான நன்மைகள். நம் அனைவருக்கும் ஒரே விதமான ஆவிக்குரிய உணவு அளிக்கப்படுவதால் நாம் அனைவரும் கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஒரே விதமான சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிகிறோம். அதன் காரணமாகவே நாம் அரசியல், தேசிய கொள்கைகளால் பிரிவுற்று இல்லை. கடவுள் தம் மக்களிடத்தில் எதிர்பார்க்கிற உயர்ந்த ஒழுக்க தராதரங்களையும்கூட நாம் கடைப்பிடிக்கிறோம். (1 கொரிந்தியர் 6:9-11) இவ்வாறாக, இந்த உலகில் எங்கும் காணப்படும் சண்டை சச்சரவுகள், ஒற்றுமையின்மை, ஒழுக்கக்கேடு போன்றவற்றிற்குப் பதிலாக யெகோவாவின் ஜனங்கள் ஆவிக்குரிய பரதீஸை அனுபவித்து மகிழ்கிறார்கள். ஏசாயா 65:13, 14-ல் இது விவரிக்கப்படும் விதத்தை கவனியுங்கள்.
16யெகோவாவின் மனித ஊழியர்கள் பரிபூரணர் அல்ல என்பது வெளிப்படுத்துதல் 21:4.
உண்மைதான். இந்த உலகிலுள்ள சகஜமான வாழ்க்கைப் பிரச்சினைகளை அவர்களும் சந்திக்கிறார்கள்; உதாரணத்திற்கு, பண நெருக்கடியால் கஷ்டப்படுகிறார்கள் அல்லது தேசங்களுக்கு இடையே நடக்கும் போர்களில் அப்பாவித்தனமாய் பலியாகிறார்கள். வியாதி, கஷ்டங்கள், மரணம் ஆகியவற்றையும் எதிர்ப்படுகிறார்கள். ஆனாலும், புதிய உலகில் “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை” என்பதில் அவர்கள் விசுவாசம் வைக்கிறார்கள்.—17வயோதிபம், வியாதி, விபத்து அல்லது துன்புறுத்துதல் போன்றவற்றால் இப்போது நீங்கள் உயிரிழந்தாலும் பரதீஸில் வாழ்வதற்கு யெகோவா உங்களை மீண்டும் உயிர்த்தெழுப்புவார். (அப்போஸ்தலர் 24:15) அப்போது, கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியில் நீங்கள் தொடர்ந்து ஆவிக்குரிய விருந்தை அனுபவித்து மகிழ்வீர்கள். கடவுளுடைய நோக்கங்கள் மகத்தான விதத்தில் நிறைவேறுவதை காண்கையில் கடவுள் மீது உங்கள் அன்பு அதிகரிக்கும். அப்போது யெகோவா அளிக்கும் சரீரப்பிரகாரமான ஆசீர்வாதங்கள், அவர் மீதுள்ள உங்கள் அன்பை இன்னும் அதிகப்படுத்தும். (ஏசாயா 25:6-9) கடவுளுடைய ஜனங்களுக்கு எத்தகைய அருமையான எதிர்காலம் காத்திருக்கிறது!
மறுபார்வை
• திரள் கூட்டத்தார் சம்பந்தமாக என்ன அசாதாரண சம்பவத்தை பைபிள் குறிப்பிடுகிறது?
• கடவுளுடைய ஆதரவைப் பெற்ற திரள் கூட்டத்தாரில் ஒருவராக இருக்க உண்மையிலேயே விரும்பினால் நாம் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?
• திரள் கூட்டத்தார் இப்போது அனுபவிக்கிற ஆசீர்வாதங்களும் புதிய உலகில் அனுபவிக்கப் போகிற ஆசீர்வாதங்களும் உங்களுக்கு எந்தளவு முக்கியமானவை?
[கேள்விகள்]
1. (அ) கிறிஸ்தவத்திற்கு முந்தைய காலத்திலிருந்த கடவுளுடைய ஊழியர்களோ, 1,44,000 பேரோ தங்கள் பலனை அடைவதற்கு முன்பு எதை ருசிபார்க்க வேண்டும்? (ஆ) இன்றுள்ள ‘திரள் கூட்டத்தாருக்கு’ எது சாத்தியமாயிருக்கும்?
2. வெளிப்படுத்துதல் 7:9-ல் உள்ள திரள் கூட்டத்தாரின் அடையாளம் எப்படி படிப்படியாக தெளிவானது?
3. ‘சிங்காசனத்திற்கு முன்பாக நிற்பது’ என்ற சொற்றொடர் ஏன் பரலோக வகுப்பாரை குறிப்பதில்லை?
4. (அ) திரள் கூட்டத்தார் தப்பிப்பிழைக்கிற அந்த “மிகுந்த உபத்திரவம்” எது? (ஆ) வெளிப்படுத்துதல் 7:11, 12-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, திரள் கூட்டத்தாரை கவனித்து அவர்களோடு வணக்கத்தில் பங்கு கொள்கிறவர்கள் யார்?
5. திரள் கூட்டத்தாரின் பாகமாவதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை நாம் எப்படி தீர்மானிக்கலாம்?
6. திரள் கூட்டத்தாரை செம்மறியாடுகளுக்கு ஒப்பிடுவது ஏன் பொருத்தமானது?
7. இயேசுவை பின்பற்றுவோர் என்ன பண்புகளை வளர்த்துக் கொள்வது அவசியம்?
8. மீதியானோருக்கு ஆதரவளிக்கையில் திரள்கூட்டத்தார் எதை எதிர்ப்படுவார்கள்?
9. நற்செய்தியை பிரசங்கிப்பதில் கடவுளுடைய ஊழியர்கள் எந்தளவுக்கு வெற்றி அடைகிறார்கள், ஏன்?
10. (அ) திரள் கூட்டத்தாருக்குப் போடப்படும் “அடையாளம்” எதைக் குறிக்கிறது? (ஆ) ‘வானத்திலிருந்து உண்டான சத்தத்திற்கு’ கடவுளுடைய ஊழியர்கள் எப்படி கீழ்ப்படிகிறார்கள்?
11. தாங்கள் யெகோவாவின் ஊழியர்கள் என்பதை திரள் கூட்டத்தார் என்ன முக்கியமான வழியில் மெய்ப்பித்துக் காட்டுகிறார்கள்?
12. மிகுந்த உபத்திரவத்தின்போது ஒன்றுக்கும் உதவாத கனிகளை பிறப்பிக்கிற ‘மரங்களை’ போலிருக்கும் மதங்களை யெகோவா என்ன செய்வார்?
13. திரள் கூட்டத்தார் தாங்கள் ஒற்றுமையுடன் யெகோவாவின் ‘சிங்காசனத்திற்கு முன்பாக நிற்பதை’ எப்படி மெய்ப்பித்துக் காட்டுகிறார்கள்?
14. இப்பொழுதே யெகோவாவின் ஊழியர்கள் அனுபவிக்கும் ஈடிணையற்ற சில நன்மைகள் யாவை?
15. அரசியல் மற்றும் ஒழுக்க விஷயங்களில் பைபிள் நியமங்களை கடைப்பிடிப்பதால் யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு நன்மையடைகிறார்கள்?
16. சகஜமான வாழ்க்கை பிரச்சினைகளை எதிர்ப்பட்டாலும் திரள் கூட்டத்தாருக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
17. இப்போது நமக்கு என்ன நேர்ந்தாலும், மெய்க் கடவுளை வணங்குவோருக்கு என்ன அருமையான எதிர்காலம் காத்திருக்கிறது?
[பக்கம் 123-ன் படம்]
திரள் கூட்டத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் மெய்க் கடவுளை ஒற்றுமையுடன் வணங்குகிறார்கள்