Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆளும் குழு எழுதிய கடிதம்

ஆளும் குழு எழுதிய கடிதம்

யெகோவாவை நேசிப்போரே:

“சத்தியத்தைத் தெரிந்துகொள்வீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு கூறினார். (யோவான் 8:32) இந்த வார்த்தைகள் நம் இதயத்திற்கு எவ்வளவு இதமாக இருக்கின்றன! ஆம், இந்தக் “கடைசி நாட்களில்” பொய்யும் புரட்டும் மலிந்திருந்தாலும், சத்தியத்தை உங்களால் அறிந்துகொள்ள முடியும். (2 தீமோத்தேயு 3:1) கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தை முதன்முதலில் நீங்கள் எப்போது தெரிந்துகொண்டீர்கள்? அந்த நாள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது, அல்லவா!

சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெறுவதும் அதைப் பற்றி மற்றவர்களுக்குத் தவறாமல் அறிவிப்பதும் எந்தளவு முக்கியமோ அந்தளவு அதற்கு இசைய வாழ்வதும் முக்கியம். அதற்காக நாம் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரராய் நடந்துகொள்ள வேண்டும். எப்படி? இயேசு இறப்பதற்கு முந்தின இரவன்று சொன்ன வார்த்தைகள் பதிலளிக்கின்றன. “நான் என் தகப்பனுடைய கட்டளைகளின்படி நடந்து அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போலவே, நீங்களும் என் கட்டளைகளின்படி நடந்தால் என்னுடைய அன்பில் நிலைத்திருப்பீர்கள்” என்று உண்மையுள்ள அப்போஸ்தலர்களிடம் அவர் கூறினார்.—யோவான் 15:10.

இயேசு தனது தகப்பனுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் கடவுளது அன்பில் நிலைத்திருந்தார் என்பதைக் கவனியுங்கள். இதுவே இன்று நமக்கும் பொருந்துகிறது. கடவுளது அன்பில் நிலைத்திருப்பதற்கு, அன்றாட வாழ்வில் சத்தியத்திற்கு இசைவாக நடக்க வேண்டும். அதே இரவன்று இயேசு சொன்னார்: “இதையெல்லாம் இப்போது தெரிந்துகொண்டீர்கள், ஆனால் இதன்படி நடந்தால் சந்தோஷமானவர்களாக இருப்பீர்கள்.”—யோவான் 13:17.

வாழ்க்கையில் தொடர்ந்து சத்தியத்தின்படி நடக்கவும், “கடவுளுடைய அன்புக்கு” பாத்திரராய் இருக்கவும், ‘முடிவில்லாத வாழ்வை’ பெறவும் இப்பிரசுரம் உங்களுக்கு உதவும் என்பதே எங்களுடைய இதயப்பூர்வ நம்பிக்கை.—யூதா 21.

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு