Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 13

கடவுள் வெறுக்கும் கொண்டாட்டங்கள்

கடவுள் வெறுக்கும் கொண்டாட்டங்கள்

“நம் எஜமானுக்கு எது பிரியமானது என்பதை எப்போதும் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.”—எபேசியர் 5:10.

1. எப்படிப்பட்டவர்களை யெகோவா தன்னிடம் ஈர்த்துக்கொள்கிறார், அவர்கள் ஏன் ஆன்மீக ரீதியில் விழிப்புடன் இருக்க வேண்டும்?

‘உண்மை வணக்கத்தார் பரலோகத் தகப்பனை அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்குவார்கள். . . . சொல்லப்போனால், தன்னை இப்படி வணங்க விரும்புகிறவர்களையே தகப்பன் தேடிக்கொண்டிருக்கிறார்’ என்று இயேசு சொன்னார். (யோவான் 4:23) இப்படிப்பட்டவர்களை யெகோவா கண்டுபிடிக்கும்போது, ஆம் உங்களைப் போன்றோரை கண்டுபிடிக்கும்போது, தன்னிடமும் தனது மகனிடமும் ஈர்த்துக்கொள்கிறார். (யோவான் 6:44) எப்பேர்ப்பட்ட பாக்கியம்! எனவே, சத்தியத்தை நேசிப்போர் ‘நம் எஜமானுக்கு எது பிரியமானது என்பதை எப்போதும் நிச்சயப்படுத்திக்கொள்ள’ வேண்டும். ஏனென்றால், மக்களை வஞ்சிப்பதில் சாத்தான் படுகில்லாடி.—எபேசியர் 5:10; வெளிப்படுத்துதல் 12:9.

2. உண்மை வழிபாட்டில் பொய்மத பழக்கங்களைப் புகுத்துவதை யெகோவா எப்படிக் கருதுகிறார்? விளக்கவும்.

2 இஸ்ரவேலர் சீனாய் மலையருகே இருந்தபோது என்ன நடந்தது என்பதை யோசித்துப் பாருங்கள். தங்களுக்காக ஒரு தெய்வத்தை உருவாக்கித் தரும்படி ஆரோனிடம் அவர்கள் கேட்டார்கள்; அவரும் வேறு வழியில்லாமல் அவர்கள் சொல்லைக் கேட்டு ஒரு பொன் கன்றுக்குட்டியைச் செய்து, “நாளைக்கு யெகோவாவுக்குப் பண்டிகை” என்று சொன்னார். இப்படி, அந்தச் சிலை யெகோவாவை பிரதிநிதித்துவம் செய்வதாக மறைமுகமாய்க் குறிப்பிட்டார். உண்மை வழிபாட்டுடன் பொய் வழிபாட்டை அவர்கள் கலந்தபோது யெகோவா அதைக் கண்டும்காணாமலும் இருந்துவிட்டாரா? இல்லை, அந்தச் சிலையை வணங்கிய கிட்டத்தட்ட 3,000 இஸ்ரவேலரை யெகோவா கொன்றுபோட்டார். (யாத்திராகமம் 32:1-6, 10, 28) இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? நாம் கடவுளுடைய அன்புக்கு பாத்திரமானவர்களாய் இருக்க வேண்டுமானால், ‘அசுத்தமான எதையும் தொடாதிருக்க வேண்டும்.’ உண்மை வழிபாட்டில் பொய்மத பழக்கங்களைப் புகுத்தாமலிருக்க மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.—ஏசாயா 52:11; எசேக்கியேல் 44:23; கலாத்தியர் 5:9.

3, 4. பிரபலமான சம்பிரதாயங்களையும் கொண்டாட்டங்களையும் பற்றி ஆராய்கையில் பைபிள் நியமங்களைக் கவனமாகச் சிந்தித்துப் பார்ப்பது ஏன் முக்கியம்?

3 விசுவாசதுரோகம் நுழையாதபடி கிறிஸ்தவத்திற்கு வேலியாக இருந்த அப்போஸ்தலர்களின் மறைவுக்குப் பிறகு, சத்தியத்தை நேசிக்காத போலி கிறிஸ்தவர்கள் பொய்மத சம்பிரதாயங்களையும் கொண்டாட்டங்களையும் “புனித” தினங்களையும் கிறிஸ்தவ மதத்தில் நுழைக்க ஆரம்பித்தார்கள். (2 தெசலோனிக்கேயர் 2:7, 10) இந்தக் கொண்டாட்டங்கள் கடவுளுடைய சிந்தையை அல்ல, உலக சிந்தையையே வெளிப்படுத்துகின்றன என்பதைப் பின்வரும் பாராக்களில் நீங்கள் பார்ப்பீர்கள். உலகப்பிரகாரமான கொண்டாட்டங்களில் பொதுவான சில அம்சங்கள் காணப்படுகின்றன; அவை பாவ இச்சைகளைத் தூண்டுகின்றன, பொய்மத நம்பிக்கைகளையும் ஆவியுலக பழக்கவழக்கங்களையும் ஊக்குவிக்கின்றன; இந்த அம்சங்களே ‘மகா பாபிலோனின்’ அடையாளச் சின்னங்கள். * (வெளிப்படுத்துதல் 18:2-4, 23) பிரபலமான பல கொண்டாட்டங்கள் அருவருப்பான பொய்மத பழக்கங்களிலிருந்து தோன்றியிருப்பதை யெகோவா கண்ணாரக் கண்டிருக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள். ஆகவே, அப்படிப்பட்ட கொண்டாட்டங்களை அவர் அறவே வெறுப்பதில் ஆச்சரியமேதுமில்லை. கொண்டாட்டங்களைப் பொறுத்தவரை யெகோவாவின் கண்ணோட்டத்திற்கே நாமும் முக்கியத்துவம் தர வேண்டுமல்லவா?—2 யோவான் 6, 7.

4 சில கொண்டாட்டங்களை யெகோவா வெறுக்கிறார் என்பதை உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நாம் அறிந்திருக்கிறோம். அதனால், எந்த விதத்திலும் அவற்றில் கலந்துகொள்ளாதிருக்க நாம் உறுதிபூண்டிருக்கிறோம். அந்தக் கொண்டாட்டங்களை யெகோவா ஏன் வெறுக்கிறார் என்பதை நாம் இப்போது ஆராய்வோம்; கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்கத் தடையாக இருக்கும் எதையும் தவிர்க்க அது நமக்கு உதவும்.

கிறிஸ்மஸ் எனும் போர்வையில் சூரிய வழிபாடு

5. இயேசு டிசம்பர் 25-ஆம் தேதி பிறக்கவில்லை என்று ஏன் அடித்துச் சொல்லலாம்?

5 இயேசுவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதைப் பற்றி பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. சொல்லப்போனால், அவர் பிறந்த தேதி யாருக்குமே தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்: அவர் டிசம்பர் 25-ஆம் தேதி பிறந்திருக்க முடியாது; * அந்தச் சமயத்தில் பெத்லகேமில் கடுங்குளிர் வீசியது. இயேசு பிறந்தபோது “மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி” தங்களுடைய மந்தைகளைக் காவல் காத்துக்கொண்டிருந்ததாக லூக்கா பதிவுசெய்திருக்கிறார். (லூக்கா 2:8-11) அந்த மேய்ப்பர்கள் வருடம் முழுக்க ‘வயல்வெளியில் தங்குவது’ வழக்கமாக இருந்திருந்தால், லூக்கா அதைப் பற்றி எழுதியதில் அர்த்தமே இருந்திருக்காது. ஆனால், பெத்லகேமில் குளிர்காலத்தில் பனியும் மழையும் கொட்டியதால் மந்தைகள் தொழுவத்தில் அடைக்கப்பட்டன, மேய்ப்பர்களும் ‘வயல்வெளியில் தங்கியிருக்க’ மாட்டார்கள். அதுமட்டுமல்ல, குடிமக்கள் எல்லாரும் பெயர்ப்பதிவு செய்ய வேண்டுமென ரோம அரசனாகிய அகஸ்து ஆணை பிறப்பித்திருந்ததால் யோசேப்பும் மரியாளும் பெத்லகேமுக்குச் சென்றிருந்தார்கள். (லூக்கா 2:1-7) ஏற்கெனவே ரோம ஆட்சிமீது வெறுப்பாக இருந்த மக்களை உறையவைக்கும் குளிரில் சொந்த ஊருக்குச் சென்று பெயர்ப்பதிவு செய்யும்படி அரசன் அகஸ்து கட்டளையிட்டிருக்கவே மாட்டான்.

6, 7. (அ) கிறிஸ்மஸ் பண்டிகையோடு தொடர்புடைய பழக்கவழக்கங்கள் எங்கிருந்து தோன்றின? (ஆ) கிறிஸ்மஸ் அன்பளிப்புகளுக்கும் உண்மைக் கிறிஸ்தவர்களின் அன்பளிப்புகளுக்கும் என்ன வித்தியாசம்?

6 கிறிஸ்மஸ் பண்டிகை எப்படித் தோன்றியதென பைபிளைப் புரட்டினால் விடை கிடைக்காது. ஏனென்றால், பழங்கால பொய்மத பண்டிகைகளிலிருந்து அது தோன்றியது. உதாரணத்திற்கு, சாட்டர்ன் என்ற வேளாண்மை தெய்வத்திற்காக கொண்டாடப்பட்ட ரோம சாட்டர்னேலியா பண்டிகை பிற்காலத்தில் கிறிஸ்மஸாக உருமாறியது. அதோடு, மித்ரா தெய்வத்தின் பக்தர்கள், தங்களுடைய காலக்கணக்குப்படி, “வெல்ல முடியாத சூரியனின் பிறந்த நாளை” டிசம்பர் 25-ஆம் தேதி கொண்டாடினார்கள் என்கிறது நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா. கிறிஸ்து இறந்து கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்குப் பிறகு, “குறிப்பாக ரோமில் சூரிய வழிபாடு தீவிரமாய் இருந்த காலகட்டத்தில் கிறிஸ்மஸ் தோன்றியது” என்றும் அந்தப் புத்தகம் சொல்கிறது.

உண்மைக் கிறிஸ்தவர்கள் அன்பினால் தூண்டப்பட்டு பரிசளிக்கிறார்கள்

7 பண்டிகை காலங்களில் புறமதத்தவர் பரிசுகள் பரிமாறிக் கொண்டார்கள், அறுசுவை விருந்துண்டார்கள்; இப்பழக்கங்கள் இன்றைய கிறிஸ்மஸ் பண்டிகையிலும் இடம் பெறுகின்றன. என்றாலும், எப்படிப்பட்ட மனநிலையுடன் பரிசுகள் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி 2 கொரிந்தியர் 9:7 சொல்கிறது: “ஒவ்வொருவரும் வேண்டாவெறுப்பாகவும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் இதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். ஏனென்றால், சந்தோஷமாகக் கொடுப்பவரைத்தான் கடவுள் நேசிக்கிறார்.” அக்காலத்தில் வாழ்ந்த புறமதத்தவர் பெரும்பாலும் இப்படிப்பட்ட மனநிலையோடு பரிசுகளைத் தரவில்லை; இக்காலத்திலும் கிறிஸ்மஸ் அன்பளிப்புகள் பெரும்பாலும் இந்த மனநிலையோடு கொடுக்கப்படுவதில்லை. ஆனால், உண்மைக் கிறிஸ்தவர்கள் அன்பினால் தூண்டப்பட்டு அன்பளிப்பு தருகிறார்கள், அதற்காக ஒரு விசேஷ நாளை எதிர்பார்த்துக் காத்திருப்பதில்லை; அதோடு, அவர்கள் கைமாறு கருதியும் பரிசளிப்பதில்லை. (லூக்கா 14:12-14; அப்போஸ்தலர் 20:35-ஐ வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, அநேகர் கிறிஸ்மஸ் காலத்தில் பரபரப்பாய் இயங்குவதால் டென்ஷனில் அவதிப்படுகிறார்கள்; இன்னும் பலர் கடனை உடனை வாங்கி கொண்டாடிவிட்டு கடைசியில் தவியாய் தவிக்கிறார்கள். ஆனால், உண்மைக் கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட தொல்லைகளிலிருந்து விடுதலை பெற்றிருப்பதால் நிம்மதியாய் இருக்கிறார்கள்.—மத்தேயு 11:28-30; யோவான் 8:32.

8. சோதிடர்கள் இயேசுவுக்குப் பிறந்தநாள் பரிசுகள் கொடுத்தார்களா? விளக்கவும்.

8 ஆனால், ‘இயேசுவைப் பார்க்க வந்த சோதிடர்கள் அவருக்குப் பிறந்தநாள் பரிசுகளைக் கொடுத்தார்கள் அல்லவா?’ என்று சிலர் கேள்வி கேட்கலாம். இல்லை என்பதே பதில். ஏனென்றால், முக்கியத்துவம் வாய்ந்த நபரான இயேசுவுக்கு மரியாதை காட்டவே அவர்கள் அன்பளிப்பு கொடுத்தார்கள்; இது பைபிள் காலங்களிலிருந்த ஒரு வழக்கம். (1 ராஜாக்கள் 10:1, 2, 10, 13; மத்தேயு 2:2, 11) இயேசு பிறந்த தினமே அவர்கள் அவரைப் பார்க்கச் செல்லவில்லை. சொல்லப்போனால், அவர்கள் இயேசுவைப் பார்த்தபோது, அவர் பச்சிளம் குழந்தையாகத் தீவனத் தொட்டியில் இருக்கவில்லை, சிறு பிள்ளையாக ஒரு வீட்டில்தான் வசித்து வந்தார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்—பைபிளின் கருத்து

9. பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது என்ன நிகழ்ந்தன?

9 ஒரு பிள்ளையின் பிறப்பு மிகுந்த மகிழ்ச்சிக்குரிய தருணமாய் இருந்தாலும், கடவுளுடைய ஊழியர்களில் ஒருவர்கூட பிறந்தநாளைக் கொண்டாடியதாக பைபிள் குறிப்பிடுவதில்லை. (சங்கீதம் 127:4) அவர்களுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஒருவேளை பைபிள் எழுத்தாளர்கள் பதிவுசெய்யாமல் விட்டுவிட்டார்களா? இல்லை, இரண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் பற்றி பைபிளில் பதிவாகியுள்ளது; ஒன்று, எகிப்து தேசத்து பார்வோனின் பிறந்தநாள், மற்றொன்று ஏரோது அந்திப்பாவின் பிறந்தநாள். (ஆதியாகமம் 40:20-22-ஐயும் மாற்கு 6:21-29-ஐயும் வாசியுங்கள்.) என்றாலும், இந்த இரு சந்தர்ப்பங்களிலும் கொடூரமான சம்பவங்கள் நிகழ்ந்ததாக பைபிள் குறிப்பிடுகிறது; முக்கியமாக, ஏரோது அந்திப்பாவின் பிறந்தநாள் விழாவின்போது யோவான் ஸ்நானகருடைய தலை துண்டிக்கப்பட்டதாக அது குறிப்பிடுகிறது.

10, 11. பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எப்படிக் கருதினார்கள், ஏன்?

10 “யாருடைய பிறந்தநாளாக இருந்தாலும் சரி, அதைக் கொண்டாடுவதை ஆரம்பகால கிறிஸ்தவர்கள் புறமதப் பழக்கமாகவே கருதினார்கள்” என்று த உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா தெரிவிக்கிறது. உதாரணமாக, ஒவ்வொரு மனிதனுக்கும் காவல்காக்கும் ஓர் ஆவி இருக்கிறது என்றும் பிறப்புமுதல் இறப்புவரை அந்த ஆவி அவனைப் பாதுகாக்கும் என்றும் பூர்வ கிரேக்கர் நம்பினார்கள். “எந்தத் தெய்வத்தின் பிறந்த நாளன்று ஒரு நபர் பிறக்கிறாரோ அந்தத் தெய்வத்தோடு இந்த ஆவிக்கு ஒரு மர்மத்தொடர்பு இருந்தது” என்று பிறந்தநாள் பிறந்த கதை என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. அதுமட்டுமல்ல, வெகு காலமாகவே பிறந்த நாட்களுக்கு சோதிடத்தோடும் ஜாதகத்தோடும் நெருங்கிய தொடர்பு இருந்துவந்திருக்கிறது.

11 பிறந்தநாள் கொண்டாட்டம் பொய் மதத்திலிருந்தும் ஆவியுலகத் தொடர்பிலிருந்தும் ஆரம்பமானது என்பதால் மட்டுமே கடவுளுடைய ஊழியர்கள் அதை நிராகரிக்கவில்லை, பிறப்பையும் உயிரையும் பற்றிய தங்கள் கண்ணோட்டத்தின் காரணமாகவும் அதை நிராகரித்தார்கள். ஏன் அப்படிச் சொல்கிறோம்? மனத்தாழ்மையுள்ள அந்த ஆண்களும் பெண்களும் தங்கள் பிறப்பை, கொண்டாட வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதவில்லை. * (மீகா 6:8; லூக்கா 9:48) என்றாலும், உயிர் எனும் அற்புதப் பரிசைத் தந்ததற்காக யெகோவாவுக்கு நன்றி சொன்னார்கள், அவரையே புகழ்ந்தார்கள். *சங்கீதம் 8:3, 4; 36:9; வெளிப்படுத்துதல் 4:11.

12. எந்த வகையில் நம் பிறந்த நாளைவிட இறந்த நாள் சிறந்தது?

12 கடவுளுக்கு உத்தமமாய் வாழ்பவர்கள் இறந்தாலும் அவருடைய ஞாபகத்தில் இருப்பார்கள்; அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு முழு உத்தரவாதம் உள்ளது. (யோபு 14:14, 15) “விலைமதிப்புள்ள எண்ணெயைவிட நல்ல பெயர் சிறந்தது. ஒருவருடைய பிறந்த நாளைவிட இறந்த நாள் நல்லது” என்று பிரசங்கி 7:1 சொல்கிறது. இங்கே “நல்ல பெயர்” என்பது கடவுளுக்கு உண்மையாய் சேவை செய்வதால் அவரிடம் நாம் பெற்றிருக்கும் நல்ல பெயரைக் குறிக்கிறது. ஆர்வத்துக்குரிய விஷயம் என்னவென்றால், கிறிஸ்தவர்கள் அனுசரிக்க வேண்டிய ஒரே நிகழ்ச்சி பிறப்போடு அல்ல, இறப்போடு சம்பந்தப்பட்டிருக்கிறது; ஆம், இயேசுவின் இறப்போடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அவர் பெற்ற சிறப்பான “பெயர்” நம் மீட்புக்கு அத்தியாவசியம்.—எபிரெயர் 1:3, 4; லூக்கா 22:17-20.

ஈஸ்டர்—கிறிஸ்துவின் பெயரில் கருவள வழிபாடு

13, 14. பிரபலமான ஈஸ்டர் பண்டிகை எங்கிருந்து ஆரம்பமானது?

13 ஈஸ்டர் பண்டிகை, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் பண்டிகை எனப் பிரபலமாய் அறியப்பட்டிருந்தாலும் உண்மையில் பொய் மதத்திலிருந்து தோன்றியது. ஆங்கிலோ-சாக்ஸன் மக்கள் வழிபட்ட ஈயோஸ்டர் என்ற தேவதையின் (விடியல் மற்றும் வசந்தத்தின் தேவதை) பெயரிலிருந்துதான் ஈஸ்டர் என்ற பெயர் வந்துள்ளது. முட்டைகளையும் முயல்களையும் வைத்து ஈஸ்டர் பண்டிகையை மக்கள் கொண்டாடக் காரணமென்ன? “புது வாழ்வுக்கும் உயிர்த்தெழுதலுக்கும் முக்கியச் சின்னமாக” முட்டைகள் விளங்குகின்றன என்று என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது; நீண்ட காலமாகவே கருவளத்தின் சின்னமாக முயல் இருந்துவருகிறது. சொல்லப்போனால், ஈஸ்டர் என்பது ஒரு கருவளச் சடங்கு; அதுதான் இயேசுவின் உயிர்த்தெழுதல் பண்டிகை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. *

14 ஓர் அருவருப்பான கருவளச் சடங்கை இயேசுவின் உயிர்த்தெழுதல் என்ற பெயரில் அனுசரித்தால் அதை யெகோவா ஏற்றுக்கொள்வாரா? ஏற்றுக்கொள்ளவே மாட்டார்! (2 கொரிந்தியர் 6:17, 18) சொல்லப்போனால், இயேசுவின் உயிர்த்தெழுதலை அனுசரிக்கும்படி பைபிள் கட்டளையிடவுமில்லை, அப்படி அனுசரிப்பதை அங்கீகரிப்பதுமில்லை. அதுவும், ஈஸ்டர் என்ற பெயரில் அதை அனுசரிப்பதை பைபிள் துளியும் அங்கீகரிப்பதில்லை.

புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தின் ஆரம்பம்

15. புத்தாண்டு தின கொண்டாட்டம் எங்கிருந்து ஆரம்பமானது?

15 மிகப் பிரபலமான மற்றொரு கொண்டாட்டம் புத்தாண்டு தினம். இது எங்கிருந்து ஆரம்பமானது? த உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “கி.மு. 46-ல் ரோம அரசர் ஜூலியஸ் சீஸர் ஜனவரி 1-ஆம் தேதியை புதுவருடப் பிறப்பாக அறிவித்தார். வாயில்கள், கதவுகள் மற்றும் தொடக்கத்தின் தெய்வமான ஜானெஸுக்கு ரோமர்கள் இந்த நாளை அர்ப்பணம் செய்தார்கள். ஜானெஸ் என்ற பெயரின் அடிப்படையில்தான் ஜனவரி என்ற மாதத்தின் பெயர் வந்தது. ஜானெஸ் தெய்வத்திற்கு, முன்னும் பின்னும் பார்த்தபடி இரண்டு முகங்கள் இருந்தன.” புத்தாண்டு தினமும் சரி அதோடு சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்களும் சரி, நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. அநேக இடங்களில், புத்தாண்டு தினத்தில் குடிப்பதும் கும்மாளம் போடுவதும் சகஜமாக இருக்கிறது. ஆனால், “குடித்துக் கும்மாளம் போடுதல், குடிவெறி, பாலியல் முறைகேடு, வெட்கங்கெட்ட நடத்தை, சண்டை சச்சரவு, பொறாமை ஆகியவற்றைத் தவிர்த்து, பகலில் நடக்கிறவர்களைப் போல் கண்ணியமாக நடக்க வேண்டும்” என்று ரோமர் 13:13 அறிவுரை கூறுகிறது. *

திருமண வைபவத்தில் தூய்மை காத்திடுங்கள்

16, 17. (அ) திருமணத்திற்காக திட்டமிடும் நபர்கள் தங்கள் நாட்டின் சம்பிரதாயங்களை ஏன் பைபிள் நியமங்களின் அடிப்படையில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்? (ஆ) அரிசி, காகிதத் துண்டுகள் போன்றவற்றைத் தூவும் சம்பிரதாயங்களைப் பொறுத்ததில், கிறிஸ்தவர்கள் எதைக் கருத்தில்கொள்ள வேண்டும்?

16 விரைவில், ‘மணமகனின் சத்தமும் மணமகளின் சத்தமும் இனி ஒருபோதும் [மகா பாபிலோனில்] கேட்காது.’ (வெளிப்படுத்துதல் 18:23) ஏன்? பொய்மத பேரரசாகிய மகா பாபிலோனில் ஆவியுலகத்தோடு தொடர்புடைய பழக்கவழக்கங்கள் இருப்பதே அதற்கு ஒரு காரணம். இப்படிப்பட்ட பழக்கங்களை ஒருவர் தனது திருமண வைபவத்தில் பின்பற்றினால் அன்றே அவருடைய மணவாழ்க்கை கடவுளுடைய பார்வையில் அசுத்தமாகிவிடும்.—மாற்கு 10:6-9.

17 சம்பிரதாயங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. சில சம்பிரதாயங்களில் எந்தத் தவறும் இல்லாததுபோல் தோன்றினாலும் அவை பாபிலோனிய பழக்கங்களிலிருந்து வந்திருக்கலாம். அவற்றைக் கடைப்பிடித்தால் மணமக்களுக்கு அல்லது விருந்தினருக்கு ‘அதிர்ஷ்டம்’ கிடைக்கும் என்று மக்கள் நம்பலாம். (ஏசாயா 65:11) அப்படிப்பட்ட சம்பிரதாயங்களில் ஒன்று, மணமக்கள்மீது அரிசி, வண்ணவண்ண காகிதத் துண்டுகள் போன்றவற்றைத் தூவுவது. உணவுப்பொருள் கெட்ட ஆவிகளைச் சாந்தப்படுத்தி மணமக்களுக்குத் தீங்கு செய்யாமல் காப்பாற்றும் என்ற நம்பிக்கையிலிருந்து இந்தப் பழக்கம் தோன்றியிருக்கலாம். அதுமட்டுமல்ல, கருவளம், சந்தோஷம், நீண்ட ஆயுள் ஆகியவற்றுக்கும் அரிசிக்கும் வெகுகாலமாகவே மர்மத்தொடர்பு இருந்திருக்கிறது. எனவே, கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க விரும்புகிறவர்கள் கறைபடிந்த இத்தகைய சம்பிரதாயங்களிலிருந்து விலகியிருக்க வேண்டும்.2 கொரிந்தியர் 6:14-18-ஐ வாசியுங்கள்.

18. திருமணத்துக்காகத் திட்டமிடுகிறவர்களும் அதற்கு அழைக்கப்படுகிறவர்களும் எந்த பைபிள் நியமங்களைப் பின்பற்ற வேண்டும்?

18 அதோடு, யெகோவாவின் ஊழியர்கள் தங்கள் திருமணங்களிலும் வரவேற்புகளிலும் உலகப்பிரகாரமான பழக்கவழக்கங்களையும் தவிர்க்கிறார்கள்; இவை கிறிஸ்தவ கண்ணியத்தைக் கெடுத்துப் போடலாம் அல்லது சிலருடைய மனசாட்சியைப் புண்படுத்தலாம். உதாரணமாக, திருமண நிகழ்ச்சியில் சொற்பொழிவு ஆற்றும்போது மற்றவர்களைப் புண்படுத்துகிற கேலிப் பேச்சுகளை அல்லது இரட்டை அர்த்தமுள்ள ஆபாசப் பேச்சுகளை அவர்கள் தவிர்க்கிறார்கள்; புதுமணத் தம்பதிகளையும் மற்றவர்களையும் நையாண்டி செய்து அவர்களைச் சங்கடப்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள். (நீதிமொழிகள் 26:18, 19; லூக்கா 6:31; 10:27) வரவேற்பு நிகழ்ச்சிகளை டாம்பீகமாக நடத்துவதைத் தவிர்க்கிறார்கள்; இப்படிப்பட்ட டாம்பீக நிகழ்ச்சிகள் எளிமையை அல்ல, ‘பகட்டையே’ வெளிக்காட்டுகின்றன. (1 யோவான் 2:16) நீங்கள் திருமணத்துக்காக திட்டமிட்டால், உங்கள் மணநாளை மனவருத்தத்தோடு அல்ல, மனமகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்க வேண்டுமென யெகோவா விரும்புகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். *

‘சியர்ஸ்’ சொல்லி மது அருந்துவது மதப் பழக்கமா?

19, 20. ‘சியர்ஸ்’ சொல்லும் பழக்கத்தின் ஆரம்பத்தைப் பற்றி ஓர் ஆங்கில நூல் என்ன சொல்கிறது, இந்தப் பழக்கத்தைக் கிறிஸ்தவர்கள் ஏன் தவிர்க்க வேண்டும்?

19 திருமணங்களிலும் பார்ட்டிகளிலும் காணப்படும் மற்றொரு பொதுவான பழக்கம் ‘சியர்ஸ்’ சொல்லி குடிப்பது. 1995-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மதுபானம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான சர்வதேச கையேடு என்ற ஆங்கில நூல் பின்வருமாறு கூறுகிறது: “பூர்வ காலங்களில், ‘பல்லாண்டு வாழ்க’ அல்லது ‘நலமுடன் வாழ்க’ என்று சொல்லி மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் பழக்கம் இருந்தது. அந்தப் பிரார்த்தனைக்குப் பலன் கிடைக்கும்போது தெய்வங்களுக்குக் காணிக்கையாய் ஏதோவொரு புனித திரவம் படைக்கப்பட்டது. . . . இதிலிருந்தே ‘சியர்ஸ்’ சொல்லி மது அருந்தும் பழக்கம் தோன்றியிருக்கலாம்.”

20 உண்மைதான், ‘சியர்ஸ்’ சொல்வதை அநேகர் மதப் பழக்கமாகவோ மூடநம்பிக்கையாகவோ கருதாமல் இருக்கலாம். என்றாலும், இன்றும் மது கிண்ணத்தை மேல்நோக்கி உயர்த்தும் பழக்கம் ஓர் அமானுஷ்ய சக்தியிடம் ஆசீர்வாதம் கேட்டு வேண்டிக்கொள்வதாக கருதப்படுகிறது. இப்படிச் செய்வது கடவுளுடைய வார்த்தைக்கு முரணானது.—யோவான் 14:6; 16:23. *

“யெகோவாவை நேசிக்கிறவர்களே, கெட்ட காரியங்களை வெறுத்துவிடுங்கள்”

21. மதச் சார்பற்ற பிரபலமான கொண்டாட்டங்கள் யாவை, அவற்றைக் கிறிஸ்தவர்கள் ஏன் தவிர்க்கிறார்கள்?

21 சில நாடுகள் வருடந்தோறும் ‘கார்னிவல்’ கொண்டாட்டங்களை, அதாவது கேளிக்கை கொண்டாட்டங்களை, நடத்துகின்றன; ஆபாச நடனங்கள் இவற்றின் சிறப்பம்சமாக இருக்கின்றன, ஓரினச்சேர்க்கை வாழ்க்கை பாணியையும் இவை முன்னேற்றுவிக்கின்றன. இன்றைய உலகின் ஒழுக்கநெறிகள் சீரழிந்து வருவதை இவை எடுத்துக்காட்டுகின்றன; இப்படிப்பட்ட போக்கை மகா பாபிலோன் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கிறது. யெகோவாவை நேசிக்கிறவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதோ அதைப் பார்த்து ரசிப்பதோ சரியா? அப்படிச் செய்தால், கெட்ட காரியங்களை அவர் உண்மையாகவே வெறுக்கிறார் என்று சொல்ல முடியுமா? (சங்கீதம் 1:1, 2; 97:10) “வீணான காரியங்களைப் பார்க்காதபடி என் கண்களைத் திருப்புங்கள்” என்று சங்கீதக்காரன் பிரார்த்தனை செய்தார்; அவருடைய மனநிலை நமக்கும் இருப்பது எவ்வளவு நல்லது!—சங்கீதம் 119:37.

22. ஒரு கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதா வேண்டாமா என்பதைப் பொறுத்ததில் எப்போது ஒரு கிறிஸ்தவர் தனது மனசாட்சியின்படி தீர்மானிக்க வேண்டும்?

22 பண்டிகைகளை மக்கள் கொண்டாடும் சமயத்தில், ஒரு கிறிஸ்தவர் மிக கவனமாய் இருக்க வேண்டும்; அவர் அதைக் கொண்டாடுகிறார் என்ற அபிப்பிராயத்தை மற்றவர்களுக்குக் கொடுத்துவிடக்கூடாது. “நீங்கள் சாப்பிட்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்” என்று பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 10:31; பக்கங்கள் 180-181-ல், “ ஞானமான தீர்மானங்கள் எடுக்க...” என்ற பெட்டியைக் காண்க.) மறுபட்சத்தில், ஒரு சம்பிரதாயமோ கொண்டாட்டமோ பொய் மதத்தோடு தொடர்பற்றதாக, அரசியல் சார்பற்றதாக, தேசப்பற்றுடன் சம்பந்தப்படாததாக இருந்தால், அதேசமயம் பைபிள் நியமங்களை மீறவில்லை என்றால், அதில் கலந்துகொள்வதா வேண்டாமா என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவரும் சொந்தமாகத் தீர்மானிக்க வேண்டும். அதோடு, மற்றவர்களுடைய விசுவாசத்திற்கு அவர் தடைக்கல்லாக இல்லாதபடி அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

சொல்லிலும் செயலிலும் கடவுளுக்குப் புகழ் சேருங்கள்

23, 24. யெகோவாவின் நீதியான நெறிமுறைகளைக் குறித்து நாம் எப்படிச் சாட்சி அளிக்கலாம்?

23 குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் கூடிக்குலவும் வாய்ப்பு பண்டிகை நாட்களில்தானே கிடைக்கிறது என்று பலர் நினைக்கிறார்கள். எனவே, யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் பைபிளுக்கு முரணான பண்டிகைகளிலோ சம்பிரதாயங்களிலோ கலந்துகொள்ள மறுக்கும்போது சிலர் நம்மை அன்பில்லாதவர்கள் அல்லது மதவெறியர்கள் எனத் தவறாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால், குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் சேர்ந்து நேரம் செலவிடுவதை நாம் முக்கியமாய் கருதுகிறோம் என அவர்களிடம் கனிவோடு விளக்கலாம். (நீதிமொழிகள் 11:25; பிரசங்கி 3:12, 13; 2 கொரிந்தியர் 9:7) நம் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரியவர்களோடு எப்போது வேண்டுமானாலும் ஒன்றுகூடி வருவதில் நமக்கு சந்தோஷம்தான்; ஆனால், கடவுளையும் அவருடைய நீதியான நெறிகளையும் நாம் நேசிப்பதால் அவருக்குப் பிடிக்காத பழக்கவழக்கங்களில் ஈடுபட்டு அப்படிப்பட்ட மகிழ்ச்சியான தருணங்களில் அவருடைய பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திவிடக் கூடாது என்று நினைக்கிறோம்.—“ பெருமகிழ்ச்சி தரும் உண்மை வழிபாடு” என்ற பெட்டியைப் பக்கம் 178-ல் காண்க.

24 நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி உண்மையிலேயே தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் கேள்வி கேட்கும் ஆட்களுக்கு, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? * புத்தகத்தில் அதிகாரம் 16-ல் உள்ள குறிப்புகளை சிலர் காட்டியிருக்கிறார்கள்; அதனால் நல்ல பலன்களையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் ஓர் எச்சரிக்கை: நம் லட்சியம் வாதங்களில் ஜெயிப்பது அல்ல, நபர்களின் இதயத்தை கவருவதே. எனவே, கண்ணியமாகவும் சாந்தமாகவும் நாம் நடக்க வேண்டும்; அதோடு நம் பேச்சு ‘எப்போதும் கனிவாகவும் சுவையாகவும்’ இருக்க வேண்டும்.—கொலோசெயர் 4:6.

25, 26. யெகோவாமீது விசுவாசம் வைக்கவும் அன்பு காட்டவும் பிள்ளைகளுக்குப் பெற்றோர் எப்படி உதவலாம்?

25 யெகோவாவின் ஊழியர்களாகிய நாம் விஷயம் தெரிந்தவர்கள். சில காரியங்களை நாம் ஏன் நம்புகிறோம், ஏன் கடைப்பிடிக்கிறோம், ஏன் தவிர்க்கிறோம் என்பதையெல்லாம் நன்றாகவே அறிந்திருக்கிறோம். (எபிரெயர் 5:14) எனவே, பெற்றோர்களே, பைபிள் நியமங்களின் அடிப்படையில் சிந்தித்துச் செயல்பட உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். அப்படிச் செய்யும்போது, அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவீர்கள்; அதோடு, நம் நம்பிக்கைகளைக் குறித்து கேள்வி கேட்பவர்களுக்கு பைபிளிலிருந்து பதிலளிக்க அவர்களுக்கு உதவுவீர்கள்; யெகோவாவின் அன்பை அவர்களுக்கு உறுதிப்படுத்துவீர்கள்.—ஏசாயா 48:17, 18; 1 பேதுரு 3:15.

26 கடவுளை “அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும்” வணங்குகிறவர்கள் பைபிளுக்கு முரணான கொண்டாட்டங்களைத் தவிர்ப்பதோடு வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நேர்மையாய் இருக்கிறார்கள். (யோவான் 4:23) நடைமுறை வாழ்க்கைக்கு நேர்மை ஒத்துவராது என இன்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், கடவுளுடைய வழிகளே எப்போதும் சிறந்தவை என்பதை நாம் அடுத்த அதிகாரத்தில் பார்ப்போம்.

^ பாரா. 3 பக்கங்கள் 170-171-ல், “இந்தக் கொண்டாட்டத்தில் நான் கலந்துகொள்ளலாமா?” என்ற பெட்டியைக் காண்க. யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸில் “புனித” தினங்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றின் பட்டியல் உள்ளன.

^ பாரா. 5 பைபிளின் கால அட்டவணையையும் உலக சரித்திரத்தையும் வைத்துப் பார்த்தால் இயேசு கி.மு. 2-ஆம் ஆண்டில் ஏத்தானீம் என்ற யூத மாதத்தில் பிறந்திருக்க வேண்டுமென தெரிகிறது. நம்முடைய நாட்காட்டியில் ஏத்தானீம் மாதம் செப்டம்பர்/அக்டோபர் மாதத்திற்கு ஒத்திருக்கிறது.—வேதாகமங்களின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) தொகுதி 2-ல், 56-57 பக்கங்களையும் பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் 221-222 பக்கங்களையும் காண்க. இவை யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.

^ பாரா. 11பிறந்தநாளும் சாத்தான்-வழிபாடும்” என்ற பெட்டியைப் பக்கம் 172-ல் காண்க.

^ பாரா. 11 பிரசவத்திற்குப்பின் ஒரு பெண் பாவப் பரிகார பலியைக் கடவுளுக்குச் செலுத்த வேண்டுமென திருச்சட்டம் குறிப்பிட்டது. (லேவியராகமம் 12:1-8) இது, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குப் பாவத்தைக் கடத்துகிறார்கள் என்ற கசப்பான உண்மையை இஸ்ரவேலருக்கு நினைவுபடுத்தியது; அதோடு, பிள்ளையின் பிறப்பைப் பற்றி சமநிலையான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கவும் புறமதத்தவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் பின்பற்றாமல் இருக்கவும் இது உதவியிருக்கலாம்.—சங்கீதம் 51:5.

^ பாரா. 13 யோஸ்டர் (அல்லது ஈஸ்டர்) கருவள தெய்வமாகவும் நம்பப்பட்டது. தி டிக் ஷனரி ஆஃப் மித்தாலஜி இவ்வாறு சொல்கிறது: “இந்த தெய்வத்திற்கு நிலாவில் சொந்தமாக ஒரு முயல் இருந்தது; அந்த முயலுக்கு முட்டை ரொம்ப பிடிக்கும். இந்தத் தெய்வத்திற்கு முயல் தலை இருப்பதுபோல் சில சமயம் சித்தரிக்கப்படுகிறது.”

^ பாரா. 15 காவற்கோபுரம் டிசம்பர் 15, 2005 இதழில், பக்கம் 7-ல் “புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தின் ஆரம்பம்” என்ற பெட்டியையும், விழித்தெழு! பிப்ரவரி 8, 2002 இதழில், பக்கங்கள் 20-21-ல் “பைபிளின் கருத்து—கிறிஸ்தவர்கள் புதுவருட கொண்டாட்டங்களில் பங்குகொள்ளலாமா?” என்ற கட்டுரையையும் காண்க.

^ பாரா. 18 திருமணங்கள் மற்றும் பார்ட்டிகளைப் பற்றிய மூன்று கட்டுரைகளை காவற்கோபுரம் அக்டோபர் 15, 2006 இதழில் பக்கங்கள் 18-31-ல் காண்க.

^ பாரா. 24 யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 99 எளிமையாய் விளக்குவதற்காகவே பெண்பால் பயன்படுத்தப்பட்டுள்ளது; என்றாலும், இதிலுள்ள நியமங்கள் ஆண்களுக்கும் பொருந்தும்.