Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 15

கடின உழைப்பால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவியுங்கள்

கடின உழைப்பால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவியுங்கள்

“[மனுஷர்கள்] கடின உழைப்பால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும்.”—பிரசங்கி 3:13.

1-3. (அ) அநேகர் தங்கள் வேலையை எப்படிக் கருதுகிறார்கள்? (ஆ) வேலை பற்றிய பைபிளின் கருத்து என்ன, இந்த அதிகாரத்தில் நாம் என்னென்ன கேள்விகளுக்குப் பதில் காண்போம்?

இன்று உலகிலுள்ள அநேகருக்கு வேலை என்பது வரமாக இல்லை, சாபமாக இருக்கிறது. மனதுக்குப் பிடிக்காத வேலையை நாளெல்லாம் செய்ய வேண்டியிருப்பதை நினைத்து அநேகர் நொந்துகொள்கிறார்கள்; அதனால், வேலைக்குப் போவதென்றாலே அவர்களுக்குக் கசக்கிறது. இப்படிப்பட்டவர்கள் எப்படித் தங்கள் வேலையில் ஈடுபாட்டை வளர்த்துக்கொள்ள முடியும்? அதோடு, எப்படித் திருப்தியும் காண முடியும்?

2 கடின உழைப்பைப் பற்றி சரியான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ளும்படி பைபிள் ஊக்குவிக்கிறது. வேலையும் அதனால் வரும் பலன்களும் கடவுள் தந்த வரம் என்று அது சொல்கிறது. “[மனுஷர்கள்] சாப்பிட்டு, குடித்து, தங்கள் கடின உழைப்பால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும். . . . இது கடவுள் தரும் பரிசு” என்று சாலொமோன் எழுதினார். (பிரசங்கி 3:13) யெகோவா நம்மை நேசிப்பதாலும், நமக்கு எது சிறந்தது என நன்றாகவே அறிந்திருப்பதாலும், வேலையில் நாம் திருப்தி காண வேண்டுமென விரும்புகிறார்; அதோடு, உழைப்பின் பலன்களை நாம் அனுபவிக்க வேண்டுமெனவும் அவர் விரும்புகிறார். நாம் அவருடைய அன்பில் நிலைத்திருக்க வேண்டுமானால், வேலையைப் பற்றிய அவருடைய கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும், அது சம்பந்தமாக அவர் தரும் நியமங்களைப் பின்பற்ற வேண்டும்.பிரசங்கி 2:24; 5:18-ஐ வாசியுங்கள்.

3 வேலையில் நாம் எப்படி சந்தோஷம் அனுபவிக்கலாம்? உண்மைக் கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்ட வேலைகளைச் செய்யக்கூடாது? வேலையையும் ஆன்மீக காரியங்களையும் நாம் எப்படிச் சமநிலையாக வைத்திருக்கலாம்? நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை என்ன? இந்த நான்கு கேள்விகளுக்கும் இந்த அதிகாரத்தில் பதில் காண்போம். அதற்கு முன்பு, இந்தப் பிரபஞ்சத்திலேயே தலைசிறந்த உழைப்பாளர்களான யெகோவா தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவின் உதாரணங்களைச் சிந்திப்போம்.

தலைசிறந்த உழைப்பாளரும் கைதேர்ந்த பணியாளரும்

4, 5. யெகோவா ஆக்கபூர்வமாக வேலை செய்கிறார் என பைபிள் எப்படிக் காட்டுகிறது?

4 யெகோவாவே தலைசிறந்த உழைப்பாளர். “ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்” என்று ஆதியாகமம் 1:1 சொல்கிறது. கடவுள் இந்தப் பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த பிறகு, அதைப் பார்த்து ‘மிகவும் நன்றாக இருக்கிறது’ என்று சொன்னார். (ஆதியாகமம் 1:31) வேறு வார்த்தைகளில் சொன்னால், பூமியில் தான் செய்த வேலைகளைப் பார்த்து அவர் பூரண திருப்தி அடைந்தார். ‘சந்தோஷமுள்ள கடவுளாகிய’ யெகோவா ஆக்கபூர்வமாக வேலை செய்ததால் பேரானந்தம் அடைந்தார் என்பதில் சந்தேகமில்லை.—1 தீமோத்தேயு 1:11.

5 நம் கடவுள் சுறுசுறுப்பானவர், அதனால் வேலை செய்வதை அவர் ஒருபோதும் நிறுத்துவதில்லை. பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் யெகோவா படைத்து பல காலங்கள் உருண்டோடிய பின்பு, “என் தகப்பன் இதுவரை வேலை செய்துவந்திருக்கிறார்” என்று இயேசு சொன்னார். (யோவான் 5:17) தகப்பன் என்ன வேலை செய்துவந்திருக்கிறார்? மனிதர்களை வழிநடத்துவதிலும் பராமரிப்பதிலும் பரலோகத்திலிருந்து சுறுசுறுப்பாய் செயல்பட்டுவந்திருக்கிறார். ‘புதிய படைப்பை,’ அதாவது அவருடைய சக்தியால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்களை, அவர் உண்டாக்கியிருக்கிறார்; இயேசுவுடன் சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்வதற்காக அவர்களை உண்டாக்கியிருக்கிறார். (2 கொரிந்தியர் 5:17) தன்னை நேசிக்கும் மனிதர்களுக்காக தான் வைத்திருக்கும் நோக்கத்தை நிறைவேற்ற அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்—புதிய உலகில் அவர்கள் என்றென்றும் வாழ வேண்டும் என்பதே அந்த நோக்கம். (ரோமர் 6:23) தன்னுடைய வேலையின் பலன்களைக் கண்டு அவர் நிச்சயம் சந்தோஷப்படுகிறார். கடவுளால் ஈர்க்கப்பட்டிருப்பதன் காரணமாக, லட்சக்கணக்கானோர் ராஜ்ய செய்தியை ஏற்று, அவருடைய அன்பில் நிலைத்திருக்கத் தேவையான மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.—யோவான் 6:44.

6, 7. வெகு காலமாகவே இயேசு எப்படி ஒரு கடின உழைப்பாளியாக இருந்திருக்கிறார்?

6 கடின உழைப்பாளி என்ற நற்பெயர் இயேசுவுக்கு வெகு காலமாகவே இருக்கிறது. அவர் மனிதனாக பூமிக்கு வருவதற்கு முன்பு, ‘பரலோகத்தில் இருப்பவற்றையும் பூமியில் இருப்பவற்றையும்’ கடவுள் படைக்கையில் அவருடன் “கைதேர்ந்த கலைஞனாக” இருந்தார். (கொலோசெயர் 1:15-17; நீதிமொழிகள் 8:22-31) பூமியிலும்கூட அவர் கடினமாக உழைத்து வந்தார். இளம் வயதிலேயே கட்டடத் தொழிலைக் கற்றுக்கொண்டார்; “தச்சன்” என்றும் அழைக்கப்பட்டார். * (மாற்கு 6:3) தச்சு வேலைக்குத் தேவையான சாமான்கள் விற்கும் கடைகளோ, மின்சாரக் கருவிகளோ, மரம் அறுக்கும் தொழிற்சாலைகளோ இல்லாத அந்தக் காலத்தில் அவ்வேலை செய்வதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது; பல்வேறு திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. நல்ல மரத்தை இயேசு தேடிச் செல்வதையும் பின்பு அதை வெட்டி, வேலை செய்யும் இடத்திற்கு இழுத்துக்கொண்டு வருவதையும் உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அவர் வீடுகள் கட்டுவதை, அதாவது உத்திரங்கள் செய்து அவற்றைத் தூக்கி வைப்பதையும், கதவுகள், மேஜை, நாற்காலி போன்றவற்றைச் செய்வதையும் உங்கள் மனத்திரையில் பார்க்க முடிகிறதா? திறமையாய் வேலை செய்யும்போது எப்பேர்ப்பட்ட திருப்தி கிடைக்கிறது என்பதை இயேசு அனுபவத்தில் அறிந்திருந்தார்.

7 இயேசு தனது ஊழியத்தை மிகவும் சிறப்பான விதத்தில் செய்தார். பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வேலையை மூன்றரை ஆண்டுகளுக்கு அவர் மும்முரமாய் செய்துவந்தார். எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்குக் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிக்க வேண்டுமென நினைத்தார்; அதனால் ஒரு வினாடியைக்கூட அவர் வீணாக்கவில்லை, அதிகாலையிலேயே எழுந்து இரவு வெகு நேரம்வரை வேலை செய்தார். (லூக்கா 21:37, 38; யோவான் 3:2) “நகரம் நகரமாகவும் கிராமம் கிராமமாகவும் போய் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தும் அறிவித்தும் வந்தார்.” (லூக்கா 8:1) மக்களுக்கு நல்ல செய்தியை அறிவிப்பதற்காக புழுதி படிந்த சாலைகளில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நடந்தே சென்றார்.

8, 9. இயேசு தான் செய்த வேலையில் எப்படி சந்தோஷம் அனுபவித்தார்?

8 ஊழியத்தில் கடுமையாக உழைத்த இயேசு அதில் சந்தோஷம் அனுபவித்தாரா? ஆம், சந்தோஷம் அனுபவித்தார்! அவர் ராஜ்ய விதைகளை விதைத்தார், அறுவடைக்கு வயல்களைத் தயாராய் விட்டுச் சென்றார். கடவுளுடைய வேலையைச் செய்வது அவருக்கு அதிக பலத்தையும் போஷாக்கையும் தந்ததால் சில சமயங்களில் சாப்பிடாமல்கூட வேலை செய்யத் தயாராக இருந்தார். (யோவான் 4:31-38) “நீங்கள் எனக்குக் கொடுத்த வேலையைச் செய்து முடித்து பூமியில் உங்களை மகிமைப்படுத்தியிருக்கிறேன்” என்று ஊழிய காலத்தின் இறுதிக்கட்டத்தில் தன் பரலோகத் தகப்பனிடம் சொன்னார்; அப்போது இயேசு எந்தளவு திருப்தி அடைந்திருப்பார் என எண்ணிப் பாருங்கள்.—யோவான் 17:4.

9 ஆம், வேலையில் சந்தோஷம் அனுபவித்தவர்களில் தலைசிறந்த உதாரணமாய் விளங்குபவர்கள் யெகோவாவும் இயேசுவும்தான். எனவே, யெகோவாமீது நாம் வைத்திருக்கும் அன்பு அவருடைய ‘முன்மாதிரியைப் பின்பற்ற’ நம்மைத் தூண்டுகிறது. (எபேசியர் 5:1) இயேசுமீது நாம் வைத்திருக்கும் அன்பு அவருடைய ‘அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்ற’ நம்மைத் தூண்டுகிறது. (1 பேதுரு 2:21) இப்போது, நாம் எப்படி நம்முடைய வேலையில் சந்தோஷம் அனுபவிப்பது என்பதைப் பற்றி சிந்திப்போம்.

வேலையில் சந்தோஷம் அனுபவிக்க...

பைபிள் நியமங்களைப் பின்பற்றினால் வேலையில் சந்தோஷம் அனுபவிக்கலாம்

10, 11. வேலையில் நம்பிக்கையான மனநிலையை வளர்த்துக்கொள்ள எது நமக்கு எதுவும்?

10 உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நாம் பிழைப்புக்காக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. நாம் செய்யும் வேலையில் ஓரளவு திருப்தியும் மனநிறைவும் பெற வேண்டுமென விரும்புகிறோம். ஆனால், நமக்குப் பிடிக்காத ஒரு வேலையில் இதெல்லாம் கிடைப்பது கஷ்டம்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம் வேலையில் எப்படி சந்தோஷம் அனுபவிக்கலாம்?

11 நம்பிக்கையான மனநிலையை வளர்த்துக்கொள்ளுங்கள். நம் சூழ்நிலையை நம்மால் எல்லா சமயத்திலும் மாற்ற முடியாது, ஆனால் நம் மனநிலையை மாற்றிக்கொள்ள முடியும். கடவுளுடைய கண்ணோட்டத்தைச் சிந்தித்துப் பார்ப்பது நம் வேலையில் நம்பிக்கையான மனநிலையை வளர்த்துக்கொள்ள உதவும். உதாரணமாக, நீங்கள் ஒரு குடும்பத்தலைவர் என்றால் உங்கள் வேலை எவ்வளவு அற்பமாக தோன்றினாலும் சரி அது உங்கள் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். பாசத்துக்குரியவர்களை நீங்கள் இப்படிப் பராமரிப்பது கடவுளுடைய பார்வையில் அற்பமானதல்ல. குடும்பத்தைக் கவனிக்காதவன் ‘விசுவாசத்தில் இல்லாதவனைவிட மோசமானவனாக இருக்கிறான்’ என்று அவருடைய வார்த்தை சொல்கிறது. (1 தீமோத்தேயு 5:8) நீங்கள் செய்யும் வேலை கடவுள் தந்த பொறுப்பை நிறைவேற்ற உங்களுக்குக் கைகொடுக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் உங்கள் சக பணியாளர்களுக்குக் கிடைக்காத ஓரளவு திருப்தி உங்களுக்குக் கிடைக்கும்; அவர்களைப் போலில்லாமல் நீங்கள் ஒரு நோக்கத்தோடு வேலை செய்வீர்கள்.

12. சிறப்பாகவும் நேர்மையாகவும் வேலை செய்வது என்னென்ன வழிகளில் நமக்குப் பலன் தரும்?

12 சிறப்பாய் பணியாற்றுங்கள், நேர்மையாய் இருங்கள். கடினமாய் உழைத்தால், வேலையைச் செவ்வனே செய்யக் கற்றுக்கொண்டால் பல நன்மைகள் கிடைக்கலாம். சிறப்பாகவும் திறமையாகவும் வேலை செய்யும் பணியாளர்களை முதலாளிகள் பெரும்பாலும் உயர்வாய் மதிக்கிறார்கள். (நீதிமொழிகள் 12:24; 22:29) உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நாம் வேலையில் நேர்மையாக இருக்க வேண்டும்; நம் முதலாளியின் பணத்தையோ பொருள்களையோ நேரத்தையோ திருடக்கூடாது. (எபேசியர் 4:28) நேர்மையாய் நடந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கடந்த அதிகாரத்தில் பார்த்தோம். நாணயமானவர் என்று பேரெடுத்த பணியாளர் மற்றவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதிப்பார். முதலாளிகள் நம் கடின உழைப்பைக் கவனித்தாலும் சரி கவனிக்காவிட்டாலும் சரி, ‘சுத்தமான மனசாட்சியும்’ கடவுளைப் பிரியப்படுத்துகிறோம் என்ற எண்ணமும் நமக்குத் திருப்தியைத் தரும்.—எபிரெயர் 13:18; கொலோசெயர் 3:22-24.

13. வேலை செய்யுமிடத்தில் நம் நல்ல முன்மாதிரியால் என்ன பலன்கள் கிடைக்கலாம்?

13 நம் நடத்தை கடவுளுக்குப் புகழ்சேர்க்கிறது என்பதை மனதில்கொள்ளுங்கள். வேலை செய்யுமிடத்தில் நாம் கிறிஸ்தவ நல்நடத்தையைக் காட்டினால் அது மற்றவர்களுடைய கண்ணில்படாமல் போகாது. அதனால் கிடைக்கும் பலன்? ‘நம்முடைய மீட்பரான கடவுளுடைய போதனைகளை நாம் அலங்கரிப்போம்.’ (தீத்து 2:9, 10) ஆம், நம்முடைய நல்நடத்தை மெய் வழிபாட்டின் மேன்மையை மற்றவர்களுக்கு உணர்த்துகிறது, அதன் பக்கம் அவர்களை ஈர்க்கிறது. உங்கள் நல்ல முன்மாதிரியைப் பார்த்து சக பணியாளர் சத்தியத்தின் மீது ஆர்வம் காட்டினால் உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்! மிக முக்கியமாக, உங்கள் நல்நடத்தை யெகோவாவுக்குப் புகழ்சேர்த்து, அவருடைய இதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறது என்பதால் கிடைக்கும் சந்தோஷத்தைவிட அதிக சந்தோஷம் உண்டோ?நீதிமொழிகள் 27:11-ஐயும் 1 பேதுரு 2:12-ஐயும் வாசியுங்கள்.

வேலையைத் தேர்ந்தெடுப்பதில் பகுத்துணர்வு

14-16. வேலை சம்பந்தமாகத் தீர்மானங்கள் எடுக்கையில், முக்கியமான எந்தக் கேள்விகளை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?

14 ஒரு கிறிஸ்தவர் என்ன வேலை செய்யலாம், என்ன வேலை செய்யக்கூடாது என்று பைபிள் விலாவாரியான தகவல்களைத் தருவதில்லை. அதற்காக, எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை, நாம் அதைச் செய்யலாம் என்றும் அர்த்தமாகாது. கடவுளுக்குப் பிரியமான வேலையைத் தேர்ந்தெடுக்க, ஆம், நேர்மையான, ஆக்கபூர்வமான வேலையைத் தேர்ந்தெடுக்க பைபிள் நமக்கு உதவுகிறது; அதேசமயம் அவர் வெறுக்கிற வேலையைத் தவிர்க்கவும் உதவுகிறது. (நீதிமொழிகள் 2:6) வேலை சம்பந்தமாக தீர்மானம் எடுக்கையில், இரண்டு முக்கியமான கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

15 நான் இந்த வேலையைச் செய்தால் அது பைபிளுக்கு முரணாக இருக்குமா? திருடுவதை, பொய் சொல்வதை, சிலைகள் செய்வதை கடவுளுடைய வார்த்தை நேரடியாகவே கண்டனம் செய்கிறது. (யாத்திராகமம் 20:4; அப்போஸ்தலர் 15:29; எபேசியர் 4:28; வெளிப்படுத்துதல் 21:8) இப்படிப்பட்ட செயல்களோடு தொடர்புடைய ஒரு வேலையை நாம் தேர்ந்தெடுக்கவே மாட்டோம். யெகோவாமீது நாம் அன்பு வைத்திருப்பதால் அவருடைய சட்டங்களுக்கு விரோதமான ஒரு வேலையை ஏற்றுக்கொள்ள நம் மனம் இடங்கொடுக்காது.1 யோவான் 5:3-ஐ வாசியுங்கள்.

16 நான் இந்த வேலையைச் செய்தால் தவறான பழக்கத்திற்குத் துணைபோவதாக இருக்குமா? ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு ரிசப்ஷனிஸ்ட்டாக வேலை செய்வதில் எந்தத் தப்புமில்லைதான். ஆனால், ஒரு கிறிஸ்தவருக்கு இரத்த வங்கியில் அப்படிப்பட்ட வேலை கிடைத்தால்? ஒருவேளை இரத்தமேற்றுதலுக்கும் அவருடைய வேலைக்கும் நேரடியான தொடர்பு இல்லாதிருக்கலாம். என்றாலும், அன்றாடம் அவர் செய்யும் வேலை, கடவுளுடைய வார்த்தை கண்டனம் செய்கிற செயல்களை—இரத்தத்தை எடுப்பது, சேமித்து வைப்பது போன்ற செயல்களை—ஆதரிப்பதாக இருக்காதா? (அப்போஸ்தலர் 15:29) யெகோவாவை நேசிக்கிற நாம் பைபிளுக்கு முரணான பழக்கங்களில் எவ்விதத்திலும் ஈடுபட மாட்டோம்.

17. (அ) வேலை சம்பந்தமாக தீர்மானம் எடுக்கையில் எந்தெந்த அம்சங்களை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்? (பக்கம் 203-ல் உள்ள பெட்டியைக் காண்க.) (ஆ) கடவுளுக்குப் பிரியமான தீர்மானங்கள் எடுக்க நம் மனசாட்சி எப்படி உதவலாம்?

17 வேலை சம்பந்தமாக இன்னும் அநேக கேள்விகள் நமக்கு இருக்கலாம். 15, 16 பாராக்களில் உள்ள முக்கியமான இரண்டு கேள்விகளுக்குரிய பதிலைக் கவனமாகச் சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் இவற்றுக்குப் பதில் காணலாம். அதுமட்டுமல்ல, வேலை சம்பந்தமாக தீர்மானம் எடுக்கும்போது இன்னும் சில அம்சங்களை நாம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. * உண்மையுள்ள அடிமை ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ற சட்டங்களை ஏற்படுத்த வேண்டுமென நாம் எதிர்பார்க்கக்கூடாது. அதற்குப் பதிலாக நாம்தான் பகுத்துணர்வைப் பயன்படுத்த வேண்டும். 2-ஆம் அதிகாரத்தில் பார்த்தபடி, அன்றாட வாழ்வில் கடவுளுடைய வார்த்தையைக் கடைப்பிடிக்கக் கற்றுக்கொள்வதன் மூலம் நம் மனசாட்சிக்கு அறிவு புகட்டி அதைப் பயிற்றுவிக்க வேண்டும். நம் ‘பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்திப் பயிற்றுவித்தால்’ கடவுளுக்குப் பிரியமான தீர்மானங்களை எடுக்கவும் அவருடைய அன்பில் நிலைத்திருக்கவும் மனசாட்சி நமக்கு உதவும்.—எபிரெயர் 5:14.

வேலையில் சமநிலை

18. கடவுளுடைய தயவில் நிலைத்திருக்க உதவும் தீர்மானங்களை எடுப்பது ஏன் அவ்வளவு எளிதல்ல?

18 “சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்” இந்த “கடைசி நாட்களில்” கடவுளுடைய தயவில் நிலைத்திருக்க உதவும் தீர்மானங்களை எடுப்பது அவ்வளவு எளிதல்ல. (2 தீமோத்தேயு 3:1) இன்றைக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது, அதைத் தக்கவைத்துக்கொள்வது அதைவிடப் பெரும் சவாலாக இருக்கிறது. குடும்பத்தைக் கவனிப்பதற்காக கடினமாக உழைப்பது முக்கியம் என்பதை உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நாம் உணர்ந்திருக்கிறோம். ஆனால், நாம் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், வேலை செய்யுமிடத்தில் வருகிற அழுத்தமோ இந்த உலகின் பொருளாசையோ நம்மைப் பாதித்து நம் ஆன்மீக முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக ஆகிவிடலாம். (1 தீமோத்தேயு 6:9, 10) “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று” நிச்சயப்படுத்திக்கொண்டு, எப்படிச் சமநிலையைக் காத்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றி இப்போது சிந்திப்போம்.—பிலிப்பியர் 1:10.

19. யெகோவாவை நாம் ஏன் முழுமையாக நம்ப வேண்டும், இப்படிப்பட்ட நம்பிக்கை எதைத் தவிர்க்க நமக்கு உதவும்?

19 யெகோவாமீது முழு நம்பிக்கை வையுங்கள். (நீதிமொழிகள் 3:5, 6-ஐ வாசியுங்கள்.) அவரே நம்முடைய முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர், அல்லவா? அவர்தானே நம்மைக் கண்ணுக்குள் வைத்துக் கவனித்துக்கொள்கிறார். (1 பேதுரு 5:7) அவர் நம்முடைய தேவைகளை நம்மைவிட நன்றாகவே அறிந்திருக்கிறார், அவருடைய கை குறுகியது அல்ல. (சங்கீதம் 37:25) எனவே, அவருடைய வார்த்தை தரும் அறிவுரைக்கு நாம் செவிகொடுக்க வேண்டும்: “பண ஆசையில்லாமல் வாழுங்கள்; உள்ளதை வைத்துத் திருப்தியுடன் இருங்கள்; ஏனென்றால், ‘நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்’ என்று அவர் [கடவுள்] சொல்லியிருக்கிறார்.” (எபிரெயர் 13:5) நம் வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளைக் கடவுளால் கவனித்துக்கொள்ள முடியும் என்பதற்கு முழுநேர ஊழியர்கள் பலருடைய வாழ்க்கையே அத்தாட்சி. யெகோவா நம்மைக் கவனித்துக்கொள்வார் என நாம் முழுமையாய் நம்பினால், நம் குடும்பத்தாரைப் பராமரிப்பதைக் குறித்து அளவுக்குமீறி கவலைப்பட மாட்டோம். (மத்தேயு 6:25-32) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிப்பது, கூட்டங்களில் கலந்துகொள்வது போன்ற ஆன்மீகக் காரியங்களை அசட்டை செய்யுமளவுக்கு வேலையிலேயே மூழ்கிவிட மாட்டோம்.—மத்தேயு 24:14; எபிரெயர் 10:24, 25.

20. கண்களை ஒரே விஷயத்தின் மேல் கவனமாக வைத்திருப்பது என்றால் என்ன, எப்போதும் நம் கண்களை எப்படி ஒரே விஷயத்தின் மேல் கவனமாக வைத்துக்கொள்ள முடியும்?

20 கண்களை ஒரே விஷயத்தின் மேல் கவனமாக வையுங்கள். (மத்தேயு 6:22, 23-ஐ வாசியுங்கள்.) கண்களை ஒரே விஷயத்தின் மேல் கவனமாக வைத்திருப்பது என்றால் நம் வாழ்க்கையைச் சிக்கலின்றி வைத்திருப்பதே. ஒரு கிறிஸ்தவர் தன் கண்களை ஒரே செயலின் மீது, அதாவது கடவுளுடைய விருப்பத்தைச் செய்வதன் மீது, ஒருமுகப்படுத்துகிறார். நம்முடைய கண் ஒருமுகப்படுத்தப்பட்டிருந்தால், கைநிறைய சம்பளம் தரும் வேலையையும் ஆடம்பரமான வாழ்க்கையையும் நாடுவதிலேயே நாம் குறியாயிருக்க மாட்டோம். நவீன பொருள்களும் உயர்தர பொருள்களும் இருந்தால்தான் நாம் சந்தோஷமாக இருப்போம் என்று விளம்பரதாரர்கள் சொல்வதை நம்பி, அவற்றை வாங்கிக் குவிப்பதிலேயே நாம் மூழ்கியிருக்க மாட்டோம். எப்போதும் உங்கள் கண்களை ஒரே விஷயத்தின் மேல் கவனமாக வைத்துக்கொள்வது எப்படி? அநாவசியமாக கடன் வாங்குவதைத் தவிருங்கள். பொருள்களை எக்கச்சக்கமாக வாங்கிக் குவிக்காதீர்கள், அவை உங்கள் நேரத்தையும் சக்தியையும் ரொம்பவே உறிஞ்சிவிடும். “உணவும் உடையும் இருந்தால் அதுவே போதும்” என்று இருக்க வேண்டுமென பைபிள் தருகிற ஆலோசனையை ஏற்று நடங்கள். (1 தீமோத்தேயு 6:8) உங்கள் வாழ்க்கையை முடிந்தளவு எளிமையாக வைத்திருங்கள்.

21. வாழ்க்கையில் எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென நாம் ஏன் தீர்மானிக்க வேண்டும், எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்?

21 ஆன்மீகக் காரியங்களுக்கு முதலிடம் கொடுங்கள், அவற்றை விடாமல் கடைப்பிடியுங்கள். இவ்வளவுதான் செய்ய முடியும் என்று நமக்கு ஒரு வரம்பு இருப்பதால், எதற்கு முதலிடம் தருவது என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். இல்லையென்றால், முக்கியமற்ற காரியங்கள் நம் பொன்னான நேரத்தை எடுத்துக்கொண்டு, மிக முக்கியமான காரியங்களை பின்னுக்குத் தள்ளிவிடலாம். வாழ்க்கையில் நாம் எதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்? எக்கச்சக்கமாய் பணம் சம்பாதிப்பதற்காக உலகிலுள்ள அநேகர் உயர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால், ‘எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுக்கும்படி’ இயேசு தனது சீஷர்களை ஊக்குவித்தார். (மத்தேயு 6:33) ஆம், உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நாம் கடவுளுடைய அரசாங்கத்திற்கே நம் வாழ்க்கையில் முதலிடம் தருகிறோம். செல்வத்தையும் வேலையையும்விட, கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களும், அவருடைய விருப்பமும்தான் நமக்கு அதிமுக்கியம் என்பதை நம் வாழ்க்கைமுறை காட்ட வேண்டும்; அதாவது, நம் தீர்மானங்களும் இலக்குகளும் செயல்களும் காட்ட வேண்டும்.

ஊழியத்தில் கடினமாய் உழையுங்கள்

பிரசங்க வேலைக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பதன் மூலம் யெகோவாமீது அன்பு காட்டுகிறோம்

22, 23. (அ) உண்மைக் கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலை எது, அந்த வேலை நமக்கு முக்கியம் என எப்படிக் காட்டலாம்? (பக்கம் 206-ல் உள்ள பெட்டியைக் காண்க.) (ஆ) வேலையைக் குறித்ததில் உங்கள் தீர்மானம் என்ன?

22 கடைசி காலத்தின் இறுதிக் கட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பது நமக்கு நன்றாகவே தெரியும்; எனவே, உண்மைக் கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலையில்—பிரசங்கித்து, சீஷராக்கும் வேலையில்—நாம் முழுக் கவனம் செலுத்த வேண்டும். (மத்தேயு 24:14; 28:19, 20) இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, இந்த உயிர்காக்கும் வேலையில் மும்முரமாய் ஈடுபட நாம் விரும்புகிறோம். அப்படியென்றால், இந்த வேலைதான் நமக்கு முக்கியம் என எப்படிக் காட்டலாம்? கடவுளுடைய மக்களில் பெரும்பாலோர் பிரஸ்தாபிகளாக நல்ல செய்தியை அறிவிக்கிறார்கள். சிலர் தங்கள் வாழ்க்கையை எளிமையாக்கி, பயனியர்களாக அல்லது மிஷனரிகளாக சேவை செய்கிறார்கள். பெற்றோர் பலர் ஆன்மீக இலக்குகளின் மதிப்பை அறிந்திருப்பதால், முழுநேர சேவையை லட்சியமாக வைக்கும்படி பிள்ளைகளை ஊக்குவிக்கிறார்கள். கடவுளுடைய அரசாங்கத்தைப் பக்திவைராக்கியத்தோடு அறிவிப்பவர்கள் தங்களுடைய ஊழியத்தில் சந்தோஷம் அனுபவிக்கிறார்களா? ஆம், நிச்சயமாக! யெகோவாவுக்கு முழுமூச்சோடு சேவை செய்வதே சந்தோஷத்தையும் திருப்தியையும் எல்லையில்லா ஆசிகளையும் அள்ளித் தருகிற வாழ்க்கைக்கு ஒரே வழி.நீதிமொழிகள் 10:22-ஐ வாசியுங்கள்.

23 குடும்பத்தைக் கவனிப்பதற்காக நம்மில் பலர் மணிக்கணக்காக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. நம்முடைய வேலையில் நாம் சந்தோஷம் அனுபவிக்க வேண்டுமென்றே யெகோவா விரும்புகிறார் என்பதை நினைவில் வையுங்கள். நம் கண்ணோட்டத்தையும் செயல்களையும் அவருடைய கண்ணோட்டத்திற்கும் நியமங்களுக்கும் இசைவாக மாற்றிக்கொண்டால் நம் வேலையில் திருப்தி காண முடியும். ஆனால், நாம் செய்யும் வேலை கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கும் முக்கியமான வேலையிலிருந்து நம் கவனத்தைத் திசைதிருப்பாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த முக்கியமான வேலைக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுத்தால், யெகோவாவை நேசிக்கிறோம் எனக் காட்டுவோம், அதனால் அவருடைய அன்பில் நிலைத்திருப்போம்.

^ பாரா. 6 “தச்சன்” என்பதற்கான கிரேக்க வார்த்தை, “வீடு கட்டுவதற்குத் தேவையான பொருள்களையோ மேஜை, நாற்காலிகளையோ வேறுசில மரச்சாமான்களையோ உண்டாக்கும் ஒருவரைக் குறிப்பிட பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது.”

^ பாரா. 17 இதன்பேரில் கூடுதலான தகவலுக்கு காவற்கோபுரம், ஏப்ரல் 15, 1999 இதழில் பக்கங்கள் 28-30-ஐயும், ஆங்கில காவற்கோபுரம் ஜூலை 15, 1982 இதழில் பக்கம் 26-ஐயும் காண்க.