Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 15

உங்கள் வேலையைச் சந்தோஷமாகச் செய்யுங்கள்

உங்கள் வேலையைச் சந்தோஷமாகச் செய்யுங்கள்

“[மனுஷர்கள்] தங்கள் கடின உழைப்பால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும்.”—பிரசங்கி 3:13.

1-3. (அ) நிறைய பேர் தங்களுடைய வேலையைப் பற்றி எப்படி உணருகிறார்கள்? (ஆ) இந்த அதிகாரத்தில் என்னென்ன கேள்விகளுக்கான பதிலைப் பார்க்கப் போகிறோம்?

 உலகிலுள்ள மக்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள கடினமாக உழைக்கிறார்கள். நிறைய பேருக்குத் தாங்கள் செய்கிற வேலையே பிடிப்பதில்லை. சிலர் ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து வேலைக்குப் போகிறார்கள். உங்களுக்கும் அப்படித்தான் இருக்கிறதா? அப்படியென்றால், உங்கள் வேலையை எப்படிச் சந்தோஷமாகச் செய்யலாம்? உங்கள் வேலையைப் பற்றி எப்படி நல்ல விதமாக யோசிக்கலாம்?

2 யெகோவா நமக்கு இப்படிச் சொல்கிறார்: “சாப்பிட்டு, குடித்து, தங்கள் கடின உழைப்பால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும். . . . இது கடவுள் தரும் பரிசு.” (பிரசங்கி 3:13) வேலை செய்ய வேண்டுமென்ற உணர்வோடும், அதற்கான ஆர்வத்தோடும் யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார். நாம் செய்கிற வேலையைப் பற்றி நாம் நல்ல விதமாக யோசிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.பிரசங்கி 2:24-ஐயும் 5:18-ஐயும் வாசியுங்கள்.

3 நம் வேலையைச் சந்தோஷமாகச் செய்ய எது உதவும்? எப்படிப்பட்ட வேலைகளை கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டும்? நம் வேலை நம்முடைய வணக்கத்தைப் பாதிக்காத விதத்தில் எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்? நம்மால் செய்ய முடிந்த மிக முக்கியமான வேலை எது?

தலைசிறந்த இரண்டு உழைப்பாளிகள்

4, 5. வேலை செய்வதை யெகோவா எப்படிக் கருதுகிறார்?

4 வேலை செய்வது யெகோவாவுக்கு ரொம்பப் பிடிக்கும். “ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்” என்று ஆதியாகமம் 1:1 சொல்கிறது. பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்த பிறகு, தன்னுடைய படைப்புகள் எல்லாம் “மிகவும் நன்றாக” இருந்ததாகக் கடவுள் சொன்னார். (ஆதியாகமம் 1:31) நம் படைப்பாளர், தான் படைத்த எல்லாவற்றையும் பார்த்து திருப்தி அடைந்தார்.—1 தீமோத்தேயு 1:11.

5 வேலை செய்வதை யெகோவா ஒருபோதும் நிறுத்துவதில்லை. “என் தகப்பன் இதுவரை வேலை செய்துவந்திருக்கிறார்” என்று இயேசு சொன்னார். (யோவான் 5:17) யெகோவா செய்துவந்திருக்கிற அற்புதமான விஷயங்கள் எல்லாவற்றையும் பற்றி நமக்குத் தெரியாவிட்டாலும், சில விஷயங்களைப் பற்றி நமக்குத் தெரியும். தன்னுடைய அரசாங்கத்தில் தன் மகனான இயேசு கிறிஸ்துவோடு ஆட்சி செய்யப்போகிறவர்களை அவர் தேர்ந்தெடுத்து வந்திருக்கிறார். (2 கொரிந்தியர் 5:17) அதோடு, மனிதர்களை வழிநடத்துவதிலும் பராமரிப்பதிலும் அவர் இன்று மும்முரமாகச் செயல்பட்டு வருகிறார். உலகம் முழுவதும் நடக்கிற பிரசங்க வேலையால், லட்சக்கணக்கான மக்கள் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்கிறார்கள். அதோடு, அவர்கள் பூஞ்சோலை பூமியில் என்றென்றுமாக வாழும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.—யோவான் 6:44; ரோமர் 6:23.

6, 7. இயேசு எந்தளவுக்குக் கடினமாக உழைத்தார்?

6 தன்னுடைய தகப்பனைப் போலவே இயேசுவுக்கும் வேலை செய்வது ரொம்பப் பிடிக்கும். இயேசு பூமிக்கு வருவதற்கு முன் “கைதேர்ந்த கலைஞனாக” கடவுளோடு வேலை செய்தார். பரலோகத்திலும் பூமியிலுமுள்ள எல்லாவற்றையும் படைப்பதில் அவர் கடவுளுக்கு உதவியாக இருந்தார். (நீதிமொழிகள் 8:22-31; கொலோசெயர் 1:15-17) பூமியில் இருந்தபோதும் அவர் கடினமாக உழைத்தார். இளம் வயதிலேயே திறமையாகத் தச்சு வேலை செய்யக் கற்றுக்கொண்டார். மேஜை, நாற்காலி போன்ற மரச் சாமான்களைச் செய்வது, வீடுகளைக் கட்டுவது போன்ற வேலைகளை அவர் செய்திருக்கலாம். இயேசு, அந்தளவுக்குத் திறமையாக வேலை செய்ததால்தான், “தச்சன்” என்று அழைக்கப்பட்டார்.—மாற்கு 6:3.

7 ஆனாலும், நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதும் யெகோவாவைப் பற்றி மக்களுக்குக் கற்றுக்கொடுப்பதும்தான் பூமியில் இயேசு செய்த மிக முக்கியமான வேலையாக இருந்தது. அவர் பூமியில் மூன்றரை வருஷங்கள் ஊழியம் செய்தார். அதற்காக, விடியற்காலையிலிருந்து ராத்திரிவரைக்கும் அவர் கடினமாக உழைத்தார். (லூக்கா 21:37, 38; யோவான் 3:2) புழுதிபடிந்த சாலைகளில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நடந்தே போய், நிறைய பேருக்கு நல்ல செய்தியைச் சொன்னார்.—லூக்கா 8:1.

8, 9. இயேசு ஏன் தன்னுடைய வேலையைச் சந்தோஷமாகச் செய்தார்?

8 கடவுளுடைய வேலையைச் செய்வது இயேசுவுக்கு உணவைப் போல முக்கியமானதாக இருந்தது. அந்த வேலை, அவருக்குச் சக்தியையும் பலத்தையும் கொடுத்தது. சில சமயங்களில், சாப்பிடுவதற்குக்கூட நேரம் எடுத்துக்கொள்ளாமல் கடினமாக வேலை செய்தார். (யோவான் 4:31-38) தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, தன்னுடைய தகப்பனைப் பற்றி மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அதனால்தான் யெகோவாவிடம், “நீங்கள் எனக்குக் கொடுத்த வேலையைச் செய்து முடித்து பூமியில் உங்களை மகிமைப்படுத்தியிருக்கிறேன்” என்று அவரால் சொல்ல முடிந்தது.—யோவான் 17:4.

9 இதிலிருந்து, யெகோவாவும் இயேசுவும் கடினமாக உழைப்பவர்கள் என்று தெரிந்துகொள்கிறோம். அதோடு, அவர்கள் செய்யும் வேலை அவர்களுக்குச் சந்தோஷத்தையும் திருப்தியையும் தருகிறது என்றும் தெரிந்துகொள்கிறோம். நாம், ‘கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்ற’ விரும்புகிறோம். இயேசுவின் ‘அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றவும்’ விரும்புகிறோம். (எபேசியர் 5:1; 1 பேதுரு 2:21) அதனால்தான், நாம் கடினமாக உழைக்க முயற்சி செய்கிறோம். எந்த வேலையானாலும் அதை மிகச் சிறந்த விதத்தில் செய்யவும் விரும்புகிறோம்.

நம்முடைய வேலையை நாம் எப்படிக் கருத வேண்டும்?

10, 11. நம்முடைய வேலையைப் பற்றி நல்ல மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள எது உதவும்?

10 யெகோவாவின் மக்களான நாம், நம்மையும் நம் குடும்பத்தையும் கவனித்துக்கொள்வதற்காகக் கடினமாக உழைக்கிறோம். நம் வேலையைப் பற்றி நல்ல விதமாக யோசிக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். ஆனால், இப்படி யோசிப்பது சவாலாக இருக்கலாம். நம் வேலை நமக்குச் சந்தோஷத்தைத் தரவில்லை என்றால் என்ன செய்வது?

நம்பிக்கையான மனப்பான்மை இருந்தால் எந்த வேலையையும் அதிக சந்தோஷத்தோடு செய்ய முடியும்

11 நல்ல மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். நாம் வேலை செய்யும் இடத்தையோ நம் வேலை நேரத்தையோ நம்மால் மாற்ற முடியாமல் இருக்கலாம். ஆனால், நம்முடைய மனப்பான்மையை நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். யெகோவா நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வது அதற்கு உதவும். உதாரணத்துக்கு, ஒரு குடும்பத் தலைவர் தன்னுடைய குடும்பத்தின் தேவைகளைத் தன்னால் முடிந்தவரை மிக நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். சொல்லப்போனால், குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளாத ஒருவர் ‘விசுவாசத்தில் இல்லாதவனைவிட மோசமானவர்’ என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 5:8) நீங்கள் ஒரு குடும்பத் தலைவராக இருந்தால், உங்களுடைய குடும்பத்துக்காகக் கடினமாக உழைப்பீர்கள். நீங்கள் செய்கிற வேலை உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, குடும்பத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதன் மூலம் நீங்கள் யெகோவாவையும் பிரியப்படுத்துகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.

12. கடினமாகவும் நேர்மையாகவும் உழைப்பதால் நாம் எப்படி நன்மை அடைகிறோம்?

12 கடினமாகவும் நேர்மையாகவும் வேலை செய்யுங்கள். அப்போது, உங்களால் வேலையைச் சந்தோஷமாகச் செய்ய முடியும். (நீதிமொழிகள் 12:24; 22:29) கடினமாகவும் நேர்மையாகவும் வேலை செய்யும்போது உங்களுடைய முதலாளி உங்களை முழுமையாக நம்புவார். நேர்மையாக வேலை செய்கிறவர்கள், பணத்தையோ பொருள்களையோ திருடுவதில்லை, நேரத்தை வீணடிப்பதில்லை; அதனால் அவர்களுடைய முதலாளிகள் அவர்களை உயர்வாக மதிக்கிறார்கள். (எபேசியர் 4:28) மிக முக்கியமாக, நீங்கள் கடினமாகவும் நேர்மையாகவும் உழைப்பதை யெகோவா பார்க்கிறார். அதோடு, நீங்கள் கடவுளுக்குப் பிரியமாக நடந்துகொள்வதால், ‘சுத்தமான மனசாட்சியோடு’ இருக்க முடியும்.—எபிரெயர் 13:18; கொலோசெயர் 3:22-24.

13. வேலை செய்யுமிடத்தில் நேர்மையாக நடந்துகொள்வதால் வேறென்ன பலன் கிடைக்கலாம்?

13 வேலை செய்யுமிடத்தில் நீங்கள் நடந்துகொள்ளும் விதம் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நம் வேலையைப் பற்றி நல்ல விதமாக யோசித்துப் பார்ப்பதற்கு இதுவும் ஒரு காரணம். (தீத்து 2:9, 10) உங்களுடைய நல்ல முன்மாதிரியைப் பார்த்து உங்களோடு வேலை பார்க்கும் ஒருவர் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொள்ளலாம்.நீதிமொழிகள் 27:11-ஐயும் 1 பேதுரு 2:12-ஐயும் வாசியுங்கள்.

எப்படிப்பட்ட வேலையை நான் தேர்ந்தெடுக்க வேண்டும்?

14-16. ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் நாம் எதை யோசித்துப் பார்க்க வேண்டும்?

14 ஒரு கிறிஸ்தவர் எப்படிப்பட்ட வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும், எப்படிப்பட்ட வேலையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்ற பட்டியல் பைபிளில் இல்லை. ஆனால், வேலை சம்பந்தமாகச் சரியான தீர்மானங்களை எடுக்க உதவும் நியமங்கள் அதில் இருக்கின்றன. (நீதிமொழிகள் 2:6) அந்த நியமங்களைப் பயன்படுத்தி பின்வரும் கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ளலாம்.

யெகோவாவின் நெறிமுறைகளுக்கு முரணாக இல்லாத வேலையைத் தேர்ந்தெடுங்கள்

15 யெகோவா தவறென்று சொல்லும் ஒரு விஷயத்தைச் செய்யும்படி அந்த வேலையில் எதிர்பார்க்கப்படுமா? திருடுவது, பொய் சொல்வது போன்ற விஷயங்களை யெகோவா வெறுக்கிறார் என்று நமக்குத் தெரியும். (யாத்திராகமம் 20:4; அப்போஸ்தலர் 15:29; எபேசியர் 4:28; வெளிப்படுத்துதல் 21:8) அதனால், யெகோவாவின் நெறிமுறைகளுக்கு நேர்மாறான எந்த வேலையையும் தவிர்க்க நாம் கவனமாக இருக்கிறோம்.1 யோவான் 5:3-ஐ வாசியுங்கள்.

16 யெகோவா கண்டனம் செய்கிற ஒரு பழக்கத்தை அந்த வேலை ஆதரிக்கிறதா? ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு வரவேற்பாளராக (receptionist) வேலை செய்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், இரத்த வங்கியில் அப்படிப்பட்ட வேலை உங்களுக்குக் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? ஒருவேளை இரத்தமேற்றுவதற்கும் உங்களுடைய வேலைக்கும் நேரடியான தொடர்பில்லாமல் இருக்கலாம். ஆனாலும், நீங்கள் செய்யும் வேலை, கடவுளுடைய வார்த்தை கண்டனம் செய்கிற விஷயங்களை, அதாவது இரத்தத்தை எடுப்பது, சேமித்து வைப்பது போன்ற விஷயங்களை, ஆதரிப்பதாக இருக்காதா? (அப்போஸ்தலர் 15:29) யெகோவாவை நேசிக்கிற நாம் பைபிளுக்கு முரணான பழக்கங்களில் எந்த விதத்திலும் ஈடுபட மாட்டோம்.

17. கடவுளுக்குப் பிரியமான விதத்தில் தீர்மானங்கள் எடுக்க எது உதவும்?

17 பைபிள் நியமங்களைப் பின்பற்றினால், எபிரெயர் 5:14-ல் சொல்லப்பட்டிருக்கிற ஆட்களைப் போல, அதாவது ‘சரி எது, தவறு எது என்பதைப் பிரித்துப் பார்க்க தங்களுடைய பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்திப் பயிற்றுவித்திருக்கிற ஆட்களை’ போல நம்மால் இருக்க முடியும். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த வேலையைத் தேர்ந்தெடுப்பது யாருக்காவது இடறலாக இருக்குமா? இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தால், என் துணையையும் பிள்ளைகளையும் விட்டுவிட்டு வெளிநாட்டுக்குப் போகவேண்டியிருக்குமா? இது அவர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்?’

‘மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்’

18. நம்முடைய வணக்கத்துக்கு முதலிடம் கொடுப்பது ஏன் சவாலாக இருக்கலாம்?

18 ‘சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கிற’ இந்தக் காலத்தில் யெகோவாவின் வணக்கத்துக்கு முதலிடம் கொடுப்பது கஷ்டமாக இருக்கலாம். (2 தீமோத்தேயு 3:1) வேலை கிடைப்பதும், அதைத் தக்கவைப்பதும் பெரிய சவால்தான். குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பு நமக்கு இருந்தாலும், வணக்கத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென்று நமக்குத் தெரியும். பொருள் சம்பந்தமான விஷயங்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். (1 தீமோத்தேயு 6:9, 10) அப்படியானால், ‘மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நிச்சயப்படுத்திக்கொள்வதோடு’ நம் குடும்பத்தின் தேவைகளையும் எப்படிக் கவனித்துக்கொள்ளலாம்?—பிலிப்பியர் 1:10.

19. யெகோவாமீது நம்பிக்கை வைப்பது, வேலை விஷயத்தில் சமநிலையோடு இருக்க நமக்கு எப்படி உதவுகிறது?

19 யெகோவாவை முழுமையாக நம்புங்கள். (நீதிமொழிகள் 3:5, 6-ஐ வாசியுங்கள்.) நமக்கு உண்மையிலேயே என்ன தேவை என்பதை கடவுள் நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறார் என்று நமக்குத் தெரியும். அவருக்கு நம்மீது அதிக அக்கறை இருக்கிறது என்றும் நமக்குத் தெரியும். (சங்கீதம் 37:25; 1 பேதுரு 5:7) பைபிள் இப்படிச் சொல்கிறது: “பண ஆசையில்லாமல் வாழுங்கள். உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள். ஏனென்றால், ‘நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்’ என்று [கடவுள்] சொல்லியிருக்கிறார்.” (எபிரெயர் 13:5) குடும்பத்தைக் காப்பாற்றுவது பற்றியே நாம் எப்போதும் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதை யெகோவா விரும்புவதில்லை. தன்னுடைய மக்களின் தேவைகளைத் தன்னால் கவனித்துக்கொள்ள முடியும் என்பதை அவர் இத்தனை காலமாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார். (மத்தேயு 6:25-32) நம்முடைய வேலையில் எப்படிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும், நாம் தவறாமல் பைபிளைப் படிக்கிறோம், ஊழியத்துக்குப் போகிறோம், கூட்டங்களில் கலந்துகொள்கிறோம்.—மத்தேயு 24:14; எபிரெயர் 10:24, 25.

20. நம்முடைய வாழ்க்கையை எப்படி எளிமையாக வைத்துக்கொள்ளலாம்?

20 உங்கள் கண்கள் ஒரே விஷயத்தின் மேல் கவனமாக இருக்க வேண்டும். (மத்தேயு 6:22, 23-ஐ வாசியுங்கள்.) உங்களுடைய வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொண்டால் யெகோவாவைச் சேவிப்பதில் கவனமாக இருக்க முடியும். கடவுளோடு நமக்கிருக்கும் நட்பைவிட, பணத்துக்கோ ஆடம்பரமான வாழ்க்கைக்கோ லேட்டஸ்ட் பொருள்களுக்கோ அதிக முக்கியத்துவம் கொடுப்பது முட்டாள்தனம் என்று நமக்குத் தெரியும். அப்படியானால், முக்கியமான விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்க எது நமக்கு உதவும்? முடிந்தவரை கடன் வாங்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏற்கெனவே நிறைய கடன் இருக்கிறதென்றால், அதைக் குறைக்க அல்லது அடைத்து முடிக்க நடைமுறையாகத் திட்டமிடுங்கள். நாம் கவனமாக இல்லையென்றால், பொருள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நம்முடைய நேரத்தையும் சக்தியையும் அதிகமாக உறிஞ்சிவிடலாம். அதனால், ஜெபம் செய்வதற்கோ, படிப்பதற்கோ, ஊழியத்துக்குப் போவதற்கோ நாம் நேரம் ஒதுக்காமல் போய்விடலாம். பொருள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நம் வாழ்க்கையைச் சிக்கலாக்கிவிட நாம் அனுமதிப்பதற்குப் பதிலாக, அடிப்படைத் தேவைகளான “உணவும் உடையும்” இருந்தால் போதும் என்று திருப்தியோடு இருக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். (1 தீமோத்தேயு 6:8) நம்முடைய சூழ்நிலை எப்படியிருந்தாலும் சரி, யெகோவாவுக்கு முழுமையாகச் சேவை செய்ய என்ன செய்யலாம் என்று அடிக்கடி யோசித்துப் பார்ப்பது நல்லது.

21. நம் வாழ்க்கையில் எது முதலிடத்தில் இருக்க வேண்டுமென்று தீர்மானிப்பது ஏன் முக்கியம்?

21 எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென்று தீர்மானியுங்கள். நம்முடைய நேரம், சக்தி, பணம், பொருள் ஆகியவற்றை நாம் ஞானமாகப் பயன்படுத்த வேண்டும். நாம் கவனமாக இல்லையென்றால் கல்வி, பணம் போன்ற அதிக முக்கியமல்லாத விஷயங்கள் நம்முடைய பொன்னான நேரத்தை விழுங்கிவிடலாம். “கடவுளுடைய அரசாங்கத்துக்கு . . . முதலிடம் கொடுங்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 6:33) நாம் எடுக்கும் தீர்மானங்கள்... நம் பழக்கவழக்கங்கள்... அன்றாட வேலைகள்... லட்சியங்கள்... இவையெல்லாமே நாம் எதற்கு முதலிடம் கொடுக்கிறோம் என்பதைக் காட்டுகின்றன.

நம்மால் செய்ய முடிந்த மிக முக்கியமான வேலை

22, 23. (அ) கிறிஸ்தவர்களாகிய நமக்கு என்ன முக்கியமான வேலை இருக்கிறது? (ஆ) நம் வேலையைச் சந்தோஷமாகச் செய்ய எது உதவும்?

22 யெகோவாவைச் சேவிப்பதும் நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதும்தான் நமக்கிருக்கும் மிக முக்கியமான வேலை. (மத்தேயு 24:14; 28:19, 20) இயேசுவைப் போல நாமும் நல்ல செய்தியைப் பிரசங்கிக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய விரும்புகிறோம். சிலர், தேவை அதிகமுள்ள இடத்துக்குக் குடிமாறிப் போய் சேவை செய்கிறார்கள். மற்றவர்கள், வேறொரு மொழி பேசும் ஆட்களிடம் நல்ல செய்தியைச் சொல்வதற்காக அந்த மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள். இப்படியெல்லாம் செய்திருக்கிற சகோதர சகோதரிகளிடம் அதைப் பற்றிக் கேளுங்கள். அவர்களுடைய வாழ்க்கை எந்தளவு சந்தோஷமாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆகியிருக்கிறது என்பதை அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள்.—நீதிமொழிகள் 10:22-ஐ வாசியுங்கள்.

யெகோவாவுக்குச் சேவை செய்வதுதான் நம்மால் செய்ய முடிந்த மிக முக்கியமான வேலை

23 இன்று நம்மில் நிறைய பேர், குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு நாளில் பல மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது, அல்லது ஒன்றுக்கும் அதிகமான வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. யெகோவாவுக்கு இது தெரியும். நம் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதற்காக நாம் செய்கிற எல்லாவற்றையும் பார்த்து அவர் சந்தோஷப்படுகிறார். அதனால், நம்முடைய வேலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், நாம் எப்போதுமே யெகோவாவையும் இயேசுவையும் போல கடினமாக உழைக்க வேண்டும். அதோடு, யெகோவாவைச் சேவிப்பதும், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதும்தான் நம்முடைய மிக முக்கியமான வேலை என்பதையும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். இந்த வேலை நமக்கு உண்மையான சந்தோஷத்தைத் தரும்.