Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 5

உலகத்திலிருந்து பிரிந்திருப்பது எப்படி?

உலகத்திலிருந்து பிரிந்திருப்பது எப்படி?

‘நீங்கள் உலகத்தின் பாகமாக இல்லை.’ —யோவான் 15:19.

1. இறப்பதற்கு முந்தின நாள் இரவு இயேசு எதைப் பற்றிக் கவலைப்பட்டார்?

 அது, இயேசு இறப்பதற்கு முந்தின நாள் இரவு. தன்னுடைய சீஷர்களைவிட்டு பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று இயேசுவுக்குத் தெரியும். அவர்களுடைய எதிர்காலத்தை நினைத்து அவர் கவலைப்பட்டார். அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் உலகத்தின் பாகமாக இல்லை’ என்று சொன்னார். (யோவான் 15:19) பிற்பாடு, அவர்களைப் பற்றி தன் அப்பாவிடம், “நான் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை” என்று ஜெபம் செய்தார். (யோவான் 17:15, 16) அவர் அப்படிச் சொன்னதன் அர்த்தம் என்ன?

2. ‘உலகம்’ என்று சொன்னபோது இயேசு எதை அர்த்தப்படுத்தினார்?

2 இங்கே, ‘உலகம்’ என்ற வார்த்தை, யெகோவாவைச் சேவிக்காமல் சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற மக்களைக் குறிக்கிறது. (யோவான் 14:30; எபேசியர் 2:2; யாக்கோபு 4:4; 1 யோவான் 5:19) நாம் ‘இந்த உலகத்தின் பாகமாக இல்லை’ என்று எப்படிக் காட்டலாம்? பின்வரும் சில வழிகளில் அதை எப்படிக் காட்டுவது என்று இந்த அதிகாரத்தில் பார்ப்போம்: (1) கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையுள்ளவர்களாக இருப்பது மற்றும் அரசியல் விவகாரங்களில் நடுநிலையோடு இருப்பது, (2) இந்த உலகத்தின் சிந்தையைத் தவிர்ப்பது, (3) உடை மற்றும் தோற்றம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அடக்கமாக இருப்பது, (4) பண விஷயத்தில் சமநிலையோடு இருப்பது, (5) கடவுள் தருகிற முழு கவசத்தையும் போட்டுக்கொள்வது.—பின்குறிப்பு 16.

கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையுள்ளவர்களாக இருங்கள்

3. அரசியல் விவகாரங்களில் இயேசு ஈடுபட்டாரா? விளக்குங்கள்.

3 இயேசு பூமியில் இருந்தபோது, மக்கள் பட்ட பல கஷ்டங்களையும், வாழ்க்கையை ஓட்டுவதற்கு அவர்கள் பட்ட பாடுகளையும் பார்த்தார். அந்த மக்கள்மீது அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தது. அதனால், அவர்களுக்கு உதவ வேண்டுமென்று நினைத்தார். அதற்காக, அவர் ஒரு அரசியல் தலைவராக ஆனாரா? இல்லை. ஏனென்றால், கடவுளுடைய அரசாங்கம்தான் மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று அவருக்குத் தெரியும். அதுமட்டுமல்ல, அந்த அரசாங்கத்தின் ராஜாவே அவர்தான். அந்த அரசாங்கத்தைப் பற்றியே அவர் மக்களிடம் முக்கியமாக பிரசங்கித்தார். (தானியேல் 7:13, 14; லூக்கா 4:43; 17:20, 21) அவர் அரசியல் விவகாரங்களில் எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளாமல் நடுநிலையோடு இருந்தார். இயேசு, ஆளுநரான பொந்தியு பிலாத்துவுக்கு முன், “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல” என்று சொன்னார். (யோவான் 18:36) அவருடைய சீஷர்களும் அரசியல் விவகாரங்களில் நடுநிலையோடு இருந்தார்கள். ஆரம்பக் கால கிறிஸ்தவர்கள் “அரசியலில் பதவி வகிக்கவில்லை” என்று நாகரிகத்தை நோக்கி என்ற ஆங்கிலப் புத்தகம் சொன்னது. இன்றுள்ள உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நாமும் அப்படித்தான் இருக்கிறோம். நாம் கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையுள்ளவர்களாக இருப்பதால் அரசியல் விவகாரங்களில் நடுநிலையோடு இருக்கிறோம்.—மத்தேயு 24:14.

கடவுளுடைய அரசாங்கத்தை நீங்கள் உண்மையோடு ஆதரிப்பதற்கான காரணத்தை விளக்க முடியுமா?

4. உண்மைக் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்கு எப்படி ஆதரவு தருகிறார்கள்?

4 தூதுவர்கள், தங்கள் நாட்டு அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக மற்றொரு நாட்டில் வேலை செய்வார்கள். அதனால், தாங்கள் வேலை செய்யும் நாட்டின் அரசியலில் அவர்கள் தலையிட மாட்டார்கள். பரலோக நம்பிக்கையுள்ளவர்களும், அதாவது கிறிஸ்துவோடு பரலோகத்தில் ஆட்சி செய்யும் நம்பிக்கையுள்ளவர்களும், அப்படித்தான் இருக்கிறார்கள். “[நாம்] கிறிஸ்துவின் சார்பில் தூதுவர்களாக இருக்கிறோம்” என்று பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதினார். (2 கொரிந்தியர் 5:20) அவர்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குப் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். இந்த உலகத்தின் அரசியல் விவகாரங்களில் அவர்கள் தலையிடுவதில்லை. (பிலிப்பியர் 3:20) அதற்குப் பதிலாக, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள லட்சக்கணக்கானோருக்கு உதவி செய்திருக்கிறார்கள். ‘வேறே ஆடுகள்,’ அதாவது புதிய உலகில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுள்ளவர்கள், பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு ஆதரவு தருகிறார்கள். அவர்களும் நடுநிலையோடு இருக்கிறார்கள். (யோவான் 10:16; மத்தேயு 25:31-40) உண்மைக் கிறிஸ்தவர்கள் யாருமே இந்த உலகத்தின் அரசியலில் ஈடுபட மாட்டார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.ஏசாயா 2:2-4-ஐ வாசியுங்கள்.

5. கிறிஸ்தவர்கள் போரில் ஈடுபடாததற்கு ஒரு காரணம் என்ன?

5 உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நாம், உலகம் முழுவதுமுள்ள சகோதர சகோதரிகள் எல்லாரையும் சொந்த குடும்பத்தைப் போலப் பார்க்கிறோம். நம்முடைய நாடு அல்லது பின்னணி வித்தியாசப்பட்டதாக இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கிறோம். (1 கொரிந்தியர் 1:10) அப்படியிருக்கும்போது, நாம் போரில் ஈடுபட்டால் நம்முடைய சொந்தக் குடும்பத்துக்கு எதிராக நாம் போர் செய்கிறவர்களாக இருப்போம். ஆனால், நம் சகோதர சகோதரிகள்மீது அன்பு காட்டும்படிதான் இயேசு கட்டளை கொடுத்திருக்கிறார். (யோவான் 13:34, 35; 1 யோவான் 3:10-12) சொல்லப்போனால், எதிரிகள்மீதும் அன்பு காட்டும்படி தன்னுடைய சீஷர்களிடம் இயேசு சொன்னார்.—மத்தேயு 5:44; 26:52.

6. யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் ஊழியர்கள் எந்தெந்த விஷயங்களில் அரசாங்கத்துக்கு மதிப்புக் கொடுக்கிறார்கள்?

6 கிறிஸ்தவர்களான நாம் நடுநிலையோடு இருப்பதோடு நல்ல குடிமக்களாக இருப்பதற்கும் கடினமாக உழைக்கிறோம். உதாரணத்துக்கு, அரசாங்கச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதன் மூலமும், வரி செலுத்துவதன் மூலமும் அரசாங்கத்துக்கு மதிப்புக் கொடுக்கிறோம். ஆனால், ‘கடவுளுடையதைக் கடவுளுக்குக் கொடுக்க’ நாம் எப்போதுமே தீர்மானமாக இருக்கிறோம். (மாற்கு 12:17; ரோமர் 13:1-7; 1 கொரிந்தியர் 6:19, 20) ‘கடவுளுடையது’ என்று சொல்லும்போது அதில் எவையெல்லாம் உட்பட்டிருக்கின்றன? கடவுள்மீது நமக்கிருக்கும் அன்பு, அவருக்கு நாம் காட்டும் கீழ்ப்படிதல், அவருக்குச் செலுத்தும் வணக்கம் ஆகிய விஷயங்கள் உட்பட்டிருக்கின்றன. உயிரைக் கொடுத்தாலும் கொடுப்போமே தவிர, கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் மட்டும் போக மாட்டோம்.—லூக்கா 4:8; 10:27; அப்போஸ்தலர் 5:29-ஐயும் ரோமர் 14:8-ஐயும் வாசியுங்கள்.

“உலகத்தின் சிந்தையை” எதிர்த்துப் போராடுங்கள்

7, 8. “உலகத்தின் சிந்தை” என்றால் என்ன, அது மக்களை எப்படிப் பாதிக்கிறது?

7 சாத்தானின் உலகத்திலிருந்து நாம் பிரிந்திருக்க வேண்டுமென்றால் இந்த “உலகத்தின் சிந்தை” நம்மேல் ஆதிக்கம் செலுத்த நாம் அனுமதிக்கக் கூடாது. இந்தச் சிந்தை, நம்மை சாத்தானைப் போல யோசிக்கவும் செயல்படவும் வைக்கிறது. யெகோவாவை வணங்காதவர்கள்மீது இந்தச் சிந்தை ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால், கிறிஸ்தவர்கள் இந்தச் சிந்தையை எதிர்த்துப் போராடுகிறார்கள். பவுல் சொன்னதுபோல், “நாம் இந்த உலகத்தின் சிந்தையைப் பெறவில்லை, கடவுளுடைய சக்தியைத்தான் பெற்றிருக்கிறோம்.”—1 கொரிந்தியர் 2:12; எபேசியர் 2:2, 3; பின்குறிப்பு 17.

8 இந்த உலகத்தின் சிந்தை மக்களைச் சுயநலக்காரர்களாக, பெருமை பிடித்தவர்களாக, அடங்காதவர்களாக ஆக்குகிறது. கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டியதில்லை என அவர்களை நினைக்க வைக்கிறது. பின்விளைவுகளைப் பற்றி மக்கள் யோசிக்காமல் தாங்கள் ஆசைப்படுவதையெல்லாம் செய்ய வேண்டுமென சாத்தான் விரும்புகிறான். ‘உடலின் ஆசையையும் கண்களின் ஆசையையும்’ திருப்தி செய்வதுதான் வாழ்க்கையில் ரொம்ப முக்கியம் என்றும் மக்களை நினைக்க வைக்கிறான். (1 யோவான் 2:16; 1 தீமோத்தேயு 6:9, 10) அதிலும், யெகோவாவின் ஊழியர்களைத் தவறான வழியில் கொண்டுபோக அவன் கடினமாக முயற்சி செய்கிறான். தன்னைப் போலவே அவர்களையும் யோசிக்க வைக்க தந்திரமாக முயற்சி செய்கிறான்.—யோவான் 8:44; அப்போஸ்தலர் 13:10; 1 யோவான் 3:8.

9. உலகத்தின் சிந்தை நம்மை எப்படிப் பாதிக்கலாம்?

9 நாம் சுவாசிக்கும் காற்றைப் போல இந்த உலகத்தின் சிந்தையும் நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதை எதிர்த்துப் போராட நாம் கடினமாக முயற்சி செய்யவில்லை என்றால் அது நம்மைப் பாதித்துவிடும். (நீதிமொழிகள் 4:23-ஐ வாசியுங்கள்.) ஆரம்பத்தில் சில விஷயங்கள் நமக்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், அவை நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதித்துவிடலாம். உதாரணத்துக்கு, யெகோவாவை வணங்காத ஆட்களின் எண்ணங்களும், மனப்பான்மையும் நம்மைத் தொற்றிக்கொள்ள அனுமதிப்பதன் மூலம் நாம் பாதிக்கப்படலாம். (நீதிமொழிகள் 13:20; 1 கொரிந்தியர் 15:33) அல்லது ஆபாசம், விசுவாசதுரோகம், போட்டி விளையாட்டுகள் போன்றவற்றால் நாம் பாதிக்கப்படலாம்.—பின்குறிப்பு 18.

10. உலகத்தின் சிந்தையை நாம் எப்படி எதிர்த்துப் போராடலாம்?

10 அப்படியானால், உலகத்தின் சிந்தையால் பாதிக்கப்படாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? யெகோவாவோடு நாம் நெருங்கிய பந்தத்தை வைத்திருக்க வேண்டும். அவருடைய ஆலோசனைபடி நடக்க வேண்டும். அவருடைய சக்திக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்ய வேண்டும். அவருடைய சேவையில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். யெகோவாதான் இந்தப் பிரபஞ்சத்திலேயே அதிக சக்தி படைத்தவர். அதனால், இந்த உலகத்தின் சிந்தையை எதிர்த்துப் போராட அவர் நமக்கு உதவி செய்வார் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.—1 யோவான் 4:4.

கடவுளுக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் உடை உடுத்துவது

11. உடை உடுத்தும் விஷயத்தில், உலகத்தின் சிந்தை மக்களை எப்படிப் பாதித்திருக்கிறது?

11 உடை மற்றும் தோற்றம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் நாம் இந்த உலகத்தின் பாகமல்ல என்பதைக் காட்டுகிறோம். உலகத்திலுள்ள நிறைய பேர், மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், மற்றவர்களின் மனதில் பாலியல் ஆசைகளைத் தூண்டும் விதத்தில் உடை உடுத்துகிறார்கள். சிலர், சமுதாயத்துக்கு அடங்காதவர்கள் என்பதைக் காட்டும் விதத்தில் அல்லது பணக்காரர்கள் என்பதைக் காட்டிக்கொள்ளும் விதத்தில் உடை உடுத்துகிறார்கள். இன்னும் சிலருக்குத் தங்களுடைய தோற்றத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலையே இல்லை. அவர்களுடைய உடை அலங்கோலமாக, அழுக்காக இருந்தாலும் அதை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. உடை மற்றும் தோற்றம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இப்படிப்பட்ட மனப்பான்மை நமக்குள் வந்துவிட நாம் அனுமதிக்கக் கூடாது.

யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் நான் உடை உடுத்துகிறேனா?

12, 13. உடை உடுத்தும் விஷயத்தில் தீர்மானம் எடுக்க என்ன பைபிள் நியமங்கள் நமக்கு உதவும்?

12 யெகோவாவின் ஊழியர்களான நாம் எப்போதுமே சுத்தமாகவும் நேர்த்தியாகவும் உடை உடுத்த விரும்புகிறோம். அழகாகவும் சூழ்நிலைக்குப் பொருத்தமாகவும் உடுத்த விரும்புகிறோம். நாம் ‘கடவுள்பக்தி உள்ளவர்கள்’ என்பதைக் காட்டும் விதத்தில், ‘அடக்கத்தோடும் தெளிந்த புத்தியோடும்’ உடுத்துகிறோம்.—1 தீமோத்தேயு 2:9, 10; யூதா 21.

13 நாம் உடை உடுத்தும் விதம், யெகோவாவுக்கும் அவருடைய மக்களுக்கும் நல்ல பெயரைக் கொண்டுவரலாம் அல்லது கெட்ட பெயரைக் கொண்டுவரலாம். நாம் “எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே” செய்ய விரும்புகிறோம். (1 கொரிந்தியர் 10:31) அடக்கமாக உடை உடுத்தும்போது, மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்புக் கொடுக்கிறோம். அதனால், உடை மற்றும் தோற்றம் சம்பந்தமாக நாம் எடுக்கும் தீர்மானங்கள், மற்றவர்களைப் பாதிக்கும் என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைக்கிறோம்.—1 கொரிந்தியர் 4:9; 2 கொரிந்தியர் 6:3, 4; 7:1.

14. கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போடுகிற உடையைத் தேர்ந்தெடுக்கும்போது நாம் என்ன விஷயங்களை யோசித்துப் பார்க்க வேண்டும்?

14 கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போகும்போது நாம் எப்படி உடை உடுத்துகிறோம்? மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் விதத்தில் உடுத்துகிறோமா? மற்றவர்களைத் தர்மசங்கடப்படுத்தும் விதத்தில் உடுத்துகிறோமா? எப்படி உடை உடுத்துவது என்பது நம் சொந்த விஷயம் என்று நினைக்கிறோமா? (பிலிப்பியர் 4:5; 1 பேதுரு 5:6) பொதுவாக, நாம் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவோம். ஆனால், நமக்குள் இருக்கும் கிறிஸ்தவக் குணங்கள்தான் நம்மை உண்மையிலேயே அழகானவர்களாக ஆக்குகின்றன. யெகோவா நம்மைப் பார்க்கும்போது நம்மிடம் இந்தக் குணங்கள் இருக்கின்றனவா என்றே பார்க்கிறார். நாம் உள்ளுக்குள், அதாவது “இதயத்தில்,” எப்படிப்பட்டவர்கள் என்பதை இந்தக் குணங்கள் காட்டும். அவை ‘கடவுளுடைய பார்வையில் மிகவும் மதிப்புள்ளவை.’—1 பேதுரு 3:3, 4

15. உடை உடுத்தும் விஷயத்தில் விலாவாரியான சட்டங்களை யெகோவா ஏன் கொடுக்கவில்லை?

15 உடையை எப்படி உடுத்த வேண்டும், எப்படி உடுத்தக் கூடாது என்பதைப் பற்றிய விலாவாரியான சட்டங்களை யெகோவா கொடுக்கவில்லை. ஆனால், பைபிள் நியமங்களைக் கொடுத்திருக்கிறார். நல்ல தீர்மானங்களை எடுக்க அவை நமக்கு உதவும். (எபிரெயர் 5:14) நாம் எடுக்கும் தீர்மானங்கள் பெரியவையோ சிறியவையோ, அவற்றை கடவுள்மீதும் மற்றவர்கள்மீதும் இருக்கும் அன்பின் அடிப்படையில் எடுக்க வேண்டும். (மாற்கு 12:30, 31-ஐ வாசியுங்கள்.) உலகம் முழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய கலாச்சாரத்துக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற விதத்தில் உடை உடுத்துகிறார்கள். இப்படிப்பட்ட வித்தியாசங்கள் பார்ப்பதற்கு அழகாகவும் புத்துணர்ச்சி தருவதாகவும் இருக்கின்றன.

பண விஷயத்தில் சமநிலையோடு இருப்பது

16. பண விஷயத்தில் இந்த உலகத்தின் சிந்தை, எப்படி இயேசு கற்றுக்கொடுத்த விஷயத்துக்கு நேர்மாறாக இருக்கிறது? என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்?

16 பணமும் பொருளும் இருந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்று மக்களை சாத்தான் நினைக்க வைக்கிறான். ஆனால், அது உண்மையல்ல என்று யெகோவாவின் ஊழியர்களுக்குத் தெரியும். “ஒருவனுக்கு ஏராளமான சொத்து இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வைத் தராது” என்று இயேசு சொன்ன வார்த்தைகளை நாம் முழுமையாக நம்புகிறோம். (லூக்கா 12:15) பணத்தால் நமக்கு உண்மையான சந்தோஷம் கிடைக்காது. நல்ல நண்பர்களையோ, உண்மையான மன நிம்மதியையோ, முடிவில்லாத வாழ்வையோ பணத்தால் தர முடியாது. நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு பணமும் பொருளும் ஓரளவு தேவைதான். ஆனால், கடவுளோடு நெருங்கிய பந்தம் வைத்துக்கொள்ளும்போதும், வாழ்க்கையில் கடவுளுடைய வணக்கத்துக்கு முதலிடம் கொடுக்கும்போதும்தான் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று இயேசு கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 5:3; 6:22) உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பண விஷயத்தில் இந்த உலகத்தின் சிந்தை என்னைப் பாதித்திருக்கிறதா? நான் எப்போதும் பணத்தைப் பற்றியே பேசிக்கொண்டும் யோசித்துக்கொண்டும் இருக்கிறேனா?’—லூக்கா 6:45; 21:34-36; 2 யோவான் 6

17. பண விஷயத்தில் உலக சிந்தையைத் தவிர்த்தால் நம்முடைய வாழ்க்கை எப்படியிருக்கும்?

17 பண விஷயத்தில் இந்த உலகத்தின் சிந்தையைத் தவிர்த்து, யெகோவாவைச் சேவிப்பதில் முழு கவனம் செலுத்தினால் நம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். (மத்தேயு 11:29, 30) நாம் திருப்தியோடும் மன நிம்மதியோடும் வாழ்வோம். (மத்தேயு 6:31, 32; ரோமர் 15:13) பணத்தையும் பொருளையும் பற்றி அதிகமாகக் கவலைப்படாமல் இருப்போம். (1 தீமோத்தேயு 6:9, 10-ஐ வாசியுங்கள்.) கொடுப்பதால் வரும் சந்தோஷத்தை அனுபவிப்போம். (அப்போஸ்தலர் 20:35) நம் அன்பானவர்களோடு அதிக நேரம் செலவிடவும், நிம்மதியாக தூங்கவும் முடியும்.—பிரசங்கி 5:12.

“முழு கவசத்தையும் போட்டுக்கொள்ளுங்கள்”

18. சாத்தான் என்ன செய்ய முயற்சி செய்கிறான்?

18 யெகோவாவோடு நமக்கிருக்கும் பந்தத்தைக் கெடுத்துப்போட சாத்தான் முயற்சி செய்கிறான். அதனால், அந்தப் பந்தத்தைப் பாதுகாக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். ‘பொல்லாத தூதர் கூட்டத்தோடு நாம் போராட வேண்டியிருக்கிறது.’ (எபேசியர் 6:12) நாம் சந்தோஷமாக இருக்கக் கூடாது என்றும் நமக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கக் கூடாது என்றும்தான் சாத்தானும் அவனுடைய கெட்ட தூதர்களும் விரும்புகிறார்கள். (1 பேதுரு 5:8) சக்தி படைத்த அந்த எதிரிகள் நமக்கு எதிராகச் செயல்பட்டாலும் யெகோவாவின் உதவியோடு நம்மால் அவர்களை ஜெயிக்க முடியும்!

19. கடவுள் கொடுத்திருக்கும் “கவசத்தை” பற்றி எபேசியர் 6:14-18 எப்படி விவரிக்கிறது?

19 பழங்காலத்தில், வீரர்கள் போர்க்களத்தில் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கவசத்தைப் போட்டுக்கொள்வார்கள். அதேபோல் நாமும் யெகோவா தந்திருக்கும் “முழு கவசத்தையும்” போட்டுக்கொள்ள வேண்டும். (எபேசியர் 6:13) அது நம்மைப் பாதுகாக்கும். அந்தக் கவசத்தைப் பற்றி எபேசியர் 6:14-18-ல் இப்படி வாசிக்கிறோம்: “சத்தியத்தை உங்கள் இடுப்புவாராகக் கட்டிக்கொண்டும், நீதியை மார்புக் கவசமாகப் போட்டுக்கொண்டும், சமாதானத்தின் நல்ல செய்தியைக் காலணியாகப் போட்டுக்கொண்டும் உறுதியாக நில்லுங்கள். இவை எல்லாவற்றோடும்கூட, பொல்லாதவன் எறிகிற நெருப்புக் கணைகளையெல்லாம் அணைப்பதற்காக, விசுவாசத்தைப் பெரிய கேடயமாகப் பிடித்துக்கொள்ளுங்கள். அதோடு, மீட்பைத் தலைக்கவசமாக அணிந்துகொள்ளுங்கள்; கடவுளுடைய சக்தியால் கொடுக்கப்பட்டிருக்கிற அவருடைய வார்த்தையை வாளாக எடுத்துக்கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல, எல்லா சந்தர்ப்பங்களிலும் கடவுளுடைய சக்தியின் உதவியால் எல்லா விதமான ஜெபங்களையும் மன்றாட்டுகளையும் ஏறெடுங்கள்.”

20. நம்முடைய ‘கவசம்’ நம்மைப் பாதுகாக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

20 ஒரு போர்வீரன் ஒருவேளை தலைக்கவசத்தையோ மார்புக் கவசத்தையோ போட்டுக்கொள்ளவில்லை என்றால், எதிரி அந்த இடத்தைக் குறிவைத்து தாக்குவான். நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு “முழு கவசத்தையும்” போட்டுக்கொள்ள வேண்டும்; ஒன்றைக்கூட விட்டுவிடக் கூடாது. அதை எப்போதும் போட்டிருக்க வேண்டும்; நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், சாத்தானுடைய உலகம் அழியும்வரை... சாத்தானும் அவனுடைய பேய்களும் இந்தப் பூமியிலிருந்து நீக்கப்படும்வரை... நாம் தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:17; 20:1-3) அதனால், தவறான ஆசைகளோ, ஏதாவது பலவீனங்களோ நமக்கு இருந்தால் அவற்றை எதிர்த்து நாம் விடாமல் போராட வேண்டும்.—1 கொரிந்தியர் 9:27.

21. நாம் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

21 சாத்தானுக்கு நம்மைவிட அதிக பலம் இருப்பதால், நம்முடைய சொந்த பலத்தால் அவனை ஜெயிக்க முடியாது. ஆனால், யெகோவாவின் உதவியோடு அவனை ஜெயிக்க முடியும்! நாம் எப்போதுமே யெகோவாவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்றால் அவரிடம் ஜெபம் செய்ய வேண்டும், அவருடைய வார்த்தையைப் படிக்க வேண்டும், நம் சகோதர சகோதரிகளோடு கூட்டுறவு வைத்துக்கொள்ள வேண்டும். (எபிரெயர் 10:24, 25) இப்படிச் செய்யும்போது நம்மால் கடவுளுக்கு உண்மையாக இருக்க முடியும். நம் விசுவாசத்துக்கு வரும் சோதனைகளைச் சமாளிக்க முடியும்.

விசுவாசத்துக்கு வரும் சோதனைகளைச் சமாளிக்கத் தயாராக இருங்கள்

22, 23. (அ) நம் விசுவாசத்துக்கு வரும் சோதனைகளைச் சமாளிக்க நாம் எப்படித் தயாராக இருக்கலாம்? (ஆ) அடுத்த அதிகாரத்தில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

22 நம் விசுவாசத்துக்கு வரும் சோதனைகளைச் சமாளிக்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். (யோவான் 15:19) சில விஷயங்களில் யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் மற்றவர்களைவிட ரொம்பவே வித்தியாசமாகச் செயல்படுகிறோம். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நாம் ஏன் இப்படி வித்தியாசமாக இருக்கிறோம் என்பதை நான் புரிந்திருக்கிறேனா? பைபிள் மற்றும் உண்மையும் விவேகமும் உள்ள அடிமை சொல்வது சரியென்று நான் உறுதியாக நம்புகிறேனா? ஒரு யெகோவாவின் சாட்சியாக இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேனா? (சங்கீதம் 34:2; மத்தேயு 10:32, 33) என் நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் என்னால் விளக்கிச் சொல்ல முடியுமா?’—மத்தேயு 24:45; யோவான் 17:17; 1 பேதுரு 3:15-ஐ வாசியுங்கள்.

23 நிறைய சூழ்நிலைகளில், இந்த உலகத்திலிருந்து பிரிந்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், சில சூழ்நிலையில் அது நமக்குச் சரியாகத் தெரியாமல் போகலாம். சாத்தான் நம்மைப் பல வழிகளில் சிக்கவைக்கப் பார்க்கிறான். அதில் ஒன்றுதான் பொழுதுபோக்கு. நாம் எப்படிப் பொழுதுபோக்கை ஞானமாகத் தேர்ந்தெடுக்கலாம்? அதைப் பற்றி அடுத்த அதிகாரத்தில் பார்க்கலாம்.