Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 2

கடவுளுக்கு முன் நல்ல மனசாட்சியோடு இருங்கள்

கடவுளுக்கு முன் நல்ல மனசாட்சியோடு இருங்கள்

“நல்ல மனசாட்சியோடு இருங்கள்.” —1 பேதுரு 3:16.

1, 2. பழக்கமில்லாத ஒரு இடத்துக்குப் போகும்போது நமக்கு ஏன் ஒரு வழிகாட்டி தேவை? யெகோவா நமக்கு எதை வழிகாட்டியாகத் தந்திருக்கிறார்?

 பரந்துவிரிந்த ஒரு பாலைவனத்தில் நீங்கள் நடந்துபோவதாகக் கற்பனை செய்யுங்கள். அங்கே அடிக்கிற பலமான காற்று, பல திசைகளில் மணலைச் சிதறடிப்பதால், அந்தப் பாலைவனத்தின் நிலப்பரப்பு மாறிக்கொண்டே இருக்கிறது. அதனால், நீங்கள் வழி தெரியாமல் திண்டாடுகிறீர்கள். எந்தத் திசையில் போக வேண்டும் என்பதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? உங்களுக்கு நம்பகமான ஒரு வழிகாட்டி தேவைப்படலாம். அந்த வழிகாட்டி ஒரு திசைமானியாக, சூரியனாக, நட்சத்திரங்களாக, வரைபடமாக, ஜிபிஎஸ்-ஆக (உலக இடம் காட்டும் அமைப்பு) அல்லது அந்தப் பாலைவனத்தைப் பற்றி நன்கு தெரிந்த ஒருவராக இருக்கலாம். ஆம், சரியான வழியைக் கண்டுபிடிக்கவும் நம் உயிரைப் பாதுகாக்கவும் ஒரு வழிகாட்டி இருப்பது ரொம்ப முக்கியம்.

2 வாழ்க்கையில் நம் எல்லாருக்கும் பல சவால்கள் வருகின்றன. சில சமயங்களில் அவற்றைச் சமாளிக்க வழி தெரியாமல் திண்டாடுகிறோம். ஆனால், நமக்கு வழிகாட்ட யெகோவா மனசாட்சியைக் கொடுத்திருக்கிறார். (யாக்கோபு 1:17) மனசாட்சி என்றால் என்ன என்பதையும் அது எப்படி வேலை செய்கிறது என்பதையும் முதலில் பார்க்கலாம். அடுத்ததாக, நம் மனசாட்சியை எப்படிப் பயிற்றுவிப்பது, மற்றவர்களுடைய மனசாட்சியை ஏன் மதிக்க வேண்டும், சுத்தமான மனசாட்சியால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் என்ன என்பதையெல்லாம் பார்க்கலாம்.

மனசாட்சி என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது?

3. மனசாட்சி என்றால் என்ன?

3 எது சரி, எது தவறு என்பதைப் பற்றிய ஒரு உணர்வுதான் மனசாட்சி. அது யெகோவா கொடுத்திருக்கும் ஒரு அருமையான பரிசு. ‘மனசாட்சியை’ குறிக்க பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, “ஒருவருக்குள் இருக்கும் அறிவு” என்ற அர்த்தத்தைத் தருகிறது. நம் மனசாட்சி சரியாக வேலை செய்யும்போது நாம் எப்படிப்பட்ட நபர் என்பதை ஆராய்ந்து பார்க்க முடியும். நம் அடிமனதில் இருக்கிற எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் நேர்மையாக எடைபோட்டுப் பார்க்க அது நமக்கு உதவும். நல்லதைச் செய்யவும் கெட்டதை விட்டுவிடவும் அது நமக்கு உதவும். நல்ல தீர்மானம் எடுக்கும்போது நம் மனசாட்சி நம்மைச் சந்தோஷப்படுத்தும். கெட்ட தீர்மானம் எடுக்கும்போது நம் மனசாட்சி நம்மை வாட்டியெடுக்கும்.—பின்குறிப்பு 5.

4, 5. (அ) ஆதாம்-ஏவாள் தங்கள் மனசாட்சி சொன்னதை அசட்டை செய்ததால் என்ன ஆனது? (ஆ) மனசாட்சி எப்படி வேலை செய்கிறது என்பதற்கு சில பைபிள் உதாரணங்களைச் சொல்லுங்கள்.

4 மனசாட்சி சொல்வதைக் கேட்பதா வேண்டாமா என்பதை நம் ஒவ்வொருவராலும் தீர்மானிக்க முடியும். ஆதாமும் ஏவாளும் தங்களுடைய மனசாட்சி சொன்னதைக் கேட்காமல் பாவம் செய்தார்கள். அதன் பிறகு, குற்ற உணர்வு அவர்களை வாட்டியது. ஆனால், என்ன பிரயோஜனம்! அவர்கள்தான் ஏற்கெனவே கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டார்களே! (ஆதியாகமம் 3:7, 8) ஆரம்பத்தில் அவர்களுடைய மனசாட்சி குறையில்லாததாக இருந்தது. கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போவது தவறு என்றும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அப்படியிருந்தும், தங்களுடைய மனசாட்சி சொன்னதை அவர்கள் வேண்டுமென்றே அசட்டை செய்தார்கள்.

5 ஆனால், பாவ இயல்புள்ள நிறைய பேர் தங்களுடைய மனசாட்சி சொன்னதைக் கேட்டு நடந்திருக்கிறார்கள். அதற்கு யோபு ஒரு சிறந்த உதாரணம். அவர் நல்ல தீர்மானங்கள் எடுத்ததால், “உயிரோடு இருக்கும்வரை என் உள்ளம் என்னை உறுத்தாது” என்று அவரால் சொல்ல முடிந்தது. (யோபு 27:6) யோபு தன்னுடைய மனசாட்சியைத்தான் “உள்ளம்” என்று இங்கே குறிப்பிட்டார். ஆனால், தாவீது தன் மனசாட்சி சொன்னதை ஒதுக்கித்தள்ளிவிட்டு, சில சமயங்களில் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனார். பிறகு, குற்ற உணர்வு அவரை வாட்டியதால் அவருடைய “நெஞ்சம் அடித்துக்கொண்டே இருந்தது” என்று பைபிள் சொல்கிறது. (1 சாமுவேல் 24:5) அதாவது, தான் செய்தது தவறு என்று தாவீதின் மனசாட்சி சொல்லிக்கொண்டே இருந்தது. தன் மனசாட்சி சொன்னதைக் கேட்டதால், அதே தவறைத் திரும்பவும் செய்யாமல் இருக்க தாவீது கற்றுக்கொண்டார்.

6. மனசாட்சி என்பது எல்லா மனிதர்களுக்குமே கடவுள் கொடுத்திருக்கும் பரிசு என்று ஏன் சொல்லலாம்?

6 யெகோவாவைப் பற்றித் தெரியாதவர்களுக்குக்கூட சில விஷயங்கள் சரி, சில விஷயங்கள் தவறு என்று தெரியும். அவர்களாகவே “யோசித்துப் பார்த்து, தாங்கள் குற்றமுள்ளவர்களா குற்றமில்லாதவர்களா என்பதைத் தாங்களே தீர்மானித்துக்கொள்கிறார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 2:14, 15) உதாரணத்துக்கு கொலை செய்வது, திருடுவது போன்ற விஷயங்கள் தவறு என்று பெரும்பாலான ஆட்களுக்குத் தெரியும். எப்படி? எது சரி, எது தவறு என்பதைப் பற்றிய உணர்வை, அதாவது மனசாட்சியை அவர்களுக்குள் யெகோவா வைத்திருக்கிறார். அதனால்தான், அவர்களை அறியாமலேயே அந்த மனசாட்சி சொல்வதைக் கேட்டு நடக்கிறார்கள். அதோடு, கடவுள் கொடுத்திருக்கும் நியமங்களின்படி, அதாவது வாழ்க்கையில் நல்ல தீர்மானங்களை எடுப்பதற்கு யெகோவா நமக்குக் கொடுத்திருக்கும் அடிப்படை உண்மைகளின்படி நடக்கிறார்கள்.

7. சில சமயங்களில் நம் மனசாட்சி நம்மை ஏன் தவறாக வழிநடத்தலாம்?

7 ஆனால், நம் மனசாட்சி சொல்வது சில சமயங்களில் தவறாகிவிடலாம். நாம் பாவிகளாக இருப்பதால் நம்முடைய எண்ணங்களாலும் விருப்பங்களாலும் நம் மனசாட்சி பாதிக்கப்படலாம். அதனால், அது நம்மைத் தவறாக வழிநடத்தலாம். நல்ல மனசாட்சி நமக்குத் தானாகவே வந்துவிடாது. (ஆதியாகமம் 39:1, 2, 7-12) அதை நாம் பயிற்றுவிக்க வேண்டும். அதற்காக யெகோவா தன்னுடைய சக்தியையும் பைபிள் நியமங்களையும் கொடுக்கிறார். (ரோமர் 9:1) நம் மனசாட்சியை எப்படிப் பயிற்றுவிக்கலாம் என்று இப்போது பார்க்கலாம்.

மனசாட்சியை எப்படிப் பயிற்றுவிப்பது?

8. (அ) நம் விருப்பங்கள் நம் மனசாட்சியை எப்படிப் பாதிக்கலாம்? (ஆ) ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு முன் நம்மையே என்ன கேட்டுக்கொள்ள வேண்டும்?

8 தங்களுடைய விருப்பத்தின்படி செய்வதுதான் மனசாட்சியின்படி நடப்பது என்று சிலர் நினைக்கிறார்கள். தங்களுடைய மனதுக்குச் சரியென படுகிற எதை வேண்டுமானாலும் செய்யலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், நாம் பாவிகளாக இருப்பதால், நம் விருப்பங்கள் நம்மைத் தவறாக வழிநடத்திவிடலாம். அவற்றை நிறைவேற்றியே ஆக வேண்டுமென்ற ஆசை நமக்குள் தீவிரமாக இருக்கும்போது, நம் மனசாட்சி பாதிக்கப்படலாம். “எல்லாவற்றையும்விட மனுஷனுடைய இதயமே நயவஞ்சகமானது; அது எதையும் செய்யத் துணியும். அதை யாரால் புரிந்துகொள்ள முடியும்?” என்று பைபிள் சொல்கிறது. (எரேமியா 17:9) அதனால், தவறான ஒரு விஷயத்தைக்கூட சரியானது என நாம் நினைத்துவிடலாம். உதாரணத்துக்கு, பவுல் ஒரு கிறிஸ்தவராக ஆவதற்கு முன், கடவுளுடைய மக்களைப் பயங்கரமாகத் துன்புறுத்தினார். தான் செய்வது சரி என்று அவர் நினைத்தார். அவரைப் பொறுத்தவரை, அவருக்கு நல்ல மனசாட்சி இருந்ததாக அவர் நினைத்தார். ஆனால், “என்னை நியாயந்தீர்ப்பவர் யெகோவாதான்” என்று பிற்பாடு சொன்னார். (1 கொரிந்தியர் 4:4; அப்போஸ்தலர் 23:1; 2 தீமோத்தேயு 1:3) பவுல், தான் செய்துகொண்டிருந்ததைப் பற்றி யெகோவா எப்படி உணர்ந்தார் என்பதைத் தெரிந்துகொண்டபோது தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டார். அப்படியானால், ஒரு விஷயத்தைச் செய்வதற்கு முன் நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘நான் என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்?’

9. கடவுளுக்குப் பயப்படுவது என்றால் என்ன?

9 ஒருவர்மீது நமக்கு அன்பு இருந்தால் அவருக்குப் பிடிக்காத எதையும் நாம் செய்ய மாட்டோம். யெகோவாமீது நமக்கு அன்பு இருப்பதால் அவருக்குப் பிடிக்காத எதையும் செய்ய நாம் விரும்புவதில்லை. அவருக்குப் பிடிக்காததைச் செய்துவிடுவோமோ என்ற பயம் நமக்குள் இருப்பது ரொம்பவே முக்கியம். நெகேமியா இதற்குச் சிறந்த உதாரணம். தன்னுடைய ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி பணக்காரராக ஆக வேண்டுமென்று அவர் நினைக்கவில்லை. “கடவுளுக்குப் பயந்து நடந்ததால் அப்படிச் செய்யவில்லை” என்று அவரே சொன்னார். (நெகேமியா 5:15) யெகோவாவுக்குப் பிடிக்காத எதையும் செய்துவிடக் கூடாது என்ற பயம் நெகேமியாவுக்கு இருந்தது போலவே நமக்கும் இருக்க வேண்டும். பைபிளை வாசிக்கும்போது, யெகோவாவுக்கு என்னென்ன விஷயங்கள் பிடிக்கும், என்னென்ன விஷயங்கள் பிடிக்காது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.—பின்குறிப்பு 6.

10, 11. குடிக்கும் விஷயத்தில் நல்ல தீர்மானங்கள் எடுக்க என்ன பைபிள் நியமங்கள் உதவும்?

10 உதாரணத்துக்கு, மதுபானம் குடிப்பதா வேண்டாமா என ஒரு கிறிஸ்தவர் தீர்மானிக்க வேண்டியிருக்கலாம். சரியான தீர்மானம் எடுக்க என்ன நியமங்கள் அவருக்கு உதவும்? சில நியமங்களைக் கவனியுங்கள். குடிப்பதை பைபிள் கண்டனம் செய்வதில்லை. சொல்லப்போனால், மனிதனின் சந்தோஷத்துக்காகவே திராட்சமதுவை கடவுள் கொடுத்திருக்கிறார். (சங்கீதம் 104:14, 15) ஆனால், ‘குடிவெறியை’ தவிர்க்க வேண்டுமென்று தன்னைப் பின்பற்றியவர்களிடம் இயேசு சொன்னார். (லூக்கா 21:34) “குடித்துக் கும்மாளம் போடுதல், குடிவெறி” போன்றவற்றைத் தவிர்க்கும்படி கிறிஸ்தவர்களிடம் பவுல் சொன்னார். (ரோமர் 13:13) குடிகாரர்கள், “கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று அவர் சொன்னார்.—1 கொரிந்தியர் 6:9, 10.

11 ஒரு கிறிஸ்தவர் தன்னையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘குடிக்கும் விஷயத்தில் நான் எப்படி இருக்கிறேன், அதற்காக நான் ஏங்குகிறேனா? சோர்வைப் போக்குவதற்காகக் குடிக்க வேண்டுமென்று நினைக்கிறேனா? குடித்தால்தான் எனக்கு தைரியம் வரும் என்று நினைக்கிறேனா? எவ்வளவு குடிப்பது, எத்தனை முறை குடிப்பது என்பது என் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? * நண்பர்களோடு சந்தோஷமாக நேரம் செலவிடும்போது மதுபானம் கண்டிப்பாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேனா?’ ஞானமாகத் தீர்மானம் எடுக்க நாம் யெகோவாவிடம் உதவி கேட்கலாம். (சங்கீதம் 139:23, 24-ஐ வாசியுங்கள்.) இந்த விதத்தில், பைபிள் நியமங்களின்படி செயல்பட நம் மனசாட்சியை நாம் பயிற்றுவிக்கிறோம். இன்னொரு விஷயத்தையும் நாம் மனதில் வைக்க வேண்டும். அதை இப்போது பார்க்கலாம்.

மற்றவர்களுடைய மனசாட்சியை ஏன் மதிக்க வேண்டும்?

12, 13. ஒவ்வொருவருடைய மனசாட்சியும் ஏன் வித்தியாசமாகச் செயல்படலாம்? அதனால் நாம் என்ன செய்ய வேண்டும்?

12 எல்லாருடைய மனசாட்சியும் ஒரே விதமாகச் செயல்படாது. ஒரு விஷயத்தைச் செய்ய உங்களுடைய மனசாட்சி அனுமதிக்கலாம். ஆனால், இன்னொருவருடைய மனசாட்சி அதைச் செய்யக் கூடாது என்று சொல்லலாம். உதாரணத்துக்கு, மதுபானத்தைக் குடிக்க ஒருவர் தீர்மானிக்கலாம்; ஆனால், இன்னொருவர் குடிக்கக் கூடாது என்று நினைக்கலாம். ஒரே விஷயத்தைப் பற்றி இரண்டு பேருக்கு இடையில் வித்தியாசமான கருத்துகள் இருப்பதற்குக் காரணம் என்ன?

குடிப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க, பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி உங்களுக்கு உதவும்

13 பெரும்பாலும் ஒருவர் வளர்ந்த ஊர், குடிப்பதைப் பற்றி அவருடைய சொந்தபந்தங்கள் கருதும் விதம், வாழ்க்கையில் அவர் எதிர்ப்பட்ட சம்பவங்கள் போன்றவை அதற்குக் காரணமாக இருக்கலாம். ஒருகாலத்தில், குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்த ஒருவர், குடிக்கவே கூடாது எனத் தீர்மானிக்கலாம். (1 ராஜாக்கள் 8:38, 39) அதனால், அப்படிப்பட்ட ஒருவருக்கு நீங்கள் மதுபானம் கொடுக்கும்போது அவர் அதை மறுக்கலாம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் புண்பட்டுவிடுவீர்களா? அவரை வற்புறுத்துவீர்களா? அவர் மறுப்பதற்கான காரணத்தைச் சொல்லும்படி அவரைக் கட்டாயப்படுத்துவீர்களா? அவருடைய மனசாட்சியை நீங்கள் மதிப்பதால் நிச்சயம் அப்படிச் செய்ய மாட்டீர்கள்.

14, 15. பவுலின் காலத்தில் என்ன பிரச்சினை இருந்தது? பவுல் என்ன அறிவுரை கொடுத்தார்?

14 ஒவ்வொருவருடைய மனசாட்சியும் வித்தியாசமாகச் செயல்படும் என்பதற்கு அப்போஸ்தலன் பவுலின் காலத்தில் நடந்த சம்பவத்தைப் பார்க்கலாம். சிலைகளுக்குப் பலி கொடுக்கப்பட்ட மிருகங்களின் இறைச்சி, சந்தைகளில் விற்கப்பட்டது. (1 கொரிந்தியர் 10:25) அதை வாங்கிச் சாப்பிடுவதை பவுல் தவறு என்று நினைக்கவில்லை. ஏனென்றால், எல்லா உணவையும் யெகோவாதான் தருகிறார் என அவர் நினைத்தார். ஆனால், முன்பு சிலைகளை வணங்கிவந்த சில சகோதரர்கள், அந்த இறைச்சியைச் சாப்பிடுவது தவறு என்று நினைத்தார்கள். ‘இது என் மனசாட்சிக்குத் தவறாகப் படவில்லை. எனக்குப் பிடித்ததைச் சாப்பிட எனக்கு உரிமை இருக்கிறது’ என்று பவுல் நினைத்தாரா?

15 பவுல் அப்படி நினைக்கவில்லை. தன் சகோதரர்களின் உணர்வுகளுக்கு அவர் ரொம்பவே மதிப்புக் கொடுத்தார். அதற்காக, தன்னுடைய உரிமைகள் சிலவற்றை விட்டுக்கொடுக்கவும் தயாராக இருந்தார். “நமக்குப் பிரியமாக நாம் நடந்துகொள்ளக் கூடாது” என்று பவுல் சொன்னார். ‘கிறிஸ்துவும் தனக்குப் பிரியமாக நடந்துகொள்ளவில்லை’ என்றும் அவர் சொன்னார். (ரோமர் 15:1, 3) இயேசுவைப் போல பவுலும், தன்னைவிட மற்றவர்களை முக்கியமானவர்களாக நினைத்தார்.1 கொரிந்தியர் 8:13; 10:23, 24, 31-33-ஐ வாசியுங்கள்.

16. நம் சகோதரரின் மனசாட்சிக்கு ஒரு விஷயம் சரியெனப் படும்போது, நாம் ஏன் அவரை நியாயந்தீர்க்கக் கூடாது?

16 ஆனால், மற்றவர்களுடைய மனசாட்சிக்குச் சரியெனப் படுவது நம்முடைய மனசாட்சிக்குத் தவறெனப் பட்டால் என்ன செய்வது? இந்த விஷயத்தில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களைக் குறைசொல்லவோ நாம் சொல்வதுதான் சரி என்று அடித்துப்பேசவோ கூடாது. (ரோமர் 14:10-ஐ வாசியுங்கள்.) யெகோவா நமக்கு மனசாட்சியைக் கொடுத்திருப்பது, நாம் செய்வது சரியா தவறா என்பதைத் தீர்மானிப்பதற்காகத்தான், மற்றவர்களை நியாயந்தீர்ப்பதற்காக அல்ல. (மத்தேயு 7:1) சபையில் பிரிவினை ஏற்படுவதற்கு நம்முடைய சொந்த விருப்பங்கள் காரணமாகிவிட நாம் ஒருபோதும் விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக, சபையில் அன்பும் ஒற்றுமையும் செழித்தோங்க நாம் வழி தேடுகிறோம்.—ரோமர் 14:19.

நல்ல மனசாட்சியால் கிடைக்கும் நன்மைகள்

17. சிலருடைய மனசாட்சிக்கு என்ன ஆகியிருக்கிறது?

17 “நல்ல மனசாட்சியோடு இருங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பேதுரு 3:16) வருத்தமான விஷயம் என்னவென்றால், சிலர் யெகோவாவின் நியமங்களைத் தொடர்ந்து அசட்டை செய்வதால், கடைசியில் அவர்களுடைய மனசாட்சி அவர்களை எச்சரிப்பதையே நிறுத்திவிடுகிறது. இப்படிப்பட்ட மனசாட்சியை “காய்ச்சிய கம்பியால் தழும்புண்டான மனசாட்சி” என்று பவுல் குறிப்பிட்டார். (1 தீமோத்தேயு 4:2; அடிக்குறிப்பு.) உங்களுக்கு எப்போதாவது பயங்கரமான தீக்காயம் ஏற்பட்டிருக்கிறதா? அப்படி நடந்திருந்தால், காயம்பட்ட இடத்தில் ஒரு பெரிய தழும்பு ஏற்பட்டிருக்கும். அந்த இடத்தைத் தொட்டால் உணர்ச்சியே இருக்காது. அதேபோல், ஒருவர் தொடர்ந்து தவறு செய்துகொண்டிருந்தால், அவருடைய மனசாட்சி ‘தழும்புண்டானதாக’ ஆகிவிடும், கடைசியில் செயல்படாமல் போய்விடும்.

நல்ல மனசாட்சி நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்து நமக்குச் சந்தோஷத்தையும் மன நிம்மதியையும் தரும்

18, 19. (அ) குற்ற உணர்வும் அவமானமும் ஏற்படும்போது நாம் என்ன செய்யத் தூண்டப்படுவோம்? (ஆ) மனம் திருந்திய பிறகும் குற்ற உணர்வால் நாம் தவித்தால் என்ன செய்வது?

18 குற்ற உணர்வு ஏற்படும்போது, நாம் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்று நம் மனசாட்சி நம்மிடம் சொல்லலாம். நாம் என்ன தவறு செய்தோம் என்பதைக் கண்டுபிடித்து, அதை நிறுத்த அது நமக்கு உதவும். செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால்தான் நாம் திரும்பவும் அதைச் செய்யாமல் இருப்போம். உதாரணத்துக்கு, தாவீது ராஜா பாவம் செய்த பிறகு, மனம் திருந்தும்படி அவருடைய மனசாட்சி அவரைத் தூண்டியது. தான் செய்த பாவத்தை அடியோடு வெறுத்தது மட்டுமல்லாமல், யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவும் அவர் தீர்மானமாக இருந்தார். அதனால்தான், தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து தாவீது இப்படிச் சொன்னார்: “யெகோவாவே, நீங்கள் நல்லவர், மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்.”—சங்கீதம் 51:1-19; 86:5; பின்குறிப்பு 7

19 ஆனால், ஒருவர் மனம் திருந்தி பல காலத்துக்குப் பிறகும் குற்ற உணர்வால் தவிக்கலாம். அந்த உணர்வு ஒருவருக்கு அதிக வேதனையைத் தரலாம், தான் எதற்கும் லாயக்கில்லை என்று நினைக்க வைக்கலாம். ஒருவேளை நீங்கள் அப்படி உணர்ந்தால், நடந்து முடிந்த விஷயத்தை உங்களால் மாற்ற முடியாது என்பதை நினைவில் வையுங்கள். நீங்கள் செய்தது தவறா இல்லையா என்பதைப் பற்றி அந்தச் சமயத்தில் உங்களுக்குத் தெரிந்திருந்ததோ இல்லையோ, யெகோவா உங்களை முழுமையாக மன்னித்து அந்தப் பாவங்களைத் துடைத்தழித்துவிட்டார். அதனால், யெகோவாவுக்கு முன் நீங்கள் சுத்தமாக இருக்கிறீர்கள். இப்போது, சரியானதைச் செய்துவருகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். அப்படியிருந்தும் உங்கள் இதயம் இன்னும் உங்களைக் கண்டனம் செய்துகொண்டிருக்கலாம். ஆனால், “கடவுள் நம் இதயத்தைவிட உயர்ந்தவராக இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 3:19, 20-ஐ வாசியுங்கள்.) அப்படியானால், நமக்குள் இருக்கிற குற்ற உணர்வையும் அவமானத்தையும் சமாளிக்க அவர் நம்மிடம் காட்டும் அன்பும், அவர் தரும் மன்னிப்பும் உதவும். அதனால், யெகோவா உங்களை மன்னித்துவிட்டார் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். யெகோவா தன்னை மன்னித்துவிட்டார் என்பதை ஒருவர் உணரும்போது அவருடைய மனசாட்சி நிம்மதியாக இருக்கும். அவரால் கடவுளுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்ய முடியும்.—1 கொரிந்தியர் 6:11; எபிரெயர் 10:22.

20, 21. (அ) இந்தப் புத்தகம் எதற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது? (ஆ) யெகோவா நமக்குக் கொடுத்திருக்கும் சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

20 சமாளிக்க முடியாத இந்தக் கடைசி நாட்களில், உங்களை எச்சரித்து, பாதுகாப்பதற்கு உங்களுடைய மனசாட்சியைப் பயிற்றுவிக்க வேண்டும். அதற்கு உதவவே இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, வாழ்க்கையில் பல வித்தியாசப்பட்ட சூழ்நிலைகளில் பைபிள் நியமங்களின்படி நடக்க இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவும். ஆனால், ஒவ்வொரு சூழ்நிலையிலும் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான விலாவாரியான சட்டங்களை இந்தப் புத்தகம் தருவதில்லை. நாம் ‘கிறிஸ்துவின் சட்டத்தின்படி’ வாழ்கிறோம். அது கடவுளுடைய நியமங்களின் அடிப்படையிலானது. (கலாத்தியர் 6:2) ஒரு விஷயத்தைப் பற்றி எந்தச் சட்டமும் இல்லை என்பதற்காக அதைச் சாக்காகப் பயன்படுத்தி ஒரு தவறான விஷயத்தை நாம் செய்வதில்லை. (2 கொரிந்தியர் 4:1, 2; எபிரெயர் 4:13; 1 பேதுரு 2:16) அதற்குப் பதிலாக நமக்கிருக்கும் சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்தி யெகோவாமீதுள்ள அன்பைக் காட்டுகிறோம்.

21 பைபிள் நியமங்களை ஆழமாக யோசித்துப் பார்த்து அவற்றின்படி நடக்கும்போது, நம் “பகுத்தறியும் திறன்களை” பயன்படுத்த, அதாவது எது சரி எது தவறு என்பதைப் பிரித்துப் பார்க்க கற்றுக்கொள்வோம். அதோடு, யெகோவா யோசிக்கும் விதமாக யோசிக்கவும் கற்றுக்கொள்வோம். (எபிரெயர் 5:14) இந்த விதத்தில், பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி, நம் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும். கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்கவும் உதவும்.

^ குடிக்கு அடிமையானவர்களால், அளவாகக் குடிக்க முடியாது என்று நிறைய மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதனால், அப்படிப்பட்டவர்கள் குடிக்கவே கூடாது என்று சொல்கிறார்கள்.