Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 1

கடவுளுடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்

கடவுளுடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்

“நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான் அவர்மீது அன்பு காட்டுவதாகும். அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.”—1 யோவான் 5:3.

1, 2. யெகோவாமீது நீங்கள் ஏன் அன்பு வைத்திருக்கிறீர்கள்?

 கடவுள்மீது உங்களுக்கு அன்பு இருக்கிறதா? அவர்மீது உங்களுக்கு ரொம்ப அன்பு இருப்பதால்தான் உங்களையே அவருக்கு அர்ப்பணித்திருக்கிறீர்கள். அவரை உங்கள் நெருங்கிய நண்பராக நீங்கள் உணருகிறீர்கள். ஆனால், நீங்கள் அவர்மீது அன்பு காட்டுவதற்கு முன்பே அவர் உங்கள்மீது அன்பு காட்டியிருக்கிறார். “கடவுள் முதலில் நம்மேல் அன்பு காட்டியதால் நாமும் அன்பு காட்டுகிறோம்” என்று பைபிள் சொல்கிறது.—1 யோவான் 4:19.

2 கடவுள் நம்மீது எந்தெந்த விதங்களில் அன்பு காட்டியிருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். இந்த அழகான பூமியை நமக்கு வீடாகக் கொடுத்திருக்கிறார். நாம் சந்தோஷமாக வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். (மத்தேயு 5:43-48; வெளிப்படுத்துதல் 4:11) நாம் அவரோடு நெருங்கிய பந்தம் வைத்துக்கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அதோடு, அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அவர் வழி செய்திருக்கிறார். பைபிளை வாசிக்கும்போது, யெகோவா பேசுவதை நாம் கேட்கிறோம். ஜெபம் செய்யும்போது, நாம் பேசுவதை அவர் கேட்கிறார். (சங்கீதம் 65:2) அவர் தன்னுடைய வல்லமையுள்ள சக்தியின் மூலம் நம்மை வழிநடத்துகிறார், பலப்படுத்துகிறார். (லூக்கா 11:13) நம்மைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிப்பதற்காக தன்னுடைய அருமை மகனையே பூமிக்கு அனுப்பியிருக்கிறார்.யோவான் 3:16-ஐயும் ரோமர் 5:8-ஐயும் வாசியுங்கள்.

3. யெகோவாவோடு நமக்கிருக்கும் நட்பு நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?

3 உங்களுடைய நெருங்கிய நண்பரைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்களுடைய சந்தோஷத்திலும் சோகத்திலும் அவர் கூடவே இருந்திருப்பார். அப்படிப்பட்ட ஒரு நண்பரோடு உங்களுக்கு இருக்கும் நட்பு நிலைத்திருக்க நீங்கள் முயற்சி செய்வீர்கள். அதேபோல், நம்முடைய மிக நெருங்கிய நண்பரான யெகோவாவோடு உள்ள நட்பு நிலைத்திருக்கவும் நாம் முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் என்றென்றும் அவருடைய நண்பராக இருக்க முடியும். “கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (யூதா 21) அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? பைபிள் தரும் பதில் இதுதான்: “நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான் அவர்மீது அன்பு காட்டுவதாகும். அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.”—1 யோவான் 5:3.

கடவுள்மீது ‘அன்பு காட்டுவது’

4, 5. யெகோவாமீது உங்களுக்கு எப்போது அன்பு ஊற்றெடுக்க ஆரம்பித்தது?

4 கடவுள்மீது அன்பு காட்டுவதைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் அந்த வசனத்தில் சொல்கிறார். முதன்முதலில் யெகோவாமீது உங்களுக்கு எப்போது அன்பு ஊற்றெடுக்க ஆரம்பித்தது?

யெகோவாவுக்கு உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கும்போது அவர்மீது உங்களுக்கு அன்பு இருக்கிறது என்பதையும் அவருக்கு என்றென்றும் கீழ்ப்படிய விரும்புகிறீர்கள் என்பதையும் காட்டுகிறீர்கள்

5 புதிய உலகத்தில் நீங்கள் என்றென்றும் வாழ வேண்டுமென்று யெகோவா ஆசைப்படுவதைப் பற்றி முதன்முதலில் கற்றுக்கொண்டது உங்களுக்கு ஞாபகமிருக்கும். அதற்காக யெகோவா என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள். நமக்காகத் தன்னுடைய மகனையே ஒரு சிறந்த பரிசாகக் கொடுத்திருக்கிறார் என்பதையும் கற்றுக்கொண்டீர்கள். (மத்தேயு 20:28; யோவான் 8:29; ரோமர் 5:12, 18) யெகோவா உங்களை எந்தளவு நேசிக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டபோது உங்களுடைய இதயம் தூண்டப்பட்டு நீங்களும் அவரை நேசிக்க ஆரம்பித்தீர்கள்.1 யோவான் 4:9, 10-ஐ வாசியுங்கள்.

6. ஒருவர்மீது அன்பு இருந்தால் நாம் என்ன செய்வோம்? கடவுள்மீது இருக்கும் அன்பு என்ன செய்ய உங்களைத் தூண்டியது?

6 கடவுள்மீது உங்களுக்கு உருவான அந்த அன்பு ஒரு ஆரம்பம் மட்டும்தான். பொதுவாக, ஒருவர்மீது நமக்கு அன்பு இருந்தால் அதை வாயளவில் மட்டுமே சொல்ல மாட்டோம். அவரைச் சந்தோஷப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்வதன் மூலம் அந்த அன்பைச் செயலில் காட்டுவோம். அதேபோல், யெகோவாமீது உங்களுக்கு இருந்த அன்புதான், அவருடைய மனதைச் சந்தோஷப்படுத்தும் விதத்தில் வாழ உங்களைத் தூண்டியது. அந்த அன்பு அதிகமானபோது உங்களையே அவருக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்தீர்கள். நீங்கள் ஞானஸ்நானம் எடுத்தபோது, யெகோவாவுக்கு என்றென்றும் சேவை செய்வதாக வாக்குக் கொடுத்தீர்கள். (ரோமர் 14:7, 8-ஐ வாசியுங்கள்.) அந்த வாக்கை நீங்கள் எப்படிக் காப்பாற்றலாம்?

“கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பது”

7. யெகோவாமீது நமக்கு அன்பு இருந்தால் நாம் என்ன செய்வோம்? அவர் கொடுத்திருக்கும் சில கட்டளைகள் யாவை?

7 யெகோவாமீது நமக்கு அன்பு இருப்பதால் நாம் அவருடைய ‘கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்.’ அவருக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அதைச் செய்கிறோம். நாம் எப்படி வாழ வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார் என பைபிளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். உதாரணத்துக்கு, தனக்குப் பதிலாக வேறு எதையாவது அல்லது யாரையாவது வணங்குவது தவறு என்று யெகோவா நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார். அதோடு, குடித்து வெறிப்பது, திருடுவது, பொய் சொல்லுவது, மணத்துணை அல்லாத ஒருவரோடு செக்ஸ் வைத்துக்கொள்வது போன்ற விஷயங்களும் தவறு என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார்.—1 கொரிந்தியர் 5:11; 6:18; 10:14; எபேசியர் 4:28; கொலோசெயர் 3:9.

8, 9. ஒரு விஷயத்தைப் பற்றி பைபிளில் நேரடியான கட்டளை இல்லாதபோது யெகோவாவுக்கு எது பிடிக்கும் என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்? உதாரணம் கொடுங்கள்.

8 யெகோவாவின் மனதைச் சந்தோஷப்படுத்த அவர் கொடுத்திருக்கும் நேரடியான கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். ஆனால், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தேவையான கட்டளைகளைப் பட்டியல் போட்டு யெகோவா கொடுக்கவில்லை. அப்படி, நேரடியான கட்டளைகள் இல்லாத சூழ்நிலைகளில், சரியான தீர்மானங்களை நாம் எப்படி எடுக்கலாம்? (எபேசியர் 5:17) அதற்கு உதவும் நிறைய நியமங்கள் பைபிளில் இருக்கின்றன. சில விஷயங்களை யெகோவா எப்படிக் கருதுகிறார் என்பதைக் கற்றுத்தரும் அடிப்படை உண்மைகள்தான் அந்த நியமங்கள். பைபிளைப் படிக்க படிக்க நாம் யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வோம். அவர் எப்படி யோசிக்கிறார், எதை நேசிக்கிறார், எதை வெறுக்கிறார் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.சங்கீதம் 97:10-ஐ வாசியுங்கள்; நீதிமொழிகள் 6:16-19; பின்குறிப்பு 1.

9 உதாரணத்துக்கு, டிவி-யில் அல்லது இன்டர்நெட்டில் எதைப் பார்க்கலாம் என்று நாம் எப்படித் தீர்மானிப்போம்? இதைப் பற்றிய நேரடியான கட்டளைகளை யெகோவா கொடுக்கவில்லை. ஆனால், இது சம்பந்தமாக அவர் கொடுத்திருக்கும் நியமங்கள் சரியான தீர்மானங்களை எடுக்க நமக்கு உதவும். இன்றுள்ள பெரும்பாலான பொழுதுபோக்குகளில் வன்முறை, செக்ஸ் பற்றிய விஷயங்கள்தான் நிறைய இருக்கின்றன. “வன்முறையை விரும்புகிற எவனையும் அவர் வெறுக்கிறார்” என்றும் “பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்களை . . . கடவுள் நியாயந்தீர்ப்பார்” என்றும் பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 11:5; எபிரெயர் 13:4) சரியான தீர்மானங்களை எடுக்க இந்த நியமங்கள் நமக்கு எப்படி உதவும்? யெகோவா ஒரு விஷயத்தை வெறுக்கிறார் அல்லது அதை மோசமானதாகக் கருதுகிறார் என்பதைத் தெரிந்துகொண்டதும் அதை நாம் விட்டுவிட வேண்டும்.

10, 11. நாம் ஏன் யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறோம்?

10 நாம் ஏன் யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறோம்? வெறுமனே தண்டனையையோ தவறான தீர்மானங்களை எடுப்பதால் வரும் பிரச்சினைகளையோ தவிர்ப்பதற்காக நாம் அப்படிச் செய்வதில்லை. (கலாத்தியர் 6:7) யெகோவாமீது நமக்கு அன்பு இருப்பதால்தான் அவருக்குக் கீழ்ப்படிகிறோம். ஒரு பிள்ளை தன் அப்பாவைச் சந்தோஷப்படுத்த விரும்புவதுபோல், நாமும் நம் பரலோக அப்பாவைச் சந்தோஷப்படுத்த விரும்புகிறோம். யெகோவா நம்மீது பிரியமாக இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதைவிட சந்தோஷமான விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது.—சங்கீதம் 5:12; நீதிமொழிகள் 12:2; பின்குறிப்பு 2.

11 நமக்குச் சுலபமாக இருக்கும்போது அல்லது வேறு வழியே இல்லாதபோது மட்டும் நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது கிடையாது. அதோடு, அவர் கொடுத்திருக்கும் கட்டளைகளில் எந்தெந்த கட்டளைகளுக்குக் கீழ்ப்படியலாம் எந்தெந்த கட்டளைகளை விட்டுவிடலாம் என்று நாமாகவே தீர்மானிப்பதும் கிடையாது. (உபாகமம் 12:32) அதற்குப் பதிலாக, சங்கீதக்காரனைப் போல அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படிகிறோம். “உங்களுடைய கட்டளைகளை நான் மிகவும் விரும்புகிறேன். அவற்றை நேசிக்கிறேன்” என்று அவர் சொன்னார். (சங்கீதம் 119:47; ரோமர் 6:17) நாம் நோவாவைப் போல நடந்துகொள்ள விரும்புகிறோம். யெகோவா கொடுத்த எல்லா கட்டளைகளின்படியும் செய்வதன் மூலம் யெகோவாமீது அன்பு இருப்பதை அவர் காட்டினார். நோவா “அப்படியே செய்தார்” என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 6:22) உங்களைப் பற்றியும் யெகோவா அப்படிச் சொல்ல வேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா?

12. யெகோவாவை நாம் எப்படிச் சந்தோஷப்படுத்த முடியும்?

12 நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படியும்போது அவருடைய ‘இதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறோம்’ என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 11:20; 27:11) இது எவ்வளவு பெரிய விஷயம்! கீழ்ப்படிவதன் மூலம் இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளரையே சந்தோஷப்படுத்துகிறோம். ஆனால், அப்படிக் கீழ்ப்படியும்படி அவர் நம்மைக் கட்டாயப்படுத்துவது கிடையாது. அதற்குப் பதிலாக, சொந்தமாகத் தீர்மானிக்கும் திறமையை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். அப்படியென்றால், சரியானதை அல்லது தவறானதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. தன்மீது இருக்கும் அன்பினால் தூண்டப்பட்டு நாம் நல்ல தீர்மானங்களை எடுக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். அப்போதுதான் நம்மால் சிறந்த வாழ்க்கை வாழ முடியும் என்று அவருக்குத் தெரியும்.—உபாகமம் 30:15, 16, 19, 20; பின்குறிப்பு 3.

“அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல”

13, 14. கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது ரொம்பக் கஷ்டம் கிடையாது என்று ஏன் சொல்லலாம்? உதாரணத்துடன் விளக்குங்கள்.

13 சில சமயங்களில், யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது ரொம்பக் கஷ்டம் என்றோ, அவை நம் சுதந்திரத்தைப் பறித்துவிடும் என்றோ நாம் நினைக்கலாம். ஆனால், “அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல” என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (1 யோவான் 5:3) “பாரமானவை” என்பதற்கான கிரேக்க வார்த்தையின் அர்த்தம் “கனமானவை.” மற்ற வசனங்களில், அநியாயமான சட்டங்களையும் மற்றவர்களை அடக்கி ஒடுக்கும் ஆட்களையும் குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. (மத்தேயு 23:4; அப்போஸ்தலர் 20:29, 30) பொது மொழிபெயர்ப்பு பைபிள் இப்படிச் சொல்கிறது: “அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை.” ஆம், யெகோவாவின் கட்டளைகள் “கனமானவை” அல்ல, அதாவது அவற்றுக்குக் கீழ்ப்படிவது ரொம்பக் கஷ்டம் கிடையாது. யெகோவா எப்போதுமே நியாயமாக நடந்துகொள்கிறவர். நம்மால் முடியாத ஒன்றைச் செய்யும்படி அவர் நம்மிடம் எதிர்பார்க்க மாட்டார்.

14 உதாரணத்துக்கு, வேறொரு வீட்டுக்குக் குடிமாறிப் போகிற உங்கள் நண்பருக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொள்ளுங்கள். சாமான்களையெல்லாம் அவர் அட்டைப் பெட்டிகளில் வைத்திருக்கிறார். சில பெட்டிகள் தூக்குவதற்கு லேசாக இருக்கின்றன. ஆனால், சில பெட்டிகள் இரண்டு பேர் சேர்ந்து தூக்கும் அளவுக்கு ரொம்பவே கனமாக இருக்கின்றன. கனமாக இருக்கும் ஒரு பெட்டியைத் தன்னந்தனியாகத் தூக்கும்படி உங்கள் நண்பர் உங்களிடம் சொல்வாரா? நிச்சயம் சொல்ல மாட்டார். ஏனென்றால், அப்படித் தூக்கினால் உங்களுக்கு ஏதாவது ஆகிவிடும் என்று அவருக்குத் தெரியும். அந்த நண்பரைப் போலவே, யெகோவாவும் ரொம்பக் கஷ்டமான ஒன்றைச் செய்யும்படி நம்மிடம் சொல்லவே மாட்டார். (உபாகமம் 30:11-14) நம்மைப் பற்றி யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். “நாம் எப்படி உருவாக்கப்பட்டோம் என்பதை அவர் நன்றாக அறிந்திருக்கிறார். நாம் மண் என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்.”—சங்கீதம் 103:14.

15. யெகோவாவின் கட்டளைகள் நம்முடைய நல்லதுக்காகத்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று நாம் எப்படி உறுதியாகச் சொல்லலாம்?

15 யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் “என்றென்றைக்கும் நன்றாக வாழ” முடியும் என்று இஸ்ரவேலர்களிடம் மோசே சொன்னார். (உபாகமம் 5:28-33; 6:24) இன்றும் நம்முடைய நல்லதுக்காகவே யெகோவா கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார். அவற்றின்படி நடந்தால் நம் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். (ஏசாயா 48:17-ஐ வாசியுங்கள்.) நமக்கு எது சிறந்தது என்று நம் அப்பாவான யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். (ரோமர் 11:33) “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 4:8) அப்படியென்றால், யெகோவா எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் அதில் அவருடைய அன்பைப் பார்க்க முடியும்.

16 நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தாலும், பொல்லாத உலகத்தில் வாழ்ந்தாலும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க நம்மால் முடியும் என்று எப்படிச் சொல்லலாம்?

16 கடவுளுக்குக் கீழ்ப்படிவது எல்லா சமயத்திலும் நமக்குச் சுலபமாக இருக்காது. ஏனென்றால், சாத்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிற பொல்லாத உலகத்தில் நாம் வாழ்கிறோம். கெட்டதைச் செய்ய அவன் மக்களைத் தூண்டுகிறான். (1 யோவான் 5:19) அதோடு, நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் கெட்ட எண்ணங்களோடும் உணர்ச்சிகளோடும் போராட வேண்டியிருக்கிறது. கடவுளுக்குப் பிடிக்காததைச் செய்ய அவை நம்மைத் தூண்டலாம். (ரோமர் 7:21-25) ஆனால், யெகோவாமீதுள்ள அன்பு சரியானதைச் செய்ய நமக்குப் பலத்தைத் தருகிறது. அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க நாம் எடுக்கும் முயற்சிகளை அவர் பார்க்கிறார். அவருடைய வல்லமையுள்ள சக்தியைத் தந்து நமக்கு உதவுகிறார். (1 சாமுவேல் 15:22, 23; அப்போஸ்தலர் 5:32) அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க உதவும் குணங்களை வளர்க்க அந்தச் சக்தி நமக்கு உதவுகிறது.—கலாத்தியர் 5:22, 23.

17, 18. (அ) இந்தப் புத்தகத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்வோம்? (ஆ) அடுத்த அதிகாரத்தில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

17 யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ்வது எப்படியென்று இந்தப் புத்தகத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வோம். அவர் கொடுத்திருக்கும் நியமங்களையும் ஒழுக்க நெறிகளையும் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்றும் கற்றுக்கொள்வோம். ஆனால், தனக்குக் கீழ்ப்படியும்படி யெகோவா நம்மைக் கட்டாயப்படுத்துவது கிடையாது. நாம் மனதார அவருக்குக் கீழ்ப்படிந்தால், நம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும், அருமையான எதிர்காலமும் நமக்குக் கிடைக்கும். மிக முக்கியமாக, அவருக்குக் கீழ்ப்படியும்போது அவர்மீது எந்தளவு அன்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம்.—பின்குறிப்பு 4.

18 எது சரி, எது தவறு என்பதைத் தெரிந்துகொள்ள யெகோவா நம் ஒவ்வொருவருக்கும் மனசாட்சியைக் கொடுத்திருக்கிறார். நம் மனசாட்சியைப் பயிற்றுவித்தால் ‘கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க’ அது நமக்கு உதவும். மனசாட்சி என்றால் என்ன, அதை நாம் எப்படிப் பயிற்றுவிக்கலாம்? அடுத்த அதிகாரத்தில் அதைப் பார்ப்போம்.