Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 8

யெகோவா தன் மக்களிடம் சுத்தத்தை எதிர்பார்க்கிறார்

யெகோவா தன் மக்களிடம் சுத்தத்தை எதிர்பார்க்கிறார்

“தூய்மையானவருக்கு நீங்கள் தூய்மையானவராக இருக்கிறீர்கள்.”—சங்கீதம் 18:26.

1-3. (அ) ஒரு அம்மா தன் மகனை ஏன் சுத்தமாக வைத்துக்கொள்கிறாள்? (ஆ) தன் மக்கள் சுத்தமாக இருக்க வேண்டுமென்று யெகோவா ஏன் விரும்புகிறார்?

 பாசமுள்ள ஒரு அம்மா தன் மகனைப் பள்ளிக்கு அனுப்ப அவனைத் தயார்படுத்துவதாக கற்பனை செய்யுங்கள். அவனைக் குளிப்பாட்டி அவனுக்குச் சுத்தமான, நேர்த்தியான உடையைப் போட்டுவிடுகிறாள். அவன் ஆரோக்கியமாக இருக்க இது உதவுகிறது. அவனுடைய அப்பா-அம்மா அவனை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார்கள் என்பதை மற்றவர்களுக்கு இது காட்டுகிறது.

2 நம் அப்பாவான யெகோவா, நாம் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். (சங்கீதம் 18:26) சுத்தமாக இருந்தால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என்று அவருக்குத் தெரியும். சுத்தமாக இருப்பதன் மூலம் நாம் அவருக்கு மகிமை சேர்க்கிறோம்.—எசேக்கியேல் 36:22; 1 பேதுரு 2:12-ஐ வாசியுங்கள்.

3 சுத்தமாக இருப்பது என்றால் என்ன? அதனால் நமக்கு என்ன நன்மை? இந்தக் கேள்விகளைச் சிந்திக்கும்போது, நாம் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

நாம் ஏன் சுத்தமாக இருக்க வேண்டும்?

4, 5. (அ) நாம் ஏன் சுத்தமாக இருக்க வேண்டும்? (ஆ) சுத்தத்தை யெகோவா கருதும் விதத்தைப் பற்றி படைப்பிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?

4 நாம் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும் என்பதை யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். அவர்தான் நமக்குச் சிறந்த முன்மாதிரி. (லேவியராகமம் 11:44, 45) நாம் சுத்தமாக இருக்க வேண்டியதற்கான முக்கிய காரணமே நாம் ‘கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்ற’ விரும்புவதுதான்.—எபேசியர் 5:1.

5 சுத்தத்தை யெகோவா எப்படிக் கருதுகிறார் என்பதைப் படைப்பிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். காற்றையும் தண்ணீரையும் சுத்தப்படுத்துவதற்கு இயற்கைச் சுழற்சிகளை யெகோவா அமைத்திருக்கிறார். (எரேமியா 10:12) மனிதர்கள் இந்தப் பூமியை மாசுப்படுத்தினாலும் அது தன்னைத் தானே எப்படியெல்லாம் சுத்தப்படுத்திக்கொள்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். உதாரணத்துக்கு, நுண்ணோக்கியால் (microscope) மட்டுமே பார்க்க முடிந்த உயிரினங்களை யெகோவா படைத்திருக்கிறார். இவற்றால் நச்சுக் கழிவுகளை ஆபத்தில்லாத பொருள்களாக மாற்ற முடியும். இது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. தூய்மைக்கேட்டினால் வரும் பாதிப்புகளைச் சரிசெய்ய விஞ்ஞானிகளும் இந்த உயிரினங்களில் சிலவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.—ரோமர் 1:20.

6, 7. யெகோவாவை வணங்குகிறவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை திருச்சட்டம் எப்படிக் காட்டியது?

6 சுத்தமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த திருச்சட்டத்திலிருந்தும் தெரிந்துகொள்கிறோம். உதாரணத்துக்கு, தங்களுடைய வணக்கத்தை யெகோவா ஏற்றுக்கொள்வதற்கு அந்த மக்கள் சுத்தமாக இருக்க வேண்டியிருந்தது. பாவப் பரிகார நாளில், தலைமைக் குரு இரண்டு முறை குளிக்க வேண்டியிருந்தது. (லேவியராகமம் 16:4, 23, 24) மற்ற குருமார்கள் பலிகளைச் செலுத்துவதற்கு முன், தங்களுடைய கைகால்களைக் கழுவ வேண்டியிருந்தது. (யாத்திராகமம் 30:17-21; 2 நாளாகமம் 4:6) சுத்தம் சம்பந்தமான சட்டங்களுக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கு சில சூழ்நிலைகளில் மரண தண்டனை கொடுக்கப்பட்டது.—லேவியராகமம் 15:31; எண்ணாகமம் 19:17-20.

7 யெகோவாவின் நெறிமுறைகளைப் பற்றி திருச்சட்டத்திலிருந்து நம்மால் அதிகமாகத் தெரிந்துகொள்ள முடியும். (மல்கியா 3:6) தன்னை வணங்குகிறவர்கள் சுத்தமாக இருக்க வேண்டுமென்று யெகோவா விரும்புவதை திருச்சட்டம் தெளிவாகக் காட்டியது. யெகோவாவின் நெறிமுறைகள் மாறவில்லை. இன்றும்கூட, தன்னை வணங்குகிறவர்கள் சுத்தமாக, தூய்மையாக இருக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார்.—யாக்கோபு 1:27.

சுத்தமாக இருப்பது என்றால் என்ன?

8. என்னென்ன விஷயங்களில் நாம் சுத்தமாக இருக்க வேண்டும்?

8 யெகோவாவின் பார்வையில் சுத்தமாக இருப்பதற்கு, நம்முடைய உடலையும் உடையையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருந்தால் மட்டும் போதாது. நம்முடைய வணக்கம், நடத்தை, எண்ணங்கள் என எல்லாவற்றிலும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆம், யெகோவாவின் பார்வையில் நாம் சுத்தமாக இருப்பதற்கு நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் சுத்தமாக, தூய்மையாக இருக்க வேண்டும்.

9, 10. நம் வணக்கத்தில் சுத்தமாக இருப்பது என்றால் என்ன?

9 தூய்மையான வணக்கம். பொய் மதத்தோடு நாம் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது. இஸ்ரவேலர்கள் பாபிலோனில் கைதிகளாக இருந்தபோது, அவர்களைச் சுற்றியிருந்த மக்கள் ஒழுக்கக்கேடு நிறைந்த பொய் மதத்தில் ஊறிப்போயிருந்தார்கள். ஆனால், இஸ்ரவேலர்கள் தங்களுடைய தாய் நாட்டுக்குத் திரும்பி வந்து, தூய வணக்கத்தை மீண்டும் ஆரம்பிப்பார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னார். “அங்கிருந்து வெளியே வாருங்கள்; அசுத்தமான எதையும் தொடாதீர்கள்! . . . அங்கிருந்து கிளம்பி வாருங்கள்; உங்களைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் யெகோவா சொன்னார். அவர்களுடைய வணக்கம் பாபிலோனிய பொய் மதப் போதனைகளாலும், பழக்கவழக்கங்களாலும், சம்பிரதாயங்களாலும் கறைபடாமல் இருக்க வேண்டியிருந்தது.—ஏசாயா 52:11.

10 இன்றுள்ள உண்மைக் கிறிஸ்தவர்களும் பொய் மதத்தோடு எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை. (1 கொரிந்தியர் 10:21-ஐ வாசியுங்கள்.) உலகம் முழுவதுமுள்ள பிரபலமான பாரம்பரியங்கள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் எல்லாமே பொய் மதப் போதனைகளிலிருந்து வந்தவை. உதாரணத்துக்கு, நம் உடலுக்குள் இருக்கிற ஏதோ ஒன்று நாம் இறந்த பிறகும் தொடர்ந்து வாழ்கிறது என்று பல கலாச்சாரங்களில் நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் பல சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுகின்றன. (பிரசங்கி 9:5, 6, 10) இவற்றை கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற சம்பிரதாயங்களில் கலந்துகொள்ளும்படி நம் குடும்பத்தார் நம்மை வற்புறுத்தலாம். ஆனால், நாம் யெகோவாவின் பார்வையில் சுத்தமானவர்களாக இருக்க விரும்புவதால், அவர்களுடைய வற்புறுத்தலுக்கு இணங்கிவிடுவதில்லை.—அப்போஸ்தலர் 5:29.

11. நம் நடத்தையில் சுத்தமாக இருப்பது என்றால் என்ன?

11 சுத்தமான நடத்தை. யெகோவாவின் பார்வையில் நாம் சுத்தமானவர்களாக இருப்பதற்கு எந்த விதமான பாலியல் முறைகேட்டிலும் ஈடுபடக் கூடாது. (எபேசியர் 5:5-ஐ வாசியுங்கள்.) “பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்” என்று யெகோவா நமக்குச் சொல்கிறார். மனம் திருந்தாமல் ஒழுக்கக்கேடாக வாழ்கிறவர்கள் “கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று அவர் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறார்.—1 கொரிந்தியர் 6:9, 10, 18; பின்குறிப்பு 22.

12, 13. நம் எண்ணங்கள் சுத்தமாக இருப்பது ஏன் முக்கியம்?

12 சுத்தமான எண்ணங்கள். பெரும்பாலும் நம் எண்ணங்கள்தான் நம்மைச் செயல்படத் தூண்டுகின்றன. (மத்தேயு 5:28; 15:18, 19) சுத்தமான எண்ணங்கள், சுத்தமான விதத்தில் செயல்பட நம்மைத் தூண்டும். நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் கெட்ட எண்ணங்கள் அவ்வப்போது நமக்குள் வரலாம். அப்படிப்பட்ட சமயங்களில், அவற்றை நாம் உடனடியாகத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், போகப் போக நம் இதயம் அசுத்தமானதாக ஆகிவிடும். நாம் என்ன விஷயங்களைப் பற்றி எப்போதும் யோசிக்கிறோமோ அவற்றையே செய்ய ஆசைப்படுவோம். அதனால், நம் மனதைச் சுத்தமான எண்ணங்களால் நிரப்ப வேண்டும். (பிலிப்பியர் 4:8-ஐ வாசியுங்கள்.) ஒழுக்கக்கேடான, வன்முறையான பொழுதுபோக்கை நாம் தவிர்க்க வேண்டும். நாம் எதை வாசிப்பது, எதைப் பார்ப்பது, எதைப் பற்றிப் பேசுவது என்பதைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.—சங்கீதம் 19:8, 9

13 கடவுளுடைய அன்பில் நிலைத்திருப்பதற்கு வணக்கத்திலும், நடத்தையிலும், எண்ணங்களிலும் நாம் சுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அதே சமயத்தில், நம் உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்வதையும் யெகோவா முக்கியமானதாகக் கருதுகிறார்.

நம் உடலை எப்படிச் சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்?

14. நம் உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்வது ஏன் முக்கியம்?

14 நம் உடலையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்தால், அது நமக்கும் அக்கம்பக்கத்தாருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அது நமக்கு ஒரு நல்ல உணர்வைக் கொடுக்கும். அதோடு, மற்றவர்களும் நம்மோடு இருக்க விரும்புவார்கள். ஆனால், நம் உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. நாம் சுத்தமாக இருப்பது யெகோவாவுக்கு மகிமை சேர்க்கிறது. இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: ஒரு பிள்ளை எப்போதும் அழுக்காக இருந்தால் அதன் அப்பா-அம்மாவுக்குக் கெட்ட பெயர்தானே வரும்? அதே போல, நாமும் நம்மைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாவிட்டால், யெகோவாவுக்குக் கெட்ட பெயர்தானே வரும்? அதனால்தான் பவுல் இப்படிச் சொன்னார்: “எங்களுடைய ஊழியத்தில் யாரும் குறை கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக நாங்கள் யாருக்கும் எந்தவித இடைஞ்சலும் உண்டாக்காமல் இருக்கிறோம். எல்லா விதத்திலும் எங்களைக் கடவுளுடைய ஊழியர்களாகச் சிபாரிசு செய்கிறோம்.”—2 கொரிந்தியர் 6:3, 4.

யெகோவாவின் மக்களாகிய நாம், நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்

15, 16. நம்மைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

15 நம் உடலும் உடையும். நம்மைச் சுத்தமாக வைத்துக்கொள்வது நம் அன்றாட வாழ்க்கையின் பாகமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, நாம் முடிந்தவரை தினமும் குளிக்கிறோம். கைகளை சோப்புப் போட்டு கழுவுகிறோம்; முக்கியமாக, சமைப்பதற்கோ சாப்பிடுவதற்கோ முன்பு... கழிவறையைப் பயன்படுத்திய பின்பு... அல்லது அழுக்கான ஒன்றைத் தொட்ட பின்பு... கைகளைக் கழுவுகிறோம். கைகளைக் கழுவுவது ஒரு சின்ன விஷயமாகத் தெரியலாம். ஆனால், கிருமிகள் தொற்றிக்கொள்வதையும் நோய் பரவுவதையும் இது தடுக்கும். இப்படிச் செய்வது நம் உயிரையும்கூட பாதுகாக்கும். ஒருவேளை கழிவறையோ கழிவுகளை வெளியேற்றுவதற்கான வசதியோ இல்லாவிட்டால், அவற்றை அகற்றுவதற்கு மற்ற சிறந்த வழிகளைப் பயன்படுத்தலாம். இஸ்ரவேலர்களின் காலத்தில் கழிவுகளை வெளியேற்றுவதற்கு எந்த விதமான வசதியும் இருக்கவில்லை. அதனால், அவர்கள் தங்களுடைய வீடுகளிலிருந்தும் தண்ணீருள்ள இடங்களிலிருந்தும் தூரமாக இருந்த பகுதியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தி, கழிவுகளை மண்ணில் புதைத்தார்கள்.—உபாகமம் 23:12, 13.

16 நம்முடைய உடை ஆடம்பரமாக, விலை உயர்ந்ததாக, நவ நாகரிகமாக இருக்க வேண்டுமென்று அவசியம் இல்லை. ஆனால், அது நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும். (1 தீமோத்தேயு 2:9, 10-ஐ வாசியுங்கள்.) நம்முடைய தோற்றம் எப்போதும் யெகோவாவுக்கு மகிமை சேர்க்க வேண்டுமென நாம் விரும்புகிறோம்.—தீத்து 2:10.

17. நம் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் ஏன் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்?

17 நம் வீடும் சுற்றுப்புறமும். நாம் எங்கே வாழ்ந்தாலும் சரி, நம்முடைய வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்கிறோம். அதோடு கார், பைக், ஸ்கூட்டர் என எந்த வாகனத்தை நாம் வைத்திருந்தாலும், அது சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறோம். முக்கியமாக, கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போகும்போது அப்படிச் செய்கிறோம். ஏனென்றால், சுத்தமான பூஞ்சோலை பூமியில் கிடைக்கப்போகும் வாழ்க்கையைப் பற்றி நாம் ஊழியத்தில் பேசுகிறோம். (லூக்கா 23:43; வெளிப்படுத்துதல் 11:18) நம்முடைய வீட்டையும் சுற்றுப்புறத்தையும் நன்றாக வைத்திருப்பதன் மூலம், சுத்தமான புதிய உலகில் வாழ இப்போதே தயாராகிக்கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டலாம்.

18. வணக்கத்துக்காகக் கூடிவரும் இடத்தை நாம் ஏன் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்?

18 வணக்கத்துக்காகக் கூடிவரும் இடம். நாம் ராஜ்ய மன்றத்தில் கூடிவந்தாலும் சரி, மாநாடு நடக்கும் இடத்தில் கூடிவந்தாலும் சரி, அந்த இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் சுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் காட்டுகிறோம். ராஜ்ய மன்றத்துக்கு முதல் தடவையாக வருகிறவர்கள் அது மிகவும் சுத்தமாக இருப்பதைக் கவனிக்கிறார்கள். இது யெகோவாவுக்கு மகிமை சேர்க்கிறது. சகோதர சகோதரிகளாகிய நம் எல்லாருக்குமே ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்வதற்கும் அதைப் பழுதுபார்த்து பராமரிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.—2 நாளாகமம் 34:10.

அசுத்தமான பழக்கங்களை விட்டொழியுங்கள்

19. நாம் எதைத் தவிர்க்க வேண்டும்?

19 நாம் தவிர்க்க வேண்டிய ஒவ்வொரு கெட்ட பழக்கத்தைப் பற்றியும் பைபிள் சொல்வதில்லை. ஆனாலும், அப்படிப்பட்ட பழக்கங்களைப் பற்றி யெகோவா எப்படி உணருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவும் நியமங்கள் பைபிளில் இருக்கின்றன. நாம் புகைப்பிடிப்பதையோ, அளவுக்குமீறி குடிப்பதையோ, போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதையோ யெகோவா விரும்புவதில்லை. நாம் கடவுளுடைய நண்பர்களாக இருந்தால் இவற்றையெல்லாம் தவிர்ப்போம். ஏன்? ஏனென்றால், உயிர் என்ற பரிசை நாம் உயர்வாக மதிக்கிறோம். இந்தக் கெட்ட பழக்கங்கள் நம் ஆயுளைக் குறைத்துவிடும்; நம் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும்; நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் தீங்கு ஏற்படுத்திவிடும். நிறைய பேர் தாங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட கெட்ட பழக்கங்களை நிறுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால், யெகோவாவின் நண்பர்களாகிய நாம் முக்கியமாக அவர்மீது அன்பு வைத்திருப்பதால் இப்படிப்பட்ட பழக்கங்களை விட்டுவிடுகிறோம். ஒரு இளம் பெண் இப்படிச் சொன்னார்: “யெகோவாவின் உதவியோடு என்னுடைய வாழ்க்கையைச் சுத்தமாக்கி, எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டொழித்தேன். . . . இந்த மாற்றங்களையெல்லாம் என்னுடைய சொந்த பலத்தினால் செய்திருக்கவே முடியாது.” தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை ஒருவர் விட்டொழிக்க உதவும் ஐந்து பைபிள் நியமங்களை இப்போது பார்க்கலாம்.

20, 21. எப்படிப்பட்ட பழக்கங்களை நாம் விட்டொழிக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்?

20 “அன்புக் கண்மணிகளே, இப்படிப்பட்ட வாக்குறுதிகள் நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதால், உடலிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் எல்லா கறைகளையும் நீக்கி நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்வோமாக. கடவுளுக்குப் பயந்து நடந்து பரிசுத்தத்தன்மையை முழுமையாய்க் காட்டுவோமாக.” (2 கொரிந்தியர் 7:1) நம் உடலையும் உள்ளத்தையும் கெடுக்கிற அசுத்தமான பழக்கங்களை நாம் அடியோடு விட்டுவிட வேண்டுமென யெகோவா விரும்புகிறார்.

21 நாம் ஏன் ‘எல்லா கறைகளையும் நீக்கி நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்ள’ வேண்டும் என்பதற்கு ஒரு பலமான காரணத்தை 2 கொரிந்தியர் 6:17, 18 சொல்கிறது. “அசுத்தமானதைத் தொடாதீர்கள்” என்று அதில் யெகோவா சொல்கிறார். அதோடு, “நான் உங்களை ஏற்றுக்கொள்வேன் . . . நான் உங்களுக்குத் தகப்பனாக இருப்பேன், நீங்கள் எனக்கு மகன்களாகவும் மகள்களாகவும் இருப்பீர்கள்” என்ற வாக்குறுதியையும் கொடுக்கிறார். ஆம், நம்மை அசுத்தமாக்கும் பழக்கங்களை விட்டொழித்தால், ஒரு அப்பா தன் பிள்ளைகள்மீது அன்பு காட்டுவது போல, யெகோவா நம்மீது அன்பு காட்டுவார்.

22-25. அசுத்தமான பழக்கங்களைத் தவிர்க்க என்னென்ன பைபிள் நியமங்கள் நமக்கு உதவும்?

22 “உன் கடவுளாகிய யெகோவாமேல் உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.” (மத்தேயு 22:37) கட்டளைகளிலேயே இதுதான் மிக முக்கியமான கட்டளை. (மத்தேயு 22:38) நம்முடைய அன்பை முழுமையாகப் பெற யெகோவா தகுதியானவர். நம் ஆயுளைக் குறைக்கிற, மூளையைப் பாதிக்கிற ஒரு கெட்ட பழக்கத்தில் ஈடுபட்டால் நாம் யெகோவாமீது முழுமையாக அன்பு காட்டுகிறோம் என்று சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது. அதனால்தான், யெகோவா நமக்குத் தந்திருக்கும் உயிருக்கு மதிப்புக் கொடுக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம்.

23 “[யெகோவாதான்] எல்லாருக்கும் உயிரையும் சுவாசத்தையும் மற்ற எல்லாவற்றையும் தருகிறார்.” (அப்போஸ்தலர் 17:24, 25) நண்பர் ஒருவர் உங்களுக்கு ஒரு அருமையான பரிசைக் கொடுத்தால் அதைத் தூக்கியெறிவீர்களா? அதை நாசப்படுத்துவீர்களா? உயிர், யெகோவா தந்த அற்புதமான பரிசு. அதற்காக நாம் ரொம்பவே நன்றியோடு இருக்கிறோம். அதனால், நம் வாழ்க்கையை அவருக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் பயன்படுத்த விரும்புகிறோம்.—சங்கீதம் 36:9.

24 “உன்மேல் நீ அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்.” (மத்தேயு 22:39) நம்முடைய அசுத்தமான பழக்கங்கள் நம்மை மட்டும் பாதிப்பதில்லை. நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கிறது. பெரும்பாலும் நம் அன்புக்குரியவர்களைப் பாதிக்கிறது. உதாரணத்துக்கு, வீட்டுக்குள் ஒருவர் புகைப்பிடித்தால் அந்தப் புகையைச் சுவாசிக்கும் குடும்பத்தாருக்கும் மோசமான உடல்நலப் பிரச்சினைகள் வரலாம். ஆனால், நாம் கெட்ட பழக்கங்களை விட்டுவிடும்போது நம்மைச் சுற்றியிருப்பவர்களை நாம் நேசிக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம்.—1 யோவான் 4:20, 21.

25 “அரசாங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் அடிபணிந்து நடக்க வேண்டும், கீழ்ப்படிய வேண்டும் . . . என்றெல்லாம் அவர்களுக்குத் தொடர்ந்து ஞாபகப்படுத்து.” (தீத்து 3:1, 2) அநேக நாடுகளில் சில வகையான போதைப்பொருள்களை வைத்திருப்பதோ பயன்படுத்துவதோ சட்டவிரோதமானது. அரசாங்கங்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று யெகோவா கட்டளை கொடுத்திருப்பதால், போதைப்பொருள் சம்பந்தமான சட்டங்களுக்கு நாம் கீழ்ப்படிகிறோம்.—ரோமர் 13:1.

நம்மைச் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக்கொள்ளும்போது, நாம் யெகோவாவை மகிமைப்படுத்துகிறோம்

26. (அ) நம் வணக்கத்தை யெகோவா ஏற்றுக்கொள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்க நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்ய ஏன் விரும்புகிறோம்?

26 நாம் யெகோவாவின் நண்பராக இருக்க விரும்பினால், சில மாற்றங்களைச் செய்வது அவசியம் என்று உணரலாம். அப்படியானால், உடனடியாக அந்த மாற்றங்களைச் செய்ய வேண்டும். அசுத்தமான ஒரு பழக்கத்தை விட்டுவிடுவது அவ்வளவு சுலபம் கிடையாது. ஆனால், நிச்சயம் நம்மால் முடியும்! அதற்கு உதவி செய்வதாக யெகோவா வாக்குக் கொடுக்கிறார். “யெகோவாவாகிய நானே உங்கள் கடவுள். உங்களுக்குப் பிரயோஜனமானதை நான் கற்றுக்கொடுக்கிறேன். நீங்கள் நடக்க வேண்டிய வழியில் உங்களை நடத்துகிறேன்” என்று அவர் சொல்கிறார். (ஏசாயா 48:17) சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்க நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்யும்போது, நாம் யெகோவாவை மகிமைப்படுத்துகிறோம் என்று உறுதியாக நம்பலாம்.