Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 13

எல்லா கொண்டாட்டங்களும் கடவுளுக்குப் பிரியமானவையா?

எல்லா கொண்டாட்டங்களும் கடவுளுக்குப் பிரியமானவையா?

“நம் எஜமானுக்கு எது பிரியமானது என்பதை எப்போதும் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.”—எபேசியர் 5:10.

1. நம்முடைய வணக்கம் யெகோவாவுக்குப் பிரியமானதாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும், ஏன்?

 “உண்மை வணக்கத்தார் பரலோகத் தகப்பனை அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்கப்போகிற நேரம் வருகிறது, . . . சொல்லப்போனால், தன்னை இப்படி வணங்க விரும்புகிறவர்களையே தகப்பன் தேடிக்கொண்டிருக்கிறார்” என்று இயேசு சொன்னார். (யோவான் 4:23; 6:44) நாம் ஒவ்வொருவருமே, ‘நம் எஜமானுக்கு எது பிரியமானது என்பதை எப்போதும் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.’ (எபேசியர் 5:10) இது எல்லா சமயத்திலும் சுலபம் கிடையாது. ஏனென்றால், சாத்தான் நம்மை எப்படியாவது ஏமாற்றி, யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்ய வைக்கப் பார்க்கிறான்.—வெளிப்படுத்துதல் 12:9.

2. சீனாய் மலைக்குப் பக்கத்தில் என்ன நடந்தது என்பதை விளக்குங்கள்.

2 சாத்தான் நம்மை எப்படி ஏமாற்றப் பார்க்கிறான்? எது சரி, எது தவறு என்று தெரியாதபடி நம்மைக் குழம்பிப்போக வைப்பதுதான் அவன் பயன்படுத்துகிற ஒரு வழி. இஸ்ரவேலர்கள் சீனாய் மலைக்குப் பக்கத்தில் தங்கியிருந்தபோது என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். மோசே, மலைக்கு ஏறிப்போய் பல நாட்கள் ஆகியிருந்தன. அவர் எப்போது வருவாரென்று மக்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். கடைசியில் அவர்கள் சலித்துப்போய், ஆரோனிடம் தங்களுக்காக ஒரு கடவுளைச் செய்து தரும்படி கேட்டார்கள். அதனால், கன்றுக்குட்டி உருவத்தில் ஒரு தங்கச் சிலையை அவர் செய்தார். பிறகு அந்த மக்கள் ஒரு பண்டிகையைக் கொண்டாடினார்கள். அவர்கள் அந்தக் கன்றுக்குட்டியின் முன்னால் நடனமாடி அதற்குத் தலைவணங்கினார்கள். அந்தக் கன்றுக்குட்டிக்குத் தலைவணங்குவதன் மூலம் தாங்கள் யெகோவாவை வணங்கியதாக நினைத்தார்கள். அந்தப் பண்டிகையை ‘யெகோவாவுக்குப் பண்டிகையாக’ அவர்கள் நினைத்தாலும், அவர்கள் செய்தது சரியென்று ஆகிவிடவில்லை. யெகோவா அதைச் சிலை வழிபாடாகவே கருதினார். அதனால் நிறைய பேர் செத்துப்போனார்கள். (யாத்திராகமம் 32:1-6, 10, 28) இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். “அசுத்தமான எதையும் தொடாதீர்கள்.” (ஏசாயா 52:11) எது சரி, எது தவறு என்பதை யெகோவா உங்களுக்குக் கற்றுக்கொடுக்க அனுமதியுங்கள்.—எசேக்கியேல் 44:23; கலாத்தியர் 5:9.

3, 4. பிரபலமான பல கொண்டாட்டங்களின் ஆரம்பத்தைப் பற்றி ஆராய்வது ஏன் நல்லது?

3 இயேசு பூமியில் இருந்தபோது, சுத்தமான வணக்கத்துக்கு முன்மாதிரியாக இருக்க தன் அப்போஸ்தலர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். அவர் இறந்த பிறகு, அவர்கள் புதிய சீஷர்களுக்கு யெகோவாவின் நியமங்களைத் தொடர்ந்து கற்றுக்கொடுத்தார்கள். ஆனால் அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு, பொய்ப் போதகர்கள் தவறான கருத்துகளையும் பொய் மதப் பழக்கங்களையும் பண்டிகைகளையும் சபைக்குள் புகுத்த ஆரம்பித்தார்கள். அதுமட்டுமல்ல, அந்தப் பண்டிகைகள் கிறிஸ்தவப் பண்டிகைகளாகத் தெரிவதற்காக சில பண்டிகைகளின் பெயர்களை மாற்றினார்கள். (2 தெசலோனிக்கேயர் 2:7, 10; 2 யோவான் 6, 7) இந்தப் பண்டிகைகளில் பல இன்றும் பிரபலமாக இருக்கின்றன. அதுமட்டுமல்ல, அவை பொய் நம்பிக்கைகளையும், பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களையும் ஊக்குவிக்கின்றன. *வெளிப்படுத்துதல் 18:2-4, 23.

4 இன்று பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் உலகெங்குமுள்ள மக்களுடைய வாழ்க்கையின் முக்கிய பாகமாகிவிட்டன. ஆனாலும், எந்தவொரு விஷயத்தையும் யெகோவா எப்படிக் கருதுகிறார் என்பதை நீங்கள் தொடர்ந்து தெரிந்துகொள்ளும்போது, சில பண்டிகைகளைப் பற்றிய உங்கள் கருத்தை மாற்ற வேண்டியிருக்கலாம். இது ஒருவேளை உங்களுக்குச் சுலபமாக இருக்காது. ஆனால், யெகோவா உங்களுக்கு உதவி செய்வார் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். பிரபலமான சில கொண்டாட்டங்களை யெகோவா எப்படிக் கருதுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள அவற்றின் ஆரம்பத்தைப் பற்றி இப்போது ஆராயலாம்.

கிறிஸ்மஸ் எப்படி ஆரம்பமானது?

5. டிசம்பர் 25-ல் இயேசு பிறக்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

5 உலகின் பல பகுதிகளில் டிசம்பர் 25 அன்று கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில்தான் இயேசு பிறந்தார் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். இயேசு எந்த நாளில் பிறந்தார் என்று பைபிள் சொல்வதில்லை. எந்த மாதத்தில் பிறந்தார் என்றுகூட சொல்வதில்லை. ஆனால், வருஷத்தின் எந்தச் சமயத்தில் அவர் பிறந்தார் என்பதைத் தெரிந்துகொள்ள பைபிள் உதவுகிறது. இயேசு பெத்லெகேமில் பிறந்த சமயத்தில், “மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி” மந்தைகளைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள் என்று லூக்கா எழுதினார். (லூக்கா 2:8-11) டிசம்பர் மாதத்தின்போது, பெத்லெகேமில் குளிராக இருக்கும். மழையும் பனியும் பெய்துகொண்டிருக்கும். அதனால், ராத்திரி நேரத்தில் மேய்ப்பர்கள் தங்களுடைய மந்தைகளோடு வெளியில் தங்கியிருக்க மாட்டார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? டிசம்பர் மாதத்தில் அல்ல, மிதமான சீதோஷ்ண நிலை இருந்த சமயத்தில்தான் இயேசு பிறந்தார் என்று தெரிகிறது. செப்டம்பர் மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் இயேசு பிறந்தார் என்பதற்கு பைபிளிலும், சரித்திர பதிவுகளிலும் அத்தாட்சிகள் இருக்கின்றன.

6, 7. (அ) கிறிஸ்மஸோடு சம்பந்தப்பட்ட பிரபலமான பல பழக்கங்கள் எப்படி ஆரம்பமாயின? (ஆ) என்ன நோக்கத்தோடு நாம் பரிசுகளைக் கொடுக்க வேண்டும்?

6 அப்படியானால், கிறிஸ்மஸ் எப்படி ஆரம்பமானது? சாட்டர்ன் என்ற வேளாண்மை தெய்வத்துக்காக சாட்டர்னேலியா என்ற ரோமப் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதுபோன்ற பொய் மதப் பண்டிகைகளிலிருந்து கிறிஸ்மஸ் பண்டிகை ஆரம்பமானது. தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா இப்படிச் சொல்கிறது: “கிறிஸ்மஸ் தினத்தில் கூத்தும் கும்மாளமும் அடிக்கும் பழக்கங்களெல்லாம், டிசம்பர் மாதத்தின் மத்திபத்தில் கொண்டாடப்பட்ட சாட்டர்னேலியா என்ற ரோமப் பண்டிகையிலிருந்தே வந்தது. உதாரணத்துக்கு, ஆடம்பரமாக விருந்து வைப்பது, பரிசுகளைக் கொடுப்பது, மெழுகுவர்த்திகளை ஏற்றுவது போன்ற பழக்கங்கள் அந்த ரோமப் பண்டிகையிலிருந்து பிறந்த பழக்கங்களே.” பெர்சியர்களின் சூரியக் கடவுளான மித்ராவின் பிறந்த நாளும் டிசம்பர் 25-ல் கொண்டாடப்பட்டது.

7 ஆனால், இன்று கிறிஸ்மஸைக் கொண்டாடுகிற நிறைய பேர் அது பொய் மதத்திலிருந்து வந்தது என்பதையெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை. அந்த நாளில் விருந்து சாப்பிட்டு, பரிசுகளைக் கொடுத்து, குடும்பத்தோடு சந்தோஷமாக நேரம் செலவிட வேண்டுமென்று மட்டுமே நினைக்கிறார்கள். நாமும்கூட நம் குடும்பத்தாரையும் நண்பர்களையும் நேசிக்கிறோம். நம்மிடம் இருப்பதை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று யெகோவாவும் விரும்புகிறார். “சந்தோஷமாகக் கொடுப்பவரைத்தான் கடவுள் நேசிக்கிறார்” என்று 2 கொரிந்தியர் 9:7 சொல்கிறது. விசேஷ சந்தர்ப்பங்களில் மட்டுமே நாம் மற்றவர்களுக்குக் கொடுப்பதை யெகோவா விரும்புவதில்லை. யெகோவாவின் மக்கள் எப்போதெல்லாம் விரும்புகிறார்களோ அப்போதெல்லாம் அன்பளிப்புகளைக் கொடுக்கிறார்கள்; நண்பர்களோடும் குடும்பத்தாரோடும் சந்தோஷமாக நேரம் செலவிடுகிறார்கள். அவர்கள் எந்தக் கைமாறும் எதிர்பார்க்காமல், அன்பினால் தூண்டப்பட்டு கொடுக்கிறார்கள்.—லூக்கா 14:12-14.

கொண்டாட்டங்களின் ஆரம்பத்தைப் பற்றித் தெரிந்துகொண்டால், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்

8. ஜோதிடர்கள் இயேசுவுக்குப் பரிசுகளைக் கொடுத்தபோது அவர் ஒரு பச்சிளம் குழந்தையாக இருந்தாரா? விளக்குங்கள்.

8 கிறிஸ்மஸ் தினத்தில் பரிசுகள் கொடுக்கும் பழக்கம் பைபிளிலிருந்து வந்ததாக பலர் சொல்கிறார்கள். தொழுவத்தில் இயேசு பிறந்த சமயத்தில் மூன்று ஞானிகள் அவருக்குப் பரிசுகளைக் கொண்டுவந்ததாகச் சொல்கிறார்கள். இயேசுவைச் சிலர் பார்க்க வந்தார்கள் என்பதும், அவருக்குப் பரிசுகளைக் கொண்டுவந்தார்கள் என்பதும் உண்மைதான். பைபிள் காலங்களில் முக்கியமான நபர்களைச் சந்திக்கப் போகும்போது பரிசுகளைக் கொண்டுபோவது வழக்கமாக இருந்தது. (1 ராஜாக்கள் 10:1, 2, 10, 13) ஆனால், இயேசுவைப் பார்க்கப்போன அந்த மூன்று பேரைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறதென உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் ஜோதிடர்கள் என்று பைபிள் சொல்கிறது. அவர்கள் யெகோவாவை வணங்காதவர்கள்; மாயமந்திரம் செய்தவர்கள். அதுமட்டுமல்ல, இயேசுவை அவர்கள் சந்தித்தபோது அவர் தொழுவத்தில் அல்ல, வீட்டில்தான் இருந்தார். அதுவும் அவர் பச்சிளம் குழந்தையாக அல்ல, ஒரு சிறு ‘பிள்ளையாக’ இருந்தார்.—மத்தேயு 2:1, 2, 11.

பிறந்த நாள் கொண்டாடுவதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

9. எந்த இரண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்களைப் பற்றி பைபிள் சொல்கிறது?

9 ஒரு குழந்தை பிறக்கிற நாள், உண்மையிலேயே சந்தோஷமான ஒரு நாள். (சங்கீதம் 127:3) அதற்காக நாம் பிறந்த நாட்களைக் கொண்டாட வேண்டுமென்று அர்த்தம் கிடையாது. இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: இரண்டு பேருடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தைப் பற்றி மட்டுமே பைபிள் சொல்கிறது. ஒன்று, எகிப்து நாட்டு ராஜாவின், அதாவது பார்வோனின் பிறந்த நாள். மற்றொன்று, ராஜாவான ஏரோது அந்திப்பாவின் பிறந்த நாள். (ஆதியாகமம் 40:20-22-ஐயும் மாற்கு 6:21-29-ஐயும் வாசியுங்கள்.) இவர்கள் இரண்டு பேருமே யெகோவாவை வணங்காதவர்கள். சொல்லப்போனால், யெகோவாவை வணங்கிய யாருமே பிறந்த நாளைக் கொண்டாடியதாக பைபிள் சொல்வதில்லை.

10. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பிறந்த நாட்களை எப்படிக் கருதினார்கள்?

10 முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், “பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஒரு பொய் மதப் பழக்கமாகக் கருதினார்கள்” என்று த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. அப்படிப்பட்ட பழக்கம் பொய் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் பின்பற்றப்பட்டது. உதாரணத்துக்கு, ஒருவர் பிறக்கும் சமயத்தில் ஒரு ஆவி அவர் பக்கத்தில் இருக்கும் என்றும் அது அவரை எப்போதும் பாதுகாக்கும் என்றும் பழங்காலத்தில் வாழ்ந்த கிரேக்கர்கள் நம்பினார்கள். அதோடு, அதே தேதியில் பிறந்த ஒரு தெய்வத்தோடும் அந்த ஆவிக்குத் தொடர்பு இருந்ததாக அவர்கள் நம்பினார்கள். பிறந்த நாள் கொண்டாட்டம் இப்படிப்பட்ட பொய் மத நம்பிக்கைகளோடு மட்டுமல்ல, ஜோதிடம் மற்றும் ஜாதகத்தோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது.

11. தாராள குணத்தை நாம் எப்போதெல்லாம் காட்ட வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்?

11 நிறைய பேர் தங்களுடைய பிறந்த நாளை ஒரு விசேஷ நாளாக நினைக்கிறார்கள். அந்த நாளில் மற்றவர்கள் தங்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமென்றும், அன்பாக நடத்த வேண்டுமென்றும் நினைக்கிறார்கள். ஆனால், நம்முடைய குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் வருஷத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமல்ல, எப்போது வேண்டுமானாலும் நாம் அன்பாக நடந்துகொள்ளலாம். அன்பையும் தாராள குணத்தையும் நாம் எப்போதுமே காட்ட வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். (அப்போஸ்தலர் 20:35-ஐ வாசியுங்கள்.) அவர் நமக்குக் கொடுத்திருக்கும் உயிர் என்னும் பரிசுக்கு நம்முடைய பிறந்த நாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் நன்றியோடு இருக்கிறோம்.—சங்கீதம் 8:3, 4; 36:9.

உண்மைக் கிறிஸ்தவர்கள் அன்பினால் தூண்டப்பட்டு மற்றவர்களுக்குக் கொடுக்கிறார்கள்

12. நம்முடைய இறந்த நாள் எப்படி பிறந்த நாளைவிட சிறந்ததாக இருக்க முடியும்?

12 “விலைமதிப்புள்ள எண்ணெயைவிட நல்ல பெயர் சிறந்தது. ஒருவருடைய பிறந்த நாளைவிட இறந்த நாள் நல்லது” என்று பிரசங்கி 7:1 சொல்கிறது. நம்முடைய இறந்த நாள் எப்படி பிறந்த நாளைவிட சிறந்ததாக இருக்க முடியும்? நாம் பிறந்த சமயத்தில் நல்ல பெயரையோ கெட்டப் பெயரையோ சம்பாதிக்கும் அளவுக்கு எதுவுமே செய்திருக்க மாட்டோம். ஆனால், யெகோவாவுக்குச் சேவை செய்யவும் மற்றவர்களுக்கு நல்லது செய்யவும் நம் வாழ்க்கையைப் பயன்படுத்தும்போது நாம் ‘நல்ல பெயரை’ சம்பாதிக்கிறோம். அதனால், நாம் இறந்துபோனாலும் யெகோவா நம்மை ஞாபகம் வைத்திருப்பார். (யோபு 14:14, 15) யெகோவாவின் மக்கள் தங்களுடைய பிறந்த நாளையோ இயேசுவின் பிறந்த நாளையோ கொண்டாடுவதில்லை. இயேசுவின் கட்டளைபடி அவருடைய மரண நினைவு நாளை மட்டுமே அனுசரிக்கிறார்கள்.—லூக்கா 22:17-20; எபிரெயர் 1:3, 4.

ஈஸ்டர் பண்டிகையின் ஆரம்பம்

13, 14. ஈஸ்டர் பண்டிகை எதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது?

13 ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடும்போது, உண்மையில், இயேசுவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடுவதாக நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால் ஈஸ்டர் பண்டிகை, ஆங்கிலோ-சாக்ஸன் மக்கள் வழிபட்ட ஈயோஸ்டர் என்ற பெண் தெய்வத்தோடு (விடியல் மற்றும் வசந்தத்தின் தெய்வத்தோடு) சம்பந்தப்பட்டிருக்கிறது. அது ஒரு கருவள தெய்வமாகவும் இருந்தது என்று த டிக்‍ஷனரி ஆஃப் மித்தாலஜி சொல்கிறது. அதனால்தான், கருவளத்தோடு சம்பந்தப்பட்ட சில பழக்கவழக்கங்கள் ஈஸ்டர் பண்டிகையின்போது பின்பற்றப்படுகின்றன. உதாரணத்துக்கு முட்டைகள், “புது வாழ்வுக்கும் உயிர்த்தெழுதலுக்கும் முக்கியச் சின்னங்களாக இருந்திருக்கின்றன” என்று என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது. அதோடு, பல காலமாகவே பொய் மத வழிபாட்டில் முயல்கள், கருவளத்தின் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கும் ஈஸ்டர் பண்டிகைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

14 தன்னுடைய மகனின் உயிர்த்தெழுதலை பொய் மதப் பழக்கங்களோடு சம்பந்தப்படுத்தி மக்கள் கொண்டாடுவது யெகோவாவுக்குப் பிடிக்குமா? நிச்சயம் பிடிக்காது. (2 கொரிந்தியர் 6:17, 18) சொல்லப்போனால், இயேசுவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும்படி யெகோவா நம்மிடம் சொல்லவே இல்லை.

புத்தாண்டு தினக் கொண்டாட்டம்

15. புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தின் ஆரம்பம் என்ன?

15 புத்தாண்டு தினத்தைக் கொண்டாடும் விதம் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிறது. ஆனாலும், பல இடங்களில் டிசம்பர் 31 அன்று ஆடம்பரமான பார்ட்டிகள் நடத்தப்படுவது சகஜமாக இருக்கிறது. இந்த பார்ட்டிகளில் ஒழுக்கக்கேடும் குடிவெறியும்தான் நிறைந்திருக்கிறது. (ரோமர் 13:13) அதுமட்டுமல்ல, இந்தப் பண்டிகை பொய் மதத்திலிருந்து வந்தது. அதைப் பற்றி த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா இப்படிச் சொல்கிறது: “வாசல்கள், கதவுகள் மற்றும் ஆரம்பங்களின் தெய்வமான ஜானெசுக்கு, ரோமர்கள் இந்த நாளை அர்ப்பணம் செய்தார்கள். ஜானெஸ் என்ற பெயரிலிருந்துதான் ஜனவரி என்ற மாதத்தின் பெயர் வந்தது. ஜானெஸ் தெய்வத்துக்கு, முன்னும் பின்னும் பார்த்தபடி இரண்டு முகங்கள் இருந்தன.”

யெகோவாவைப் பிரியப்படுத்தும் திருமணங்கள்

16, 17. திருமண ஏற்பாடுகளைச் செய்யும்போது எதை யோசித்துப் பார்க்க வேண்டும்?

16 திருமணம் என்பது ஒரு சந்தோஷமான நிகழ்ச்சி. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாகத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. திருமணத்தின்போது செய்யப்படும் சம்பிரதாயங்களின் ஆரம்பத்தைப் பற்றிப் பொதுவாக மக்கள் யோசிப்பதில்லை. அதனால், சில சம்பிரதாயங்கள் பொய் மத நம்பிக்கைகளிலிருந்து வந்திருக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், திருமணம் செய்துகொள்ளப்போகிற கிறிஸ்தவர்கள் திருமண ஏற்பாடுகளைச் செய்யும்போது, தங்களுடைய திருமணம் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். திருமணத்தில் செய்யப்படும் சம்பிரதாயங்களின் ஆரம்பத்தைத் தெரிந்துகொண்டால் அவர்களால் சரியான தீர்மானம் எடுக்க முடியும்.—மாற்கு 10:6-9.

17 சில திருமண சம்பிரதாயங்கள், புது மணத் தம்பதிக்கு ‘அதிர்ஷ்டத்தை’ கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. (ஏசாயா 65:11) உதாரணத்துக்கு, சில இடங்களில் மக்கள் அரிசியையோ அதுபோன்ற தானியத்தையோ மணமக்கள்மீது தூவுகிறார்கள். அப்படிச் செய்வது அவர்களுக்குப் பிள்ளை பாக்கியத்தையும், சந்தோஷத்தையும், நீண்ட ஆயுசையும் தரும் என்றும், தீங்கிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் என்றும் மக்கள் நம்புகிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள், பொய் மதத்தோடு சம்பந்தப்பட்ட சம்பிரதாயங்களைத் தவிர்ப்பதில் கவனமாக இருக்கிறார்கள்.2 கொரிந்தியர் 6:14-18-ஐ வாசியுங்கள்.

18. வேறு என்ன பைபிள் நியமங்கள் திருமண நிகழ்ச்சியோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன?

18 திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்கள், தங்களுடைய திருமண நிகழ்ச்சி இனிமையாகவும் கண்ணியமாகவும் நடக்க வேண்டுமென்று விரும்புவார்கள். அதோடு, கூடிவந்த எல்லாருமே அந்த நிகழ்ச்சியைச் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டுமென்றும் விரும்புவார்கள். கிறிஸ்தவத் திருமண நிகழ்ச்சியில் பேச்சு கொடுப்பவர்கள், மணமக்களையோ மற்றவர்களையோ அசிங்கப்படுத்துகிற விதமாகவும், அவமதிக்கிற விதமாகவும் பேச மாட்டார்கள். இரட்டை அர்த்தமுள்ள ஆபாசமான வார்த்தைகளையும் பயன்படுத்த மாட்டார்கள். (நீதிமொழிகள் 26:18, 19; லூக்கா 6:31; 10:27) ஒரு கிறிஸ்தவத் திருமணம் “பொருள் வசதிகளைப் பகட்டாகக் காட்டிக்கொள்கிற” விதத்தில் இருக்கக் கூடாது. (1 யோவான் 2:16) நீங்கள் திருமண ஏற்பாடுகளைக் கவனமாகச் செய்தால்தான், உங்கள் திருமண நாளைப் பற்றிய சந்தோஷமான நினைவுகள் உங்கள் மனதில் நீங்காமல் இருக்கும்.—பின்குறிப்பு 28.

‘சியர்ஸ்’ சொல்லும் பழக்கத்தின் ஆரம்பம்

19, 20. ‘சியர்ஸ்’ சொல்லும் பழக்கம் எப்படி வந்தது?

19 திருமண நிகழ்ச்சிகளிலும் மற்ற பார்ட்டிகளிலும் ‘சியர்ஸ்’ சொல்வது ஒரு சாதாரண பழக்கம். மது அருந்தும்போது, ஒருவர் வாழ்த்து சொல்வார். மற்றவர்கள் தங்களுடைய மது அருந்தும் கோப்பைகளை உயர்த்தி ‘சியர்ஸ்’ என்று சொல்வார்கள். கிறிஸ்தவர்கள் அப்படிச் செய்யலாமா?

20 ‘சியர்ஸ்’ சொல்வது, பழங்கால பொய் மதப் பழக்கத்திலிருந்து வந்திருக்கலாம் என்று மதுபானம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான சர்வதேச கையேடு என்ற ஆங்கிலப் புத்தகம் சொல்கிறது. அந்தப் பழக்கத்தின்படி, “தெய்வங்களுக்கு ஒரு புனித திரவம் படைக்கப்பட்டது” என்று அது சொல்கிறது. “‘பல்லாண்டு வாழ்க’ அல்லது ‘நலமுடன் வாழ்க’ என்று சொல்லி மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்த பிறகு” ‘சியர்ஸ்’ சொல்லப்பட்டது என்றும் அந்தப் புத்தகம் சொல்கிறது. பழங்காலத்தில், தெய்வங்களிடம் ஆசீர்வாதம் கேட்பதற்காக மக்கள் மது அருந்தும் கோப்பையை உயர்த்துவார்கள். ஆனால், ஆசீர்வாதத்தைப் பெற இப்படியெல்லாம் செய்யும்படி யெகோவா நம்மிடம் கேட்பதில்லை.—யோவான் 14:6; 16:23.

“யெகோவாவை நேசிக்கிறவர்களே, கெட்ட காரியங்களை வெறுத்துவிடுங்கள்”

21. வேறு என்ன விதமான கொண்டாட்டங்களை கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டும்?

21 ஒரு கொண்டாட்டத்தில் பங்குகொள்வதா வேண்டாமா என்று தீர்மானிப்பதற்கு முன், அது எப்படிப்பட்ட மனப்பான்மையையும் நடத்தையையும் தூண்டிவிடும் என்று யோசித்துப் பாருங்கள். உதாரணத்துக்கு, சில கொண்டாட்டங்களில் ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வது, ஆபாசமாக நடனம் ஆடுவது, அளவுக்குமீறி குடிப்பது போன்ற விஷயங்கள் நடக்கின்றன. அப்படிப்பட்ட கொண்டாட்டங்களில் ஓரினச்சேர்க்கையும், தேசப்பற்றும் ஊக்குவிக்கப்படலாம். அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் நாம் கலந்துகொண்டால் யெகோவா வெறுக்கும் விஷயங்களை நாம் வெறுக்கிறோம் என்று சொல்ல முடியுமா?—சங்கீதம் 1:1, 2; 97:10; 119:37.

22. ஒரு கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க ஒரு கிறிஸ்தவருக்கு எது உதவும்?

22 கடவுளை அவமதிக்கும் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளாதபடி கிறிஸ்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். “நீங்கள் சாப்பிட்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 10:31; பின்குறிப்பு 29.) எல்லா கொண்டாட்டங்களுமே ஒழுக்கக்கேட்டோடும், பொய் மதத்தோடும், தேசப்பற்றோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியாது. ஒரு கொண்டாட்டம் பைபிள் நியமங்களை மீறாதபோது அதில் கலந்துகொள்ளலாமா வேண்டாமா என்று நாம்தான் தீர்மானிக்க வேண்டும். அதேசமயத்தில், நம்முடைய தீர்மானம் மற்றவர்களை எப்படிப் பாதிக்கும் என்றும் யோசிக்க வேண்டும்.

உங்கள் சொல்லாலும் செயலாலும் யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்

23, 24. பண்டிகைகள் பற்றிய உங்கள் தீர்மானத்தை யெகோவாவின் சாட்சிகளாக இல்லாத உறவினர்களிடம் எப்படி விளக்கிச் சொல்லலாம்?

23 யெகோவாவுக்கு மகிமை சேர்க்காத கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதை நீங்கள் ஒருவேளை நிறுத்தியிருக்கலாம். அதனால், யெகோவாவின் சாட்சிகளாக இல்லாத உங்கள் சொந்தபந்தங்கள் சிலர் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்ளலாம். உங்களுக்கு அவர்களைப் பிடிக்கவில்லை என்றோ, அவர்களோடு சந்தோஷமாக இருக்க உங்களுக்கு விருப்பமில்லை என்றோ அவர்கள் நினைக்கலாம். பண்டிகைகளின் சமயத்தில்தான் சொந்தபந்தங்களோடு ஒன்றுசேர்ந்து சந்தோஷமாக இருக்க முடியும் என்றும் அவர்கள் நினைக்கலாம். அப்படியென்றால், நீங்கள் என்ன செய்யலாம்? அவர்களை நேசிக்கிறீர்கள் என்பதையும் அவர்கள் உங்களுக்கு ரொம்ப முக்கியமானவர்கள் என்பதையும் நீங்கள் பல வழிகளில் காட்ட முடியும். (நீதிமொழிகள் 11:25; பிரசங்கி 3:12, 13) மற்ற சமயங்களில் அவர்களை உங்கள் வீட்டுக்கு அழைத்து அவர்களோடு நேரம் செலவிடலாம்.

24 நீங்கள் முன்பு கொண்டாடிய பண்டிகைகளை இப்போது ஏன் கொண்டாடுவதில்லை என்று உங்கள் உறவினர்கள் தெரிந்துகொள்ள விரும்பலாம். அவர்களுக்கு அதை விளக்கிச் சொல்ல, நம் பிரசுரங்கள் மற்றும் jw.org வெப்சைட்டில் இருக்கும் தகவல்கள் உங்களுக்கு உதவும். அவர்களோடு வாதாடி ஜெயிப்பதற்கு, அல்லது உங்கள் கருத்தை அவர்கள்மீது திணிப்பதற்கு, நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு வராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். பல விஷயங்களை ஆராய்ந்து பார்த்த பிறகுதான் அந்த பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது என்ற முடிவுக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள உதவுங்கள். அமைதியாகப் பேசுங்கள். “உங்கள் பேச்சு எப்போதும் கனிவாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும்”.—கொலோசெயர் 4:6.

25, 26. யெகோவாவின் நெறிமுறைகளை நேசிக்க பிள்ளைகளுக்கு பெற்றோர் எப்படி உதவலாம்?

25 சில கொண்டாட்டங்களில் நாம் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கான காரணங்களை நாம் நன்றாகப் புரிந்து வைத்திருப்பது முக்கியம். (எபிரெயர் 5:14) யெகோவாவைப் பிரியப்படுத்துவதுதான் நம் நோக்கம். நாம் பெற்றோராக இருந்தால், பைபிள் நியமங்களை நம் பிள்ளைகள் புரிந்துகொள்ளவும் அவற்றை நேசிக்கவும் அவர்களுக்குச் சொல்லித்தர கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும். யெகோவாவை ஒரு நிஜமான நபராக அவர்கள் பார்க்க ஆரம்பிக்கும்போது, அவர்களும் அவரைப் பிரியப்படுத்த விரும்புவார்கள்.—ஏசாயா 48:17, 18; 1 பேதுரு 3:15.

26 நாம் எல்லாருமே யெகோவாவைச் சுத்தமாகவும் நேர்மையாகவும் வணங்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதைப் பார்த்து அவர் சந்தோஷப்படுகிறார். (யோவான் 4:23) நேர்மையே இல்லாத இந்த உலகத்தில் ஒருவரால் நேர்மையாக இருக்க முடியாது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். அது உண்மையா? அடுத்த அதிகாரத்தில் அதைப் பற்றிப் பார்க்கலாம்.

^ குறிப்பிட்ட சில பண்டிகைகளைப் பற்றி உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸிலும், யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேட்டிலும், jw.org வெப்சைட்டிலும் பார்க்கலாம்.