Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 11

திருமண நாளுக்குப் பின்

திருமண நாளுக்குப் பின்

“அன்பு ஒருபோதும் ஒழியாது.” —1 கொரிந்தியர் 13:8.

1, 2. மணவாழ்வில் பிரச்சினைகள் வந்தால் ‘இனி வாழ்க்கை அவ்வளவுதான்’ என்று நினைக்க வேண்டுமா? விளக்குங்கள்.

 திருமணம் என்பது யெகோவாவிடமிருந்து கிடைக்கும் ஒரு பரிசு. அது ஒருவருடைய வாழ்க்கையை இன்னும் சந்தோஷமுள்ளதாக ஆக்கலாம். ஆனாலும், எல்லாருடைய மணவாழ்விலும் பிரச்சினைகள் கண்டிப்பாக வரும். அந்தப் பிரச்சினைகள் ஓயவே ஓயாது என்பதுபோல் தோன்றலாம். அதனால், கணவனும் மனைவியும் முன்புபோல் நெருக்கமாக இல்லாததுபோல் உணரலாம்.

2 நம் மணவாழ்வில் அவ்வப்போது பிரச்சினைகள் வரும்போது நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அதற்காக, ‘இனி வாழ்க்கை அவ்வளவுதான்’ என்று நினைக்க வேண்டியதில்லை. பயங்கரமான பிரச்சினைகளைச் சந்தித்த தம்பதிகள்கூட தங்களுக்கு இடையிலிருந்த விரிசலைச் சரிசெய்து, தங்களுடைய பந்தத்தைப் பலப்படுத்தியிருக்கிறார்கள். எப்படி?

கடவுளிடமும் துணையிடமும் நெருங்கிவருவது

3, 4. மணவாழ்வில் சில சமயங்களில் என்ன நடக்கலாம்?

3 திருமணத்தில் இணையும் இருவருக்கிடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கலாம். அவர்களுடைய விருப்புவெறுப்புகள், கருத்துகள், சில விஷயங்களைச் செய்யும் விதங்கள் வித்தியாசப்படலாம். அதோடு, அவர்களுடைய பின்னணியும், கலாச்சாரமும் வேறுபடலாம். அதனால், அவர்கள் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு நேரமும் முயற்சியும் தேவை.

4 நாட்கள் போகப் போக, கணவனும் மனைவியும் தங்களுடைய சொந்த விஷயங்களிலேயே மூழ்கிவிடுவதால், ஆரம்பத்திலிருந்த நெருக்கம் குறைந்துவிடலாம். அவர்கள் ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ்வதுபோல் உணரலாம். அவர்கள் மறுபடியும் நெருக்கமாவதற்கு எது உதவும்?

ஒரு நல்ல மணவாழ்வுக்கு பைபிளின் ஆலோசனை மிகவும் முக்கியம்

5. (அ) தன் துணையிடம் நெருக்கமாக இருக்க ஒரு கிறிஸ்தவருக்கு எது உதவும்? (ஆ) எபிரெயர் 13:4 சொல்கிறபடி, திருமணத்தை நாம் எப்படிக் கருத வேண்டும்?

5 கணவனுக்கும் மனைவிக்கும் அருமையான ஆலோசனைகளை யெகோவா கொடுக்கிறார். அவற்றைப் பின்பற்றினால், கடவுளிடமும் தங்கள் துணையிடமும் அவர்களால் நெருக்கமாக இருக்க முடியும். (சங்கீதம் 25:4; ஏசாயா 48:17, 18) “திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்” என்று கடவுள் ஆலோசனை கொடுக்கிறார். (எபிரெயர் 13:4) மதிப்புள்ள ஒன்றை, நீங்கள் உயர்வாகவும் விலைமதிப்புள்ளதாகவும் கருதுவீர்கள். அதைப் பாதுகாப்பீர்கள், அற்பமானதாக நினைக்க மாட்டீர்கள். திருமணத்தையும் நாம் அப்படித்தான் கருத வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்.

யெகோவாமீதுள்ள அன்பு உங்களுக்கு உதவும்

6. திருமணத்தை யெகோவா எப்படிக் கருதுகிறார் என்று மத்தேயு 19:4-6 நமக்குச் சொல்லித்தருகிறது?

6 முதல் திருமணத்தை நடத்தி வைத்தவர் யெகோவாதான். அதைப் பற்றி அவருடைய மகனான இயேசு இப்படிச் சொன்னார்: “கடவுள் ஆரம்பத்தில் மனுஷர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? ‘இதன் காரணமாக, மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்; அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக இருப்பார்கள்’ என்று அவர் சொன்னதையும் நீங்கள் வாசிக்கவில்லையா? அதன்படி, அவர்கள் இரண்டு பேராக இல்லாமல், ஒரே உடலாக இருப்பார்கள். அதனால், கடவுள் இணைத்து வைத்ததை எந்த மனிதனும் பிரிக்காமல் இருக்கட்டும்.” (மத்தேயு 19:4-6) திருமண பந்தம் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் ஆரம்பத்திலிருந்தே யெகோவாவின் நோக்கமாக இருக்கிறது. கணவனும் மனைவியும் நெருக்கமாகவும் சந்தோஷமாகவும் வாழ்க்கையை அனுபவித்து மகிழ வேண்டுமென்று அவர் விரும்பினார்.

7. தம்பதிகள் தங்களுடைய பந்தத்தை எப்படிப் பலப்படுத்தலாம்?

7 ஆனால், முன்பைவிட இன்றுள்ள தம்பதிகளுக்கு ஏகப்பட்ட கவலைகளும் கஷ்டங்களும் இருக்கின்றன. சில சமயங்களில் அவற்றைச் சமாளிக்க முடியாமல் போகும்போது, தங்களால் இனி சேர்ந்து வாழ முடியாது என நினைத்து, பிரிந்துவிடுகிறார்கள். ஆனால், திருமண பந்தத்தை யெகோவா எப்படிக் கருதுகிறார் என்பதைப் புரிந்துகொள்வது நமக்கு உதவியாக இருக்கும்.—1 யோவான் 5:3.

8, 9. (அ) திருமணம் சம்பந்தமாக யெகோவா கொடுத்திருக்கும் ஆலோசனையை நாம் எப்போது பின்பற்ற வேண்டும்? (ஆ) திருமண பந்தம் நமக்கு மதிப்புள்ளது என்பதை நாம் எப்படிக் காட்டலாம்?

8 யெகோவா எப்போதுமே நம்முடைய நன்மைக்காகத்தான் ஆலோசனைகளைத் தருகிறார். ‘திருமண ஏற்பாட்டை மதியுங்கள்’ என்று அவர் கொடுத்த ஆலோசனையை ஏற்கெனவே பார்த்தோம். (எபிரெயர் 13:4; பிரசங்கி 5:4) கஷ்டமாக இருந்தாலும், யெகோவாவின் ஆலோசனையைப் பின்பற்றும்போது நாம் நிச்சயம் நன்மை அடைவோம்.—1 தெசலோனிக்கேயர் 1:3; எபிரெயர் 6:10.

9 நம் திருமண பந்தம் நமக்கு மதிப்புள்ளதாக இருப்பதால், அதற்குப் பாதிப்பை ஏற்படுத்துகிற எதையும் செய்வதற்கோ சொல்வதற்கோ நாம் விரும்ப மாட்டோம். அந்தப் பந்தத்தை இன்னும் பலப்படுத்தவே விரும்புவோம். அதற்காக என்ன செய்யலாம்?

சொல்லாலும் செயலாலும் திருமண பந்தத்துக்கு மதிப்புக் கொடுங்கள்

10, 11. (அ) மணவாழ்வில் சிலர் என்ன மோசமான பிரச்சினையை எதிர்ப்படுகிறார்கள்? (ஆ) நம் துணையிடம் பேசும் விஷயத்தில் நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?

10 ஒருவர் பல வழிகளில் தன்னுடைய துணையைப் புண்படுத்த வாய்ப்பு இருக்கிறது. கிறிஸ்தவர்கள் தங்களுடைய துணையை ஒருபோதும் அடிக்கவோ, காயப்படுத்தும் அளவுக்கு ஏதாவது செய்யவோ கூடாது என்று நமக்குத் தெரியும். ஆனாலும், வார்த்தைகளால் நாம் ஒருவரை ஒருவர் காயப்படுத்திவிடலாம். வார்த்தைகள் ஆயுதங்களாக மாறிவிடலாம். ஒரு பெண் சொன்னதைக் கவனியுங்கள். “என் கணவர் வார்த்தைகளால் என் மனதை நோகடிக்கிறார். என் உடம்பில் ஒரு பொட்டுக் காயமில்லாமல் இருக்கலாம், ஆனால், ‘நீ எதுக்குமே லாயக்கில்லை!’ ‘உன்னால் எப்போதுமே எனக்குத் தலைவலிதான்!’ என்றெல்லாம் அவர் என்னை சதா திட்டும்போது அது என் இதயத்தைக் காயப்படுத்துகிறது” என்று அவள் சொன்னாள். தன்னுடைய மனைவி, கெட்ட வார்த்தைகளால் தன்னைத் திட்டுவதாகவும் எப்போதுமே மட்டம்தட்டிப் பேசுவதாகவும் ஒரு கணவர் சொன்னார். “அவள் பயன்படுத்துகிற வார்த்தைகளை எல்லாம் மற்றவர்கள் முன்னால் சொல்லவே முடியாது. அவளோடு என்னால் பேசமுடியாததற்கும் ரொம்ப நேரம்வரை வேலைபார்க்கிற இடத்திலேயே நான் இருப்பதற்கும் இதுதான் காரணம். வீட்டுக்கு வருவதைவிட அது எவ்வளவோ மேல்” என்று அவர் சொன்னார். மனதை நோகடிக்கும் விதத்தில் கடுமையாகவும் கீழ்த்தரமாகவும் பேசுவது இன்று சர்வசாதாரணமாகிவிட்டது.

11 கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் கடுமையான வார்த்தைகளால் தாக்கும்போது அவர்கள் மனதில் உண்டாகும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறாது. ஒருவரை ஒருவர் அப்படி நடத்துவதை யெகோவா நிச்சயம் விரும்புவதில்லை. ஆனால், உங்களை அறியாமலேயே உங்கள் துணையைப் புண்படுத்திவிட வாய்ப்பு இருக்கிறது. உங்கள் துணையை அன்போடு நடத்துவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், உங்கள் துணை அப்படி உணருகிறாரா? நீங்கள் சொன்ன ஏதாவது ஒரு விஷயம் மனதைக் காயப்படுத்திவிட்டதாக உங்கள் துணை சொன்னால், அப்படிப் பேசுவதை உடனடியாகத் தவிர்ப்பீர்களா?—கலாத்தியர் 5:15; எபேசியர் 4:31-ஐ வாசியுங்கள்.

12. திருமணமான ஒருவருக்கும் யெகோவாவுக்கும் இடையிலுள்ள பந்தத்தை எது பாதிக்கலாம்?

12 மற்றவர்கள் முன்பாகவும் சரி, தனிமையில் இருக்கும்போதும் சரி, நீங்கள் உங்கள் துணையிடம் எப்படி பேசுகிறீர்கள் என்பது, யெகோவாவோடு நீங்கள் வைத்திருக்கும் பந்தத்தைப் பாதிக்கிறது. (1 பேதுரு 3:7-ஐ வாசியுங்கள்.) “கடவுளை வழிபடுவதாக நினைத்துக்கொண்டிருக்கிற ஒருவன் தன் நாக்கை அடக்காமல் தன் இதயத்தை ஏமாற்றிக்கொண்டிருந்தால், அவனுடைய வழிபாடு வீணானதாக இருக்கும்” என்று யாக்கோபு 1:26 நமக்கு நினைப்பூட்டுகிறது.

13. ஒருவர் தன்னுடைய துணையை வேறெந்த விதத்திலும் காயப்படுத்திவிட வாய்ப்பிருக்கிறது?

13 ஒரு தம்பதி, வேறு விதங்களிலும் தங்களுடைய துணையின் மனதைக் காயப்படுத்தாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, நீங்கள் வேறொரு நபரோடு அதிக நேரம் செலவிட ஆரம்பித்தால் உங்களுடைய துணை எப்படி உணருவார்? ஒருவேளை அந்த நபரோடு ஊழியம் செய்வதில், அல்லது அவருடைய பிரச்சினையைச் சமாளிக்க உதவுவதில் நீங்கள் அதிக நேரம் செலவிடலாம். தப்பான எண்ணத்தோடு நீங்கள் அப்படிச் செய்யாவிட்டாலும், அது உங்கள் துணையின் மனதைக் காயப்படுத்தும்தானே? ஒரு கிறிஸ்தவ மனைவி இப்படிச் சொன்னார்: “என் வீட்டுக்காரர் எப்போது பார்த்தாலும் சபையிலுள்ள இன்னொரு சகோதரியோடு நேரம் செலவிடுவதைப் பார்க்கும்போது... அவர்மீது ரொம்பவே அக்கறை காட்டும்போது... என்னால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடிவதில்லை. என்னிடம் ஏதோ குறை இருப்பதுபோல் நினைக்க வைக்கிறது.”

14. (அ) ஆதியாகமம் 2:24-லிருந்து என்ன அடிப்படை உண்மையைத் தெரிந்துகொள்கிறோம்? (ஆ) நம்மையே என்ன கேட்டுக்கொள்ள வேண்டும்?

14 கிறிஸ்தவர்களாகிய நமக்கு, பெற்றோரையும் நம் சபையிலுள்ள சகோதர சகோதரிகளையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு இருக்கிறது. ஆனாலும், திருமணத்துக்குப் பிறகு, நம் துணையைக் கவனித்துக்கொள்வதுதான் நம்முடைய முக்கியமான பொறுப்பு. கணவன், “தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்” என்று யெகோவா சொல்லியிருக்கிறார். (ஆதியாகமம் 2:24) நம் துணையின் உணர்ச்சிகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் துணைக்கு காட்ட வேண்டிய பாசத்தையும் நேசத்தையும் காட்டுகிறேனா? கொடுக்க வேண்டிய நேரத்தையும் கவனத்தையும் கொடுக்கிறேனா?’

15. திருமணமான கிறிஸ்தவர்கள் தங்களுடைய துணை அல்லாத ஒருவரோடு அளவுக்குமீறி நெருங்கிப் பழகுவதை ஏன் தவிர்க்க வேண்டும்?

15 நம் துணை அல்லாத ஒருவரோடு நாம் அளவுக்குமீறி நெருக்கமாகப் பழகினால், நம் மணவாழ்வில் பிரச்சினைதான் வரும். அந்த நபரோடு, மனதளவில் நாம் நெருக்கமாகிவிடலாம்; அவரைக் காதலிக்க வேண்டுமென்ற ஆசையும் வந்துவிடலாம். (மத்தேயு 5:28) அந்த ஆசைகள் அதிகமாகும்போது, உங்களுடைய திருமண பந்தத்தை அவமதிக்கிற எதையாவது நீங்கள் செய்துவிடலாம்.

“தாம்பத்திய உறவின் புனிதத்தைக் கெடுக்காதீர்கள்”

16. திருமணம் சம்பந்தமாக பைபிள் என்ன கட்டளை கொடுக்கிறது?

16 ‘திருமண ஏற்பாட்டை மதியுங்கள்’ என்று குறிப்பிட்ட பிறகு, பைபிள் தொடர்ந்து இப்படிச் சொல்கிறது: “தாம்பத்திய உறவின் புனிதத்தைக் கெடுக்காதீர்கள். ஏனென்றால், பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்களையும், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களையும் கடவுள் நியாயந்தீர்ப்பார்.” (எபிரெயர் 13:4) ‘தாம்பத்திய உறவு’ என்பது திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் மட்டுமே அனுபவிக்கும் பாலுறவை அர்த்தப்படுத்துகிறது. (நீதிமொழிகள் 5:18) அந்த உறவின் புனிதத்தைக் கெடுக்காமல் அதற்கு எப்படி மதிப்புக் கொடுக்கலாம்?

17. (அ) மணத்துணைக்குத் துரோகம் செய்வதைப் பற்றி இன்று நிறைய பேர் என்ன நினைக்கிறார்கள்? (ஆ) மணத்துணைக்குத் துரோகம் செய்வதை கிறிஸ்தவர்கள் எப்படிக் கருத வேண்டும்?

17 இன்று சிலர், மணத்துணைக்குத் துரோகம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட மனப்பான்மை நம்மைத் தொற்றிக்கொள்ள நாம் விடக்கூடாது. பாலியல் முறைகேட்டையும் மணத்துணைக்குத் துரோகம் செய்வதையும் யெகோவா வெறுக்கிறார் என்று பைபிள் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது. (ரோமர் 12:9-ஐ வாசியுங்கள்; எபிரெயர் 10:31; 12:29) நம் துணை அல்லாத ஒருவரோடு செக்ஸ் வைத்துக்கொண்டால், திருமண பந்தத்தின் புனிதத்தை நாம் கெடுக்கிறவர்களாக இருப்போம். அதோடு, யெகோவாவின் நெறிமுறைகளுக்கு நாம் மதிப்புக் காட்டாதவர்களாக ஆகிவிடுவோம். அவரோடுள்ள நம் பந்தத்தையும் நாம் முறித்துவிடுவோம். அதனால், நம் துணைக்குத் துரோகம் செய்வதற்கு வழிநடத்தும் பாதையில் நாம் ஒரு அடிகூட எடுத்துவைக்கக் கூடாது. அப்படியென்றால், இன்னொருவரைப் பற்றிய ஒழுக்கக்கேடான எண்ணங்கள் நமக்குள் வருவதைக்கூட நாம் தவிர்க்க வேண்டும்.—யோபு 31:1.

18. (அ) மணத்துணைக்குத் துரோகம் செய்வது ஏன் பொய்க் கடவுள்களை வணங்குவதற்குச் சமமாக இருக்கிறது? (ஆ) ஒருவர் மணத்துணைக்குத் துரோகம் செய்வதை யெகோவா எப்படிக் கருதுகிறார்?

18 திருச்சட்டத்தின்படி, மணத்துணைக்குத் துரோகம் செய்வது, மிக மோசமான ஒரு பாவமாக இருந்தது; அது பொய்க் கடவுள்களை வணங்குவதற்குச் சமமாக இருந்தது. இரண்டுக்குமே மரணத் தண்டனை கொடுக்கப்பட்டது. (லேவியராகமம் 20:2, 10) மணத்துணைக்குத் துரோகம் செய்வது எப்படி பொய்க் கடவுள்களை வணங்குவதற்குச் சமமாக இருந்தது? இஸ்ரவேலர் ஒருவர் பொய்க் கடவுள்களை வணங்கியபோது, அவர் யெகோவாவுக்கு விசுவாசமாக இருப்பதாகக் கொடுத்த வாக்கை மீறினார். அதேபோல், அவர் மணத்துணைக்குத் துரோகம் செய்தபோது தன் துணைக்கு விசுவாசமாக இருப்பதாகக் கொடுத்த வாக்கை மீறினார். (யாத்திராகமம் 19:5, 6; உபாகமம் 5:9; மல்கியா 2:14-ஐ வாசியுங்கள்.) மணத்துணைக்குத் துரோகம் செய்வதை மிக மோசமான பாவமாக யெகோவா கருதினார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

19. மணத்துணைக்குத் துரோகம் செய்யாமலிருக்க எது நமக்கு உதவும்?

19 நம் காலத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? இன்று நாம் திருச்சட்டத்தின் கீழ் இல்லாவிட்டாலும், மணத்துணைக்குத் துரோகம் செய்வது பற்றிய யெகோவாவின் கருத்து மாறவில்லை. பொய்க் கடவுளை நாம் ஒருபோதும் வணங்க மாட்டோம். அதே போல, நம் துணைக்கு நாம் ஒருபோதும் துரோகம் செய்யக் கூடாது. (சங்கீதம் 51:1, 4; கொலோசெயர் 3:5) அப்படிச் செய்தால், நம் திருமண பந்தத்தையும் சரி, நம் கடவுளாகிய யெகோவாவையும் சரி, அவமதிக்கிறோம் என்று அர்த்தம்.—பின்குறிப்பு 26.

உங்கள் திருமண பந்தத்தைப் பலப்படுத்துவது எப்படி?

20. மணவாழ்வில் ஞானம் ஏன் முக்கியம்?

20 உங்கள் திருமண பந்தத்தை எப்படிப் பலப்படுத்தலாம்? “வீடு ஞானத்தால் கட்டப்படும். பகுத்தறிவால் அது நிலைநிறுத்தப்படும்” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (நீதிமொழிகள் 24:3) ஒரு வீடு, அன்பும் அரவணைப்பும் இல்லாததாக... வெறுமையாக... இருக்கலாம். அல்லது, அன்பும் ஆறுதலும் பாதுகாப்பும் உள்ளதாக இருக்கலாம். மணவாழ்வைப் பொறுத்ததிலும் அதுதான் உண்மை. ஆனால், ஞானமுள்ள ஒருவர் தன்னுடைய மணவாழ்வு பாதுகாப்பாக... மகிழ்ச்சியாக... இனிமையாக... இருக்கும்படி பார்த்துக்கொள்வார்.

21. உங்கள் திருமண பந்தத்தைப் பலப்படுத்த அறிவு எப்படி உதவும்?

21 அந்த வீட்டைப் பற்றி பைபிள் தொடர்ந்து இப்படிச் சொல்கிறது: “அறிவால் அதன் அறைகள் நிரப்பப்படும். எல்லாவித அருமையான பொக்கிஷங்களும் அவற்றில் குவித்து வைக்கப்படும்.” (நீதிமொழிகள் 24:4) பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளும் விஷயங்கள் உங்கள் மணவாழ்வை இன்னும் சிறந்ததாக ஆக்கும். (ரோமர் 12:2; பிலிப்பியர் 1:9) பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் நீங்கள் ஒன்றுசேர்ந்து வாசிக்கும்போது, அதிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை எப்படிப் பின்பற்றலாம் என கலந்துபேசுங்கள். ஒருவருக்கொருவர் என்னென்ன விதங்களில் அன்பையும் மரியாதையையும் காட்டலாம்... கனிவாகவும் அக்கறையாகவும் நடந்துகொள்ளலாம்... என்றெல்லாம் யோசித்துப் பாருங்கள். உங்களுடைய திருமண பந்தத்தைப் பலப்படுத்தும் குணங்களை வளர்த்துக்கொள்ளவும் உங்கள் துணைக்கு மிகவும் பிடித்தமான ஒரு நபராக இருக்கவும் உதவும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்.—நீதிமொழிகள் 15:16, 17; 1 பேதுரு 1:7.

குடும்ப வழிபாட்டின்போது வழிநடத்துதலுக்காக யெகோவாவை நம்பியிருங்கள்

22. நம் துணையிடம் ஏன் அன்போடும் மதிப்பு மரியாதையோடும் நடந்துகொள்ள வேண்டும்?

22 நம்முடைய துணையிடம் அன்போடும் மதிப்பு மரியாதையோடும் நடந்துகொள்ள நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். அப்போது நம் மணவாழ்வில் பாசமும் நேசமும் இருக்கும். திருமண பந்தம் பலப்படும். மிக முக்கியமாக, நாம் யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவோம்.—சங்கீதம் 147:11; ரோமர் 12:10.