Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 6

பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

“எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்.”—1 கொரிந்தியர் 10:31.

1, 2. பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பதில் நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?

 நீங்கள் ஒரு பழத்தைச் சாப்பிட போவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதன் ஒரு பாகம் அழுகியிருப்பதைப் பார்க்கிறீர்கள். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அதை அப்படியே சாப்பிடுவீர்களா? அல்லது, அதை அப்படியே தூக்கியெறிந்துவிடுவீர்களா? இல்லையென்றால், அழுகிய பாகத்தை வெட்டிவிட்டு நல்ல பாகத்தை மட்டும் சாப்பிடுவீர்களா?

2 ஒரு விதத்தில், அந்தப் பழத்தைப் போல்தான் இன்றைய பொழுதுபோக்குகளும் இருக்கின்றன. சில பொழுதுபோக்குகள் நல்லவையாக இருந்தாலும் பெரும்பாலான பொழுதுபோக்குகள் அந்தப் பழத்தின் அழுகிய பாகத்தைப் போல இருக்கின்றன. ஒழுக்கக்கேடு, வன்முறை அல்லது பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்கள்தான் அவற்றில் அதிகமாக இருக்கின்றன. பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நீங்கள் என்ன சொல்வீர்கள்: “நான் எப்படிப்பட்ட பொழுதுபோக்கை வேண்டுமானாலும் தேர்ந்தெடுப்பேன், அது என்னுடைய இஷ்டம்” என்று சொல்வீர்களா? அல்லது, “எல்லா பொழுதுபோக்குகளும் மோசமானவைதான்” என்று சொல்வீர்களா? இல்லையென்றால், கெட்ட பொழுதுபோக்கை விட்டுவிட்டு நல்லதை மட்டும் கவனமாகத் தேர்ந்தெடுப்பீர்களா?

3. பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும்போது நாம் எதைப் பற்றி யோசிக்க வேண்டும்?

3 நம் எல்லாருக்கும் பொழுதுபோக்கு தேவை. அதனால், நாம் கவனமாக அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கு நம் வணக்கத்தை எப்படிப் பாதிக்கும் என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

“எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்”

4. பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நமக்கு உதவும் ஒரு பைபிள் நியமம் என்ன?

4 யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது, நம் வாழ்க்கையை அவருடைய சேவைக்காகப் பயன்படுத்துவோம் என்று வாக்குக் கொடுக்கிறோம். (பிரசங்கி 5:4-ஐ வாசியுங்கள்.) அதாவது, நம் வாழ்க்கையில் ‘எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்வோம்’ என்று வாக்குக் கொடுக்கிறோம். (1 கொரிந்தியர் 10:31) அப்படியென்றால், கூட்டங்களுக்கோ ஊழியத்துக்கோ போகும்போது மட்டுமல்ல, ஓய்வெடுக்கும்போதும் பொழுதுபோக்கை அனுபவிக்கும்போதும்கூட நாம் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம்.

5. யெகோவாவுக்கு எப்படிப்பட்ட வணக்கத்தை நாம் செலுத்த வேண்டும்?

5 வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு விஷயமும் நம் வணக்கத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அதனால்தான், “உங்களுடைய உடலை உயிருள்ளதும் பரிசுத்தமுள்ளதும் கடவுளுக்குப் பிரியமுள்ளதுமான பலியாக அர்ப்பணியுங்கள்” என்று பவுல் சொன்னார். (ரோமர் 12:1) “உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் உங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்” என்று இயேசு சொன்னார். (மாற்கு 12:30) நாம் எப்போதுமே யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்க விரும்புகிறோம். இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு ஒரு மிருகத்தைப் பலி செலுத்தியபோது, அது எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்த்தார். குறையுள்ள மிருகத்தை அவர்கள் பலி செலுத்தியபோது அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. (லேவியராகமம் 22:18-20) அதே போல, நம்முடைய வணக்கத்தையும் யெகோவா ஏற்றுக்கொள்ளாமல் போக வாய்ப்பிருக்கிறது. எப்படி?

6, 7. நாம் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கு நம் வணக்கத்தை எப்படிப் பாதிக்கலாம்?

6 “நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்” என்று யெகோவா நம்மிடம் சொல்கிறார். (1 பேதுரு 1:14-16; 2 பேதுரு 3:11) நம்முடைய வணக்கம் பரிசுத்தமாக, அதாவது தூய்மையாக, இருந்தால்தான் யெகோவா அதை ஏற்றுக்கொள்வார். (உபாகமம் 15:21) நாம் யெகோவா வெறுக்கிற விஷயங்களில் ஈடுபட்டால், அதாவது ஒழுக்கக்கேடான, வன்முறையான அல்லது பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டால், அவருக்கு நாம் செலுத்தும் வணக்கம் சுத்தமானதாக இருக்காது. (ரோமர் 6:12-14; 8:13) அப்படிப்பட்ட விஷயங்கள் அடங்கிய பொழுதுபோக்குகளை நாம் அனுபவிப்பதையும் யெகோவா வெறுக்கிறார். அது நம் வணக்கத்தை அசுத்தமானதாக ஆக்கிவிடும். அந்த வணக்கத்தை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். அவரோடு நமக்கிருக்கும் பந்தமும் ரொம்பவே பாதிக்கப்படும்.

7 அப்படியானால், பொழுதுபோக்கை ஞானமாகத் தேர்ந்தெடுப்பது எப்படி? பொழுதுபோக்கு விஷயத்தில், எதைத் தேர்ந்தெடுப்பது, எதைத் தவிர்ப்பது என்று தீர்மானிக்க என்னென்ன பைபிள் நியமங்கள் உதவும்?

கெட்டதை வெறுத்துவிடுங்கள்

8, 9. எப்படிப்பட்ட பொழுதுபோக்குகளை நாம் தவிர்க்கிறோம்? ஏன்?

8 இன்று பலவிதமான பொழுதுபோக்குகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை கிறிஸ்தவர்களாகிய நாம் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், பெரும்பாலானவற்றை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். முதலில், எப்படிப்பட்ட பொழுதுபோக்கை நாம் தவிர்க்க வேண்டுமென்று பார்க்கலாம்.

9 நிறைய படங்கள், வெப்சைட்டுகள், டிவி நிகழ்ச்சிகள், வீடியோ கேம்ஸ், மற்றும் பாடல்களில் ஒழுக்கக்கேடும் வன்முறையும் பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களும்தான் இருக்கின்றன. அவற்றில் கெட்ட விஷயங்கள் சாதாரண விஷயங்களாகவும் காமெடியான விதத்திலும் காட்டப்படுகின்றன. ஆனால், யெகோவா கொடுத்திருக்கும் நெறிமுறைகளுக்கு எதிர்மாறாக இருக்கும் பொழுதுபோக்குகளைத் தவிர்க்க கிறிஸ்தவர்கள் கவனமாக இருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 15:28, 29; 1 கொரிந்தியர் 6:9, 10) அப்படிப்பட்ட பொழுதுபோக்குகளை நாம் தவிர்க்கும்போது, யெகோவாவுக்குப் பிடிக்காத கெட்ட விஷயங்களை நாமும் வெறுக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம்.—சங்கீதம் 34:14; ரோமர் 12:9.

10. கெட்ட பொழுதுபோக்குகளைத் தேர்ந்தெடுப்பதால் என்ன நடக்க வாய்ப்பிருக்கிறது?

10 ஆனால் ஒழுக்கக்கேடு, வன்முறை மற்றும் பேய்களோடு சம்பந்தப்பட்ட பொழுதுபோக்குகளில் எந்தத் தவறும் இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள். ‘இதில் என்ன ஆபத்து இருக்கிறது? இந்த மாதிரி விஷயங்களை நான் செய்யப்போகிறேனா என்ன?’ என்று அவர்கள் நினைக்கிறார்கள். நாமும் அப்படி நினைத்தால், நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்கிறோம் என்று அர்த்தம். “எல்லாவற்றையும்விட மனுஷனுடைய இதயமே நயவஞ்சகமானது; அது எதையும் செய்யத் துணியும்” என்று பைபிள் சொல்கிறது. (எரேமியா 17:9) யெகோவா ஏற்றுக்கொள்ளாத பொழுதுபோக்குகளை நாம் அனுபவித்து மகிழ்ந்தால், அவற்றை நாம் வெறுக்கிறோம் என்று எப்படிச் சொல்ல முடியும்? எந்தளவுக்கு அவற்றை நாம் அனுபவித்து மகிழ்கிறோமோ அந்தளவுக்கு அவற்றைச் சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள ஆரம்பிப்போம். போகப் போக, நம்முடைய மனசாட்சி பலவீனமாகிவிடும். நாம் தவறான தீர்மானம் எடுப்பதற்கு முன், நம் மனசாட்சி நம்மை எச்சரிக்காமல் போய்விடும்.—சங்கீதம் 119:70; 1 தீமோத்தேயு 4:1, 2.

11. நல்ல பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க கலாத்தியர் 6:7 எப்படி உதவும்?

11 “ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்” என்று பைபிள் சொல்கிறது. (கலாத்தியர் 6:7) பொழுதுபோக்குகளில் வரும் கெட்ட விஷயங்களை ரசித்துக்கொண்டே இருந்தால் அதை நாம் செய்துவிட வாய்ப்பிருக்கிறது. ஒழுக்கக்கேடான பொழுதுபோக்குகள் சிலரை ரொம்பவே பாதித்திருப்பதால், அவர்கள் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், பொழுதுபோக்கை ஞானமாகத் தேர்ந்தெடுக்க யெகோவா நமக்கு உதவி செய்கிறார்.

பைபிள் நியமங்களின் அடிப்படையில் தீர்மானங்களை எடுங்கள்

12. பொழுதுபோக்கு சம்பந்தமாக நல்ல தீர்மானங்களை எடுக்க எவை நமக்கு உதவும்?

12 சில பொழுதுபோக்குகளை யெகோவா முழுவதுமாக வெறுக்கிறார். அவற்றை நிச்சயம் நாம் தவிர்க்க வேண்டும். ஆனால், எதையெல்லாம் அவர் வெறுக்கிறார் என்று தெளிவாகத் தெரியாதபோது என்ன செய்வது? நாம் எதைப் பார்க்கலாம், எதைக் கேட்கலாம், எதை வாசிக்கலாம் என்பதைப் பற்றிய விலாவாரியான சட்டங்களை யெகோவா நமக்குத் தருவதில்லை. அதற்குப் பதிலாக, பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியை நாம் பயன்படுத்த வேண்டுமென்று அவர் விரும்புகிறார். (கலாத்தியர் 6:5-ஐ வாசியுங்கள்.) அவர் நமக்கு நியமங்களைத் தந்திருக்கிறார். சில விஷயங்களை அவர் எப்படிக் கருதுகிறார் என்பதைப் பற்றிய அடிப்படை உண்மைகள்தான் அந்த நியமங்கள். நம்முடைய மனசாட்சியைப் பயிற்றுவிக்க அந்த நியமங்கள் உதவும். “யெகோவாவின் விருப்பம் என்னவென்று” தெரிந்துகொண்டு, அவருடைய மனதைப் பிரியப்படுத்தும் விதத்தில் தீர்மானங்களை எடுக்க அவை நமக்கு உதவும்.—எபேசியர் 5:17.

பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க பைபிள் நியமங்கள் நமக்கு உதவும்

13. பொழுதுபோக்கு சம்பந்தமாக நாம் ஒவ்வொருவரும் ஏன் வித்தியாசமான தீர்மானங்களை எடுக்கிறோம்? ஆனால், நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?

13 நம் எல்லாருக்கும் ஒரே மாதிரியான பொழுதுபோக்கு பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஏன்? நம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான ரசனைகள் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, ஒருவருக்குச் சரியெனப் படுவது மற்றொருவருக்குத் தவறாகப் படலாம். எப்படியிருந்தாலும் சரி, நல்ல தீர்மானங்கள் எடுப்பதற்கு நாம் எல்லாருமே பைபிள் நியமங்களைப் பின்பற்ற வேண்டும். (பிலிப்பியர் 1:9) அப்போதுதான், கடவுள் ஏற்றுக்கொள்கிற பொழுதுபோக்கை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும்.—சங்கீதம் 119:11, 129; 1 பேதுரு 2:16.

14. (அ) நேரத்தைப் பயன்படுத்தும் விதத்தில் நாம் எதை மனதில் வைக்க வேண்டும்? (ஆ) கிறிஸ்தவர்களுக்கு பவுல் என்ன ஆலோசனை கொடுத்தார்?

14 பொழுதுபோக்குக்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதையும் நாம் மனதில் வைக்க வேண்டும். பொழுதுபோக்குக்கு நீங்கள் எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதை இது காட்டிவிடும். யெகோவாவுக்குச் சேவை செய்வதுதான் கிறிஸ்தவர்களாகிய நமக்கு வாழ்க்கையில் மிக முக்கியமானதாக இருக்கிறது. (மத்தேயு 6:33-ஐ வாசியுங்கள்.) ஆனால், நமக்குத் தெரியாமலேயே பொழுதுபோக்குக்கு நாம் அதிக நேரம் செலவு செய்ய ஆரம்பித்துவிடலாம். “நீங்கள் ஞானமில்லாதவர்களாக நடக்காமல், ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கிறிஸ்தவர்களுக்கு பவுல் ஆலோசனை கொடுத்தார். (எபேசியர் 5:15, 16) அதனால், பொழுதுபோக்குக்கு அதிக நேரம் செலவிடாமல், கடவுளுடைய சேவைக்கு நம் வாழ்க்கையில் எப்போதும் முதலிடம் கொடுக்க வேண்டும்.—பிலிப்பியர் 1:10.

15. யெகோவாவோடுள்ள நம் பந்தத்தைப் பாதிக்கும் பொழுதுபோக்குகளிலிருந்து நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?

15 அப்படியானால், யெகோவா வெறுக்கும் பொழுதுபோக்குகளை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஆனால், ஒரு பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பதில் நமக்குச் சந்தேகம் இருந்தால் என்ன செய்வது? அப்போதும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் மலைப் பாதையில் நடந்து போவதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பாதையின் விளிம்புவரை நீங்கள் போவீர்களா? உங்களுடைய உயிரை நீங்கள் மதித்தால் நிச்சயம் ஆபத்திலிருந்து விலகியிருப்பீர்கள். பொழுதுபோக்கு விஷயத்திலும் இதுதான் உண்மை. “கெட்ட வழியில் கால்வைக்காதே” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 4:25-27) அதனால், ஒரு பொழுதுபோக்கு கெட்டது என்று நமக்குத் தெரியும்போது அதைத் தவிர்க்கிறோம். அதுமட்டுமல்ல, ஒரு பொழுதுபோக்கு ஆபத்தானதாக இருக்குமோ... யெகோவாவோடு நமக்கிருக்கும் பந்தத்தை அது பாதித்துவிடுமோ... என்று துளியளவு சந்தேகம் வந்தால்கூட அதை நாம் தவிர்க்கிறோம்.

யெகோவா பார்க்கும் விதத்தில் பாருங்கள்

16. (அ) யெகோவா வெறுக்கும் சில விஷயங்கள் என்ன? (ஆ) யெகோவா வெறுப்பதை நாமும் வெறுக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

16 “யெகோவாவை நேசிக்கிறவர்களே, கெட்ட காரியங்களை வெறுத்துவிடுங்கள்” என்று சங்கீதக்காரன் எழுதினார். (சங்கீதம் 97:10) யெகோவா எப்படி யோசிக்கிறார், எப்படி உணருகிறார் என்று பைபிளிலிருந்து நம்மால் கற்றுக்கொள்ள முடியும். நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள், யெகோவாவின் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள எப்படி உதவும் என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, “பொய் பேசும் நாவு, அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்தும் கைகள், சதித்திட்டங்கள் போடுகிற இதயம், கெட்டதைச் செய்ய வேகமாக ஓடுகிற கால்கள்” ஆகியவற்றை யெகோவா வெறுக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 6:16-19) அதோடு, “பாலியல் முறைகேடு, . . . சிலை வழிபாடு, ஆவியுலகத் தொடர்பு, . . . பொறாமை, கோப வெறி, . . . மற்றவர்களைப் பார்த்து வயிறெரிதல், குடிவெறி, குடித்துக் கும்மாளம் போடுதல்” போன்றவற்றை நாம் தவிர்க்க வேண்டுமென்றும் பைபிள் கற்றுத்தருகிறது. (கலாத்தியர் 5:19-21) பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பதற்கு இந்த பைபிள் நியமங்கள் உங்களுக்கு எப்படி உதவுகின்றன என்று புரிந்துகொள்ள முடிகிறதா? நாம் மற்றவர்களோடு இருந்தாலும் சரி, தனிமையில் இருந்தாலும் சரி, வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் யெகோவாவின் நெறிமுறைகளைப் பின்பற்ற விரும்புகிறோம். (2 கொரிந்தியர் 3:18) சொல்லப்போனால், தனிமையில் இருக்கும்போது நாம் எடுக்கும் தீர்மானங்கள், நாம் உண்மையிலேயே எப்படிப்பட்ட நபர் என்பதைக் காட்டிவிடும்.—சங்கீதம் 11:4; 16:8.

17. பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

17 அதனால், பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும்போது உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கு யெகோவாவோடு எனக்கிருக்கும் பந்தத்தை எப்படிப் பாதிக்கும்? அது என் மனசாட்சியை எப்படிப் பாதிக்கும்?’ பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நமக்கு உதவுகிற இன்னும் சில நியமங்களை இப்போது பார்க்கலாம்.

18, 19. (அ) கிறிஸ்தவர்களுக்கு பவுல் என்ன ஆலோசனை கொடுத்தார்? (ஆ) பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க என்ன பைபிள் நியமங்கள் நமக்கு உதவும்?

18 நாம் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கு நாம் எந்த விஷயங்களால் நம் மனதை நிரப்ப விரும்புகிறோம் என்பதைக் காட்டுகிறது. “உண்மையானவை எவையோ, அதிமுக்கியமானவை எவையோ, நீதியானவை எவையோ, சுத்தமானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, மெச்சத்தக்கவை எவையோ, ஒழுக்கமானவை எவையோ, பாராட்டுக்குரியவை எவையோ அவற்றையே யோசித்துக்கொண்டிருங்கள்” என்று பவுல் எழுதினார். (பிலிப்பியர் 4:8) இப்படிப்பட்ட நல்ல விஷயங்களால் நம் மனதை நிரப்பும்போது சங்கீதக்காரனைப் போல நம்மாலும், “யெகோவாவே, . . . என் வாயிலிருந்து வருகிற வார்த்தைகளும் இதயத்தில் நான் தியானிக்கிற விஷயங்களும் உங்களுக்குப் பிரியமாக இருக்கட்டும்” என்று சொல்ல முடியும்.—சங்கீதம் 19:14.

19 உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் மனதை எப்படிப்பட்ட விஷயங்களால் நிரப்புகிறேன்? ஒரு படத்தையோ டிவி நிகழ்ச்சியையோ பார்த்த பிறகு சந்தோஷமும் புத்துணர்ச்சியும் தரும் விஷயங்கள் என் மனதில் நிரம்பி இருக்கிறதா? நல்ல மனசாட்சியோடு நிம்மதியாக இருக்க முடிகிறதா? (எபேசியர் 5:5; 1 தீமோத்தேயு 1:5, 19) எந்தத் தயக்கமும் இல்லாமல் என்னால் யெகோவாவிடம் பேச முடிகிறதா? அல்லது அவரிடம் பேசத் தயங்குகிறேனா? நான் பார்த்த விஷயம் ஒழுக்கங்கெட்ட, வன்முறையான காரியங்களை யோசிக்க வைக்கிறதா? (மத்தேயு 12:33; மாற்கு 7:20-23) நான் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கு, நான் “இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றுவதை” காட்டுகிறதா?’ (ரோமர் 12:2) இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் நேர்மையாக யோசித்துப் பார்த்தால், யெகோவாவோடு நமக்கிருக்கும் பந்தத்தைப் பலப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். “வீணான காரியங்களைப் பார்க்காதபடி என் கண்களைத் திருப்புங்கள்” என்று கேட்ட சங்கீதக்காரனைப் போல நாமும் யெகோவாவிடம் கேட்க வேண்டும். *சங்கீதம் 119:37.

நம் தீர்மானங்கள் மற்றவர்களைப் பாதிக்கின்றன

20, 21. பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும்போது மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு நாம் ஏன் மதிப்புக் கொடுக்க வேண்டும்?

20 நாம் மனதில் வைக்க வேண்டிய மற்றொரு நியமம் இதுதான்: “எல்லாவற்றையும் அனுபவிக்க ஒருவனுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், எல்லாமே பலப்படுத்துவதில்லை. ஒவ்வொருவனும் தனக்குப் பிரயோஜனமானதைத் தேடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேட வேண்டும்.” (1 கொரிந்தியர் 10:23, 24) ஒரு விஷயத்தைச் செய்ய நமக்குச் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக நாம் அதைச் செய்ய வேண்டும் என்று அர்த்தமில்லை. நாம் எடுக்கும் தீர்மானங்கள் நம் சகோதர சகோதரிகளை எப்படிப் பாதிக்கிறது என்று நாம் கவனமாக யோசித்துப் பார்க்க வேண்டும்.

21 எல்லாருடைய மனசாட்சியும் ஒரேபோல் இருக்காது. உதாரணத்துக்கு, ஒரு டிவி நிகழ்ச்சியைப் பார்க்க உங்கள் மனசாட்சி அனுமதிக்கலாம். ஆனால், அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது தவறென உங்கள் சகோதரரோ சகோதரியோ நினைப்பது உங்களுக்குத் தெரியவந்தால் என்ன செய்வீர்கள்? அதைப் பார்க்க உங்களுக்கு உரிமை இருந்தாலும், அதைப் பார்க்க வேண்டாம் என்று நீங்கள் தீர்மானிக்கலாம். ஏனென்றால், ‘உங்களுடைய சகோதரர்களுக்கு எதிராக பாவம் செய்யவோ’ ‘கிறிஸ்துவுக்கு எதிராக பாவம் செய்யவோ’ நீங்கள் விரும்ப மாட்டீர்கள். (1 கொரிந்தியர் 8:12) ஆம், நம் சகோதர சகோதரிகளுக்குத் தடைக்கல்லாக இருக்கும் எதையும் செய்ய நாம் விரும்ப மாட்டோம்.—ரோமர் 14:1; 15:1; 1 கொரிந்தியர் 10:32.

22. பொழுதுபோக்கு விஷயத்தில் மற்றவர்களுடைய தீர்மானங்கள், நம்முடைய தீர்மானங்களிலிருந்து வித்தியாசப்பட்டால் நாம் எப்படி நியாயமாக நடந்துகொள்ளலாம்?

22 ஒரு விஷயத்தைப் பார்ப்பதோ, படிப்பதோ, செய்வதோ ஒரு சகோதரரின் அல்லது சகோதரியின் மனசாட்சிக்குச் சரியெனத் தோன்றலாம். அது உங்களுடைய மனசாட்சிக்குத் தவறெனத் தோன்றினால் என்ன செய்வது? அந்த நபர்மீது உங்களுக்கு அன்பும் மரியாதையும் இருந்தால் நீங்கள் எடுக்கும் அதே தீர்மானங்களை அவரும் எடுக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்த மாட்டீர்கள். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு சாலையில் வண்டி ஓட்டுவதாக வைத்துக்கொள்ளுங்கள். சிலரால், உங்களைவிட வேகமாகவோ மெதுவாகவோ வண்டியை ஓட்ட முடியும் என்று உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு ஈடாக அவர்கள் ஓட்டாததால் அவர்கள் திறமையாக ஓட்டுபவர்கள் அல்ல என்று சொல்ல முடியுமா? முடியாது. அதே போல, நீங்களும் மற்றொரு சகோதரரும் ஒரே பைபிள் நியமங்களின்படி வாழலாம். ஆனால், எது சரியான பொழுதுபோக்கு என்று தீர்மானிப்பதில் உங்கள் இருவருக்கும் கொஞ்சம் வித்தியாசமான கருத்துகள் இருக்கலாம்.—பிரசங்கி 7:16; பிலிப்பியர் 4:5.

23. பொழுதுபோக்கை நாம் எப்படி ஞானமாகத் தேர்ந்தெடுக்கலாம்?

23 அப்படியென்றால், பொழுதுபோக்கை நாம் எப்படி ஞானமாகத் தேர்ந்தெடுக்கலாம்? பைபிள் நியமங்களால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியை நாம் பயன்படுத்தினால்... நம் சகோதர சகோதரிகள்மீது உண்மையான அக்கறை காட்டினால்... பொழுதுபோக்கை நாம் ஞானமாகத் தேர்ந்தெடுப்போம். அப்படிச் செய்யும்போது, “எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காக” செய்கிறோம் என்ற சந்தோஷம் நமக்கு இருக்கும்.

^ பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க உதவும் இன்னும் சில நியமங்களை இந்த வசனங்களில் பார்க்கலாம்: நீதிமொழிகள் 3:31; 13:20; எபேசியர் 5:3, 4; கொலோசெயர் 3:5, 8, 20.