Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 14

எல்லாவற்றிலும் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்

எல்லாவற்றிலும் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்

“நாங்கள் எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க விரும்புகிறோம்.”—எபிரெயர் 13:18.

1, 2. நேர்மையாக இருக்க நாம் கடினமாக முயற்சி செய்வதைப் பார்த்து யெகோவா எப்படி உணருகிறார்?

 ஒரு பையன், பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வரும் வழியில் கீழே ஒரு பர்ஸ் கிடப்பதைப் பார்க்கிறான். அதில் நிறைய பணம் இருக்கிறது. அவன் அதை என்ன செய்வான்? அவன் நினைத்தால் அதை அவனே வைத்துக்கொள்ளலாம். ஆனால் அவன் அப்படிச் செய்யாமல், அந்த பர்ஸின் சொந்தக்காரரிடமே அதைக் கொடுத்துவிடுகிறான். அவன் இப்படிச் செய்ததைக் கேள்விப்பட்ட அவனுடைய அம்மா, அவனை நினைத்து ரொம்பப் பெருமைப்படுகிறாள்.

2 பிள்ளைகள் நேர்மையாக நடப்பதைப் பார்த்து நிறைய பெற்றோர்கள் சந்தோஷப்படுகிறார்கள். அதேபோல், நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவாவும் நாம் நேர்மையாக நடந்துகொள்வதைப் பார்த்து ரொம்பச் சந்தோஷப்படுகிறார். ஏனென்றால், அவர் ‘சத்தியத்தின் கடவுளாக’ இருக்கிறார். (சங்கீதம் 31:5) நாம் அவருக்குப் பிரியமாகவும், ‘எல்லாவற்றிலும் நேர்மையாகவும் நடக்க விரும்புகிறோம்.’ (எபிரெயர் 13:18) நேர்மையாக நடப்பதற்குச் சவாலாக இருக்கும் நான்கு அம்சங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். பிறகு, அந்தச் சவால்களைச் சமாளிப்பதால் வரும் நன்மைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

நமக்கு நாமே நேர்மையாக இருப்பது

3-5. (அ) நமக்கு நாமே எப்படி நேர்மையில்லாமல் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது? (ஆ) நமக்கு நாமே நேர்மையாக நடந்துகொள்ள எது உதவும்?

3 மற்றவர்களிடம் நாம் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் நமக்கு நாமே நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். அப்படி நடந்துகொள்வது எல்லா சமயத்திலும் சுலபமல்ல. முதல் நூற்றாண்டில், லவோதிக்கேயா சபையிலிருந்த சகோதரர்கள், தாங்கள் கடவுளுக்குப் பிரியமாக நடப்பதாக நினைத்துக்கொண்டு தங்களையே ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் கடவுளுக்குப் பிரியமாக நடந்துகொள்ளவில்லை. (வெளிப்படுத்துதல் 3:17) நாமும்கூட இப்படி நம்மையே ஏமாற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

4 “கடவுளை வழிபடுவதாக நினைத்துக்கொண்டிருக்கிற ஒருவன் தன் நாக்கை அடக்காமல் தன் இதயத்தை ஏமாற்றிக்கொண்டிருந்தால், அவனுடைய வழிபாடு வீணானதாக இருக்கும்” என்று சீஷரான யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 1:26) நாம் சில நல்ல காரியங்களைச் செய்தால், நாம் கோபமாகப் பேசுவதை... ஏளனமாகப் பேசுவதை... அல்லது பொய் சொல்வதை... கடவுள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாரென நினைத்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளலாம். இதைத் தவிர்க்க எது உதவும்?

5 நாம் ஒரு கண்ணாடியைப் பார்க்கும்போது நம்முடைய வெளித்தோற்றம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். பைபிளை வாசிக்கும்போது நாம் உள்ளுக்குள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். நம்முடைய பலங்களையும் பலவீனங்களையும் தெரிந்துகொள்ள பைபிள் நமக்கு உதவும். நாம் யோசிப்பதில், நடந்துகொள்வதில், பேசுவதில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை பைபிளிலிருந்து தெரிந்துகொள்வோம். (யாக்கோபு 1:23-25-ஐ வாசியுங்கள்.) ஆனால், நம்மிடம் எந்தத் தவறும் இல்லையென்று நாம் நினைத்துக்கொண்டால், தேவையான மாற்றங்களை நம்மால் செய்ய முடியாது. அதனால், நம்மையே நேர்மையாக எடைபோட்டு பார்க்க நாம் பைபிளைப் பயன்படுத்த வேண்டும். (புலம்பல் 3:40; ஆகாய் 1:5) நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள ஜெபமும் உதவி செய்யும். நம்மை ஆராய்ந்து பார்க்கும்படியும், நம்முடைய குறைகளைக் கண்டுபிடிக்க உதவும்படியும் நாம் யெகோவாவிடம் கேட்கலாம். அப்போதுதான் நம்மால் அவற்றைச் சரிசெய்ய முடியும். (சங்கீதம் 139:23, 24) “ஏமாற்றுக்காரனை யெகோவா அருவருக்கிறார். ஆனால், நேர்மையானவனுக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார்” என்பதை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும்.—நீதிமொழிகள் 3:32.

குடும்பத்தில் நேர்மை

6. ஒரு கணவனும் மனைவியும் ஏன் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்க வேண்டும்?

6 குடும்பத்தில் நேர்மையாக நடந்துகொள்வது ரொம்ப முக்கியம். ஒரு கணவனும் மனைவியும் ஒளிவுமறைவில்லாமல் பேசும்போது, அவர்கள் பாதுகாப்பாக உணருவார்கள். அவர்களால் ஒருவரை ஒருவர் முழுமையாக நம்ப முடியும். திருமணமானவர்கள் பல வழிகளில் நேர்மையில்லாமல் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. உதாரணத்துக்கு, ஆபாசத்தைப் பார்க்கவோ, வேறொரு நபரோடு சரசமாடவோ, கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ளவோ வாய்ப்பிருக்கிறது. “ஏமாற்றுப் பேர்வழிகளோடு நான் பழகுவதில்லை. வெளிவேஷம் போடுகிறவர்களோடு சேருவதில்லை” என்று சங்கீதக்காரன் சொன்னதைக் கவனியுங்கள். (சங்கீதம் 26:4) உங்கள் துணையிடம் மனதளவில் நேர்மையில்லாமல் நடந்துகொண்டால்கூட, அது உங்களுடைய திருமண பந்தத்தைப் பாதிக்கும்.

உங்கள் திருமண பந்தத்தைப் பாதிக்கும் எந்தவொரு விஷயத்தையும் உடனடியாகத் தவிர்த்திடுங்கள்

7, 8. நேர்மையாக நடந்துகொள்வதன் மதிப்பைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க நீங்கள் எப்படி பைபிளைப் பயன்படுத்தலாம்?

7 நேர்மையாக இருப்பது முக்கியம் என்பதைப் பிள்ளைகளும் கற்றுக்கொள்ள வேண்டும். பைபிளைப் பயன்படுத்தி பிள்ளைகளுக்குப் பெற்றோர் இதைக் கற்றுக்கொடுக்கலாம். நேர்மையில்லாமல் நடந்துகொண்டவர்களைப் பற்றி பைபிள் சொல்கிறது. உதாரணத்துக்கு, திருடனாக ஆன ஆகான்; பணத்துக்காகப் பொய் சொன்ன கேயாசி; பணத்தைத் திருடியவனும், 30 வெள்ளிக் காசுகளுக்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்தவனுமான யூதாஸ் ஆகியோரைப் பற்றி பைபிள் சொல்கிறது.—யோசுவா 6:17-19; 7:11-25; 2 ராஜாக்கள் 5:14-16, 20-27; மத்தேயு 26:14, 15; யோவான் 12:6.

8 நேர்மையாக நடந்துகொண்ட நிறைய பேரைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. உதாரணத்துக்கு, தங்களுக்குச் சொந்தம் அல்லாத பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி தன் மகன்களிடம் சொன்ன யாக்கோபு; கடவுளுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய யெப்தா மற்றும் அவருடைய மகள்; கஷ்டமான சூழ்நிலைகளிலும் நேர்மையாக நடந்துகொண்ட இயேசு. (ஆதியாகமம் 43:12; நியாயாதிபதிகள் 11:30-40; யோவான் 18:3-11) நேர்மையாக நடந்துகொள்வதன் மதிப்பைப் புரிந்துகொள்ள இந்த உதாரணங்கள் பிள்ளைகளுக்கு உதவும்.

9. பெற்றோர் நேர்மையாக இருப்பது பிள்ளைகளுக்கு எப்படி உதவும்?

9 “மற்றவர்களுக்குக் கற்பிக்கிற நீங்களே உங்களுக்குக் கற்பிக்காமல் இருக்கலாமா? ‘திருடாதே’ என்று பிரசங்கிக்கிற நீங்களே திருடலாமா?” என்ற முக்கியமான பைபிள் நியமத்திலிருந்து பெற்றோர் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். (ரோமர் 2:21) பெற்றோர் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டு, அதற்கு நேர்மாறாக நடந்துகொண்டால் பிள்ளைகள் அதைக் கவனிப்பார்கள். நேர்மையாக இருக்க வேண்டுமென்று பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு பெற்றோர்களாகிய நாமே நேர்மையாக இல்லையென்றால், பிள்ளைகள் குழம்பிப்போவார்கள். சின்ன விஷயங்களுக்குக்கூட பெற்றோர் பொய் சொல்வதைப் பிள்ளைகள் கவனித்தால் அவர்களும் அப்படியே செய்ய வாய்ப்பிருக்கிறது. (லூக்கா 16:10-ஐ வாசியுங்கள்.) ஆனால், தங்களுடைய பெற்றோர் நேர்மையாக இருப்பதைப் பிள்ளைகள் பார்க்கும்போது, பிற்பாடு அவர்களும் தங்களுடைய பிள்ளைகளுக்கு நம்பகமான பெற்றோராக ஆவார்கள்.—நீதிமொழிகள் 22:6; எபேசியர் 6:4.

சபையில் நேர்மையாக நடப்பது

10. சகோதர சகோதரிகளிடம் பேசும்போது நாம் எப்படி நேர்மையாக இருக்கலாம்?

10 நம் சகோதர சகோதரிகளிடமும் நாம் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். சாதாரணமாக நாம் பேசுவதுகூட வம்பளக்கும் பேச்சாக மாறிவிடலாம். மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுமளவுக்குப் போய்விடலாம். உண்மையா பொய்யா என்று தெரியாத விஷயத்தை மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தால், நாம் பொய்யைப் பரப்புகிறவர்களாக ஆகிவிட வாய்ப்பிருக்கிறது. அதனால், ‘உதடுகளை அடக்குவது’ ரொம்பவே நல்லது. (நீதிமொழிகள் 10:19) நேர்மையாக இருக்கிறோம் என்பதற்காக நாம் நினைக்கிற... நமக்குத் தெரிந்த... நாம் கேள்விப்பட்ட... எல்லா விஷயங்களையும் மற்றவர்களிடம் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. நாம் சொல்ல வருவது உண்மையாக இருந்தால்கூட அது நமக்குச் சம்பந்தமில்லாத விஷயமாக இருக்கலாம். அல்லது அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது தேவையில்லாத விஷயமாக... அன்பற்ற செயலாக... இருக்கலாம். (1 தெசலோனிக்கேயர் 4:11) சிலர் நேர்மையாகப் பேசுவதாகச் சொல்லிக்கொண்டு முகத்தில் அடித்தாற்போல் பேசுவார்கள்; ஆனால், யெகோவாவின் மக்களாகிய நாம் எப்போதும் கனிவாகவும் சுவையாகவும் பேச வேண்டும்.கொலோசெயர் 4:6-ஐ வாசியுங்கள்.

11, 12. (அ) மோசமான பாவத்தைச் செய்த ஒருவர் நேர்மையில்லாமல் நடந்துகொள்ளும்போது நிலைமை எப்படி இன்னும் மோசமாகலாம்? (ஆ) நம் நண்பர் ஒருவர் மோசமான பாவத்தைச் செய்திருப்பது தெரியவந்தால், என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்? (இ) யெகோவாவின் அமைப்புக்கு நாம் எப்படி நேர்மையாக இருக்கலாம்?

11 சபைக்கு உதவும் பொறுப்பை யெகோவா மூப்பர்களிடம் கொடுத்திருக்கிறார். அவர்களிடம் நாம் நேர்மையாக இருக்கும்போது, நமக்கு உதவி செய்வது அவர்களுக்குச் சுலபமாக இருக்கும். ஏன் அப்படிச் சொல்கிறோம்? உடம்பு சரியில்லாததால் நீங்கள் டாக்டரிடம் போயிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய உடல்நலப் பிரச்சினைகளைப் பற்றிய சில விஷயங்களை அவரிடம் சொல்லாமல் மூடிமறைப்பீர்களா? அப்படிச் செய்தால், அவரால் உங்களுக்கு எப்படி உதவ முடியும்? அதேபோல், நாம் மோசமான ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, பொய் சொல்லி அதை மூடிமறைத்தால், மூப்பர்களால் நமக்கு எப்படி உதவ முடியும்? அதற்குப் பதிலாக, மூப்பர்களிடம் போய் செய்த தவறைப் பற்றி நாம் நேர்மையாகச் சொல்ல வேண்டும். (சங்கீதம் 12:2; அப்போஸ்தலர் 5:1-11) இப்போது இன்னொரு சூழ்நிலையை யோசித்துப் பாருங்கள். உங்களுடைய நண்பர் ஒரு மோசமான பாவத்தைச் செய்திருப்பது உங்களுக்குத் தெரியவந்தால் என்ன செய்வீர்கள்? (லேவியராகமம் 5:1) “நான் உண்மையிலேயே அவனுடைய நண்பனாக இருந்தால் அதை யாரிடமும் சொல்ல கூடாது” என்று நினைப்பீர்களா? அல்லது, உங்கள் நண்பன் யெகோவாவுடன் மீண்டும் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ளவும், அதைப் பலப்படுத்திக்கொள்ளவும் உதவ மூப்பர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பீர்களா?—எபிரெயர் 13:17; யாக்கோபு 5:14, 15.

12 யெகோவாவின் அமைப்புக்கும் நாம் நேர்மையாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஊழிய அறிக்கையை நேர்மையாக எழுதிக்கொடுப்பது அவசியம். பயனியர் ஊழியம் செய்யவோ வேறு ஏதாவது சேவையில் ஈடுபடவோ விண்ணப்பிக்கும்போதும் அந்தப் படிவத்தை நேர்மையாகப் பூர்த்தி செய்வது அவசியம்.நீதிமொழிகள் 6:16-19-ஐ வாசியுங்கள்.

13. யெகோவாவின் சாட்சியான ஒருவரோடு தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நாம் எப்படி நேர்மையாக நடந்துகொள்ளலாம்?

13 தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள், வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் குறுக்கிடாதபடி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, கூட்டங்களுக்கு வரும்போது அல்லது ஊழியத்தில் ஈடுபடும்போது நம்முடைய தொழில் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் பேசுவதில்லை. அதோடு, சகோதர சகோதரிகளைப் பயன்படுத்தி தொழிலில் ஆதாயம் தேட நாம் நினைப்பதில்லை. சகோதர சகோதரிகளை நீங்கள் வேலைக்கு வைத்தால், ஒத்துக்கொண்ட சம்பளத்தைச் சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும். சட்டப்படியான சலுகைகள் ஏதாவது இருந்தால் அதையும் கொடுக்க வேண்டும். மருத்துவக் காப்பீடு அல்லது சம்பளத்தோடு கூடிய விடுப்பு போன்றவையும் அவற்றில் உட்படலாம். (1 தீமோத்தேயு 5:18; யாக்கோபு 5:1-4) ஒருவேளை, நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சியிடம் வேலை செய்தால், உங்களை விசேஷமாக நடத்த வேண்டுமென்று எதிர்பார்க்கக் கூடாது. (எபேசியர் 6:5-8) ஒத்துக்கொண்ட நேரம்வரைக்கும் வேலை செய்ய வேண்டும். வாங்குகிற சம்பளத்துக்கு உண்மையாக உழைக்க வேண்டும்.—2 தெசலோனிக்கேயர் 3:10.

14. சகோதரர்கள் சேர்ந்து ஒரு தொழிலை ஆரம்பிப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

14 ஒரு சகோதரரோடு அல்லது சகோதரியோடு சேர்ந்து நீங்கள் ஒரு தொழிலை ஆரம்பிப்பதாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? அந்தத் தொழிலுக்காக நீங்கள் முதலீடு செய்ய வேண்டியிருக்கலாம், அல்லது கடன் வாங்க வேண்டியிருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ற மிகவும் பயனுள்ள ஒரு பைபிள் நியமம் இருக்கிறது. ஆம், எல்லாவற்றையும் சட்டப்படி எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்! எரேமியா ஒரு நிலத்தை வாங்கியபோது, இரண்டு பத்திரங்களை எழுதி வைத்துக்கொண்டார். ஒன்றில் சாட்சிகளின் கையெழுத்து போடப்பட்டிருந்தது. பிற்பாடு தேவைப்பட்டால் எடுத்துப் பார்ப்பதற்காக இரண்டு பத்திரங்களையும் பத்திரமாக வைத்தார். (எரேமியா 32:9-12; ஆதியாகமம் 23:16-20-ஐயும் பாருங்கள்.) சிலர், தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தைச் சட்டப்படி எழுதி வைத்தால், தங்களுடைய சகோதரர்மீது நம்பிக்கை இல்லாததுபோல் ஆகிவிடுமோ என்று நினைக்கலாம். ஆனால், அப்படிச் செய்வது உண்மையில் மனஸ்தாபங்கள், ஏமாற்றங்கள், கருத்துவேறுபாடுகள் போன்ற பல பிரச்சினைகள் வராமல் தடுக்கும். நம் சகோதர சகோதரிகளோடு ஏதாவது தொழிலில் ஈடுபட்டாலும்கூட, அந்தத் தொழிலைவிட சபையின் சமாதானத்தைக் காத்துக்கொள்வதுதான் ரொம்ப முக்கியம் என்பதை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும்.—1 கொரிந்தியர் 6:1-8; பின்குறிப்பு 30.

மற்ற விஷயங்களில் நேர்மையாக நடப்பது

15. நேர்மையற்ற வியாபார பழக்கங்களைப் பற்றி யெகோவா எப்படி உணருகிறார்?

15 நாம் எல்லாரிடமும் நேர்மையாக இருக்க வேண்டும். யெகோவாவின் சாட்சியாக அல்லாத ஆட்களிடமும் நேர்மையாக இருக்க வேண்டும். அப்படியிருக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். “கள்ளத் தராசுகளை யெகோவா அருவருக்கிறார். ஆனால், சரியான எடைக்கற்களை அவர் விரும்புகிறார்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 11:1; 20:10, 23) பைபிள் காலங்களில், வியாபாரத்தில் பொதுவாக எடைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வியாபாரிகள் சிலர், வாடிக்கையாளர்களை ஏமாற்றி, அவர்களுக்குப் பொருள்களைக் குறைவாகக் கொடுத்தார்கள், அல்லது கொடுக்க வேண்டிய பணத்தைவிட அதிகமான பணத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்கினார்கள். இன்றும்கூட வியாபாரத்தில் நேர்மையில்லாமல் நடந்துகொள்வது சர்வசாதாரணமாகிவிட்டது. ஆனால், நேர்மையற்ற செயல்களை அன்று யெகோவா வெறுத்தது போல இன்றும் வெறுக்கிறார்.

16, 17. நேர்மையற்ற என்னென்ன செயல்களை நாம் தவிர்க்க வேண்டும்?

16 நாம் எல்லாருமே நேர்மையில்லாமல் நடந்துகொள்வதற்கான சூழ்நிலைகளை எதிர்ப்படுகிறோம். வேலைக்கு விண்ணப்பிக்கும்போது... அரசாங்க படிவங்களைப் பூர்த்தி செய்யும்போது... பரிட்சை எழுதும்போது... நேர்மையில்லாமல் நடந்துகொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. பொய் சொல்வதிலோ, மிகைப்படுத்தி எழுதுவதிலோ, உண்மையற்ற தகவலை அளிப்பதிலோ எந்தத் தவறும் இல்லை என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். இதைப் பார்த்து நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. கடைசி நாட்களில், “மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, . . . நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக” இருப்பார்கள் என்று பைபிள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறது.—2 தீமோத்தேயு 3:1-5.

17 இன்று உலகில் நேர்மையற்ற மக்கள்தான் ஓஹோவென்று வாழ்வதுபோல் நமக்குத் தெரியலாம். (சங்கீதம் 73:1-8) நேர்மையாக இருப்பதால் ஒரு கிறிஸ்தவருக்கு வேலை பறிபோகலாம்; பண விஷயத்தில் அவர் மோசடி செய்யப்படலாம்; அல்லது வேலை செய்யும் இடத்தில் அவர் மோசமாக நடத்தப்படலாம். ஆனால், நேர்மையாக இருப்பதற்காகச் செய்யப்படும் எந்தவொரு தியாகமும் வீண்போகாது. ஏன்?

நேர்மையாக இருப்பதால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்

18. நல்ல பெயரெடுப்பதால் வரும் நன்மைகள் என்ன?

18 நேர்மையானவர், நாணயமானவர், நம்பகமானவர் என்று பெயரெடுப்பது ஒரு பெரிய விஷயம். அப்படிப்பட்ட ஒருவரை இந்த உலகத்தில் பார்ப்பது ரொம்பவே அபூர்வம். அப்படிப்பட்ட பெயரைச் சம்பாதிக்க நம் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பிருக்கிறது. (மீகா 7:2) நீங்கள் நேர்மையாக இருப்பதைப் பார்த்து சிலர் உங்களைக் கேலி செய்யலாம், ‘சரியான முட்டாள்’ என்று சொல்லலாம். ஆனால், நீங்கள் நேர்மையாக இருப்பதைப் பார்த்து மற்றவர்கள் பாராட்டுவார்கள், உங்களை நம்புவார்கள். உலகம் முழுவதிலும் யெகோவாவின் சாட்சிகள் நேர்மைக்குப் பெயர்பெற்றவர்கள். முதலாளிகள் சிலர், இதைத் தெரிந்துவைத்திருப்பதால் யெகோவாவின் சாட்சிகளை வேலைக்குச் சேர்க்கிறார்கள். அதோடு, நேர்மையற்ற ஆட்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்ட சமயங்களில், யெகோவாவின் சாட்சிகள் வேலையை இழக்காமல் இருந்திருக்கிறார்கள்.

கடினமாக உழைப்பதன் மூலம் நாம் யெகோவாவுக்கு மகிமை சேர்க்க முடியும்

19. நேர்மையாக இருப்பது, யெகோவாவோடு நீங்கள் வைத்திருக்கும் பந்தத்தை எப்படிப் பலப்படுத்தும்?

19 எல்லா விஷயங்களிலும் நேர்மையாக நடந்துகொள்ளும்போது நல்ல மனசாட்சியோடும், மன நிம்மதியோடும் இருக்க முடியும். “எங்களுக்குச் சுத்தமான மனசாட்சி இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறோம்” என எழுதிய பவுலைப் போல நம்மாலும் சொல்ல முடியும். (எபிரெயர் 13:18) மிக முக்கியமாக, எல்லா விஷயங்களிலும் நேர்மையாக நடக்க நாம் எடுக்கும் முயற்சிகளை அன்புள்ள தகப்பனாகிய யெகோவா பார்த்து ரொம்பவே சந்தோஷப்படுகிறார்.சங்கீதம் 15:1, 2-ஐயும் நீதிமொழிகள் 22:1-ஐயும் வாசியுங்கள்.