Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 16

பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்

பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்

“பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.”—யாக்கோபு 4:7.

1, 2. சாத்தானையும் அவனுடைய பேய்களையும் பற்றி நாம் என்ன புரிந்துகொள்ள வேண்டும்?

 புதிய உலகத்தில் யெகோவா நமக்குத் தரப்போகும் வாழ்க்கை அருமையானதாக இருக்கும். ஆரம்பத்தில் மனிதர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்று கடவுள் நினைத்தாரோ அப்படிப்பட்ட வாழ்க்கையை அப்போது நாம் அனுபவிப்போம். ஆனால் இன்று, சாத்தானும் அவனுடைய பேய்களும் ஆளுகிற உலகத்தில் நாம் வாழ்கிறோம். (2 கொரிந்தியர் 4:4) நம்மால் அவர்களைப் பார்க்க முடியாது. ஆனாலும், அவர்கள் நிஜமானவர்கள், அதிக சக்தி படைத்தவர்கள்.

2 நாம் எப்படி யெகோவாவோடு நெருக்கமாக இருக்கலாம் என்றும் சாத்தானிடமிருந்து நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்றும் இந்த அதிகாரத்தில் பார்ப்போம். நமக்கு உதவி செய்வதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால், சாத்தானும் அவனுடைய பேய்களும் என்னென்ன முறைகளைப் பயன்படுத்தி நம்மை ஏமாற்றுகிறார்கள், தாக்குகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

“கர்ஜிக்கிற சிங்கம்போல்”

3. நம்மை என்ன செய்ய சாத்தான் விரும்புகிறான்?

3 மனிதர்கள் சுயநல காரணங்களுக்காகவே யெகோவாவை வணங்குகிறார்கள் என்று சாத்தான் சொல்கிறான். நிறைய கஷ்டங்கள் வரும்போது அவரைச் சேவிப்பதை விட்டுவிடுவார்கள் என்றும் சொல்கிறான். (யோபு 2:4, 5-ஐ வாசியுங்கள்.) யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ள ஒருவர் ஆர்வம் காட்டும்போது, அதை சாத்தானும் அவனுடைய பேய்களும் கவனிக்கிறார்கள்; அவரை எப்படியாவது தடுக்க முயற்சி செய்கிறார்கள். ஒருவர், தன்னை யெகோவாவுக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கும்போது, அவர்கள் எரிச்சல் அடைகிறார்கள். யாரை விழுங்கலாம் என்று அலைந்து திரிகிற ஒரு கர்ஜிக்கிற சிங்கத்தோடு பிசாசை பைபிள் ஒப்பிடுகிறது. (1 பேதுரு 5:8) யெகோவாவோடு நாம் வைத்திருக்கும் பந்தத்தைக் குலைத்துப்போட சாத்தான் விரும்புகிறான்.—சங்கீதம் 7:1, 2; 2 தீமோத்தேயு 3:12.

யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது சாத்தான் எரிச்சல் அடைகிறான்

4, 5. (அ) சாத்தானால் என்ன செய்ய முடியாது? (ஆ) ‘பிசாசுக்கு எதிர்த்து நிற்க’ நாம் என்ன செய்ய வேண்டும்?

4 ஆனால், சாத்தானையும் அவனுடைய பேய்களையும் நினைத்து நாம் பயப்பட வேண்டியதில்லை. அவர்களை யெகோவா கட்டுப்படுத்தி வைத்திருப்பதால், ஓரளவுக்குத்தான் அவர்களால் நமக்குக் கெடுதல் செய்ய முடியும். “திரள் கூட்டமான” உண்மைக் கிறிஸ்தவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிப்பார்கள்’ என்று யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 7:9, 14) இதைத் தடுக்க சாத்தானால் எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால், யெகோவா தன்னுடைய மக்களைப் பாதுகாக்கிறார்.

5 நாம் யெகோவாவோடு நெருக்கமாக இருந்தால், அவரோடு நாம் வைத்திருக்கும் பந்தத்தை சாத்தானால் முறிக்க முடியாது. “நீங்கள் யெகோவாவின் பக்கம் இருக்கும்வரை அவர் உங்களுடன் இருப்பார்” என்று கடவுளுடைய வார்த்தை நமக்கு உறுதியளிக்கிறது. (2 நாளாகமம் 15:2; 1 கொரிந்தியர் 10:13-ஐ வாசியுங்கள்.) ஆபேல், ஏனோக்கு, நோவா, சாராள், மோசே போன்ற விசுவாசமுள்ள நிறைய பேர் யெகோவாவோடு நெருக்கமாக இருந்து பிசாசை எதிர்த்தார்கள். (எபிரெயர் 11:4-40) நம்மாலும் அவனை எதிர்க்க முடியும். “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” என்று கடவுளுடைய வார்த்தை வாக்குக் கொடுக்கிறது.—யாக்கோபு 4:7.

“நாம் போராட வேண்டியிருக்கிறது”

6. சாத்தான் நம்மை எப்படித் தாக்குகிறான்?

6 நம்மைச் சோதிக்கும் விஷயத்தில் சாத்தானுக்கு யெகோவா சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார். இது அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், யெகோவாவோடு நாம் வைத்திருக்கும் பந்தத்தைக் கெடுக்க எதை வேண்டுமானாலும் அவன் செய்வான். அவன் பல வழிகளில் நம்மைத் தாக்குகிறான். ஆயிரக்கணக்கான வருஷங்களாக அவன் பயன்படுத்தி வந்திருக்கும் தந்திரங்களை இன்றும் பயன்படுத்துகிறான். அவற்றில் சில தந்திரங்களை இப்போது பார்க்கலாம்?

7. யெகோவாவின் மக்களை சாத்தான் ஏன் தாக்குகிறான்?

7 “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோவான் 5:19) இந்தப் பொல்லாத உலகத்தை சாத்தான் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். அவன் யெகோவாவின் மக்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகிறான். (மீகா 4:1; யோவான் 15:19; வெளிப்படுத்துதல் 12:12, 17) தனக்குக் கொஞ்சக் காலம்தான் இருக்கிறது என்று அவனுக்குத் தெரியும். அதனால், கடவுளைவிட்டு நம்மைப் பிரிப்பதற்காக நம் ஒவ்வொருவருக்கும் நிறைய கஷ்டங்களைக் கொடுக்கிறான். சில சமயங்களில், அவன் நேரடியாகத் தாக்குகிறான், மற்ற சமயங்களில் மறைமுகமாகத் தாக்குகிறான்.

8. கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் எதை உணர வேண்டும்?

8 “பரலோகத்தில் இருக்கிற பொல்லாத தூதர் கூட்டத்தோடும் நாம் போராட [“மல்யுத்தம் செய்ய,” அடிக்குறிப்பு] வேண்டியிருக்கிறது” என்று எபேசியர் 6:12-ல் நாம் வாசிக்கிறோம். பிசாசையும் அவனுடைய பேய்களையும் எதிர்த்து கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் போராட வேண்டியிருக்கிறது. யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்த எல்லாருமே இந்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். எபேசியர்களுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல், ‘உறுதியோடு நிற்க’ வேண்டுமென்று மூன்று முறை கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார்.—எபேசியர் 6:11, 13, 15.

9. சாத்தானும் அவனுடைய பேய்களும் நம்மை என்ன செய்யப் பார்க்கிறார்கள்?

9 சாத்தானும் அவனுடைய பேய்களும் பல வழிகளில் நம்மை ஏமாற்றப் பார்க்கிறார்கள். சாத்தானிடமிருந்து வந்த ஒரு சோதனையை நாம் வெற்றிகரமாகச் சமாளித்துவிட்டோம் என்பதற்காக அவனால் நம்மை வீழ்த்தவே முடியாது என்று அர்த்தமில்லை. நம்மைச் சிக்க வைப்பதற்கு ஏற்ற பொறியைத் தேர்ந்தெடுக்க, அவன் நம் பலவீனங்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறான். ஆனால், அவன் பயன்படுத்துகிற பொறிகளைப் பற்றி பைபிள் நமக்குச் சொல்கிறது. அதனால், நாம் அவற்றில் சிக்காமல் இருக்க முடியும். (2 கொரிந்தியர் 2:11; பின்குறிப்பு 31.) அவற்றில் ஒன்று ஆவியுலகத் தொடர்பு.

பேய்களிடமிருந்து தூரமாக விலகியிருங்கள்

10. (அ) ஆவியுலகத் தொடர்பு என்றால் என்ன? (ஆ) பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களை யெகோவா எப்படிக் கருதுகிறார்?

10 ஒருவரைப் பேய்களோடு தொடர்புகொள்ள வைக்கும் விஷயங்கள் எல்லாமே ஆவியுலகத் தொடர்பில் உட்பட்டுள்ளன. உதாரணத்துக்கு குறிசொல்வது, பில்லிசூனியம், மாயமந்திரம், செத்தவர்களிடத்தில் பேச முயற்சி செய்வது போன்ற விஷயங்கள் இதில் உட்பட்டுள்ளன. இப்படிப்பட்ட விஷயங்கள் ‘அருவருப்பானவை’ என்று பைபிள் சொல்கிறது. நாம் பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டுக்கொண்டே யெகோவாவை வணங்குவது முடியாத விஷயம். (உபாகமம் 18:10-12; வெளிப்படுத்துதல் 21:8) பேய்களோடு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் கிறிஸ்தவர்கள் முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.—ரோமர் 12:9.

11. பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் காட்டுவது நம்மை எதில் சிக்க வைத்துவிடும்?

11 பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாம் ஆர்வம் காட்டினால், ஆவியுலகத் தொடர்பில் நம்மைச் சிக்க வைப்பது சாத்தானுக்கு ரொம்பச் சுலபமாக இருக்கும். பேய்களோடு சம்பந்தப்பட்ட எந்தவொரு விஷயமும் யெகோவாவோடு நாம் வைத்திருக்கும் பந்தத்தைக் குலைத்துப்போடும்.

சாத்தான் நம்மைத் தந்திரமாக ஏமாற்றப் பார்க்கிறான்

12. நம் மனதைக் குழப்ப சாத்தான் எப்படி முயற்சி செய்கிறான்?

12 சாத்தான், மக்களின் மனதைக் குழப்ப முயற்சி செய்கிறான். “தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும்” நம்ப வைப்பதற்காக, அவர்களுடைய மனதில் கொஞ்சம் கொஞ்சமாக சந்தேக விதைகளைத் தூவுகிறான். (ஏசாயா 5:20) உதாரணத்துக்கு, பைபிளின் ஆலோசனைகள் நமக்கு உதவாது... கடவுளுடைய நெறிமுறைகளை அசட்டை செய்தால் சந்தோஷமாக இருக்கலாம்... போன்ற கருத்துகளையெல்லாம் அவன் பரப்புகிறான்.

13. சந்தேக விதைகளை விதைக்க சாத்தான் எப்படி முயற்சி செய்திருக்கிறான்?

13 சந்தேகத்தை எழுப்புவதுதான் சாத்தான் திறமையாக பயன்படுத்திவரும் முறைகளில் ஒன்று. பல காலமாகவே அவன் இதைப் பயன்படுத்தி வருகிறான். ஏதேனில் அவன் ஏவாளிடம், “தோட்டத்தில் உள்ள அத்தனை மரங்களின் பழங்களையும் நீங்கள் சாப்பிடக் கூடாது என்று கடவுள் நிஜமாகவே சொன்னாரா?” என்று கேட்டான். (ஆதியாகமம் 3:1) இப்படி ஏவாளின் மனதில் அவன் சந்தேகத்தை எழுப்பினான். பிற்பாடு, யோபுவின் காலத்தில், தேவதூதர்களுக்கு முன்பாக அவன் யெகோவாவிடம், “யோபு சும்மாவா உங்களுக்குப் பயந்து நடக்கிறான்?” என்று கேட்டான். (யோபு 1:9) இயேசு ஞானஸ்நானம் எடுத்த பிறகு அவரிடம், “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், இந்தக் கற்களை ரொட்டிகளாகும்படி சொல்” என்று சொன்னான்.—மத்தேயு 4:3.

14. பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஆபத்தானவையா என்ற சந்தேகத்தை மக்களின் மனதில் எழுப்ப சாத்தான் என்ன செய்கிறான்?

14 சாத்தான் இன்றும் நம் மனதில் சந்தேக விதைகளை விதைக்கிறான். பேய்களோடு சம்பந்தப்பட்ட சில விஷயங்கள் அந்தளவுக்கு மோசமானவையா என்று மக்களை அவன் யோசிக்க வைக்கிறான். அதற்காக, அப்படிப்பட்ட விஷயங்களைச் சாதாரண விஷயங்களாகக் காட்ட அவன் முயற்சி செய்கிறான். கிறிஸ்தவர்கள் சிலரும்கூட அந்த ஆபத்துகளை உணராமல் இருந்திருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 11:3) அப்படியானால், நம்மைப் பாதுகாத்துக்கொள்ள நாம் என்ன செய்யலாம்? சாத்தானுடைய தந்திரங்களால் ஏமாந்துவிடாதபடி நாம் எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்? நம்மைத் தந்திரமாக ஏமாற்ற அவன் பயன்படுத்துகிற இரண்டு விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். ஒன்று பொழுதுபோக்கு, மற்றொன்று மருத்துவ சிகிச்சை.

நம் இயல்பான ஆசைகளையே நமக்கு எதிராக சாத்தான் பயன்படுத்துகிறான்

15. பொழுதுபோக்கு மூலம் நாம் எப்படி பேய்களோடு தொடர்புகொள்ள வாய்ப்பிருக்கிறது?

15 இன்று சினிமா, வீடியோ, டிவி நிகழ்ச்சிகள், கம்ப்யூட்டர் கேம்ஸ், இன்டர்நெட் ஆகியவற்றில் மாயமந்திரம், அமானுஷ்ய சக்திகள் மற்றும் பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன. நிறைய பேர் அவற்றை ஜாலியான பொழுதுபோக்காக நினைக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையில் பேய்களுக்கு இடமளிப்பதை அவர்கள் உணருவதில்லை. ஜாதகம், கைரேகை, கிளி ஜோசியம், பளிங்குக் கோளம் ஆகியவற்றைப் பார்ப்பதன் மூலமும் ஒருவர் பேய்களோடு தொடர்புகொள்ள வாய்ப்பிருக்கிறது. அவற்றிலுள்ள ஆபத்துகளை மறைத்து, அவற்றை புதுமையான, சுவாரஸ்யமான, ஜாலியான விஷயங்களாகத் தெரியும்படி சாத்தான் செய்கிறான். அதனால், பேய்கள் அல்லது அமானுஷ்ய சக்திகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடுவதுதான் ஆபத்தானது, அவற்றை சித்தரிக்கிற படங்களைப் பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று ஒருவர் நினைக்க வாய்ப்பிருக்கிறது. இப்படி நினைப்பது ஏன் ஆபத்தானது?—1 கொரிந்தியர் 10:12.

16. பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சித்தரிக்கும் பொழுதுபோக்குகளை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?

16 நம் மனதில் இருக்கும் விஷயங்களை சாத்தானாலும் அவனுடைய பேய்களாலும் தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் நமக்காக, நம் குடும்பத்துக்காக நாம் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்குகளையும், நாம் எடுக்கும் மற்றத் தீர்மானங்களையும் அவர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். அதன் மூலம் நாம் எதை விரும்புகிறோம், எப்படி யோசிக்கிறோம் என்பதையெல்லாம் அவர்கள் தெரிந்துகொள்கிறார்கள். ஆவிகளோடு பேசுவது, வசியம் வைப்பது, பேய் பிடித்திருப்பது, சூனியக்காரிகள், ரத்தக்காட்டேரிகள் போன்றவற்றை சித்தரிக்கிற சினிமாக்கள், பாட்டுகள், அல்லது புத்தகங்களை நாம் தேர்ந்தெடுத்தால் அப்படிப்பட்ட விஷயங்களில் நாம் ஆர்வமாக இருக்கிறோம் என்று சாத்தானுக்கும் அவனுடைய பேய்களுக்கும் தெரிந்துவிடும். அப்போது, பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களை இன்னும் அதிகமாக ஈடுபட வைக்க அவர்கள் முயற்சி செய்வார்கள்.கலாத்தியர் 6:7-ஐ வாசியுங்கள்.

17. ஆரோக்கியத்தின் மீது நமக்கிருக்கும் அக்கறையை சாத்தான் எப்படித் தவறாகப் பயன்படுத்தலாம்?

17 நம்முடைய ஆரோக்கியத்தின் மீது நமக்கிருக்கும் அக்கறையையும்கூட சாத்தான் தவறாகப் பயன்படுத்தலாம். இன்று நிறைய பேர் வியாதியால் கஷ்டப்படுகிறார்கள். ஒருவர் தன்னுடைய வியாதியைக் குணப்படுத்த எத்தனையோ விதமான சிகிச்சைகள் செய்தும் பலன் கிடைக்காமல் போயிருக்கலாம். (மாற்கு 5:25, 26) எப்படியாவது குணமானால் போதும் என நினைத்து எப்படிப்பட்ட சிகிச்சையை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அவர் விரும்பலாம். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம், ‘மாயமந்திரம்’ சம்பந்தப்பட்ட சிகிச்சை முறைகளைத் தவிர்க்க வேண்டும்.—ஏசாயா 1:13.

வியாதியாக இருக்கும்போது யெகோவாமீது நம்பிக்கை வையுங்கள்

18. ஒரு கிறிஸ்தவர் எப்படிப்பட்ட சிகிச்சைகளைத் தவிர்க்க வேண்டும்?

18 இஸ்ரவேலர்களில் சிலர் ‘மாயமந்திரத்தை’ பயன்படுத்தினார்கள். அவர்களிடம் யெகோவா இப்படிச் சொன்னார்: “உங்கள் கைகளில் இரத்தக்கறை படிந்திருக்கிறது. அதனால், நீங்கள் என்முன் கைகளை விரித்தாலும் நான் பார்க்க மாட்டேன். நீங்கள் எவ்வளவுதான் ஜெபம் செய்தாலும் நான் கேட்க மாட்டேன்.” (ஏசாயா 1:15) அவர்களுடைய ஜெபத்தைக்கூட கேட்கப்போவதில்லை என்று அவர் சொல்லிவிட்டார். யெகோவாவோடு நமக்கிருக்கும் பந்தத்தைப் பாதிக்கும் எதையும் செய்ய நாம் விரும்ப மாட்டோம். அப்படிச் செய்தால், அவருடைய உதவி நமக்குக் கிடைக்காது. நாம் வியாதியாக இருந்தாலும் அவர் உதவி செய்ய மாட்டார். (சங்கீதம் 41:3) அதனால், நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு சிகிச்சை முறை பேய்களோடு அல்லது அமானுஷ்ய சக்திகளோடு சம்பந்தப்பட்டதா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். (மத்தேயு 6:13) ஒருவேளை அவற்றோடு ஏதாவது சம்பந்தம் இருப்பது தெரியவந்தால், அதை நாம் தவிர்க்க வேண்டும்.—பின்குறிப்பு 32.

பேய்களைப் பற்றிய கதைகள்

19. சாத்தானை நினைத்து நிறைய பேர் பயப்படுவதற்குக் காரணம் என்ன?

19 சாத்தானும் பேய்களும் ஒரு கற்பனைதான் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் நிஜமானவர்கள் என்பதை மற்றவர்கள் தங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து தெரிந்திருக்கிறார்கள். நிறைய பேர் பேய்களைப் பற்றிய பயத்திலேயே வாழ்கிறார்கள். அவர்கள் மூடத்தனமான பழக்கவழக்கங்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். மற்றவர்களோ, மனிதர்களுக்கு பேய்கள் செய்கிற பயங்கரமான விஷயங்களைப் பற்றிய கதைகளைச் சொல்லி, மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். பொதுவாக, இப்படிப்பட்ட கதைகள் மக்களுக்குச் சுவாரஸ்யமாக இருப்பதால், அதைப் பற்றி மற்றவர்களிடம் ஆர்வமாகச் சொல்கிறார்கள். அதனால், சாத்தானை நினைத்து மக்கள் பயப்படுகிறார்கள்.

20. சாத்தான் சொல்லும் பொய்களை நாம் எப்படிப் பரப்ப வாய்ப்பிருக்கிறது?

20 இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: மக்கள் தன்னை நினைத்துப் பயப்பட வேண்டுமென்று சாத்தான் விரும்புகிறான். (2 தெசலோனிக்கேயர் 2:9, 10) அவன் ஒரு பொய்யனாக இருப்பதால், உண்மையல்லாத விஷயங்களை மக்கள் நம்பும்படி செய்கிறான். அதற்காக, பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறவர்களின் மனதை எப்படிக் கவரலாம் என்று அவன் தெரிந்துவைத்திருக்கிறான். அப்படி ஆர்வம் காட்டுகிறவர்கள் தாங்கள் பார்த்ததாகவோ கேட்டதாகவோ நினைக்கிற சில விஷயங்களை மற்றவர்களுக்குச் சொல்லலாம். அவர்கள் சொல்வதைக் கேட்பவர்கள், இன்னும் பலருக்கு அதைப் பரப்புவதால், காலப்போக்கில், ஒரு சாதாரண விஷயம் மிகைப்படுத்தப்படலாம். ஆனால் நாம் இப்படிப்பட்ட கதைகளைப் பலரிடம் சொல்லி, சாத்தானைப் பற்றிய பயத்தை மக்கள் மத்தியில் பரப்புவதில்லை. இதன்மூலம் சாத்தானுக்கு நாம் துணைபோவதில்லை.—யோவான் 8:44; 2 தீமோத்தேயு 2:16.

21. பேய்களைப் பற்றிய கதைகளைச் சொல்வதற்குப் பதிலாக, நாம் எதைப் பற்றிப் பேசலாம்?

21 யெகோவாவின் சாட்சி ஒருவருக்கு பேய்கள் சம்பந்தப்பட்ட ஏதாவது அனுபவம் இருந்திருந்தால், அதைப் பற்றி மற்றவர்களிடம் சுவாரஸ்யமாகச் சொல்ல மாட்டார். சாத்தானும் அவனுடைய பேய்களும் தங்களுக்கு ஏதாவது செய்துவிடுவார்களோ என்று யெகோவாவின் மக்கள் பயந்து நடுங்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, இயேசுவின் மீதும் அவருக்கு யெகோவா கொடுத்திருக்கும் அதிகாரத்தின் மீதும் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். (எபிரெயர் 12:2) இயேசு தன்னுடைய சீஷர்களிடம் பேய்களைப் பற்றிய கதைகளைச் சொல்லவில்லை. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியும் “கடவுளுடைய மகத்தான செயல்களை” பற்றியும்தான் அவர் பேசினார்.—அப்போஸ்தலர் 2:11; லூக்கா 8:1; ரோமர் 1:11, 12.

22. நீங்கள் என்ன செய்யத் தீர்மானமாக இருக்கிறீர்கள்?

22 யெகோவாவோடு நாம் வைத்திருக்கும் பந்தத்தைக் குலைத்துப்போடுவதுதான் சாத்தானுடைய லட்சியம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதற்காக, அவன் எதை வேண்டுமானாலும் செய்வான். ஆனால், அவன் பயன்படுத்துகிற தந்திரங்களைப் பற்றி நமக்குத் தெரியும். அதனால், பேய்களோடு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் தவிர்க்க நாம் தீர்மானமாக இருக்கிறோம். நாம் எடுத்த தீர்மானத்தை விட்டுவிட ‘பிசாசுக்கு எந்த வாய்ப்பும் கொடுத்துவிட’ மாட்டோம். (எபேசியர் 4:27-ஐ வாசியுங்கள்.) பிசாசுக்கு எதிர்த்து நின்றால், அவனுடைய பொறிகளில் சிக்கிவிடாமல், யெகோவாவின் அரவணைப்பில் நாம் பாதுகாப்பாக இருப்போம்.—எபேசியர் 6:11.