Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 12

‘பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளைப் பேசுங்கள்’

‘பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளைப் பேசுங்கள்’

“கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து வர வேண்டாம். . . . பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்.” —எபேசியர் 4:29.

1-3. (அ) யெகோவா நமக்குக் கொடுத்திருக்கும் நல்ல பரிசுகளில் ஒன்று எது? அதை நாம் எப்படித் தவறாகப் பயன்படுத்திவிடலாம்? (ஆ) பேசும் திறனை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

 ஒரு அப்பா, டீனேஜ் வயதில் இருக்கும் தன்னுடைய மகனுக்கு ஒரு சைக்கிளைப் பரிசாகக் கொடுக்கிறார். அதைக் கொடுப்பதில் அவர் ரொம்பச் சந்தோஷப்படுகிறார். ஆனால், அந்த சைக்கிளை அவன் கன்னாபின்னாவென்று ஓட்டி, ஒருவர்மேல் மோதி, அவரைக் காயப்படுத்தினால் அந்த அப்பாவுக்கு எப்படியிருக்கும்?

2 “நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், மிகச் சிறந்த அன்பளிப்புகள் ஒவ்வொன்றும்” யெகோவாவிடமிருந்து கிடைக்கின்றன. (யாக்கோபு 1:17) அவர் நமக்குக் கொடுத்திருக்கும் நல்ல பரிசுகளில் ஒன்று, பேசும் திறன். நம்முடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த இந்தத் திறன் உதவுகிறது. மற்றவர்களுக்கு உதவும் வார்த்தைகளை... அவர்களைச் சந்தோஷப்படுத்தும் வார்த்தைகளை... நம்மால் சொல்ல முடிகிறது. அதேசமயத்தில், நம் வார்த்தைகள் மற்றவர்களுடைய மனதைப் புண்படுத்தவும் நோகடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

3 நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்கு அதிக சக்தி இருப்பதால் பேசும் திறனை நல்ல விதத்தில் பயன்படுத்த யெகோவா நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து வர வேண்டாம். கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமாய் இருப்பதற்காக, சூழ்நிலைக்கு ஏற்றபடி, அவர்களைப் பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்” என்று அவர் நமக்குச் சொல்கிறார். (எபேசியர் 4:29) கடவுள் கொடுத்த இந்தப் பரிசை அவரைப் பிரியப்படுத்தும் விதத்திலும், மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதத்திலும் நாம் எப்படிப் பயன்படுத்தலாம் என்று இப்போது பார்க்கலாம்.

பேசுவதில் கவனமாக இருங்கள்

4, 5. வார்த்தைகளுக்கு இருக்கும் சக்தியைப் பற்றி நீதிமொழிகள் என்ன சொல்கிறது?

4 வார்த்தைகளுக்குச் சக்தி இருப்பதால் நாம் என்ன பேசுகிறோம், எப்படிப் பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். “சாந்தமான நாவு வாழ்வளிக்கும் மரம்போல் இருக்கிறது. ஆனால், பொய்புரட்டு மனதை நொறுக்கிவிடுகிறது” என்று நீதிமொழிகள் 15:4 சொல்கிறது. ஒரு செழிப்பான மரம் நமக்குப் புத்துணர்ச்சியும் வாழ்வும் அளிப்பதுபோல், அன்பான வார்த்தைகள் கேட்போருக்குப் புத்துணர்ச்சி அளிக்கின்றன. ஆனால், கடுமையான வார்த்தைகள் மற்றவர்களைக் காயப்படுத்திவிடும், அவர்களை வேதனைப்பட வைக்கும்.—நீதிமொழிகள் 18:21.

சாந்தமான பேச்சு புத்துணர்ச்சி அளிக்கும்

5 “யோசிக்காமல் பேசுவது வாள் போலக் குத்தும்” என்று நீதிமொழிகள் 12:18 சொல்கிறது. புண்படுத்தும் வார்த்தைகள் நம் மனதுக்கு வேதனையைத் தரலாம், உறவுகளை முறித்துவிடலாம். ஒருவேளை உங்களிடம் யாராவது புண்படுத்தும் விதத்தில் பேசி, உங்கள் மனதை ரொம்பவே காயப்படுத்தியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். “ஞானமுள்ளவனின் நாவு காயத்தை ஆற்றும்” என்று அதே வசனம் சொல்கிறது. ஆம், யோசித்துப் பேசப்படும் வார்த்தைகள் மனதின் காயத்தை ஆற்றும். மனஸ்தாபங்களால் முறிந்துபோன உறவுகளைத் திரும்பவும் ஒன்றுசேர்க்கும். (நீதிமொழிகள் 16:24-ஐ வாசியுங்கள்.) நம்முடைய வார்த்தைகள் மற்றவர்களைப் பாதிக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்தால் நாம் கவனமாகப் பேசுவோம்.

6. நம் பேச்சைக் கட்டுப்படுத்துவது ஏன் சவாலாக இருக்கிறது?

6 நாம் பேசும்போது ஜாக்கிரதையாக இருப்பதற்கு இன்னொரு காரணம், நாம் எல்லாரும் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதுதான். “மனுஷர்களுடைய உள்ளம் மோசமாக இருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. நம்முடைய வார்த்தைகள் நம் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பெரும்பாலும் காட்டிவிடும். (ஆதியாகமம் 8:21; லூக்கா 6:45) நம் பேச்சைக் கட்டுப்படுத்துவது உண்மையிலேயே ரொம்பச் சவாலான ஒரு விஷயம்தான். (யாக்கோபு 3:2-4-ஐ வாசியுங்கள்.) ஆனால், மற்றவர்களிடம் நல்ல விதத்தில் பேச நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.

7, 8. நாம் பேசும் வார்த்தைகள் யெகோவாவோடு நமக்கிருக்கும் பந்தத்தை எப்படிப் பாதிக்கலாம்?

7 பேசும் விஷயத்தில் கவனமாக இருப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. என்ன பேசுகிறோம், எப்படிப் பேசுகிறோம் என்பதைக் குறித்து நாம் யெகோவாவுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். “கடவுளை வழிபடுவதாக நினைத்துக்கொண்டிருக்கிற ஒருவன் தன் நாக்கை அடக்காமல் தன் இதயத்தை ஏமாற்றிக்கொண்டிருந்தால், அவனுடைய வழிபாடு வீணானதாக இருக்கும்” என்று யாக்கோபு 1:26 சொல்கிறது. பேசும் விஷயத்தில் நாம் கவனமாக இல்லையென்றால் யெகோவாவோடு நமக்கிருக்கும் பந்தம் பாதிக்கப்படலாம்; அது முறிந்தும் போய்விடலாம்.—யாக்கோபு 3:8-10.

8 அப்படியென்றால், நாம் என்ன பேசுகிறோம், எப்படிப் பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் காரணங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. பேசும் திறமையை யெகோவா எதிர்பார்க்கும் விதத்தில் நாம் பயன்படுத்துவதற்கு, முதலில் எப்படிப்பட்ட பேச்சைத் தவிர்க்க வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

மனதைச் சுக்குநூறாக்கும் வார்த்தைகள்

9, 10. (அ) இன்று எப்படிப்பட்ட பேச்சு சர்வசாதாரணமாகிவிட்டது? (ஆ) ஆபாசமாகப் பேசுவதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?

9 ஆபாசமாகப் பேசுவது, அதாவது அசிங்கமாகப் பேசுவது, இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. கெட்ட வார்த்தைகளையும் தரக்குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தினால்தான் தாங்கள் சொல்வது மற்றவர்களுக்கு உறைக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். காமெடி நடிகர்கள் மக்களைச் சிரிக்க வைப்பதற்காக பெரும்பாலும் ஆபாசமான, கீழ்த்தரமான ஜோக்குகளைச் சொல்கிறார்கள். ஆனால், அப்போஸ்தலன் பவுல் சொன்னதைக் கவனியுங்கள்: “கடும் கோபம், சினம், கெட்ட குணம், பழிப்பேச்சு ஆகிய எல்லாவற்றையும் அடியோடு விட்டுவிடுங்கள்; ஆபாசமான பேச்சு உங்கள் வாயிலிருந்து ஒருபோதும் வரக் கூடாது.” (கொலோசெயர் 3:8) “ஆபாசமான கேலிப் பேச்சு” உண்மைக் கிறிஸ்தவர்கள் “மத்தியில் இருக்கக் கூடாது” என்றும் அவர் சொன்னார்.—எபேசியர் 5:3, 4.

10 ஆபாசமான பேச்சு யெகோவாவுக்கும் சரி, அவரை நேசிக்கிறவர்களுக்கும் சரி, கொஞ்சம்கூட பிடிக்காது. அது அசுத்தமானது. ‘பாவ இயல்புக்குரிய செயல்களில் . . . அசுத்தமான நடத்தையும்’ ஒன்று என பைபிள் சொல்கிறது. (கலாத்தியர் 5:19-21) ‘அசுத்தமான நடத்தையில்’ பலவிதமான பாவங்கள் உட்பட்டுள்ளன. அசுத்தமான ஒரு பழக்கம் இன்னொரு அசுத்தமான பழக்கத்துக்கு வழிநடத்தும். காதால் கேட்க முடியாதளவுக்கு அசுத்தமாக, அதாவது ஆபாசமாக, பேசும் பழக்கத்தை ஒருவர் நிறுத்தவில்லை என்றால் அவர் சபையின் பாகமாக இருக்க முடியாது என்பது இதிலிருந்து புரிகிறது.—2 கொரிந்தியர் 12:21; எபேசியர் 4:19; பின்குறிப்பு 23.

11, 12. (அ) வம்பளப்பது என்றால் என்ன? (ஆ) ஒருவரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுவதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?

11 நாம் மற்றவர்களைப் பற்றி வம்பளப்பதையும் தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் விஷயத்தில் நாம் அக்கறை காட்டுவதும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதும் இயல்புதான். முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள்கூட மற்ற சகோதர சகோதரிகளின் நலனைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினார்கள். அவர்களுக்கு எப்படி உதவலாம் என்றுகூட யோசித்தார்கள். (எபேசியர் 6:21, 22; கொலோசெயர் 4:8, 9) ஆனால், மற்றவர்களைப் பற்றிப் பேசுவது, வம்பளக்கும் பேச்சாக மாறிவிட வாய்ப்பிருக்கிறது. வம்பளப்பது, அதாவது ஒருவர் சொன்னதை இன்னொருவரிடம் சொல்வது, நம் பழக்கமாகிவிட்டால் உண்மையல்லாத விஷயங்களை அல்லது ரகசியமாக வைக்க வேண்டிய விஷயங்களை நாம் சொல்லிவிடலாம். நாம் கவனமாக இல்லையென்றால், மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேச ஆரம்பித்துவிடலாம். பரிசேயர்கள் இயேசுவைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசினார்கள். அவர் செய்யாத விஷயங்களைச் செய்ததாகச் சொன்னார்கள். (மத்தேயு 9:32-34; 12:22-24) ஒருவரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசினால் அவருடைய பெயர் கெட்டுவிடும். தேவையில்லாத சண்டை சச்சரவுகளும் வேதனையும் உண்டாகும். நட்பும் முறித்துவிடும்.—நீதிமொழிகள் 26:20.

12 நம் வார்த்தைகள் மற்றவர்களுக்கு உதவியாகவும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும்; நண்பர்களை விரோதிகளாக மாற்றும் விதமாக இருக்கக் கூடாது என்று யெகோவா எதிர்பார்க்கிறார். ‘சகோதரர்களுக்கு இடையே சண்டை சச்சரவுகளை மூட்டிவிடுவதை’ யெகோவா வெறுக்கிறார். (நீதிமொழிகள் 6:16-19) முதன்முதலில், இல்லாததையும் பொல்லாததையும் பேசியவன் பிசாசாகிய சாத்தான். அவன் கடவுளைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசினான். (வெளிப்படுத்துதல் 12:9, 10) இன்றைய உலகில் ஒருவரைப் பற்றி ஒருவர் பொய் சொல்வது சர்வசாதாரணமாகிவிட்டது. ஆனால், கிறிஸ்தவர்கள் அப்படி நடந்துகொள்ளக் கூடாது. (கலாத்தியர் 5:19-21) அதனால், நாம் என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எப்போதுமே யோசித்துப் பேச வேண்டும். ஒருவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்ட விஷயத்தை மற்றவர்களிடம் சொல்வதற்கு முன் உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் சொல்லப்போகிற விஷயம் உண்மைதானா? அப்படிச் சொல்வது ஒரு அன்பான செயலா? அதைச் சொல்வதால் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா? நான் யாரைப் பற்றிப் பேசுகிறேனோ அந்த நபரின் காதுக்கு இந்த விஷயம் எட்டினால் அவர் எப்படி உணருவார்? என்னைப் பற்றி யாராவது இப்படிப் பேசினால் நான் எப்படி உணருவேன்?’1 தெசலோனிக்கேயர் 4:11.

13, 14. (அ) பழிப்பேச்சால் மற்றவர்கள் எப்படிப் பாதிக்கப்படலாம்? (ஆ) சபித்துப் பேசுவது என்றால் என்ன? கிறிஸ்தவர்கள் இதை ஏன் தவிர்க்க வேண்டும்?

13 சில சமயங்களில், நாம் எதையாவது சொல்லிவிட்டு பிறகு அதை நினைத்து வருத்தப்படலாம். ஆனால், மற்றவர்களைப் பற்றிக் குறை சொல்வதோ, மோசமாகவும் தரக்குறைவாகவும் பேசுவதோ நம் பழக்கமாகிவிடக் கூடாது. நம் வாழ்க்கையில் பழிப்பேச்சுக்கு இடமே இருக்கக் கூடாது. “எல்லா விதமான மனக்கசப்பையும், சினத்தையும், கடும் கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும் . . . உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள்” என்று பவுல் சொன்னார். (எபேசியர் 4:31) ‘பழிப்பேச்சு’ என்ற வார்த்தையை மற்ற பைபிள்கள் ‘தூஷணம்,’ ‘பழிச்சொல்,’ ‘கடுஞ்சொற்கள்’ என்றெல்லாம் மொழிபெயர்த்திருக்கின்றன. பழிப்பேச்சு, ஒருவருடைய மதிப்பு மரியாதையைக் கெடுத்துவிடும்; அவரை லாயக்கற்றவராக உணர வைக்கும். முக்கியமாக பிள்ளைகள் எளிதில் புண்பட்டுவிட வாய்ப்பிருப்பதால், நம் வார்த்தைகள் அவர்களுடைய மனதைச் சுக்குநூறாக்கிவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.—கொலோசெயர் 3:21.

14 சபித்துப் பேசுவதுதான், அதாவது கெட்ட வார்த்தைகளில் திட்டுவதுதான், பழிப்பேச்சிலேயே படுமோசமானது. இதைக் குறித்து பைபிள் நம்மை எச்சரிக்கிறது. மற்றவர்களைக் காயப்படுத்தும் எண்ணத்தோடு எப்போதும் அவர்களை அவமரியாதையாகப் பேசுவதையே இது குறிக்கிறது. ஒருவர் தன்னுடைய துணையிடமோ பிள்ளைகளிடமோ அப்படிப் பேசுவது எவ்வளவு மோசமான விஷயம்! கெட்ட வார்த்தைகளில் திட்டுவதை ஒருவர் நிறுத்தாவிட்டால் அவர் சபையின் பாகமாக இருக்க முடியாது. (1 கொரிந்தியர் 5:11-13; 6:9, 10) இதுவரை பார்த்த விஷயங்களிலிருந்து, ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசுவது... உண்மையல்லாத விஷயங்களைப் பேசுவது... யெகோவாவோடும் மற்றவர்களோடும் நமக்கிருக்கும் பந்தத்தைப் பாதித்துவிடும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பலப்படுத்தும் வார்த்தைகள்

15. எப்படிப்பட்ட பேச்சு உறவுகளைப் பலப்படுத்தும்?

15 பேசும் திறனை, யெகோவா எதிர்பார்க்கும் விதத்தில் நாம் எப்படிப் பயன்படுத்தலாம்? என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது என்றெல்லாம் பைபிள் திட்டவட்டமாகச் சொல்வதில்லை. ஆனாலும், “பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்” என்று அது நமக்குச் சொல்கிறது. (எபேசியர் 4:29) பலப்படுத்துகிற பேச்சு சுத்தமானதாகவும், கனிவானதாகவும், உண்மையானதாகவும் இருக்கும். நாம் மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதத்திலும் அவர்களுக்கு உதவும் விதத்திலும் பேச வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். இப்படிச் செய்வது கஷ்டமாக இருக்கலாம். அக்கறையற்ற விதத்திலும் கடுமையான விதத்திலும் பேசாமல், நல்ல விதமாகப் பேச அதிக முயற்சி தேவை. (தீத்து 2:8) மற்றவர்களைப் பலப்படுத்தும் விதத்தில் எப்படியெல்லாம் பேசலாம் என்று இப்போது பார்க்கலாம்.

16, 17. (அ) நாம் ஏன் மற்றவர்களைப் பாராட்ட வேண்டும்? (ஆ) நாம் யாரையெல்லாம் பாராட்டலாம்?

16 யெகோவாவும் சரி, இயேசுவும் சரி, மற்றவர்களைத் தாராளமாகப் பாராட்டுகிறார்கள். அவர்களுடைய முன்மாதிரியை நாம் பின்பற்ற வேண்டும். (மத்தேயு 3:17; 25:19-23; யோவான் 1:47) ஒருவரைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணமும் அவர்மீது தனிப்பட்ட அக்கறையும் இருந்தால் அவரை உற்சாகப்படுத்தும் விதத்தில் நம்மால் பாராட்ட முடியும். “சரியான சமயத்தில் சொல்லப்படுகிற வார்த்தை எவ்வளவு அருமையானது!” என்று நீதிமொழிகள் 15:23 சொல்கிறது. நம்முடைய கடின உழைப்பைப் பார்த்து யாராவது நம்மை மனதார பாராட்டும்போது, அல்லது நாம் செய்த ஏதாவது ஒன்றுக்காக நமக்கு நன்றி சொல்லும்போது நமக்கு எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது!மத்தேயு 7:12-ஐ வாசியுங்கள்; பின்குறிப்பு 27.

17 மற்றவர்களிடம் இருக்கும் நல்லதையே பார்க்க நீங்கள் பழகிக்கொண்டால், மனதார பாராட்டுவது உங்களுக்குச் சுலபமாக இருக்கும். உதாரணத்துக்கு, சபையில் இருக்கும் ஒருவர் நன்கு தயாரித்து பேச்சுகளைக் கொடுப்பதையோ கூட்டங்களில் பதில் சொல்ல முயற்சி எடுப்பதையோ நீங்கள் கவனிக்கிறீர்கள். இளைஞர் ஒருவர், பள்ளியில் வரும் சவால்கள் மத்தியிலும் சத்தியத்தில் உறுதியாக இருப்பதையோ வயதான ஒருவர் தவறாமல் ஊழியம் செய்வதையோ நீங்கள் கவனிக்கிறீர்கள். இப்படிப்பட்டவர்களை நீங்கள் மனதார பாராட்டினால் அவர்கள் ரொம்பச் சந்தோஷப்படுவார்கள். அதுமட்டுமல்ல, ஒரு கணவன் தன் மனைவியிடம் அவளை நேசிப்பதாக சொல்வதும், அவளை மனதாரப் பாராட்டுவதும் ரொம்ப முக்கியம். (நீதிமொழிகள் 31:10, 28) செடிகளுக்கு வெளிச்சமும் தண்ணீரும் தேவைப்படுவது போல, மனிதர்களுக்குப் பாராட்டு தேவை. பிள்ளைகளின் விஷயத்தில் இது ரொம்பவே உண்மை. அவர்கள் நல்ல குணங்களைக் காட்டும்போதும் நல்லதைச் செய்ய முயற்சி எடுக்கும்போதும் அவர்களைப் பாராட்டுங்கள். அப்படிச் செய்யும்போது, அவர்களுக்குள் இன்னுமதிக தைரியமும் தன்னம்பிக்கையும் வரும். சரியானதைச் செய்ய அவர்கள் இன்னும் கடினமாக முயற்சி செய்வார்கள்.

நாம் பேசும் வார்த்தைகளாலும் பேசும் விதத்தாலும் மற்றவர்களை உற்சாகப்படுத்தவும் ஆறுதல்படுத்தவும் முடியும்

18, 19. மற்றவர்களை உற்சாகப்படுத்தவும் ஆறுதல்படுத்தவும் நம்மால் முடிந்த மிகச் சிறந்ததை ஏன் செய்ய வேண்டும்? அதை எப்படிச் செய்யலாம்?

18 நாம் மற்றவர்களை உற்சாகப்படுத்தும்போதும் ஆறுதல்படுத்தும்போதும் யெகோவாவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறோம். ‘எளியவர்கள்மீதும்’ ‘நெஞ்சம் நொறுங்கியவர்கள்மீதும்’ அவர் அதிக அக்கறை காட்டுகிறார். (ஏசாயா 57:15) நாம் ‘ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த’ வேண்டும் என்றும் ‘மனச்சோர்வால் வாடுகிறவர்களிடம் ஆறுதலாகப் பேச’ வேண்டும் என்றும் யெகோவா எதிர்பார்க்கிறார். (1 தெசலோனிக்கேயர் 5:11, 14) அப்படிச் செய்ய நாம் முயற்சி எடுக்கும்போது அதைப் பார்த்து அவர் சந்தோஷப்படுகிறார்.

19 சபையிலுள்ள ஒருவர் சோர்ந்துபோய் அல்லது மனமுடைந்துபோய் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவருக்கு உதவும் விதத்தில் நீங்கள் எப்படிப் பேசலாம்? அவருடைய பிரச்சினையை உங்களால் சரிசெய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால், அவர்மீது உங்களுக்கு அக்கறை இருப்பதை உங்களால் காட்ட முடியும். உதாரணத்துக்கு, அவரோடு நேரம் செலவிடலாம். உற்சாகமூட்டும் ஒரு பைபிள் வசனத்தை அவருக்கு வாசித்துக் காட்டலாம். அவரோடு சேர்ந்து ஜெபமும் செய்யலாம். (சங்கீதம் 34:18; மத்தேயு 10:29-31) சபையிலுள்ள சகோதர சகோதரிகள் அவர்மீது ரொம்ப அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை அவரிடம் சொல்லுங்கள். (1 கொரிந்தியர் 12:12-26; யாக்கோபு 5:14, 15) ஏதோ கடமைக்காக அல்ல, மனதிலிருந்துதான் சொல்கிறீர்கள் என்பதை அவர் புரிந்துகொள்ளும் விதத்தில் சொல்லுங்கள்.நீதிமொழிகள் 12:25-ஐ வாசியுங்கள்.

20, 21. சுலபமாக ஏற்றுக்கொள்ளும் விதத்தில் ஆலோசனை கொடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

20 மற்றவர்களுக்கு நல்ல ஆலோசனை கொடுக்கும்போதும் நாம் அவர்களைப் பலப்படுத்துகிறோம். நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், நம் எல்லாருக்குமே அவ்வப்போது ஆலோசனை தேவைப்படுகிறது. “ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள். அப்போதுதான் எதிர்காலத்தில் ஞானமுள்ளவனாக ஆவாய்” என்று நீதிமொழிகள் 19:20 சொல்கிறது. மூப்பர்கள் மட்டும்தான், மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுக்க வேண்டும் என்று கிடையாது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு புத்திமதி சொல்வது அவசியம். (எபேசியர் 6:4) சகோதரிகளும் ஒருவருக்கொருவர் ஆலோசனை கொடுக்கலாம். (தீத்து 2:3-5) நம் சகோதர சகோதரிகளை நாம் நேசிப்பதால், அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கும்போது அவர்களுடைய மனதை நோகடிக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இதை எப்படிச் செய்யலாம்?

21 சுலபமாக ஏற்றுக்கொள்ளும் விதத்தில் ஒருவர் நல்ல ஆலோசனை கொடுத்தது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். அந்த ஆலோசனை பயனுள்ளதாக இருந்ததற்கு காரணம் என்ன? ஆலோசனை கொடுத்த நபருக்கு உங்கள்மீது அக்கறை இருந்ததை நீங்கள் உணர்ந்திருக்கலாம். அல்லது அவர் அன்பாகவும் கனிவாகவும் உங்களிடம் பேசியிருக்கலாம். (கொலோசெயர் 4:6) அவர் கொடுத்த ஆலோசனை பைபிள் அடிப்படையில் இருந்திருக்கலாம். (2 தீமோத்தேயு 3:16) பைபிளிலிருந்து மேற்கோள் காட்டினாலும் சரி, காட்டாவிட்டாலும் சரி, நாம் கொடுக்கும் ஆலோசனை பைபிள் அடிப்படையில் இருக்க வேண்டும். யாருமே தங்களுடைய சொந்த கருத்துகளை மற்றவர்கள்மீது திணிக்கக் கூடாது. தங்களுடைய கருத்தை நிரூபிப்பதற்காக வசனங்களைத் தவறாகப் பொருத்திக்காட்டவும் கூடாது. உங்களுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்ட விதத்தை நீங்கள் யோசித்துப் பார்த்தால் மற்றவர்களுக்கு நல்ல விதத்தில் உங்களால் ஆலோசனை கொடுக்க முடியும்.

22. பேசும் திறனை நீங்கள் எப்படிப் பயன்படுத்த விரும்புகிறீர்கள்?

22 பேசும் திறன், கடவுள் கொடுத்த பரிசு. அதைச் சரியாகப் பயன்படுத்த அவர்மீதுள்ள அன்பு நம்மைத் தூண்ட வேண்டும். நம் வார்த்தைகள் மற்றவர்களைப் பலப்படுத்தவும் முடியும், அவர்கள் மனதைச் சுக்குநூறாக்கவும் முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனால், மற்றவர்களைப் பலப்படுத்துகிற... உற்சாகப்படுத்துகிற... வார்த்தைகளைப் பேச நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.