அதிகாரம் 19
யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும் கட்டுமான வேலைகள்
1, 2. (அ) யெகோவாவின் ஊழியர்கள் பல காலமாகவே எதைச் சந்தோஷமாகச் செய்திருக்கிறார்கள்? (ஆ) யெகோவா எதை உயர்வாக நினைக்கிறார்?
யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் பல காலமாகவே அவருடைய பெயருக்குப் புகழ் சேர்க்கும் கட்டிடங்களை சந்தோஷமாகக் கட்டியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு இஸ்ரவேலர்கள், வழிபாட்டுக் கூடாரத்தைச் சந்தோஷமாகக் கட்டினார்கள். அதற்குத் தேவையான பொருள்களையும் தாராளமாகக் கொடுத்தார்கள்.—யாத். 35:30-35; 36:1, 4-7.
2 தன்னுடைய ஊழியர்கள் தன்னை வணங்குவதை யெகோவா உயர்வாக நினைக்கிறார். பக்திவைராக்கியத்தோடு அவர்கள் செய்யும் சேவையும் அவர்கள் காட்டும் தாராள குணமும் அவருக்கு மகிமை சேர்ப்பதாக நினைக்கிறார். (யாத். 35:21; மாற். 12:41-44; 1 தீ. 6:17-19) கட்டுமானப் பொருள்கள் தனக்கு மகிமை சேர்ப்பதாக யெகோவா நினைப்பதில்லை. அவற்றை அவர் உயர்வாக மதிப்பதும் இல்லை. (மத். 23:16, 17) ஏனென்றால், கட்டிடங்கள் கொஞ்சக் காலத்துக்குத்தான் இருக்கும், பிறகு அழிந்துவிடும். உதாரணத்துக்கு, வழிபாட்டுக் கூடாரமும் ஆலயமும் இப்போது இல்லை; அவை அழிந்துவிட்டன. ஆனால், அதைக் கட்டுவதில் தன்னுடைய உண்மையுள்ள ஊழியர்கள் காட்டிய தாராள குணத்தையும் உழைப்பையும் யெகோவா மறந்துவிடவில்லை.—1 கொரிந்தியர் 15:58-ஐயும் எபிரெயர் 6:10-ஐயும் வாசியுங்கள்.
3. இந்த அதிகாரத்தில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
3 இன்றும் யெகோவாவின் ஊழியர்கள் வழிபாட்டுக்கான இடங்களைக் கட்டுவதற்குக் கடினமாக உழைக்கிறார்கள். ராஜாவான இயேசு கிறிஸ்துவின் தலைமையின் கீழ், கட்டுமான வேலைகளில் மிகப் பெரிய சாதனைகளை நாம் செய்திருக்கிறோம். நிச்சயமாகவே யெகோவா நம்முடைய முயற்சிகளை ஆசீர்வதித்திருக்கிறார். (சங். 127:1) இதுவரை செய்யப்பட்டிருக்கும் கட்டுமான வேலைகள் சிலவற்றைப் பற்றியும் அவை யெகோவாவுக்கு எப்படி மகிமை சேர்த்திருக்கின்றன என்பதைப் பற்றியும் இந்த அதிகாரத்தில் பார்ப்போம். அதோடு, கட்டுமான வேலையில் கலந்துகொண்ட சிலருடைய அனுபவங்களையும் பார்ப்போம்.
ராஜ்ய மன்றங்களைக் கட்டுவது
4. (அ) வழிபாட்டுக்கான இடங்கள் ஏன் அதிகமாகத் தேவைப்படுகின்றன? (ஆ) சில கிளை அலுவலகங்கள் ஏன் ஒன்றுசேர்க்கப்பட்டுள்ளன? (“ கிளை அலுவலகக் கட்டுமான வேலை—தேவைக்கு ஏற்ப செய்யப்பட்ட மாற்றங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
4 16-ஆம் அதிகாரத்தில் பார்த்தபடி, யெகோவாவை வணங்குவதற்காக நாம் ஒரு இடத்தில் கூடிவர வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். (எபி. 10:25) நம்முடைய கூட்டங்கள் நம் விசுவாசத்தைப் பலப்படுத்துவதோடு பிரசங்க வேலையைச் செய்வதற்கான ஆசையை இன்னும் தூண்டிவிடுகிறது. இந்தக் கடைசி நாட்களில் பிரசங்க வேலை இன்னும் வேகமாக நடக்கும்படி யெகோவா செய்திருக்கிறார். அதனால், ஒவ்வொரு வருஷமும் ஆயிரக்கணக்கான மக்கள் அவருடைய அமைப்புக்குள் வந்துகொண்டிருக்கிறார்கள். (ஏசா. 60:22) கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களின் எண்ணிக்கை அதிகமாவதால் பைபிள் பிரசுரங்களை அச்சடிப்பதற்கான இடங்களின் தேவையும் அதிகமாகின்றன. அதோடு, வழிபாட்டுக்கான இடங்களின் தேவையும் அதிகமாகின்றன.
5. ராஜ்ய மன்றம் என்ற பெயர் ஏன் பொருத்தமானது? (“ புது ஒளி சர்ச்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
5 யெகோவாவின் மக்களுடைய நவீன கால சரித்திரத்தின் ஆரம்பத்திலேயே, வழிபாட்டுக்காகக் கூடிவருவதற்குச் சொந்தமாக ஒரு இடம் தேவை என்று பைபிள் மாணாக்கர்கள் நினைத்தார்கள். 1890-ல் அமெரிக்காவிலுள்ள மேற்கு வர்ஜீனியாவில், வழிபாட்டுக்காக முதன்முதலில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. 1930-க்குள் யெகோவாவின் மக்கள் வழிபாட்டுக்காக நிறைய கட்டிடங்களைக் கட்டினார்கள், அதைப் புதுப்பிக்கவும் செய்தார்கள். ஆனால், கூட்டங்கள் நடத்தப்படும் அந்த இடங்களுக்கு ஒரு பெயர் கொடுக்கப்படவில்லை. 1935-ல் ஹவாய் என்ற இடத்தில் ஒரு புதிய கிளை அலுவலகம் கட்டப்பட்டது. அதோடு சேர்த்து, கூட்டங்கள் நடத்துவதற்கான ஒரு மன்றமும் கட்டப்பட்டது. சகோதரர் ரதர்ஃபோர்ட் அங்கு போயிருந்தபோது அந்தக் கட்டிடத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நாம் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதால் இந்த இடம் ‘ராஜ்ய மன்றம்’ என்று அழைக்கப்படுவதுதானே சரியாக இருக்கும்?” என்று சொன்னார். (மத். 24:14) அதன் பிறகு, உலகம் முழுவதுமுள்ள யெகோவாவின் மக்கள் கூட்டங்களுக்காகக் கூடிவரும் இடங்களுக்கு ராஜ்ய மன்றம் என்ற பெயர் வைக்கப்பட்டது.
6, 7. வேகமாகக் கட்டப்பட்ட ராஜ்ய மன்றங்களால் என்ன நன்மை கிடைத்திருக்கின்றன?
6 1970-க்குள் ராஜ்ய மன்றத்துக்கான தேவை இன்னும் அதிகமானது. அதனால், அழகான ஒரு ராஜ்ய மன்றத்தை சில நாட்களிலேயே சுலபமாகக் கட்டுவதற்கான ஒரு முறையை அமெரிக்காவில் இருக்கும் சகோதரர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த முறையைப் பயன்படுத்தி, 1983-க்குள் கிட்டத்தட்ட 200 ராஜ்ய மன்றங்கள் அமெரிக்காவிலும் கனடாவிலும் கட்டப்பட்டன. கட்டுமான வேலைக்காக சகோதரர்கள், சில குழுக்களை ஏற்படுத்தினார்கள். இந்த ஏற்பாடு பயனுள்ளதாக இருந்ததால், 1986-ல் மண்டலக் கட்டுமானக் குழுக்களை (RBC) அமைக்க ஆளும் குழு அங்கீகாரம் கொடுத்தது. 1987-க்குள் அமெரிக்காவில் மட்டும் 60 கட்டுமானக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. a 1992-க்குள் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பிரான்சு, மெக்சிகோ, ஜப்பான், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய இடங்களிலும் மண்டலக் கட்டுமானக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. ராஜ்ய மன்றங்களையும் மாநாட்டு மன்றங்களையும் கட்ட கடினமாக உழைக்கும் நம் சகோதரர்களுக்கு நாம் முழு ஆதரவு கொடுக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் செய்யும் இந்த வேலையும் பரிசுத்த சேவையின் ஒரு பாகம்தான்.
7 இப்படி வேகமாகக் கட்டப்பட்ட ராஜ்ய மன்றங்கள் அங்குள்ள மக்களுக்குச் சிறந்த சாட்சியாக இருந்திருக்கின்றன. உதாரணத்துக்கு, ஸ்பெயினிலுள்ள செய்தித்தாளில், “விசுவாசம் மலைகளைப் பெயர்ந்துபோக வைக்கிறது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது. மார்டோஸ் என்ற ஊரில் கட்டப்பட்ட ராஜ்ய மன்றம் சம்பந்தமாக அந்தச் செய்தித்தாள் ஒரு கேள்வியை எழுப்பியது: “நாம் சுயநலமான உலகத்தில் வாழ்கிறோம். அப்படியிருந்தும், [ஸ்பெயினிலுள்ள] பல இடங்களைச் சேர்ந்த வாலண்டியர்கள் மார்டோசுக்கு வந்து ஒரு பெரிய சாதனையைப் படைத்திருக்கிறார்கள். அதிவேகமாகவும் கச்சிதமாகவும் சீராகவும் ஒரு கட்டிடத்தைக் கட்டி சாதனை படைத்திருக்கிறார்கள். அவர்களால் இதை எப்படிச் செய்ய முடிந்தது?” வாலண்டியராகச் சேவை செய்த யெகோவாவின் சாட்சி ஒருவர் சொன்ன வார்த்தைகளை அந்தக் கேள்விக்கான பதிலாக அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது: “நாங்கள் எல்லாருமே யெகோவாவினால் கற்பிக்கப்பட்டிருப்பதுதான் இதற்குக் காரணம்.”
வசதி குறைவான நாடுகளில் கட்டுமான வேலைகள்
8. 1999-ல் ஆளும் குழு என்ன புதிய திட்டத்தைக் கொண்டுவந்தது, ஏன்?
8 20-ஆம் நூற்றாண்டின் முடிவில் யெகோவாவின் அமைப்புக்குள் வந்த நிறைய பேர் வசதி குறைவான நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களிடம் இருந்ததை வைத்து ராஜ்ய மன்றங்களைக் கட்டினார்கள். சில நாடுகளில், அவர்கள் கட்டிய ராஜ்ய மன்றங்கள் வழிபாட்டுக்காக மற்றவர்கள் கூடிவந்த இடங்களைவிட ரொம்பவே சாதாரணமாக இருந்தன. அதனால், அங்கிருந்த மக்கள் நம் சகோதரர்களை மட்டமாக நினைத்தார்கள், கேலி கிண்டல் செய்தார்கள். ஆனால் 1999-லிருந்து, வளரும் நாடுகளில் நிறைய ராஜ்ய மன்றங்களைக் கட்ட ஆளும் குழு ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்தது. யெகோவாவின் சாட்சிகளுக்குள் ‘சமநிலையை ஏற்படுத்த’ வசதிபடைத்த நாடுகளிலிருந்து இந்த நாடுகளுக்கு பண உதவி செய்யப்பட்டது. (2 கொரிந்தியர் 8:13-15-ஐ வாசியுங்கள்.) அதோடு, இந்த வேலைக்கு உதவ மற்ற நாடுகளிலிருந்தும் சகோதர சகோதரிகள் மனமுவந்து வந்தார்கள்.
9. என்ன வேலையைச் செய்து முடிப்பது ரொம்பக் கஷ்டம் என்று சகோதரர்கள் நினைத்தார்கள், ஆனால் அவர்கள் எதைச் சாதித்திருக்கிறார்கள்?
9 ஆரம்பத்தில் இந்த வேலையைச் செய்து முடிப்பது ரொம்பக் கஷ்டம் என்று சகோதரர்கள் நினைத்தார்கள். 2001-ன் அறிக்கைபடி, வளர்ந்து வரும் 88 நாடுகளில் 18,300-க்கும் அதிகமான ராஜ்ய மன்றங்கள் தேவைப்பட்டன. கடவுளுடைய சக்தி மற்றும் நம் ராஜாவான இயேசு கிறிஸ்துவின் ஆதரவு நமக்கு இருக்கும்போது நம்மால் செய்ய முடியாத வேலை ஏதாவது இருக்க முடியுமா? (மத். 19:26) கிட்டத்தட்ட 15 வருஷங்களில், அதாவது 1999 முதல் 2013 வரையில், கடவுளுடைய மக்கள் இந்தப் புதிய திட்டத்தின்படி 26,849 ராஜ்ய மன்றங்களைக் கட்டினார்கள்! b யெகோவா நம் பிரசங்க வேலையைத் தொடர்ந்து ஆசீர்வதிப்பதால் வளர்ந்து வரும் நாடுகளில் 2013-ல் இன்னும் 6,500 ராஜ்ய மன்றங்கள் தேவைப்பட்டன. ஒவ்வொரு வருஷமும் இன்னும் நூற்றுக்கணக்கான ராஜ்ய மன்றங்கள் தேவைப்படுகின்றன.
10-12. ராஜ்ய மன்றங்களைக் கட்டுவது யெகோவாவின் பெயருக்கு எப்படி மகிமை சேர்த்திருக்கிறது?
10 இப்படிப்பட்ட ராஜ்ய மன்றங்களைக் கட்டுவது யெகோவாவின் பெயருக்கு எப்படிப் மகிமை சேர்த்திருக்கிறது? ஜிம்பாப்வே கிளை அலுவலகத்திலிருந்து வந்த ஒரு அறிக்கை இப்படிச் சொல்கிறது: “ராஜ்ய மன்றம் கட்டி முடிக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள்ளேயே கூட்டங்களுக்கு வருகிறவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகிறது.” பல நாடுகளில், நேர்த்தியான ஒரு ராஜ்ய மன்றம் இல்லாததால், கூட்டங்களுக்கு வர மக்கள் தயங்குகிறார்கள். ஆனால், அப்படிப்பட்ட இடங்களில் ஒரு ராஜ்ய மன்றம் கட்டப்பட்டவுடன், இன்னொரு ராஜ்ய மன்றம் தேவைப்படும் அளவுக்கு அங்கு மக்கள் கூட்டம் நிரம்பிவழிகிறது. அந்த ராஜ்ய மன்றத்தின் அழகு மட்டுமல்ல, அதைக் கட்டியவர்கள் காட்டிய உண்மையான கிறிஸ்தவ அன்பும் மக்களை யெகோவாவிடம் ஈர்க்கிறது. அதனால், கடவுளுடைய அமைப்பின் மீது மக்களுக்கு இருக்கும் மதிப்பு கூடுகிறது. அதற்குச் சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
11 இந்தோனேஷியா. ஒரு ராஜ்ய மன்றம் கட்டப்படுவதைக் கவனித்த ஒருவர், அங்கு வேலை செய்கிறவர்கள் எல்லாரும் வாலண்டியர்கள் என்பதைத் தெரிந்துகொண்டபோது இப்படிச் சொன்னார்: “இப்படிப்பட்ட ஆட்களை நான் எங்குமே பார்த்ததில்லை. நீங்கள் எந்தச் சம்பளமும் இல்லாமல் மனப்பூர்வமாக, சந்தோஷமாக வேலை செய்கிறீர்கள். இந்த மாதிரி ஒரு மத அமைப்பு வேறு எங்குமே இருக்காது என்று நினைக்கிறேன்.”
12 உக்ரைன். ராஜ்ய மன்றம் கட்டப்பட்டபோது அந்த வழியாக அடிக்கடி போய்வந்த ஒரு பெண் அங்கு வேலை செய்கிறவர்கள் யெகோவாவின் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கட்டிக்கொண்டு இருந்தது ஒரு ராஜ்ய மன்றமாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தார். அவர் சொல்கிறார்: “யெகோவாவின் சாட்சியாக இருந்த என் தங்கையிடமிருந்து யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி நான் தெரிந்துகொண்டேன். இந்தக் கட்டுமான வேலையைக் கவனித்த பிறகு நானும் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆக ஆசைப்பட்டேன். அன்பாக நடந்துகொள்ளும் மக்களை நான் இங்குதான் பார்த்திருக்கிறேன்.” இந்தப் பெண், சத்தியத்தைக் கற்றுக்கொண்டு 2010-ல் ஞானஸ்நானம் எடுத்தார்.
13, 14. (அ) ஒரு ராஜ்ய மன்றத்தின் கட்டுமான வேலையைக் கவனித்த ஒரு தம்பதி சொன்ன விஷயத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? (ஆ) வழிபாட்டுக்காகக் கூடிவரும் இடம் யெகோவாவின் பெயருக்கு மகிமை சேர்க்க நீங்கள் என்ன செய்யலாம்?
13 அர்ஜென்டினா. கட்டுமான வேலையை மேற்பார்வை செய்துகொண்டிருந்த சகோதரரிடம், ஒரு தம்பதி வந்து பேசினார்கள். அந்தக் கணவர் இப்படிச் சொன்னார்: “இந்த மன்றத்தைக் கட்ட நீங்கள் எந்தளவுக்கு உழைக்கிறீர்கள் என்பதை நாங்கள் கவனித்தோம். அதனால், . . . இந்த இடத்தில் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்.” பிறகு, “உங்களுடைய கூட்டங்களுக்கு வர வேண்டுமென்றால் நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அந்தத் தம்பதி பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார்கள். ஆனால், ஒரு நிபந்தனை வைத்தார்கள். வீட்டிலுள்ள அத்தனை பேருக்கும் பைபிளைப் பற்றி சொல்லித் தர ஒத்துக்கொண்டால்தான் படிப்பதாகச் சொன்னார்கள். இந்த நிபந்தனையைச் சகோதரர்கள் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள்.
14 நீங்கள் இப்போது கூடிவருகிற ராஜ்ய மன்றத்தின் கட்டுமான வேலையில் பங்குகொள்ள உங்களுக்கு ஒருவேளை வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். இருந்தாலும், நீங்கள் வழிபாட்டுக்காகக் கூடிவரும் அந்த மன்றம், யெகோவாவின் பெயருக்கு மகிமை சேர்க்க உங்களால் உதவ முடியும். எப்படி? உங்களோடு கூட்டங்களில் கலந்துகொள்ள உங்களுடைய பைபிள் படிப்புகளை, மறுசந்திப்புகளை, அல்லது மற்றவர்களை அழைக்கலாம். அதோடு, உங்களுடைய ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்யவும் பராமரிக்கவும் உதவி செய்யலாம். நீங்கள் நன்றாகத் திட்டமிட்டு கொஞ்சம் பணத்தைச் சேர்த்து வைத்தால், உங்களுடைய ராஜ்ய மன்றத்தைப் பராமரிக்க அந்தப் பணத்தைக் கொடுக்கலாம். அல்லது, உலகின் மற்ற இடங்களில் ராஜ்ய மன்றங்களைக் கட்ட அதை நன்கொடையாகக் கொடுக்கலாம். (1 கொரிந்தியர் 16:2-ஐ வாசியுங்கள்.) இவையெல்லாமே யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்க்கின்றன.
‘மனப்பூர்வமாகத் தங்களை அர்ப்பணித்த’ வேலையாட்கள்
15-17. (அ) பெரும்பாலான கட்டுமான வேலைகளைச் செய்வது யார்? (ஆ) சர்வதேச கட்டுமான வேலையில் ஈடுபட்ட தம்பதிகள் சொன்னதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
15 ராஜ்ய மன்றங்கள், மாநாட்டு மன்றங்கள், கிளை அலுவலகங்கள் ஆகியவற்றைக் கட்டுவதில் உட்பட்டுள்ள பெரும்பாலான வேலைகளை அந்தந்த ஊரில் இருக்கும் சகோதர சகோதரிகள்தான் செய்கிறார்கள். நிறைய சமயங்களில், கட்டுமான வேலைகளில் அனுபவமுள்ள வேறு நாடுகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் இவர்களுக்கு உதவுகிறார்கள். இப்படி வேலை செய்யும் சில வாலண்டியர்கள் பல வாரங்களுக்கு இந்தச் சர்வதேச கட்டுமான வேலையில் ஈடுபடுவதற்காக தங்களுடைய சொந்த வேலைகளில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். இன்னும் சிலர் பல வருஷங்களுக்கு இப்படிப்பட்ட கட்டுமான வேலைகளில் ஈடுபடுவதற்காக தங்களுடைய வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.
16 சர்வதேச கட்டுமான வேலையில் நிறைய சவால்கள் இருந்தாலும் அதில் நிறைய ஆசீர்வாதங்களும் இருக்கின்றன. உதாரணத்துக்கு, டீமோ-லீனா தம்பதி ஆசியா, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்து ராஜ்ய மன்றங்கள், மாநாட்டு மன்றங்கள், கிளை அலுவலகங்கள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு உதவி செய்திருக்கிறார்கள். டீமோ சொல்கிறார்: “கடந்த 30 வருஷங்களில், சராசரியாக இரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை என்னுடைய நியமிப்பு மாறியிருக்கிறது.” 25 வருஷங்களுக்கு முன்பு டீமோவைக் கல்யாணம் செய்த லீனா இப்படிச் சொல்கிறார்: “டீமோவுடன் சேர்ந்து நான் பத்து நாடுகளில் சேவை செய்திருக்கிறேன். ஒரு புது இடத்துக்குப் போகும்போது அங்குள்ள உணவு, சீதோஷ்ணம், மொழி, ஊழியப் பகுதி, நண்பர்கள் என எல்லா விஷயங்களோடும் ஒத்துப்போவதற்கு நிறைய நேரமும் சக்தியும் செலவாகிறது.” c அவர்கள் எடுத்த முயற்சிகளுக்குப் பலன் கிடைத்திருக்கிறதா? “நாங்கள் நிறைய சவால்களை எதிர்ப்பட்டிருந்தாலும், எங்களுக்கு நிறைய ஆசீர்வாதங்களும் கிடைத்திருக்கின்றன. சகோதர சகோதரிகளுடைய அன்பையும், உபசரிப்பையும், எல்லாவற்றையும்விட யெகோவாவின் அன்பான அரவணைப்பையும் உணர முடிந்திருக்கிறது. மாற்கு 10:29, 30-ல் இயேசு தன்னுடைய சீஷர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின் நிறைவேற்றத்தையும் எங்களால் பார்க்க முடிந்திருக்கிறது. நூறு மடங்குக்கும் அதிகமான அண்ணன்கள், தம்பிகள், அக்காக்கள், தங்கைகள், அம்மாக்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கிறார்கள்” என்று லீனா சொல்கிறார். “ராஜாவின் உடைமைகளை அதிகரிக்கும் மிகச் சிறந்த வேலைக்கு எங்களுடைய திறமைகளைப் பயன்படுத்துவதை நினைத்து நாங்கள் ரொம்பச் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் உணருகிறோம்” என்று டீமோ சொல்கிறார்.
17 டேரன்-சாரா தம்பதி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, தென் பசிபிக், மத்திய அமெரிக்கா ஆகிய இடங்களில் கட்டுமான வேலைகளுக்கு உதவி செய்திருக்கிறார்கள். அந்த வேலையில் அவர்கள் கொடுத்ததைவிட பெற்றுக்கொண்டதுதான் அதிகம் என்று உணருகிறார்கள். அவர்கள் நிறைய சவால்களைச் சந்தித்திருந்தாலும் டேரன் இப்படிச் சொல்கிறார்: “உலகின் பல்வேறு இடங்களில் இருக்கும் சகோதர சகோதரிகளோடு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததை நினைத்து நான் ரொம்பச் சந்தோஷப்படுகிறேன். யெகோவாமேல் நாங்கள் வைத்திருக்கிற அன்புதான் எங்களை ஒன்றுசேர்த்திருக்கிறது.” சாரா சொல்கிறார்: “வித்தியாசமான கலாச்சாரங்களைச் சேர்ந்த சகோதர சகோதரிகளிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். யெகோவாவைச் சேவிக்க அவர்கள் செய்திருக்கும் தியாகங்களைப் பார்க்கும்போது என்னால் முடிந்த சிறந்ததைத் தொடர்ந்து செய்ய நான் தூண்டப்படுகிறேன்.”
18. சங்கீதம் 110:1-3-ல் சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறி வருகிறது?
18 கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் பல சவால்களை எதிர்ப்பட்டாலும் “மனப்பூர்வமாகத் தங்களை அர்ப்பணிப்பார்கள்” என்று தாவீது ராஜா தீர்க்கதரிசனம் சொன்னார். (சங்கீதம் 110:1-3-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்யும் எல்லாருக்கும் இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில் பங்கு இருக்கிறது. (1 கொ. 3:9) இன்று உலகம் முழுவதுமுள்ள ஏராளமான கிளை அலுவலகங்கள், நூற்றுக்கணக்கான மாநாட்டு மன்றங்கள், ஆயிரக்கணக்கான ராஜ்ய மன்றங்கள் என எல்லாமே கடவுளுடைய அரசாங்கம் நிஜமானது என்பதற்கும், அது இப்போது ஆட்சி செய்துகொண்டிருக்கிறது என்பதற்கும் கண்கூடான அத்தாட்சிகள்! இந்த வேலையைச் செய்வதன் மூலம் நம் ராஜாவான இயேசு கிறிஸ்துவுக்குச் சேவை செய்யும் பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அதோடு, இந்த வேலை யெகோவாவுக்குச் சேர வேண்டிய மகிமையைச் சேர்த்திருக்கிறது.
a 2013-ல், அமெரிக்காவிலுள்ள 132 மண்டலக் கட்டுமானக் குழுக்களோடு சேர்ந்து வேலை செய்ய 2,30,000 வாலண்டியர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. அந்த நாட்டில், ஒவ்வொரு வருஷமும் இந்தக் கட்டுமானக் குழுக்களின் மேற்பார்வையில் 75 ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டன; 900 ராஜ்ய மன்றங்கள் புதுப்பிக்கப்பட்டன அல்லது பழுதுபார்க்கப்பட்டன.
b இந்தத் திட்டத்தின்படி கட்டப்படாத ஏராளமான ராஜ்ய மன்றங்கள் மற்ற நாடுகளிலும் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.
c சர்வதேச கட்டுமான ஊழியர்களும் வாலண்டியர்களும் பெரும்பாலும் கட்டுமான வேலைகளில் தங்களுடைய நேரத்தைச் செலவிடுகிறார்கள். ஆனாலும், வார இறுதி நாட்களிலும் சாயங்கால நேரங்களிலும் சபையோடு சேர்ந்து ஊழியம் செய்கிறார்கள்.