Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

கடவுளுடைய அரசாங்கத்தை அறிவிக்கும் அன்பான சக ஊழியரே:

அக்டோபர் 2, 1914, வெள்ளிக்கிழமை காலையில் புருக்லின் பெத்தேல் குடும்பத்தாரோடு நீங்களும் உணவு சாப்பிட உட்கார்ந்திருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். சகோதரர் சி. டி. ரஸலுக்காக எல்லாரும் காத்திருக்கிறீர்கள். அப்போது, சகோதரர் ரஸல் கதவைத் திறந்து உள்ளே வருகிறார். எப்போதும் போலவே அன்றும் அவர் பெத்தேல் குடும்பத்தாரைப் பார்த்து, “எல்லாருக்கும் குட் மார்னிங்!” என்று உற்சாகமாகச் சொல்கிறார். ஆனால், உடனே அவருடைய இடத்துக்குப் போவதற்குப் பதிலாக, கைதட்டி “மற்ற தேசத்தாரின் காலம் முடிந்துவிட்டது; அவர்களுடைய ராஜாக்களின் காலம் முடிந்துவிட்டது!” என்று அறிவிக்கிறார். உங்களுக்கு ஒரே சந்தோஷம்! இந்த நாளுக்காகத்தான் ரொம்பக் காலமாகக் காத்திருந்தீர்கள். எல்லாரோடும் சேர்ந்து நீங்களும் ரொம்ப நேரத்துக்கு உற்சாகமாகக் கைதட்டி, உங்கள் சந்தோஷத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

புல்லரிக்க வைக்கும் அந்த அறிவிப்பு செய்யப்பட்டு பல வருஷங்கள் ஆகிவிட்டன. அதுமுதல் கடவுளுடைய அரசாங்கம் எதைச் சாதித்திருக்கிறது? நிறைய விஷயங்களைச் சாதித்திருக்கிறது! இந்த அரசாங்கத்தின் மூலம் யெகோவா தன் மக்களைப் படிப்படியாகப் புடமிட்டு, பயிற்றுவித்திருக்கிறார். அதனால், 1914-ல் சில ஆயிரங்களாக இருந்தவர்கள் இன்று 80 லட்சத்துக்கும் அதிகமாக ஆகியிருக்கிறார்கள். யெகோவா கொடுத்திருக்கும் பயிற்சியிலிருந்து நீங்கள் எப்படியெல்லாம் நன்மை அடைந்திருக்கிறீர்கள்?

“யெகோவாவின் பரம ரதம் வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது!” என்று நம் சகோதரர்கள் அடிக்கடி சொல்வதைக் கேட்கிறோம். அது உண்மைதான்! ஆனாலும், யெகோவாவுடைய அமைப்பின் பரலோகப் பாகத்தை அடையாளப்படுத்தும் அந்தப் பரம ரதம், 1914-ஆம் வருஷத்திலிருந்து ரொம்ப வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தைக் கவனமாக வாசிக்கும்போது அதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். பிரஸ்தாபிகள், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் புதுப் புது வழிகளில் உலகம் முழுவதும் அறிவித்திருக்கிறார்கள். செய்தித்தாள்கள், அணிவகுப்புகள், படங்கள், சாட்சி அட்டைகள், ஃபோனோகிராஃப்கள், ரேடியோ, இன்டர்நெட் ஆகியவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

யெகோவாவின் ஆசீர்வாதத்தோடு இப்போது நம்முடைய அருமையான பைபிள் பிரசுரங்களை 670-க்கும் அதிகமான மொழிகளில் அச்சடித்து, இலவசமாக வினியோகிக்கிறோம். வசதியுள்ள நாடுகளிலும் வசதியில்லாத நாடுகளிலும் நிறைய வாலண்டியர்கள் ராஜ்ய மன்றங்களை, மாநாட்டு மன்றங்களை, கிளை அலுவலகங்களை கட்டுவதற்காக தங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவழிக்கிறார்கள். பேரழிவுகள் தாக்கும்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய அன்பான சகோதர சகோதரிகள் விரைந்து போகிறார்கள். இப்படி, தாங்கள் ‘கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்தவர்கள்’ என்பதை நிரூபிக்கிறார்கள்.—நீதி. 17:17.

சில சமயங்களில், கிறிஸ்தவமண்டல குருமார்களும் மற்ற எதிரிகளும் “சட்டத்தின் பெயரில் பிரச்சினை உண்டாக்குகிறார்கள்.” ஆனாலும், அவர்கள் எடுக்கும் முயற்சிகள் பெரும்பாலான சமயங்களில், ‘நல்ல செய்தி பரவுவதற்கே உதவியாக இருந்திருக்கின்றன.’ இதைப் பார்க்கும்போது நம் விசுவாசம் எந்தளவு பலமாகிறது!—சங். 94:20; பிலி. 1:12.

எங்கள் சக ‘வீட்டாராகிய’ உங்களோடு சேர்ந்து உழைப்பதை நாங்கள் பெருமையாக நினைக்கிறோம். உங்கள் எல்லாரையும் நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். உங்கள் ஆன்மீகச் சொத்தை இன்னும் உயர்வாக மதிக்க, இந்தப் புத்தகம் உதவ வேண்டுமென்று ஜெபம் செய்கிறோம்.—மத். 24:45.

உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்கள் சகோதரர்கள்,

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு