Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 17

கடவுளுடைய அரசாங்கத்தின் ஊழியர்களைப் பயிற்றுவித்தல்

கடவுளுடைய அரசாங்கத்தின் ஊழியர்களைப் பயிற்றுவித்தல்

அதிகாரத்தின் முக்கியக் குறிப்பு

தங்களுடைய நியமிப்புகளைச் செய்ய கடவுளுடைய அரசாங்கத்தின் ஊழியர்களைத் தயார்படுத்திய பள்ளிகள்

1-3. பிரசங்க வேலையை விரிவுபடுத்த இயேசு என்ன செய்தார், இதன் சம்பந்தமாக நம் மனதில் என்ன கேள்விகள் வரலாம்?

 இயேசு, இரண்டு வருஷங்களுக்கு கலிலேயா முழுவதும் பிரசங்கித்தார். (மத்தேயு 9:35-38-ஐ வாசியுங்கள்.) அவர் பல நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் போய் அங்கிருந்த ஜெபக்கூடங்களில் கற்றுக்கொடுத்தார், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தார். அவர் எங்கெல்லாம் பிரசங்கித்தாரோ அங்கெல்லாம் மக்கள், கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அதைப் பார்த்த இயேசு, “அறுவடை அதிகமாக இருக்கிறது” என்று சொன்னார். ஆம், அறுவடை வேலைக்கு நிறைய ஆட்கள் தேவைப்பட்டார்கள்.

2 பிரசங்க வேலையை விரிவுபடுத்த இயேசு ஏற்பாடு செய்தார். எப்படி? “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதற்காக” அவருடைய 12 அப்போஸ்தலர்களை அனுப்புவதன் மூலம் அதைச் செய்தார். (லூக். 9:1, 2) இந்த வேலையைச் செய்வது சம்பந்தமாக அப்போஸ்தலர்களின் மனதில் பல கேள்விகள் எழும்பியிருக்கலாம். இந்த வேலைக்காக அவர்களை அனுப்புவதற்கு முன், இயேசு ஒரு விஷயத்தைச் செய்தார். தன்னுடைய பரலோகத் தகப்பன் தனக்குப் பயிற்சி கொடுத்ததுபோல அவரும் தன்னுடைய அப்போஸ்தலர்களுக்கு அன்போடு பயிற்சி கொடுத்தார்.

3 இப்போது, நம் மனதிலும் பல கேள்விகள் வரலாம்: தன்னுடைய தகப்பனிடமிருந்து இயேசுவுக்கு என்ன பயிற்சி கிடைத்தது? இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களுக்கு என்ன பயிற்சி கொடுத்தார்? தன்னைப் பின்பற்றுகிறவர்கள் நன்றாக ஊழியம் செய்வதற்கு மேசியானிய ராஜா நம் காலத்திலும் பயிற்சி கொடுத்திருக்கிறாரா? அதை அவர் எப்படிக் கொடுத்திருக்கிறார்?

“தகப்பன் எனக்குக் கற்றுக்கொடுத்தபடியே . . . பேசுகிறேன்”

4. தன்னுடைய தகப்பனிடமிருந்து இயேசுவுக்கு எப்போது, எங்கே பயிற்சி கிடைத்தது?

4 தன்னுடைய தகப்பன்தான் எல்லாவற்றையும் தனக்குக் கற்றுக்கொடுத்தார் என்பதை இயேசு வெளிப்படையாகச் சொன்னார். இயேசு ஊழியம் செய்த காலத்தில், “தகப்பன் எனக்குக் கற்றுக்கொடுத்தபடியே இந்த விஷயங்களைப் பேசுகிறேன்” என்று சொன்னார். (யோவா. 8:28) இயேசுவுக்கு எப்போது, எங்கே பயிற்சி கிடைத்தது? கடவுளுடைய முதல் மகனாகப் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே இயேசுவுக்குப் பயிற்சி கிடைக்க ஆரம்பித்தது. (கொலோ. 1:15) பரலோகத்தில், ‘மகத்தான போதகரான’ தன்னுடைய தகப்பனின் பக்கத்தில் இருந்து, அவர் சொன்னதையும் செய்ததையும் கோடானுகோடி யுகங்களாக இயேசு கவனித்து வந்தார். (ஏசா. 30:20) அதனால், தன்னுடைய தகப்பனின் குணங்களையும் செயல்களையும் நோக்கங்களையும் பற்றி நிறைய கற்றுக்கொண்டார்.

5. தன்னுடைய மகன் பூமியில் செய்ய வேண்டியிருந்த ஊழிய வேலை சம்பந்தமாக அவருக்கு யெகோவா என்ன சொல்லிக்கொடுத்தார்?

5 சமயம் வந்தபோது, பூமியில் இயேசு செய்ய வேண்டியிருந்த ஊழிய வேலைக்கான பயிற்சியை யெகோவா கொடுத்தார். மகத்தான போதகரான யெகோவாவுக்கும் அவருடைய முதல் மகனான இயேசுவுக்கும் இடையே இருந்த பந்தத்தைப் பற்றி விவரிக்கும் ஒரு தீர்க்கதரிசனத்தைக் கவனியுங்கள். (ஏசாயா 50:4, 5-ஐ வாசியுங்கள்.) யெகோவா தன்னுடைய மகனை “தினமும் காலையில்” எழுப்பியதாக அந்தத் தீர்க்கதரிசனம் சொல்கிறது. ஒரு ஆசிரியர் தன்னுடைய மாணவனுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக அவனை விடியற்காலையில் எழுப்புவதைப் போல இது இருக்கிறது. அதைப் பற்றி ஒரு பைபிள் ஆராய்ச்சிப் புத்தகம் இப்படிச் சொல்கிறது: “யெகோவா . . . ஒரு மாணவனை பள்ளிக்குக் கூட்டிக்கொண்டு போவது போல அவரை [இயேசுவை] கூட்டிக்கொண்டுபோய் எதைப் பிரசங்கிக்க வேண்டும், எப்படிப் பிரசங்கிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார்.” அந்தப் பரலோக “பள்ளியில்” தன்னுடைய மகனுக்கு “எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும்” யெகோவா கற்றுக்கொடுத்தார். (யோவா. 12:49) எப்படிக் கற்பிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் தன்னுடைய மகனுக்குச் சொல்லிக்கொடுத்தார். a இயேசு பூமியில் இருந்தபோது தனக்குக் கிடைத்த பயிற்சியை நன்றாகப் பயன்படுத்தினார். ஊழியத்தை அவர் நன்றாகச் செய்ததோடு, தன்னைப் பின்பற்றுகிறவர்களும் அதை நன்றாகச் செய்ய பயிற்சி கொடுத்தார்.

6, 7. (அ) இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களுக்கு என்ன பயிற்சி கொடுத்தார், என்ன செய்வதற்கு அது அவர்களைத் தயார்படுத்தியது? (ஆ) இன்றும் தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு என்ன பயிற்சி கிடைக்கும்படி இயேசு செய்திருக்கிறார்?

6 ஆரம்பத்தில் சொன்னபடி, இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களுக்கு என்ன பயிற்சி கொடுத்தார்? ஊழியம் சம்பந்தமாக அவர் கொடுத்த சில குறிப்பான ஆலோசனைகளை மத்தேயு 10-ஆம் அதிகாரத்தில் பார்க்க முடியும். எங்கு பிரசங்கிக்க வேண்டும் (வசனங்கள் 5, 6), என்ன செய்தியை அறிவிக்க வேண்டும் (வசனம் 7), யெகோவாமீது ஏன் நம்பிக்கை வைக்க வேண்டும் (வசனங்கள் 9, 10), மக்களை எப்படி அணுக வேண்டும் (வசனங்கள் 11-13), எதிர்ப்பை எப்படிச் சமாளிக்க வேண்டும் (வசனங்கள் 14, 15), துன்புறுத்தப்படும்போது என்ன செய்ய வேண்டும் (வசனங்கள் 16-23) போன்ற விஷயங்களும் அவற்றில் அடங்கும். b இயேசு கொடுத்த பயிற்சி அவருடைய அப்போஸ்தலர்களுக்கு ரொம்ப உதவியாக இருந்தது. முதல் நூற்றாண்டில், நல்ல செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையை முன்நின்று செய்ய அது அவர்களைத் தயார்படுத்தியது.

7 இன்றும் கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவான இயேசு தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு மிக முக்கியமான ஒரு வேலையைக் கொடுத்திருக்கிறார். ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிப்பதே’ அந்த வேலை. (மத். 24:14) இந்த மிக முக்கியமான வேலையைச் செய்ய நம் ராஜா நமக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறாரா? ஆம், கொடுத்திருக்கிறார். பரலோகத்தில் இருந்தே அவர் அதற்கு வழி செய்திருக்கிறார். மக்களுக்குப் பிரசங்கிப்பதற்கும் சபையில் கொடுக்கப்படுகிற விசேஷப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் பயிற்சி கிடைக்கும்படி செய்திருக்கிறார்.

நல்ல செய்தியை அறிவிக்க ஊழியர்களுக்குப் பயிற்சி

8, 9. (அ) தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் முக்கிய நோக்கம் என்ன? (ஆ) ஊழியத்தை இன்னும் திறமையாகச் செய்ய தேவராஜ்ய ஊழியப் பள்ளி உங்களுக்கு எப்படி உதவியிருக்கிறது?

8 நாம் நன்றாக ஊழியம் செய்வதற்காக, யெகோவாவின் அமைப்பு பல வருஷங்களாகவே மாநாடுகள் மற்றும் சபைக் கூட்டங்கள் மூலமாக, முக்கியமாக ஊழியக் கூட்டத்தின் மூலமாக, பயிற்சி கொடுத்து வந்திருக்கிறது. ஆனாலும், நம் அமைப்பை முன்நின்று வழிநடத்திய சகோதரர்கள் 1940-களிலிருந்து பயிற்சி கொடுப்பதற்காகவே சில பள்ளிகளை ஏற்பாடு செய்தார்கள்.

9 தேவராஜ்ய ஊழியப் பள்ளி. முந்தின அதிகாரத்தில் பார்த்தபடி இந்தப் பள்ளி 1943-ல் ஆரம்பிக்கப்பட்டது. மாணாக்கர்கள் சபைக் கூட்டங்களில் திறமையாகப் பேச்சுகளைக் கொடுக்க பயிற்சி கொடுப்பதுதான் இந்தப் பள்ளியின் நோக்கமாக இருந்ததா? இல்லை. தங்களுடைய பேச்சு திறனைப் பயன்படுத்தி, ஊழியத்தில் யெகோவாவைப் புகழ சகோதர சகோதரிகளுக்கு உதவுவதுதான் ஆரம்பத்திலிருந்தே இந்தப் பள்ளியின் முக்கிய நோக்கமாக இருந்தது. (சங். 150:6) பள்ளியில் சேர்ந்த சகோதர சகோதரிகள் எல்லாருமே இன்னும் திறமையான ஊழியர்களாக ஆவதற்கு இந்தப் பள்ளி உதவியது. இப்போது இப்படிப்பட்ட பயிற்சி வார நாட்களில் நடக்கும் கூட்டத்தின் மூலமாகக் கொடுக்கப்படுகிறது.

10, 11. கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள இப்போது யாருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது, இந்தப் பள்ளியின் நோக்கம் என்ன?

10 உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளி. இந்தப் பள்ளி பிப்ரவரி 1, 1943, திங்கள்கிழமை அன்று ஆரம்பமானது. உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மிஷனரி சேவை செய்வதற்கு பயனியர்களுக்கும் மற்ற முழுநேர ஊழியர்களுக்கும் பயிற்சி கொடுப்பதற்காகவே இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், அக்டோபர் 2011-லிருந்து விசேஷ முழுநேர சேவையில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்தப் பள்ளியில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. அதாவது, விசேஷ பயனியர்கள், பயணக் கண்காணிகள் மற்றும் அவர்களுடைய மனைவிகள், பெத்தேல் ஊழியர்கள், இந்தப் பள்ளியில் பயிற்சி பெறாத மிஷனரிகள் ஆகியோருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படுகிறது.

11 கிலியட் பள்ளியின் நோக்கம் என்ன? இந்தப் பள்ளியின் நீண்ட கால போதனையாளர் ஒருவர் இப்படிச் சொல்கிறார்: “மாணாக்கர்கள், கடவுளுடைய வார்த்தையை ஆழமாகப் படித்து தங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும், தங்களுடைய நியமிப்பில் வரும் சவால்களைச் சமாளிக்க தேவையான ஆன்மீக குணங்களை வளர்த்துக்கொள்ளவும் உதவுவது இந்தப் பள்ளியின் நோக்கம். அதுமட்டுமல்ல, நல்ல செய்தியை அறிவிக்கும் வேலையில் இன்னும் அதிகமாக ஈடுபட வேண்டுமென்ற எண்ணத்தை மாணாக்கர்களின் மனதில் பதிய வைப்பதே இந்தப் பள்ளியின் முக்கியமான நோக்கம்.”—எபே. 4:11.

12, 13. கிலியட் பள்ளி, உலகளாவிய பிரசங்க வேலைக்கு எப்படி உதவியிருக்கிறது? உதாரணம் கொடுங்கள்.

12 கிலியட் பள்ளி, உலகளாவிய பிரசங்க வேலைக்கு எப்படி உதவியிருக்கிறது? 1943-லிருந்து 8,500-க்கும் அதிகமான மாணவர்கள் இந்தப் பள்ளியில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். c இப்படிப் பயிற்சி பெற்ற மிஷனரிகள் 170-க்கும் அதிகமான நாடுகளில் சேவை செய்திருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்குக் கிடைத்த பயிற்சியைச் சிறந்த விதத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்... ஊழியம் செய்வதில் சிறந்த முன்மாதிரிகளாக இருந்திருக்கிறார்கள்... தங்களைப் போல ஊழியம் செய்ய மற்றவர்களுக்கும் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். நிறைய சமயங்களில், பிரஸ்தாபிகளே இல்லாத இடங்களில் அல்லது கொஞ்ச பிரஸ்தாபிகள் மட்டுமே இருந்த இடங்களில் மிஷனரிகள் முன்நின்று ஊழிய வேலையைச் செய்திருக்கிறார்கள்.

13 ஜப்பானில் என்ன நடந்தது என்று கவனியுங்கள். இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் ஊழிய வேலை ஏறக்குறைய நின்றுவிட்டது. ஆகஸ்ட் 1949-ல் 10-க்கும் குறைவான பிரஸ்தாபிகள்தான் அங்கே இருந்தார்கள். ஆனால், சீக்கிரத்தில் கிலியட் பயிற்சி பெற்ற மிஷனரிகள் அங்கு நியமிக்கப்பட்டார்கள். அந்த வருஷத்தின் முடிவில், 13 மிஷனரிகள் அங்கு சுறுசுறுப்பாக ஊழியம் செய்துகொண்டிருந்தார்கள். இன்னும் நிறைய மிஷனரிகள் அங்கு நியமிக்கப்பட்டார்கள். ஆரம்பத்தில் அந்த மிஷனரிகள் பெரிய பெரிய நகரங்களில் ஊழியம் செய்தார்கள். பிற்பாடு, மற்ற நகரங்களிலும் ஊழியம் செய்தார்கள். அந்த மிஷனரிகள், தங்களுடைய பைபிள் படிப்புகளையும் மற்றவர்களையும் பயனியர் ஊழியம் செய்ய மனமார உற்சாகப்படுத்தினார்கள். அவர்களுடைய முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைத்தன. இன்று ஜப்பானில் 2,16,000 யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள். அவர்களில் 83,000-க்கும் அதிகமானவர்கள் பயனியர்கள்! d

14. பைபிள் பள்ளிகள் எதற்கு மிகச் சிறந்த அத்தாட்சியாக இருக்கின்றன? (பக்கம்188-லுள்ள “ கடவுளுடைய அரசாங்கத்தின் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கும் பள்ளிகள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

14 மற்ற பைபிள் பள்ளிகள். பயனியர் பயிற்சிப் பள்ளி, கிறிஸ்தவத் தம்பதிகளுக்கான பைபிள் பள்ளி, மணமாகாத சகோதரர்களுக்கான பைபிள் பள்ளி ஆகியவை ஆன்மீக விதத்தில் முன்னேறவும் நல்ல செய்தியை அறிவிப்பதில் முன்மாதிரிகளாக இருக்கவும் நிறைய பேருக்கு உதவியிருக்கின்றன. e ஊழியத்தை முழுமையாகச் செய்ய தன்னைப் பின்பற்றுகிறவர்களை நம் ராஜா தயார்படுத்துகிறார் என்பதற்கு இந்த எல்லா பள்ளிகளும் மிகச் சிறந்த அத்தாட்சி.—2 தீ. 4:5.

விசேஷப் பொறுப்புகளை நிறைவேற்ற சகோதரர்களுக்குப் பயிற்சி

15. பொறுப்பிலுள்ள சகோதரர்கள் இயேசுவைப் போல என்ன செய்ய விரும்புகிறார்கள்?

15 இயேசுவுக்குக் கடவுள் கற்றுக்கொடுத்ததாக ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில் பார்த்தோம். “சோர்ந்துபோனவர்களிடம் எப்படி ஆறுதலாக பேசுவது” என்று அந்தப் பரலோக “பள்ளியில்” அவர் கற்றுக்கொண்டார். (ஏசா. 50:4) கற்றுக்கொண்ட விஷயங்களின்படி இயேசு நடந்தார். அவர் பூமியிலிருந்தபோது, ‘உழைத்துக் களைத்துப்போனவர்களுக்கும், பாரமான சுமையைச் சுமக்கிறவர்களுக்கும்’ புத்துணர்ச்சி அளித்தார். (மத். 11:28-30) இயேசுவைப் போலவே, பொறுப்பிலுள்ள சகோதரர்களும் சபையில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்க விரும்புகிறார்கள். தகுதியுள்ள சகோதரர்கள் இன்னும் சிறந்த விதத்தில் சபையாருக்கு உதவி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட சில பள்ளிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

16, 17. ராஜ்ய ஊழியப் பள்ளியின் நோக்கம் என்ன? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)

16 ராஜ்ய ஊழியப் பள்ளி. இந்தப் பள்ளியின் முதல் வகுப்பு, நியு யார்க்கிலுள்ள சவுத் லான்சிங்கில் மார்ச் 9, 1959-ல் ஆரம்பமானது. இந்தப் பள்ளி, ஒரு மாதத்துக்கு நடந்தது. இதில் கலந்துகொள்ளும்படி பயணக் கண்காணிகளும், சபை ஊழியர்களும் (இப்போது மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர்) அழைக்கப்பட்டார்கள். பிற்பாடு, இந்தப் பள்ளியின் பாடங்கள் ஆங்கிலத்திலிருந்து மற்ற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன. அதனால், கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் இருக்கிற சகோதரர்களுக்கு இந்தப் பள்ளியின் மூலம் பயிற்சி கிடைக்க ஆரம்பித்தது. f

சகோதரர் லாயிட் பாரி, ராஜ்ய ஊழியப் பள்ளியில் கற்றுக்கொடுக்கிறார், ஜப்பான், 1970

17 ராஜ்ய ஊழியப் பள்ளியின் நோக்கத்தைப் பற்றி யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 1962 இப்படிச் சொல்கிறது: “இந்த பிஸியான உலகத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் கண்காணியாக இருக்கும் ஒரு சகோதரர், தன் வாழ்க்கையை ஒழுங்கமைக்க முடிந்தவராக இருக்க வேண்டும். அப்போதுதான் சபையில் இருக்கும் எல்லாரையும் அவரால் சரியாகக் கவனித்துக்கொள்ள முடியும். சபைக்கு ஒரு ஆசீர்வாதமாகவும் இருக்க முடியும். அதேசமயத்தில், சபைக்காகவே நேரத்தைச் செலவழித்துக்கொண்டு குடும்பத்தைக் கவனிக்காமல் இருந்துவிடக் கூடாது. இந்த விஷயத்தில் அவர் தெளிந்த புத்தியுள்ளவராக இருக்க வேண்டும். ஒரு கண்காணி என்ன செய்ய வேண்டும் என்று பைபிள் எதிர்பார்க்கிறதோ, அதன்படி செய்ய ராஜ்ய ஊழியப் பள்ளி சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறது. இந்தப் பள்ளியில் கலந்துகொள்வது, உலகம் முழுவதும் இருக்கிற சபை ஊழியர்களுக்குக் கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பு!”—1 தீ. 3:1-7; தீத். 1:5-9.

18. கடவுளுடைய மக்கள் எல்லாருமே ராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து எப்படி நன்மை அடைந்திருக்கிறார்கள்?

18 கடவுளுடைய மக்கள் எல்லாருமே ராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து நன்மை அடைந்திருக்கிறார்கள். எப்படிச் சொல்லலாம்? இந்தப் பள்ளியில் பயிற்சி பெற்ற மூப்பர்களும் உதவி ஊழியர்களும் பள்ளியில் கற்றுக்கொண்ட விஷயங்களின்படி நடப்பதால், இயேசுவைப் போலவே சபையாருக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறார்கள். ஒரு அன்பான மூப்பர் அல்லது உதவி ஊழியர் நீங்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்கும்போது... உங்களிடம் கனிவாகப் பேசும்போது... உங்களைச் சந்தித்து உற்சாகப்படுத்தும்போது... உங்களுக்குச் சந்தோஷமாக இருக்கும், இல்லையா? (1 தெ. 5:11) இப்படிப்பட்ட தகுதியுள்ள சகோதரர்கள் சபைக்கு ஒரு பெரிய ஆசீர்வாதம்!

19. போதனாக் குழு மேற்பார்வை செய்கிற மற்ற பள்ளிகள் யாவை, இந்தப் பள்ளிகள் என்ன செய்ய உதவுகின்றன?

19 மற்ற பைபிள் பள்ளிகள். அமைப்பில் பலவிதமான பொறுப்புகளில் இருக்கிற சகோதரர்களுக்குப் பயிற்சி அளிக்கிற வேறு பள்ளிகளையும் ஆளும் குழுவின் போதனாக் குழு மேற்பார்வை செய்கிறது. பொறுப்பில் இருக்கிற சகோதரர்கள், அதாவது சபை மூப்பர்கள், பயணக் கண்காணிகள், கிளை அலுவலக அங்கத்தினர்கள் எல்லாரும் தங்களுடைய பொறுப்புகளைத் திறம்பட செய்வதற்கு இந்தப் பள்ளிகள் உதவுகின்றன. பைபிள் சார்ந்த இந்தப் பள்ளிகள், யெகோவாவோடு தங்களுக்கு இருக்கும் பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள இந்தச் சகோதரர்களை உற்சாகப்படுத்துகின்றன. அதோடு, தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள யெகோவாவின் சொத்தாகிய மந்தையிடம் பைபிள் நியமங்களின்படி நடந்துகொள்ளவும் உற்சாகப்படுத்துகின்றன.—1 பே. 5:1-3.

மலாவியில் நடந்த முதல் ஊழியப் பயிற்சி பள்ளி, 2007

20. எல்லாரும் “யெகோவாவினால் கற்பிக்கப்பட்டிருப்பார்கள்” என்று இயேசுவால் ஏன் சொல்ல முடிந்தது, நீங்கள் என்ன செய்யத் தீர்மானமாக இருக்கிறீர்கள்?

20 தன்னைப் பின்பற்றுகிறவர்கள் சிறந்த பயிற்சி பெற்றவர்களாக இருக்கும்படி மேசியானிய ராஜா பார்த்துக்கொள்கிறார். நாம் ஏற்கெனவே பார்த்தது போல, பயிற்சி கொடுப்பதை ஆரம்பித்து வைத்தவர் யெகோவாதான். அவர் தன்னுடைய மகனுக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார்; மகன், தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார். அதனால்தான், எல்லாரும் “யெகோவாவினால் கற்பிக்கப்பட்டிருப்பார்கள்” என்று இயேசுவால் சொல்ல முடிந்தது. (யோவா. 6:45; ஏசா. 54:13) நாம் பயிற்சி பெறுவதற்கு நம் ராஜா செய்திருக்கும் ஏற்பாடுகளிலிருந்து முழுமையாக நன்மை அடைய தீர்மானமாக இருக்க வேண்டும். ஆன்மீக விதத்தில் நம்மைப் பலமாக வைத்துக்கொள்ள உதவுவதுதான் இந்த எல்லா பயிற்சிகளின் முக்கியமான நோக்கம் என்பதை மனதில் வைக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் ஊழியத்தை முழுமையாகச் செய்ய முடியும்.

a எப்படிக் கற்றுக்கொடுப்பது என்று தகப்பன்தான் மகனுக்குச் சொல்லித்தந்தார் என்பது நமக்கு எப்படித் தெரியும்? இதை யோசித்துப் பாருங்கள்: மக்களுக்குக் கற்றுக்கொடுக்கும்போது இயேசு நிறைய உவமைகளைப் பயன்படுத்தினார். அவர் அப்படிச் செய்வார் என்று பூமியில் அவர் பிறப்பதற்கு முன்பே தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்டிருந்தது. (சங். 78:2; மத். 13:34, 35) அந்தத் தீர்க்கதரிசனத்தின் ஊற்றுமூலரான யெகோவா, தன்னுடைய மகன் உவமைகளையும் உதாரணங்களையும் பயன்படுத்தி போதிப்பார் என்று முன்கூட்டியே தீர்மானித்திருந்தார்.—2 தீ. 3:16, 17.

b சில மாதங்களுக்குப் பிறகு ஊழியம் செய்ய இயேசு, “70 பேரை நியமித்து . . . [அவர்களை] இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.” அவர்களுக்குப் பயிற்சியும் கொடுத்தார்.—லூக். 10:1-16.

c சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை கிலியட் பள்ளியில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

d கிலியட் பள்ளியில் பயிற்சி பெற்ற மிஷனரிகளால், உலகம் முழுவதும் ஊழிய வேலையில் எந்தளவு பலன்கள் கிடைத்திருக்கின்றன என்பதைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய அரசாங்கத்தை அறிவிப்போர் என்ற ஆங்கிலப் புத்தகத்தில் 23-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்.

e கடைசியாகச் சொல்லப்பட்டுள்ள இரண்டு பள்ளிகளுக்குப் பதிலாக இப்போது ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி நடைபெறுகிறது.

f இப்போது, ராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து மூப்பர்கள் எல்லாருமே நன்மை அடைகிறார்கள். சில வருஷங்களுக்கு ஒருமுறை இந்தப் பள்ளி நடைபெறுகிறது. இந்தப் பள்ளி நடைபெறும் காலப்பகுதியும் வித்தியாசப்படுகிறது. 1984 முதல், உதவி ஊழியர்களும் இந்தப் பள்ளியிலிருந்து பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.