“உம்முடைய பெயர் பரிசுத்தப்படுவதாக”—எந்தப் பெயர்?
“உம்முடைய பெயர் பரிசுத்தப்படுவதாக”—எந்தப் பெயர்?
நீங்கள் மத பக்தியுள்ள ஒருவரா? அவ்வாறெனில், சந்தேகமில்லாமல், மற்றப் பலரைப்போல் நீங்கள், ஈடற்றக் கடவுள் இருப்பதில் நம்பிக்கை உடையோராக இருக்கிறீர்கள். மேலும், இயேசு தம்மைப் பின்பற்றினோருக்குக் கற்பித்ததும், கர்த்தருடைய ஜெபம், அல்லது பரமண்டல ஜெபம் எனப்படுவதுமான, அந்தக் கடவுளை நோக்கிச் செய்யும் பலரறிந்துள்ள ஜெபத்திற்குப் பெரும் மதிப்புடையோராகவும் நீங்கள் பெரும்பாலும் இருக்கலாம். அந்த ஜெபம் பின்வருமாறு தொடங்குகிறது: “பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய பெயர் பரிசுத்தப்படுவதாக.”—மத்தேயு 6:9, நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்.
கடவுளுடைய பெயர் ‘புனிதப்படுத்தப்படுவதை,’ அல்லது பரிசுத்தப்படுவதை ஏன் இயேசு இந்த ஜெபத்தில் முதல் வைத்தாரென நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? அதன்பின், அவர் மற்றக் காரியங்களை, கடவுளுடைய ராஜ்யம் வருதல், கடவுளுடைய சித்தம் பூமியில் செய்யப்படுதல் மற்றும் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுதல் போன்றவற்றைக் குறிப்பிட்டார். இந்த மற்ற வேண்டுகோள்கள் முடிவில் பூமியில் நிலையான சமாதானத்தையும் மனிதவர்க்கத்துக்கு நித்திய ஜீவனையும் குறிக்கும். அதைப் பார்க்கிலும் அதிக முக்கியமான எதையாவது நீங்கள் எண்ணிப்பார்க்க முடியுமா? இருப்பினும், கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுவதற்காகவே முதலாவதாக ஜெபிக்கும்படி இயேசு நமக்குக் கூறினார்.
கடவுளுடைய பெயரைத் தங்கள் ஜெபங்களில் முதல் வைக்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றினோருக்குக் கற்பித்தது வெறும் தற்செயலாக அல்ல. அதை அவர் தம்முடைய சொந்த ஜெபங்களில் திரும்பத்திரும்பக் குறிப்பிட்டதால், அந்தப் பெயர் அவருக்கு அதிமுக்கியமானதாக இருந்ததென்பது தெளிவாயுள்ளது. ஒரு சந்தர்ப்பத்தில், அவர் வெளிப்படையாகக் கடவுளிடம் ஜெபிக்கையில்: “தந்தாய், உமது பெயரை மகிமைப்படுத்தும்!” என்று யாவரும் கேட்கச் சொன்னார். கடவுள்தாமே பின்வருமாறு பதிலளித்தார்: “மகிமைப்படுத்தினேன், மீண்டும் மகிமைப்படுத்துவேன்.”—அருளப்பர் 12:28, தமிழ்க் கத்தோலிக்க பைபிள். (திருத்திய பதிப்பு)
இயேசு மரித்ததற்கு முந்தின சாயங்காலம், தம்முடைய சீஷர்களுக்குக் கேட்குமாறு கடவுளிடம் ஜெபித்தார், மறுபடியும் ஒருமுறை அவர் கடவுளுடைய பெயரின் முக்கியத்துவத்தை சிறப்பித்துக் கூறினதை அவர்கள் கேட்டார்கள். அவர் சொன்னதாவது: “உலகிலிருந்து பிரித்து நீர் எனக்கு அளித்த மக்களுக்கு உமது பெயரை வெளிப்படுத்தினேன்.” பின்னால், அவர் திரும்பவும் இவ்வாறு கூறினார்: “உமது பெயரை அவர்களுக்கு அறிவித்தேன், இன்னும் அறிவிப்பேன்.”—அருளப்பர் 17:6, 26, கத்.பை.
கடவுளுடைய பெயர் ஏன் இயேசுவுக்கு அவ்வளவு முக்கியமானதாக இருந்தது? அதன் பரிசுத்தப்படுதலுக்காக ஜெபிக்கும்படி நமக்குச் சொல்வதால், அது நமக்கும் முக்கியமானதென அவர் ஏன் காட்டினார்? இதைப் புரிந்துகொள்ள, பைபிள் காலங்களில் பெயர்கள் எவ்வாறு கருதப்பட்டனவென்பதை நாம் தெரிந்துணர வேண்டும்.
பைபிள் காலங்களில் பெயர்கள்
பொருட்களுக்குப் பெயரிடும்படியான ஓர் ஆசையை யெகோவா தேவன் மனிதனில் வைத்ததாகத் தெரிகிறது. அந்த முதல் மனிதன், ஆதாம் என்ற ஒரு பெயரை உடையவனாக இருந்தான். படைப்பின் வரலாற்றில், ஆதாம் செய்வதாக அறிவிக்கப்படும் முதல் காரியங்களில் ஒன்று, மிருகங்களுக்குப் பெயரிடுவதே. கடவுள் ஆதாமுக்கு ஒரு மனைவியைக் கொடுத்தபோது, உடனடியாக ஆதாம் அவளை “மனுஷி” (எபிரெயுவில், இஷ்ஷா [’Ish·shahʹ]) என்றழைத்தான். பின்னால், அவன் அவளுக்கு “உயிருள்ளவள்” என்று பொருள்படும் ஏவாள் என்ற பெயரைக் கொடுத்தான், ஏனெனில் ‘அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயாக’ வேண்டியிருந்தது. (ஆதியாகமம் 2:19, 23; 3:20) இன்றுங்கூட ஆட்களுக்குப் பெயர்களை வைக்கும் இந்த வழக்கத்தைப் பின்பற்றுகிறோம். நிச்சயமாகவே, பெயர்களில்லாமல் சமாளிப்பது எவ்வாறெனக் கற்பனைசெய்வதும் கடினமாயுள்ளது.
எனினும், இஸ்ரவேலரின் காலங்களில், பெயர்கள் வெறும் பெயர் குறிப்புச்சீட்டுகளாக இல்லை. அவை ஏதோவொன்றைக் குறித்தன. உதாரணமாக, “நகைப்பு” என்ற ஈசாக்கின் பெயர், அவனுடைய வயதுமுதிர்ந்த பெற்றோர், தங்களுக்கு ஆதியாகமம் 17:17, 19; 18:12) ஏசாவின் பெயர் “ரோமம் மிகுந்தவன்” எனப் பொருள்கொண்டு, உடற்பண்பை விவரித்தது. “சிவப்பு,” அல்லது “செந்நிறம்,” எனப்படும் ஏதோம் என்ற அவனுடைய மற்றப் பெயர், அவன் தன் சேஷ்ட புத்திர பாகத்தை ஒரு குவளை சிவப்புக் கூழுக்கு விற்றுப்போட்டதன் நினைப்பூட்டுதலாக இருந்தது. (ஆதியாகமம் 25:25, 30-34; 27:11; 36:1) யாக்கோபு தன் இரட்டைப்பிறப்பு சகோதரன், ஏசாவைவிட சிறிதே இளைஞனாக இருந்தபோதிலும், ஏசாவிடமிருந்து பிறப்புரிமையை விலைக்கு வாங்கிக்கொண்டான் மற்றும் முதற்பிறப்போருக்குரிய ஆசீர்வாதத்தையும் தன் தகப்பனிடமிருந்து பெற்றுக்கொண்டான். பிறப்பிலிருந்தே, யாக்கோபுடைய பெயரின் பொருள் “குதிங்காலைப் பிடித்துக்கொள்ளுதல்” அல்லது “மோசம்போக்குபவன்” என்பதாக இருந்தது. (ஆதியாகமம் 27:36) அவ்வாறே சாலொமோனின் பெயரும் “சமாதானமாயிருத்தல்” என பொருள்பட்டது, அவனுடைய ஆட்சியின்போது இஸ்ரவேலர் சமாதானத்தையும் செழுமையையும் அனுபவித்தனர்.—1 நாளாகமம் 22:9.
ஒரு பிள்ளைப் பிறக்கப்போவதை முதன்முதலில் கேட்டபோது சிரித்ததை நினைப்பூட்டியது. (இவ்வாறு, தி இல்லஸ்ட்ரேட்டட் பைபிள் டிக்ஷனரி (புத்தகம் 1, பக்கம் 572) பின்வருமாறு கூறுகிறது: “ப[ழைய] ஏ[ற்பாட்டில்] ‘பெயர்’ என்ற சொல்லைப்பற்றிய ஓர் ஆராய்ச்சி, எபிரெயுவில் அது எவ்வளவு அதிகத்தைக் குறிக்கிறதென்பதை வெளிப்படுத்துகிறது. அந்தப் பெயர் வெறும் பெயர் குறிப்புச்சீட்டு அல்ல, அதற்குரியவருடைய உண்மையான பண்பியல்பைக் குறிப்பிடத்தக்கதாய் இருந்தது.”
முழுக்காட்டுபவனான யோவானின் மற்றும் இயேசுவின் எதிர்காலத் தாய்மார்களாகும்படி இருந்தவர்களுக்கு, அவர்களுடைய குமாரரின் பெயர்கள் என்னவாக இருக்கவேண்டுமென, ஒரு தூதன் மூலம் கடவுள் கட்டளையிட்டதில், பெயர்களை முக்கியமானவையாகக் கடவுள் கருதுகிறார் என்ற உண்மை காணப்படுகிறது. (லூக்கா 1:13, 31) மேலும் சிலசமயங்களில், தம்முடைய நோக்கத்தில் ஆட்கள் வகிக்கவேண்டிய இடத்தை அவர்களுக்குக் காட்டுவதற்கு, அவர்களுடைய பெயரை அவர் மாற்றினார், அல்லது அவர்களுக்குக் கூடுதலான பெயர்களைக் கொடுத்தார். உதாரணமாக, தம்முடைய ஊழியன் ஆபிராம் (“பெரு மகிழ்ச்சிக்குரிய தகப்பன்”) பல ஜாதியாருக்குத் தகப்பனாவாரென கடவுள் முன்னறிவித்தபோது, அவருடைய பெயரை ஆபிரகாம் (“திரளான ஜாதிகளுக்குத் தகப்பன்”) என அவர் மாற்றினார். மேலும் ஆபிரகாமின் மனைவி, ஆபிரகாமின் வித்தின் தாயாக இருப்பாளாகையால், அவள் பெயர் சாராய் (“வாதிடுபவள்”) என்பதைச் சாராள் (“இளவரசி”) என அவர் மாற்றினார்.—ஆதியாகமம் 17:5, 15, 16; ஒப்பிடுங்கள்: ஆதியாகமம் 32:28; 2 சாமுவேல் 12:24, 25.
இயேசுவுங்கூட, பெயர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தார், பேதுருவுக்கு ஓர் ஊழிய சிலாக்கியத்தை அளித்தபோது அவருடைய பெயரை அவர் குறிப்பிட்டார். (மத்தேயு 16:16-19) ஆவி சிருஷ்டிகளுக்குங்கூட பெயர்கள் இருக்கின்றன. காபிரியேல் மற்றும் மிகாவேல் என்ற இரண்டு பெயர்கள் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளன. (லூக்கா 1:26; யூதா 9) நட்சத்திரங்கள், கிரகங்கள், நகரங்கள், மலைகள், நதிகள் போன்ற உயிரற்ற இத்தகையவற்றிற்கு மனிதன் பெயர்களைக் கொடுக்கையில், அவன் தன் சிருஷ்டிகரின் மாதிரியையே வெறுமனே பின்பற்றுகிறான். உதாரணமாக, எல்லா நட்சத்திரங்களையும் கடவுள் பெயர்சொல்லி அழைக்கிறாரென பைபிள் நமக்குச் சொல்கிறது.—ஏசாயா 40:26.
ஆம், பெயர்கள் கடவுளுடைய கண்களில் முக்கியத்துவம் உடையனவாக இருக்கின்றன, ஆட்களையும் பொருட்களையும் பெயர்களைக்கொண்டு அடையாளம் கண்டுகொள்ளும்படியான ஆவலை அவர் மனிதனில் வைத்தார். இவ்வாறு தூதர்களுக்கும், ஆட்களுக்கும், மிருகங்களுக்கும், அவற்றோடுகூட நட்சத்திரங்களுக்கும், உயிரற்ற மற்ற பொருட்களுக்கும் பெயர்கள் உண்டு. தம்மைப் பெயரில்லாமல் விடுவது இவையெல்லாவற்றையும் உண்டாக்கின சிருஷ்டிகருக்குப் பொருத்தமாக இருக்குமா? நிச்சயமாகவே இல்லை, முக்கியமாய் சங்கீதக்காரனின் பின்வரும் வார்த்தைகளைக் கருதுகையில்: “மாம்சதேகமுள்ள யாவும் [கடவுளுடைய] பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.”—சங்கீதம் 145:21.
தி நியூ இன்டர்நேஷனல் டிக்ஷனரி ஆஃப் நியூ டெஸ்டமென்ட் தியாலஜி (புத்தகம் 2, பக்கம் 649) பின்வருமாறு கூறுகிறது: “கடவுள் ஒரு பெயர் இல்லாதவராக இல்லை என்ற இந்த உண்மை, பைபிள்பூர்வ வெளிப்படுத்தலின் மிக அதிக அடிப்படையான மற்றும் இன்றியமையாத அம்சங்களில் ஒன்றாகும்: அவருக்கு ஒரு சொந்த பெயர் இருக்கிறது, அதைக்கொண்டு அவர் அழைக்கப்படலாம், அழைக்கப்படவும் வேண்டும்.” “பரலோகங்களில் இருக்கிற எங்கள் தகப்பனே, உம்முடைய பெயர் பரிசுத்தப்படுவதாக” என்று இயேசு தம்மைப் பின்பற்றினோருக்குக் கற்பித்தபோது நிச்சயமாகவே அந்தப் பெயரை மனதில் கொண்டிருந்தார்.—மத்தேயு 6:9, NW.
இந்த எல்லாவற்றையும் கருதுகையில், கடவுளுடைய பெயர் என்னவென அறிவது நமக்கு முக்கியமென்பது தெளிவாயுள்ளது. கடவுளுடைய சொந்த பெயர் உங்களுக்கு தெரியுமா?
கடவுளுடைய பெயர் என்ன?
ஆச்சரியம் என்னவெனில், கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளின் கோடிக்கணக்கான உறுப்பினர்களில் பெரும்பான்மையர் இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதைக் கடினமாகக் காணலாம். கடவுளுடைய பெயர் இயேசு கிறிஸ்து எனச் சிலர் சொல்வர். எனினும் இயேசு பின்வருமாறு சொன்னபோது வேறொருவரிடம் ஜெபித்துக்கொண்டிருந்தார்: “உலகிலிருந்து பிரித்து நீர் எனக்கு அளித்த மக்களுக்கு உமது பெயரை வெளிப்படுத்தினேன்.” (அருளப்பர் 17:6, கத்.பை.) குமாரன் தன் தகப்பனிடம் பேசுவதுபோல, அவர் பரலோகத்திலுள்ள கடவுளிடம் ஜெபித்துக்கொண்டிருந்தார். (யோவான் 17:1) அவருடைய பரலோகத் தகப்பனின் பெயரே “புனிதப்படுத்தப்பட,” “பரிசுத்தப்படுத்தப்பட” வேண்டியிருந்தது.
எனினும் தற்கால பைபிள் பல அந்தப் பெயரைக் கொண்டில்லை, மேலும், சர்ச்சுகளில் அதைப் பயன்படுத்துவது அரிது. ஆகவே, அது “புனிதப்படுத்தப்படுவதற்கு” பதிலாக, லட்சக்கணக்கான பைபிள் வாசகருக்கு அது இழக்கப்பட்டுப்போனதாக உள்ளது. பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் கடவுளுடைய பெயரைக் கையாண்ட முறைக்கு ஓர் உதாரணமாக, அது காணப்படுகிற ஒரு வசனத்தை மாத்திரமே கவனியுங்கள்: சங்கீதம் 83:18 (83:17, தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு). பின்வரும் நான்கு வெவ்வேறு பைபிள்களில் இந்த வசனம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் முறை இதுவே:
“கர்த்தர் என்ற பெயருடைய நீர் ஒருவரே, பூமி முழுவதின்மீதும் மகா உன்னதமானவர் என்று அவர்கள் அறியட்டும்.” (1952-ன் ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வர்ஷன்)
“நீர், ஆ நித்தியரே, நீரே உலகம் முழுவதிலும் மகா உன்னதக் கடவுள் என்று அவர்களுக்குக் கற்பிப்பதற்கு.” (1922-ன் எ நியூ டிரான்ஸ்லேஷன் ஆஃப் தி பைபிள், ஜேம்ஸ் மொஃபட் என்பவராலாகியது)
“அவர்கள் இதை அறியட்டும்: யாவே என்னும் இந்தப் பெயரைத் தாங்கும் நீர் ஒருவரே, முழு உலகத்திலும் மகா உன்னதமானவர்.” (1966-ன் கத்தோலிக்க ஜெரூசலம் பைபிள்)
“யேகோவா [ஜெஹோவா, 1611-ன் ஆதரைஸ்ட் வர்ஷன்] என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி.”
இந்த மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயர் ஏன் அவ்வளவு வேறுபட்டதாகத் தோன்றுகிறது? அவருடைய பெயர் கர்த்தரா, நித்தியரா, யாவே என்பதா, அல்லது யெகோவாவா? அல்லது இவை எல்லாம் ஏற்கத்தகுந்தவையா?
இதற்குப் பதிலளிக்க, பைபிள் தொடக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதப்படவில்லையென நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். பைபிள் எழுத்தாளர்கள் எபிரெயர்கள், அவர்கள் பெரும்பாலும் தங்கள் நாளின் எபிரெயு மற்றும் கிரேக்க மொழிகளில் எழுதினர். அந்தப் பூர்வ மொழிகளை நம்மில் பெரும்பான்மையர் பேசுகிறதில்லை. ஆனால் பைபிள் தற்கால மிகப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, கடவுளுடைய வார்த்தையை வாசிக்க விரும்புகையில் நாம் இந்த மொழிபெயர்ப்புகளைப் பயன்படுத்தலாம்.
கிறிஸ்தவர்கள் பைபிளில் ஆழ்ந்த மதிப்புடையோராக இருக்கின்றனர், “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” என்று சரியாகவே நம்புகின்றனர். (2 தீமோத்தேயு 3:16) ஆகவே, பைபிளை மொழிபெயர்ப்பது மிகப் பெரும் பொறுப்பாயுள்ளது. பைபிளில் அடங்கியுள்ளவற்றில் ஒரு பாகத்தை எவராவது வேண்டுமென்றே மாற்றினால் அல்லது விட்டுவிட்டால், தேவாவியால் ஏவப்பட்ட வார்த்தையில் அவர் தலையிட்டு மாற்றம் செய்கிறார். இத்தகைய ஒருவருக்குப் பின்வரும் வேதப்பூர்வ எச்சரிக்கை பொருந்தும்: “ஒருவன் இவைகளோடு எதையாகிலுங் கூட்டினால் இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளைக் கடவுள் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வார்த்தைகளிலிருந்து எதையாகிலும் எடுத்துவிட்டால் அவன் பங்கைக் கடவுள் ஜீவவிருட்சத்திலிருந்து எடுத்துவிடுவார்.”—தரிசனம் 22:18, 19, திருத்திய மொழிபெயர்ப்பு; இதையும் பாருங்கள், உபாகமம் 4:2.
பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் பெரும்பான்மையர் சந்தேகமில்லாமல் பைபிளை மதிக்கின்றனர் மற்றும் இந்த நவீன சகாப்தத்தில் அதைப் புரிந்துகொள்ளத்தக்கதாக்கும்படி உள்ளப்பூர்வமாய் விரும்புகின்றனர். ஆனால் மொழிபெயர்ப்பாளர்கள் தேவாவியால் ஏவப்படுகிறதில்லை. மேலும், மதக் காரியங்களின்பேரில் அவர்கள் பெரும்பான்மையர் தீவிரமான கருத்துக்களை உடையோராக இருக்கின்றனர், மற்றும் சொந்த எண்ணங்களாலும் விருப்பங்களாலும் செல்வாக்குச் செலுத்தப்படலாம். ஆய்ந்து முடிவுசெய்வதில் மனிதயியல்பான பிழைகளை அல்லது தவறுகளையும் அவர்கள் செய்யலாம்.
ஆகவே சில முக்கிய கேள்விகளைக் கேட்க நமக்கு உரிமை உண்டு: கடவுளுடைய உண்மையான பெயர் என்ன? ஏன் வெவ்வேறு பைபிள் மொழிபெயர்ப்புகளில் கடவுளுக்கு வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன? இந்தக் கேள்விகளுக்குப் பதிலை உறுதிப்படுத்தினப்பின்பு, நம்முடைய முதல் பிரச்னைக்கு நாம் திரும்பலாம்: கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுவது ஏன் அவ்வளவு முக்கியம்?
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
தேவதூதர்கள், மக்கள், மிருகங்கள், நட்சத்திரங்களும் மற்ற உயிரில்லா பொருட்களுக்குங்கூட பெயர்கள் இருக்கின்றன. இந்த எல்லாவற்றையும் படைத்தவர் பெயரில்லாதவராக இருப்பது பொருத்தமாக இருக்குமா?
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
கடவுளுடைய பெயரை இயேசு தம்முடைய ஜெபங்களில் திரும்பத்திரும்பக் குறிப்பிட்டதால், அது அவருக்கு அதிமுக்கியமானதாக இருந்ததென்பது தெளிவாயுள்ளது