Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய பெயரும்‘புதிய ஏற்பாடும்’

கடவுளுடைய பெயரும்‘புதிய ஏற்பாடும்’

கடவுளுடைய பெயரும்‘புதிய ஏற்பாடும்’

எபிரெய வேதவாக்கியங்களான, ‘பழைய ஏற்பாட்டில்’ கடவுளுடைய பெயருக்குரிய இந்த இடம் அசைக்கமுடியாதது. யூதர்கள் அதை உச்சரிப்பதைக் கடைசியாக நிறுத்திவிட்டபோதிலும், பைபிளின் மிகப் பழைய கையெழுத்துப் பிரதிகளை அவர்கள் நகல்கள் எடுத்தபோது, அந்தப் பெயரை நீக்காதபடி அவர்களுடைய மத நம்பிக்கைகள் அவர்களைத் தடுத்துவைத்தன. ஆகவே, எபிரெய வேதவாக்கியங்கள் கடவுளுடைய பெயரை வேறு எந்தப் பெயரைப் பார்க்கிலும் மிக அடிக்கடி அடங்கியதாய்க் கொண்டுள்ளது.

கிறிஸ்தவ கிரேக்க வேதவாக்கியங்களாகிய ‘புதிய ஏற்பாட்டை’ குறித்ததில், நிலைமை வேறுபட்டதாக உள்ளது. வெளிப்படுத்துதல் புத்தகத்தின் (பைபிளின் கடைசி புத்தகத்தின்) கையெழுத்துப் பிரதிகள், கடவுளுடைய பெயரை (“அல்லேலூயா” என்ற சொல்லில்) “யா” என்ற அதன் சுருக்கப்பட்ட உருவில் கொண்டுள்ளன. அதைத் தவிர, இன்று நம்மிடம் இருக்கும் மத்தேயுவிலிருந்து வெளிப்படுத்துதல் வரையான புத்தகங்களின் பூர்வ கிரேக்கக் கையெழுத்துப் பிரதிகள் ஒன்றும் கடவுளுடைய பெயரை முழுமையாகக் கொண்டில்லை. இது அந்தப் பெயர் அதில் இருக்கக்கூடாதென பொருள்படுகிறதா? இயேசுவைப் பின்பற்றினவர்கள் கடவுளுடைய பெயரின் முக்கியத்துவத்தை உணர்ந்ததும், கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுவதற்காக ஜெபிக்கும்படி இயேசு நமக்குக் கற்பித்ததுமான இந்த உண்மையைக் கருதுகையில் அது ஆச்சரியமூட்டுவதாக இருக்கும். ஆகவே என்ன நடந்தது?

இதைப் புரிந்துகொள்ள, இன்று நம்மிடமிருக்கும் கிறிஸ்தவ கிரேக்க வேதவாக்கியங்களின் கையெழுத்துப் பிரதிகள் மூலக் கையெழுத்துப் பிரதிகள் அல்லவென்பதை நினைவில் வையுங்கள். மத்தேயுவும், லூக்காவும், பைபிள் எழுத்தாளர்களான மற்றவர்களும்தாமே நேரில் எழுதின புத்தகங்கள் நன்றாய்ப் பயன்படுத்தப்பட்டு விரைவில் தேய்ந்து கிழிந்தன. ஆகவே, நகல்கள் எடுக்கப்பட்டன, அவையும் தேய்ந்து கிழிந்தபோது, அந்த நகல்களிலிருந்து மேலுமான நகல்கள் எடுக்கப்பட்டன. இதைத்தான் நாம் எதிர்பார்ப்போம், அந்த நகல்கள் பயன்படுத்தவே பொதுவாய் எடுக்கப்பட்டதால், பாதுகாத்து வைக்கப்படவில்லை.

கிறிஸ்தவ கிரேக்க வேதவாக்கியங்களின் ஆயிரக்கணக்கான நகல்கள் இன்று இருக்கின்றன, ஆனால் அவற்றில் பெரும்பான்மையானவை நம்முடைய பொது சகாப்தத்தின் நான்காம் நூற்றாண்டின்போது அல்லது அதன் பின்பு நகலெடுக்கப்பட்டன. இது ஒரு சாத்தியத்தைக் குறிப்பாகத் தெரிவிக்கிறது: கடவுளுடைய பெயர் விட்டுவிடப்படுவதில் விளைவடைந்த ஏதாவது அந்த நான்காம் நூற்றாண்டுக்கு முன்னால் கிறிஸ்தவ கிரேக்க வேதவாக்கியங்களின் மூலவாக்கியத்துக்கு நடந்ததா? ஏதோ நடந்ததென உண்மை நிகழ்ச்சிகள் நிரூபிக்கின்றன.

அந்தப் பெயர் அங்கே இருந்தது

அப்போஸ்தலன் மத்தேயு கடவுளுடைய பெயரைத் தன் சுவிசேஷத்தில் உள்ளடங்கியிருக்கச் செய்தாரென நாம் நிச்சயமாயிருக்கலாம். ஏன்? ஏனெனில் அவர் அதை முதன்முதலில் எபிரெயுவில் எழுதினார். நான்காம் நூற்றாண்டில், லத்தீன் வல்கேட் என்பதை மொழிபெயர்த்த ஜெரோம், பின்வருமாறு அறிவித்தார்: “லேவி எனப்படுகிறவரும், ஆயக்காரனாக இருந்ததிலிருந்து ஓர் அப்போஸ்தலனானவருமான மத்தேயு, முதலாவதாகக் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை யூதேயாவில் எபிரெய மொழியில் எழுதினார் . . . அதன்பின் அதைக் கிரேக்கில் மொழிபெயர்த்தவர் யாரென போதியவாறு உறுதிப்படுத்தப்படுகிறதில்லை. மேலும், அந்த எபிரெயுதானே இந்நாள்வரை செசரியாவிலுள்ள நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.”

மத்தேயு எபிரெயுவில் எழுதினதால், அவர் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தவில்லை என்பது, முக்கியமாய்க் கடவுளுடைய பெயர் அடங்கிய ‘பழைய ஏற்பாட்டின்’ பாகங்களிலிருந்து மேற்கோள்கள் எடுத்துக் குறிப்பிட்டபோது அவ்வாறு பயன்படுத்தவில்லை என்பது நினைத்துப்பார்க்க முடியாதது. எனினும், பைபிளின் இரண்டாம் பாகத்தின் மற்ற எழுத்தாளர்கள் உலகமெங்குமுள்ள யாவருக்காகவும், அக்காலத்தின் அகில உலக மொழியாயிருந்த கிரேக்கில் எழுதினர். ஆகவே, அவர்கள் மூல எபிரெய எழுத்துக்களிலிருந்து மேற்கோள்கள் எடுக்கவில்லை, கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பிலிருந்தே மேற்கோள்கள் எடுத்துக் குறிப்பிட்டனர். மத்தேயுவின் சுவிசேஷமுங்கூட முடிவில் கிரேக்கில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தக் கிரேக்க எழுத்துக்களில் கடவுளுடைய பெயர் காணப்பட்டிருக்குமா?

உண்மையில் இயேசுவின் நாளில் இருந்த இந்த செப்டுவஜின்ட் வர்ஷனின் மிகப் பழைய துண்டு துணுக்குகள் சில, நம்முடைய நாள்வரையாக அழியாமல் இருக்கின்றன, மேலும் அவற்றில் கடவுளுடைய சொந்த பெயர் காணப்பட்டது கவனிக்கத்தக்கதாக உள்ளது. தி நியூ இன்டர்நேஷனல் டிக்‍ஷனரி ஆஃப் நியூ டெஸ்டமென்ட் தியாலஜி (புத்தகம் 2, பக்கம் 512) பின்வருமாறு கூறுகிறது: “LXX [செப்டுவஜின்ட்டை] தொகுத்தவர்கள் ய்ஹ்வ்ஹ் (YHWH) என்பதை கைரியாஸ் என மொழிபெயர்த்தார்கள் என்ற எண்ணத்தின்பேரில் சமீப மூலவாக்கிய கண்டுபிடிப்புகள் சந்தேகத்தை உண்டாக்குகின்றன. இப்பொழுது நமக்குக் கிடைக்கக்கூடியவையாக உள்ள மிகப் பழைய செப்டுவஜின்ட் கையெழுத்துப் பிரதிகள் (துண்டுகள்) டெட்ரக்ராமட்டனை கி[ரே]க்க மூலவாக்கியத்தில் எபி[ரெயு] எழுத்துக்களில் எழுதப்பட்டதாகக் கொண்டுள்ளன. இந்த வழக்கம் கி.பி. முதல் நூற்றாண்டுகளில் ப[ழைய] [ற்பாட்டின்] பிந்திய யூத மொழிபெயர்ப்பாளர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.” ஆகையால், இயேசுவும் அவருடைய சீஷர்களும் வேதவாக்கியங்களை எபிரெயுவில் அல்லது கிரேக்கில், எதில் வாசித்திருந்தாலும், அவர்கள், கடவுளுடைய இந்தப் பெயரைக் கண்டிருப்பார்கள்.

அ.ஐ.மா. ஜார்ஜியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் ஹோவர்ட், இவ்வாறு பின்வரும் இந்தக் குறிப்பைக் கூறினார்: “புதிய ஏற்பாட்டு சர்ச் பயன்படுத்தினதும் மேற்கோளாக எடுத்துக் குறிப்பிட்டதுமான இந்தச் செப்டுவஜின்ட் கடவுளுடைய பெயரின் எபிரெயச் சொல்லமைப்பைக் கொண்டிருந்தபோது, புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் சந்தேகமில்லாமல் தங்கள் மேற்கோள்களில் இந்த டெட்ரக்ராமட்டனை உள்ளடங்கலாகக் கொண்டிருந்தனர்.” (பிப்ளிக்கல் ஆர்க்கியாலஜி ரிவ்யூ, மார்ச் 1978, பக்கம் 14) மற்றப்படி என்ன செய்ய அவர்களுக்கு அதிகாரம் இருந்திருக்கும்?

‘பழைய ஏற்பாட்டின்’ கிரேக்க மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயர், சிறிது நீடித்த காலம் தொடர்ந்திருந்தது. பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் முதல் பாதிப் பகுதியில், யூத மதத்துக்கு மாறிய அக்வில்லா எபிரெய வேதவாக்கியங்களைக் கிரேக்கில் மொழிபெயர்த்த ஒரு புதிய மொழிபெயர்ப்பைச் செய்தார், இதில் அவர் கடவுளுடைய பெயரை பூர்வ எபிரெயு எழுத்துக்களிலிருந்த டெட்ரக்ராமட்டனால் குறிப்பிட்டார். மூன்றாம் நூற்றாண்டில், ஆரிஜன் பின்வருமாறு எழுதினார்: “மிக அதிகத் திருத்தமான கையெழுத்துப் பிரதிகளில் இந்தப் பெயர் எபிரெய எழுத்துக்களில் காணப்படுகிறது, எனினும் இன்றைய எபிரெயு [எழுத்துக்களில்] அல்ல, மிக அதிகப் பூர்வ எழுத்துக்களில் காணப்படுகிறது.”

நான்காம் நூற்றாண்டிலுங்கூட, ஜெரோம், சாமுவேல் மற்றும் இராஜாக்களின் புத்தகங்களுக்குரிய தன் முகவுரையில் பின்வருமாறு எழுதுகிறார்: “மேலும் கடவுளுடைய பெயராகிய டெட்ரக்ராமட்டன் [יהוה], பூர்வ எழுத்துக்களில் எழுதப்பட்டவையாக இந்நாள்வரையிலுங்கூட சில கிரேக்கப் புத்தகங்களில் நாம் காண்கிறோம்.”

இந்தப் பெயர் நீக்கப்படுதல்

எனினும், இயேசு முன்னறிவித்த விசுவாசத்துரோகம், இந்தக் காலத்துக்குள்ளாக உருவாகிவிட்டது, இந்தப் பெயர், கையெழுத்துப் பிரதிகளில் காணப்பட்டபோதிலும், அதன் உபயோகம் படிப்படியாகக் குறைந்தது. (மத்தேயு 13:24-30; அப்போஸ்தலர் 20:29, 30) முடிவில், அது என்னவென்றுங்கூட வாசகர்கள் பலர் தெரிந்துகொள்ளவில்லை, மேலும் தன் காலத்தில் “அறியாமையுள்ள சிலர், எழுத்துக்களின் உரு ஒன்றுபோலிருந்த தன்மையின் காரணமாக, கிரேக்க புத்தகங்களில் [டெட்ரக்ராமட்டனை] தாங்கள் காணும்போது, ΠΙΠΙ என வாசிப்பது பழக்கமாயிற்று.”

செப்டுவஜின்ட்டின் பிற்பட்ட நகல்களில், கடவுளுடைய பெயர் நீக்கப்பட்டு “கடவுள்” (தியாஸ் [The·osʹ]) மற்றும் “கர்த்தர்” (கைரியாஸ் [Kyʹri·os]) போன்ற சொற்கள் பதிலிகளாக வைக்கப்பட்டன. கடவுளுடைய பெயர் உள்ளடங்கியுள்ள செப்டுவஜின்ட்டின் பழங்கால துண்டுகளும், கடவுளுடைய பெயர் நீக்கப்பட்டிருந்த செப்டுவஜின்ட்டின் பிற்பட்ட நகல்களின் அதே பாகங்களும் நமக்கு இருப்பதால், இது நடந்ததென நாம் அறிந்திருக்கிறோம்.

‘புதிய ஏற்பாட்டில்,’ அல்லது கிறிஸ்தவ கிரேக்க வேதவாக்கியங்களில் இதே காரியம் நடந்தது. பேராசிரியர் ஜார்ஜ் ஹோவர்ட் மேலும் தொடர்ந்து சொல்கிறார்: “செப்டுவஜின்ட்டில் கிரேக்கப் பதிலிகளைத் தெரிந்துகொண்டு கடவுளுடைய பெயருக்கான எபிரெய சொல்லமைப்பு நீக்கப்பட்டபோது, புதிய ஏற்பாட்டிலிருந்த செப்டுவஜின்ட் மேற்கோள்களிலிருந்தும் அது நீக்கப்பட்டது. . . . அதன் சுருக்கப்பட்ட பதிலிகளில் அது பிரதிபலித்ததைத் தவிர சீக்கிரத்தில் கடவுளுடைய இந்தப் பெயர் புறஜாதி சர்ச்சுகளில் அறியப்படாமல் போயிற்று அல்லது நிபுணர்களால் நினைவுகூரப்பட்டது.”

ஆகவே, யூதர்கள் கடவுளுடைய பெயரை உச்சரிக்க மறுத்தபோது, விசுவாசத்துரோகக் கிறிஸ்தவ சர்ச் அதை, பைபிளின் இரண்டு பாகங்களுக்குரிய கிரேக்க மொழி கையெழுத்துப் பிரதிகளிலிருந்தும், மற்ற மொழிகளின் மொழிபெயர்ப்புகளிலிருந்துங்கூட முற்றிலும் நீக்குவதைச் சாதித்துக்கொண்டது.

அந்தப் பெயருக்கானத் தேவை

முடிவில், நாம் முன்னால் கண்டபடி, இந்தப் பெயர் எபிரெய வேதவாக்கியங்களின் பல மொழிபெயர்ப்புகளில் மீண்டும் அதனிடத்தில் வைக்கப்பட்டது. ஆனால் கிரேக்க வேதவாக்கியங்களைப் பற்றியதென்ன? கடவுளுடைய பெயர் இல்லாமல், கிறிஸ்தவ கிரேக்க வேதவாக்கியங்களின் சில பாகங்களைச் சரியாகப் புரிந்துகொள்வது மிகக் கடினமாக இருக்கின்றனவென பைபிள் மொழிபெயர்ப்பாளர்களும் மாணாக்கர்களும் உணரலாயினர். மீண்டும் அந்தப் பெயரை அதனிடத்தில் வைப்பது, தேவாவியால் ஏவப்பட்ட பைபிளின் இந்தப் பகுதியின் தெளிவையும் விளங்கிக்கொள்ளக்கூடிய தன்மையையும் அதிகரிப்பதில் பெரிய உதவியாக இருக்கிறது.

உதாரணமாக, ஆதரைஸ்ட் வர்ஷனில் தோன்றுகிறபடி, ரோமருக்கு எழுதின பவுலின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “கர்த்தருடைய பெயரின்பேரில் கூப்பிடுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.” (ரோமர் 10:13) இரட்சிக்கப்படுவதற்கு யாருடைய பெயரில் நாம் கூப்பிட வேண்டும்? “கர்த்தர்” என இயேசு அடிக்கடி பேசப்படுகிறபடியாலும், மேலும், ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்’ என்றுங்கூட ஒரு வசனம் சொல்வதாலும், இங்கே பவுல் இயேசுவைப்பற்றிப் பேசினாரென நாம் முடிவு செய்ய வேண்டுமா?—அப்போஸ்தலர் 16:31, ஆதரைஸ்ட் வர்ஷன்.

இல்லை, நாம் அவ்வாறு செய்யக்கூடாது. ஆதரைஸ்ட் வர்ஷனில் ரோமர் 10:13-க்குக் கொடுக்கப்பட்டுள்ள ஓரக் குறிப்பு, எபிரெய வேதவாக்கியங்களில் யோவேல் 2:32-ஐ நமக்குக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. இந்த வசனக் குறிப்பை நீங்கள் எடுத்துப் பார்த்தால், பவுல் ரோமருக்கு எழுதின தன் நிருபத்தில் யோவேலின் வார்த்தைகளையே உண்மையில் மேற்கோளாக எடுத்துக் குறிப்பிட்டாரெனக் காண்பீர்கள்; மேலும் மூல எபிரெயுவில் யோவேல் சொன்னது என்னவெனில்: “ஜெஹோவாவின் [யெகோவா] பெயரின்பேரில் கூப்பிடுகிற ஒவ்வொருவனும் பத்திரமாய்த் தப்பிப்பிழைப்பான்.” (புதிய உலக மொழிபெயர்ப்பு) ஆம், நாம் யெகோவாவின் பெயரின்பேரில் கூப்பிடவேண்டுமென்று பவுல் இங்கே கருதினார். ஆகவே, நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்க வேண்டியதாக இருக்கையில், நம்முடைய இரட்சிப்பு கடவுளுடைய பெயரைத் தகுந்த முறையில் மதித்துணருவதோடு நெருங்க இணைக்கப்பட்டுள்ளது.

கிரேக்க வேதவாக்கியங்களிலிருந்து கடவுளுடைய பெயரை நீக்கினது எவ்வாறு, பலருடைய மனதில் இயேசுவையும் யெகோவாவையும் குழப்புவதற்கு இடமளித்ததென இந்த உதாரணம் மெய்ப்பித்துக் காட்டுகிறது. சந்தேகமில்லாமல், இது திரித்துவக் கோட்பாடு உண்டாவதற்குப் பேரளவாய் காரணமாயிருந்தது!

இந்தப் பெயர் மீண்டும் அதனிடத்தில் வைக்கப்பட வேண்டுமா?

இருந்துவரும் கையெழுத்துப் பிரதிகள் இந்தப் பெயரைக் கொண்டிராத இந்த உண்மையைக் கருதுகையில், இந்தப் பெயரைத் திரும்ப அதனிடத்தில் வைக்க மொழிபெயர்ப்பாளர் ஒருவருக்கு ஏதாவது உரிமை இருக்குமா? ஆம், அவருக்கு உரிமை இருக்கும். பைபிளில் “கர்த்தர்” என்ற சொல் அடிக்கடி யெகோவாவைக் குறிப்பிடுகிறதென கிரேக்க அகராதிகள் பெரும்பான்மையானவை ஒப்புக்கொள்கின்றன. உதாரணமாக, கைரியாஸ் (“கர்த்தர்”) என்ற அதன் கிரேக்கச் சொல்லின்கீழுள்ள அதன் பகுதியில், ராபின்ஸனுடைய புதிய ஏற்பாட்டின் கிரேக்க மற்றும் ஆங்கில அகராதி (A Greek and English Lexicon of the New Testament) (1859-ல் அச்சடிக்கப்பட்டது), “கடவுளை அந்த ஈடற்ற உன்னத கர்த்தர் எனவும் சர்வலோகப் பேரரசரெனவும் குறிக்கிறது, வழக்கமாய் செப்டு[வஜின்ட்டில்] எபி[ரெயு]வில் יְהוָֹה ஜெஹோவா (Jehovah) என்பதற்காக” நிற்கிறது என்று சொல்கிறது. ஆகவே, கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்தாளர்கள், முற்பட்ட எபிரெய வேதவாக்கியங்களை மேற்கோளாக எடுத்துக் குறிப்பிடும் இடங்களில், கைரியாஸ் என்ற சொல்லை, மூல எபிரெயுவில் கடவுளுடைய பெயர் காணப்பட்ட இடங்களிலெல்லாம், “யெகோவா” என்று மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளருக்கு உரிமை உள்ளது.

மொழிபெயர்ப்பாளர்கள் பலர் இதைச் செய்திருக்கின்றனர். குறைந்தது 14-வது நூற்றாண்டிலிருந்தாவது தொடங்கி, கிறிஸ்தவ கிரேக்க வேதவாக்கியங்களின் மிகப் பல எபிரெய மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டன. கடவுளுடைய பெயர் காணப்பட்ட ‘பழைய ஏற்பாட்டிலிருந்து’ எடுக்கப்பட்ட மேற்கோள்களுக்கு வந்தபோது மொழிபெயர்ப்பாளர்கள் என்ன செய்தார்கள்? பெரும்பாலும், கடவுளுடைய பெயரை அந்த வசனத்தில் மீண்டும் எழுதும்படி வற்புறுத்தப்பட்டவர்களாக அவர்கள் உணர்ந்தனர். பாகங்களாகவோ முழுமையாகவோ கிறிஸ்தவ கிரேக்க வேதவாக்கியங்கள் எபிரெயுவில் மொழிபெயர்க்கப்பட்ட மொழிபெயர்ப்புகள் பல கடவுளுடைய பெயரைக் கொண்டுள்ளன.

தற்கால மொழிகளில் பெயர்க்கப்பட்ட மொழிபெயர்ப்புகள், முக்கியமாய் மிஷனரிகளால் பயன்படுத்தப்பட்டவை, இந்த மாதிரியைப் பின்பற்றியுள்ளன. இவ்வாறு ஆப்பிரிக்க, ஆசிய, அமெரிக்க மற்றும் பசிபிக் தீவுக்குரிய மொழிகளில் பெயர்க்கப்பட்ட கிரேக்க வேதவாக்கியங்களின் மொழிபெயர்ப்புகள் பல, யெகோவா என்ற பெயரை தாராளமாய்ப் பயன்படுத்துகின்றன, இவ்வாறு வாசகர்கள் உண்மையான கடவுளுக்கும் பொய்க் கடவுட்களுக்குமுள்ள வேறுபாட்டைத் தெளிவாகக் காண முடிகிறது. இந்தப் பெயர் ஐரோப்பிய மொழிகளிலுள்ள மொழிபெயர்ப்புகளிலும் காணப்பட்டிருக்கிறது.

நல்ல அதிகாரத்துடன் கடவுளுடைய பெயரை தைரியமாய்த் திரும்ப அதனிடத்தில் வைத்துள்ள ஒரு மொழிபெயர்ப்பு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு (New World Translation of the Christian Greek Scriptures) ஆகும். ஆங்கிலம் உட்பட, தற்போது 11 நவீன மொழிகளில் கிடைக்கக்கூடியதாயுள்ள இந்த மொழிபெயர்ப்பு, அதிலடங்கிய எபிரெய வேதவாக்கியங்களின் ஒரு பகுதி கிரேக்க வாக்கியங்களில் மேற்கோளாக எடுத்துக் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு தடவையிலும் கடவுளுடைய பெயரைத் திரும்ப வைத்துள்ளது. கிரேக்க வேதவாக்கியங்களின் அந்த மொழிபெயர்ப்பில் மொத்தம் 237 தடவைகள் இந்தப் பெயர் நல்ல ஆதாரத்துடன் தோன்றுகிறது.

இந்தப் பெயருக்கு எதிர்ப்பு

கடவுளுடைய பெயரை பைபிளில் திரும்ப அதனிடத்தில் வைக்கும்படி மொழிபெயர்ப்பாளர்கள் பலர் எடுத்த முயற்சிகளின் மத்தியிலும், அதை நீக்குவதற்கான மத வற்புறுத்தல் எப்பொழுதும் இருந்துவந்திருக்கிறது. யூதர்கள், அதைத் தங்கள் பைபிள்களில் விட்டுவைத்திருக்கிறபோதிலும், அதை உச்சரிக்க மறுத்தனர். இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளின் விசுவாசத்துரோகக் கிறிஸ்தவர்கள், கிரேக்க பைபிள் கையெழுத்துப் பிரதிகளைத் தாங்கள் நகல்கள் எடுக்கையில் அதை நீக்கிவிட்டு, தாங்கள் பைபிள் மொழிபெயர்ப்புகளைச் செய்கையில் அதை விட்டுவிட்டனர். தற்காலங்களிலுள்ள மொழிபெயர்ப்பாளர்கள், தங்கள் மொழிபெயர்ப்புகளை, ஏறக்குறைய 7,000 தடவைகள் அதில் தோன்றுகிற மூல எபிரெயுவில் ஆதாரங்கொள்ள செய்தபோதிலும், அதை நீக்கிவிட்டனர். (பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு, 1984-ன் பதிப்பினுடைய எபிரெய வாக்கியத்தில் இது 6,973 தடவைகள் காணப்படுகிறது.)

பைபிளிலிருந்து தம்முடைய பெயரை நீக்குவோரை யெகோவா எவ்வாறு கருதுகிறார்? நீங்கள் ஒரு நூலாசிரியராக இருந்தால், நீங்கள் எழுதிய புத்தகத்திலிருந்து உங்கள் பெயரை நீக்குவதற்குப் பெரும் முயற்சி எடுத்த ஒருவரைப் பற்றி எவ்வாறு உணருவீர்கள்? இந்தப் பெயருக்குத் தடைசொல்லும் மொழிபெயர்ப்பாளர்களை, உச்சரிப்புப் பிரச்னைகளினிமித்தமாக அல்லது யூத பாரம்பரியத்தினிமித்தமாக அவ்வாறு செய்பவர்களை, “கொசுகில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்கள்” என இயேசு குறிப்பிட்டுச் சொன்னவர்களுக்கு ஒப்பிடலாம். (மத்தேயு 23:24) அவர்கள் இந்தச் சிறிய பிரச்னைகளின்பேரில் தடுமாறுகின்றனர், ஆனால்—சர்வலோகத்திலும் மிகப் பெரிய ஆளின் பெயரை, அவர் ஏவின புத்தகத்திலிருந்து நீக்குவதால்—பெரும்படியான பிரச்னையை உண்டாக்குவதில் முடிக்கின்றனர்.

சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?”—சங்கீதம் 74:10.

[பக்கம் 25-ன் பெட்டி]

“அந்தக் கர்த்தர்”—“யெகோவா” என்பதற்குச் சமமா?

கடவுளுடைய தனிச்சிறப்பான சொந்த பெயரை பைபிளிலிருந்து நீக்கி “கர்த்தர்” அல்லது “கடவுள்” போன்ற பட்டப்பெயரை அதற்குப் பதிலாக வைப்பது அந்த வாக்கியத்தைப் பல வழிகளில் வலிமை குன்றவும் குறைபாடுள்ளதாகவும் செய்கிறது. உதாரணமாக, அது சொற்களின் பொருளற்ற இணைப்புகளுக்கு வழிநடத்தக்கூடும். தி ஜெரூசலம் பைபிள் அதன் முகவுரையில் பின்வருமாறு சொல்கிறது: “‘கர்த்தரே கடவுள்’ என்று சொல்வது, நிச்சயமாகவே ஒரு பொருட்சொல்லடுக்காகும் [தேவையற்ற, பொருளற்ற, கூறியதையே கூறும் போக்கு], ‘யாவேதான் கடவுள்’ என்று சொல்வது அவ்வாறில்லை.”

இத்தகைய பதிலிகள் பொருத்தமற்ற சொற்றொடர்களுக்கும் வழிநடத்தக்கூடும். இவ்வாறு ஆதரைஸ்ட் வர்ஷனில், சங்கீதம் 8:9 பின்வருமாறு வாசிக்கிறது: “எங்கள் கர்த்தராகிய கர்த்தரே, உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது!” இத்தகைய ஒரு வசனத்தில் ஜெஹோவா (யெகோவா) என்ற பெயர் திரும்ப அதனிடத்தில் வைக்கப்படும்போது எத்தகைய மேம்பாடுண்டாகிறது! இவ்வாறு, யங்ஸ் லிட்டரல் டிரான்ஸ்லேஷன் ஆஃப் தி ஹோலி பைபிள் இங்கே பின்வருமாறு வாசிக்கிறது: “எங்கள் கர்த்தராகிய ஜெஹோவாவே, பூமியெங்கும் உம்முடைய பெயர் எவ்வளவு மதிப்புவாய்ந்ததாக உள்ளது!”

இந்தப் பெயரை நீக்குவது குழப்பத்துக்கும் வழிநடத்தலாம். சங்கீதம் 110:1 சொல்வதாவது: “கர்த்தர் என் கர்த்தரை நோக்கி, நான் உம்முடைய சத்துருக்களை உம்முடைய கால்மணையாக்கும் வரையில், நீர் என் வலதுபாரிசத்தில் உட்காரும்.” (ஆதரைஸ்ட் வர்ஷன்) யார் யாரிடம் பேசுகிறார்? பின்வரும் இந்த மொழிபெயர்ப்பு எவ்வளவு மேம்பட்டதாக உள்ளது: “என் கர்த்தருக்கு ஜெஹோவாவின் வசனிப்பானது: ‘உம்முடைய சத்துருக்களை உம்முடைய பாதங்களுக்கு மணையாக நான் வைக்கும் வரையில் என் வலதுபாரிசத்தில் உட்காரும்.’”—புதிய உலக மொழிபெயர்ப்பு.

மேலுமாக, “ஜெஹோவா” என்பதற்கு “கர்த்தர்” என்பதைப் பதிலாக வைப்பது, இன்றியமையாத முக்கியத்துவமுடைய ஒன்றை, கடவுளுடைய சொந்த பெயரை, பைபிளிலிருந்து நீக்குகிறது. தி இல்லஸ்ட்ரேட்டட் பைபிள் டிக்‍ஷனரி (புத்தகம் 1, பக்கம் 572) பின்வருமாறு கூறுகிறது: “கண்டிப்பாய்ப் பேசவேண்டுமானால், யாவே என்பதே கடவுளுடைய அந்த ஒரே ‘பெயர்.’”

தி இம்ப்பீரியல் பைபிள்-டிக்‍ஷனரி (புத்தகம் 1, பக்கம் 856) “கடவுள்” (எலோஹிம் [Elohim]) என்பதற்கும் “ஜெஹோவா” என்பதற்கும் இடையேயுள்ள வேறுபாட்டைப் பின்வருமாறு கூறி விவரிக்கிறது: “[ஜெஹோவா] எங்கும் ஓர் இடுகுறி பெயர், தனிப்பட்டவரான கடவுளையே அவர் ஒருவரையே குறிப்பிடுகிறது; எலோஹிம் என்பதோவெனில் பொதுவான பண்புப்பெயரையே பெரும்பாலும் ஏற்கிறது, நிச்சயமாகவே, பொதுவாய்க் குறிப்பிட்டுக்காட்டுகிறது, ஆனால் அவசியமாகவோ மாறாநிலையுடனோ, ஈடற்ற உன்னதரையல்ல.”

இங்கிலாந்திலுள்ள, ட்ரினிட்டி கல்லூரியின் தலைவர், J. A. மோட்டியர், மேலும் சொல்வதாவது: “[கர்த்தர் அல்லது கடவுள்] என்ற பதில்வைப்புச் சொல்லுக்கு அப்பால் கடவுளுக்கே உரிய சொந்த, மிக நெருங்கிய பெயரைத்தானே நோக்க நாம் மறந்துவிட்டால், பைபிள் வாசிப்பில் மிக அதிகம் இழக்கப்படுகிறது. தம்முடைய ஜனங்களுக்குத் தம்முடைய பெயரைச் சொன்னதன்மூலம், கடவுள் தம்முடைய உள்ளார்ந்த குணவியல்பை அவர்களுக்கு வெளிப்படுத்தும்படி நோக்கங்கொண்டார்.”—எர்டுமான்ஸ் ஹேன்டுபுக் டு தி பைபிள், பக்கம் 157.

இல்லை, தனிப்பட்ட இடுகுறிப் பெயரை வெறும் ஒரு பட்டப்பெயரைக்கொண்டு ஒருவரும் மொழிபெயர்க்க முடியாது. கடவுளுடைய தனிமுதலான பெயரின் முழு, நிறைவான உட்பொருளை ஒரு பட்டப்பெயர் ஒருபோதும் தெரிவிக்க முடியாது.

[பக்கம் 26-ன் பெட்டி/படம்]

பொ.ச. முதலாம் நூற்றாண்டினுடையதாகத் தேதி குறிப்பிடப்பட்டு, சகரியா 8:19-21 மற்றும் 8:23–9:4 அடங்கியுள்ள செப்டுவஜின்ட்டின் இந்தத் துண்டு (வலதுபுறத்திலிருப்பது) எருசலேமின் இஸ்ரேல் அரும்பொருட்காட்சி சாலையில் உள்ளது. இது கடவுளுடைய பெயரை நான்கு தடவைகள் கொண்டுள்ளது, அவற்றில் மூன்று இங்கே குறிப்பிட்டுக் காட்டப்படுகின்றன. 400 ஆண்டுகளுக்கு அப்பால் செய்யப்பட்ட செப்டுவஜின்ட்டின் ஒரு நகலாகிய அலெக்ஸான்ட்ரின் கையெழுத்துப் பிரதியில் (இடதுபுறம்), அதே வசனங்களில் கடவுளுடைய பெயர், கைரியாஸ் (“கர்த்தர்”) என்ற கிரேக்கச் சொல்லின் சுருக்கப்பட்ட எழுத்துருவங்களாகிய KY மற்றும் KC என்பவற்றைக் கொண்டு பதிலீடு செய்யப்பட்டிருக்கிறது

[பக்கம் 27-ன் பெட்டி]

சீனாவில் 19-வது நூற்றாண்டின்போது மிஷனரியாக இருந்தவரான ஜான் W. டேவிஸ், கடவுளுடைய பெயர் பைபிளில் இருக்க வேண்டுமெனத் தான் நம்பினதன் காரணத்தைப் பின்வருமாறு விளக்கிக் கூறினார்: “எபிரெயுவில் கொடுக்கப்பட்ட எந்த இடத்திலாவது பரிசுத்த ஆவி ஜெஹோவா என்று சொல்லுகிறதென்றால், மொழிபெயர்ப்பாளர் ஏன் ஆங்கிலத்தில் அல்லது சீனமொழியில் ஜெஹோவா எனச் சொல்கிறதில்லை? ஜெஹோவா என இந்த இடத்திலும் அதற்கான பதிலியை அந்த இடத்திலும் நான் பயன்படுத்துவேன் என்று சொல்வதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? . . . ஜெஹோவா என்பதைப் பயன்படுத்துவது தவறாக இருக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றனவென எவராவது ஒருவர் சொன்னால், ஏன் என்ற காரணத்தை அவர் காட்டட்டும்; ஓனஸ் ப்ரோபான்டி (onus probandi) [நிரூபணமளிக்கும் பாரம்] அவர்மீது தங்குகிறது. அவர் அந்த வேலையைக் கடினமான ஒன்றாகக் காண்பார், ஏனெனில் இந்த எளியக் கேள்விக்கு அவர் பதிலளிக்க வேண்டும்,—கொடுக்கப்பட்ட எந்தச் சந்தர்ப்பத்திலாவது ஜெஹோவா என்பதை மொழிபெயர்ப்பில் பயன்படுத்துவது தவறெனில் தேவாவியால் ஏவப்பட்ட எழுத்தாளர் அதை ஏன் மூலவாக்கியத்தில் பயன்படுத்தினார்?”—தி சைனீஸ் ரெக்கார்டர் அண்ட் மிஷனரி ஜர்னல், புத்தகம் VII, ஷாங்காய், 1876.

[பக்கம் 23-ன் படம்]

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு சரியாகவே கடவுளுடைய பெயரை 237 தடவைகள் பயன்படுத்துகிறது

[பக்கம் 24-ன் படங்கள்]

ஸ்பெய்னில் மினோர்க்காவிலுள்ள ஒரு சர்ச்சின்மீது கடவுளுடைய பெயர்;

பிரான்ஸில், பாரிஸ்க்கு அருகில் ஒரு சிலையின்மீது;

இத்தாலி, பார்மாவில், ச்சீஸா டி சான் லோரென்ஸோவின்மீது