Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய பெயர்அதன் உட்பொருளும் உச்சரிப்பும்

கடவுளுடைய பெயர்அதன் உட்பொருளும் உச்சரிப்பும்

கடவுளுடைய பெயர்அதன் உட்பொருளும் உச்சரிப்பும்

பைபிள் எழுத்தாளர்களில் ஒருவர் பின்வருமாறு கேட்டார்: “காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?” (நீதிமொழிகள் 30:4) கடவுளுடைய பெயர் என்னவென நாம் எவ்வாறு கண்டுபிடிக்கலாம்? இது முக்கியமான ஒரு கேள்வி. கடவுள் இருக்கவேண்டும் என்பதற்கு படைப்பு ஒரு வல்லமைவாய்ந்த அத்தாட்சி, ஆனால் அது அவருடைய பெயரை நமக்குச் சொல்கிறதில்லை. (ரோமர் 1:20) உண்மையில், சிருஷ்டிகர்தாமே நமக்குச் சொல்லியிருந்தால் தவிர கடவுளுடைய பெயரை நாம் ஒருபோதும் அறிய முடியாது. அதை அவர் தம்முடைய சொந்த புத்தகமாகிய பரிசுத்த பைபிளில் சொல்லியிருக்கிறார்.

சிறப்புவாய்ந்த ஒரு சந்தர்ப்பத்தில், கடவுள் தம்முடைய சொந்த பெயரை உச்சரித்தார், மோசேயின் செவிகேட்க திரும்பத்திரும்பக் கூறினார். அந்தச் சம்பவத்தைப்பற்றிய ஒரு விவரத்தை மோசே எழுதினார், அது நம்முடைய நாள்வரையில் பைபிளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. (யாத்திராகமம் 34:5) கடவுள் தம்முடைய சொந்த ‘விரலாலும்’ தம்முடைய பெயரை எழுதினார். பத்துக் கற்பனைகள் என இன்று நாம் அழைக்கிறவற்றை அவர் மோசேக்குக் கொடுத்தபோது, கடவுள் அவற்றை அற்புதமாய் எழுதினார். விவரப்பதிவு சொல்வதாவது: “சீனாய்மலையில் [கடவுள்] மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.” (யாத்திராகமம் 31:18) அந்த முதல் பத்துக் கற்பனைகளில் கடவுளுடைய பெயர் எட்டு தடவைகள் தோன்றுகிறது. (யாத்திராகமம் 20:1-17) இவ்வாறு கடவுள்தாமே வாய்முறையாகவும் எழுத்திலும் தம்முடைய பெயரை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆகவே, அந்தப் பெயர் என்ன?

எபிரெய மொழியில் அது יהוה என எழுதப்படுகிறது. இந்த நான்கு எழுத்துக்கள் டெட்ரக்ராமட்டன் என அழைக்கப்படுகின்றன, எபிரெயுவில் வலதுபுறத்திலிருந்து இடதுபுறமாக வாசிக்கப்படுகின்றன, நவீனகால மொழிகள் பலவற்றில் ய்ஹ்வ்ஹ் (YHWH) அல்லது ஜ்ஹ்வ்ஹ் (JHVH) என குறிப்பிடப்படலாம். இந்த நான்கு மெய்யெழுத்துக்களால் குறிப்பிடப்படுகிற கடவுளுடைய பெயர், மூல ‘பழைய ஏற்பாட்டில்,’ அல்லது எபிரெய வேதவாக்கியங்களில் ஏறக்குறைய 7,000 தடவைகள் தோன்றுகிறது.

இந்தப் பெயர் ஒரு வகை எபிரெய வினைச்சொல்லான ஹாவா (ha·wahʹ [הוה]) என்பதாகும், இதன் உட்பொருள் “ஆவது,” என்பது, உண்மையில் “அவர் ஆகச் செய்கிறார்” a எனக் குறிப்பிடுகிறது. இவ்வாறு, கடவுளுடைய பெயர், அவரைத் தம்முடைய வாக்குகளைப் படிப்படியாய் நிறைவேற்றுபவரெனவும், தம்முடைய நோக்கங்களைத் தவறாமல் நடைமுறை மெய்ம்மையாகும்படி செய்பவரெனவும் அடையாளங்காட்டுகிறது. உண்மையான கடவுள் மாத்திரமே அத்தகைய உட்பொருளுள்ள பெயரைத் தாங்க முடியும்.

முந்தின பிரிவில் (5-ம் பக்கத்தில்) காட்டப்பட்டபடி, கடவுளுடைய பெயர் சங்கீதம் 83:18-ல் தோன்றின வெவ்வேறுபட்ட முறைகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த மொழிபெயர்ப்புகளில் இரண்டு, கடவுளுடைய பெயருக்கு பதிலீடுகளாக, வெறும் பட்டப் பெயர்களை (“கர்த்தர்,” “நித்தியர்”) மட்டுமே கொண்டிருந்தன. ஆனால் அவற்றுள் இரண்டில், யாவே மற்றும் யெகோவா பயன்படுத்தப்பட்டிருந்தன, கடவுளுடைய பெயரின் நான்கெழுத்துக்களை நீங்கள் காண முடிகிறது. எனினும், உச்சரிப்பு வேறுபட்டுள்ளது. ஏன்?

கடவுளுடைய பெயர் எவ்வாறு உச்சரிக்கப்படுகிறது?

உண்மை என்னவெனில், கடவுளுடைய பெயர் தொடக்கத்தில் உச்சரிக்கப்பட்ட முறையை ஒருவரும் நிச்சயமாக அறிகிறதில்லை. ஏன் அறிகிறதில்லை? பைபிளை எழுதினதில் பயன்படுத்தப்பட்ட முதல் மொழி எபிரெயு ஆகும், இந்த எபிரெய மொழி எழுதப்பட்டபோது, அந்த எழுத்தாளர்கள் மெய்யெழுத்துக்களை மாத்திரமே எழுதினர்—உயிரெழுத்துக்களையல்ல. ஆகவே, தேவாவியால் ஏவப்பட்ட எழுத்தாளர்கள் கடவுளுடைய பெயரை எழுதினபோது, அவர்கள் இயல்பாக அவ்வாறே செய்து மெய்யெழுத்துக்களை மாத்திரமே எழுதினர்.

பூர்வ எபிரெயு அன்றாடம் பேசும் மொழியாக இருந்தபோது, இது எந்தப் பிரச்னையையும் அளிக்கவில்லை. இந்தப் பெயரின் உச்சரிப்பு இஸ்ரவேலர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது, அதை எழுத்தில் அவர்கள் கண்டபோது, (ஆங்கில வாசகருக்கு “Ltd.” என்ற சுருக்கக் குறியீடு “லிமிட்டட்” என்பதையும் “bldg.” என்பது “பில்டிங்” என்பதையும் குறிப்பதைப்போல்) சிந்தியாமலே உயிரெழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டனர்.

இந்த நிலைமையை மாற்றுவதற்கு இரண்டு காரியங்கள் நடைபெற்றன. முதலாவது, கடவுளுடைய பெயரைச் சத்தமாகச் சொல்வது தவறு என்ற ஒரு குருட்டு நம்பிக்கை வாய்ந்த எண்ணம் யூதர்களுக்குள் எழும்பினது; ஆகையால் தங்கள் பைபிள் வாசிப்பில் அந்தப் பெயருக்கு வந்தபோது, அதோனை (’Adho·naiʹ) (“ஈடற்ற அரசராகிய கர்த்தர்”) என்ற எபிரெயச் சொல்லைக் கூறினர். மேலும், காலம் கடந்துசென்றபோது, அந்தப் பூர்வ எபிரெய மொழிதானே அன்றாட உரையாடலில் பேசப்படுவது நின்றுவிட்டது, இவ்வாறு, கடவுளுடைய பெயரின் அந்த மூல எபிரெய உச்சரிப்பு முடிவில் மறந்துவிடப்பட்டது.

முழுமையாக எபிரெய மொழியின் அந்த உச்சரிப்பு இழக்கப்பட்டு விடாதபடி காப்பதை நிச்சயப்படுத்த, பொ.ச. முதல் ஆயிர ஆண்டுகளின் இரண்டாம் பாதி கால யூத அறிஞர்கள், காணப்படாத உயிரெழுத்துக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும்படி குறிகளைக்கொண்ட ஒரு முறைமையைக் கண்டுபிடித்து அவற்றை எபிரெயு பைபிளில் மெய்யெழுத்துக்களைச் சுற்றி வைத்தனர். இவ்வாறு, உயிரெழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்கள் எழுதிவைக்கப்பட்டன, மற்றும் அந்தக் காலத்தில் இருந்ததுபோன்ற அந்த உச்சரிப்பு பாதுகாத்து வைக்கப்பட்டது.

கடவுளுடைய பெயருக்கு வந்தபோது, அதைச் சுற்றி சரியான உயிரெழுத்து அடையாளக்குறிகளை வைப்பதற்குப் பதிலாக, பெரும்பான்மையானவற்றில், வாசகர் அதோனை என்று சொல்ல வேண்டுமென அவரை நினைப்பூட்டுவதற்கு மற்ற உயிரெழுத்து அடையாளக் குறிகளை வைத்தனர். அதிலிருந்து ஈஹோவா என்ற எழுத்துக்கூட்டு வந்தது, முடிவில், ஜெஹோவா என்பது ஆங்கிலத்தில் கடவுளுடைய பெயரின் ஏற்கப்பட்ட உச்சரிப்பாயிற்று. இது மூல எபிரெயுவிலிருந்து வரும் கடவுளுடைய பெயரின் முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

எந்த உச்சரிப்பை நீங்கள் பயன்படுத்துவீர்கள்?

எனினும், யாவே போன்ற உச்சரிப்புகள் எங்கிருந்து வந்தன? இவை கடவுளுடைய பெயரின் மூல உச்சரிப்பை ஊகிக்க முயன்று தற்கால அறிஞர்கள் ஆலோசனைக் கூறின வகைகள். இயேசுவின் காலத்துக்கு முன்னிருந்த இஸ்ரவேலர்கள் கடவுளுடைய பெயரை யாவே என பெரும்பாலும் உச்சரித்திருக்கலாமென—எல்லாரும் இல்லாவிடினும்—சிலர் உணருகின்றனர். ஆனால் ஒருவரும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஒருவேளை அவ்வகையில் உச்சரித்திருக்கலாம், உச்சரிக்காமலும் இருந்திருக்கலாம்.

இருப்பினும், பலர் ஜெஹோவா என்ற உச்சரிப்பை விரும்பித் தெரிந்துகொள்கின்றனர். ஏன்? ஏனெனில், இது நடப்பிலும் பழக்கத்திலும் இருப்பதுபோல், யாவே என்பது இல்லை. எனினும், மூல உச்சரிப்புக்கு நெருங்க இருக்கக்கூடிய அந்த வகையைப் பயன்படுத்துவது மேலானதாக இருக்குமல்லவா? உண்மையில் இல்லை, ஏனெனில் பைபிள் பெயர்களைக் குறித்ததில் அது வழக்கமாக இல்லை.

மிக முனைப்பான உதாரணத்தை எடுத்துக்கொள்வோம், இயேசுவின் பெயரைக் கவனியுங்கள். இயேசு நாசரேத்தில் வளர்ந்துகொண்டிருக்கையில் அவருடைய குடும்பத்தாரும் நண்பர்களும் அன்றாட உரையாடலில் அவரை எவ்வாறு அழைத்தார்களென்பது உங்களுக்கு தெரியுமா? அது யெஷுவா (அல்லது ஒருவேளை யெஹோஷுவா) போன்ற ஒன்றாக இருந்திருக்கலாமென்றாலும், உண்மையானது, ஒரு மனிதனும் நிச்சயமாக அறிந்தில்லை என்பதே. சந்தேகமில்லாமல், இயேசு என்று அல்ல.

எனினும், அவருடைய வாழ்க்கை விவரங்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டபோது, தேவாவியால் ஏவப்பட்ட எழுத்தாளர்கள் அந்த மூல எபிரெய உச்சரிப்பைப் பாதுகாத்து வைக்க முயற்சி செய்யவில்லை. மாறாக, அவர்கள் அந்தப் பெயரை ஐயீஸோஸ் (I·e·sousʹ) என கிரேக்கில் மொழிபெயர்த்தனர். இன்று, பைபிள் வாசிப்பவரின் மொழியின்படி அது வேறு முறையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஸ்பானிய பைபிள் வாசகர்கள் Jesús (ஹெஸ்ஸூஸ் [Hes·soosʹ] என உச்சரிக்கப்படுகிறது) என்பதை எதிர்ப்படுகின்றனர். இத்தாலியர்கள் அதை Gesù (ட்ஜேஸூ [Djay·zooʹ] என உச்சரிக்கப்படுகிறது) என்று எழுத்துக் கூட்டுகின்றனர். ஜெர்மானியர்கள் அதை Jesus (இயேஸுஸ் [[Yayʹsoos] என உச்சரிக்கப்படுகிறது) என்று எழுத்துக் கூட்டுகின்றனர்.

நம்மில் பெரும்பான்மையர், நாமெல்லாருங்கூட, அதன் மூல உச்சரிப்பை உண்மையில் அறியாததால், இயேசுவின் பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டுமா? இதுவரையில், மொழிபெயர்ப்பாளர் எவரும் இந்த ஆலோசனையைக் கொண்டுவரவில்லை. நாம் அந்தப் பெயரைப் பயன்படுத்த விரும்புகிறோம், ஏனெனில் அது கடவுளின் மிகநேசமுள்ள குமாரன் இயேசு கிறிஸ்துவை அடையாளங்காட்டுகிறது, அவர் தம்முடைய ஜீவ இரத்தத்தை நமக்காகக் கொடுத்தார். பைபிளில் அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா இடத்திலுமிருந்து அதை நீக்கிவிட்டு, அதனிடத்தில் “போதகர்,” அல்லது “மத்தியஸ்தர்” என்ற வெறும் பட்டப்பெயரை வைப்பது இயேசுவுக்கு கனத்தைக் கொடுப்பதாக இருக்குமா? நிச்சயமாகவே இராது! நம்முடைய மொழியில் அது பொதுவாய் உச்சரிக்கப்படுகிற முறையில் இயேசுவுடைய பெயரை பயன்படுத்தும்போது நாம் அவரிடம் தொடர்புபடுத்துகிறோம்.

பைபிளில் நாம் வாசிக்கும் எல்லா பெயர்களைக் குறித்தும் இதைப்போன்ற விளக்கக்குறிப்புகளைச் சொல்ல முடியும். அவற்றை நம்முடைய சொந்த மொழியில் உச்சரிக்கிறோம், அவற்றின் மூல உச்சரிப்பைப் பின்தொடரும்படி நாம் முயற்சி செய்கிறதில்லை. இவ்வாறே நாம் “எரேமியா” என்று சொல்கிறோம், இர்மியாஹு (Yir·meyaʹhu) என்று சொல்வதில்லை. அவ்வாறே, ஏசாயா என்று நாம் சொல்கிறோம், அவருடைய சொந்த நாளில் இந்தத் தீர்க்கதரிசி எஷையாஹு (Yeshaʽ·yaʹhu) என பெரும்பாலும் அறியப்பட்டிருக்கலாமெனினும் அவ்வாறு அழைக்கிறோம். இந்தப் பெயர்களின் மூல உச்சரிப்பை அறிந்துள்ள அறிஞர்களுங்கூட, அவர்களைப்பற்றி பேசுகையில், அந்தப் பூர்வ உச்சரிப்பை அல்ல, இந்தத் தற்கால உச்சரிப்பையே பயன்படுத்துகின்றனர்.

யெகோவாவின் பெயரைக் குறித்ததிலும் அவ்வாறே உள்ளது. ஆங்கிலத்தில் ஜெஹோவா என்ற தற்கால உச்சரிப்பு, அது முதன்முதலில் உச்சரிக்கப்பட்ட அதே முறையில் இராவிடினும், இது அந்தப் பெயரின் முக்கியத்துவத்திலிருந்து எவ்வகையிலும் தரம் குறைப்பதில்லை. இது, அவரைப்பற்றி இயேசு பின்வருமாறு கூறின அந்தச் சிருஷ்டிகரை, உயிருள்ள கடவுளை, மகா உன்னதமானவரை அடையாளங்காட்டுகிறது: “பரலோகங்களில் இருக்கிற எங்கள் தகப்பனே, உம்முடைய பெயர் பரிசுத்தப்படுவதாக.”—மத்தேயு 6:9, NW.

‘அதை அகற்ற முடியாது’

மொழிபெயர்ப்பாளர்கள் பலர் யாவே என்ற உச்சரிப்பை ஆதரிக்கிறபோதிலும், புதிய உலக மொழிபெயர்ப்பு மற்றும் மற்ற பல மொழிபெயர்ப்புகளும் ஜெஹோவா என்ற முறையைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றன, ஏனெனில் நூற்றாண்டுகளாக மக்கள் அம்முறையோடு பழக்கப்பட்டவர்களாகியுள்ளனர். மேலும், இது, ய்ஹ்வ்ஹ் (YHWH) அல்லது ஜ்ஹ்வ்ஹ் (JHVH) என்ற டெட்ரக்ராமட்டனின் அந்த நான்கெழுத்துக்களை மற்ற முறைகளோடு சமமாகப் பாதுகாத்து வைக்கிறது. b

முன்னால், ஜெர்மன் பேராசிரியராகிய குஸ்டாவ் ஃபிரீட்ரிச் ஒஹலர் பெரும்பாலும் இதே காரணத்துக்காக இதைப்போன்ற தீர்மானத்தைச் செய்தார். அவர் பல்வேறு உச்சரிப்புகளைத் தர்க்கித்துப் பேசி பின்வருமாறு முடிவுசெய்தார்: “இது முதற்கொண்டு நான் ஜெஹோவா என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன், ஏனெனில், உண்மையில் இருக்கிறபடி, இந்தப் பெயர் நம்முடைய சொற்றொகுதியில் இப்பொழுது மிக அதிக இயல்பானதாகிவிட்டிருக்கிறது, அதை அகற்ற முடியாது.”—Theologie des Alten Testaments (பழைய ஏற்பாட்டின் இறையியல்), இரண்டாம் பதிப்பு, 1882-ல் பிரசுரிக்கப்பட்டது, பக்கம் 143.

அவ்வாறே, 1923-ம் பதிப்பாகிய Grammaire de l’hébreu biblique (பைபிள் முறையான எபிரெய இலக்கணம்) என்ற புத்தகத்தில், 49-ம் பக்கத்திலுள்ள அடிக்குறிப்பில், ஜெஸ்யூட் அறிஞர் பால் ஜூவன் பின்வருமாறு கூறுகிறார்: “எங்கள் மொழிபெயர்ப்புகளில், யாவே என்ற (தற்காலிக முடிவாய் ஏற்கப்பட்ட) சொல்லமைப்புக்குப் பதிலாக, ஜெஹோவா என்ற சொல்லமைப்பைப் பயன்படுத்தியிருக்கிறோம் . . . இது பிரெஞ்சில் பயன்படுத்தும் வழக்கமான நடைநயம் வாய்ந்த அமைப்பு.” பக்கம் 8-ல் உள்ள பெட்டியில் குறிப்பிட்டுக் காட்டப்படுகிறபடி, மற்ற மொழிகள் பலவற்றில் பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் இதைப்போன்ற அமைப்பைப் பயன்படுத்தியுள்ளனர்.

அவ்வாறெனில், யாவேயைப் போன்ற சொல்லமைப்பைப் பயன்படுத்துவது தவறா? இல்லவேயில்லை. ஜெஹோவா என்ற சொல்லமைப்பு பெரும்பான்மையான மொழிகளில் “இயல்பானதாக்கப்பட்டு” இருப்பதால், வாசகரிடமிருந்து விரைவான பதிலைக் காணலாம் என்பதால்தானே ஆகும். நாம் அந்தப் பெயரைப் பயன்படுத்துவதும் அதை மற்றவர்களுக்கு அறிவிப்பதுமே முக்கியமானக் காரியம். “ஜனங்களே நீங்கள், யெகோவாவுக்கு [ஜெஹோவாவுக்கு] நன்றி செலுத்துங்கள்! அவருடைய பெயரின்பேரில் கூப்பிடுங்கள். அவருடைய செயல்களை ஜனத்தாருக்குள் தெரியப்படுத்துங்கள். அவருடைய பெயர் உயர்வில் வைக்கப்பட்டுள்ளதெனக் குறிப்பிடுங்கள்.”—ஏசாயா 12:4, NW.

நூற்றாண்டுகளினூடே கடவுளுடைய ஊழியர்கள் இந்தக் கட்டளைக்கு ஒத்திசைவாக எவ்வாறு செயல்பட்டிருக்கின்றனரென நாம் காணலாம்.

[அடிக்குறிப்புகள்]

a பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு, 1984-ம் பதிப்பில், பிற்சேர்க்கை 1A-ஐப் பாருங்கள்.

b பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு, 1984-ம் பதிப்பில், பிற்சேர்க்கை 1A-ஐப் பாருங்கள்.

[பக்கம் 7-ன் பெட்டி]

ய்ஹ்வ்ஹ் என்ற இந்தப் பெயர் முதன்முதலில் எவ்வாறு உச்சரிக்கப்பட்டதென்பதைப்பற்றி வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறுபட்ட எண்ணங்களை உடையோராக இருக்கின்றனர்.

இந்த விளங்காதப் பெயர் ய்.ஹ்.வ்.ஹ் (The Mysterious Name of Y.H.W.H.) என்பதில், பக்கம் 74-ல், டாக்டர் M. ரீஸெல், “இந்த டெட்ரக்ராமட்டனின் ஒலிப்பின் உயிர்க்குறியீடு யெஹூவா (YeHūàH) அல்லது யாஹூவா (YaHūàH) என முதன்முதலில் இருந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

“ஜாவே (Jāhwéh) என்பது டெட்ரக்ராமட்டனின் உண்மையான உச்சரிப்பு அல்லவென அத்தாட்சி காட்டுகிறது, இல்லை பெரும்பாலும் நிரூபிக்கிறது . . . அந்தப் பெயர்தானே ஜாஹோஹ் (JĀHÔH) என்பதாக ஒருவேளை இருந்திருக்கலாம்” என்று கேம்பிரிட்ஜின் கானன் D. D. உவில்லியம்ஸ் கருதுகிறார்.—Zeitschrift für die alttestamentliche Wissenschaft (பழைய ஏற்பாட்டு அறிவுக்கான வெளியீடு), 1936, புத்தகம் 54, பக்கம் 269.

பிரெஞ்சு ரிவைஸ்ட் சேகன்ட் வர்ஷனில், பக்கம் 9-ல், பின்வரும் விளக்கக்குறிப்பு சொல்லப்பட்டது: “சமீப மொழிபெயர்ப்புகள் சிலவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள யஹ்வே (Yahvé) என்ற உச்சரிப்பு சில பூர்வ சாட்சிகளின்பேரில் ஆதாரங்கொண்டுள்ளது, ஆனால் அவை முடிவாய்த் தீர்மானிப்பவையாக இல்லை. தீர்க்கதரிசி எலியாவின் (எலியாஹோ [Eliyahou]) எபிரெய பெயரைப் போன்றதைப்போல், கடவுளுடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ள ஆட்களின் சொந்த பெயர்களைக் கவனத்துக்குள் எடுத்துக்கொண்டால், அந்த உச்சரிப்பு யஹோ (Yaho) அல்லது யஹூ (Yahou) என்றே இருக்கலாம்.”

ஜெர்மன் பைபிள் அறிஞர் டெல்லெர், தான் வாசித்திருந்த கடவுளுடைய பெயர்களின் வேறுபட்ட உச்சரிப்புகள் சிலவற்றை, 1749-ல் கூறினார்: “சிசிலி பட்டணத்து டயோடோரஸ், மக்ரோபியஸ், கிளெமென்ஸ் அலெக்ஸான்ட்ரினஸ், செயின்ட் ஜெரோம் மற்றும் ஓரிஜினெஸ் ஆகியோர் ஜேவோ (Jao) என்று எழுதினர்; சமாரியர்கள், எப்பிபேனியஸ், தியோடோரெட்டஸ், ஜாஹே, (Jahe) அல்லது ஜாவே (Jave) என்றெழுதினர்; லுட்விக் காப்பெல் ஜாவோஹ் (Javoh) என வாசிக்கிறது; ட்ரூஸியஸ், ஜாஹ்வே (Jahve) என்பதாக; ஹாட்டிங்கெர், ஜெஹ்வா (Jehva); மெர்சிரஸ், ஜெஹோவா (Jehovah); கஸ்டில்லியோ, ஜோவா (Jovah); மற்றும் லி க்ளெர்க், ஜா[உ]வோ (Jawoh) அல்லது ஜாவோ (Javoh).”

இவ்வாறு கடவுளுடைய பெயரின் மூல உச்சரிப்பு இனிமேலும் அறியப்படுகிறதில்லை என்பது தெளிவாயுள்ளது. இது உண்மையில் முக்கியமானதுமல்ல. அவ்வாறிருந்தால், நாம் பயன்படுத்துவதற்காகக் கடவுள்தாமே அது பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும்படி நிச்சயப்படுத்தியிருப்பார். நம்முடைய சொந்த மொழியிலுள்ள அதன் வழக்கமான உச்சரிப்பின்படி கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவதே முக்கியமான காரியம்.

[பக்கம் 8-ன் பெட்டி]

ஜெஹோவா என்ற சொல்லமைப்பு சர்வதேச ஏற்புடையதாக இருப்பதாய்க் காட்டும், வெவ்வேறுபட்ட மொழிகளிலுள்ள கடவுளுடைய பெயரின் சொல்லமைப்பு வகைகள்

அவாபாக்கல் - யெஹோவா

ஆங்கிலம் - ஜெஹோவா

இஃபிக் - ஜெஹோவா

இக்போ - ஜெஹோவா

இத்தாலியன் - ஜீயோவா

எக்ஸோஸா - யுயெஹோவா

ஃபின்னிஷ் - ஜெஹோவா

ஃபிஜியன் - ஜியோவா

ஃபுட்டுனா - ஐஹோவா

கன்டோனீஸ் - யெஹ்வோவா

சமோயன் - ஈயோவா

சோதோ - ஜெஹோவா

டகலாக் - ஜெஹோவா

டச் - ஜெஹோவா

டாஹிட்டியன் - ஜெஹோவா

டேனிஷ் - ஜெஹோவா

டோங்கன் - ஜீஹோவா

நரின்யேரி - ஜெஹோவா

நெம்பி - ஜீஹோவா

பிரெஞ்சு - ஜீஹோவா

புகோட்டு - ஜீஹோவா

பெட்டாட்ஸ் - ஜிஹூவா

போர்த்துகீஸ் - ஜியோவா

போலிஷ் - ஜெஹோவா

மவாலா-மாலு - ஜீஹோவா

மோட்டு - ஈஹோவா

மெளரி - இஹோவா

யொரூபா - ஜெஹோஃபா

ருமேனியன் - ஈஹோவா

வென்டா - யெஹோவா

ஜாப்பனீஸ் - எஹோபா

ஜூலு - யுஜெஹோவா

ஜெர்மன் - ஜெஹோவா

ஸ்பானிஷ் - ஜெஹோவா

ஸ்வாஹிலி - யெஹோவா

ஸ்வீடிஷ் - ஜெஹோவா

ஹங்கேரியன் - ஜெஹோவா

[பக்கம் 11-ன் பெட்டி]

பைபிள் சாராத சூழ்நிலைகளிலுங்கூட “ஜெஹோவா” என்பது கடவுளுடைய பெயராக விரிவாய் அறியப்படலாயிற்று.

ஜோஹன் லடிஸ்ராவ் பைர்க்கரால் எழுதப்பட்ட “அந்தச் சர்வவல்லமை” (“The Almightiness”) என்ற தலைப்பைக் கொண்ட உணர்ச்சிப் பாடலுக்கு ஃபிரான்ஸ் ஸ்கூபெர்ட் இசை அமைத்தார், அதில் ஜெஹோவாவின் பெயர் இரண்டு தடவைகள் காணப்படுகின்றன. அது “நபூக்கா” என்ற வெர்டியின் இசைநாடகத்தினுடைய கடைசி காட்சியின் முடிவிலும் பயன்படுத்தப்பட்டது.

கூடுதலாக, பிரெஞ்சு பாடல் எழுதும் ஆர்த்தர் ஹோனீகெரின் புராண இசைச் சொற்பொழிவாகிய “அரசன் தாவீது” என்பது, ஜெஹோவாவின் பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது, மேலும் விக்டர் ஹ்யூகோ என்னும் கீர்த்திப்பெற்ற பிரெஞ்சு நூலாசிரியர் தான் இயற்றிய 30-க்கு மேற்பட்ட நூல்களில் அதைப் பயன்படுத்தியிருக்கிறார். இவரும் லாமார்ட்டீனும் “ஜெஹோவா” என்ற தலைப்பையுடைய செய்யுள்களை எழுதினர்.

ஜெர்மனியின் கூட்டிணைவு வங்கி 1967-ல் பிரசுரித்த Deutsche Taler (தி ஜெர்மன் டேலர்) என்ற புத்தகத்தில், “ஜெஹோவா” என்ற பெயரைக் கொண்டுள்ள மிகப் பூர்வ நாணயங்கள் ஒன்றில் ஒரு படம் உள்ளது, அது ஸைலீஷியாவின் டச்சியிலிருந்து வந்த 1634-ன் ரீச்ஸ்டேலர். அந்த நாணயத்தின் மறுபுறத்திலிருந்த படத்தைக் குறித்து, அது சொல்வதாவது: “பிரகாசமான பெயர் ஜெஹோவாவின் கீழ், மேகங்களின் மத்தியிலிருந்து எழும்புவது, ஸைலீஷியன் குடும்ப மரபுசின்ன மேலங்கியுடன்கூடிய கிரீடமணிந்த கேடயம்.”

கிழக்கு ஜெர்மனியில், ருடால்ஸ்டட் அருங்காட்சியகத்தில், ஸ்வீடனின் 17-வது நூற்றாண்டு அரசனான, கஸ்டாவஸ் II அடால்ஃப், ஒருகாலத்தில் அணிந்த போர்க்கவசத் தொகுப்பின் கழுத்துப்பட்டையில், ஜெஹோவா என்ற பெயரைப் பெரிய எழுத்துக்களில் நீங்கள் காணலாம்.

இவ்வாறு, நூற்றாண்டுகளாக ஜெஹோவா என்ற சொல்லமைப்பு அகில உலகமெங்கும் ஏற்கப்பட்ட கடவுளுடைய பெயரின் உச்சரிப்பு முறையாக இருந்துவந்திருக்கிறது, அதைக் கேட்கும் ஆட்கள், யாரைப்பற்றிப் பேசப்படுகிறதென்பதை உடனடியாகக் கண்டுகொள்கின்றனர். பேராசிரியர் ஒஹெலெர் சொன்னபடி, “இந்தப் பெயர் நம்முடைய சொற்றொகுதியில் மிக அதிக இயல்பானதாகிவிட்டிருக்கிறது, அதை அகற்ற முடியாது.”—Theologie des Alten Testaments (பழைய ஏற்பாட்டின் இறையியல்).

[பக்கம் 6-ன் படம்]

கடவுளுடைய பெயரைக் கொண்ட ஒரு தூதனின் ஓவியப் பகுதி, வாடிகனிலுள்ள, செயின்ட் பீட்டர் கோயிலில், போப் கிளெமென்ட் XIII-ன் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது

[பக்கம் 7-ன் படம்]

கடவுளுடைய பெயரைக் கொண்ட பல நாணயங்கள் அடிக்கப்பட்டன. இது, 1661 தேதியைக் கொண்டது, ஜெர்மனியிலுள்ள நூரெம்பர்க்கிலிருந்து எடுக்கப்பட்டது. அந்த லத்தீன் வாக்கியம் வாசிப்பதாவது: “உம்முடைய செட்டைகளின் நிழலின்கீழ்”

[பக்கம் 9-ன் படங்கள்]

கடந்த காலங்களில், கடவுளுடைய பெயர் டெட்ரக்ராமட்டன் உருவில் மதக் கட்டடங்கள் பலவற்றின் அலங்கரிப்புக்குரிய பாகமாக்கப்பட்டது

ஃபோர்வீரி கத்தோலிக் பஸிலிக்கா, லியோன்ஸ், பிரான்ஸ்

போர்க்ஸ் தலைமைக் கோயில், பிரான்ஸ்

லா செல்லி டூநாய்ஸியிலுள்ள சர்ச், பிரான்ஸ்

டிக்னேயிலுள்ள சர்ச், தென் பிரான்ஸ்

சாவோ பாலோவிலுள்ள சர்ச், பிரேஸில்

ஸ்ட்ராஸ்பர்க் தலைமை சர்ச், பிரான்ஸ்

செயின்ட் மார்க்ஸ் தலைமை சர்ச், வெனிஸ், இத்தாலி

[பக்கம் 10-ன் படங்கள்]

ஜெஹோவாவின் பெயர் ஜெர்மனியில் போர்ட்ஷோல்மிலுள்ள மடத்தில் அது காணப்படுகிறபடி;

ஜெர்மன் நாணயத்தின்மீது, தேதி 1635;

ஃபெர்மார்னில் ஒரு சர்ச் கதவின்மீது, ஜெர்மனி;

மற்றும் ஹர்மன்ஸ்க்ளாகில் 1845-ன் ஒரு கல்லறைக்கல்லின்மீது, கீழ் ஆஸ்திரியா