Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய பெயர் யுகாயுகங்களினூடே

கடவுளுடைய பெயர் யுகாயுகங்களினூடே

கடவுளுடைய பெயர் யுகாயுகங்களினூடே

யெகோவா தேவன் தம்முடைய பெயரை மனிதர் அறியவும் பயன்படுத்தவும் வேண்டுமென விரும்புகிறார். பூமியின்மீதிருந்த அந்த முதல் இரண்டு ஆட்களுக்கு அவர் தம்முடைய பெயரை வெளிப்படுத்தின உண்மையிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது. ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய பெயரோடு நன்கு பழக்கப்பட்டிருந்தனரென நாம் அறிந்திருக்கிறோம், எவ்வாறெனில், ஏவாள் காயீனைப் பெற்ற பின்பு எபிரெய மூலவாக்கியத்தின்படி, அவள் பின்வருமாறு கூறினாள்: “யெகோவாவின் உதவியால் ஒரு மனிதனை நான் பெற்றேன்.”—ஆதியாகமம் 4:1, NW.

பின்னால், ஏனோக்கையும் நோவாவையும் போன்ற உண்மையுள்ள மனிதர்கள் “உண்மையான கடவுளோடு நடந்தார்கள்.” (ஆதியாகமம் 5:24; 6:9, NW) அவ்வாறெனில், அவர்களுங்கூட, கடவுளுடைய பெயரைத் தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பெயர், நீதியுள்ள மனிதன் நோவாவுடனும் அவருடைய குடும்பத்துடனும் அந்தப் பெரும் ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைத்தது. சிறிது காலத்துக்குப் பின் பாபேலில் நடந்த அந்தப் பெரும் கலகத்தின் மத்தியிலும், கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் அவருடைய பெயரைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தனர். கடவுள் இஸ்ரவேலுக்குக் கொடுத்தச் சட்டங்களில் இது நூற்றுக்கணக்கான தடவைகள் காணப்படுகிறது. உபாகமத்தில் மாத்திரமே, அது 551 தடவைகள் காணப்படுகிறது.

நியாயாதிபதிகளின் நாட்களில், இஸ்ரவேலர்கள் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவதிலிருந்து தயங்கி பின்வாங்கவில்லை. ஒருவரையொருவர் வாழ்த்திவரவேற்பதிலும் அவர்கள் அதைப் பயன்படுத்தினர். (மூல எபிரெயுவில்) போவாஸ் தன் அறுவடை வேலையாட்களை: “யெகோவா உங்களுடன் இருப்பாராக” என்று வாழ்த்தினதாக நாம் வாசிக்கிறோம். அவர்கள் அவருடைய வாழ்த்துதலுக்கு மறுமொழியாக: “யெகோவா உம்மை ஆசீர்வதிப்பாராக” என்று கூறினர்.—ரூத் 2:4, தி.மொ.

இஸ்ரவேலரின் சரித்திரம் முழுவதிலும், பாபிலோனில் தங்கள் சிறையிருப்புக்குப் பின் யூதாவுக்கு அவர்கள் திரும்பிவந்த காலம் வரையிலுமே, யெகோவாவின் பெயரைப் பொது வழக்கமாகப் பயன்படுத்துவது தொடர்ந்திருந்தது. கடவுளுடைய சொந்த இருதயத்துக்கு உகந்தவராக இருந்த மனிதனாகிய அரசன் தாவீது, கடவுளுடைய பெயரை வெகு விரிவாய்ப் பயன்படுத்தினார்—அது அவர் எழுதின சங்கீதங்களில் நூற்றுக்கணக்கான தடவைகள் காணப்படுகிறது. (அப்போஸ்தலர் 13:22) இஸ்ரவேலர் பலரின் சொந்த பெயர்களிலுங்கூட அது ஒன்றிணைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு அதோனியா என்ற பெயரைக் குறித்து நாம் வாசிக்கிறோம் (“என் கர்த்தர் யா”—“யா” என்பது யெகோவா என்பதற்குச் சுருக்கச் சொல்), ஏசாயா (“யெகோவாவின் இரட்சிப்பு”), யோனத்தான் (“யெகோவா கொடுத்திருக்கிறார்”), மீகா (“யாவைப் போன்றவர் யார்?”) மற்றும் யோசுவா (“யெகோவா இரட்சிப்பானவர்”).

பைபிளுக்குப் புறம்பே

பூர்வ காலங்களில் கடவுளுடைய பெயர் விரிவாகப் பயன்படுத்தப்பட்டதைப் பற்றி பைபிளுக்குப் புறம்பேயுள்ள மூலாதாரங்களிலிருந்து வரும் அத்தாட்சியும் உள்ளது. இஸ்ரேல் ஆய்வுப்பயண பத்திரிகை (Israel Exploration Journal) (புத்தகம் 13, எண் 2-ல்) வந்த அறிக்கையின்படி, 1961-ல் எருசலேமின் தென்மேற்குக்குச் சற்று குறுகிய தூரத்தில், பூர்வகால சவ அடக்கக் குகை ஒன்று புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் சுவர்களில், பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதி காலத்துக்குரியதாகத் தோன்றும் எபிரெய எழுத்துப்பொறிப்புகள் இருந்தன. இந்த எழுத்துப்பொறிப்புகள், “யெகோவா பூமி முழுவதின் கடவுளாக இருக்கிறார்,” என்பதைப்போன்ற கூற்றுகளைக் கொண்டிருக்கின்றன.

தென் இஸ்ரேலில், எரட்டில், எபிரெய எழுத்துக்களை அவற்றின்மீது கொண்டிருந்த உடைந்த பானைத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதைப் பற்றிய ஓர் அறிக்கை, 1966-ல், இஸ்ரேல் ஆய்வுப்பயண பத்திரிகை (புத்தகம் 16, எண் 1-ல்) பிரசுரிக்கப்பட்டது. இந்த எழுத்துக்கள் பொ.ச.மு. ஏழாவது நூற்றாண்டின் இரண்டாம் பாதி காலத்தின்போது எழுதப்பட்டன. அவற்றில் ஒன்று எலியாஷிப் என்ற பெயர்கொண்ட மனிதனுக்கு எழுதப்பட்ட தனிக் கடிதமாக இருந்தது. அந்தக் கடிதம் இவ்வாறு தொடங்குகிறது: “என் தலைவர் எலியாஷிப்புக்கு: யெகோவா உம்முடைய சமாதானத்துக்காகக் கேட்பாராக.” அது பின்வருமாறு முடிகிறது: “அவர் யெகோவாவின் வீட்டில் தங்குகிறார்.”

நெகெப்பில், 1975-லும் 1976-லும் வேலைசெய்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், காரை பூசப்பட்ட சுவர்களின்மீதும் பெரிய சேமிப்பு ஜாடிகளின்மீதும் கற்பாண்டங்களின்மீதும் எபிரெயு மற்றும் ஃபொனீஷிய எழுத்துப்பொறிப்புகளைக் கொண்ட மிகுதியானவற்றைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தினர். அந்த எழுத்துப்பொறிப்புகள், கடவுள் என்பதற்கான எபிரெயச் சொல்லையும், அதோடுகூட ய்ஹ்வ்ஹ் (YHWH) என்ற கடவுளுடைய பெயரை எபிரெய எழுத்துக்களிலும் கொண்டிருந்தன. ஜெரூசலமில்தானே, சுருட்டப்பட்ட ஒரு சிறிய வெள்ளித் தகடு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, அது பாபிலோனிய சிறையிருப்புக்கு முந்திய காலத்தியதாகத் தோன்றுகிறது. அதைப் பிரித்தபோது, எபிரெயுவில் யெகோவாவின் பெயர் அதில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.—பிப்ளிக்கல் ஆர்க்கியாலஜி ரிவ்யூ, மார்ச்/ஏப்ரல் 1983, பக்கம் 18.

கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட்டதன் மற்றொரு உதாரணம் லாகீஸ் கடிதங்கள் எனப்படுகிறவற்றில் காணப்படுகிறது. இந்தக் கடிதங்கள், மண்கல உடைசல்களின்மீது எழுதப்பட்டன, இவை 1935-க்கும் 1938-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளின்போது லாகீஸ் பாழிடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன, லாகீஸ் இஸ்ரவேலின் சரித்திரத்தில் முனைப்பாக விளங்கிய அரண்காப்புசெய்யப்பட்ட நகரம். அவை யூதேய புறக்காவற்படையிலிருந்த ஓர் அதிகாரியால், லாகீஸிலிருந்த யாவொஸ் என்ற பெயருடைய, தன் மேலதிகாரிக்கு எழுதப்பட்டவையெனத் தோன்றுகின்றன, பெரும்பாலும் பொ.ச.மு. ஏழாவது நூற்றாண்டின் முடிவின்போது இஸ்ரவேலுக்கும் பாபிலோனுக்கும் இடையே போர் நடந்தபோதெனத் தோன்றுகிறது.

வாசிக்கத் தெளிவாயிருந்த எட்டு மண்கல ஓடுகளில் ஏழு தங்கள் செய்தியை பின்வருவதைப்போன்ற வாழ்த்துதலால் தொடங்குகின்றன: “இந்தப் பருவகாலத்தை நல்ல சுகநலத்துடன் காணும்படி என் தலைவருக்கு யெகோவா கிருபைசெய்வாராக!” இந்த ஏழு செய்திகளில், மொத்தம் 11 தடவைகள் கடவுளுடைய பெயர் காணப்படுகிறது, இது பொ.ச.மு. ஏழாவது நூற்றாண்டின் முடிவின்போது யெகோவா என்ற பெயர் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தப்பட்டதை அனுபவித்ததெனத் தெளிவாகக் காட்டுகிறது.

புறமத அரசர்களும், இஸ்ரவேலரின் கடவுளைக் குறிப்பிட்டபோது, கடவுளுடைய இந்தப் பெயரை அறிந்திருந்தனர் மற்றும் பயன்படுத்தினர். இவ்வாறு, மோவாபியக் கல்லின்மீது, மோவாபின் அரசன் மேஷா இஸ்ரவேலுக்கு எதிராகத் தன் இராணுவ வீரச்செயல்களைக் குறித்து பெருமையுடன் கூறுகிறான், மேலும் மற்றக் காரியங்களோடுகூட, பின்வருமாறு கூறுகிறான்: “காமோஸ் என்னிடம் சொன்னார், ‘போய், இஸ்ரவேலிடமிருந்து நேபோவைக் கைப்பற்று!’ ஆகவே நான் இரவில் சென்று, விடியற்காலத்திலிருந்து நண்பகல்வரை அதற்கு எதிராகப் போர்செய்து, அதைக் கைப்பற்றி எல்லாரையும் கொன்றேன் . . . மேலும் நான் யெகோவாவின் [பாத்திரங்களை] அங்கிருந்து எடுத்து, அவற்றை காமோஸுக்கு முன் இழுத்துக் கொண்டுவந்தேன்.”

பைபிளுக்குப் புறம்பான மற்றவற்றில் கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட்டதைக் குறித்து, Theologisches Wörterbuch zum Alten Testament (பழைய ஏற்பாட்டின் இறையியல் அகராதி), புத்தகம் 3, பத்தி 538-ல், பின்வருமாறு சொல்கிறது: “இவ்வாறு ஜ்ஹ்வ்ஹ் (jhwh) என்ற உருவில் டெட்ரக்ராமட்டனின் ஏறக்குறைய 19 பத்திர ஆதாரமுடைய அத்தாட்சிகள், இந்தக் காரியத்தில் ம[ஸோரெட்டிக் மூ[லவாக்கியத்தின்] நம்பத்தக்கத்தன்மைக்குச் சாட்சி பகருகின்றன; இன்னும் அதிகத்தை எதிர்பார்க்கலாம், எல்லாவற்றிற்கும் மேலாக எரட்-ஆர்கைவ்களிலிருந்து.”—ஜெர்மன் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

கடவுளுடைய பெயர் மறக்கப்படவில்லை

கடவுளுடைய பெயரை அறிந்திருந்ததும் பயன்படுத்தினதுமான இது, இயேசுவின் காலத்துக்கு ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, மல்கியாவின் நாட்கள் வரையாகவும் தொடர்ந்தது. தன்னுடைய பெயரைத் தாங்கியுள்ள பைபிள் புத்தகத்தில், மல்கியா, கடவுளின் இந்தப் பெயருக்கு மிகுந்த முக்கியத்துவத்தைக் கொடுத்து, இதை மொத்தம் 48 தடவைகள் பயன்படுத்துகிறார்.

காலம் கடந்து செல்கையில், யூதர்கள் பலர் இஸ்ரவேல் தேசத்திலிருந்து வெகு தொலைவில் வாழலானார்கள், மேலும், சிலர் பைபிளை எபிரெய மொழியில் அதற்குமேலும் வாசிக்க முடியாமற்போனார்கள். ஆகவே, பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டில், அப்போதிருந்த பைபிள் பகுதியை (‘பழைய ஏற்பாட்டை’), அந்தப் புதிய சர்வதேச மொழியாகிய, கிரேக்கில் மொழிபெயர்ப்பதற்குத் தொடங்கினார்கள். ஆனால் கடவுளுடைய பெயர் புறக்கணிக்கப்படவில்லை. மொழிபெயர்ப்பாளர்கள் அதை விடாமல், அதன் எபிரெய உருவில் அதை எழுதிவைத்தனர். நம்முடைய நாள்வரை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அந்தக் கிரேக்க செப்டுவஜின்ட் பைபிளின் பூர்வ பிரதிகள் இதற்குச் சாட்சி பகருகின்றன.

எனினும், இயேசு பூமியில் இருந்தபோது நிலைமை என்னவாக இருந்தது? அவரும் அவருடைய அப்போஸ்தலரும் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினார்களா என்பதை நாம் எவ்வாறு அறியலாம்?

[பக்கம் 12-ன் படம்]

பொ.ச.மு. ஏழாவது நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், உடைந்த மண்பாண்ட துண்டின்மீது எழுதப்பட்ட இந்தக் கடிதத்தில் கடவுளுடைய பெயர் இருமுறை காணப்படுகிறது. (படம், அரும் பழமைப் பொருட்கள் மற்றும் பொருட்காட்சி சாலைகளின் இஸ்ரேல் பகுதியின் அனுமதியின்பேரில்)

[படத்திற்கான நன்றி]

(Picture by courtesy of the Israel Department of Antiquities and Museums)

[பக்கம் 13-ன் படங்கள்]

லாகீஸ் கடிதங்களிலும் இந்த மோவாபிய கல்லின்மீதுங்கூட கடவுளுடைய பெயர் காணப்படுகிறது