கிறிஸ்தவர்களும் அந்தப் பெயரும்
கிறிஸ்தவர்களும் அந்தப் பெயரும்
வைதீக யூதர்கள் கடவுளுடைய பெயரைச் சத்தமாக உச்சரிப்பதை நிறுத்தி, அதற்குப் பதிலாகக் கடவுள் மற்றும் ஈடற்ற அரசராகிய கர்த்தர் என்பதற்கான எபிரெயச் சொற்களை அதனிடத்தில் வைத்தது திட்டமாய் எப்போதென்பதை உறுதியாக ஒருவரும் சொல்லமுடியாது. இயேசுவின் காலத்துக்கு வெகு முன்பே கடவுளுடைய பெயரின் அன்றாட உபயோகம் நின்றுவிட்டதென சிலர் நம்புகின்றனர். ஆனால், பொ.ச. 70-ல் அந்த ஆலயம் அழிக்கப்படும் வரையில், ஆலயத்தில் மத ஆராதனைகளின்போது—முக்கியமாய்ப் பிராயச்சித்த நாளின்போது—பிரதான ஆசாரியர் அதைத் தொடர்ந்து உச்சரித்து வந்தாரென்பதற்கு உறுதியான அத்தாட்சி உள்ளது. ஆகவே, இயேசு பூமியில் இருந்தபோது, அது ஒருவேளை விரிவாகப் பயன்படுத்தப்படாவிடினும், அந்தப் பெயரின் உச்சரிப்பு அறியப்பட்டிருந்தது.
யூதர்கள் ஏன் கடவுளுடைய பெயரை உச்சரிப்பதை நிறுத்திவிட்டனர்? “உன் கடவுளாகிய யெகோவாவின் திருநாமத்தை வீணிலே வழங்காதே,” என்ற மூன்றாவது கற்பனையின் வார்த்தைகளை தவறாகப் பொருத்திப் பயன்படுத்தினது ஓரளவிலாவது காரணமாக இருக்கக்கூடும். (யாத்திராகமம் 20:7, தி.மொ.) நிச்சயமாகவே, இந்தக் கற்பனை, கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவதை தடுத்துக் கட்டளையிடவில்லை. மற்றப்படி, தாவீதைப்போன்ற கடவுளுடைய பூர்வ ஊழியர்கள் ஏன் அதைத் தாராளமாய்ப் பயன்படுத்தினர், எனினும் தொடர்ந்து யெகோவாவின் ஆசீர்வாதத்தை அனுபவித்தனர்? மேலும் கடவுள் ஏன் மோசேக்கு அதை உச்சரித்து, தன்னை அனுப்பினவர் யாரென இஸ்ரவேலருக்கு விளக்கிக் கூறும்படி மோசேயிடம் சொன்னார்?—சங்கீதம் 18:1-3, 6, 13; யாத்திராகமம் 6:2-8.
இருப்பினும், இயேசுவின் காலத்துக்குள், கடவுளுடைய நியாயமான கட்டளைகளை எடுத்து அவற்றிற்கு மிக உச்ச அளவான நியாயமற்ற முறையில் பொருள்விளக்கம் அளிக்கும் தீவிர மனப்போக்கு ஏற்பட்டிருந்தது. உதாரணமாக, பத்துக் கற்பனைகளின் நான்காவது கற்பனை, வாரந்தோறும் ஏழாம் நாளை இளைப்பாறுதலுக்குரிய ஒரு நாளாக, ஓய்வுநாளாகக் கைக்கொள்ளும்படி யூதர்களைக் கடமைப்படுத்தினது. (யாத்திராகமம் 20:8-11) வைதீக யூதர்கள், ஓய்வுநாளில் செய்யக்கூடியவை அல்லது செய்யக்கூடாதவை என்று மிகச் சிறிய செயலையுங்கூட கட்டுப்படுத்தும் எண்ணிக்கையற்ற சட்டங்களை உண்டாக்கி, அந்தக் கட்டளையை ஏளனத்துக்கேதுவான அளவுகளுக்குக் கொண்டுசென்றனர். சந்தேகமில்லாமல் அவர்கள் இதே மனநிலையில், கடவுளுடைய பெயர் அவமதிக்கப்படக்கூடாதென்ற நியாயமான கட்டளையை, மிக அதிக நியாயமற்ற உச்ச அளவுக்குக் கொண்டுசென்று, அந்தப் பெயர் உச்சரிக்கப்படவுங்கூடாதென்று சொன்னார்கள். a
இயேசுவும் அந்தப் பெயரும்
வேதப்பூர்வமற்ற அத்தகைய பாரம்பரியத்தை இயேசு பின்பற்றியிருப்பாரா? நிச்சயமாகவே இல்லை! ஓய்வுநாளில் சுகப்படுத்தும் வேலையைச் செய்வது யூதர்களின் சட்டமான மனிதனால் உண்டாக்கப்பட்ட சட்டத்தை மீறுவதையும் தம்முடைய உயிரையுங்கூட ஆபத்தில் வைப்பதையும் குறித்தபோதிலும் அவர் அவற்றைச் செய்யாமல் தம்மைத் தடுத்து வைத்துக்கொள்ளவில்லை. (மத்தேயு 12:9-14) உண்மையில், அவர்களுடைய பாரம்பரியங்கள் கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையை மீறிச் சென்றதால் இயேசு அந்தப் பரிசேயர்களைப் பாசாங்குக்காரரென கண்டனம் செய்தார். (மத்தேயு 15:1-9) ஆகவே, கடவுளுடைய பெயரை உச்சரிப்பதிலிருந்து அவர் தம்மைத் தடுத்து வைத்திருக்க மாட்டார், முக்கியமாய் அவருடைய சொந்த பெயர் இயேசு, “யெகோவா இரட்சிப்பானவர்” என்று பொருள்படுவதைக் கவனிக்கையில் அவ்வாறு செய்திருக்கமுடியாது.
ஒரு சந்தர்ப்பத்தில், இயேசு ஜெபாலயத்தில் எழுந்து நின்று ஏசாயாவுடைய சுருளின் ஒரு பாகத்தை வாசித்தார். அவர் வாசித்த அந்தப் பகுதியை நாம் இன்று ஏசாயா 61:1, 2 என அழைக்கிறோம், அங்கே கடவுளுடைய பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் காணப்படுகின்றன. (லூக்கா 4:16-21) அவர் அங்கே கடவுளின் பெயரை உச்சரிக்க மறுத்து, அதற்குப் பதில் “கர்த்தர்” அல்லது “கடவுள்” என வாசித்திருப்பாரா? நிச்சயமாகவே இல்லை. அது யூத மதத் தலைவர்களின் வேதப்பூர்வமற்ற பாரம்பரியத்தைப் பின்பற்றுவதைக் குறித்திருக்கும். மாறாக, நாம் வாசிப்பதாவது: “அவர் வேதபாரகரைப்போல், போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தார்.”—மத்தேயு 7:29.
உண்மையில், நாம் முன்னால் அறிந்துகொண்டபடி, அவர் கடவுளிடம் பின்வருமாறு ஜெபிக்கும்படி தம்மைப் பின்பற்றினோருக்குக் கற்பித்தார்: “உம்முடைய பெயர் பரிசுத்தப்படுவதாக.” (மத்தேயு 6:9, NW) தாம் கொல்லப்படுவதற்கு முந்தின இரவு ஜெபத்தில், அவர் தம்முடைய பிதாவிடம் பின்வருமாறு கூறினார்: “உலகத்திலிருந்து நீர் எனக்குத் தந்த மனுஷருக்கு உமது நாமத்தை வெளிப்படுத்தினேன் . . . பரிசுத்த பிதாவே, . . . நீர் எனக்குத் தந்த உமது நாமத்தில் அவர்களைக் காத்துக்கொள்ளும்.”—யோவான் 17:6, 11, தி.மொ.
கடவுளுடைய பெயரை இயேசு குறிப்பிட்ட இந்தக் குறிப்புகளைக் குறித்து, Der Name Gottes (கடவுளின் பெயர்) என்ற புத்தகம், பக்கம் 76-ல் பின்வருமாறு விளக்கினது: “கடவுளுடைய வெளிப்படுத்துதலைப் பற்றி பாரம்பரிய பழைய ஏற்பாட்டின் புரிந்துகொள்ளுதலானது, அவருடைய பெயரின் வெளிப்படுத்துதல் என்பதும், மேலும் இது பழைய ஏற்பாட்டின் கடைசி பகுதிகள் வரையாகத் தொடர்ந்து அதினூடாகக் கொண்டுசெல்லப்படுகிறது, ஆம், புதிய ஏற்பாட்டின் கடைசி பகுதிகளுக்குள்ளும் தொடருகிறது என்பதுமான ஆச்சரியமூட்டும் இந்த உண்மையை நாம் மதித்துணரவேண்டும். அங்கே, உதாரணமாக யோவான் 17:6-ல்: ‘உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்’ என நாம் வாசிக்கிறோம்.”
ஆம், இயேசு கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தாமல் தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டார் என்பது, முக்கியமாய் அது அடங்கியிருந்த எபிரெய வேதவாக்கியங்களின் பகுதிகளிலிருந்து அவர் மேற்கோளாக எடுத்துக் குறிப்பிட்டபோது அவ்வாறு செய்தாரென நினைப்பது வெகுவாய் நியாயமற்றதாயுள்ளது.
தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள்
முதல் நூற்றாண்டில் இயேசுவைப் பின்பற்றினவர்கள் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினார்களா? சகல தேசத்தாரின் ஜனங்களையும் சீஷராக்கும்படி இயேசு அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். (மத்தேயு 28:19, 20) அவர்கள் பிரசங்கிக்க வேண்டியிருந்த ஜனங்களில் பலர், யெகோவா என்ற பெயரால் யூதர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தின கடவுளைப்பற்றி எந்த அறிவும் இல்லாமல் இருந்தார்கள். கிறிஸ்தவர்கள், உண்மையான கடவுளை அவர்களுக்கு எவ்வாறு அடையாளம் காட்டமுடியும்? அவரைக் கடவுள் அல்லது கர்த்தர் என அழைப்பது போதுமானதாக இருந்திருக்குமா? இல்லை. அந்தப் பல தேசத்தார் தங்கள் சொந்த கடவுட்களையும் கர்த்தாக்களையும் உடையோராக இருந்தனர். (1 கொரிந்தியர் 8:5) உண்மையான கடவுளுக்கும் பொய்யானவற்றிற்கும் இடையே தெளிவான வேறுபாட்டை அந்தக் கிறிஸ்தவர்கள் எவ்வாறு காட்டியிருக்க முடியும்? உண்மையான கடவுளின் பெயரைப் பயன்படுத்துவதன் மூலம் மாத்திரமே.
இவ்வாறு, எருசலேமில் மூப்பர்களின் ஓர் ஆலோசனைக் கூட்டத்தின்போது சீஷன் யாக்கோபு பின்வருமாறு குறிப்பிட்டார்: “தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே. அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது.” (அப்போஸ்தலர் 15:14, 15) அப்போஸ்தலன் பேதுரு, பெந்தெகொஸ்தே அன்று பேசின பிரசித்திப்பெற்ற தன் பேச்சில், தீர்க்கதரிசி யோவேலின் பின்வரும் வார்த்தைகளை அவர் மேற்கோளாக எடுத்துக் கூறினபோது இந்தக் கிறிஸ்தவ செய்தியின் முக்கிய பாகத்தைக் குறிப்பிட்டுக் காட்டினார்: “ஜெஹோவாவின் பெயரின்பேரில் கூப்பிடுகிற ஒவ்வொருவனும் பத்திரமாய்த் தப்பிப்பிழைப்பான்.”—யோவேல் 2:32; அப்போஸ்தலர் 2:21, NW.
கடவுளுடைய பெயர் தனக்கு எவ்வளவு முக்கியத்துவமுடையதாக இருந்ததென்பதைப்பற்றி அப்போஸ்தலன் பவுல் எந்தச் சந்தேகத்தையும் விட்டுவைக்கிறதில்லை. ரோமருக்கு எழுதின தன் நிருபத்தில், தீர்க்கதரிசி யோவேலின் இதே வார்த்தைகளை அவர் எடுத்துக் குறிப்பிட்டு, உடன் கிறிஸ்தவர்கள், மற்றவர்களும் காப்பாற்றப்படும்படி, கடவுளுடைய பெயரைப்பற்றி அவர்களுக்குப் பிரசங்கிக்க வெளிச் செல்வதால், அந்தக் கூற்றில் தங்கள் விசுவாசத்தைக் காட்டும்படி அவர்களை ஊக்குவித்தார். (ரோமர் 10:13-15) பின்னால் தீமோத்தேயுவுக்கு எழுதின தன் நிருபத்தில்: “யெகோவாவின் பெயரைச் சொல்லுகிற ஒவ்வொருவனும் அநீதியை விட்டொழிக்கக்கடவன்” என அவர் எழுதினார். (2 தீமோத்தேயு 2:19, NW) முதல் நூற்றாண்டின் முடிவில், அப்போஸ்தலன் யோவான் கடவுளுடைய இந்தப் பெயரைத் தன் எழுத்துக்களில் பயன்படுத்தினார். “யாவைத் துதி” எனப் பொருள்படுகிற “அல்லேலூயா” என்ற சொல் வெளிப்படுத்துதலின் புத்தகத்தில் திரும்பத்திரும்ப காணப்படுகிறது.—வெளிப்படுத்துதல் 19:1, 3, 4, 6.
எனினும், கிறிஸ்தவ சபையில் விசுவாசத்துரோகம் ஒன்று ஏற்படுமென இயேசுவும் அவரைப் பின்பற்றினவர்களும் தீர்க்கதரிசனமுரைத்தனர். “உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதியிருந்தார். (2 பேதுரு 2:1; இவற்றையும் பாருங்கள்: மத்தேயு 13:36-43; அப்போஸ்தலர் 20:29, 30; 2 தெசலோனிக்கேயர் 2:3; 1 யோவான் 2:18, 19.) இந்த எச்சரிக்கைகள் நிறைவேற்றமடைந்தன. இவற்றின் ஒரு விளைவாகக் கடவுளுடைய பெயர் பின்னாக மறைவில் தள்ளப்பட்டது. பைபிளின் பிரதிகளிலிருந்தும் மொழிபெயர்ப்புகளிலிருந்துங்கூட நீக்கப்பட்டது! இது எவ்வாறு நடந்ததென்று நாம் காணலாம்.
[அடிக்குறிப்புகள்]
a சிலர் வேறொரு காரணத்தைக் கூறுகின்றனர்: அந்த யூதர்கள் கிரேக்கத் தத்துவவியலால் செல்வாக்குச் செலுத்தப்பட்டிருக்கலாம். உதாரணமாக, அலெக்ஸாந்திரியாவைச் சேர்ந்தவனும் இயேசுவோடு ஏறக்குறைய இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவனுமாயிருந்த ஒரு யூதத் தத்துவஞானியாகிய ஃபிலோ, கிரேக்கத் தத்துவஞானி பிளேட்டோவால் வெகுவாய்ச் செல்வாக்குச் செலுத்தப்பட்டிருந்தான், அவனைக் கடவுளால் ஏவப்பட்டவனென எண்ணினான். Lexikon des Judentums (யூத மதத்தின் அகராதி) “ஃபிலோ” என்பதன்கீழ் சொல்வதாவது, ஃபிலோ “(பிளேட்டோவின்) கிரேக்கத் தத்துவவியலின் மொழிநடையையும் எண்ணங்களையும் யூதரின் வெளிப்படுத்தப்பட்ட விசுவாசத்தோடு ஒன்றிணைத்தான்,” இது தொடக்கமாக “கிறிஸ்தவ சர்ச் பிரமுகர்களின்மீது காணக்கூடிய பாதிப்பைக் கொண்டிருந்தது.” கடவுளை விவரித்துக் கூறமுடியாது, ஆகவே பெயரிட்டுக் கூறமுடியாதவர் என்று ஃபிலோ கற்பித்தான்.
[பக்கம் 14-ன் படம்]
“பரிசுத்தம் யெகோவாவுக்கு உரியது” என எபிரெயுவில் பொருள்படும் அடையாளத்தைத் தன் தலைப்பாகையில் கொண்டுள்ள ஒரு யூதப் பிரதான ஆசாரியனின் இந்தப் படம், வாடிகனில் காணப்படுகிறது
[பக்கம் 15-ன் படம்]
இந்த 1805-க்குரிய ஜெர்மன் பைபிள் மொழிபெயர்ப்பு காட்டுகிறபடி, இயேசு ஜெபாலயத்தில் ஏசாயாவின் சுருளிலிருந்து வாசித்தபோது, அவர் கடவுளுடைய பெயரைச் சத்தமாய் உச்சரித்தார்.—லூக்கா 4:18, 19
[பக்கம் 16-ன் படங்கள்]
பேதுருவும் பவுலும் யோவேலின் தீர்க்கதரிசனத்திலிருந்து மேற்கோள் எடுத்துக் கூறினபோது கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினார்கள்.—அப்போஸ்தலர் 2:21; ரோமர் 10:13