Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாம் ஏன் கடவுளுடைய பெயரை அறிந்துகொள்ள வேண்டும்

நாம் ஏன் கடவுளுடைய பெயரை அறிந்துகொள்ள வேண்டும்

நாம் ஏன் கடவுளுடைய பெயரை அறிந்துகொள்ள வேண்டும்

“யெகோவாவின் பெயரின்பேரில் கூப்பிடுகிற ஒவ்வொருவனும் காப்பாற்றப்படுவான்.” (ரோமர் 10:13, NW) கடவுளுடைய பெயரை நாம் அறிவது எவ்வளவு இன்றியமையாததென்பதை அப்போஸ்தலன் பவுல் இந்தச் சொற்களைக்கொண்டு அறிவுறுத்தினார். அவருடைய கூற்று நம்முடைய முதல் கேள்விக்கு நம்மைத் திரும்பக் கொண்டுவருகிறது: கடவுளுடைய பெயர் ‘புனிதமாக்கப்படுதலை’ அல்லது ‘பரிசுத்தமாக்கப்படுதலை,’ இயேசு ஏன் தம்முடைய மாதிரி ஜெபத்தில் தொடக்கத்திலேயே, மற்ற அத்தனை பல முக்கியமான காரியங்களுக்கு முன்னால் வைத்தார்? இதைப் புரிந்துகொள்ள, இரண்டு முக்கிய சொற்களின் உட்பொருள்களை நாம் சிறிது நன்றாய் விளங்கிக்கொள்ள வேண்டும்.

முதலாவதாக, ‘புனிதமாக்குதல்,’ அல்லது ‘பரிசுத்தமாக்குதல்,’ என்றச் சொல் உண்மையில் பொருள்படுவதென்ன? சொற்பொருளில் அது “பரிசுத்தமாக்குவது” எனப் பொருள்படுகிறது. ஆனால் கடவுளுடைய பெயர் ஏற்கெனவே பரிசுத்தமாக இருக்கிறதல்லவா? நிச்சயமாகவே அது அவ்வாறு இருக்கிறது. நாம் கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துகையில், நாம் அதை, அது இருப்பதைப் பார்க்கிலும் அதிகம் பரிசுத்தமாக்குவதில்லை. மாறாக நாம் அதைப் பரிசுத்தமானதாக மதித்துணர்ந்து, தனிப்படுத்தி வைத்து, எல்லாவற்றிலும் மிக உயர்ந்த மதிப்புடையதாகக் கருதுகிறோம். கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படும்படி நாம் ஜெபிக்கையில், சர்வ சிருஷ்டியும் அதைப் பரிசுத்தமானதாக மதிக்கவிருக்கும் அந்தக் காலத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

இரண்டாவதாக, “பெயர்” என்ற இந்தச் சொல்லின் சரியான உட்குறிப்பு என்ன? கடவுள், யெகோவா என்ற பெயரையுடையவராக இருக்கிறாரெனவும், பைபிளில் அவருடைய பெயர் ஆயிரக்கணக்கான தடவைகள் காணப்படுகிறதெனவும் நாம் கண்டோம். மேலும், அந்தப் பெயரை பைபிள் வாக்கியத்தில் அதற்குரிய சரியான இடத்தில் திரும்ப வைக்கவேண்டிய முக்கியத்துவத்தையும் நாம் கலந்தாராய்ந்தோம். இந்தப் பெயர் அங்கில்லையெனில், சங்கீதக்காரனின் பின்வரும் வார்த்தைகள் எவ்வாறு நிறைவேறக் கூடும்: “யெகோவாவே, உம்முடைய பெயரை அறிவோர் உம்மில் நம்பிக்கை வைப்பர், ஏனெனில் உமக்காகத் தேடுவோரை நீர் நிச்சயமாகவே கைவிடீர்.”—சங்கீதம் 9:10, NW.

ஆனால் ‘கடவுளுடைய பெயரை அறிவது’ எபிரெயுவில் கடவுளுடைய பெயர் ய்ஹ்வ்ஹ் (YHWH), அல்லது ஆங்கிலத்தில், ஜெஹோவா (தமிழில், யெகோவா) என்ற வெறும் மூளைத்திறனுக்குரிய அறிவு மாத்திரமே உட்படுகிறதா? இல்லை, அதைப்பார்க்கிலும் அதிகத்தை அது குறிக்கிறது. மோசே சீனாய் மலையில் இருந்தபோது, “யெகோவா ஒரு மேகத்தில் இறங்கி அங்கே [மோசே] அருகே நின்று யெகோவாவின் நாமத்தைச் சத்தமிட்டுக் கூறினார்.” யெகோவாவின் பெயரை இவ்வாறு கூறினது எதைக் குறிப்பாக உட்படுத்தியது? அவருடைய பண்புகளின் ஒரு விவரிப்பை உட்படுத்தியது: “யெகோவா, யெகோவா . . . உருக்கமும் இரக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் சத்தியமுமுள்ள கடவுள்.” (யாத்திராகமம் 34:5, 6, தி.மொ.) மறுபடியுமாக, தான் மரிப்பதற்குச் சிறிது முன்னால், மோசே இஸ்ரவேலரிடம்: “யெகோவா திருநாமம் பிரசித்தம்பண்ணுவேன்,” எனக் கூறினார். இதைப் பின்தொடர்ந்து வந்ததென்ன? அவருடைய மகத்தான குணங்கள் சில குறிப்பிடப்பட்டன, பின்பு கடவுள் தம்முடைய பெயரினிமித்தம் இஸ்ரவேலினிடமாகத் தாம் நிறைவேற்றினவற்றைப் பற்றி திரும்ப நினைவுபடுத்தப்பட்டன. (உபாகமம் 32:3-43) ஆகவே, கடவுளுடைய பெயரை அறிவதானது, அந்தப் பெயர் குறித்துநிற்பதைத் தெரிந்துகொள்வதையும் அதை உடையவரான அந்தக் கடவுளை வணங்குவதையும் குறிக்கிறது.

யெகோவா தம்முடைய பெயரைத் தம்முடைய பண்புகளுடனும், நோக்கங்களுடனும், செயல்களுடனும் இணைத்திருப்பதால், கடவுளுடைய பெயர் பரிசுத்தமானதென பைபிள் சொல்வதன் காரணத்தை நாம் காணமுடிகிறது. (லேவியராகமம் 22:32) அது மாட்சிமைபொருந்தியதும், மகத்துவமானதும், திகிலூட்டுவதும், எட்டக்கூடாதமுறையில் உயர்வானதுமாக உள்ளது. (சங்கீதம் 8:1; 99:3; 148:13) ஆம், கடவுளுடைய பெயர் வெறும் பெயர் குறிப்புச் சீட்டைப்பார்க்கிலும் மேம்பட்டது. அது அவரை ஓர் ஆளாகக் குறித்துக்காட்டி நிற்கிறது. ஓரளவு காலத்துக்குப் பயன்படுத்தும்படியும் பின்பு “கர்த்தர்” என்பதைப்போன்ற பட்டப்பெயரைக் கொண்டு பதிலீடு செய்யப்படும்படியும் அது வெறும் தற்காலிகமான பெயராக இல்லை. யெகோவாதாமே மோசேயினிடம் பின்வருமாறு கூறினார்: “யெகோவா . . . என்றென்றும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என்னை நினைப்பதற்குரிய பேர்.”—யாத்திராகமம் 3:15, தி.மொ.

தன் விருப்பப்படியெல்லாம் முயற்சி செய்தாலும், மனிதன் கடவுளுடைய பெயரை இந்தப் பூமியிலிருந்து ஒருபோதும் நீக்க முடியாது. “சூரியன் உதிக்கிற திசைதொடங்கி அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும் ஜாதியாருக்குள்ளே என் நாமமே பெரிது; சகல இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படுகிறது; ஜாதியாருக்குள்ளே என் நாமமே பெரிது என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.”—மலாகி 1:11, தி.மொ.; யாத்திராகமம் 9:16; எசேக்கியேல் 36:23.

ஆகையால், கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுவதே மற்ற எந்த விவாதத்தைப் பார்க்கிலும் மிக அதிக முக்கியமாக உள்ளது. கடவுளுடைய நோக்கங்கள் யாவும் அவருடைய பெயரோடு இணைக்கப்பட்டுள்ளன. சாத்தான், யெகோவாவைப் பொய்யரெனவும், மனித குலத்தை ஆளத் தகுதியற்றவரெனவும் செயல்முறையளவில் அழைத்ததன்மூலம் யெகோவாவின் பெயரை முதலாவதாக நிந்தனை செய்தபோது மனிதவர்க்கத்தின் பிரச்னைகள் தொடங்கின. (ஆதியாகமம் 3:1-6; யோவான் 8:44) கடவுளுடைய பெயர் சரியான முறையில் நேர்மை நிரூபிக்கப்படுகையில் மாத்திரமே, மனிதவர்க்கம் சாத்தானுடைய பொய்யின் அழிவுக்கேதுவான பாதிப்புகளிலிருந்து முழுமையான விடுதலையை அனுபவித்து மகிழும். இதனிமித்தமே கிறிஸ்தவர்கள், கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுவதற்காக அவ்வளவு ஊக்கமாய் ஜெபிக்கின்றனர். ஆனால், அதைப் பரிசுத்தப்படுத்துவதற்குத் தாங்கள் செய்ய முடிகிற காரியங்களும் இருக்கின்றன.

கடவுளுடைய பெயரை நாம் எவ்வாறு பரிசுத்தப்படுத்தலாம்?

ஒரு வழியானது மற்றவர்களிடம் யெகோவாவைப்பற்றிப் பேசி, கிறிஸ்து இயேசுவினால் ஆளப்படும் அவருடைய ராஜ்யமே மனிதவர்க்கத்தின் ஒரே நம்பிக்கையெனக் குறிப்பிட்டுக் காட்டுவதாகும். (வெளிப்படுத்துதல் 12:10) ஏசாயா தீர்க்கதரிசனத்தின் பின்வரும் இந்த வார்த்தைகளின் தற்கால நிறைவேற்றமாகப் பலர் இதைச் செய்கின்றனர்: “அக்காலத்திலே நீங்கள் பாடி: யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள்; [அவருடைய பெயரின்பேரில் கூப்பிடுங்கள், NW]; அவருடைய திருச்செயல்களை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய திருநாமமே உயர்ந்ததென்று பிரஸ்தாபம் பண்ணுங்கள். யெகோவாவைத் துதித்துப் பாடுங்கள்; அவர் மகத்துவமானவைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படுக. . . . என்பீர்கள்.”—ஏசாயா 12:4, 5, தி.மொ.

மற்றொரு வழியானது கடவுளுடைய சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதாகும். யெகோவா இஸ்ரவேல் ஜனத்தினிடம் பின்வருமாறு கூறினார்: “நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு அவைகளின்படியே செய்யவேண்டும், நானே யெகோவா. என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தமற்றதுபோலாகச் செய்யாதிருங்கள்; நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தராக விளங்குவேன். உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா நானே.”—லேவியராகமம் 22:31, 32, தி.மொ.

இஸ்ரவேலர் யெகோவாவின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டது எவ்வாறு அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தினது? அந்த நியாயப்பிரமாணம் அவருடைய பெயரின் ஆதாரத்தின்பேரில் இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்டது. (யாத்திராகமம் 20:2-17) ஆகையால், அவர்கள் அந்த நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடந்தபோது, அந்தப் பெயருக்குத் தகுந்த கனத்தையும் மதிப்பையும் காட்டினோராக இருந்தனர். மேலும், ஒரு ஜனமாக இஸ்ரவேலரின்மீது யெகோவாவின் பெயர் இருந்தது. (உபாகமம் 28:10; 2 நாளாகமம் 7:14) நேர்மையான முறையில் நடந்துகொள்ளும் ஒரு பிள்ளை தன் தகப்பனுக்குக் கனத்தைக் கொண்டுவருவதுபோல், அவர்கள் நேர்மையான முறையில் நடந்தபோது, இது அவருக்குத் துதியைக் கொண்டுவந்தது.

மறுபட்சத்தில், இஸ்ரவேலர் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடக்கத் தவறினபோது, அவர்கள் அவருடைய பெயருக்கு நிந்தனையைக் கொண்டுவந்தார்கள். இவ்வாறு, விக்கிரகங்களுக்குப் பலிசெலுத்துவதும், பொய் ஆணையிடுவதும், ஏழைகளை ஒடுக்குவதும், வேசித்தனஞ்செய்வதும் ‘கடவுளுடைய பெயரைத் தீட்டுப்படுத்துவதென’ பைபிளில் விவரிக்கப்பட்டுள்ளன.—லேவியராகமம் 18:21; 19:12; எரேமியா 34:16; எசேக்கியேல் 43:7.

அவ்வாறே, கிறிஸ்தவர்களும் கடவுளுடைய பெயரில் கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளனர். (யோவான் 8:28) அவர்களும், ‘யெகோவாவின் பெயருக்கான ஒரு ஜனத்துடன்’ இணைந்துள்ளனர். (அப்போஸ்தலர் 15:14, NW) ஆகையால், ‘உம்முடைய பெயர் புனிதப்படுவதாக’ என்று உள்ளப்பூர்வமாய் ஜெபிக்கும் ஒரு கிறிஸ்தவன், கடவுளுடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதால் தன் சொந்த வாழ்க்கையில் அந்தப் பெயரைப் பரிசுத்தப்படுத்துவான். (1 யோவான் 5:3) இது கடவுளுடைய குமாரனான இயேசு கொடுத்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதையும் உட்படுத்தும், அவர் எப்பொழுதும் தம்முடைய பிதாவை மகிமைப்படுத்தினார்.—யோவான் 13:31, 34; மத்தேயு 24:14; 28:19, 20.

இயேசு, தாம் கொல்லப்படுவதற்கு முந்தின இரவில், கடவுளுடைய பெயரின் முக்கியத்துவத்தைக் கிறிஸ்தவர்களுக்கு விளக்கமாகத் தெரியச்செய்தார். தம்முடைய பிதாவிடம்: “உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன்” என்று சொன்னபின்பு, அவர் மேலும் தொடர்ந்து விளக்குகிறார், ‘நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்தில் இருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும்.’ (யோவான் 17:26) அந்தச் சீஷர்கள் கடவுளுடைய பெயரைத் தெரிந்துகொள்வது அவர்கள் கடவுளுடைய அன்பைத் தாங்கள்தாமே அறிந்துகொள்வோராவதை உட்படுத்தினது. அவர்கள், தங்கள் அன்புள்ள தகப்பனாகக் கடவுளுடன் அறிமுகமாவதை இயேசு அவர்களுக்குக் கூடியதாக்கினார்.—யோவான் 17:3.

இது உங்களை எவ்வாறு பாதிக்கிறது

எருசலேமில், கிறிஸ்தவ அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் கூடின முதல்-நூற்றாண்டு கூட்டம் ஒன்றில், சீஷனாகிய யாக்கோபு பின்வருமாறு கூறினார்: “தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே.” அந்தப் பெயரைப் பயன்படுத்த அல்லது தாங்க நீங்கள் தவறினால், “தமது நாமத்திற்காக ஒரு ஜனம்” ஆக இருக்கும்படி கடவுள் தெரிந்தெடுப்போருடன் நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளப்பட முடியுமா?—அப்போஸ்தலர் 15:14.

யெகோவா என்ற பெயரைப் பயன்படுத்துவதற்குப் பலர் தயங்குகிறபோதிலும், மற்றும் பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் பலர் தங்கள் மொழிபெயர்ப்புகளில் அதை விட்டுவிடுகிறபோதிலும், பூமியைச் சுற்றிலும் லட்சக்கணக்கான ஆட்கள், கடவுளுடைய பெயரைத் தாங்குவதற்கும், அதை வணக்கத்தில் மட்டுமல்ல அன்றாடப் பேச்சிலும் பயன்படுத்துவதற்கும், அதை மற்றவர்களுக்கு அறிவிப்பதற்குமுரிய சிலாக்கியத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுள்ளனர். பைபிளின் கடவுளைப்பற்றி எவராவது உங்களிடம் பேசி யெகோவா என்ற இந்தப் பெயரைப் பயன்படுத்தினால், எந்த மதத் தொகுதியுடன் அவரை நீங்கள் இணைப்பீர்கள்? பூர்வ காலங்களில் அவரை வணங்கினவர்கள் செய்ததுபோலவே, தங்கள் வணக்கத்தில் தவறாமல் நிலையாய்க் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தும் ஒரே ஒரு தொகுதியே இந்த உலகத்தில் உள்ளது. அவர்கள் யெகோவாவின் சாட்சிகள்.

யெகோவாவின் சாட்சிகள் என்ற பைபிளில் ஆதாரங்கொண்ட இந்தப் பெயர், இந்தக் கிறிஸ்தவர்களை ‘கடவுளுடைய பெயருக்கான ஜனமாக’ அடையாளங்காட்டுகிறது. அந்தப் பெயரைத் தாங்குவதில் அவர்கள் பெருமைகொள்கிறார்கள், ஏனெனில் அது யெகோவா தேவன்தாமே உண்மையான வணக்கத்தாருக்குக் கொடுத்தப் பெயர். ஏசாயா 43:10-ல் (தி.மொ.) நாம் வாசிப்பதாவது: “நீங்களே என் சாட்சிகள், நீங்கள் நான் தெரிந்தெடுத்த என் தாசன்.” இங்கே கடவுள் யாரைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்? முந்தின வசனங்கள் சிலவற்றைக் கவனியுங்கள்.

அதே அதிகாரம் 5-லிருந்து 7 வரையான வசனங்களில் ஏசாயா பின்வருமாறு சொல்கிறார்: “பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன். நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும், நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்.” நம்முடைய நாளில், அந்த வசனங்கள், கடவுளைத் துதிக்கும்படியும் அவருடைய சாட்சிகளாக இருக்கும்படியும் சகல தேசங்களிலிருந்தும் அவர் கூட்டிச் சேர்த்திருக்கிற கடவுளுடைய சொந்த ஜனங்களைக் குறிப்பிடுகின்றன. இவ்வாறு கடவுளுடைய பெயர் அவரை அடையாளங்காட்டுவது மட்டுமல்லாமல், இன்று பூமியிலுள்ள அவருடைய உண்மையான ஊழியர்களையும் அடையாளங்காட்டுவதற்கும் உதவிசெய்கிறது.

கடவுளுடைய பெயரை அறிந்திருப்பதிலிருந்து வரும் ஆசீர்வாதங்கள்

யெகோவா தம்முடைய பெயரை நேசிப்போரைப் பாதுகாக்கிறார். சங்கீதக்காரன் பின்வருமாறு கூறினார்: “அவன் என்மேல் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனைக் காப்பேன்.” (சங்கீதம் 91:14, தி.மொ.) மேலும் அவர் அவர்களை நினைவுகூருகிறார்: “இப்படியிருக்கையிலேயே யெகோவாவுக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிவந்தார்கள், யெகோவா கவனித்துக் கேட்டார்; யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கெனவும் அவருடைய திருநாமத்தை நினைக்கிறவர்களுக்கெனவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.”—மலாகி 3:16, தி.மொ.

இவ்வாறு, கடவுளுடைய பெயரை அறிந்திருப்பதிலிருந்தும் நேசிப்பதிலிருந்தும் வரும் நன்மைகள் இந்த வாழ்க்கைக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கு, பரதீஸ் பூமியில் மகிழ்ச்சியோடு வாழும் நித்திய ஜீவனை யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். தாவீது பின்வருமாறு எழுதும்படி தேவாவியால் ஏவப்பட்டார்: “தீங்குசெய்வோர் தாமே அறுப்புண்டுபோவர், யெகோவாவில் நம்பிக்கை வைத்திருப்போர் பூமியைச் சுதந்தரிப்போராக இருப்பர், அவர்கள் மிகுந்த சமாதானத்தில் தங்கள் மிகச் சிறந்த இன்பத்தை நிச்சயமாகவே கண்டடைவர்.”—சங்கீதம் 37:9, 11, NW.

இது எவ்வாறு கூடியதாயிருக்கும்? இயேசு பதிலளித்தார். “உம்முடைய [பெயர், NW] பரிசுத்தப்படுவதாக,” என்று ஜெபிக்கும்படி நமக்குக் கற்பித்த அதே மாதிரி ஜெபத்தில், அவர் பின்வருமாறு மேலும் கூறினார்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:9, 10) ஆம், இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தில் கடவுளுடைய ராஜ்யம் கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தும், மேலும் இந்தப் பூமிக்கு நல்ல நிலைமைகளையும் கொண்டுவரும். பொல்லாங்கை முற்றிலும் அகற்றும், போர், குற்றச்செயல், பஞ்சம், நோய் மற்றும் மரணத்தை நீக்கிப்போடும்.—சங்கீதம் 46:8, 9; ஏசாயா 11:9; 25:6; 33:24; வெளிப்படுத்துதல் 21:3, 4.

அந்த ராஜ்யத்தின்கீழ் நீங்கள் நித்திய ஜீவனை அனுபவித்து மகிழலாம். எவ்வாறு? கடவுளை அறியவருவதன் மூலம். “ஒரே உண்மையான கடவுளாகிய உம்மைப்பற்றியதும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றியதுமான அறிவை அவர்கள் பெற்றுவரும் இதுவே நித்திய ஜீவனைக் குறிக்கிறது.” (யோவான் 17:3, NW) இந்த உயிரளிக்கும் அறிவைப் பெற்றுக்கொள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவி செய்வதில் இன்பங்கொள்வார்கள்.—அப்போஸ்தலர் 8:29-31.

சிருஷ்டிகர் தமக்கு மிக அருமையாயுள்ள ஒரு சொந்த பெயரை உடையவர் என்று இந்தச் சிறு புத்தகத்திலுள்ள தகவல் உங்களுக்கு நம்பிக்கை அளித்ததென நம்பப்படுகிறது. அது உங்களுக்கும் மிக அதிக அருமையானதாக இருக்கவேண்டும். அந்தப் பெயரை அறிவதன் மற்றும் பயன்படுத்துவதன், முக்கியமாய் வணக்கத்தில் அவ்வாறு செய்வதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணருவீர்களாக.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தீர்க்கதரிசி மீகா பின்வருமாறு தைரியமாய்ச் சொன்னதுபோல் சொல்லும்படி நீங்கள் திடமாய்த் தீர்மானிப்பீர்களாக: “எல்லா மக்களினங்களும், தங்கள் பங்காக, ஒவ்வொன்றும் அதனதன் கடவுளின் பெயரில் நடக்கும்; நாங்களோவெனில், எங்கள் பங்காக, எங்கள் கடவுளாகிய யெகோவாவின் பெயரில் வரையறையில்லாக் காலத்துக்கும், என்றென்றுமாகவுமே நடப்போம்.”—மீகா 4:5, NW.

[பக்கம் 28-ன் சிறு குறிப்பு]

‘கடவுளுடைய பெயரை அறிவது’ அவருடைய பெயர் யெகோவா என்ற உண்மையைப்பற்றிய வெறும் தலையறிவைக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் அதிகத்தைக் குறிக்கிறது

[பக்கம் 30-ன் சிறு குறிப்பு]

யெகோவாவின் பெயர் ‘மகத்துவமும், மேன்மையும் பயமூட்டுவதும், எட்டமுடியாதபடி உயர்ந்ததுமாக’ உள்ளது. கடவுளுடைய நோக்கங்களெல்லாம் அவருடைய பெயருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன

[பக்கம் 29-ன் பெட்டி]

ஆங்லிக்கன் தியலாஜிக்கல் ரிவ்யூ (அக்டோபர் 1959) என்ற ஒரு கட்டுரையில், டாக்டர் உவால்டர் லோரி என்பவர், கடவுளுடைய பெயரை அறிவதற்கானத் தேவையை விளக்கமாகத் தெரியும்படி குறிப்பிட்டார். அவர் எழுதினதாவது: “மனித உறவுகளில் நாம் நேசிக்கும் ஒருவரின், நாம் பேசிக்கொண்டிருக்கும் ஒருவரின், அல்லது யாரைப்பற்றிப் பேசுகிறோமோ அவரின் இடுகுறிப் பெயரை, அந்தச் சொந்த பெயரை அறிவது உச்ச அளவில் முக்கியமானதாயுள்ளது. கடவுளிடம் மனிதனின் உறவிலும் சரியாக அவ்வாறேயுள்ளது. கடவுளைப் பெயரால் அறியாத ஒரு மனிதன் அவரை ஓர் ஆளாக உண்மையில் அறிகிறதில்லை, அவருடன் பேசும் அறிமுகம் அவனுக்கில்லை (ஜெபத்தால் இதுவே கருதப்படுகிறது). அவன் அவரை ஆளல்லாத ஒரு சக்தியாக மாத்திரமே அறிந்தால், அவரை நேசிக்க முடியாது.”