Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அறியப்படாத கடவுளை மாயமந்திரம், ஆவியுலகத் தொடர்பு மூலம் தேடல்

அறியப்படாத கடவுளை மாயமந்திரம், ஆவியுலகத் தொடர்பு மூலம் தேடல்

அதிகாரம் 4

அறியப்படாத கடவுளை மாயமந்திரம், ஆவியுலகத் தொடர்பு மூலம் தேடல்

“ஏதென்சு நகர மக்களே, நீங்கள் மிகுந்த சமயப் பற்றுள்ளவர்கள் என்பதை நான் காண்கிறேன்.” (அப்போஸ்தலர் [திருத்தூதர் பணிகள்] 17:22, பொது மொழிபெயர்ப்பு) இப்படித்தான் கிரீஸிலுள்ள பண்டைய நகரமாகிய ஏதன்ஸிலுள்ள ஆரியோபாகஸில், அதாவது மார்ஸ் மேடையில் கூடியிருந்த கூட்டத்தாரிடம் கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் சொன்னார். ஏனென்றால் “அந்நகரில் சிலைகள் நிறைந்திருப்பதை” அவர் முன்பு பார்த்திருந்தார். (அப்போஸ்தலர் 17:16, பொ.மொ.) எந்தச் சிலைகளைப் பார்த்திருந்தார்?

2அநேக இனத்தவர் வாழ்ந்துவந்த அந்நகரில் கிரேக்கர் மற்றும் ரோமர் வணங்கிய பல்வேறு தெய்வங்களின் சிலைகளை பவுல் பார்த்திருந்தார்; தெய்வங்களை வழிபடுவதில் மக்கள் எந்தளவுக்கு மூழ்கிப் போயிருந்தனர் என்பது நன்றாகவே தெரிந்தது. ஏதன்ஸ் நகரத்தார், தாங்கள் ஏதோவொரு முக்கியமான அல்லது சக்தியுள்ள தெய்வத்தை வழிபட தவறிவிட்டிருப்போமோ என பயந்து, அந்தத் தெய்வத்தின் கோபத்துக்கு ஆளாகாதிருக்க தங்களுடைய வழிபாட்டில் ஓர் ‘அறியப்படாத தேவனையும்’ சேர்த்திருந்தனர். (அப்போஸ்தலர் 17:23) தெய்வங்கள் மீது அவர்களுக்கிருந்த பயத்தை இது தெளிவாக காட்டியது.

3தெய்வங்களை, முக்கியமாக அறியப்படாத தெய்வங்களைக் குறித்து பயந்தவர்கள், முதல் நூற்றாண்டிலிருந்த ஏதன்ஸ் நகரத்தார் மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எல்லா மனிதரையுமே அந்தப் பயம் ஆட்டி வைத்திருக்கிறது. உலகின் பல பாகங்களில், மக்களுடைய வாழ்க்கையின் ஏறக்குறைய ஒவ்வொரு அம்சமும் ஏதோவொரு தெய்வத்தோடு அல்லது ஆவியோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருக்கிறது. நாம் முந்தைய அதிகாரத்தில் பார்த்த வண்ணமாக, பண்டைய எகிப்தியர், கிரேக்கர், ரோமர், சீனர் போன்றவர்களுடைய புராணக்கதைகள் தெய்வங்களையும் ஆவிகளையும் பற்றிய கருத்துகளில் ஆழமாக வேரூன்றியிருந்தன. இக்கருத்துகள் தனிப்பட்ட விவகாரங்களிலும் தேசிய விவகாரங்களிலும் முக்கிய பங்கு வகித்தன. இடைக் காலங்களின்போது, கிறிஸ்தவமண்டல நாடுகள் முழுவதிலும் இரசவாதிகள் (alchemists), மந்திரவாதிகள், சூனியக்காரிகள் ஆகியோரை பற்றிய கதைகள் பிரபலமாக இருந்தன. இன்றும் அதே நிலைமைதான்.

இன்றைய சமய சடங்குகளும் மூடநம்பிக்கைகளும்

4அறிந்தோ அறியாமலோ மக்கள் செய்யும் அநேக காரியங்கள் மூடத்தனமான நம்பிக்கைகளோடு அல்லது பழக்கவழக்கங்களோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. சில காரியங்கள் தெய்வங்களோடு அல்லது ஆவிகளோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ஒருவருடைய பிறப்பின் துல்லியமான நேரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சோதிடத்திலிருந்துதான் பிறந்த நாள் கொண்டாட்டம் ஆரம்பமானதென்று உங்களுக்குத் தெரியுமா? பிறந்த நாள் ‘கேக்’கைப் பற்றி என்ன? இது கிரேக்க தேவி ஆர்ட்டிமிஸோடு சம்பந்தப்பட்டிருக்கிறதென தெரிகிறது. அவளது பிறந்த நாள், நிலா வடிவ தேன் கேக்குகள் மீது மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டது. மேலும், சவ அடக்க நிகழ்ச்சிகளின்போது கறுப்பு நிறத்தில் உடுத்துவது அங்கு பதுங்கியிருக்கும் கெட்ட ஆவிகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஓர் உபாயமாக முன்பு கருதப்பட்டது உங்களுக்குத் தெரியுமா? தங்களை ஆவிகள் அடையாளம் கண்டுகொள்ளக் கூடாது என்பதற்காக ஆப்பிரிக்காவில் சில கறுப்பர்கள் வெள்ளை சாயத்தை பூசிக்கொள்கிறார்கள்; மற்ற தேசங்களில் விநோதமான சாயங்களை பூசிக்கொள்கிறார்கள்.

5பிரபலமான இந்தப் பழக்கவழக்கங்களோடு, இன்னும் பல மூடநம்பிக்கைகளும் பயங்களும் உலகெங்கும் உள்ளன. கண்ணாடி உடைவது, கறுப்புப் பூனையை பார்ப்பது, ஏணியின் கீழ் நடப்பது ஆகியவை மேற்கத்திய நாடுகளில் கெட்ட சகுனங்களாக கருதப்படுகின்றன; செவ்வாய்க் கிழமைகளிலோ வெள்ளிக் கிழமைகளிலோ 13-ம் தேதி வந்தால் அது கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. கிழக்கத்திய நாடுகளில், ஜப்பானியர் தங்கள் கிமோனோ உடையின் இடப்பக்கத்தை மடித்து அதன் வலப்பக்கத்தின் மீது வைத்து அணிகின்றனர், ஏனென்றால் பிணங்களுக்கு மாத்திரமே இதற்கு எதிர்மாறாக உடுத்துவிப்பது அவர்களுடைய வழக்கம். பேய்கள் வடகிழக்கு திசையிலிருந்து வருவதாக அவர்கள் நம்புவதால் ஜன்னல்களையோ கதவுகளையோ அந்தத் திசையில் வைத்து கட்டுவதில்லை. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு முன் அவர்களுடைய காலணிகளை கழற்றி கால்களுக்கு அருகில் வைப்பது பிலிப்பைன்ஸ் நாட்டவரின் வழக்கம். அப்பொழுதுதான் “புனித” பேதுரு அவர்களை வரவேற்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். பெரியவர்கள் பிள்ளைகளுக்கு சந்திரனைக் சுட்டிக்காட்டி, அது “புனித” மைக்கேல் என்றும் அவர்களை அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார், அவர்களது செயல்களை எழுதி வைக்கிறார், எனவே ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும் என்றும் பொதுவாக சொல்கிறார்கள்.

6ஆனால், ஆவிகளிலும் தெய்வங்களிலும் வைக்கப்பட்ட நம்பிக்கை, தீங்கற்றவையாக தோன்றுகிற பழக்கவழக்கங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் மட்டுமே வழிநடத்தவில்லை. புராதன காலத்திலும் சரி நவீன காலத்திலும் சரி, மக்கள் கெட்ட ஆவிகளை கட்டுப்படுத்த அல்லது சாந்தப்படுத்த முயன்றிருக்கிறார்கள்; அதோடு, நல்ல ஆவிகளின் உதவியைப் பெறவும் பல்வேறு விதங்களில் முயற்சி செய்திருக்கிறார்கள். இதை சிந்திக்கையில் காட்டுவாசிகளும் மலைவாசிகளும்தான் உடனடியாக நம் மனதுக்கு வருவார்கள்; ஏனெனில் இவர்கள் நோய்வாய்ப்படும்போது அல்லது ஏதாவது இக்கட்டான சூழ்நிலைமைகளில் மாட்டிக்கொள்ளும்போது ஆவி மத்தியஸ்தர்களையும், ஷாமான்களையும் (மந்திரவாதிகள்), சுகப்படுத்துவோரையும் நாடுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, பெரிய, சிறிய நகரங்களில் வாழ்வோர்கூட எதிர்காலத்தை தெரிந்துகொள்ள அல்லது முக்கியமான தீர்மானங்களை எடுக்க சோதிடர்களையும், மந்திரவாதிகளையும், குறி சொல்பவர்களையும், நிமித்தம் பார்க்கிறவர்களையும் அணுகுகிறார்கள். சிலர், ஏதோவொரு மதத்தில் பெயரளவில் இருந்துகொண்டு இப்படிப்பட்ட பழக்கங்களில் ஆர்வத்தோடு ஈடுபடுகிறார்கள். இன்னும் பலர் ஆவியுலகத் தொடர்பு, பில்லிசூனியம், மாயமந்திரம் ஆகியவற்றை தங்களுடைய மதமாக ஆக்கியிருக்கிறார்கள்.

7இந்த எல்லா பழக்கவழக்கங்களும் மூடநம்பிக்கைகளும் எவ்வாறு ஆரம்பித்தன? அவையெல்லாம் கடவுளை அணுகுவதற்கான வெவ்வேறு வழிகள்தானா? முக்கியமாக, அவற்றை பின்பற்றுகிறவர்களுக்கு அவை என்ன செய்கின்றன? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைப் பெற மனித சரித்திரத்தின் ஆரம்பத்திற்கு சென்று, அப்போது கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழிபாட்டு முறைகளை நாம் சற்று கவனிக்க வேண்டும்.

அறியப்படாத கடவுளை அறிய நாடுதல்

8மனிதனுக்கு ஆன்மீக உணர்வு உண்டு; இது அவனை தாழ்வான உயிரினங்களிலிருந்து வித்தியாசப்படுத்தி, உயர்த்திக் காட்டுகிறது. இந்தக் கருத்தை பரிணாமவாதிகள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுவே உண்மை. அறியப்படாததை தேடிக் கண்டுபிடிக்கும் ஒரு தூண்டுதலோடு மனிதன் பிறந்திருக்கிறான். சில கேள்விகளுக்கு விடை காண எப்பொழுதும் போராடியிருக்கிறான்; அதாவது, வாழ்க்கையின் நோக்கமென்ன? ஒருவர் இறந்தபின் என்ன நடக்கிறது? இந்த உலகத்தோடும், சொல்லப்போனால் முழு பிரபஞ்சத்தோடும் தனக்கிருக்கும் தொடர்பு என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை காண போராடியிருக்கிறான். தன் வாழ்க்கையின் மீதும் சுற்றுச்சூழல் மீதும் சற்று அதிகாரம் பெறுவதற்கு தன்னைக்காட்டிலும் உயர்ந்த அல்லது சக்திவாய்ந்த ஏதோவொன்றை தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற பேராவலும்கூட அவனுக்கு இருந்திருக்கிறது.​—சங்கீதம் 8:3, 4; பிரசங்கி 3:11, NW; அப்போஸ்தலர் 17:26-28.

9 மனிதன், கடவுள், மாயமந்திரம் என்ற ஆங்கில புத்தகத்தில் ஐவர் லிஸ்னர் இவ்வாறு சொல்கிறார்: “சரித்திரம் முழுவதிலும் மனிதன் தன் அன்றாட வாழ்க்கைக்கு அப்பாற்பட்டதை புரிந்துகொள்ள எந்தளவு விடாமுயற்சி எடுத்திருக்கிறான் என்பதை பார்க்கும்போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. வாழ்க்கையின் தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே அவன் தன் சக்தி முழுவதையும் செலவிட்டுக் கொண்டிருந்தது கிடையாது. அடைய முடியாத ஒன்றைத் தேடித் தேடி அவன் எப்போதும் அலைந்து கொண்டிருந்திருக்கிறான். மனிதனில் காணப்படும் இந்த விநோதமான, இயல்பான தூண்டுதலே அவனுடைய ஆன்மீக உணர்வாகும்.”

10ஆனால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் காரியங்களை இவ்விதமாக நோக்குவதில்லை. அதிகாரம் 2-ல் நாம் பார்த்த வண்ணமாக, உணர்ச்சிப்பூர்வ தேவைகளை அல்லது பிற தேவைகளை பூர்த்தி செய்ய மனிதன் முயன்றதால் உருவானதே ஆன்மீகம் என அவர்கள் பொதுவாக சொல்கின்றனர். இருந்தபோதிலும், ஏதேனும் ஆபத்தில் அல்லது இக்கட்டில் மாட்டிக்கொள்ளும்போது பெரும்பாலானவர்கள் உடனடியாக கடவுளிடமோ ஏதோவொரு மேலான சக்தியினிடமோ உதவி கேட்டு முறையிடுவதைத்தானே நாம் பொதுவாக பார்த்திருக்கிறோம்? கடந்த காலங்களிலும் சரி, இன்றும் சரி இதுவே உண்மை. ஆகையால், லிஸ்னர் தொடர்ந்து இவ்வாறு சொன்னார்: “மிகப் புராதன மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்ததையும், உன்னதமான ஒருவரைப் பற்றிய முழு உணர்வு இருந்ததையும் அவர்களைப் பற்றி ஆய்வு செய்தவர்கள் கட்டாயம் விளங்கிக் கொண்டிருந்திருப்பார்கள்.”

11அறியப்படாததைக் கண்டறிய துடிக்கும் அந்த இயல்பான ஆவலை திருப்தி செய்துகொள்ள அந்த மக்கள் எப்படி முயற்சி செய்தனர் என்பது கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம். நாடோடி வேட்டைக்காரர்களும் மேய்ப்பர்களும் காட்டு விலங்குகளின் வலிமையைக் கண்டு அஞ்சி நடுங்கினர். விவசாயிகளுக்கு குறிப்பாக வானிலை மற்றும் பருவ மாற்றம் சம்பந்தமான பயங்களும் தேவைகளும் இருந்தன. காட்டுவாசிகளின் சூழ்நிலையோ, பாலைவனங்களில் அல்லது மலைகளில் வாழ்ந்துவந்த மக்களிலிருந்து வித்தியாசமாக இருந்தது. இவர்கள் எல்லாருக்கும் பலவித பயங்களும் தேவைகளும் இருந்ததால் அதற்கேற்ப பல்வேறு மதப் பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டனர். இந்த மதப் பழக்கங்களின் மூலம் கருணையுள்ள கடவுட்களின் ஆசியை பெற முடியுமென்றும், அச்சமுண்டாக்கும் கடவுட்களை சாந்தப்படுத்த முடியுமென்றும் நம்பினர்.

12பலதரப்பட்ட மதப் பழக்கங்கள் இருந்தபோதிலும், இவையெல்லாவற்றிலும் சில பொதுவான அம்சங்களை காணலாம். அவற்றில் சில: புனித ஆவிகளிடமும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளிடமும் பயபக்தி, மாயமந்திர பழக்கம், குறிகளாலும் சகுனங்களாலும் ராசிபலனை தெரிந்துகொள்ளுதல், சோதிடம், பற்பல முறைகளில் எதிர்காலத்தைக் கணித்தல் போன்றவை. இந்த அம்சங்களை ஆராயும்போது, உலகெங்கும் எல்லா காலங்களிலும், ஏன் இன்றும்கூட, மக்களுடைய ஆன்மீக சிந்தையை வடிவமைப்பதில் அவை முக்கிய பங்கு வகித்திருப்பதை நாம் காண்போம்.

புனித ஆவிகளும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளும்

13பண்டைய காலத்து மக்களுக்கு, வாழ்க்கை புரியாப் புதிர்களால் நிறைந்திருப்பதாக தோன்றியது. அவர்களைச் சுற்றி நடந்த சம்பவங்களுக்கு விளக்கம் தெரியாமல் குழம்பிப் போயிருந்தனர். உதாரணமாக, நல்ல தேக ஆரோக்கியமுள்ள ஒருவர் ஏன் திடீரென்று நோய்வாய்ப்படுகிறார், உரிய பருவத்தில் ஏன் மழை பெய்யாதிருக்கிறது, பட்டுப்போனது போல் மொட்டையாக காட்சியளிக்கும் மரம் ஏன் வருடத்தின் குறிப்பிட்ட சமயத்தில் பச்சைப் பசேலென்று மாறுகிறது போன்றவற்றை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவருடைய நிழலும், இதயத்துடிப்பும், ஏன் சுவாசமும்கூட அவர்களுக்கு புரியாப் புதிர்களாகவே இருந்தன.

14பிறவியிலேயே மனிதனுக்கு ஆன்மீக உணர்வு இருந்ததால், புரியாப் புதிர்களாக இருந்த இந்தக் காரியங்களுக்கும் சம்பவங்களுக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஏதோவொரு சக்தியே காரணம் என அவன் நினைத்தது இயல்பே. என்றாலும், சரியான வழிநடத்துதலும் புரிந்துகொள்ளுதலும் இல்லாத காரணத்தால் ஆத்மாக்கள், ஆவிகள், பேய்கள், பிசாசுகள் என அனைத்தும் மனித உலகை விரைவில் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. உதாரணமாக, வட அமெரிக்காவிலுள்ள ஆல்கான்க்குயன் (Algonquian) இந்தியர்கள் ஒரு நபரின் ஆத்மாவை ஓட்டாசுக் என்றழைக்கிறார்கள்; அதற்கு, “அவனுடைய நிழல்” என்று அர்த்தம். தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மலாய் இனத்தவர், ஒருவர் இறந்துபோகையில் மூக்கு வழியாக அவருடைய ஆத்மா வெளியேறிவிடுகிறது என்பதாக நம்புகிறார்கள். சொல்லப்போனால், இன்று கிட்டத்தட்ட முழு உலகமே ஆவிகளிலும் இறந்தவர்களின் ஆத்மாக்களிலும் நம்பிக்கை வைத்திருக்கிறது; ஏதோவொரு வழியில் அவற்றுடன் தொடர்புகொள்ளவும் முயலுகிறது.

15அதேவிதமாக, இயற்கையில் காணப்படும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், சமுத்திரங்கள், ஆறுகள், மலைகள் ஆகியவை உயிருள்ளவை என்றும் மனித நடவடிக்கைகளில் நேரடி செல்வாக்கு செலுத்துபவை என்றும் நம்பப்பட்டது. இவை ஒரு தனி உலகமாய் செயல்படுவது போல் தோன்றியதால் ஆவிகளாகவும் தெய்வங்களாகவும் உருவகப்படுத்தப்பட்டன. அவற்றில் சில அருள் மிக்கவையாகவும் உதவி செய்பவையாகவும், மற்றவை கொடூரமானவையாகவும் தீங்கிழைப்பவையாகவும் கருதப்பட்டன. சிருஷ்டிக்கப்பட்ட பொருட்களை வணங்குவது பெரும்பாலும் எல்லா மதங்களிலுமே ஒரு முக்கிய இடத்தை வகிக்க ஆரம்பித்தது.

16இதுபோன்ற மத நம்பிக்கைகளை கிட்டத்தட்ட எல்லா பண்டைய நாகரிகங்களிலும் நாம் காணலாம். பாபிலோனியரும் எகிப்தியரும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை தெய்வங்களாக வணங்கி வந்தனர். நாட்டு விலங்குகளையும் காட்டு விலங்குகளையும்கூட அவர்கள் வழிபட்டனர். இந்துக்கள் கோடிக்கணக்கான தெய்வங்களை வழிபடுவது யாவரும் அறிந்ததே. சீனர்கள் காலங்காலமாக தங்களுடைய புனித மலைகளையும் நதி தெய்வங்களையும் வணங்கி வந்திருக்கின்றனர், மூதாதையரையும் மதிப்பு மரியாதையோடு வணங்கி வந்திருக்கின்றனர். பிரிட்டிஷ் தீவுகளில் வாழ்ந்த பண்டைய கெல்டிக் இன பூசாரிகள் கருவாலி (oak) மரத்தை புனிதமாய் கருதி, அதன்மேல் படரும் புல்லுருவிக்கு (mistletoe) விசேஷ மரியாதை செலுத்தினர். பிற்பாடு, கிரேக்கரும் ரோமரும் இவ்வகையான வழிபாட்டு முறைக்கு தங்களுடைய பங்கை அளித்தனர். இவ்வாறு ஆவிகள், தெய்வங்கள், ஆத்மாக்கள், பேய்கள், விதவிதமான புனிதப் பொருட்கள் ஆகியவற்றின் பேரிலுள்ள நம்பிக்கை ஆழமாக வேரூன்றிக் கொண்டது.

17இப்படிப்பட்ட எல்லாவற்றையும் மூடநம்பிக்கைகளாக சிலர் கருதினாலும் உலகெங்குமுள்ள அநேகரது மதப் பழக்கங்களில் இவற்றை இன்றும் காணலாம். சிலர் மலைகளையும், ஆறுகளையும், விநோதமான பாறைகளையும், பழமையான மரங்களையும், எண்ணற்ற மற்ற பொருட்களையும் புனிதமானவையாக கருதி இன்னமும் வழிபட்டு வருகின்றனர். இந்த இடங்களில் அவர்கள் பலிபீடங்களையும் கோயில்களையும் கட்டுகின்றனர். உதாரணமாக, இந்துக்களுக்கு கங்கை நதி புனிதமான ஒன்று. உயிரோடிருக்கும்போதே அதில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்பதும் இறந்தபின் தங்களுடைய அஸ்தி அதில் கரைக்கப்பட வேண்டும் என்பதும் இவர்களின் விருப்பம். இந்தியாவில் புத்த கயை என்ற இடத்திலுள்ள போதி மரத்தடியில் புத்தர் ஞானோதயம் பெற்றதாக சொல்லப்படுகிறது; இங்குள்ள ஆலயத்தில் வழிபடுவதை ஒரு விசேஷ அனுபவமாக புத்த மதத்தினர் கருதுகிறார்கள். கத்தோலிக்கர் அற்புத சுகம் பெற மெக்சிகோவிலுள்ள பஸிலிக்கா ஆஃப் அவர் லேடி ஆஃப் குவாடலூப் என்ற ஆலயத்திற்கு முழங்காலிலேயே நடந்து செல்கிறார்கள் அல்லது பிரான்சில் லூர்டஸிலுள்ள ஆலயத்தின் குளத்தில் “புனித” நீராடுகிறார்கள். ஆக, படைப்பாளருக்குப் பதிலாக படைப்புகளை வழிபடுவது இன்றும் சர்வ சாதாரணமாய் நடைபெற்று வருகிறது.​—ரோமர் 1:25.

மாயமந்திரம் தோன்றிய கதை

18ஜடப்பொருள் உலகத்தில் நல்ல ஆவிகளும் கெட்ட ஆவிகளும் நிரம்பியுள்ளன என்ற நம்பிக்கை நிலைநாட்டப்பட்ட பின்பு அது எளிதில் அடுத்த படிக்கு வழிவகுத்தது. அதாவது, நல்ல ஆவிகளிடமிருந்து வழிகாட்டுதலையும் ஆசியையும் பெறுவதற்கும் தீய ஆவிகளை சாந்தப்படுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக மாயமந்திரம் தோன்றியது. அன்றும்சரி இன்றும்சரி, அது கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் பிரபலமடைந்து வந்திருக்கிறது.​—ஆதியாகமம் 41:8; யாத்திராகமம் 7:11, 12; உபாகமம் 18:9-11, 14; ஏசாயா 47:12-15; அப்போஸ்தலர் 8:5, 9-13; 13:6-11; 19:18, 19.

19அடிப்படையில் பார்த்தால், இயற்கையை அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை கட்டுப்படுத்துவதற்கு மனிதன் எடுக்கும் முயற்சியே மாயமந்திரம் எனலாம். நாள்தோறும் நடைபெறும் அநேக சம்பவங்களுக்கு உண்மையான காரணத்தை முற்கால சமுதாயத்தினர் அறியாததால் மந்திரங்களின் மூலமோ சடங்குகளின் மூலமோ தாங்கள் விரும்புகிற காரியங்களை கைகூட வைக்கலாம் என நம்பினர். சில சடங்குகள் நிஜமாகவே பலனளித்ததால் இது போன்ற மாயமந்திரங்களை அதிகமாக நம்ப ஆரம்பித்தனர். உதாரணமாக, சுமத்ரா தீவுக்கு மேற்கே மென்டவை தீவுகளில் இருந்த சுகப்படுத்துவோர்​—முக்கியமாக மந்திரவாதிகள் அல்லது சூனியக்காரர்கள்​—வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டவர்களை அதிசயமாக குணப்படுத்தினார்கள் என்று சொல்லப்பட்டது. செங்குத்தான பாறையின் விளிம்பில் நோயாளியை முகங்குப்புற படுக்க வைத்து அவ்வப்போது தரையை நக்கச் செய்வது அவர்களுடைய மாயமந்திர மருத்துவ முறையாக இருந்தது. அது எப்படி வேலை செய்தது? சாதாரணமாக இன்று வயிற்றுப்போக்குக்கு கொடுக்கப்படும் சில மருந்துகளில் பயன்படுத்தப்படும் கயோலின் என்ற வெள்ளை களிமண் அந்தப் பாறை விளிம்பில் இருந்ததாலேயே நோயாளிகள் குணமானார்கள்.

20இது போன்ற சில வெற்றிகள் எல்லா தோல்விகளையும் சீக்கிரத்தில் மறைத்துப்போட்டதால், இந்தத் தொழில் செய்தவர்களின் புகழ் கொடிகட்டிப் பறந்தது. கொஞ்ச காலத்தில், பூசாரிகள், குலத் தலைவர்கள், மந்திரவாதிகள், சுகப்படுத்துவோர், பில்லிசூனிய மருத்துவர்கள், மத்தியஸ்தர்கள் என இவர்கள் உயர்ந்த மதிப்பும் மரியாதையும் பெற்ற நபர்களாக ஆனார்கள். குணமடைவதற்கு, வியாதிகள் வராமல் தடுப்பதற்கு, தொலைந்துபோன பொருட்களை கண்டுபிடிப்பதற்கு, திருடர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கு, தீய சக்திகளை விரட்டுவதற்கு, பழிவாங்குவதற்கு என பல காரணங்களுக்காக மக்கள் அவர்களிடம் சென்றார்கள். காலப்போக்கில், இந்தக் காரியங்களுக்காகவும், பிறப்பு, பூப்பு, நிச்சயதார்த்தம், திருமணம், இறப்பு, சவ அடக்கம் போன்ற மற்ற காரியங்களுக்காகவும் எண்ணற்ற மூடநம்பிக்கைகளும் சடங்காச்சாரங்களும் தோன்றின. சக்தியும் மர்மமும் நிறைந்த மாயமந்திரம் விரைவில் மக்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது.

மழை நடனங்களும் சூனியமும்

21பல்வேறு மக்களின் மாயமந்திர பழக்கங்கள் பல வகைப்பட்டதாக இருப்பினும், அவற்றின் அடிப்படை கருத்துகள் குறிப்பிடத்தக்க விதத்தில் ஒரேவிதமாக இருக்கின்றன. முதலாவதாக, எந்தவொரு காரியத்தை செய்தாலும் அதேபோன்ற ஒரு காரியம் நிகழும் என்ற கருத்து இருந்து வருகிறது; அதாவது ஒரு காரியத்தை அப்படியே ‘மிமிக்’ செய்தால் விரும்பிய விளைவைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது. இது சில சமயங்களில் பாசாங்கு மாயமந்திரம் என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக, மழையில்லாமல் பயிர்கள் வாடுகையில், வட அமெரிக்காவிலுள்ள ஒமாஹா இந்தியர்கள் தண்ணீர் பாத்திரத்தைச் சுற்றி நடனமாடுவர். பிறகு அவர்களில் ஒருவர் கொஞ்சம் தண்ணீரை குடித்துவிட்டு, தூறலைப் போல அல்லது மழையைப் போல துப்பிவிடுவார். அல்லது கரடி வேட்டைக்குச் செல்லும் ஒருவர் தான் வெற்றியோடு திரும்ப வேண்டும் என்பதற்காக அடிபட்ட ஒரு கரடியைப் போல தரையில் புரளுவார்.

22மற்ற ஆட்களோ மந்திரங்கள் ஓதுவது, படையல்கள் வைப்பது போன்ற பெரிய சடங்குகளைச் செய்தனர். சீனர்கள் டிராகன் என்ற வருண பகவானை காகிதத்தால் அல்லது மரத்தினால் செய்து அதை ஊர்வலமாக கொண்டு சென்றனர். அல்லது, தங்களுடைய தெய்வம் உஷ்ணத்தை உணர்ந்து ஒருவேளை மழையை அனுப்பி வைக்கும் என்ற நம்பிக்கையில் விக்கிரகத்தை கோவிலிலிருந்து வெளியே எடுத்துவந்து வெயிலில் வைத்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவின் கோனி (Ngoni) மக்கள், வருண பகவானின் கோவில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட பானையில் பியரை ஊற்றிவிட்டு இப்படிக் கூறினர்: “சொட்டா எஜமானரே, நீர் எங்கள் மீது இரக்கப்பட மாட்டீரா, நாங்கள் உமக்கு என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறீர்? நாங்கள் அழிந்துபோய் விடுவோமே. உம் பிள்ளைகளுக்கு மழையைப் பொழிந்தருளும், இதோ உமக்கு பியரை வார்க்கிறோம்.” இதன் பிறகு, மீதமுள்ள பியரைப் பருகி, ஆடிப் பாடினர், தண்ணீரில் நனைத்த கிளைகளை கையில் பிடித்துக்கொண்டு ஆட்டினர்.

23ஒரு நபருடைய பொருட்களை அவரிடமிருந்து பிரித்த பின்னரும் அவர் மீது அவை செல்வாக்கு செலுத்தும் என்பது மாயமந்திரத்திற்கு அடிப்படையாக இருக்கும் மற்றொரு கருத்தாகும். ஒரு நபருக்குச் சொந்தமான ஒன்றை பயன்படுத்தி அவருக்கு சூனியம் வைக்கும் பழக்கம் இதிலிருந்தே ஆரம்பமானது. இத்தகைய ஒரு சக்தியை பயன்படுத்தி மக்களுக்குத் தீங்கிழைக்கிற சூனியக்காரிகள் மீதும் மந்திரவாதிகள் மீதும் 16-ம், 17-ம் நூற்றாண்டில்கூட ஐரோப்பியரும் ஆங்கிலேயரும் நம்பிக்கை வைத்திருந்தனர். ஒரு நபரின் உருவத்தை மெழுகினால் செய்து அதில் குண்டூசிகளைக் குத்துவது, அவருடைய பெயரை ஒரு தாளில் எழுதி பின்பு அதை எரிப்பது, அவருடைய ஆடையின் ஒரு துண்டினை புதைத்து வைப்பது, அல்லது அவருடைய தலைமுடி, நகம், வியர்வை அல்லது மலத்தை வைத்துக்கூட ஏதாவது செய்வது ஆகியவை உட்பட்டிருந்தன. இவையும் இன்னும் மற்ற பழக்கங்களும் எந்தளவுக்கு பரவலாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தன என்பதை இங்கிலாந்தில் 1542, 1563, 1604 ஆகிய வருடங்களில் பார்லிமென்ட் சட்டம் பில்லிசூனிய பழக்கத்தைக் கொலைக்குற்றம் என்று அறிவித்ததை வைத்தே தெரிந்துகொள்ளலாம். கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும், ஏதாவது ஒரு வகையில் தலைமுறை தலைமுறையாக இத்தகைய மந்திரவாதத்தில் மக்கள் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

குறிகள் மற்றும் சகுனங்கள் மூலம் எதிர்காலத்தை அறிதல்

24இரகசியங்களை புரிந்துகொள்ள அல்லது குறிகளையும் சகுனங்களையும் வைத்து எதிர்காலத்தை தெரிந்துகொள்ள அநேகமாக மாயமந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதைத்தான் குறிசொல்லுதல் என்பார்கள். பாபிலோனியர் இதில் பெயர் பெற்று விளங்கினர். மாயமந்திரம், மீமானிடம், மதம் என்ற ஆங்கில புத்தகத்தின்படி, “வருவதை முன்கூட்டியே அறியும் துறையில் அவர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்தனர், விலங்குகளின் கல்லீரல் மற்றும் குடல்களிலிருந்தும், நெருப்பு மற்றும் புகையிலிருந்தும், விலையுயர்ந்த கற்களின் பிரகாசத்திலிருந்தும் எதிர்காலத்தை கணித்தனர்; ஊற்றுகளின் சலசலப்பை வைத்தும் தாவரங்களின் வடிவத்தை வைத்தும்கூட சம்பவங்களை முன்னறிவித்தனர். . . . வளிமண்டல அடையாளங்கள், மழை, மேகங்கள், காற்று, மின்னல் ஆகியவை தீமைக்கு முன்னறிகுறிகள் என விளக்கப்பட்டன; மேஜை நாற்காலிகளிலும் மர சட்டங்களிலும் விரிசல் ஏற்படுவது ஏதோ நடக்கப்போவதற்கு சகுனமாக கருதப்பட்டது. . . . ஈக்கள், பூச்சிகள், ஏன், நாய்களும்கூட மாயமந்திர செய்திகளை மறைமுகமாய் சொல்வதாக கருதப்பட்டது.”

25ஒரு படையெடுப்பின்போது, ‘பாபிலோன் ராஜா இரண்டு வழிகள் பிரியும் முனையிலே சகுனம் பார்க்கிறதற்காக நின்றான். அம்புகளைக் குலுக்கி போட்டான். விக்கிரகங்களிடம் ஆலோசனை கேட்டான்; ஈரலால் குறிபார்த்தான்’ என்று பைபிளிலுள்ள எசேக்கியேல் புத்தகம் சொல்கிறது. (எசேக்கியேல் 21:21, NW) பாபிலோனிய அரசவையில் வழக்கமாக ஜோசியரும் சூனியக்காரரும் மாயமந்திரம் செய்யும் பூசாரிகளும் இருந்தனர்.​—தானியேல் 2:1-3, 27, 28.

26கீழை நாடுகளிலும் மேலை நாடுகளிலும் வாழும் மக்களும்கூட பலவிதமான குறிசொல்லும் பழக்கங்களில் ஓரளவு ஈடுபட்டு வந்திருக்கின்றனர். முக்கியமான அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் திருமணம், பிரயாணம், பிள்ளைகள் சம்பந்தப்பட்ட சாதாரண விஷயங்களுக்கும்கூட கிரேக்கர்கள் அருள் வாக்கு சொல்வோரின் ஆலோசனையை நாடினர். டெல்ஃபியிலிருந்த குறிசொல்லும் கோயில் மிகவும் பிரபலமானது. அங்கிருந்த பித்தியா என்ற பெண் பூசாரி விளங்கா பாஷையில் எதை எதையோ சொல்வார். அவை அப்பொல்லோ கடவுள் சொன்னதாக நம்பப்பட்டன. இவற்றிற்கு பூசாரிகள் தரும் விளக்கம் தெளிவற்றதாக இருந்தது. லிடியா நாட்டு அரசனாகிய கிரோஸஸுக்கு கொடுக்கப்பட்ட வாக்கு இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். “ஹேலிஸ் நதியை கடந்தால் கிரோஸஸ் வலிமை மிகுந்த ஒரு பேரரசை அழித்துவிடுவார்” என்று அவரிடம் சொல்லப்பட்டது. ஆனால் அழிக்கப்பட்டதோ அவருடைய சொந்தப் பேரரசு. ஆம், கப்பத்தோக்கியாவைக் கைப்பற்ற அவர் ஹேலிஸ் நதியை கடந்தபோது பெர்சியனான கோரேசுவால் தோற்கடிக்கப்பட்டார்.

27ரோமர்களின் காலத்தில் குறிசொல்லும் கலை மேற்கில் உச்சாணியை எட்டியது. சகுனங்களையும் அடையாளங்களையும் பார்க்காமல் அவர்கள் எந்தக் காரியத்திலும் ஈடுபடவில்லை. ஒவ்வொரு சமுதாயத்தினரும் சோதிடம், பில்லிசூனியம், தாயத்துகள், எதிர்காலத்தை கணித்தல் போன்றவற்றிலும் இன்னும் பல வகையான குறிசொல்லுதலிலும் நம்பிக்கை வைத்திருந்தனர். ரோம வரலாற்று நிபுணரான எட்வர்ட் கிப்பன் சொன்னபடி, “ரோமர்களின் வழிபாட்டு முறைகள் அனைத்துமே உண்மையானவை என ஒரேயளவு மதிப்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்டன.” பிரபல அரசியல் மேதையும் சொற்பொழிவாளருமான சிசேரோ என்பவர் பறவைகள் பறப்பதை வைத்து சகுனங்கள் சொல்வதில் வல்லுநராக இருந்தார். சில ரோம பட்டணங்களில் இருந்த கணக்கு வழக்கில்லா மதங்களையும் வழிபாட்டு முறைகளையும் ரோம வரலாற்றாசிரியரான பெட்ரோனியஸ் கவனித்தபோது, அங்கிருந்த மக்களின் எண்ணிக்கையைவிட அவர்களுடைய கடவுட்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்திருக்கும் என குறிப்பிட்டார்.

28சீனாவில் பொ.ச.மு. இரண்டாயிரத்தில் வாழ்ந்த (ஷாங் அரசர் குலம்) பூசாரிகள் குறிசொல்வதற்கு பயன்படுத்திய 1,00,000-க்கும் மேலான எலும்புகளும் சோழிகளும் தோண்டி எடுக்கப்பட்டிருக்கின்றன. வானிலை முதற்கொண்டு படைகளை ஓரிடத்திலிருந்து வேறு இடத்தில் நிறுத்துவது வரை எல்லா விஷயங்களிலும் தெய்வீக வழிநடத்துதலைப் பெறுவதற்கு ஷாங் பூசாரிகள் இவற்றை பயன்படுத்தினர். இந்த எலும்புகள் மீது பூசாரிகள் பண்டைய எழுத்துக்களில் கேள்விகளை எழுதினர். பின்னர் அந்த எலும்புகளை நெருப்பில் காட்டி அதில் ஏற்பட்ட கீறல்களை உற்றுப்பார்த்து அதே எலும்புகள் மீது பதில்களை எழுதினர். இந்தப் பண்டைய எழுத்துக்களிலிருந்தே சீன எழுத்துமுறை தோன்றியதாக கல்விமான்கள் சிலர் கருதுகின்றனர்.

29குறிசொல்லுதல் பற்றிய பிரபலமான பண்டைய சீன பதிவு யீ-ஜிங் (மாற்றங்களின் திருமறை) ஆகும். இது பொ.ச.மு. 12-வது நூற்றாண்டில், வென் வாங் மற்றும் சௌ குங் என்ற முதல் இரண்டு சௌ பேரரசர்களால் எழுதப்பட்டது. இன் மற்றும் யாங் (இருள்-ஒளி, எதிர்மறை-நேர்நிலை, பெண்-ஆண், சந்திரன்-சூரியன், வையகம்-வானகம் போன்ற) எதிரும் புதிருமான இரண்டு சக்திகளின் செயல்பாட்டைப் பற்றிய விவரமான விளக்கங்கள் இந்தப் பதிவில் காணப்படுகின்றன. இவை வாழ்க்கை விவகாரங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிற நியமங்கள் என அநேக சீனர்கள் இன்றும்கூட நம்புகின்றனர். எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது, எதுவுமே நிலையானதல்ல என்ற அபிப்பிராயத்தை இப்பதிவு கொடுக்கிறது. எந்தக் காரியத்திலும் வெற்றி பெறுவதற்கு ஒருவர் காலத்தின் மாற்றங்கள் அனைத்தையும் அறிந்தவராகவும் அவற்றிற்கு இசைவாக செயல்படுகிறவராகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் நம்புகின்றனர். ஆகவே கேள்வி கேட்டு, சீட்டுப்போட்டு, பதிலை யீ-ஜிங் பதிவில் பார்க்கின்றனர். இவ்வாறு, பல நூற்றாண்டுகளாக, சீனாவில் எதிர்காலத்தை முன்னுரைப்பதற்கும், படம் வரைந்து குறிசொல்வதற்கும், மற்ற வகையில் குறிசொல்வதற்கும் யீ-ஜிங் பதிவு அடிப்படையாக இருந்திருக்கிறது.

வானவியலிலிருந்து தோன்றிய சோதிடம்

30சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றின் ஒழுங்கு, உலகிலுள்ள மக்களை வெகு காலமாகவே ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பொ.ச.மு. 1800-ஐ சேர்ந்த நட்சத்திர பதிவேடுகள் மெசபடோமியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட பதிவேடுகளை வைத்து, பாபிலோனியரால் சந்திர கிரகணங்கள், நட்சத்திரக் கூட்டங்களின் தோற்றமும் மறைவும், கிரகங்களின் சில பெயர்ச்சிகள் போன்ற அநேக வானவியல் நிகழ்ச்சிகளை முன்னுரைக்க முடிந்தது. அதேவிதமாக எகிப்தியர், அசீரியர், சீனர், இந்தியர், கிரேக்கர், ரோமர் ஆகியோரும் இன்னும் அநேக பண்டைய மக்களும் வானத்தை ஆராய்ந்து வானவியல் நிகழ்ச்சிகளைப் பற்றிய விளக்கமான பதிவுகளை வைத்திருந்தனர். இந்தப் பதிவுகளிலிருந்தே நாட்காட்டிகளை உருவாக்கி வருடாந்தர நடவடிக்கைகளுக்குக் காலத்தை குறித்தனர்.

31வானவியல் ஆராய்ச்சியின் பிரகாரம், பூமியிலும் வானிலும் சில குறிப்பிட்ட சம்பவங்கள் ஒருசேர நடப்பதுபோல் தோன்றின. உதாரணமாக, சூரியனின் இடப்பெயர்ச்சியை பொறுத்தே பருவ காலங்கள் மாறின, வளர்பிறையையும் தேய்பிறையையும் பொறுத்தே கடலில் ஓதங்கள் ஏற்பட்டன, அழல்மீன் (Sirius) என்ற மிகப் பிரகாசமான நட்சத்திரம் தோன்றிய பின்னரே வருடந்தோறும் நைல் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது என்றெல்லாம் நினைக்கப்பட்டது. ஆகவே பூமியில் நிகழும் இதுபோன்ற சம்பவங்களுக்கும் மற்ற சம்பவங்களுக்கும் முக்கிய காரணம் வான் கோளங்கள் என்று இயல்பாகவே முடிவு செய்யப்பட்டது. சொல்லப்போனால், “நைல் நதியை வரவழைப்பவன்” என்று அழல்மீன் நட்சத்திரத்தை எகிப்தியர்கள் அழைத்தனர். பூமியில் நடைபெறும் சம்பவங்களை நட்சத்திரங்கள் கட்டுப்படுத்துகின்றன என்ற கருத்து, வான் கோளங்களை வைத்து எதிர்காலத்தை கணிக்க முடியும் என்ற எண்ணத்திற்கு சீக்கிரத்தில் வழிநடத்தியது. இப்படித்தான் வானவியலிலிருந்து சோதிடம் பிறந்தது. விரைவில் நட்சத்திரங்களைப் பார்த்து முக்கியமான தேசிய விவகாரங்களைத் தீர்மானிப்பதற்காக அரசர்களும் பேரரசர்களும் தங்கள் அரசவையில் சோதிடர்களை நியமித்தனர். அதேசமயம் பொதுமக்கள்கூட தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ள நட்சத்திரங்களைப் பார்த்தனர்.

32பாபிலோனியரும் சோதிடத்தில் ஈடுபட்டனர். தெய்வங்களுக்கு கோவில்கள் மண்ணுலக இருப்பிடமாக இருப்பது போல, நட்சத்திரங்கள் அவர்களுடைய விண்ணுலக இருப்பிடங்களாக இருக்கின்றனவென பாபிலோனியர் கருதினர். இது, நட்சத்திரங்களை நட்சத்திரக் கூட்டங்கள் வாரியாக பிரிப்பதற்கு வழிநடத்தியது; மேலும், கிரகணங்களோ பிரகாசமான சில நட்சத்திரங்களோ வால்நட்சத்திரங்களோ தோன்றுவது பூமியில் துயரமும் போரும் உண்டாவதற்கான அடையாளங்கள் என்ற நம்பிக்கைக்கும் வழிவகுத்தது. அரசர்களுக்கு சோதிடர்கள் கொடுத்த நூற்றுக்கணக்கான அறிக்கைகள் மெசபடோமியாவில் தோண்டி எடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த அறிக்கைகள் சிலவற்றில் என்ன எழுதப்பட்டிருந்தது? உதாரணமாக, வரவிருந்த சந்திர கிரகணம் ஒரு விரோதி தோல்வியடைவான் என்பதற்கு அடையாளமாக இருக்கிறதென்றும், குறிப்பிட்ட நட்சத்திரக் கூட்டம் ஒன்றில் ஒரு கிரகம் தோன்றுவது பூமியின் மீது “கடுங்கோபம்” வரவிருப்பதற்கு அடையாளமாக இருக்கிறதென்றும் எழுதப்பட்டிருந்தது.

33இந்த விதமான குறிசொல்லுதலை பாபிலோனியர் எந்தளவுக்கு நம்பினர் என்பதை பாபிலோனின் அழிவை முன்னறிவிக்கையில் ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன நிந்தனையான வார்த்தைகளிலும் காண முடிகிறது: “இளமை முதல் நீ முயன்று பயின்ற உன் மந்திரங்களோடும் பில்லிசூனியங்களோடும் வந்து நில்.” “இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.”​—ஏசாயா 47:12, 13; பொது மொழிபெயர்ப்பு.

34பாபிலோனிலிருந்து எகிப்து, அசீரியா, பெர்சியா, கிரீஸ், ரோம், அரேபியா ஆகிய நாடுகளுக்கு சோதிடம் பரவியது. கிழக்கில் இந்துக்களும் சீனர்களும்கூட சோதிடத்தில் மூழ்கியிருந்தனர். குழந்தையாயிருந்த இயேசுவைப் பார்க்க ‘கிழக்கிலிருந்து சோதிடர்கள் வந்ததாக’ சுவிசேஷகனாகிய மத்தேயு கூறினார். (மத்தேயு 2:1, 2, NW) இந்த சோதிடர்கள் பார்த்தியாவிலிருந்த கல்தேய மற்றும் மேதிய-பெர்சிய சோதிட தொகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என அறிஞர்கள் சிலர் நம்புகின்றனர். பார்த்தியா ஒரு காலத்தில் பெர்சிய மாகாணமாக இருந்து பின்னர் சுதந்திரம் பெற்ற பார்த்தியப் பேரரசாக மாறியது.

35இருந்தபோதிலும், இன்று பின்பற்றப்படும் சோதிடத்தை வளர்த்தவர்கள் கிரேக்கரே. பொ.ச. இரண்டாம் நூற்றாண்டில், எகிப்தில் அலெக்ஸாண்டிரியா நகரிலிருந்த கிளாடியஸ் டாலமி என்ற கிரேக்க வானவியல் நிபுணர் அச்சமயத்தில் கிடைத்த எல்லா சோதிட தகவல்களையும் திரட்டினார்; அவற்றை டெட்ராபிப்ளாஸ் என்றழைக்கப்படும் நான்கு புத்தகங்களாக தொகுத்தார்; இதுவே இன்றுவரை சோதிடத்திற்கு அடிப்படையாக திகழ்கிறது. ஜாதகம் சம்பந்தப்பட்ட சோதிடம் (natal astrology) இதிலிருந்தே தோன்றியது. இது ஒருவருடைய பிறப்பு விவரத்தை அல்லது ஜாதகத்தை ஆராய்வதன் மூலம் எதிர்காலத்தை கணிக்கும் முறை. ஒருவர் பிறந்த ஊரிலும் பிறந்த நேரத்திலும் சூரியன், சந்திரன் மற்றும் பல்வேறு கிரகங்களின் நிலைகளை காட்டும் படமே ஜாதகம்.

36பதினான்காம் பதினைந்தாம் நூற்றாண்டுகளுக்குள், சோதிடம் மேலை நாடுகளில் மிகவும் பிரபலமடைந்தது. பல்கலைக்கழகங்கள் இதை ஒரு பாடமாக கற்றுக் கொடுத்தன, இதைக் கற்றுக்கொள்ள மொழிகளைப் பற்றியும் கணிதத்தைப் பற்றியும் ஓரளவு அறிந்திருக்க வேண்டியிருந்தது. சோதிடர்கள் கல்விமான்களாக கருதப்பட்டனர். மனித விவகாரங்களில் சோதிடம் செல்வாக்கு செலுத்தியதைப் பற்றிய மறைமுக குறிப்புகள் ஷேக்ஸ்பியரின் நூல்கள் பூராவும் நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு அரசவையிலும் சோதிடர்கள் இருந்தனர்; அநேக சீமான்களும் உடனடி ஆலோசனைக்காக தங்களுக்கென சோதிடர்களை நியமித்திருந்தனர். எந்தவொரு காரியமாக இருந்தாலும்​—போர், கட்டுமானம், வியாபாரம், பிரயாணம் என எதுவாக இருந்தாலும்​—நாள் நட்சத்திரம் பார்க்காமல் நடைபெறவில்லை. சோதிடம் சமுதாயத்தில் நன்மதிப்பைப் பெற்றது.

37சோதிடம் முறையான அறிவியல் அல்ல என்பதை கோப்பர்னிக்கஸ், கலிலியோ போன்றவர்களின் சாதனையும் அறிவியல் முன்னேற்றமும் ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறபோதிலும் இன்றுவரை அது அழியாமல் இருந்து வந்திருக்கிறது. (பக்கம் 85-ல் உள்ள பெட்டியைக் காண்க.) பாபிலோனியரால் ஆரம்பிக்கப்பட்டு, கிரேக்கரால் வளர்க்கப்பட்டு, அரேபியரால் இன்னும் விரிவாக்கப்பட்டிருக்கும் இந்த மர்மக் கலை, அரசன் முதல் ஆண்டி வரை அனைவர் மீதும், நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் மாநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை எல்லா இடங்களிலும் பெரும் செல்வாக்கு செலுத்தி இன்றும் கொடிகட்டிப் பறக்கிறது.

முகத்திலும் உள்ளங்கையிலும் எழுதப்பட்டுள்ள விதி

38குறிசொல்லும் கலையில் சற்று ஆர்வமுள்ளவர்களுக்கு, வானத்தைப் பார்த்து எதிர்காலத்தைப் பற்றிய அடையாளங்களையும் சகுனங்களையும் தெரிந்துகொள்வது கடினமாக தோன்றினால், உடனடியாகவும் மிக எளிதாகவும் தெரிந்துகொள்வதற்கு மற்ற வழிகள் உள்ளன. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோஹர் அல்லது சீஃபர் ஹா-சோஹர் (எபிரெயுவில், புகழொளி புத்தகம்) என்ற யூத மறைபொருள் கொள்கை பற்றிய புத்தகம் இவ்வாறு அறிவித்தது: “பிரபஞ்சத்தை மூடிக்கொண்டிருக்கும் ஆகாயத்தில் நட்சத்திரங்களும் கிரகங்களும் உண்டுபண்ணும் அநேக உருவங்களை நாம் காண்கிறோம். அவை மறைவானவற்றையும் ஆழமான புதிர்களையும் வெளிப்படுத்துகின்றன. அதேவிதமாக, மனிதத் தோலில் உருவங்களும் கோடுகளும் உள்ளன. இவையே நம்முடைய உடல்களின் நட்சத்திரங்கள் என சொல்லலாம்.” இந்தத் தத்துவம் வேறு விதமான குறிசொல்லுதல்களுக்கு அல்லது எதிர்காலத்தைக் கணிக்கும் முறைகளுக்கு வழிநடத்தியது. அதாவது முகத்திலும் உள்ளங்கையிலும் உள்ள அடையாளங்களை வைத்து குறிசொல்லும் முறைகள் உருவாகுவதற்கு வழிநடத்தியது. கிழக்கத்திய நாடுகளிலும் சரி மேற்கத்திய நாடுகளிலும் சரி இப்படிப்பட்ட பழக்கங்கள் இன்னும் பிரபலமாக உள்ளன. ஆனால் அவை சோதிடத்திலிருந்தும் மாயமந்திரத்திலிருந்துமே தோன்றின என்பது தெளிவாக உள்ளது.

39 முக சோதிடம் (Physiognomy) என்பது கண், மூக்கு, பல், காது ஆகிய முக லட்சணங்களை ஆராய்ந்து குறிசொல்வதாகும். 1531-ல் இன்டாஜீனைச் சேர்ந்த ஜான் என்பவர் ஸ்ட்ராஸ்பர்கில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இதில் பல்வேறு வடிவ கண்கள், மூக்கு, காதுகள் கொண்ட முகங்களின் தத்ரூபமான படங்களையும் அவை ஒவ்வொன்றிற்கான விளக்கங்களையும் அளித்திருந்தார். “உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்” என்ற மத்தேயு 6:22-ல் உள்ள இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை அவர் மேற்கோள் காட்டியிருந்தது சுவாரஸ்யமான விஷயம். பெரிய, பளிச்சென்ற, உருண்டையான கண்கள் நேர்மைக்கும் நல்லாரோக்கியத்துக்கும் அடையாளம் எனவும், குழிவான சிறிய கண்களோ பொறாமைக்கும் வன்மத்துக்கும் சந்தேகத்துக்கும் அடையாளம் எனவும் சொல்வதற்காக அந்த வசனத்தை மேற்கோள் காட்டியிருந்தார். இருந்தபோதிலும், 1533-ல் பிரசுரிக்கப்பட்ட, முக சோதிடத்தின் சுருக்க பதிப்பு (ஆங்கிலம்) என்ற இதே போன்ற மற்றொரு புத்தகத்தில் ஆசிரியர் பார்டோலோமியோ காக்கிள், பெரிய உருண்டையான கண்களையுடையவர் சலன புத்திக்காரர், சோம்பேறி என கூறினார்.

40தலைக்கு அடுத்தபடியாக, உடலின் வேறு எந்தப் பாகத்தையும்விட கையே பரத்திலிருந்து வரக்கூடிய சக்திகளை பிரதிபலிக்கிறது என குறிசொல்கிறவர்கள் கூறுகிறார்கள். ஆக, ஒருவருடைய குணத்தையும் விதியையும் தெரிந்துகொள்ள கைரேகைகளை ஆராயும் கைரமான்ஸி (chiromancy) என்ற மற்றொரு வகையான குறிசொல்லுதல் பிரபலமடைந்திருக்கிறது. இது பொதுவாக கைரேகை சோதிடம் என அழைக்கப்படுகிறது. இடைக் காலத்தின்போது கைரேகை சோதிடர்கள் தங்கள் தொழிலை ஆதரிக்கும் வசனங்களை பைபிளில் தேடினார்கள். உதாரணத்திற்கு, “தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படிக்கு, அவர் சகல மனுஷருடைய கையையும் முத்திரித்துப் போடுகிறார்” என்ற வசனத்தையும், “அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது” என்ற வசனத்தையும் கண்டுபிடித்தார்கள். (யோபு 37:7; நீதிமொழிகள் 3:16) உள்ளங்கையிலுள்ள புடைப்புகள், அதாவது மேடுகளுக்குக்கூட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஏனென்றால் அவை கிரகங்களைக் குறித்துக் காட்டுபவையாக இருப்பதால், அந்த நபரையும் அவருடைய எதிர்காலத்தையும் பற்றி வெளிப்படுத்துகின்றன என்று நம்பப்பட்டது.

41முக லட்சணங்களையும் கைரேகையையும் பார்த்து எதிர்காலத்தைக் கணிப்பது கீழை நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவற்றை தொழிலுக்காக செய்பவர்கள் மட்டுமல்லாமல், பொழுதுபோக்கிற்காக செய்பவர்களும் தாங்களாகவே முயன்று பார்ப்பவர்களும் ஏராளமானோர் இருக்கின்றனர். ஏனெனில் எல்லா விதமானோருக்கும் ஏற்ற புத்தகங்கள் எங்கும் கிடைக்கின்றன. சிலர் விளையாட்டுக்காக மட்டுமே கைரேகை பார்க்கின்றனர், ஆனால் அநேகர் இப்படிப்பட்ட விஷயங்களை அதிக சீரியஸாக எடுத்துக்கொள்கின்றனர். இருப்பினும் பொதுவாக மக்கள் ஒரேவொரு விதத்தில் சோதிடத்தைப் பார்ப்பதுடன் திருப்தியடைந்துவிடுவது கிடையாது. பயங்கர பிரச்சினைகளை எதிர்ப்படும்போது அல்லது முக்கியமான தீர்மானங்கள் எடுக்கும்போது, முதலில் தெய்வங்களிடம் கேட்டறிவதற்காக அவர்கள் தங்களுடைய கோவில்களுக்கு​—புத்த மத கோவிலுக்கு, தாவோ மத கோவிலுக்கு, ஷின்டோ மத கோவிலுக்கு அல்லது வேறேதாவது கோவிலுக்கு​—செல்வர். அதன் பின்பு நட்சத்திரங்களின் பேரில் குறிகேட்க சோதிடர்களிடம் செல்வர். பின்னர், கைரேகையையும் முக லட்சணங்களையும் பார்க்கும் குறிசொல்பவர்களிடம் செல்வர். இதையெல்லாம் கேட்டறிந்து வீட்டுக்கு வந்த பின்பு இறந்துபோன தங்கள் மூதாதையரிடம் குறிகேட்பர். இப்படி தங்களுக்கு வேண்டிய பதிலை எந்த வழியிலாவது கண்டுபிடிக்க முடியுமென்று நம்புகின்றனர்.

தீங்கற்ற விளையாட்டுதானா?

42எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவது அனைவருக்கும் உள்ள இயல்பான ஆசையே. வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொண்டு, கெட்டது எதுவும் சம்பவிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும் அனைவருக்கும் உண்டு. இதனால்தான் காலங்காலமாக மக்கள் வழிநடத்துதலைப் பெறுவதற்கு ஆவிகளையும் தெய்வங்களையும் நாடியிருக்கின்றனர். இவ்வாறு ஆவியுலகத் தொடர்பு, மாயமந்திரம், சோதிடம், மூடப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் ஈடுபட ஆரம்பித்தனர். முற்காலங்களில் மக்கள் மந்திரித்த கயிறுகளையும் தாயத்துக்களையும் தற்காப்பிற்காக அணிந்து கொண்டனர், வியாதி நீங்குவதற்காக மந்திரவாதிகளிடமும் பில்லிசூனிய மருத்துவர்களிடமும் சென்றனர். இன்றும் மக்கள் “புனித” கிறிஸ்டோபர் மெடல்களை எப்போதும் எடுத்துச் செல்கின்றனர் அல்லது “அதிர்ஷ்ட” தாயத்துகளை அணிந்துகொள்கின்றனர். அதோடு, இறந்தவர்களிடம் பேசுவதற்காக கூடி வருகின்றனர், வீஜா போர்டுகள், பளிங்கு உருண்டைகள், ஜாதகங்கள், குறிசொல்லும் சீட்டுக் கட்டுகள் ஆகியவற்றை உபயோகிக்கின்றனர். ஆகவே, ஆவியுலகத் தொடர்பையும் மூடநம்பிக்கைகளையும் பொறுத்தவரையில் மக்கள் மாறியிருப்பதாகவே தெரியவில்லை.

43இவையெல்லாம் உண்மையில் எந்த ஆதாரமும் இல்லாத மூடநம்பிக்கைகளே என்பதை பலர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். விளையாட்டுக்காகவே அவற்றை செய்வதாக அவர்கள் சொல்லலாம். மற்றவர்களோ, மாயமந்திரமும் குறிசொல்லுதலும் உண்மையில் நன்மை செய்வதாகவும்கூட வாதிடுகிறார்கள். ஏனெனில் பிரச்சினைகளைக் கண்டு பயப்படுவோருக்கு இவை நம்பிக்கை அளிப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இதெல்லாம் வெறும் தீங்கற்ற விளையாட்டு என்றோ மனோபலத்திற்கான மருந்து என்றோ நாம் நினைக்கலாமா? இந்த அதிகாரத்தில் நாம் சிந்தித்த ஆவியுலகத் தொடர்பும், மாயமந்திர பழக்கமும், இதில் குறிப்பிடப்படாத மற்ற பழக்கவழக்கங்களும் உண்மையில் எங்கிருந்து தோன்றின?

44ஆவியுலகத் தொடர்பு, மாயமந்திரம், குறிசொல்லுதல் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்தபோது, அவற்றிற்கும் ஆத்மாவைப் பற்றிய நம்பிக்கைக்கும் நல்ல, கெட்ட ஆவிகள் பற்றிய நம்பிக்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் கண்டோம். ஆகவே, ஆவிகள், மாயமந்திரம், குறிசொல்லுதல் ஆகியவை ஆத்மா அழியாது என்ற கோட்பாட்டில் வேரூன்றிய பல-தெய்வ வழிபாடு ஒன்றை ஆதாரமாக கொண்டிருக்கின்றன. இது ஒருவருடைய மதத்திற்கு உறுதியான ஆதாரமாக இருக்க முடியுமா? இப்படிப்பட்ட ஆதாரத்தை உடைய ஒரு வழிபாட்டை சரியானதென ஏற்றுக்கொள்வீர்களா?

45முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் இதே கேள்விகளை எதிர்ப்பட்டார்கள். அவர்களைச் சுற்றிலும் வாழ்ந்த கிரேக்கர்களும் ரோமர்களும் அநேக தெய்வங்களை வணங்கி வந்தார்கள், மூடநம்பிக்கை சார்ந்த அநேக சடங்காச்சாரங்களையும் பின்பற்றி வந்தார்கள். உதாரணமாக, விக்கிரகங்களுக்கு உணவு படைத்து பின்னர் அதை பகிர்ந்து உண்டார்கள். ஆகவே, மெய்க் கடவுளை நேசித்து அவரைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்களும் இப்படிப்பட்ட சடங்குகளில் கலந்துகொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு பதிலளித்தார் என்பதை கவனியுங்கள்.

46“விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப் பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம்” என்றார். (1 கொரிந்தியர் 8:4-6) பவுலுக்கும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கும் உண்மை மதம் என்பது பல-தெய்வ வழிபாடாக இருக்கவில்லை, ஆனால் ‘பிதாவாகிய ஒரே தேவனுக்கு’ மட்டும் பக்தி காட்டும் ஒன்றாக இருந்தது. இவருடைய பெயரை பைபிள் இவ்வாறு வெளிப்படுத்துகிறது: ‘யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்.’​—சங்கீதம் 83:17.

47“விக்கிரகமானது ஒன்றுமில்லையென்று” அப்போஸ்தலன் பவுல் சொன்னது உண்மையே. இருந்தபோதிலும் மாயமந்திரம், குறிசொல்லுதல், பலிகள் ஆகியவற்றின் மூலம் மக்கள் நாடிய “தேவர்களும்,” “கர்த்தாக்களும்” நிஜமானவர்கள் அல்லர் என்பதாக அவர் சொல்லவில்லை. அப்படியென்றால் குறிப்பு என்ன? அதே கடிதத்தின் பிற்பகுதியில் பவுல் அதைத் தெளிவாக்கினார்: ‘அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்கள்.’ (1 கொரிந்தியர் 10:20) ஆம், தேவர்களையும் கர்த்தாக்களையும் வழிபட்ட அஞ்ஞானிகள் உண்மையில் பேய்களையே வணங்கிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பேய்கள், உண்மையான கடவுளுக்கு எதிராக கலகம் செய்து தங்கள் தலைவனான பிசாசாகிய சாத்தானோடு சேர்ந்துகொண்ட தேவதூதர்கள், அதாவது ஆவி சிருஷ்டிகள் ஆவர்.​—2 பேதுரு 2:4; யூதா 6; வெளிப்படுத்துதல் 12:7-9.

48மூடநம்பிக்கைகளுக்கும் பயங்களுக்கும் அடிமைப்பட்டிருந்த ‘பழங்குடியினரைப்’ பார்த்து மக்கள் அடிக்கடி பரிதாபப்படுகின்றனர். அவர்கள் செலுத்திய குரூரமான பலிகளையும் நடத்திய காட்டுமிராண்டித்தனமான சமய சடங்குகளையும் தாங்கள் வெறுப்பதாக சொல்கின்றனர். அது சரிதான். ஆனால் இன்றும்கூட பில்லிசூனியம், சாத்தானிய வழிபாடு, ஏன் நரபலிகளைப் பற்றியும் கேள்விப்படுகிறோம். இவற்றைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படாத போதிலும் மாயமந்திரத்தில் மக்களுக்கு இன்னும் ஈடுபாடு இருப்பதை காண்பிக்கின்றன. முதலில் அவர்கள் ஏதோ ஆர்வத்தால் இவற்றில் ஈடுபடலாம் அல்லது ‘தீங்கற்ற விளையாட்டாக’ நினைத்து ஈடுபடலாம்; ஆனால் அநேகமாக கேடும் சாவுமே மிஞ்சுகிறது. எனவே, பைபிளின் இந்த எச்சரிக்கைக்கு செவிசாய்ப்பது எவ்வளவு ஞானமான காரியம்: “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான்.”​—1 பேதுரு 5:8; ஏசாயா 8:19, 20.

49மதம் ஆரம்பித்த விதம், பல்வேறு பண்டைய புராணக்கதைகள், பலதரப்பட்ட ஆவியுலகத் தொடர்புகள், மாயமந்திரம், மூடநம்பிக்கை ஆகியவற்றைப் பற்றி இதுவரையாக சிந்தித்தோம். இப்பொழுது முக்கிய மதங்கள் மீது​—இந்து மதம், புத்த மதம், தாவோ மதம், கன்பூசிய மதம், ஷின்டோ மதம், யூத மதம், கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள், இஸ்லாமிய மதம் ஆகியவற்றின் மீது​—நம் கவனத்தை திருப்புவோம். அவை எப்படி தோன்றின? அவை என்ன போதிக்கின்றன? அவற்றை பின்பற்றுவோர் மீது எப்படிப்பட்ட செல்வாக்கு செலுத்துகின்றன? இதுபோன்ற பல கேள்விகள் பின்வரும் அதிகாரங்களில் சிந்திக்கப்படும்.

[கேள்விகள்]

1. ஏதன்ஸ் நகரத்தாரிடம் மார்ஸ் மேடையிலிருந்து பவுல் என்ன சொன்னார், ஏன்?

2. தெய்வங்கள் மீது ஏதன்ஸ் நகரத்தாருக்கிருந்த பயத்தை எது காட்டியது?

3. ஏதன்ஸ் நகரத்தார் மட்டுமே தெய்வங்களைக் குறித்து பயந்தார்களா?

4. தெய்வங்களோடு அல்லது ஆவிகளோடு தொடர்புடையதாக தோன்றும் பிரபல பழக்கவழக்கங்கள் சில யாவை?

5. உங்களுக்குத் தெரிந்த பொதுவான மூடநம்பிக்கைகள் சில யாவை?

6. இன்று மக்கள் எந்தளவுக்கு ஆவியுலகத் தொடர்பில் மூழ்கிப் போயிருக்கிறார்கள்?

7. என்ன கேள்விகளை சிந்தித்துப் பார்ப்பது அவசியம்?

8. எந்த விசேஷ பண்பு மனிதனை தாழ்வான உயிரினங்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது?

9. ‘ஆன்மீக உணர்வை’ ஒரு கல்விமான் எவ்வாறு விவரிக்கிறார்?

10. கடவுளைத் தேடிக் கண்டுபிடிக்க மனிதனுக்கு இயல்பான தூண்டுதல் இருப்பதை எது காட்டுகிறது?

11. அறியப்படாததைக் கண்டறிய மனிதன் எடுத்திருக்கும் முயற்சிகளின் பலன் என்ன? (ரோமர் 1:19-23-ஐ ஒப்பிடுக.)

12. உலக மக்களின் மதப் பழக்கங்களில் காணப்படும் பொதுவான அம்சங்கள் யாவை?

13. பண்டைய காலத்து மக்களுக்கு எவையெல்லாம் புரியாப் புதிராக இருந்திருக்கலாம்?

14, 15. மனிதனுக்குப் புரிந்துகொள்ளுதலும் வழிநடத்துதலும் இல்லாததால் புரியாப் புதிர்களுக்கு எதை பெரும்பாலும் காரணமாக நினைத்தான்? (1 சாமுவேல் 28:3-7-ஐ ஒப்பிடவும்.)

16. ஆவிகளும் தெய்வங்களும் புனிதப் பொருட்களும் எவ்வாறு வணங்கப்பட்டன?

17. படைப்புகளை வழிபடுவது எவ்வாறு இன்றும் காணப்படுகிறது?

18. ஆவிகளிலும் தெய்வங்களிலும் கொண்டிருந்த நம்பிக்கை எதற்கு வழிவகுத்தது?

19. (அ) மாயமந்திரம் என்பது என்ன? (ஆ) ஏன் அநேகருக்கு மாயமந்திரம் நம்பகமானதாக தோன்றுகிறது?

20. மாயமந்திரம் எவ்வாறு மக்களின் வாழ்க்கையை ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது?

21, 22. “பாசாங்கு மாயமந்திரம்” என்பது என்ன? உதாரணம் தருக.

23. பில்லிசூனியம் எவ்வாறு பிரபலமடையத் தொடங்கியது? (ஒப்பிடுக: லேவியராகமம் 19:31; 20:6, 27; உபாகமம் 18:10-13.)

24. (அ) குறிசொல்வது என்றால் என்ன? (ஆ) பாபிலோனியரின் குறிசொல்லும் பழக்கத்தை விளக்குக.

25. பண்டைய பாபிலோனிய பழக்கமாகிய குறிசொல்லும் பழக்கத்தை பற்றி எசேக்கியேலும் தானியேலும் என்ன எழுதினார்கள்?

26. கிரேக்கர் மத்தியில் என்ன வகையான குறிசொல்லுதல் பிரபலமாக இருந்தது?

27. குறிசொல்வதில் ரோமர்கள் எந்தளவுக்கு ஈடுபட்டனர்?

28. பண்டைய காலங்களில் சீனர்கள் எவ்வாறு குறிசொல்லும் பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தனர்?

29. குறிசொல்லுதல் சம்பந்தமாக யீ-ஜிங்-ல் என்ன நியமம் காணப்படுகிறது?

30. ஆரம்பகால வானவியல் வளர்ச்சியை விவரிக்கவும்.

31. சோதிடம் தோன்ற வானவியல் எவ்வாறு காரணமாயிருந்தது?

32. பாபிலோனியர் எந்தெந்த விதங்களில் சோதிடத்தில் ஈடுபட்டிருந்தனர்?

33. பாபிலோனில் ‘நட்சத்திரம் பார்க்கிறவர்களைப்’ பற்றி ஏசாயா என்ன சொன்னார்?

34. குழந்தை இயேசுவைப் பார்க்க வந்த ‘சோதிடர்கள்’ யார்?

35. கிரேக்கரின் காலம் முதற்கொண்டு சோதிடத்தில் என்ன வளர்ச்சி ஏற்பட்டது?

36. சோதிடம் சமுதாயத்தில் நன்மதிப்பைப் பெற்றதற்கு என்ன அத்தாட்சி உள்ளது?

37. அறிவியல் முன்னேற்றம் எவ்வாறு சோதிடத்தை பாதித்திருக்கிறது?

38. மனிதனின் கை மற்றும் முகத்தோடு தொடர்புடைய வேறு விதமான குறிசொல்லுதல்களுக்கு வழிநடத்தியது எது?

39. முக சோதிடம் என்பது என்ன, அது எவ்வாறு பின்பற்றப்பட்டுள்ளது?

40. (அ) கைரேகை சோதிடம் என்றால் என்ன? (ஆ) இதற்கு ஆதாரம் எவ்வாறு பைபிளில் தேடப்பட்டது?

41. கீழை நாடுகளில் மக்கள் எவ்வாறு குறிகேட்பதில் ஈடுபடுகிறார்கள்?

42. எதிர்காலத்தை அறிந்துகொள்ள மக்களுக்கு இருக்கும் இயல்பான ஆசை என்ன செய்யும்படி அவர்களை வழிநடத்தியிருக்கிறது?

43. (அ) ஆவியுலகத் தொடர்பு, மாயமந்திரம், குறிசொல்லுதல் ஆகியவற்றைப் பற்றி அநேகர் எப்படி உணருகின்றனர்? (ஆ) மூடப் பழக்கவழக்கங்களைப் பற்றிய என்ன கேள்விகளுக்கு பதில் தேவை?

44. இப்படிப்பட்ட எல்லா பழக்கங்களுக்கான ஆதாரத்தைக் குறித்து என்ன சொல்லலாம்?

45. விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவைக் குறித்த எந்தக் கேள்வியை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பட்டனர்?

46. கடவுளைப் பற்றி பவுலுக்கும் ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கும் என்ன நம்பிக்கை இருந்தது?

47. ‘வானத்திலேயும் பூமியிலேயுமுள்ள தேவர்கள் மற்றும் கர்த்தாக்களின்’ உண்மை அடையாளத்தை பவுல் எவ்வாறு வெளிப்படுத்தினார்?

48. இன்றும் எவ்வாறு மாயமந்திரம் ஆபத்தானது, அதை எப்படி தவிர்க்கலாம்?

49. பின்வரும் அதிகாரங்களில் என்ன சிந்திக்கப்படும்?

[பக்கம் 76-ன் சிறு குறிப்பு]

சில மாயமந்திரங்கள் பலனளிப்பவையாய் தோன்றின

[பக்கம் 85-ன் பெட்டி]

சோதிடம் அறிவியல்பூர்வமானதா?

சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் கிரகங்களும் பூமியில் நடக்கிற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியுமென்றும், ஒருவர் பிறக்கும் அந்தக் கணத்தில் இவற்றின் நிலைகளைப் பொறுத்தே அவரது வாழ்க்கை அமையுமென்றும் சோதிடம் கூறுகிறது. ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகள் இதற்கு எதிர்மாறாக இருப்பது போல் தெரிகிறது:

▪ பூமி இப்பிரபஞ்சத்தின் மையத்தில் இல்லை என்பதை கோப்பர்னிக்கஸ், கலிலியோ, கெப்ளர் போன்ற வானவியல் நிபுணர்களின் ஆய்வுகள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. மேலும், ஒரு நட்சத்திர கூட்டத்தில் இருப்பதாக தோன்றும் நட்சத்திரங்கள் உண்மையில் ஒன்றோடொன்று ஒரு தொகுதியாக இணைந்தில்லை என்பதும் இப்போது தெரிய வந்துள்ளது. அவற்றில் சில விண்வெளியில் நெடுந்தொலைவிலும் மற்றவை அருகிலும் இருக்கலாம். இதன் காரணமாக நட்சத்திர கூட்டங்களின் அடிப்படையில் அமைந்த பல்வேறு ராசிகளும் ராசிபலன்களும் கற்பனையே.

▪ ஆரம்பகால சோதிடர்களுக்கு, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ போன்ற கிரகங்கள் இருப்பதுகூட தெரியாது. ஏனென்றால் டெலஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே இவை இருப்பது தெரிய வந்தது. ஆகவே, பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சோதிட வரைபடங்களில் அவை இருக்கவில்லை; அப்படியிருக்க, அவை எப்படி மனிதன் மீது “செல்வாக்கு” செலுத்தியிருக்க முடியும்? கிரகங்கள் அனைத்தும் உயிரற்ற பாறைகளாலான அல்லது வாயுக்களாலான, விண்வெளியில் வலம்வரும் கோள்களே என்பது இன்று அறிவியல்பூர்வமாய் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு கிரகம் “நன்மையையும்” மற்றொன்று “தீமையையும்” எப்படி விளைவிக்க முடியும்?

▪ நம்முடைய குணங்கள் பிறப்பின்போது வடிவமைக்கப்படுவதில்லை, ஆனால் தந்தையின் லட்சக்கணக்கான விந்தணுக்களில் ஒன்று தாயின் ஒரு கருவுடன் இணைந்து கருத்தரிக்கும் சமயத்தில் வடிவமைக்கப்படுகிறது என மரபியல் விஞ்ஞானம் சொல்கிறது. சோதிடமோ ஒருவர் பிறக்கும் சமயத்தை வைத்து ஜாதகத்தைக் கணிக்கிறது. இப்படிப்பட்ட சுமார் ஒன்பது மாத வித்தியாசத்தின் அடிப்படையில் அமையும் சோதிடமானது முற்றிலும் வேறுபட்ட குணாம்சத்தையே ஒருவருக்கு அளிக்கும்.

▪ பூமியிலிருந்து பார்க்கும்போது, நட்சத்திர கூட்டங்கள் மத்தியில் சூரியன் பயணிக்க எடுத்துக்கொள்ளும் நேரம், 2,000 வருடங்களுக்கு முந்தைய சோதிட வரைபடங்களிலும் அட்டவணைகளிலும் குறிப்பிடப்பட்டதைவிட இன்று சுமார் ஒரு மாதம் பின்னால் உள்ளது. ஆகவே சோதிடத்தின்படி, ஜூன் பிற்பகுதியில் அல்லது ஜூலை ஆரம்பத்தில் பிறக்கும் ஒருவர் கடக ராசிக்காரராக (எளிதில் புண்படக்கூடியவராக, அடிக்கடி ‘உம்’ என்று ஆகிவிடுபவராக, கலகலப்புடன் பழகாதவராக) இருப்பார். ஆனால் சூரியனோ அந்தச் சமயத்தில் மிதுன நட்சத்திர கூட்டத்தில் இருக்கிறது, அப்படியென்றால் அந்த நபர் உண்மையில் நன்கு பழகுபவராகவும் நகைச்சுவை உணர்வுடையவராகவும் வாயடிப்பவராகவுமே இருக்க வேண்டும்.

ஆக, சோதிடத்திற்கு அறிவுப்பூர்வ ஆதாரமும் இல்லை, அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை என்பது தெளிவாக உள்ளது.

[பக்கம் 71-ன் படங்கள்]

உடைந்த கண்ணாடிகள், கருப்பு பூனைகள், சில எண்கள் ஆகியவை மூடநம்பிக்கைகளுக்கு ஆதாரமாக இருக்கின்றன. “நான்கு” என்பதற்குரிய சீன எழுத்து, சீன மொழியிலும் ஜப்பானிய மொழியிலும் “மரணம்” என்பதைப் போல தொனிக்கிறது

[பக்கம் 74-ன் படங்கள்]

இடது, அற்புத சுகம் பெற கத்தோலிக்கர் ஜெபிக்கும் ஆலயமாகிய மெக்சிகோவிலுள்ள பஸிலிக்கா ஆஃப் அவர் லேடி ஆஃப் குவாடலூப்.

வலது, இங்கிலாந்தில் ஸ்டோன்ஹென்ஜ் என்ற இடத்தில் பண்டைய கெல்டிக் இன பூசாரிகள் சூரியனை வழிபட்டதாக சொல்லப்படும் இடம்

[பக்கம் 80-ன் படம்]

மந்திரவாதிகளிடமும் பில்லிசூனிய மருத்துவர்களிடமும் சிலர் செல்கிறார்கள்

[பக்கம் 81-ன் படங்கள்]

மற்றவர்கள் இறந்தவர்களோடு பேச கூடி வருகிறார்கள், வீஜா போர்டுகளையும் பளிங்கு உருண்டைகளையும் டாரட் கார்டுகளையும் பயன்படுத்துகிறார்கள், குறிசொல்பவர்களிடமும் செல்கிறார்கள்

[பக்கம் 82-ன் படங்கள்]

ஆமை ஓடுகளில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களையும் இன்-யாங் அடையாளத்தையும் பயன்படுத்தி குறிசொல்வது கிழக்கத்திய நாடுகளில் வெகு காலமாக வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது

[பக்கம் 87-ன் படங்கள்]

ஒருவருடைய பிறப்பின் சமயத்தில் சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் நிலையைப் பொறுத்தே அவரது வாழ்க்கை அமைகிறது என்ற நம்பிக்கையில் அநேக ஆட்கள் ஜாதகம் பார்க்கிறார்கள்

[பக்கம் 90-ன் படங்கள்]

அதிர்ஷ்ட குச்சிகளை குலுக்கியெடுத்து தங்கள் எதிர்காலத்துக்கான செய்தியையும் அதன் விளக்கத்தையும் தெரிந்துகொள்கிறார்கள்