Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இஸ்லாம்—அடிபணிதலால் கடவுளை அடையும் வழி

இஸ்லாம்—அடிபணிதலால் கடவுளை அடையும் வழி

அதிகாரம் 12

இஸ்லாம்—அடிபணிதலால் கடவுளை அடையும் வழி

[Artwork—Arabic characters]

“அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்.” மேலே உள்ள அரபிக் வாசகத்தின் இந்த மொழிபெயர்ப்பு, குர்ஆனில் காணப்படுகிறது. தொடர்ந்து அது சொல்வதாவது: ‘எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் மாபெருங் கருணையாளனாகவும், தனிப்பெருங் கிருபையாளனாகவும், இறுதித் தீர்ப்புநாளின் அதிபதியாகவும் இருக்கின்றான். உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம். எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக! (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி; உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி.’​—⁠குர்ஆன், சூறா 1:1-7. a

2இந்த வார்த்தைகளே இஸ்லாமின் புனித நூலான திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாகிய, அதாவது முதல் சூறாவாகிய அல் ஃபாத்திஹா (“முகவுரை”) ஆகும். உலக ஜனத்தொகையில் ஆறுக்கு ஒருவர் என்ற வீதத்திற்கும் அதிகமானோர் முஸ்லிம்களாக இருக்கின்றனர்; இறைப்பற்றுள்ள முஸ்லிம்கள் தினந்தோறும் ஐந்து தடவை தொழும்போது ஒவ்வொரு முறையும் இந்த வாக்கியங்களை திரும்பத் திரும்பச் சொல்வதால் இவ்வுலகிலேயே அதிகமாக சொல்லப்படும் வார்த்தைகள் இவையாகத்தான் இருக்க வேண்டும்.

3உலகில் 125 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் இருப்பதாக ஒரு புத்தகம் சொல்கிறது; இது உலகிலேயே மிகப் பெரிய மதத் தொகுதியாகும். முஸ்லிம்களின் இயக்கம் ஆப்பிரிக்காவிலும் மேற்கத்திய நாடுகளிலும் பரவிவருவதால் உலகின் முக்கிய மதங்களில் இதுவே மிக வேகமாக வளர்ந்து வருகிறதென சொல்லலாம்.

4இஸ்லாம் என்ற பெயர் ஒரு முஸ்லிமுக்கு மிகவும் முக்கியமானதாகும், ஏனென்றால் அது அல்லாஹ்விடம் “அடிபணிவதை,” “சரணடைவதை,” அல்லது தன்னையே “ஒப்படைத்துவிடுவதை” அர்த்தப்படுத்துகிறது. வரலாற்றாசிரியர் ஒருவரின்படி, “முகமதுவின் அறிவுரைகளுக்குச் செவிசாய்ப்பவர்களுடைய உள்ளார்ந்த மனநிலையை அது வெளிப்படுத்துகிறது.” “முஸ்லிம்” என்பதன் அர்த்தம் ‘இஸ்லாமைக் கடைப்பிடிப்பவர்’ என்பதாகும்.

5பூர்வகாலத்து உண்மையுள்ள எபிரெயர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வெளிப்படுத்தப்பட்டவற்றின் உச்சக்கட்டமே தங்களது மதம் என முஸ்லிம்கள் நம்புகின்றனர். குர்ஆனில் எபிரெய வேதாகமமும் கிரேக்க வேதாகமமும் குறிப்பிடப்பட்டிருக்கிற போதிலும் சில விஷயங்களில் இவர்களது போதனைகள் பைபிளிலிருந்து வேறுபடுகின்றன. b (பக்கம் 285-⁠ல் உள்ள பெட்டியை காண்க.) இஸ்லாமிய மதத்தைப் பற்றி நன்கு புரிந்துகொள்வதற்கு அது எவ்வாறு, எங்கே, எப்போது ஆரம்பமானது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

முகமது அழைக்கப்படுதல்

6சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா (அரபிக், மக்கா) நகரில் சுமார் பொ.ச. 570-⁠ல் முகமது பிறந்தார். அவர் பிறப்பதற்கு முன் அவருடைய தந்தை அப்துல்லாஹ் இறந்துவிட்டார். அவருக்கு சுமார் ஆறு வயதாக இருக்கையில் அவருடைய தாய் ஆமினா மரணமடைந்தார். அந்தச் சமயத்தில் அரபியர்கள் அல்லாஹ்வை வழிபட்டனர்; மெக்கா பள்ளத்தாக்கே அவர்களது மைய வழிபாட்டு ஸ்தலமாக இருந்தது. இது கபா என்ற சதுர வடிவ கட்டடம் உள்ள புனித ஸ்தலமாகும். இங்கே கறுப்பு நிற எரி நட்சத்திரக் கல்லை வழிபட்டு வந்தனர். இஸ்லாமிய மரபுப்படி, “பரலோக மாதிரியின் பிரகாரம் கபாவை ஆதாம் முதலில் கட்டினார், ஜலப்பிரளயத்துக்குப் பின் ஆபிரகாமும் இஸ்மவேலும் அதைத் திரும்பக் கட்டினார்கள்.” (ஃபிலிப் கே. ஹிட்டி என்பவர் எழுதிய அரபியர்களின் வரலாறு) சந்திர வருடத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒன்று என்ற கணக்கில் அங்கு 360 சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

7முகமது வளர்ந்து வந்தபோது, அந்நாளில் நிலவிய மதப் பழக்கவழக்கங்களை கண்டித்தார். மனிதனின் மதங்கள் புத்தகத்தில் ஜான் நாஸ் என்பவர் இவ்வாறு எழுதுகிறார்: “[முகமதுவின் கோத்திரமாகிய] குறைஷிய கோத்திரத்தின் தலைவர்கள், மதத்தின் பெயரை சொல்லிக்கொண்டு, முதன்மை ஸ்தானத்துக்காக ஓயாது சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். இதனால் [முகமது] மிகவும் வேதனையடைந்தார். அரபிய மதத்தின் பண்டைய பழக்கவழக்கங்கள், பல-தெய்வ வழிபாடு, சிலை வழிபாடு, ஆன்மவாதம், சமய பேரவைகளிலும் விழாக்களிலும் நடைபெற்ற ஒழுக்கக்கேடுகள், நாகரிகமென கருதப்பட்ட குடி, சூதாட்டம், நடனம் ஆகியவற்றையெல்லாம் பார்த்து முகமது மனம் நொந்து போனார்; அதோடு, வேண்டாத பெண் குழந்தைகள் உயிரோடே புதைக்கப்பட்ட கொடுமை மெக்காவில் மட்டுமல்ல அரேபியா எங்கும் நடைபெற்றதைப் பார்த்து இன்னுமதிகமாக மனம் புழுங்கினார்.”​—⁠சூறா 6:137.

8சுமார் 40 வயதில்தான் ஒரு நபியாக (prophet) ஆகும்படியான அழைப்பை முகமது பெற்றார். கார் ஹிரா (Ghār Ḥirāʼ) எனும் மலைக்குகைக்கு சென்று தனிமையில் தியானம் செய்வது அவருடைய வழக்கமாக இருந்தது. இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில்தான் ஒரு நபியாவதற்கு தான் அழைப்பைப் பெற்றதாக அவர் கூறினார். முஸ்லிம்களது மரபுப்படி, அவர் அங்கிருக்கையில் வானவர் ஒருவர் தோன்றி அல்லாஹ்வின் பெயரில் ஓதும்படி இவரைப் பணித்தார். இந்த வானவர் காபிரியேல் என்று பின்னால் குறிப்பிடப்படுகிறார். முகமது அதைச் செய்ய மறுத்தபோது வானவர் ‘அவரை இறுகப் பிடித்துக்கொண்டு பலமாக அழுத்தினார், அவரால் இனிமேலும் தாங்கிக் கொள்ள முடியாது என்ற நிலை’ ஏற்படும்வரை அவ்வாறு செய்தார். “ஓதுவீராக” என்று மீண்டும் அந்த வானவர் பணித்தார். மறுபடியும் முகமது அதைச் செய்ய மறுத்தார், ஆகவே அந்த வானவர் இவரை மறுபடியும் ‘அழுத்தினார்.’ இப்படி மூன்று தடவை நடந்த பின்னரே வானவர் சொன்னபடி இவர் ஓதினார். இதுவே குர்ஆனில் வெளிப்படுத்தப்பட்ட செய்திகளிலேயே முதலாவதென கருதப்படுகிறது. ஆனால், இறைவசனங்கள் மணியோசையின் அதிர்வுகளைப் போல முகமதுவுக்கு வந்ததாக மற்றொரு பாரம்பரியம் சொல்கிறது.​—⁠சாகிஹ் அல் புக்காரி என்பதிலிருந்து எடுக்கப்பட்ட த புக் ஆஃப் ரெவலேஷன்.

குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டது

9முகமது முதலில் பெற்றுக்கொண்டதாக சொல்லப்படும் வெளிப்படுத்துதல் என்ன? அது அல் அலக், “[இரத்தக்] கட்டி” என்ற தலைப்புள்ள சூறா 96-⁠ன் முதல் ஐந்து வசனங்களில் காணப்படுவதாக இஸ்லாமிய அறிஞர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கின்றனர். அது இவ்வாறு வாசிக்கிறது:

“அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் . . . !

ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு!

(உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்!

ஓதுவீராக! மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்;

மனிதனுக்கு​—⁠அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.”

10 த புக் ஆஃப் ரெவலேஷன் அரபிய ஏட்டின்படி, முகமது “எனக்கு ஓதுவதற்குத் தெரியாது” என்று பதிலளித்தார். ஆகவே வெளிப்படுத்தப்பட்ட செய்திகளை திரும்பச் சொல்வதற்கும் ஓதுவதற்கும் அவற்றை அவர் மனப்பாடம் செய்ய வேண்டியிருந்தது. அரபியர்கள் மனப்பாடம் செய்வதில் வல்லவர்களாயிருந்தனர், முகமதுவும் இதற்கு விதிவிலக்கல்ல. குர்ஆனை முழுமையாக பெற்றுக்கொள்ள அவருக்கு எவ்வளவு காலமெடுத்தது? சுமார் பொ.ச. 610 முதற்கொண்டு பொ.ச. 632-ல் அவருடைய மரணம் வரை சுமார் 20 முதல் 23 வருட காலத்தில் இந்தச் செய்திகளை அவர் பெற்றதாய் பொதுவாக சொல்லப்படுகிறது.

11இஸ்லாமிய புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி, கடவுளிடமிருந்து தான் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு செய்தியையும் உடனுக்குடன் முகமது தன் அருகில் இருந்தவர்களிடம் ஓதினார். இவர்களும் அந்தச் செய்திகளை மனப்பாடம் செய்து திரும்பத் திரும்ப ஒப்பித்து அவை அழியாதபடி பாதுகாத்தனர். பேப்பர் தயாரிக்கும் முறையை அப்போது அரபியர்கள் அறியாதிருந்தனர். ஆகவே முகமது, எழுதுவதில் வல்லுநர்களாயிருந்தவர்களை உபயோகித்து, அப்போது கிடைத்த பொருட்களான ஒட்டகத்தின் தோள்பட்டை எலும்புகள், பனை ஓலைகள், மரத்துண்டுகள், தோல்கள் போன்றவற்றின் மீது அச்செய்திகளை எழுதி வைத்தார். ஆனால் முகமது நபியின் மரணத்திற்கு பிற்பாடுதான் தற்போதைய வடிவத்தை குர்ஆன் பெற்றது. அவருடைய வாரிசுகளும் நண்பர்களும் கொடுத்த ஆலோசனையின்படி இது செய்யப்பட்டது. முதல் மூன்று கலீஃபாக்களின், அதாவது இஸ்லாமிய தலைவர்களின் ஆட்சியில் இது செய்யப்பட்டது.

12மொழிபெயர்ப்பாளர் முகமது பிக்தால் இவ்வாறு எழுதுகிறார்: “குர்ஆனில் காணப்படும் எல்லா சூறாக்களும் முகமது நபியின் மரணத்துக்கு முன்பே எழுதி வைக்கப்பட்டன, அநேக முஸ்லிம்களுக்கு முழு குர்ஆனும் மனப்பாடமாக தெரிந்தது. ஆனால் எழுதி வைக்கப்பட்ட அந்த சூறாக்கள் மக்களிடையே சிதறிப்போயின; முழு குர்ஆனையும் மனப்பாடமாக கற்று வைத்திருந்தவர்கள் ஒரு போரின்போது . . . பெரும் எண்ணிக்கையில் மாண்டுபோயினர்; அப்போதுதான் முழு குர்ஆனும் தொகுத்து எழுதப்பட்டது.”

13இஸ்லாமியரின் வாழ்க்கை மூன்று நூல்களுக்கு​—⁠குர்ஆன், ஹதீத், ஷரீஅத்​—⁠கட்டுப்பட்டதாக இருக்கிறது. (பக்கம் 291-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.) அரபிக் மொழியிலுள்ள குர்ஆனில்தான் செய்தி தூய்மையான வடிவில் உள்ளது, ஏனென்றால் காபிரியேல் மூலமாக கடவுள் பேசியது இந்த மொழியில்தான் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. சூறா 43:3 இவ்வாறு சொல்கிறது: “நாம் இதனை அரபி மொழியிலுள்ள குர்ஆனாக அமைத்துள்ளோம். நீங்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக!” எனவே எந்தவொரு மொழிபெயர்ப்பும் தூய்மை இழந்ததாக, மதிப்பு குறைந்ததாக கருதப்படுகிறது. சொல்லப்போனால், இஸ்லாமிய அறிஞர்கள் சிலர் குர்ஆனை மொழிபெயர்க்க மறுக்கிறார்கள். “மொழிபெயர்ப்பு என்பது எப்போதும் வஞ்சிப்பதையே அர்த்தப்படுத்துகிறது” என்பது அவர்களுடைய கருத்து. ஆகவே, “அதை மொழிபெயர்ப்பதில் முஸ்லிம்களுக்கு எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை, சில சமயங்களில் அதை தடைகூட செய்திருக்கின்றனர்” என்று இஸ்லாமிய வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் ஜே. ஏ. வில்லியம்ஸ் கூறுகிறார்.

இஸ்லாம் பரவுகிறது

14பெரும் கஷ்டங்கள் மத்தியில் முகமது இந்தப் புதிய மதத்தைத் தோற்றுவித்தார். மெக்கா நகர மக்கள், ஏன் அவருடைய சொந்த குலத்தாரும்கூட அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். 13 ஆண்டு கால துன்புறுத்தலையும் பகையையும் சகித்தபின் அவர் வடக்கே யத்ரிப்புக்கு சென்று அதை தமது இயக்கத்தின் மைய இடமாக மாற்றினார். இதுவே பிற்பாடு அல் மதீனா (மதீனா), நபிகளின் நகரம் என்று அழைக்கப்பட்டது. பொ.ச. 622-⁠ல் நடந்த இந்தக் குடியேற்றம், அதாவது ஹிஜ்ரத், இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியானது, இந்தத் தேதியே இஸ்லாமிய நாட்காட்டியின் ஆரம்பமாக பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. c

15கடைசியாக, மெக்கா பொ.ச. 630, ஜனவரி மாதத்தில் (8 A.H.) முகமதுவிடம் சரணடைந்தது; அப்போது அவர் அதிகாரம் பெற்றவராக அதன் மீது தன் ஆட்சியை தொடங்கினார். அரசும் மதமும் தன் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது அவர் கபாவில் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தினார்; பிறகு மெக்காவிற்கு செல்லும் யாத்திரிகர்களின் முக்கிய புனித ஸ்தலமாக அதை ஆக்கினார். இன்றுவரை அது அவ்வாறே இருந்து வருகிறது.​—⁠பக்கங்கள் 289, 303-ஐக் காண்க.

16பொ.ச. 632-⁠ல் முகமது மரித்து சில பத்தாண்டுகளுக்குள்ளாகவே, இஸ்லாம் ஆப்கானிஸ்தான் வரைக்கும், சொல்லப்போனால் வட ஆப்பிரிக்காவிலுள்ள டுனீஷியாவுக்கும் பரவியிருந்தது. எட்டாவது நூற்றாண்டின் ஆரம்பத்துக்குள் அது ஸ்பெயினிலும் பிரெஞ்சு எல்லை வரையாகவும் பரவியது. நீண்டதொரு தேடலுக்கு பின்னணி என்ற ஆங்கில நூலில் பேராசிரியர் நினியன் ஸ்மார்ட் என்பவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “கிறிஸ்துவுக்குப் பிறகு, ஆறாவது, ஏழாவது நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஓர் அரபிய நபியின் சாதனைகளை மனித கண்ணோட்டத்தில் காண்கையில், பிரமிப்பூட்டுவதாய் இருக்கிறது. எப்படியோ, அவரிலிருந்துதான் ஒரு புதிய நாகரிகமே உருவானது. ஆனால் ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அது இறைவனின் செயல், அல்லாஹ்வின் சாதனை.”

முகமதுவின் மரணத்துக்குப் பின் பிரிவினை

17முகமது மரித்தபோது ஒரு நெருக்கடி நிலை உருவானது. அவருக்கு மகன்கள் இருக்கவில்லை, தம்முடைய வாரிசாக யாரையும் நியமிக்காமலேயே அவர் மரித்துப்போனார். ஃபிலிப் ஹிட்டி இவ்வாறு கூறுகிறார்: “ஆரம்ப காலத்திலிருந்து இஸ்லாம் எதிர்ப்பட்ட ஒரு பிரச்சினை கலீஃப் பதவி சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். இன்றும் அது ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகிறது. . . . முஸ்லிம் வரலாற்றாசிரியர் அல்-ஷாராஸ்தானி [1086-1153] என்பவரின்படி: ‘இஸ்லாமில் கலீஃப் பதவிக்குரிய (இமாம்) சச்சரவை முன்னிட்டே இதுவரை அதிகமாக இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது.’” பொ.ச. 632-⁠ல் இந்தப் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட்டது? “தலைநகரமான அல்-மதீனாவில் இருந்த தலைவர்கள் பங்கெடுத்த ஒரு விதமான தேர்தலின் மூலம் அபூ-பக்கர் . . . (ஜூன் 8, 632-⁠ல்) . . . முகமதுவின் வாரிசாக நியமிக்கப்பட்டார்.”​—⁠அரபியர்களின் வரலாறு.

18முகமது நபியின் வாரிசு ஓர் ஆட்சியாளனாக, கலீஃபாவாக (khalīfah) இருப்பார். ஆனால் அவரது உண்மையான வாரிசுகள் யார் என்பதன்பேரில் இஸ்லாமில் பிரிவினைகள் ஏற்பட்டன. சுன்னீ முஸ்லிம்கள், முகமதுவின் இரத்த பந்தங்களில் ஒருவரை அவருடைய வாரிசாக ஏற்காமல், தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவரையே வாரிசாக ஏற்றுக்கொண்டனர். ஆகவே முதல் மூன்று கலீஃபாக்கள், அபூ-பக்கர் (முகமது நபியின் மாமனார்), உமர் (நபியின் ஆலோசகர்), உத்மான் (நபியின் மருமகன்) ஆகியோர் முகமதுவின் சட்டப்படியான வாரிசுகள் என அவர்கள் நம்புகின்றனர்.

19ஷீயா (Shīʽite) முஸ்லிம்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை. இவர்கள் முகமது நபியின் இரத்த உறவினரான, அதாவது ஒன்றுவிட்ட சகோதரனும் அவரது மருமகனுமான அலி பின் அபீ தாலிப் என்பவரே உண்மையான தலைவர் என்கின்றனர். முகமதுவின் செல்ல மகள் ஃபாத்திமாவை திருமணம் செய்திருந்த இவரே முதல் இமாம் (தலைவரும் வாரிசும்) என்கின்றனர். இவர்களின் திருமணத்தால் முகமதுவுக்கு ஹஸன், ஹுஸைன் என்ற பேரப்பிள்ளைகள் பிறந்தனர். தலைமை வகிப்பைக் குறித்து ஷீயாக்கள்: “அல்லாஹ்வும் அவனுடைய நபியும் ஆரம்பத்திலிருந்து அலியைத்தான் சட்டப்பூர்வமான ஒரே வாரிசாக நியமனம் செய்திருந்தனர், ஆனால் முதல் மூன்று கலீஃபாக்களோ அவருக்கு உரியதாயிருந்த அந்தப் பதவியை ஏமாற்றி பறித்துவிட்டார்கள்” என்று கூறுகின்றனர். (அரபியர்களின் வரலாறு) ஆனால் சுன்னீ முஸ்லிம்களோ இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை.

20அலிக்கு என்ன நடந்தது? அவர் நான்காவது கலீஃபாவாக ஆட்சி செய்து வந்த காலத்தில் (பொ.ச. 656-661) சீரியாவின் ஆளுநராக இருந்த மூவாவையாவுக்கும் இவருக்கும் பதவிக்கான கடும் போட்டி ஏற்பட்டது. அவர்கள் போரிடத் தொடங்கினார்கள், ஆனால் பிற்பாடு முஸ்லிம்களின் இரத்தம் மேலுமாக சிந்தப்படுவதைத் தவிர்க்கும் எண்ணத்தில் நடுவர் ஒருவரை நாடினர். இப்படி நடுவர் தீர்ப்பை நாடிச் சென்றது அலியுடைய வழக்கை பலவீனமாக்கியது, அவருடைய ஆதரவாளர்களில் அநேகர் அவரைவிட்டு விலகவும் காரணமானது. அவர்களில் காவாரிஜ் (பின்வாங்கியவர்கள்) தொகுதியினரும் அடங்குவர்; சொல்லப்போனால், இத்தொகுதியினர் பிற்பாடு அவரது பரம எதிரிகளாயினர். பொ.ச. 661-⁠ல் தீவிரவாத காரிஜி ஒருவன் விஷமுள்ள பட்டாக்கத்தியால் அவரைக் கொன்று போட்டான். இரண்டு தொகுதிகளும் (சுன்னீ பிரிவினரும் ஷீயா பிரிவினரும்) எலியும் பூனையுமானார்கள். பிறகு இஸ்லாமியரில் சுன்னீ பிரிவினர் முகமது நபியின் குடும்பத்தாரல்லாத ஒருவரை​—⁠உமையதுகள் என்ற மெக்கா நகர சீமான்கள் மத்தியிலிருந்து ஒருவரை​—⁠தங்களுடைய தலைவராக தெரிந்துகொண்டனர்.

21அலியின் முதல் மகனும் முகமது நபியின் பேரனுமாகிய ஹஸன் என்பவரையே ஷீயாக்கள் உண்மையான வாரிசாக ஏற்றிருந்தனர். என்றாலும், அவர் தன் பதவியை விட்டு விலகினார், பின்னர் கொலை செய்யப்பட்டார். அவருடைய சகோதரன் ஹுஸைன் புதிய இமாமாக ஆனார், ஆனால் இவரும்கூட பொ.ச. 680, அக்டோபர் 10 அன்று உமையது படைகளால் கொல்லப்பட்டார். ஷீயாக்கள் இவருடைய மரணத்தை உயிர்த்தியாகமாக கருதுகின்றனர், அப்படிப்பட்ட இவருடைய மரணம் அலியின் ஆதரவாளர்களான ஷீயாத் அலியின் மீது இன்று வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. அலியே முகமதுவின் உண்மையான வாரிசு, “தவறு, பாவம் என்பவற்றிலிருந்து இறைவனின் பாதுகாப்பைப் பெற்ற [முதல்] இமாம்” இவரே, அதாவது முதல் தலைவர் இவரே என அவர்கள் நம்புகின்றனர். அலியும் அவருடைய வாரிசுகளும் “இறைவனிடமிருந்து பாவமில்லா வரம் பெற்ற” குற்றமில்லா போதகர்களாக இருந்தனர் என்பதாக ஷீயாக்கள் கருதுகின்றனர். உண்மையான இமாம்கள் 12 பேர் மட்டுமே இருந்ததாகவும், இந்த 12 பேரில் கடைசியானவரான முகமது அல்-முன்தஸார் என்பவர் “சந்ததி எதையும் விட்டுச் செல்லாமல் சாமராவிலுள்ள பெரிய மசூதியிலிருந்த ஒரு குகையில்” (பொ.ச. 878-⁠ல்) மாயமாய் மறைந்துவிட்டதாகவும் ஷீயாக்களில் பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். ஆக, இவரே “‘மறைக்கப்பட்ட (முஸ்ததிர்)’ அல்லது ‘எதிர்பார்க்கப்பட்ட (முன்தஸார்) தலைவர்’ ஆனார். . . . காலப்போக்கில் இவர் மஹ்தி-யாக (தெய்வீக வழிநடத்துதலை பெற்றவராக) தோன்றி உண்மையான இஸ்லாமை திரும்ப நிலைநாட்டி, முழு உலகையும் ஜெயிப்பார்; அதோடு, சகலமும் முடிவுறுமுன் ஒரு குறுகிய காலத்திற்கு சமாதானமும் சந்தோஷமுமான நிலைமையை கொண்டுவருவார் என அவர்கள் நம்புகின்றனர்.”​—⁠அரபியர்களின் வரலாறு.

22ஒவ்வொரு ஆண்டும் ஷீயாக்கள் இமாம் ஹுஸைனின் தியாக மரணத்தை நினைவுகூருகின்றனர். பேரணிகள் நடத்தி, கத்திகளாலும் பட்டயங்களாலும் தங்களைத் தாங்களே கீறிக்கொள்கின்றனர், அல்லது வேறு ஏதாவது விதத்தில் தங்களையே துன்புறுத்திக் கொள்கின்றனர். நவீன நாட்களில், இஸ்லாமிய மதத்தின்பேரில் ஷீயா முஸ்லிம்கள் காண்பிக்கும் வைராக்கியத்தின் காரணமாக அவர்கள் அதிக பிரபலமடைந்திருக்கின்றனர். ஆனால் உலகிலுள்ள முஸ்லிம்களில் இவர்கள் சுமார் 20 சதவீதத்தினர் மட்டுமே; பெரும்பாலானவர்கள் சுன்னீ முஸ்லிம்களாக இருக்கின்றனர். இப்போது இஸ்லாமின் சில போதனைகளுக்கு நம்முடைய கவனத்தைத் திருப்பி, இஸ்லாம் எவ்வாறு முஸ்லிம்களின் நடத்தையை பாதிக்கிறது என்பதை பார்க்கலாம்.

கடவுளே உன்னதமானவர், இயேசு அல்ல

23ஒரே-கடவுள் என்ற கோட்பாட்டை பின்பற்றுவது இவ்வுலகில் மூன்று முக்கிய மதங்களாகும், அதாவது யூத மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாம் மதம் ஆகியவையே. ஆனால் தான் பிறப்பதற்கு முன்னரே முதல் இரண்டு மதங்களும் மெய்யான பாதையை விட்டு விலகிப் போயிருந்ததாக பொ.ச. ஏழாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் முகமது உணர்ந்தார். சொல்லப்போனால், யூதர்களும் கிறிஸ்தவர்களும் இறைவனால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று சில இஸ்லாமிய விளக்கவுரையாளர்கள் கூறுகின்றனர்; இதை குர்ஆன் மறைமுகமாய் சொல்வதாக குறிப்பிட்டு, பின்வரும் சூறாவை மேற்கோள் காண்பிக்கின்றனர்: ‘உன் கோபத்திற்குள்ளானவர்களும் நெறிதவறியவர்களும் சென்ற வழியில் அல்ல!’ (சூறா 1:7, MMP) ஏன் அப்படி?

24குர்ஆனின் விளக்கவுரை ஒன்று இவ்வாறு கூறுகிறது: ‘ஈஸாவை (அலை) எதிர்ப்பதிலும் மறுப்பதிலும் யூதர்கள் எல்லை மீறிச் சென்றனர். இது யூதர்கள் செய்த குற்றம். கிறிஸ்தவர்கள் புரிந்த குற்றம்: ஈஸா (அலை) மீது நம்பிக்கை கொள்வதிலும் அன்பு வைப்பதிலும் அவர்கள் எல்லை மீறிவிட்டனர். [திரித்துவ கோட்பாட்டின் மூலம்] அவரைத் தேவகுமாரன் ஏன், தேவன் என்றே கருதிவிட்டனர்.’​—⁠சூறா 4:153-176.

25 ஷஹாதத் (shahādah), அதாவது நம்பிக்கையை அறிக்கையிடுவது என்பதுதான் இஸ்லாமின் முக்கிய போதனை என எளிய வார்த்தைகளில் சொல்லலாம். எல்லா முஸ்லிம்களுக்கும் அது மனப்பாடமாக தெரியும்: “லா இலாஹ் இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரஸூலில்லாஹ்” (அல்லாவைத் தவிர வழிபாட்டிற்குரியவர் வேறு எவருமே இல்லை; முகமதுவே அல்லாவின் தூதுவர்). குர்ஆனில் உள்ள வாக்கியத்தோடு இது ஒத்திருக்கிறது: “உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்; அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடையோனாகிய அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.” (சூறா 2:163) இந்தக் குறிப்பு 2,000 வருடங்களுக்கு முன்பே இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பில் சொல்லப்பட்டது: “இஸ்ரவேலே, கேள்; நமது கடவுளாகிய யெகோவா ஒரே யெகோவா.” (உபாகமம் 6:4, NW) இந்த மிக முக்கியமான கட்டளையை முகமதுவின் காலத்துக்கு சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பாகவே இயேசு மறுபடியும் கூறினார், இது மாற்கு 12:29-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம், இயேசு தாம் கடவுள் என்றோ கடவுளுக்குச் சமமானவர் என்றோ உரிமைபாராட்டியதாக எங்குமே குறிப்பிடப்படவில்லை.​—மாற்கு 13:32; யோவான் 14:28; 1 கொரிந்தியர் 15:⁠28.

26இறைவனின் ஈடிணையற்ற தன்மையைக் குறித்து குர்ஆன் இவ்வாறு சொல்கிறது: ‘எனவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். மேலும், மூன்று (கடவுள்) [திரித்துவம்] எனச் சொல்லாதீர்கள். (அப்படிச் சொல்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். இதுவே உங்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில், அல்லாஹ் ஒரே இறைவன்தான்.’ (சூறா 4:171) ஆனால் உண்மை கிறிஸ்தவம் திரித்துவத்தைக் கற்பிப்பதில்லை என்பதை நாம் கவனத்தில் வைக்க வேண்டும். கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் மரித்த பின்னர் கிறிஸ்தவமண்டல விசுவாசதுரோகிகள் அறிமுகப்படுத்திய புறமத கோட்பாடே அது.​—⁠அதிகாரம் 11-ஐக் காண்க. d

ஆத்மா, உயிர்த்தெழுதல், பரதீஸ், நரகம்

27மரணத்திற்கு பிறகு உயிர்வாழும் ஓர் ஆத்மா மனிதனுக்கு இருப்பதாக இஸ்லாம் கற்பிக்கிறது. குர்ஆன் இவ்வாறு சொல்கிறது: ‘மரணத்தின்போது (மனிதரின்) ஆத்மாவை அல்லாஹ் கைப்பற்றுகிறான். (இதுவரை) மரிக்காதவர்களின் (ஆத்மாவைத்) தூக்கத்தின்போது கைப்பற்றுகிறான். பிறகு, எவர்கள் மீது மரணத்தை விதிக்கிறானோ, அவர்களின் (ஆத்மாவை) தடுத்து வைத்துக்கொள்கிறான்.’ (சூறா 39:42, MMP) அதே சமயத்தில் 75-வது சூறா, “கியாமத், அதாவது உயிர்த்தெழுதல்” (AYA) அதாவது “மரித்தோர் எழும்பி வருதல்” (MMP) பற்றியே முழுக்க முழுக்க பேசுகிறது. அதிலுள்ள பகுதி இவ்வாறு சொல்கிறது: ‘நான் உயிர்த்தெழுதல் நாளின் மீது சத்தியம் செய்கிறேன் . . . அவனுடைய எலும்புகளை நம்மால் ஒன்றுதிரட்ட முடியாது என்று மனிதன் கருதுகிறானா? . . . “அந்த உயிர்த்தெழுதல் எப்போது வரும்?” என்று அவன் கேட்கிறான். . . . இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க அல்லாஹ்வுக்கு ஆற்றல் இல்லையா?’​—⁠சூறா 75:1, 3, 6, 40, AYA.

28குர்ஆனின் கருத்துப்படி, ஆத்மா வெவ்வேறு இடங்களைச் சென்றடைய முடியும், அது பரலோக பரதீஸ் தோட்டமாக இருக்கலாம் அல்லது எரி நரகத்தில் தண்டனையாக இருக்கலாம். குர்ஆன் இவ்வாறு சொல்கிறது: ‘கூலி கொடுக்கப்படும் அந்நாள் எப்போது வரும்? என வினவுகின்றனர். இவர்கள் நெருப்பில் வதைக்கப்படும் நாளில் அது வரும். (அவர்களிடம் கூறப்படும்:) இப்போது சுவையுங்கள்; உங்களுடைய குழப்பத்தை!’ (சூறா 51:12-14) “இத்தகையோருக்கு [பாவிகளுக்கு] உலக வாழ்க்கையிலேயே வேதனையுண்டு. மேலும் மறுமையின் வேதனை இதைவிடக் கடுமையானதாகும். அவர்களை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுவோர் எவருமிலர்.” (சூறா 13:34) பின்வரும் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது: “அது என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன? கொழுந்து விட்டெரியும் நெருப்பு!” (சூறா 101:10, 11) தவிர்க்க முடியாத இந்த முடிவு விளக்கமாக வர்ணிக்கப்பட்டுள்ளது: “எவர்கள் நம் சான்றுகளை மறுக்கின்றார்களோ அவர்களை நிச்சயம் நாம் நரகில் வீசி எறிவோம். அவர்களுடைய உடலின் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றிக்கொண்டே இருப்போம்; வேதனையை அவர்கள் நன்கு சுவைத்துக் கொண்டேயிருப்பதற்காக!​—⁠திண்ணமாக அல்லாஹ் மிகையான ஆற்றல் உள்ளவனாகவும் (தன் முடிவுகளைச் செயல்படுத்தும் நுட்பத்தை) நன்கு அறிந்தவனாகவும் இருக்கின்றான்.” (சூறா 4:56) மற்றொரு விளக்கம் இவ்வாறு உள்ளது: “திண்ணமாக, நரகம் பதுங்கித் தாக்கக்கூடியதாய் இருக்கிறது. . . . அதில் அவர்கள் பல யுகங்கள் வீழ்ந்து கிடப்பார்கள். அங்கு குளுமையையோ, குடிப்பதற்கேற்ற எந்த ஒரு பொருளின் சுவையையோ அவர்கள் சுவைக்க மாட்டார்கள், கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர!”​—⁠சூறா 78:21, 23-25.

29மரித்த நபரின் ஆத்மா பர்ஸக் (Barzakh), அதாவது “திரை” என்ற இடைப்பட்ட நிலைக்கு செல்கிறது என முஸ்லிம்கள் நம்புகின்றனர், இது ‘இறுதித் தீர்ப்புநாள் வரை உலகத்திற்கும் மறுமைக்கும் இடையிலான நிலை.’ (சூறா 23:99, 100, அடிக்குறிப்பு) ஆத்மாவுக்கு அங்கு உணர்வு இருக்கிறது, அந்த நபர் பொல்லாதவராக இருந்திருந்தால் “கல்லறையின் வாதனையை” அனுபவிக்கிறார், உண்மையுள்ளவராக இருந்திருந்தால் மகிழ்ச்சியை அனுபவிக்கிறார். ஆனால் உண்மையாய் இருந்தவர்களும்கூட உயிரோடிருக்கையில் செய்த சில பாவங்களுக்காக கொஞ்சம் வாதனையை அனுபவித்தாக வேண்டும். நியாயத்தீர்ப்பு நாளில், ஒவ்வொருவரும் தன்னுடைய நித்திய முடிவை எதிர்ப்படுகையில் இந்த இடைப்பட்ட நிலை முடிவுறும். e

30இதற்கு நேர்மாறாக, நீதியாய் நடப்பவர்களுக்கு பரலோக பரதீஸிய தோட்டங்கள் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது: “மேலும் எவர்கள் நம் வசனங்களை ஏற்று நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களை​—⁠கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் நுழைவிப்போம். அங்கு அவர்கள் என்றென்றும் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்.” (சூறா 4:57) “இன்று சுவனவாசிகள் இன்ப நுகர்ச்சியில் திளைத்திருப்பார்கள். அவர்களும், அவர்களின் மனைவியரும் அடர்ந்த நிழலில் சாய்வாசனங்கள் மீது சாய்ந்திருப்பார்கள்.” (சூறா 36:55, 56) “‘ஜபூரில்’ (மூஸாக்கு) நல்லுரை வழங்கிய பிறகு, ‘நம்முடைய நல்லடியார்களே இப்பூமிக்கு வாரிசுகள் ஆவார்கள்’ என்று எழுதி வைத்து விட்டோம்.” இந்தச் சூறாவின் அடிக்குறிப்பு வாசகரின் கவனத்தை சங்கீதம் 25:13; 37:11, 29 ஆகிய வசனங்களுக்கும், மத்தேயு 5:5-லுள்ள இயேசுவின் வார்த்தைகளுக்கும் திருப்புகிறது. (சூறா 21:105; AYA) மனைவியர் என்று குறிப்பிடப்பட்டிருப்பது நம்முடைய கவனத்தை மற்றொரு கேள்வியினிடமாக திருப்புகிறது.

ஒருதாரமா பலதாரமா?

31பலதார மணம் என்பது முஸ்லிம்கள் மத்தியில் ஒரு பொது நியதியாக இருக்கிறதா? பலதார மணத்தை குர்ஆன் அனுமதிக்கிற போதிலும் அநேக முஸ்லிம்கள் ஒரேவொரு மனைவி உடையவர்களாகவே இருக்கின்றனர். பெரும் இழப்பை ஏற்படுத்திய யுத்தங்களுக்குப் பின்னர் விதவைகள் எண்ணிக்கையில் அதிகமானபடியால் குர்ஆன் பலதார மணத்தை அனுமதித்தது: “அநாதை(ப்பெண்)களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள்.” (சூறா 4:3) இப்பன் ஹிஷாம் எழுதிய முகமதுவின் வாழ்க்கை வரலாற்றின்படி, முகமது தன்னைவிட 15 வயது மூத்தவரான பணக்கார விதவை கதீஜாவை மணந்தார். அவளுடைய மரணத்துக்குப்பின் அவர் பல பெண்களை மணந்தார். முகமது மரித்தபோது ஒன்பது பேர் விதவைகளானார்கள்.

32இஸ்லாமில் மற்றொரு வகையான திருமணத்துக்குப் பெயர் முத்ஆ (mutʽah) என்பதாகும். “குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்கு, நிரந்தரமான திருமணத்தில் இருப்பது போலவே குறிப்பிட்ட ஒரு தொகையை வரதட்சணையாக கொடுத்து ஓர் ஆணும் பெண்ணும் மணமுடித்துக்கொள்ள அவர்கள் இருவரும் செய்துகொள்ளும் ஒரு விசேஷித்த ஒப்பந்தம்” என்று இது விளக்கப்படுகிறது. (முஸ்தபா அல்-ரஃபி எழுதிய இஸ்லாமுனா) இதை வெறும் சிற்றின்பத்திற்காக செய்துகொள்ளும் திருமணம் என்பதாக சுன்னீ முஸ்லிம்கள் சொல்கிறார்கள், ஷீயா முஸ்லிம்கள் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியோடு முடிவடையும் தற்காலிக திருமணம் என்பதாக இதை அழைக்கிறார்கள். இதே புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “[இப்படிப்பட்ட திருமணத்தின் மூலமாக] பிறக்கும் குழந்தைகளுக்கு நிரந்தர திருமணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இருக்கும் அதே உரிமைகள் உண்டு.” இப்படிப்பட்ட தற்காலிக திருமணங்கள் முகமதுவின் நாளில் செய்யப்பட்டன, அந்தப் பழக்கத்தை அவர் அனுமதித்தார். பிற்பட்ட காலங்களில் அப்பழக்கத்துக்குத் தடைவிதிக்கப்பட்டது என்பதாக சுன்னீ முஸ்லிம்கள் திட்டவட்டமாக கூறுகின்றனர், ஆனால் மிகப் பெரிய ஷீயா பிரிவான இமாம் பிரிவைச் சேர்ந்தவர்கள் அந்தப் பழக்கம் இன்னும் புழக்கத்தில் இருப்பதாக சொல்கின்றனர். ஆம், உண்மையில் அநேகர் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர், முக்கியமாக மனைவியைவிட்டு கணவன் நீண்ட காலமாக பிரிந்திருக்க நேரிடும்போது.

இஸ்லாமும் அன்றாட வாழ்க்கையும்

33இஸ்லாமில் ஐந்து முக்கியமான தூண்களும், அதாவது முக்கிய கடமைகளும் ஆறு அடிப்படை நம்பிக்கைகளும் உள்ளன. (பக்கங்கள் 296, 303-⁠ல் உள்ள பெட்டிகளைக் காண்க.) மெக்கா நகரம் இருக்கும் திசைநோக்கி ஒரு நாளில் ஐந்து முறை தொழுவது (சலாத்) ஒரு கடமையாகும். முஸ்லிம்களின் ஓய்வுநாளில் (வெள்ளி) மசூதியின் கோபுரத்திலிருந்து முல்லா விடுக்கும் அழைப்பைக் கேட்கையில் ஆண்கள் மசூதிக்கு திரண்டு வருகின்றனர். இப்போதெல்லாம் பல மசூதிகளில் முல்லாவே நேரடியாக குரல் கொடுப்பதற்கு பதிலாக அவருடைய குரலை பதிவுசெய்து ஒலிபரப்புகின்றனர்.

34முஸ்லிம்கள் வழிபாடு நடத்தும் இடத்தின் பெயர் மசூதி (அரபிக், மஸ்ஜித்). செளதி அரேபியாவின் அரசன் பாஹித் பின் அப்துல் அசீஸ் இதை “கடவுளுடைய அழைப்புக்கு மூலைக்கல்” என்பதாக விவரித்தார். இது, “தொழுகை, படிப்பு, சட்டம் மற்றும் நீதி சம்பந்தமான நடவடிக்கைகள், ஆலோசனை கேட்டல், பிரசங்கித்தல், அறிவுரைகள், கல்வி, தயாரிப்பு ஆகியவற்றிற்குரிய இடமாகும். . . . மசூதியே முஸ்லிம் சமுதாயத்தின் உயிர்நாடியாகும்” என்றார். இந்த வழிபாட்டு ஸ்தலங்கள் இப்போது உலகெங்கும் உள்ளன. வரலாற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற மசூதி ஸ்பெயினிலுள்ள கார்டபாவிலிருந்த மெஸ்கிட்டா (மசூதி) ஆகும். பல நூற்றாண்டுகளாக இது உலகில் மிகப் பெரிய மசூதியாக இருந்து வந்தது. அதன் நடுப்பகுதியில் இப்போது ஒரு கத்தோலிக்க கத்தீட்ரல் காணப்படுகிறது.

கிறிஸ்தவமண்டலத்தோடும் கிறிஸ்தவமண்டலத்திற்குள்ளும் மோதல்

35ஏழாவது நூற்றாண்டு முதற்கொண்டு, இஸ்லாம் மேற்கே வட ஆப்பிரிக்காவுக்கும் கிழக்கே பாகிஸ்தான், இந்தியா, வங்காள தேசத்திற்கும் பரவியது; கீழ்நோக்கி இந்தோனீஷியா வரையாகவும்கூட பரவியது. அச்சமயத்தில் போர்புரிந்த கத்தோலிக்க சர்ச்சோடு இஸ்லாம் மோதியது, அந்தச் சர்ச்சோ முஸ்லிம்களிடமிருந்து புனித தேசத்தை மீட்பதற்காக சிலுவைப் போர்களைத் தொடுத்தது. 1492-⁠ல் ஸ்பெயினின் அரசி இசபெல்லாவும் அரசர் பெர்டினான்டும் சேர்ந்து தங்கள் நாட்டை மீண்டும் கைப்பற்றினர். முஸ்லிம்களும் யூதர்களும் மதம் மாற வேண்டும், இல்லையேல் ஸ்பெயினிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஸ்பெயினில் முஸ்லிம்களுடைய ஆட்சியின்போது இருந்து வந்த பரஸ்பர சகிப்புத்தன்மை கத்தோலிக்கரின் ஒடுக்குமுறை விசாரணையில் மறைந்தே போனது. ஆனாலும்கூட இஸ்லாம் அழியவில்லை, 20-ஆம் நூற்றாண்டில் அது புத்துயிர் பெற்று இப்போது வெகுவாக வளர்ந்திருக்கிறது.

36ஒரு பக்கத்தில் இஸ்லாம் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தது, மறுபக்கத்தில் கத்தோலிக்க சர்ச் தன் சொந்த ஜனங்களில் ஒற்றுமையை கட்டிக் காப்பதற்காக போராடிக் கொண்டிருந்தது. ஆனால் சர்ச்சின் பிரமாண்டமான தோற்றத்தை தகர்த்தெறிய இருந்த இரண்டு வலிமையான ‘குண்டுகள்’ அச்சமயத்தில் வெடிக்க இருந்தன. ஒன்று அச்சு இயந்திரம், மற்றொன்று மக்களுடைய சொந்த மொழியில் வெளியான பைபிள். இவையும் மற்ற செல்வாக்குகளும் சேர்ந்து எவ்வாறு கிறிஸ்தவமண்டலத்தை இன்னும் அதிகப்படியாக தகர்த்தன என்பதை எமது அடுத்த அதிகாரம் கலந்தாலோசிக்கும்.

[அடிக்குறிப்புகள்]

a குர்ஆனிலிருந்து (இதன் அர்த்தம் “ஓதுதல்”) எடுக்கப்பட்ட மேற்கோள்களில் முதல் எண் அத்தியாயத்தையும், அதாவது சூறாவையும் இரண்டாவது எண் வசனத்தையும் குறிக்கிறது. மொழிபெயர்ப்பு இன்னதென்று குறிப்பிட்டிராத திருக்குர்ஆன் வசனங்கள் யாவும் மௌலவி ஏ. குத்புத்தீன் அஹ்மத் பாகவி, மௌலவி ஆர். அப்துர் ரவூஃப் பாகவி என்பவர்களின் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.

b பைபிளில் கடவுள் கொடுத்த செய்திகள் உள்ளன என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர், ஆனால் அவற்றில் சில பிற்காலங்களில் மாற்றப்பட்டுவிட்டதாக அவர்கள் நினைக்கின்றனர்.

c ஆகவேதான், A.D. (அன்னோ டாமினி, கர்த்தருடைய வருடத்திலே) அல்லது C.E. (பொது சகாப்தம்) என்பதற்கு பதிலாக முஸ்லிம்களது வருடம் A.H. (லத்தீனில் அன்னோ ஹெகிரே, குடியேறிய வருடம்) என்று குறிப்பிடப்படுகிறது.

d திரித்துவத்தின் பேரிலும் பைபிளின் பேரிலும் கூடுதல் தகவல் அறிய யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டுள்ள நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? என்ற சிற்றேட்டைக் காண்க.

e ஆத்மா, நரக அக்கினி ஆகிய விஷயங்களின் பேரில், பின்வரும் பைபிள் வசனங்களை ஒப்பிடுக: ஆதியாகமம் 2:7; எசேக்கியேல் 18:4; யாக்கோபு 5:20. யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டுள்ள வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் 168-75; 375-80 பக்கங்களைக் காண்க.

[கேள்விகள்]

1, 2. (அ) குர்ஆனின் ஆரம்ப வார்த்தைகள் யாவை? (ஆ) முஸ்லிம்களுக்கு இந்த வார்த்தைகள் ஏன் முக்கியமானவை?

3. இஸ்லாம் இன்று எந்தளவுக்கு பரவலாக பின்பற்றப்படுகிறது?

4. (அ) “இஸ்லாம்” என்பதன் அர்த்தம் என்ன? (ஆ) “முஸ்லிம்” என்பதன் அர்த்தம் என்ன?

5. (அ) இஸ்லாமைப் பற்றி முஸ்லிம்கள் நம்புவது என்ன? (ஆ) பைபிளுக்கும் குர்ஆனுக்கும் இடையில் என்ன பொதுவான விஷயங்கள் காணப்படுகின்றன?

6. (அ) முகமதுவின் காலத்தில் எது அரபியர்களின் வழிபாட்டு மையமாக விளங்கியது? (ஆ) கபாவின் சம்பந்தமாக என்ன பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வந்தது?

7. முகமதுவின் மன அமைதியைக் குலைத்த மதப் பழக்கவழக்கங்கள் யாவை?

8. ஒரு நபியாகும்படியான அழைப்பை முகமது எந்தச் சூழ்நிலையில் பெற்றார்?

9. முகமது முதலில் பெற்றுக் கொண்டதாக சொல்லப்படும் வெளிப்படுத்துதல் என்ன? (வெளிப்படுத்துதல் 22:18, 19-ஐ ஒப்பிடுக.)

10-12. குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது?

13. (அ) இஸ்லாமிய போதனைகளையும் வழிகாட்டுதல்களையும் எந்த மூன்று நூல்கள் கொடுக்கின்றன? (ஆ) குர்ஆனை மொழிபெயர்ப்பது பற்றி சில இஸ்லாமிய அறிஞர்கள் எவ்வாறு கருதுகின்றனர்?

14. இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பத்தில் எது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியானது?

15. இஸ்லாமிய யாத்திரிகர்களுக்கு மெக்கா முக்கிய புனித ஸ்தலமானது எவ்வாறு?

16. இஸ்லாம் எந்தளவுக்குப் பரவியது?

17. முகமது மரித்தபோது இஸ்லாம் எதிர்ப்பட்ட பெரும் பிரச்சினை என்ன?

18, 19. சுன்னீ முஸ்லிம்களுக்கும் ஷீயா முஸ்லிம்களுக்கும் இடையே உள்ள பிரிவினைக்கு காரணம் என்ன?

20. முகமதுவின் மருமகன் அலிக்கு என்ன நடந்தது?

21. முகமதுவின் வாரிசுகளைப் பற்றி ஷீயாக்களின் கருத்துகள் யாவை?

22. ஹுஸைனின் தியாக மரணத்தை ஷீயாக்கள் எவ்வாறு நினைவுகூருகின்றனர்?

23, 24. முகமதுவும் முஸ்லிம்களும் யூத மதத்தை மற்றும் கிறிஸ்தவ மதத்தை எவ்வாறு கருதினர்?

25. குர்ஆனிலும் பைபிளிலும் நாம் காணும் இணையான வாக்கியங்கள் யாவை?

26. (அ) முஸ்லிம்கள் திரித்துவத்தை எவ்வாறு கருதுகிறார்கள்? (ஆ) திரித்துவத்துக்கு பைபிள் ஆதாரம் இருக்கிறதா?

27. ஆத்மாவையும் உயிர்த்தெழுதலையும் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது? (பிரசங்கி 9:5, 10; யோவான் 5:28, 29 ஆகியவற்றோடு வேறுபடுத்திக் காண்க.)

28. நரகத்தைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது? (யோபு 14:13; எரேமியா 19:5; 32:35; அப்போஸ்தலர் 2:25-27; ரோமர் 6:7, 23 ஆகியவற்றோடு வேறுபடுத்திக் காண்க.)

29. ஆத்மாவையும் அதன் முடிவையும் பற்றிய இஸ்லாமிய போதனையையும் பைபிள் போதனையையும் வேறுபடுத்துங்கள்.

30. குர்ஆனின்படி, நீதியாய் நடப்பவர்களுக்கு என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது? (ஏசாயா 65:17, 21-25; லூக்கா 23:43; வெளிப்படுத்துதல் 21:1-5 ஆகியவற்றோடு வேறுபடுத்திக் காண்க.)

31. குர்ஆன் பலதார மணத்தைக் குறித்து என்ன சொல்கிறது? (1 கொரிந்தியர் 7:2; 1 தீமோத்தேயு 3:2, 12 ஆகியவற்றோடு வேறுபடுத்திக் காண்க.)

32. முத்ஆ என்பது என்ன?

33. இஸ்லாமின் தூண்களும் நம்பிக்கையின் தூண்களும் யாவை?

34. மசூதி என்பது என்ன, அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?

35. கடந்த காலங்களில், இஸ்லாமுக்கும் கத்தோலிக்க மதத்திற்கும் இடையே என்ன நிலைமை இருந்தது?

36. இஸ்லாம் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கையில் கத்தோலிக்க சர்ச்சினுள் என்னவெல்லாம் நடந்துகொண்டிருந்தது?

[கேள்விகள்]

1, 2. பாஹாய் மதம் எவ்வாறு தோன்றியது?

3-7. (அ) பாஹாய்களின் சில நம்பிக்கைகள் யாவை? (ஆ) பாஹாய் மத நம்பிக்கைகள் எவ்விதமாக பைபிள் போதனைகளிலிருந்து வித்தியாசப்படுகின்றன?

8, 9. பாஹாய் மதத்தின் நோக்கம் என்ன?

[பக்கம் 285-ன் பெட்டி]

குர்ஆனும் பைபிளும்

“அவனே உம்மீது இந்த வேதத்தை இறக்கியுள்ளான். அதுவோ சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும் இது தனக்கு முன்னர் அருளப்பட்ட வேத நூல்களை உண்மைப்படுத்துகிறது. மேலும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவன் இறக்கியிருக்கின்றான். மெய்யையும், பொய்யையும் வேறுபடுத்திக் காட்டும் (உரைகல்லான)​—⁠இந்த ஃபுர்கானையும் இறக்கியுள்ளான்.”​—⁠சூறா 3:3.

“பெரும்பாலும் குர்ஆனில் காணப்படும் எல்லா வரலாற்று நிகழ்ச்சிகளும் பைபிளில் காணப்படும் நிகழ்ச்சிகளுக்கு ஒத்திருக்கின்றன . . . ஆதாம், நோவா, ஆபிரகாம் (இருபத்து ஐந்து வெவ்வேறு சூறாக்களில் சுமார் எழுபது தடவை இவரைப் பற்றிய குறிப்பு வருகிறது, இவரின் பெயரே சூறா 14-⁠ன் தலைப்பாகும்), இஸ்மவேல், லோத்து, யோசேப்பு (சூறா 12 இவருக்கே அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது), மோசே (முப்பத்து நான்கு வெவ்வேறு சூறாக்களில் இவர் பெயர் இடம்பெறுகிறது), சவுல், தாவீது, சாலொமோன், எலியா, யோபு, யோனா (சூறா 10 இவர் பெயரில் உள்ளது) ஆகியோர் முக்கியமானவர்கள். படைப்பு பற்றியும் ஆதாம் வீழ்ந்து போனது பற்றியும் ஐந்து தடவையும், ஜலப்பிரளயம் பற்றி எட்டு தடவையும் சோதோம் பற்றி எட்டு தடவையும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம், பைபிளின் வேறு எந்தப் பகுதியைக் காட்டிலும் ஐந்தாகமத்தோடுதான் குர்ஆன் அதிகமாக ஒத்திருக்கிறது. . . .

“புதிய ஏற்பாட்டில் இடம் பெறுகிறவர்களில் சகரியா, யோவான் ஸ்நானன், இயேசு (ஈசா), மரியாள் ஆகியோர் மாத்திரமே முக்கியத்துவம் பெறுகின்றனர். . . .

குர்ஆனின் பதிவையும் பைபிளின் பதிவையும் . . . ஒப்பிட்டு பார்க்கையில் நேரடியான மேற்கோள் எதுவுமில்லை என்பது தெரிய வருகிறது.” f—⁠அரபியர்களின் வரலாறு.

[அடிக்குறிப்பு]

f எனினும், பக்கம் 300, பாரா 30-⁠ல் சூறா 21:105-ஐக் காண்க.

[பக்கம் 291-ன் பெட்டி]

போதனைக்கும் அறிவுரைக்கும் ஆதார நூல்கள் மூன்று

திருக்குர்ஆன் முகமது நபிக்கு காபிரியேல் வானவரால் வெளிப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. குர்ஆனில் உள்ள அரபிய வார்த்தைகளும் அதன் அர்த்தமும் இறைவனின் ஆவியால் ஏவப்பட்டவையாக கருதப்படுகின்றன.

ஹதீத், அதாவது சுன்னா, “இரண்டாவது நூற்றாண்டில் [A.H.] எழுதி வைக்கப்பட்ட ஹதீத்களில் . . . நபிகளின் செயல்களும் சொற்களும் அவர் மெளனமாக அங்கீகரித்தவையும் (taqrîr) இடம்பெற்றிருக்கின்றன. ஆகவே ஹதீத் என்பது நபிகளின் போதனைகள் அல்லது செயல்கள் பற்றிய ஒரு பதிவாகும்.” முகமதுவின் “நண்பர்கள் அல்லது அவர்களுடைய வாரிசுகள்” வாழ்ந்து காட்டிய முறையும் அவர்கள் சொன்னவையும்கூட இதில் அடங்கும். ஹதீத்திலுள்ள கருத்து மாத்திரமே இறைவனால் ஏவப்பட்டதாக கருதப்படுகிறது.​—⁠அரபியர்களின் வரலாறு.

ஷரீஅத், அதாவது அடிப்படைச் சட்டம் என்பது குர்ஆனின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இது மத, அரசியல், சமுதாய கருத்துகளில் ஒரு முஸ்லிமின் முழு வாழ்க்கையையும் கட்டுப்படுத்துகிறது. “மனிதனின் செயல்கள் அனைத்தும் சட்டப்படி ஐந்து பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகின்றன: (1) கட்டாயம் செய்ய வேண்டிய கடமை (ஃபர்த்) [செய்தால் பலன், செய்யத் தவறினால் தண்டனை]; (2) பாராட்டுக்குரிய அல்லது மெச்சத்தக்க செயல்கள் (முஸ்தஹப்) [செய்தால் பலன் உண்டு, செய்யாவிட்டால் தண்டனை கிடையாது]; (3) அனுமதிக்கப்பட்ட செயல்கள் (ஜாயிஸ், முஃபா), சட்டப்படி நடுநிலையாக இருப்பவை; (4) கண்டிக்கத்தக்க செயல்கள் (மக்ரூஹ்), ஆட்சேபணைக்குரியவை ஆனால் தண்டனை கிடையாது; (5) விலக்கப்பட்ட செயல்கள் (ஹராம்), அவற்றை செய்தால் தண்டனை உண்டு.”​—⁠அரபியர்களின் வரலாறு.

[பக்கம் 296-ன் பெட்டி]

நம்பிக்கையின் ஆறு தூண்கள்

1. ஒரே கடவுள், அல்லாஹ்வில் நம்பிக்கை (சூறா 23:116, 117)

2. இறைதூதர் மீது நம்பிக்கை (சூறா 2:177)

3. இறைவனின் புத்தகங்கள்: தோரா, சுவிசேஷம், சங்கீதம், ஆபிரகாமின் சுருள்கள், குர்ஆன்

4. பல நபிமார்கள், ஆனால் செய்தி ஒன்றே என்ற நம்பிக்கை. ஆதாம் முதல் நபி. மற்றவர்களுள் ஆபிரகாம், மோசே, இயேசு, நபிமார்களுக்கெல்லாம் “இறுதி நபியாக” இருக்கும் முகமது ஆகியோர் அடங்குவர் (சூறா 4:136; 33:⁠40)

5. கடைசி நாள்: இறந்தவர்கள் அனைவரும் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுப்பப்படுவார்கள்

6. நன்மை, தீமை இரண்டும் அடங்கிய விதியில் நம்பிக்கை. இறைவன் முன்னதாகவே தீர்மானிக்காமல் எதுவும் நடக்காது

[பக்கம் 303-ன் பெட்டி]

இஸ்லாமின் ஐந்து தூண்கள்

1. திரும்பத் திரும்ப ஓத வேண்டியது (ஷஹாதத்): “அல்லாவைத் தவிர வழிபாட்டிற்குரியவர் வேறு எவருமே இல்லை; முகமது சாகேப் அல்லாவின் ரஸூல் [தூதுவர்] ஆவார்.” (சூறா 33:⁠40)

2. (சலாத்) மெக்கா இருக்கும் திசைநோக்கி ஒரு நாளுக்கு ஐந்து தடவை தொழ வேண்டும் (சூறா 2:144)

3. தானம் (ஜகாத்), ஒருவருடைய வருமானத்திலும் சொத்திலும் குறிப்பிட்ட ஒரு தொகையை தர்மம் செய்ய வேண்டிய கடமை (சூறா 24:⁠56)

4. நோன்பு (செளம்), விசேஷமாக ரமளான் மாதம் முழுவதும் நோன்பிருக்க வேண்டும் (சூறா 2:183-185)

5. புனித யாத்திரை (ஹஜ்), வாழ்நாளில் ஒரு முறையாவது ஒவ்வொரு முஸ்லிமும் மெக்காவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். நோயுற்றிருந்தாலும் வறுமையில் இருந்தாலும் மட்டுமே செல்ல வேண்டியதில்லை (சூறா 3:⁠97)

[பக்கம் 304, 305-ன் பெட்டி/படம்]

பாஹாய் மதம்​—⁠உலக ஐக்கியத்தை நாடுகிறது

1 பாஹாய் மதம் என்பது இஸ்லாமின் ஒரு பிரிவு அல்ல, ஆனால் பாரசீக நாட்டிலுள்ள (இன்று ஈரான்) ஒரு தொகுதியான பாபி மதத்தின் ஒரு பிரிவு. இந்த பாபி மதம் இஸ்லாமின் ஷீயா பிரிவிலிருந்து 1844-⁠ல் பிரிந்து சென்றது. பாபிக்களின் தலைவர் ஷிராஸின் மிர்ஸா அலி முகமது என்பவர். இவர் தன்னை பாப் (“நுழைவாசல்”) என்றும் முகமதுவின் வம்சத்தில் வந்த இமாம்-மஹ்தி (“நேர்வழி காட்டப்பட்ட தலைவர்”) என்றும் கூறிக்கொண்டார். 1850-⁠ல் பாரசீக அதிகாரிகளால் இவர் கொல்லப்பட்டார். 1863-⁠ல் பாபி தொகுதியிலிருந்த மிர்ஸா உசேன் அலி நூரி என்ற செல்வாக்குள்ள ஓர் உறுப்பினர், “‘கடவுள் அவதரிக்க வைக்கப் போவதாக’ பாப் முன்னறிவித்த அந்த நபர் ‘நான்தான்’ என்று அறிவித்தார்.” பஹா உல்லா (“கடவுளின் மகிமை”) என்ற பெயரையும் தனக்கு வைத்துக்கொண்டு பாஹாய் மதம் என்ற ஒரு புதிய மதத்தை தோற்றுவித்தார்.

2 பஹா உல்லா பாரசீக நாட்டிலிருந்து துரத்தப்பட்டு கடைசியில் அக்கோ நகரிலிருந்த (இன்று அக்கர், இஸ்ரேல்) சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே அவர் அல்-கித்தாப் அல்-அக்தாஸ் (பெரும் புனித நூல்) என்ற நூலை எழுதி, அதில் பாஹாய் மத கோட்பாட்டினை விரிவாக விளக்கினார். பஹா உல்லா மரித்தபோது புதிதாக தோன்றியிருந்த மதத்தின் தலைமைப் பொறுப்பை அவருடைய மகன் அப்துல்-பஹாவும், பின்னர் அவருடைய கொள்ளுப் பேரன் ஷோகி எஃபென்டி ரபானியும் ஏற்றனர்; தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிர்வாக குழுவான உலக நீதிமன்றம் (Universal House of Justice) 1963-⁠ல் இந்தப் பொறுப்பை ஏற்றது.

3 கடவுள் தம்மை ஆபிரகாம், மோசே, கிருஷ்ணர், ஜொராஸ்டர், புத்தர், இயேசு, முகமது, பாப், பஹா உல்லா போன்ற “அவதார புருஷர்கள்” மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது பாஹாய்களின் நம்பிக்கை. மனிதர்களை படிப்படியாக வழிநடத்திச் செல்ல இந்த இறைத் தூதர்கள் வந்தனர் என்றும், பாப் தோன்றியது மனித குலத்துக்கு ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்து வைத்துள்ளது என்றும் இவர்கள் நம்புகின்றனர். அவருடைய செய்தியே கடவுளுடைய சித்தத்தை இன்று வரை முழுமையாக வெளிப்படுத்துகிறது என்பதாகவும், உலக ஒற்றுமையை சாத்தியமாக்குவதற்கு கடவுள் கொடுத்திருக்கும் அடிப்படை வழி இதுவே என்பதாகவும் பாஹாய்கள் நம்புகின்றனர்.​—⁠1 தீமோத்தேயு 2:5, 6.

4 “உலகின் எல்லா முக்கிய மதங்களும் கடவுளால் தோற்றுவிக்கப்பட்டவை, அவற்றின் அடிப்படை நியமங்கள் முழுமையாக ஒத்திருக்கின்றன, முக்கியமில்லாத அம்சங்களில் மாத்திரமே [அவை] வித்தியாசப்படுகின்றன” என்பது பாஹாய்களின் அடிப்படை போதனைகளில் ஒன்றாகும்.​—⁠2 கொரிந்தியர் 6:14-18; 1 யோவான் 5:19, 20.

5 கடவுளின் ஒருமை, அழியாத ஆத்துமா, மனிதவர்க்கத்தின் (உடல், ஆன்மீக, சமூக தொடர்பான) பரிணாமம் ஆகியவற்றை பாஹாய்கள் நம்புகின்றனர். ஆனால் தேவதூதர்களை அவர்கள் நம்புவதில்லை. திரித்துவம், இந்து மதத்தின் மறுபிறப்பு போதனை, மனிதன் பரிபூரண நிலையிலிருந்து வீழ்ந்துபோனது, அதைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டது போன்றவற்றையும் இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.​—⁠ரோமர் 5:12; மத்தேயு 20:⁠28.

6 மனித குலத்தின் சகோதரத்துவம், ஆண், பெண் சமத்துவம் ஆகியவை பாஹாய் நம்பிக்கையின் சிறப்பம்சங்கள். பாஹாய்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையுடையவர்கள். பஹா உல்லா சொல்லித் தந்த மூன்று பிரார்த்தனைகளில் ஒன்றை அவர்கள் தினமும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது சொல்கிறார்கள். மார்ச் மாதத்தில் வரும் அலா என்ற பாஹாய் மாதத்தின் 19 நாட்களின்போதும், சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை அவர்கள் நோன்பிருக்கிறார்கள். (பாஹாய் நாட்காட்டியில் 19 மாதங்களும் ஒவ்வொரு மாதத்திலும் 19 நாட்களும் உண்டு, ஒரு சில உபரி நாட்களும் உண்டு.)

7 பாஹாய் மதத்தில் நிறைய சடங்குகள் இல்லை, குருவர்க்கமும் இல்லை. பஹா உல்லாவில் நம்பிக்கை வைத்து அவருடைய உபதேசங்களை ஏற்றுக்கொள்ளும் எவரும் அதன் உறுப்பினர்களாக சேர்ந்துவிடலாம். ஒவ்வொரு பாஹாய் மாதத்தின் முதல் நாளில் வழிபாட்டுக்காக இவர்கள் கூடிவருகின்றனர்.

8 உலகத்தை ஆன்மீக ரீதியில் கைப்பற்றுவதே தங்களுடைய நோக்கம் என்பதாக பாஹாய்கள் நம்புகின்றனர். கலந்துரையாடல், முன்மாதிரி, சமூக திட்டங்களில் பங்குபெறுதல், பிரச்சாரங்கள் ஆகியவற்றின் மூலம் தங்கள் மதத்தை பரப்ப அவர்கள் முற்படுகின்றனர். தங்கள் நாட்டின் சட்டங்களுக்கு முழுமையாக கீழ்ப்படிய வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் நம்புகின்றனர். அவர்கள் ஓட்டு போட்டாலும் அரசியலில் ஈடுபடுவது கிடையாது. இராணுவத்தில், கூடுமானால் நேர்முக சண்டையை உட்படுத்தாத பணிகளை செய்ய விரும்புகின்றனர்; ஆனாலும் இராணுவத்தில் சேருவது தவறென அவர்கள் நினைப்பதில்லை.

9 ஒரு மிஷனரி மதமாக இருப்பதால் பாஹாய் கடந்த சில ஆண்டுகளில் வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. சமீப கணக்கெடுப்பின்படி, உலகெங்கும் சுமார் 75,00,000 பஹாய்கள் இருக்கின்றனர். என்றாலும், சுமார் 50,00,000 பேர் இருப்பதாக சில ஆதாரங்கள் கூறுகின்றன.

[படம்]

இஸ்ரேல், ஹைஃபாவில் உலக தலைமை காரியாலயத்திலுள்ள பாஹாய் கோவில்

[பக்கம் 286-ன் படங்கள்]

எருசலேமிலுள்ள டோம் ஆஃப் த ராக்கில் இருக்கும் இந்தப் பாறையிலிருந்துதான் முகமது விண்ணகத்துக்கு ஏறிச்சென்றார் என்கிறது முஸ்லிம்களின் பாரம்பரியம்

[பக்கம் 289-ன் படங்கள்]

மெக்காவில் முஸ்லிம் யாத்திரிகர்கள் கபாவை ஏழு முறை சுற்றிவந்து கறுப்புக் கல்லை தொடுகின்றனர் அல்லது முத்தமிடுகின்றனர், கீழே இடது

[பக்கம் 290-ன் படம்]

குர்ஆனை அரபிக் மொழியில் வாசிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது

[பக்கம் 298-ன் படங்கள்]

கடிகார சுற்றில் மேலே இடமிருந்து: எருசலேமிலுள்ள டோம் ஆஃப் த ராக்; ஈரான், தென் ஆப்பிரிக்கா, துருக்கி ஆகிய இடங்களிலுள்ள மசூதிகள்

[பக்கம் 303-ன் படங்கள்]

கார்டபாவிலிருந்த மெஸ்கிட்டா ஒரு சமயம் உலகிலேயே மிகப் பெரிய மசூதியாக இருந்தது (அதன் நடுப்பகுதியில் இப்போது ஒரு கத்தோலிக்க கத்தீட்ரல் காணப்படுகிறது)