பிற மதங்களைப் பற்றி ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?
அதிகாரம் 1
பிற மதங்களைப் பற்றி ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?
நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் சரி, கோடானுகோடி மக்களின் வாழ்க்கையில்—ஏன், உங்கள் வாழ்க்கையிலும்கூட—மதம் செல்வாக்கு செலுத்துவதை கண்ணாரக் கண்டிருப்பீர்கள். உதாரணமாக, இந்து மதம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நாடுகளுக்கு சென்றால், தேங்காய், பழம், பூ போன்றவற்றை தங்கள் தெய்வங்களுக்குப் படைத்து பக்தர்கள் பலர் பூஜைகள் செய்வதை நீங்கள் அடிக்கடி பார்க்கலாம். கோயில் அர்ச்சகர் மஞ்சளையோ குங்குமத்தையோ பக்தர்களின் நெற்றியில் இடுவதையும், கங்கையில் ஸ்நானம் செய்து பாவத்தைப் போக்க ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் அங்கு திரண்டு செல்வதையும் பார்க்கலாம்.
2 கத்தோலிக்க தேசங்களில், சிலுவையை அல்லது ஜெபமாலையை பிடித்துக்கொண்டு சர்ச்சுகளிலும் கத்தீட்ரல்களிலும் மக்கள் ஜெபம் செய்வதைக் காண்பீர்கள். மரியாளிடம் பக்தியோடு ஏறெடுக்கப்படும் ஜெபங்களை எண்ணுவதற்கு ஜெபமாலையின் மணிகளை அவர்கள் உருட்டுவதையும் காண்பீர்கள். அதோடு, பாதிரியார்களையும் கன்னிகாஸ்திரீகளையும் அவர்களுடைய பிரத்தியேக அங்கிகளை வைத்தே எளிதில் அடையாளம் கண்டுகொள்வீர்கள்.
3 புராட்டஸ்டன்டு தேசங்களில், சர்ச்சுகளுக்கும் சேப்பல்களுக்கும் குறைவே இல்லை. ஞாயிற்றுக்கிழமையில் சர்ச் அங்கத்தினர்கள் சிறப்பாக உடை உடுத்திக்கொண்டு, கீர்த்தனைகள் பாடவும் பிரசங்கங்களைக் கேட்கவும் ஒன்றுகூடி வருவார்கள். அவர்களுடைய பாதிரிமார் பெரும்பாலும் கறுப்பு அங்கியையும் வெள்ளைநிற கழுத்துப்பட்டையையும் அணிந்திருப்பார்கள்.
4 இஸ்லாமிய தேசங்களில், மோதினார்கள் (muezzins) ஒரு நாளில் ஐந்து தடவை குரல் கொடுப்பதை நீங்கள் கேட்க முடியும். பள்ளிவாசல்
தூபியிலிருந்து சலாத் என்றழைக்கப்படும் தொழுகைக்காக இறைமக்களை அழைக்கவே அவ்வாறு அவர்கள் குரல் கொடுப்பர். அவர்கள் புனித குர்ஆனை இஸ்லாமிய மறைநூலாக கருதுகின்றனர். அது இறைவனால் வெளிப்படுத்தப்பட்டு, காபிரியேல் தூதனால் பொ.ச. ஏழாம் நூற்றாண்டில் முகமது நபியிடம் ஒப்புவிக்கப்பட்டது என்று இஸ்லாமியர் நம்புகின்றனர்.5 புத்தமத தேசங்களில், பொதுவாக காவி, கறுப்பு அல்லது சிவப்பு நிற அங்கிகளில் புத்தமத துறவிகள் தெருக்களில் வலம் வருவதை காணலாம்; ஜனங்கள் அவர்களை பக்தியின் உருவாகவே பார்க்கின்றனர். சாந்தமான புத்தபிரானின் சிலைகளைக் கொண்ட பண்டைய ஆலயங்கள் புத்த மதத்தின் தொன்மைக்கு சான்று பகருகின்றன.
6 ஷின்டோ மதம் முக்கியமாக ஜப்பானில் கடைப்பிடிக்கப்படுகிறது; வீடுகளிலேயே பூஜை பீடங்கள் இருப்பதாலும் மூதாதையருக்கு படையல் செலுத்துவதாலும் அந்த மதம் ஜப்பானியரின் அன்றாட வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்டது. சிறுசிறு விஷயங்களுக்குக்கூட—பள்ளிப் பரீட்சையில் வெற்றி பெறுவதற்குக்கூட—அவர்கள் தயக்கமின்றி பிரார்த்தனை செய்கின்றனர்.
7உலகம் முழுவதிலும் அறியப்பட்டிருக்கும் மற்றொரு மதத்தின் அங்கத்தினர்கள், பைபிள்களையும் பைபிள் பிரசுரங்களையும் வைத்துக்கொண்டு
வீடு வீடாக செல்கின்றனர் அல்லது அவற்றை வைத்துக்கொண்டு தெருக்களில் நிற்கின்றனர். காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய பத்திரிகைகளை அவர்கள் கையில் பார்த்ததுமே அவர்களை யெகோவாவின் சாட்சிகள் என்று அநேகமாக எல்லாரும் அடையாளம் கண்டுகொள்கின்றனர்.8உலகம் முழுவதிலும் இவ்வளவு வித்தியாசமான வழிபாட்டு முறைகள் இருப்பது எதைச் சுட்டிக்காட்டுகிறது? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆன்மீகத்திற்கான தேவையும் ஏக்கமும் மனிதனுக்கு இருந்திருப்பதையே அது சுட்டிக்காட்டுகிறது. மனிதன் துன்பங்களோடும் சுமைகளோடும் சந்தேகங்களோடும் கேள்விகளோடுமே வாழ்ந்திருக்கிறான்; மரணம் எனும் புதிருக்குக்கூட விடை தெரியாமல் வாழ்ந்திருக்கிறான். ஆசீர்வாதத்தையும் ஆறுதலையும் தேடி கடவுளிடம் அல்லது கடவுட்களிடம் செல்லும் ஜனங்கள், தங்களுடைய மத உணர்வுகளை பல விதங்களில் வெளிக்காட்டியிருக்கின்றனர். பின்வரும் முக்கிய கேள்விகளுக்கு விடையளிக்கவும் மதம் முயற்சி செய்திருக்கிறது: நாம் ஏன் இங்கிருக்கிறோம்? நாம் எப்படி வாழ வேண்டும்? மனிதவர்க்கத்தின் எதிர்காலம் என்ன?
9மறுபட்சத்தில், மதத்திலோ கடவுளிலோ எந்த நம்பிக்கையும் வைக்காத ஆட்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். அவர்கள் நாத்திகர்கள். இன்னும் சிலர் அறியொணாமை கொள்கையினர் (agnostics); கடவுள் அறியப்படாதவர் என்றும் அவரை அறிந்துகொள்ளவே முடியாது என்றும் இவர்கள் நம்புகின்றனர். என்றாலும், அறியொணாமை கொள்கையினர் எந்தக் கொள்கையும் நெறிமுறையும் இல்லாதவர்கள் என்று உடனே நாம் முடிவுகட்டி விடக்கூடாது; ஒரு மதத்தைச் சேர்ந்தவரென ஒருவர் சொல்லிக் கொள்வதால் அவருக்கு கொள்கையும் நெறிமுறையும் கட்டாயம் இருக்கிறதென எப்படி சொல்லிவிட முடியாதோ அது போலத்தான் இதுவும். என்றாலும், மதம் என்பது “ஏதோவொரு கொள்கையின் மீது காட்டப்படும் பக்தி; உறுதியான விசுவாசம் அல்லது உண்மைத்தன்மை; கடமையுணர்ச்சி; பக்தியுடன்கூடிய பாசம் அல்லது பற்று” என்று சொல்லப்பட்டுள்ள விளக்கத்தை எடுத்துக்கொண்டால், நாத்திகர்களும் அறியொணாமை கொள்கையினரும் உட்பட, பெரும்பாலான ஆட்கள் ஏதோவொரு வகையான மத வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர் என்றே அர்த்தமாகிறது.—த ஷார்ட்டர் ஆக்ஸ்ஃபர்டு இங்லிஷ் டிக்ஷ்னரி.
10அதிவேக போக்குவரத்து, தொலைத்தொடர்பு காரணமாக இவ்வுலகம் நாளுக்கு நாள் சிறியதாகிக்கொண்டே வருவதால், இத்தனை அநேக மதங்களின் தாக்கத்தை—நாம் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி—நன்றாகவே உணர முடிகிறது. உதாரணத்திற்கு, ‘இஸ்லாமிய விசுவாசதுரோகி’ என சிலரால் அழைக்கப்பட்ட ஒருவர் எழுதிய சாத்தானின் வேதங்கள் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின் மீது 1989-ல் மக்களுக்கு கடுங்கோபம் மூண்டது. மத உணர்வுகள் உலகளவில் எவ்வாறு வெளிப்படலாம் என்பதை அது தெளிவாக காட்டியது. அந்தப் புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும், அதன் நூலாசிரியரை கொலை செய்ய வேண்டும் என்றும்கூட இஸ்லாமிய தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர். மத விஷயங்களைக் குறித்ததில் மக்கள் ஏன் இப்படி கொதித்தெழுகின்றனர்?
11இதற்கு பதிலளிக்க, உலக மதங்களின் பின்னணியைப் பற்றி கொஞ்சம் அறிந்திருப்பது அவசியம். உலக மதங்கள்—பண்டைய வரலாறு முதல் இன்று வரை என்ற ஆங்கில நூலில் ஜெஃப்ரீ பாரின்டர் இவ்வாறு சொல்கிறார்: “வேறு மதங்களை ஆராய்வது ஒருவர் தன் சொந்த மதத்திற்கு துரோகம் செய்வதை அர்த்தப்படுத்தாது; மாறாக, மற்றவர்கள் எப்படி மெய்ப்பொருளை தேடினார்கள் என்பதையும், அதனால் எப்படி நன்மைகளைப் பெற்றார்கள் என்பதையும் அறியும்போது அவருடைய மதப்பற்று ஒருவேளை அதிகரிக்கவே செய்யும்.” அத்தகைய அறிவு புரிந்துகொள்ளுதலை தரும், புரிந்துகொள்ளுதல் வித்தியாசமான நோக்குடைய மக்களோடு அனுசரித்துப்போக உதவும்.
ஆராய்வது அவசியமா?
12‘எனக்கென்று ஒரு மதம் இருக்கிறது. அது என் சொந்த விஷயம். அதைப் பற்றி மற்றவர்களோடு எதற்கு அநாவசியமாக பேச வேண்டும்’ என எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா அல்லது சொன்னதுண்டா? உண்மைதான், மதம் ஒவ்வொருவருடைய சொந்த விஷயமே. சொல்லப்போனால், பிறப்பு முதற்கொண்டே மத கருத்துகளும் ஒழுக்கநெறிகளும் பெற்றோராலும் உறவினராலும் நம் மனதில் விதைக்கப்படுகின்றன. இதனால், பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியின் மதக் கொள்கைகளையே நாம் பொதுவாக பின்பற்றுகிறோம். இவ்வாறு மதம் என்பது குடும்ப பாரம்பரியமாக ஆகிவிட்டிருக்கிறது. விளைவு? நம்முடைய மதத்தை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மற்றவர்கள்தான் நமக்காக
தெரிவு செய்திருக்கிறார்கள். நாம் எங்கே பிறக்கிறோம், எப்போது பிறக்கிறோம் என்பதை வைத்து நம்முடைய மதம் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது, ஒருவர் எந்த மதத்தை கடைப்பிடிக்கப் போகிறார் என்பது “எந்த நாட்டில் அவர் பிறந்திருக்கிறார்” என்பதையே பெரும்பாலும் சார்ந்திருக்கிறதென சரித்திராசிரியர் ஆர்னால்ட் டாயன்பீ குறிப்பிட்டார்.13ஒருவர் எந்த மதத்தில் பிறக்கிறாரோ அந்த மதமே உண்மையான மதம் என நினைப்பது நியாயமா? நீங்கள் இத்தாலியில் அல்லது தென் அமெரிக்காவில் பிறந்திருந்தால் அநேகமாய் கத்தோலிக்கராகத்தான் கலாத்தியர் 1:13, 14; அப்போஸ்தலர் 23:6.
வளர்க்கப்பட்டிருப்பீர்கள். நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் ஓர் இந்துவாக இருந்திருப்பீர்கள், அல்லது பஞ்சாப் மாநிலத்தில் பிறந்திருந்தால் ஒருவேளை சீக்கியராக ஆகியிருப்பீர்கள். உங்கள் பெற்றோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றால் நீங்கள் நிச்சயம் ஒரு முஸ்லிமாக இருப்பீர்கள். கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்பு, சோஷியலிஸ கொள்கையைப் பின்பற்றும் ஒரு தேசத்தில் நீங்கள் பிறந்திருந்தால் ஒரு நாத்திகராகவே வளர்க்கப்பட்டிருப்பீர்கள்.—14அப்படியானால், ஒருவர் எந்த மதத்தில் பிறக்கிறாரோ அதுவே கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட உண்மையான மதமா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவ்வாறே நம்பப்பட்டு வந்திருந்தால், இன்றுகூட அநேகர் பழங்கால பில்லிசூனிய வழிபாட்டு முறைகளையும் கருவள சடங்காச்சார முறைகளையும்தான் கடைப்பிடித்துக் கொண்டிருந்திருப்பார்கள்; அதாவது, ‘என் முன்னோருக்கு எது நல்லதாக இருந்ததோ அதுவே எனக்கும் நல்லது’ என்று சொல்லி அதையே கடைப்பிடித்து வந்திருப்பார்கள்.
15ஆனால் கடந்த 6,000 வருடங்களாக உலகில் அநேக வித்தியாசப்பட்ட மதங்கள் தோன்றி, படிப்படியாக வளர்ந்திருக்கின்றன. ஆகவே, மற்றவர்களுடைய நம்பிக்கைகள்தான் என்ன, அவை எப்படி தோன்றின என்பதை தெரிந்துகொள்வது அறிவொளியூட்டுவதாகவும் பரந்த மனப்பான்மையை வளர்ப்பதாகவும் இருக்கும். மேலும், உங்கள் எதிர்காலத்திற்கு உறுதியான நம்பிக்கையை கொடுப்பதாகவும் இருக்கும்.
16இப்பொழுது அநேக தேசங்களில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் வாழ்ந்து வருகின்றனர். மக்கள் மற்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்து செல்வதும், தங்கள் நாட்டிலேயே வெவ்வேறு ஊர்களுக்கு இடம் மாறி செல்வதுமே இதற்கு காரணம். ஆகவே, ஒருவருடைய நோக்குநிலையை மற்றவர் புரிந்துகொள்ளும்போது பலதரப்பட்ட மதத்தவரோடு அர்த்தமுள்ள பேச்சுத்தொடர்பையும் உரையாடலையும் வைத்துக்கொள்ள முடியும். மேலும், மத வேறுபாடுகளின் காரணமாக உலகில் நிலவுகிற பகைமையையும் ஒருவேளை குறைக்க முடியும். உண்மைதான், மக்கள் மத்தியில் மத நம்பிக்கைகளைக் குறித்து தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் ஒரு நபருக்கு வித்தியாசமான நோக்குநிலை இருக்கிறது என்பதற்காக அவரை வெறுப்பது எவ்விதத்திலும் நியாயமல்ல.—1 பேதுரு 3:15; 1 யோவான் 4:20, 21; வெளிப்படுத்துதல் 2:6.
லேவியராகமம் 19:17, 18, Ta) கிறிஸ்தவத்தைத் தோற்றுவித்தவர் இவ்வாறு சொன்னார்: “எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். . . . அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.” (லூக்கா 6:27, 35) இதைப் போன்ற ஒரு நியமத்தை “சோதனை செய்யப்படும் பெண்” என்ற தலைப்பில் குர்ஆன் (சூரா 60:7, MMP) கூறுகிறது: “உங்களுக்கும், நீங்கள் (இன்று) யாருடன் பகைமை கொண்டிருக்கின்றீர்களோ அவர்களுக்குமிடையே அல்லாஹ் என்றைக்கேனும் அன்பை ஏற்படுத்தக்கூடும். அல்லாஹ் பேராற்றலுடையவன்; மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான்.”
17பண்டைய யூதர்களின் சட்டம் இவ்வாறு சொன்னது: “உன் சகோதரனை உன் மனதிற்குள் பகைக்காதே; ஆனால், அவனுடைய பாவத்திற்கு நீ உடந்தையாகாதபடிக்கு அவனை கடிந்துகொள். பழிக்குப் பழிவாங்க வகைதேடாதே, உன் இனத்தார் மீது வன்மம் வைக்காதே. உன் மீது நீ அன்புகூருவது போல் பிறர் மீதும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர் [யெகோவா].” (18மத சகிப்புத்தன்மையும் புரிந்துகொள்ளுதலும் அவசியம்தான், அதற்காக ஒருவர் எதை வேண்டுமானாலும் நம்பலாம் என அர்த்தமாகாது. சரித்திராசிரியர் ஜெஃப்ரீ பாரின்டர் இவ்வாறு குறிப்பிட்டார்: “எல்லா மதங்களுக்கும் குறிக்கோள் ஒன்று, எல்லா மதங்களும் சத்தியத்திற்கு வழிநடத்தும் வெவ்வேறு பாதைகள், எல்லா மதங்களின் கோட்பாடுகளும் ஒன்று என்றெல்லாம் சில சமயங்களில் சொல்லப்படுகிறது. . . . ஆனால் பண்டைய அஸ்தெக்கு இனத்தவர் நரபலி செலுத்தியபோது, துடித்துக்கொண்டிருக்கும் இதயங்களை வெட்டியெடுத்து, அவற்றை சூரியனுக்கு நேராக தூக்கிப்பிடித்தனர்; இவர்களுடைய மதம் சாந்தமே உருவான புத்தருடைய மதத்தின் அளவுக்கு நல்ல மதமாக நிச்சயம் இருக்கவில்லை.” இதையெல்லாம்விட, வழிபாட்டு விஷயத்தில் எது ஏற்கத் தகுந்தது, எது ஏற்கத் தகாதது என்பதை கடவுள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்?—மீகா 6:8.
மதத்தை மதிப்பிடுவது எப்படி?
19கிட்டத்தட்ட எல்லா மதங்களிலும் அவற்றிற்கே உரிய நம்பிக்கைகளும் கோட்பாடுகளும் உள்ளன. பெரும்பாலும் அவை ஒரு சராசரி மனிதனால் புரிந்துகொள்ள முடியாதளவு மிக மிக சிக்கல் வாய்ந்தவையாக ஆகிவிடக்கூடும். என்றபோதிலும், எல்லா மதங்களுக்குமே காரணகாரியம் (cause and effect) என்ற நியமம் பொருந்துகிறது. அதாவது ஒரு மதத்தின் போதனைகள், அம்மதத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருடைய குணத்தின் மீதும் நடத்தையின் மீதும் செல்வாக்கு செலுத்த வேண்டும். அப்போது, அந்த நபருடைய நடத்தை, பெரிய அளவிலோ சிறிய அளவிலோ, அவருடைய மதப் பின்னணியை பிரதிபலிப்பதாக இருக்கும். அப்படியானால், உங்களுடைய மதம் உங்கள் மீது எந்தளவு செல்வாக்கு செலுத்துகிறது? உங்கள் மதம் உங்களை அதிக தயவானவராக மாற்றியிருக்கிறதா? அதிக தாராள குணமுள்ளவராக, நேர்மையுள்ளவராக, தாழ்மையுள்ளவராக, சகிப்புத்தன்மையுள்ளவராக, இரக்கமுள்ளவராக ஆக்கியிருக்கிறதா? இவை நியாயமான கேள்விகளே; ஏனென்றால் மிகப் பெரிய மத போதகரான இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட மத்தேயு 7:17-20.
கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்க மாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்க மாட்டாது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். ஆதலால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.”—20மனிதவர்க்கத்தை சீரழித்து, பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கும் அநேக போர்களில் மதம் என்ன பங்கு வகித்திருக்கிறது என்பதை உலக வரலாறு கண்டிப்பாக நம்மை சிந்திக்க வைக்க வேண்டும். மதத்தின்
பெயரில் ஏன் இத்தனை அநேகர் கொலை செய்திருக்கின்றனர் அல்லது கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்? சிலுவைப் போர்கள், ஒடுக்குமுறை விசாரணைகள் (Inquisition), மத்திய கிழக்கிலும் வட அயர்லாந்திலும் நிகழ்ந்த சண்டைகள், ஈரான் மற்றும் ஈராக் யுத்தத்தில் ஏற்பட்ட படுகொலைகள் (1980-88), இந்தியாவில் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையே நடந்த மோதல்கள்—இவற்றையெல்லாம் பார்க்கையில், சிந்தனையாளர்கள் பலர் மத நம்பிக்கைகளையும் நன்னெறிகளையும் பற்றி கேள்விகளை எழுப்புகின்றனர்.—கீழே உள்ள பெட்டியைக் காண்க. 21இந்த விஷயத்தில் கிறிஸ்தவமண்டலம் மாய்மாலத்திற்கு பேர்போனது. இரண்டு உலகப் போர்களிலும் கத்தோலிக்கர் கத்தோலிக்கரையும் புராட்டஸ்டன்டினர் புராட்டஸ்டன்டினரையும் கொலை செய்திருக்கின்றனர், அதுவும் அவர்களுடைய “கிறிஸ்தவ” அரசியல் தலைவர்களின் ஆணையின்பேரில். ஆனால், மாம்சத்தின் கிரியைகளையும் ஆவியின் கனியையும் பைபிள் தெளிவாக வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. மாம்சத்தின் கிரியைகளைக் குறித்து அது இவ்வாறு சொல்கிறது: “விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்க பேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.” என்றாலும், கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் பல நூற்றாண்டுகளாக இதைத்தான் பழக்கமாக செய்து வந்திருக்கின்றனர்; அவர்களுடைய குருமாரும் அவர்கள் நடத்தையை பெரும்பாலும் கண்டும் காணாமலுமே விட்டுவிட்டிருக்கின்றனர்.—22இதற்கு நேர்மாறாக, கடவுளுடைய ஆவியின் கனி இவ்வாறு வர்ணிக்கப்பட்டுள்ளது: “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.” எல்லா மதங்களும் இப்படிப்பட்ட சமாதான கனியையே பிறப்பிக்க வேண்டும். ஆனால் அவை அப்படி பிறப்பிக்கின்றனவா? உங்களுடைய மதம் அப்படி பிறப்பிக்கிறதா?—கலாத்தியர் 5:22, 23.
23உலக மதங்கள் மூலம் கடவுளைத் தேட மனிதன் எடுத்துள்ள முயற்சிகளைப் பற்றிய இப்புத்தகத்தின் ஆராய்ச்சி நம்முடைய கேள்விகளில் சிலவற்றிற்கு பதிலளிப்பதாக இருக்கும். ஆனால் எந்த அளவுகோலை வைத்து ஒரு மதத்தை மதிப்பிடுவது? யாருடைய தராதரத்தின்படி மதிப்பிடுவது?
‘என் மதம் எனக்கு போதும்’
24அநேக ஆட்கள் மதத்தைப் பற்றி பேசுவதற்கு மறுத்துவிடுகிறார்கள்;
‘என் மதம் எனக்கு போதும். நான் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்வதில்லை, மற்றவர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்கிறேன், அதுபோதும்’ என சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அது மட்டும் போதுமா? மதத்தைக் குறித்ததில் நம்முடைய சொந்தக் கருத்து மட்டுமே போதுமா?25மதம் என்பது “சர்வலோகத்தின் படைப்பாளராகவும் அதிபதியாகவும் கருதப்படுகிற ஒரு சக்தியில், இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியில் மனிதன் நம்பிக்கையையும் பயபக்தியையும் வெளிக்காட்டுவதாகும்” என ஓர் அகராதி குறிப்பிடுகிறது. இது உண்மையென்றால், ‘என்னுடைய மதம் சர்வலோகத்தின் படைப்பாளரும் அதிபதியுமானவருக்கு பிரியமானதாக இருக்கிறதா?’ என்ற கேள்வியை நிச்சயம் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, நடத்தை, வழிபாடு, கோட்பாடு ஆகியவற்றில் ஏற்கத் தகுந்தது எது, ஏற்கத் தகாதது எது என்பதை நிர்ணயிக்கும் உரிமை படைப்பாளருக்கே இருக்கிறது என்பதையும் அது அர்த்தப்படுத்தும். அவ்வாறு செய்வதற்கு, தமது சித்தத்தை மனிதவர்க்கத்துக்கு வெளிப்படுத்த வேண்டும்; அவர் வெளிப்படுத்துகிற விஷயங்கள் அனைவருக்கும் எளிதில் கிடைப்பதாகவும் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அவை பல நூற்றாண்டுகள் இடைவெளியில் கொடுக்கப்பட்டிருந்தாலும் எப்பொழுதும் ஒன்றுக்கொன்று இசைவாகவும் முரண்படாமலும் இருக்க வேண்டும். ஆக, எல்லா அத்தாட்சிகளையும் ஆராய்ந்து, கடவுளுடைய சித்தம் என்ன என்பதை தங்களுக்குத் தாங்களே ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளும் பெரிய ஒரு சவால் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது.
26கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டதாக சொல்லப்படும் மிகப் பழமையான புத்தகங்களில் ஒன்று பைபிள். சரித்திரம் முழுவதிலும் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக விநியோகிக்கப்பட்டிருக்கும் புத்தகமும் இதுவே. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இதன் எழுத்தாளர்களில் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் ரோமர் 12:2) நாம் எதை வைத்து அவ்வாறு பகுத்தறிய முடியும்? அதே எழுத்தாளர் சொன்னார்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது [அதாவது ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது]; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” ஆக, தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட பைபிளே உண்மையான, ஏற்கத்தகுந்த வணக்கத்திற்கு நம்பகமான அளவுகோலாக இருக்க வேண்டும்.—2 தீமோத்தேயு 3:16, 17.
பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” (27பைபிளின் மிகப் பழமையான பகுதி, மற்ற எல்லா மத நூல்களைக் காட்டிலும் வெகு காலத்திற்கு முன்பு எழுதப்பட்டது. மோசே தெய்வீக ஏவுதலால் எழுதிய சட்டமாகிய தோரா, அதாவது பைபிளின் முதல் ஐந்து புத்தகங்கள் பொ.ச.மு. 15-ம், 16-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. ரிக் வேதம் (இறைவனைப் பற்றிய துதிப்பாடல்களின் ஒரு தொகுப்பு) என்ற இந்து மத நூலோ சுமார் பொ.ச.மு. 900-ல் நிறைவுற்றது; கடவுளால் ஏவப்பட்டதாக அது உரிமை பாராட்டுவதில்லை. புத்த மத நூலாகிய “மூன்று பெட்டிகளின் திருமறை” பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. காபிரியேல் தூதன் மூலம் கடவுளால் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் குர்ஆன் பொ.ச. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மோரொனி என்றழைக்கப்பட்ட ஒரு தூதன் மூலம் அமெரிக்காவிலுள்ள ஜோசஃப் ஸ்மித் என்பவருக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் மார்மன் புத்தகம் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சிலர் உரிமை பாராட்டுகிறபடி அத்தகைய நூல்களில் சில கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டதென்றால், அவை அளிக்கும் மத சம்பந்தமான வழிநடத்துதல், முதன்முதலில் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகமாகிய பைபிளின் போதனைகளோடு முரண்படக் கூடாது. அதோடு, மனிதவர்க்கம் தெரிந்துகொள்ளத் துடிக்கும் கேள்விகளுக்கு அவை பதிலளிக்கவும் வேண்டும்.
பதில் தேவைப்படும் கேள்விகள்
28 (1) மனிதனுக்குள் அழியாத ஆத்மா ஒன்று இருக்கிறது என்றும், மரணத்தின்போது அது வேறொரு இடத்திற்கு, அதாவது பரலோகம்,
நரகம், உத்தரிக்கும் ஸ்தலம் போன்ற “வேறு உலகிற்கு” செல்கிறது அல்லது மறுபிறவி எடுக்கிறது என்றும் பெரும்பாலான மதங்கள் கற்பிக்கின்றன, அதையேதான் பைபிளும் கற்பிக்கிறதா?(2) சர்வலோக பேரரசராகிய கடவுளுக்குப் பெயரில்லை என பைபிள் கற்பிக்கிறதா? பைபிளின்படி அவர் ஒரே கடவுளா? அல்லது ஒரு கடவுளில் மூவரா? அல்லது அநேக கடவுட்களா?
(3) கடவுள் என்ன நோக்கத்தோடு பூமியில் மனிதனை படைத்தார் என பைபிள் சொல்கிறது?
(4) பூமி அழிக்கப்படும் என பைபிள் கற்பிக்கிறதா? அல்லது இந்தச் சீர்கெட்ட சமுதாயம் மாத்திரமே அழிக்கப்படுமென சொல்கிறதா?
(5) மன சமாதானத்தையும் இரட்சிப்பையும் உண்மையில் எப்படி பெறலாம்?
29ஒவ்வொரு மதமும் வித்தியாசமாக பதிலளிக்கிறது; ஆனால் ‘தூய மதத்தைத்’ தேடும் முயற்சியில், நாம் கண்டறிய வேண்டியது கடவுள் விரும்புகிற பதில்களையே. (யாக்கோபு 1:27; AS) நாம் ஏன் அவ்வாறு சொல்லலாம்? ஏனென்றால் நாம் நம்பும் அடிப்படை நியதி இதுவே: “மனிதர் எல்லாரும் பொய்யர்; கடவுளோ உண்மை உள்ளவர் என்பது தெளிவாகும். ஏனெனில் ‘உமது சொற்களில் நீதி வெளிப்படுகிறது; உம் தண்டனைத் தீர்ப்புகளில் வெற்றி விளங்குகிறது’ என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!”—ரோமர் 3:4, பொது மொழிபெயர்ப்பு. a
30இப்பொழுது, உலக மதங்களை ஆராய நமக்கு ஓர் அடிப்படை ஆதாரம் கிடைத்துவிட்டது. எனவே, மனிதன் ஆரம்ப காலத்தில் தன் ஆன்மீக தாகத்தை தணிக்க எடுத்த முயற்சிகளைப் பற்றி அடுத்ததாக சிந்திப்போம். மதம் தோன்றிய விதத்தைப் பற்றி நமக்கு என்ன விஷயங்கள் தெரியும்? பண்டைய மக்களும் ஆதி மனிதர்களும் எவ்விதமான வழிபாட்டு முறைகளை பின்பற்றினர்?
[அடிக்குறிப்பு]
a இந்தக் கேள்விகளுக்கு பைபிள் தரும் பதில்களை உடனடியாக அறிந்துகொள்ள நீங்கள் விரும்பினால் பின்வரும் வசனங்களை எடுத்துப் பார்க்கும்படி உற்சாகப்படுத்துகிறோம்: (1) ஆதியாகமம் 1:26; 2:7; எசேக்கியேல் 18:4, 20; லேவியராகமம் 24:17, 18, NW; மத்தேயு 10:28; (2) உபாகமம் 6:4, NW; 1 கொரிந்தியர் 8:4-6; (3) ஆதியாகமம் 1:27, 28; வெளிப்படுத்துதல் 21:1-4; (4) பிரசங்கி 1:4; மத்தேயு 24:3, 7, 8; (5) யோவான் 3:16; 17:3; பிலிப்பியர் 2:5-11; 4:6, 7; எபிரெயர் 5:9.
[கேள்விகள்]
1-7. உலகின் பல்வேறு மதங்களுடைய சில பழக்க வழக்கங்கள் யாவை?
8. மத வழிபாட்டு முறைமைகளைப் பற்றிய வரலாறு எதைச் சுட்டிக்காட்டுகிறது?
9. பெரும்பாலோர் தங்கள் வாழ்க்கையில் ஏதோவொரு வகையான மத வழிபாட்டில் ஈடுபடுகின்றனர் என ஏன் சொல்லலாம்?
10. நவீன உலகின் மீது மதம் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா? உதாரணம் தருக.
11. மற்ற மதங்களை ஆராய்வது ஏன் தவறல்ல?
12. பொதுவாக, ஒரு நபரின் மதத்தை எவை தீர்மானிக்கின்றன?
13, 14. ஒருவர் எந்த மதத்தில் பிறக்கிறாரோ அதுவே கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட மதம் என நினைப்பது ஏன் நியாயமல்ல?
15, 16. மற்ற மதங்களை ஆராய்வதில் என்ன நன்மைகள் இருக்கின்றன?
17. மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை நாம் ஏன் வெறுக்கக் கூடாது?
18. ஒருவர் எதை வேண்டுமானாலும் நம்பலாம் என ஏன் சொல்ல முடியாது?
19. ஒரு நபருடைய நடத்தையின் மீது மதம் எவ்வாறு செல்வாக்கு செலுத்த வேண்டும்?
20. மதம் மற்றும் வரலாறு சம்பந்தமாக என்ன கேள்விகள் எழுகின்றன?
21. கிறிஸ்தவமண்டலம் பிறப்பித்திருக்கும் கனிக்கு சில உதாரணங்கள் யாவை?
22, 23. உண்மை மதம் என்ன கனியைப் பிறப்பிக்க வேண்டும்?
24, 25. மதத்தின் சம்பந்தமாக ஒவ்வொருவர் முன்பும் என்ன சவால் வைக்கப்படுகிறது?
26. எந்தப் புனித புத்தகம் உண்மை வணக்கத்தின் அளவுகோல், ஏன்?
27. (அ) உலக மதங்கள் சிலவற்றின் புனித நூல்கள் யாவை? (ஆ) அவற்றின் போதனைகள் பைபிளின் போதனைகளோடு ஒப்பிட எவ்வாறு இருக்க வேண்டும்?
28. என்ன சில கேள்விகளுக்குப் பதில் தேவை?
29. (அ) சத்தியத்துக்கான நம்முடைய தேடலில் எந்த அடிப்படை நியதி நம்மை வழிநடத்த வேண்டும்? (ஆ) நம்முடைய கேள்விகளுக்கு பைபிள் அளிக்கும் பதில்கள் யாவை?
30. அடுத்த அதிகாரத்தில் சிந்திக்கப்படும் சில கேள்விகள் யாவை?
[பக்கம் 16-ன் சிறு குறிப்பு]
எல்லா மதங்களும் இப்படிப்பட்ட சமாதான கனியையே பிறப்பிக்க வேண்டும். ஆனால் அவை பிறப்பிக்கின்றனவா?
[பக்கம் 14-ன் பெட்டி]
மதம், அன்பு, வெறுப்பு
▪ “மற்ற போர்களைவிட மதப் போர்கள் அதிக வெறித்தனமானவை. பொருளாதார லாபத்துக்காக பிராந்தியங்களைக் கைப்பற்ற மக்கள் போர் செய்கையில், அதற்காக செலவழிப்பதெல்லாம் வீண் என்பதை உணரும் ஒரு கட்டம் வருகிறது, அப்போது சமரசம் செய்துகொள்கின்றனர். ஆனால் மதத்திற்காக போரிடுகையில், சமரசம் செய்வதையும் சமாதானம் செய்வதையும் தகாத செயல்களாகவே கருதுகின்றனர்.”—ரோஜர் ஷின், சமூக ஒழுக்கவியல் பேராசிரியர், யூனியன் தியாலஜிக்கல் செமினரி, நியு யார்க்.
▪ “மனிதர்கள் மதத்தைப் பற்றி எழுதுவார்கள், அதற்காக வாதாடுவார்கள், போரிடுவார்கள், உயிரை கொடுப்பார்கள், எதை வேண்டுமானாலும் செய்வார்கள், ஆனால் அதற்காக வாழத்தான் மாட்டார்கள் . . . உண்மை மதம் ஒரு குற்றச்செயலை தடுத்திருக்கிறதென்றால், பொய் மதங்கள் ஆயிரம் குற்றச்செயல்களுக்கு காரணமாக இருக்கின்றன.”—சார்லஸ் கேலப் கால்டன் (1825).
▪ “ஒருவரையொருவர் பகைப்பதற்கு கற்றுக்கொடுக்க போதுமான மதங்கள் இருக்கின்றன, ஆனால் ஒருவரையொருவர் நேசிப்பதற்கு கற்றுக்கொடுக்க போதுமான மதங்கள் இல்லை.”—ஜோனதான் சுவிஃப்ட் (1667-1745).
▪ “மதத்தின் பெயரில் அட்டூழியங்களை செய்கையில் மனிதனுக்குள் உண்டாகிற வேட்கையும் ஈடுபாடும் வேறு எப்போதும் அவனுக்கு உண்டாவதில்லை.”—ப்ளேஸ் பாஸ்கல் (1623-62).
▪ “ஆன்மீக போதனைகளையும் சத்தியங்களையும் எத்தனை உயிர்களுக்கு பரப்ப முடியுமோ அத்தனை உயிர்களுக்கு பரப்புவதே உயர்ந்த மதத்தின் உண்மையான நோக்கமாகும்; இதன் மூலம் வாழ்க்கையின் நோக்கத்தை அடைய அவர்கள் ஒவ்வொருவரும் உதவியை பெற்றுக் கொள்ளலாம். இறைவனை மகிமைப்படுத்துவதும் அவரோடு நெருக்கமான உறவை என்றென்றும் அனுபவித்து மகிழ்வதுமே மனித வாழ்க்கையின் நோக்கமாகும்.”—ஆர்னால்ட் டாயன்பீ, சரித்திராசிரியர்.
[பக்கம் 4-ன் படங்கள்]
கங்கா மாதா என அழைக்கப்படும் கங்கை நதியை இந்துக்கள் பூஜிக்கிறார்கள்
பக்திமிக்க கத்தோலிக்கர்கள் ஜெபமாலையை உருட்டி மரியாளிடம் ஜெபிக்கிறார்கள்
புத்த தேசங்கள் சிலவற்றில், பெரும்பாலான ஆண்கள் காவி உடை தரித்த துறவிகளாக சில காலம் சேவை செய்கிறார்கள்
இறைப்பற்றுள்ள முஸ்லிம்கள், ஒரு முறையாவது மெக்காவுக்கு புனித யாத்திரை செல்கிறார்கள்
[பக்கம் 6-ன் படம்]
பிரசங்கிப்பதில் உலகெங்கும் பிரபலமான யெகோவாவின் சாட்சிகள், ஜப்பானிய நகரில்
[பக்கம் 9-ன் படம்]
கிறிஸ்தவமண்டல சர்ச்சில் ஒரு குழந்தை ஞானஸ்நானம் பெறும் காட்சி. எந்த மதத்தில் பிறக்கிறோமோ அதுவே உண்மை மதமாகுமா?
[பக்கம் 11-ன் படம்]
அஸ்தெக்கு இனத்தவர் நரபலி செலுத்தும் காட்சி
—எல்லா மதங்களுமே உண்மையில் “சத்தியத்திற்கு வழிநடத்தும் வெவ்வேறு பாதை”களா?
[பக்கம் 13-ன் படம்]
மதத்தின் பெயரில் லட்சக்கணக்கானோர் கொலை செய்திருக்கின்றனர், கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்