Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மதம் எப்படி தோன்றியது?

மதம் எப்படி தோன்றியது?

அதிகாரம் 2

மதம்—எப்படி தோன்றியது?

மனிதன் எப்போது தோன்றினானோ அப்போதே மதமும் தோன்றியது என்று புதைபொருள் ஆய்வாளர்களும் மானிடவியல் ஆய்வாளர்களும் சொல்கின்றனர். மிகவும் “தொன்மையான,” அதாவது வளர்ச்சியடையாத நாகரிகங்களிலும் ஏதோவொரு வகையான வழிபாட்டு முறை இருந்ததற்கு அத்தாட்சியை காண முடிகிறது. சொல்லப்போனால், “இதுவரை நிபுணர்கள் கண்டுபிடித்ததில், எவ்வித மதப்பற்றும் இல்லாத ஜனங்கள் எந்த இடத்திலும் எந்தக் காலத்திலும் வாழ்ந்ததே கிடையாது” என்று த நியு என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது.

2மதம் பழமையானது மட்டுமல்ல, பல்வகையானதும்கூட. போர்னியோ காடுகளில் மனித தலைகளை வேட்டையாடுபவர்கள், பனிபோர்த்திய ஆர்க்டிக் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்கள், சஹாரா பாலைவனத்தில் வாழும் நாடோடிகள், மாநகரங்களில் வாழும் மக்கள் என பூமியில் உள்ள ஒவ்வொரு இனத்தாரும் தேசத்தாரும் அவரவர் கடவு(ட்க)ளை வணங்குகின்றனர், அவரவர் வழிபாட்டு முறைகளை பின்பற்றுகின்றனர். ஆம், பல வகையான மதங்கள் நம்மை உண்மையில் மலைக்க வைக்கின்றன.

3இயல்பாகவே, நம் மனதில் சில கேள்விகள் எழுகின்றன. இந்த மதங்களெல்லாம் எங்கிருந்து வந்தன? அவற்றிற்கு இடையே ஒற்றுமைகள் மட்டுமல்ல பெரும் வேற்றுமைகளும் இருப்பதால், அவை தனித்தனியாக தோன்றினவா அல்லது ஒரே மூலத்திலிருந்து தோன்றி வளர்ந்தனவா? என்றெல்லாம் நாம் கேட்கலாம். அதுமட்டுமல்ல, மதம் ஏன் தோன்றியது, எப்படி தோன்றியது என்றும்கூட நாம் கேட்கலாம். மதத்தையும் மத நம்பிக்கைகளையும் பற்றிய உண்மையைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமுள்ள அனைவரும் இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொள்வது மிக மிக முக்கியம்.

மதம் தோன்றிய விதத்தைப் பற்றிய கேள்வி

4மதம் தோன்றிய விதத்தைப் பற்றிய கேள்வி எழும்புகையில், முகமது, புத்தர், கன்பூசியஸ், இயேசு போன்ற பெயர்களே பல்வேறு மதத்தவரின் மனதுக்கு வரும். பெரும்பாலும் எல்லா மதங்களும் முக்கியமான ஒரு நபரை மையமாக வைத்தே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அந்தந்த நபரே அந்தந்த ‘மெய்யான மதத்தைத்’ தோற்றுவித்தவராக கருதப்படுகிறார். அப்படிப்பட்ட நபர்களில் சிலர் பாரம்பரிய மத நம்பிக்கைகளைத் தாக்கிய சீர்திருத்தவாதிகள். மற்றவர்கள் நன்னெறியைப் போதித்த தத்துவஞானிகள். இன்னும் சிலரோ தன்னலமற்ற தலைவர்கள். அவர்கள் எழுத்தில் வடித்தவையும், பொன்மொழிகளாய் உதிர்த்தவையும் புதிய மதங்களுக்கு அஸ்திவாரமாக அமைந்தன. காலப்போக்கில், அவர்கள் சொன்னவையும் செய்தவையும் மிகைப்படுத்தப்பட்டு, மெருகூட்டப்பட்டு, ஆன்மீக தோற்றம் அளிக்கப்பட்டன. இந்தத் தலைவர்களில் சிலர் தெய்வங்களாகவும் ஆக்கப்பட்டனர்.

5இப்படிப்பட்ட நபர்கள் முக்கிய மதங்களைத் தோற்றுவித்தவர்களாக பொதுவாய் கருதப்படுகிறபோதிலும், உண்மையில் அவர்கள்தான் மதம் என்பதையே ஆரம்பித்து வைத்தார்கள் என்று அர்த்தமில்லை. தங்கள் போதனைகள் கடவுளால் அருளப்பட்டவை என அவர்களில் அநேகர் சொல்லிக்கொண்டாலும், ஏற்கெனவே நம்பப்பட்டு வந்த மத கருத்துகளிலிருந்தே அவற்றை உருவாக்கியிருந்தனர்; அல்லது ஏதோவொரு விதத்தில் திருப்தியற்றதாக இருந்த மதங்களை முழுமையாக அல்லது ஓரளவுக்கு மாற்றியமைக்க மட்டுமே செய்தனர்.

6உதாரணமாக, கைவசமுள்ள சரித்திரப் பதிவுகள் சொல்லுகிறபடி பார்த்தால், இளவரசராக இருந்த புத்தர் தன்னை சூழ்ந்திருந்த இந்து மத சமுதாயத்தில் துன்பமும் துயரமும் பரவியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆகவே, வாழ்க்கையின் வேதனை தரும் பிரச்சினைகளுக்கு ஒரு பரிகாரத்தைத் தேட அவர் முயன்றதன் விளைவாகவே புத்த மதம் தோன்றியது. அதேவிதமாக, முகமது தன்னை சுற்றிலுமிருந்த மதங்களில் விக்கிரகாராதனையும் ஒழுக்கக்கேடும் இருந்ததைக் கண்டு வெகுவாக மனமுடைந்து போனார். பின்னர் அவர் கடவுளிடமிருந்து விசேஷ வெளிப்படுத்துதல்களைப் பெற்றதாக சொன்னார். இதுவே குர்ஆனாக உருவாகி, புதிய மத இயக்கமான இஸ்லாமுக்கு அடிகோலியது. 16-ம் நூற்றாண்டின் துவக்கத்தில், கத்தோலிக்க சர்ச் பணத்திற்காக பாவ மன்னிப்புச் சீட்டு வழங்கியதை (sale of indulgences) மார்ட்டின் லூத்தர் எதிர்த்தார்; இந்த சீர்திருத்தத்தின் விளைவாக கத்தோலிக்க மதத்திலிருந்து புராட்டஸ்டன்டு மதம் தோன்றியது.

7ஆகவே, இப்பொழுது உள்ள மதங்களின் ஆரம்பம், வளர்ச்சி, ஸ்தாபகர்கள், புனித நூல்கள் போன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் நம்மிடமுள்ள தகவல்களுக்கு குறைவே இல்லை. ஆனால் அவற்றிற்கு முன்பிருந்த மதங்களைப் பற்றி என்ன? அவற்றிற்கு இன்னும் முன்னாலிருந்த மதங்களைப் பற்றி என்ன? இப்படி சரித்திரத்தைப் பின்நோக்கி புரட்டிக்கொண்டே போனால், மதம் எவ்வாறு தோன்றியது என்ற கேள்வியை எப்படியும் நாம் எதிர்ப்படுவோம். அப்படியென்றால், இந்தக் கேள்விக்கு விடை காண நாம் இன்றைய தனிப்பட்ட மதங்களை கவனித்தால் மட்டும் போதாது, இன்னுமதிகத்தை கவனிக்க வேண்டும்.

அநேக கோட்பாடுகள்

8மதம் தோன்றிய விதத்தையும் அதன் வளர்ச்சியையும் பற்றிய ஆய்வு ஓரளவுக்கு புதிய துறையே. காலங்காலமாக, மக்கள் எந்த மதத்தில் பிறந்து வளர்ந்தார்களோ பெரும்பாலும் அந்த மதத்தையே ஏற்றுக்கொண்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் முன்னோர்கள் கொடுத்த விளக்கங்களில் திருப்தியடைந்து, தங்கள் மதமே உண்மையானது என நினைத்தார்கள். எதைப் பற்றியும் கேள்வியெழுப்ப வேண்டுமென்று அவர்களுக்கு தோன்றவில்லை, அவை எப்படி, எப்போது, அல்லது ஏன் ஆரம்பமாயின என்று ஆராய்வதற்கு அவசியமும் ஏற்படவில்லை. சொல்லப்போனால், பல நூற்றாண்டுகளாக போக்குவரத்து வசதியும் தொலைத்தொடர்பு வசதியும் போதியளவு இல்லாதிருந்ததால், மற்ற மதங்கள் இருந்ததே நிறைய பேருக்கு தெரியாதிருந்தது.

9ஆனால் 19-ம் நூற்றாண்டில் நிலைமை மாறத் தொடங்கியது. அறிஞர்களின் வட்டாரங்களில் பரிணாமக் கோட்பாடு வேகமாக பரவிக் கொண்டிருந்தது. அதோடு அவர்கள் எதையும் அறிவியல் கண்ணோட்டத்தில் ஆராய ஆரம்பித்தனர்; அதனால் மதம் உட்பட, ஸ்தாபிக்கப்பட்ட எல்லா அமைப்புகளைப் பற்றியும் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். மதம் எவ்வாறு தோன்றியது, ஏன் தோன்றியது என்பதற்கு இப்போதுள்ள மதங்களில் துப்பு கிடைப்பது கடினம் என்பதை அந்த அறிஞர்கள் உணர்ந்தனர். ஆகவே அவர்களில் சிலர், பண்டைய நாகரிகங்களின் இடிபாடுகள் மீது அல்லது உலகின் மூலைமுடுக்குகளில் வாழும் பழங்குடியினர் மீது தங்கள் கவனத்தைத் திருப்பினர். அதுமட்டுமல்ல, உளவியல், சமூகவியல், மானிடவியல் போன்ற துறைகளை ஆய்வு செய்ய முயன்றனர்.

10அதன் விளைவு என்ன? எத்தனை அநேக ஆராய்ச்சியாளர்கள் இருந்தார்களோ அத்தனை அநேக கோட்பாடுகளும் திடீரென முளைத்தன; ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொருவருடைய கருத்துகளும் முரண்பட்டன. துணிச்சலோடு புதுப்புது கோட்பாடுகளை உருவாக்குவதில் ஒருவரையொருவர் விஞ்ச முயன்றனர். இந்த ஆராய்ச்சியாளர்களில் சிலர் முக்கியமான முடிவுகளுக்கு வந்தனர். இன்னும் சிலருடைய கோட்பாடுகளோ சுவடு தெரியாமல் மறைந்துபோயின. இந்த ஆய்வுகளின் முடிவுகளைக் கண்ணோட்டமிடுவது நமக்கு கல்வி புகட்டும், அறிவொளியூட்டும். அதோடு நாம் சந்திக்கும் ஆட்களின் மத உணர்வுகளை நன்கு புரிந்துகொள்ளவும் உதவும்.

11 ஆன்மவாதம் (animism) என்று பொதுவாக அழைக்கப்படும் ஒரு கோட்பாட்டை எட்வர்டு டைலர் (1832-1917) எடுத்துரைத்தார்; அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த மானிடவியல் ஆய்வாளர். கனவு, தரிசனம், பிரமை, பிணங்களின் உயிரற்ற தன்மை ஆகியவற்றை வைத்துத்தான், சரீரத்திற்குள் ஆத்மா (லத்தீனில், அனிமா) குடிகொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு பழங்குடியினர் வந்ததாக அவர் தெரிவித்தார். இந்தக் கோட்பாட்டின்படி, இறந்துபோன அன்பானவர்களைப் பற்றி அவர்கள் அடிக்கடி கனவு கண்டதால், மரணத்துக்குப் பின் ஆத்மா தொடர்ந்து வாழ்ந்து வந்ததாகவும் அது உடலைவிட்டு பிரிந்து மரங்கள், பாறைகள், ஆறுகள் போன்றவற்றில் வசித்து வந்ததாகவும் அவர்கள் ஊகித்துக்கொண்டார்கள். கடைசியாக, இறந்தவர்களையும் அவர்களுடைய ஆத்மாக்கள் எவற்றில் வசிப்பதாக கருதினார்களோ அவற்றையும் கடவுட்களாக வணங்க ஆரம்பித்தார்கள். இப்படித்தான் மதம் பிறந்தது என டைலர் சொன்னார்.

12இங்கிலாந்தைச் சேர்ந்த மற்றொரு மானிடவியல் ஆய்வாளர் ஆர். ஆர். மாரட் (1866-1943) ஆன்மவாதத்திற்கு மெருகூட்டி ஆன்மவாதத்துவம் (animatism) என்ற புதிய கொள்கையை அறிமுகப்படுத்தினார். பசிபிக் தீவுகளைச் சேர்ந்த மேலனீஷியர்களின் நம்பிக்கைகளையும் ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும் வாழ்ந்த பூர்வீகத்தாரின் நம்பிக்கைகளையும் அவர் ஆய்வு செய்தார். ஒவ்வொருவருக்கும் ஓர் ஆத்மா உண்டு என அந்தப் பழங்குடி மக்கள் நம்பவில்லை என்றும், எல்லாவற்றிற்கும் உயிரூட்டிய இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருந்ததென நம்பினார்கள் என்றும் மாரட் பிறகு முடிவு செய்தார். அந்த நம்பிக்கை மனிதனின் உள்ளத்தில் ஆழ்ந்த பயபக்தியைத் தூண்டியது என்றும் அதுவே தொன்மை மதத்திற்கு அடிப்படையாக அமைந்தது என்றும் அவர் சொன்னார். ஆகவே, அறியப்படாத ஒரு சக்தியின் மீது மனிதனுக்கு இருந்த பயபக்தியே மதம் என அவர் கருதினார். அதுமட்டுமல்ல, மதம் அறிவுப்பூர்வமானது என்பதைவிட உணர்ச்சிப்பூர்வமானது என்றே மாரட் பல முறை சொன்னார்.

13பண்டைய மரபுகளை ஆராயும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வல்லுநரான ஜேம்ஸ் ஃப்ரேஸர் (1854-1941) பொற்கிளை (ஆங்கிலம்) என்ற பிரபல நூலை 1890-ல் பிரசுரித்தார்; மாயமந்திரத்திலிருந்துதான் மதம் வளர்ந்ததென அந்த நூலில் வாதாடினார். ஃப்ரேஸரின்படி, மனிதன் தன்னுடைய சொந்த வாழ்க்கையையும் சுற்றுச்சூழலையும் கட்டுப்படுத்துவதற்கு இயற்கையில் பார்த்தவற்றை அப்படியே செய்ய முதலில் முயன்றான். உதாரணமாக, இடிபோல் முரசொலி எழுப்பி, நிலத்தின் மீது தண்ணீரைத் தெளித்தால் மழையை வரவழைக்க முடியும் என்று நினைத்தான். அல்லது ஒரு கொடும்பாவியில் குண்டூசிகளைக் குத்தினால் விரோதிக்கு தீங்கு செய்துவிட முடியும் என்று நினைத்தான். இதனால் வாழ்க்கையின் அநேக அம்சங்களில் சடங்குகள், வசியங்கள், மாயமந்திர பொருட்கள் போன்றவற்றை உபயோகிக்க ஆரம்பித்தான். எதிர்பார்த்த பலன் கிடைக்காதபோது, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வதை விட்டுவிட்டு அவற்றை சாந்தப்படுத்தவும் அவற்றிடம் மன்றாடவும் ஆரம்பித்தான். சடங்குகள், மந்திரங்கள் ஆகியவை பலிகளாகவும் பிரார்த்தனைகளாகவும் உருவெடுத்தன, இவ்வாறாக மதம் தோன்றியது. மதம் என்பது “மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகளைப் பிரியப்படுத்துவது அல்லது சமாதானப்படுத்துவது” என ஃப்ரேஸர் கூறினார்.

14ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிரபல உளவியல் பகுப்பாய்வாளர் (psychoanalyst) சிக்மண்ட் ஃபிராய்ட் (1856-1939) மரபு சின்னமும் சமூக கட்டுப்பாடும் என்ற ஆங்கில புத்தகத்தில் மதம் தோன்றிய விதத்தை விளக்க முயன்றார். அவருடைய தொழிலுக்கு ஏற்றாற்போல் உளவியலையும் மதத்தையும் சம்பந்தப்படுத்தினார். தந்தை என்ற ஸ்தானத்திலிருக்கும் ஒருவருக்கு பயப்படும் பயத்திலிருந்து (father-figure neurosis) ஆதிகால மதம் தோன்றியதென அவர் விளக்கினார். காட்டுக் குதிரைகள், ஆடுமாடுகள் மத்தியில் காணப்படுவது போலவே பழங்குடியினரின் சமுதாயத்திலும் தந்தையே குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தார் என சொன்னார். தந்தையை வெறுக்கவும் விரும்பவும் செய்த மகன்கள் கலகம் செய்து அவரைக் கொன்றார்கள். தந்தையின் அதிகாரத்தை பெறுவதற்காக, அவரை ‘நரமாமிசமாக இந்தத் துஷ்டர்கள் தின்றார்கள்’ என ஃபிராய்ட் கூறினார். பின்னர், குற்றவுணர்வு மேலிட தங்கள் செயல்களுக்கு பிராயச்சித்தமாக வழிபாட்டு முறைகளையும் சடங்கு முறைகளையும் உருவாக்கினார்கள். ஃபிராய்டின் கோட்பாட்டின்படி, தந்தையின் அதிகாரத்தைப் பெற்றவர் கடவுளாக மாறினார், வழிபாட்டு முறைகளும் சடங்கு முறைகளும் ஆதிகால மதமாக மாறின; கொல்லப்பட்ட தந்தையை உண்பது, அநேக மதங்களில் கடைப்பிடிக்கப்பட்ட பொது விருந்து பழக்கமாக (communion) ஆனது.

15மதம் தோன்றிய விதத்தைப் பற்றி விளக்கும் இன்னும் பல கோட்பாடுகள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை மறைந்துவிட்டன; உண்மையில் அவை எதுவுமே மற்றவற்றைப் பார்க்கிலும் அதிக நம்பகமானதாகவோ ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவோ இருக்கவில்லை. ஏன்? ஏனென்றால் அந்தக் கோட்பாடுகள் உண்மை என்பதற்கு எந்த சரித்திரப்பூர்வ ஆதாரமோ அத்தாட்சியோ இல்லை. அவை ஏதோவொரு ஆராய்ச்சியாளரின் கற்பனையே அல்லது ஊகமே. அவற்றின் இடத்தை விரைவில் புதிய கோட்பாடுகள் பிடித்துக்கொண்டன.

ஆட்டம்கண்ட ஓர் அஸ்திவாரம்

16பல ஆண்டுகள் போராடிய பிறகு, மதம் எப்படி தோன்றியது என்ற கேள்விக்கு ஒருகாலும் விடை கிடைக்காது என்றே அநேகர் இப்போது முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கு முதல் காரணம், பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் எவ்வாறு சிந்தித்தார்கள், எதைக் குறித்து பயந்தார்கள், அல்லது ஏன் வழிபாடுகளில் ஈடுபட்டார்கள் என்றெல்லாம் அவர்களுடைய எலும்புகளும் புதைபொருட்களும் நமக்கு சொல்வதில்லை. இந்தப் பொருட்களை வைத்து எடுக்கப்படும் எந்த முடிவுகளும் ஊகங்களாக மாத்திரமே இருக்க முடியும். இரண்டாவது காரணம், ஆஸ்திரேலிய பழங்குடியினரைப் போன்ற இன்றுள்ள ‘பழங்குடியினரின்’ மதப் பழக்கங்களை வைத்து பண்டைய மக்கள் என்ன செய்தார்கள் அல்லது நினைத்தார்கள் என்பதை தீர்மானிக்க முடியாது. ஏனெனில் தங்கள் கலாச்சாரம் கடந்த பல நூற்றாண்டுகளில் மாறியிருக்கிறதா என்றும், அப்படி மாறியிருந்தால் எப்படி மாறியிருக்கிறது என்றும் ஒருவருக்கும் திட்டவட்டமாக தெரியாது.

17இத்தகைய குழப்பங்கள் இருப்பதால், “மதம் தோன்றிய விதத்தைக் கண்டுபிடிப்பது சாத்தியமற்றது என்பதை மதங்களின் நவீன கால சரித்திராசிரியர்கள் அறிவர்” என உலக மதங்கள்​—பண்டைய வரலாறு முதல் இன்று வரை புத்தகம் முடிவாக சொல்கிறது. இருந்தபோதிலும், சரித்திராசிரியர்களின் முயற்சிகளைப் பற்றி அந்தப் புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “கடந்த காலத்தில் அநேக கோட்பாட்டு வல்லுநர்கள் மதத்தை விவரிப்பதற்கு அல்லது புரிய வைப்பதற்கு பதிலாக மதம் முக்கியமல்ல என நிரூபிக்கும் குறிக்கோளோடுதான் இருந்தனர்; ஏனெனில் பூர்வ வழிபாட்டு முறைகள் வெறும் கற்பனைகளின் அடிப்படையிலானவை என்பது நிரூபணமாகிவிட்டால், பிற்பாடு தோன்றிய, வளர்ச்சியடைந்த மதங்களை அது வலுவிழக்க செய்துவிடலாம் என நினைத்தனர்.”

18மதம் தோன்றிய விதத்தைப் பற்றி பல்வேறு “அறிவியல்” ஆய்வாளர்களால் எந்த நியாயமான விளக்கங்களையும் ஏன் கொடுக்க இயலவில்லை என்பதற்கு அந்தக் கடைசி குறிப்பில் ஒரு முக்கிய துப்பு கிடைக்கிறது. சரியான ஆதாரம் இருந்தால்தான் சரியான ஒரு முடிவுக்கு வர முடியும் என்பது நியாயம் அல்லவா? தவறான ஆதாரத்திலிருந்து ஒருவர் துவங்கினால் அவர் சரியான முடிவுக்கு வருவது சாத்தியமற்றதே. “அறிவியல்” ஆய்வாளர்கள் நியாயமான ஒரு விளக்கத்தை எடுத்துரைப்பதில் திரும்பத் திரும்ப தோல்வியைக் கண்டிருக்கிறார்கள்; இது, அவர்களுடைய கருத்துகளுக்கு அடிப்படையாக விளங்கும் ஆதாரத்தின் மீது பெரும் சந்தேகங்களை எழுப்புகிறது. ஏற்கெனவே தங்கள் மனதில் தீர்மானித்திருக்கும் கருத்தின் அடிப்படையில், ‘மதம் முக்கியமில்லை என்று நிரூபிக்கப்போய்’ கடைசியில் கடவுளே முக்கியமில்லை என்று காட்ட முற்பட்டிருக்கிறார்கள்.

19இந்த நிலைமையை 16-ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த நிலைமையோடு ஒப்பிடலாம்; அப்போது வானவியலாளர்கள் கோள்களின் இயக்கத்தைப் பற்றி பலவிதமாக விளக்க முற்பட்டார்கள். அது சம்பந்தமாக அநேக கோட்பாடுகள் உருவாயின, ஆனால் எதுவுமே திருப்தியளிப்பதாக இருக்கவில்லை. ஏன்? ஏனென்றால் பூமியே இப்பிரபஞ்சத்தின் மையம், நட்சத்திரங்களும் கோள்களும் அதைச் சுற்றி வருகின்றன என்ற ஊகத்தின் அடிப்படையில் அக்கோட்பாடுகள் உருவாக்கப்பட்டிருந்தன. எனவே, பிரபஞ்சத்தின் மையத்தில் பூமி இல்லை, மாறாக சூரிய மண்டலத்தின் மையமாக இருக்கும் சூரியனை அது சுற்றி வருகிறது என்ற உண்மையை விஞ்ஞானிகளும்​—கத்தோலிக்க சர்ச்சும்​—ஏற்றுக்கொள்ளும் வரையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அந்த அநேக கோட்பாடுகள் உண்மைகளை விளக்க தவறியபோது, திறந்த மனமுள்ள ஆட்கள் புதிய கோட்பாடுகளை எடுத்துரைப்பதற்குப் பதிலாக தங்கள் ஆய்வுகளின் ஆதாரத்தை மறுபரிசீலனை செய்தனர். இது வெற்றிக்கு வழிவகுத்தது.

20மதம் தோன்றிய விதத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்கும் இதே நியதியைப் பொருத்தலாம். நாத்திகக் கொள்கையும் பரிணாமக் கொள்கையும் தோன்றி பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால் கடவுள் என்ற ஒருவர் இல்லை என்பதாகவே அநேக ஆட்கள் நினைக்கிறார்கள். மதம் தோன்றியதற்கு மனிதனுடைய சிந்தனைகளும், தேவைகளும், பயங்களுமே காரணம் என்பதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள். “கடவுள் என்ற ஒருவர் இல்லையென்றால், அவரை உருவாக்குவது அவசியம்” என வால்டேர் சொன்னார். ஆக, மனிதனே கடவுளை உருவாக்கியிருக்கிறான் என அந்த ஆட்கள் வாதாடுகிறார்கள்.​—பக்கம் 28-ல் உள்ள பெட்டியைக் காண்க.

21இத்தகைய கோட்பாடுகளெல்லாம் திருப்தியளிக்கும் பதிலை கொடுக்க தவறியிருப்பதால், ஆராய்ச்சிகளுக்கு அடிப்படையான ஆதாரத்தை மறுபரிசீலனை செய்வதற்கு நேரம் இது அல்லவா? ஒரே வட்டத்தில் வீணாக சுற்றிச் சுற்றி வருவதை விட்டுவிட்டு, விடைதேடி வேறு எங்காவது செல்வது நியாயமாக இருக்கும் அல்லவா? நாம் திறந்த மனமுள்ளவர்களாக இருந்தால், அப்படி தேடுவது சரியானது என்றும் அறிவியல்பூர்வமானது என்றும் ஒப்புக்கொள்வோம். இப்படி செய்வது நியாயமானதே என்பதை புரிந்துகொள்ள உதவுகிற பொருத்தமான ஓர் உதாரணம் இருக்கிறது.

ஒரு பண்டைய ஆய்வு

22பொது சகாப்தம் முதல் நூற்றாண்டில் கிரீஸிலுள்ள ஏதன்ஸ் நகரம் கல்வி அறிவுக்கு ஒரு முக்கிய மையமாக விளங்கியது. இருந்தபோதிலும் ஏதன்ஸ் மக்கள் மத்தியில் வித்தியாசமான நம்பிக்கைகளைக் கொண்ட எப்பிக்கூரர்கள், ஸ்தோயிக்குகள் போன்ற தொகுதியினர் இருந்தனர். இந்த ஒவ்வொரு தொகுதியினருக்கும் கடவுளைப் பற்றி ஒவ்வொரு விதமான கருத்துகள் இருந்தன. இப்படிப்பட்ட பல்வேறு கருத்துகளின் அடிப்படையில் அநேக தெய்வங்களை வணங்கி வந்தனர், வித்தியாசமான வழிபாட்டு முறைகளையும் ஏற்படுத்தியிருந்தனர். இதன் விளைவாக, அந்த நகரம் முழுவதிலும் விக்கிரகங்களும் கோவில்களும் நிறைந்து காணப்பட்டன.​—அப்போஸ்தலர் 17:16.

23ஏறக்குறைய பொ.ச. 50-வது ஆண்டில் கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் ஏதன்ஸ் நகருக்குச் சென்று, முற்றிலும் மாறுபட்ட ஒரு கருத்தை அவர்களிடம் சொன்னார். அவர் இவ்வாறு கூறினார்: “உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம் பண்ணுகிறதில்லை. எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானது போல, மனுஷர் கைகளால் பணிவிடை கொள்ளுகிறதுமில்லை.”​—அப்போஸ்தலர் 17:24, 25.

24வேறு வார்த்தைகளில் சொன்னால், “உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின” உண்மையான கடவுள் மனிதனின் கற்பனையில் உருவானவரும் அல்ல, மனிதன் தன் இஷ்டப்படி செய்யும் பணிவிடைகளை ஏற்றுக்கொள்பவரும் அல்ல என்பதை ஏதன்ஸ் வாசிகளிடம் பவுல் சொல்லிக் கொண்டிருந்தார். உண்மை மதம் என்பது ஏதோவொரு உணர்ச்சிப்பூர்வ தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு அல்லது ஏதோவொரு பயத்தைப் போக்குவதற்கு மனிதன் எடுக்கும் ஒருதலைப்பட்ச முயற்சி அல்ல. மாறாக, சிந்திக்கும் திறனுடனும் நியாயப்படுத்திப் பார்க்கும் சக்தியுடனும் மனிதனைப் படைத்திருக்கும் மெய்க் கடவுள், தம்மோடு திருப்தியளிக்கும் ஓர் உறவுக்குள் வரும் வழியையும் காட்ட வேண்டும் அல்லவா? கடவுள் அதைத்தான் செய்திருப்பதாக பவுல் சொன்னார்: “மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே [அதாவது ஒரே மனுஷனிலிருந்து] தோன்றப் பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்து, . . . கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.”​—அப்போஸ்தலர் 17:26, 27.

25பவுலுடைய விவாதத்தின் முக்கிய குறிப்பைக் கவனியுங்கள்: கடவுள் ‘மனுஷஜாதியான சகல ஜனங்களையும் ஒரே மனுஷனிலிருந்து தோன்றப் பண்ணினார்.’ பூமி முழுவதிலும் இன்று பல இனத்தவர் வாழ்ந்து வந்தாலும், முழு மனிதவர்க்கமும் ஒரே வம்சத்தினர் என்பதை விஞ்ஞானிகள் அறிவார்கள். இந்தக் கருத்து அதிக முக்கியத்துவம் உடையது. ஏனென்றால் முழு மனிதவர்க்கமும் ஒரே வம்சத்தினர் என்று சொல்லும்போது, அவர்கள் உயிரியல் ரீதியிலும் மரபியல் ரீதியிலும் மட்டுமல்ல, மற்ற விஷயங்களிலும் சம்பந்தமுடையவர்களாய் இருக்கிறார்கள் என்று அர்த்தப்படுத்துகிறது.

26உதாரணமாக, உலகின் வழிபாட்டைப் பற்றிய கதை (ஆங்கிலம்) என்ற புத்தகம் மனிதனின் மொழியைப் பற்றி என்ன சொல்லுகிறது என்பதைக் கவனியுங்கள். “உலக மொழிகளைப் படித்து அவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்தவர்கள் ஒரு காரியத்தைக் கவனித்திருக்கிறார்கள். அது இதுவே: எல்லா மொழிகளையும் குடும்பங்களாக அல்லது உட்பிரிவுகளாக வகைப்படுத்த முடியும், இந்த எல்லா குடும்பங்களும் ஒரே பொதுவான மூலத்திலிருந்து ஆரம்பித்திருக்கின்றன.” வேறு வார்த்தையில் சொன்னால், பரிணாமவாதிகள் நம்மை நம்ப வைக்க முயலுகிறபடி, உலக மொழிகள் தனித்தனியாகவும் தோன்றவில்லை தானாகவும் தோன்றவில்லை. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்ந்த குகைவாசிகள் முதலில் வெறுமனே உறுமிக்கொண்டும் முனகிக்கொண்டும் இருந்தார்கள், பிற்பாடு படிப்படியாக தங்களுக்கென்று தனித்தனி மொழிகளை உருவாக்கிக் கொண்டார்கள் என அவர்கள் ஊகிக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. எல்லா மொழிகளும் ‘ஒரே பொதுவான மூலத்திலிருந்து ஆரம்பித்தன’ என்பதையே அத்தாட்சிகள் காட்டுகின்றன.

27தனிச் சிறப்புமிக்கதாயும் மனிதர்களுக்கே உரியதாயும் இருக்கும் மொழியின் விஷயத்தில் அது உண்மையாக இருக்குமானால் கடவுளையும் மதத்தையும் பற்றிய மனிதனின் கருத்துகளும் ஒரே பொதுவான மூலத்திலிருந்தே ஆரம்பித்திருக்க வேண்டும் என்று நினைப்பது நியாயமாக இருக்குமல்லவா? மதம் என்பது சிந்தனையோடும், சிந்தனை என்பது மொழியைப் பயன்படுத்த மனிதனுக்கு இருக்கும் திறனோடும் சம்பந்தப்பட்டுள்ளது. அதற்காக, எல்லா மதங்களும் ஒரே மதத்திலிருந்து தோன்றின என்பது அர்த்தமல்ல, ஆனால் எல்லா கருத்துகளும் எண்ணங்களும் ஏதோவொரு பொதுவான ஆரம்பத்திலிருந்து அல்லது கருத்துகளின் தொகுப்பிலிருந்து வந்திருக்க வேண்டும் என்பதே அர்த்தம். இதை ஆதரிக்க அத்தாட்சி இருக்கிறதா? அப்படி மனிதனின் மதங்கள் ஒரே ஊற்றுமூலத்திலிருந்து வந்திருந்தால், அந்த ஊற்றுமூலம் எது? அதை நாம் எப்படி கண்டுபிடிக்க முடியும்?

வேற்றுமையிலும் ஒற்றுமை

28மொழியின் ஆரம்பத்தைப் பற்றி மொழி வல்லுநர்கள் எப்படி பதில்களைப் பெற்றுக்கொண்டார்களோ அதேவிதமாக மதத்தின் ஆரம்பத்தைப் பற்றி பதிலை நாமும் பெற்றுக்கொள்ள முடியும். பல்வேறு மொழிகளை ஒப்பிட்டு அவற்றின் ஒற்றுமைகளை கவனிப்பதன் மூலம் சொல்லிலக்கண வல்லுநரால் அவற்றின் ஆரம்பத்தைக் கண்டுபிடித்துவிட முடியும். அதே விதமாக, பல்வேறு மதங்களை ஒப்பிட்டு அவற்றின் கோட்பாடுகள், பழங்கதைகள், சடங்குகள், ஆசாரங்கள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை ஆராய்ந்து, அவற்றில் ஒரேமாதிரியான கருத்துகள் இழையோடுகின்றனவா என்பதையும் அக்கருத்துகள் நம்மை எந்த முடிவுக்கு வழிநடத்துகின்றன என்பதையும் நாம் கண்டுபிடிக்க முடியும்.

29மேலோட்டமாக பார்த்தால், இன்றுள்ள மதங்கள் ஒவ்வொன்றும் மிகவும் வித்தியாசமாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால் மேற்பூச்சுகளையும் பின்னர் சேர்க்கப்பட்டவற்றையும் நாம் களைந்துவிட்டால், அதாவது சீதோஷண நிலை, மொழி, தேசத்திற்கு உரிய நிலைமை போன்றவற்றின் அடிப்படையிலான வேறுபாடுகளை நாம் நீக்கிவிட்டால், பெரும்பாலான அந்த மதங்களில் காணப்படும் ஒற்றுமை நம்மை மலைக்க வைக்கும்.

30உதாரணமாக, மேற்கில் காணப்படும் ரோமன் கத்தோலிக்க மதமும் கிழக்கில் காணப்படும் புத்த மதமும் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத முற்றிலும் வேறுபட்ட மதங்கள் என பெரும்பாலோர் நினைப்பார்கள். இருப்பினும், மொழி, கலாச்சாரம் போன்ற வித்தியாசங்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டால், அந்த மதங்களில் நாம் எதைக் காண்போம்? உண்மைக்கு கண்களை விரிக்கையில், அவ்விரண்டு மதங்களுக்கும் இடையே அநேக ஒற்றுமைகள் இருப்பதை காண்போம். கத்தோலிக்க மதம், புத்த மதம் ஆகிய இரண்டுமே சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் ஊறிப்போயிருக்கின்றன. மெழுகுவர்த்திகள், தூபவர்க்கம், புனித நீர், ஜெப மாலை, புனிதர்களின் உருவங்கள், மந்திரங்கள், ஜெப புஸ்தகங்கள், ஏன், சிலுவைக்குறி போடுவதுகூட இவற்றில் அடங்கும். இரண்டு மதங்களிலுமே துறவிகளுக்கும் கன்னிகாஸ்திரீகளுக்கும் மடாலயங்கள் இருக்கின்றன; அதுமட்டுமல்ல, குருமாரின் பிரம்மச்சரியம், விசேஷித்த உடைகள், புனித தினங்கள், விசேஷித்த உணவுகள் போன்றவற்றிற்கும் இவ்விரண்டு மதங்களும் பேர்போனவை. எல்லா ஒற்றுமைகளுமே இந்தப் பட்டியலில் இல்லாதபோதிலும், விஷயத்தைப் புரிந்துகொள்ள இது போதுமானது. இப்போது கேள்வி என்னவென்றால், மிகவும் வித்தியாசமாக தோன்றும் இரண்டு மதங்களில் ஏன் இத்தனை அநேக ஒற்றுமைகள் உள்ளன?

31இந்த இரண்டு மதங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தது அறிவொளியூட்டுவதாக இருந்ததைப் போலவே மற்ற மதங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போதும் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அப்படி ஒப்பிடும்போது, சில போதனைகளும் நம்பிக்கைகளும் ஏறக்குறைய எல்லா மதங்களிலும் பொதுவாக இருப்பதை காண்போம். ஆத்மா அழியாமை, நல்லவர்கள் எல்லாரும் பரலோகத்திற்குப் போவது, பொல்லாதவர்கள் நரகத்தில் நித்தியமாக வதைக்கப்படுவது, உத்தரிக்கும் ஸ்தலம், எல்லா கடவுட்களுக்கும் மேலான திரித்துவ கடவுள், தேவமாதா அல்லது விண்ணரசி போன்ற கோட்பாடு நம்மில் பலருக்கு பரிச்சயமானவையே. இவை மட்டுமல்லாமல் அநேக பழங்கதைகளும் புராணக்கதைகளும்கூட சர்வசாதாரணமாக வலம் வருகின்றன. உதாரணமாக, சாவாமையைப் பெறுவதற்காக கடவுளுடைய சட்டத்தை மனிதன் மீறியதால் அவரது அனுக்கிரகத்தை இழந்தது, பாவ நிவிர்த்திக்காக பலிகளைச் செலுத்துவதற்கான தேவை ஏற்பட்டது, ஜீவ விருட்சத்தை அல்லது இளமை நீரூற்றை தேடியது, தெய்வங்களும் அரைதெய்வங்களும் (demigods) மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து அசுர பலம் படைத்த பிள்ளைகளைப் பிறப்பித்தது, ஏறக்குறைய முழு மனிதவர்க்கத்தையும் ஜலப்பிரளயம் அழித்தது ஆகியவற்றைப் பற்றிய அநேக பழங்கதைகள் உள்ளன. a

32இந்த எல்லாவற்றிலிருந்தும் நாம் என்ன முடிவுக்கு வரலாம்? இந்தப் புராணக்கதைகளிலும் பழங்கதைகளிலும் நம்பிக்கை வைத்தவர்கள் ஒருவருக்கொருவர் வெகு தொலைவில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை நாம் கவனிக்கிறோம். அவர்களுடைய கலாச்சாரமும் பாரம்பரியங்களும் வித்தியாசமானவையாகவும் தனித்தன்மை வாய்ந்தவையாகவும் இருந்தன. அவர்களுடைய சமுதாய பழக்கவழக்கங்கள் முற்றிலும் வேறுபட்டிருந்தன. இருந்தபோதிலும், மதத்தைப் பொறுத்தவரை, அவர்கள் இப்படிப்பட்ட ஒரேவிதமான கருத்துகளில் நம்பிக்கை வைத்திருந்தார்கள். இவர்களில் ஒவ்வொருவரும், மேற்குறிப்பிடப்பட்ட எல்லா கருத்துகளையும் நம்பாதிருந்தபோதிலும் அனைவருமே இவற்றில் சிலவற்றை நம்பி வந்தார்கள். ஏன் என்பதே இப்போது கேள்வி. ஒவ்வொரு மதமும் பொதுவான ஒரே ஊற்றுமூலத்திலிருந்து அதன் அடிப்படை நம்பிக்கைகளைப் பெற்றது போல தோன்றுகிறது; சில மதங்கள் அதிகமாகவும் மற்ற மதங்கள் குறைவாகவும் பெற்றுக் கொண்டன. காலப்போக்கில் அடிப்படையான இந்தக் கருத்துகள் மெருகூட்டப்பட்டு சிறிது மாற்றம் செய்யப்பட்டன, அவற்றிலிருந்து மற்ற போதனைகள் தோன்றின. ஆனால் அடிப்படை அம்சங்கள் ஒன்றுபோவே உள்ளன.

33ஆகையால், பெரும்பாலான மதங்களின் அடிப்படை கருத்துகளில் ஒற்றுமை காணப்படுவது, அவை ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் சுயமாகவும் தோன்றவில்லை என்பதற்கு பலமான அத்தாட்சியாக உள்ளது. மதங்களின் சரித்திரத்தை பின்னோக்கிப் பார்க்கும்போது, அவற்றின் கருத்துகள் ஒரே பொதுவான ஊற்றுமூலத்திலிருந்து வந்திருப்பது தெரிய வருகிறது. அப்படியானால், அந்த ஊற்றுமூலம் எது?

ஆதி பொற்காலம்

34ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவென்றால், அநேக மதங்களில் பொதுவாக சொல்லப்படும் பழங்கதைகளில் ஒன்று, மனிதவர்க்கத்தின் ஆரம்பம் ஒரு பொற்காலமாக இருந்தது என்பதாகும். அப்போது மனிதன் குற்றமற்றவனாக இருந்தான், கடவுளோடு நெருக்கமான தோழமையை அனுபவித்தான், நோயும் மரணமுமின்றி மகிழ்ச்சியோடும் சமாதானத்தோடும் வாழ்ந்து வந்தான் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. நுட்ப விவரங்கள் ஒருவேளை வித்தியாசப்பட்டாலும், ஒரு காலத்தில் இந்தப் பூமி பூங்காவனம் போன்ற பரதீஸாக இருந்ததென்ற அடிப்படைக் கருத்து அநேக மத நூல்களிலும் பழங்கதைகளிலும் காணப்படுகிறது.

35அவஸ்தா என்பது பண்டைய பெர்சிய சொராஸ்டிரிய (Zoroastrian) மதத்தின் புனித நூலாகும். “சிவந்த மேனியுடைய, நல்ல மேய்ப்பனான இம்மா” என்ற முதல் மனிதனோடு அகுரா மாஸ்டா (படைப்பாளர்) உரையாடியதாக இந்நூல் கூறுகிறது. “என்னுடைய உலகை பேணிக் காப்பாயாக, ஆண்டுகொள்வாயாக, கண்காணிப்பாயாக” என அகுரா மாஸ்டா முதல் மனிதனிடம் கட்டளை கொடுத்திருந்தார். அதை நிறைவேற்றுவதற்கு, எல்லா உயிரினங்களுக்காகவும் பூமிக்கடியில் “வாரா” என்ற இடத்தை அம்மனிதன் கட்ட வேண்டியிருந்தது. அங்கே, “பெருமையும் இல்லை அற்ப புத்தியுமில்லை, முட்டாள்தனமும் இல்லை வன்முறையும் இல்லை, வறுமையும் இல்லை வஞ்சனையும் இல்லை, வலிமையற்றோரும் இல்லை ஊனமுற்றோருமில்லை, இராட்சத பற்களுமில்லை பருத்த உடல்களும் இல்லை. பொல்லாத ஆவிகள் அங்கு குடியிருப்போரை கறைபடுத்தவில்லை. வாசனை மரங்களின் மத்தியிலும் அவர்கள் பொன்னாலான தூண்களின் மத்தியிலும் வாழ்ந்து வந்தனர்; இந்த மரங்களும் தூண்களும் உலகிலேயே மிகப் பெரியவை, மிகச் சிறந்தவை, மிக அழகானவை; அங்கு குடியிருப்போர்தாமே உயரமான, அழகான இனத்தார்” என்றெல்லாம் இந்நூல் சொல்கிறது.

36பண்டைய கிரேக்கர்களை இப்போது எடுத்துக்கொள்ளலாம்; வேலைகளும் நாட்களும் (ஆங்கிலம்) என்ற கவிதையில் மனிதனின் ஐந்து காலங்களைப் பற்றி ஹெஸியாடு கூறினார். முதலாவது காலம் “பொற்காலம்” என்றும் அப்போது மனிதர் பூரண மகிழ்ச்சியை அனுபவித்தனர் என்றும் கூறினார். அவர் இவ்வாறு எழுதினார்:

“சாகா வரம் பெற்ற தேவர்கள் வானுலகில் நடைபோட்டனரே,

பொன்னான மனித இனத்தை முதன்முதலாய் தோற்றுவித்தனரே.

மனித இனத்தவர் மகிழ்ச்சியான, கவலையற்ற ஆன்மாவோடு தேவர்களைப் போல் வாழ்ந்தனரே,

கடின உழைப்பும் வேதனையும் அவர்களுக்கு இல்லை; பாழாய்போன முதுமையும் அவர்களைத் தழுவிக் கொள்ளவில்லை, வயிறார விருந்துண்டு அவர்கள் வாழ்நாள் கழிந்ததே,

அவர்களுடைய கையிலும் காலிலும்தான் எந்த மாற்றமும் நிகழவில்லையே.”

ஸீயஸ் என்ற ஒலிம்பிய கடவுள் அழகிய பாண்டோராவை எப்பிமிதியஸுக்கு மனைவியாக பரிசளித்தார் என்றும் அவளை அவர் ஏற்றுக்கொண்டபோது அன்றிருந்த பொற்காலம் முடிவுற்றது என்றும் ஒரு கிரேக்க புராணக்கதை சொல்கிறது. ஒருநாள் பாண்டோரா தன்னுடைய பெரிய ஜாடியின் மூடியைத் திறந்தபோது அத்தனை தொல்லைகளும், வேதனைகளும், வியாதிகளும் திடீரென்று வெளிப்பட்டன என்றும் அவற்றிலிருந்து மனிதர்களால் ஒருபோதும் மீண்டுவர முடியவில்லை என்றும் அந்தப் புராணக்கதை தொடர்ந்து சொல்கிறது.

37பண்டைய சீன பழங்கதைகளிலும் ஒரு பொற்காலத்தைப் பற்றி சொல்லப்படுகிறது; அது, பொ.ச.மு. 26-வது நூற்றாண்டில் நூறு வருடங்கள் ஆட்சி செய்த ஹூவாங்-டியின் (எல்லோ எம்பரர்) நாட்களில் நிலவிய காலம் என சொல்லப்படுகிறது. அந்தப் பேரரசர், நவநாகரிகத்தோடு சம்பந்தப்பட்ட அனைத்தையும், அதாவது உடை, உறைவிடம், போக்குவரத்து வாகனங்கள், போர், போராயுதங்கள், நில நிர்வாகம், உற்பத்தி, பட்டுப்பூச்சி வளர்ப்பு, இசை, மொழி, கணிதம், நாட்காட்டி போன்ற அனைத்தையும் கண்டுபிடித்தாராம். அவருடைய ஆட்சியில், “திருடர்களோ சண்டைகளோ இருக்கவில்லை, மக்கள் மனத்தாழ்மையோடும் சமாதானத்தோடும் வாழ்ந்து வந்தனர். பருவம் தவறாமல் பெய்த மழையும் வானிலையும் வருடா வருடம் அமோக விளைச்சலை அள்ளித் தந்தன. முக்கியமாக, மூர்க்க மிருகங்கள்கூட யாரையும் கொல்லவில்லை, கொன்று தின்னும் பறவைகளும் யாருக்கும் தீங்கு செய்யவில்லை என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். சுருங்கச் சொன்னால் சீன சரித்திரம் ஒரு பரதீஸாக ஆரம்பமானது” என்றெல்லாம் சொல்லப்படுகிறது. தாங்கள் எல்லோ எம்பரரின் சந்ததியினர் என்றே சீனர்கள் இன்று வரை உரிமை பாராட்டி வருகின்றனர்.

38மனித வரலாற்றின் ஆரம்பத்தில் மகிழ்ச்சியான, பரிபூரணமான ஒரு காலம் இருந்ததைப் பற்றி சொல்லும் இது போன்ற பழங்கதைகளை மற்ற அநேகரது மதங்களிலும் காணலாம். உதாரணமாக, எகிப்து, திபெத்து, பெரு, மெக்சிகோ போன்ற பல நாட்டவரது மதங்களிலும் காணலாம். ஒருவருக்கொருவர் வெகு தொலைவில் வாழ்ந்த போதிலும், முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரங்களையும் மொழிகளையும் பழக்கவழக்கங்களையும் உடையவர்களாக இருந்த போதிலும், தாங்கள் தோன்றிய விதத்தைப் பற்றி ஒரே விதமான கருத்துகள் அவர்கள் அனைவருக்கும் இருப்பது வெறும் தற்செயல் தானா? அதாவது அவர்கள் அனைவருமே தங்களுடைய ஆரம்பத்தைப் பற்றி ஒரே விதமாக விளக்க முயன்றது எதேச்சையாக நிகழ்ந்த ஒன்றா? இல்லை, அப்படி இருக்க முடியாது. மனிதனின் ஆரம்பத்தையும் அவனுடைய மதத்தின் ஆரம்பத்தையும் பற்றிய சில பொதுவான உண்மைகள் இந்த எல்லா பழங்கதைகளிலும் பின்னிப்பிணைந்திருக்க வேண்டும் என்பதையே நியாயமும் அனுபவமும் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.

39உண்மையில், மனிதனின் ஆரம்பத்தைப் பற்றிய பல்வேறு பழங்கதைகளில் அநேக பொதுவான விஷயங்கள் தெளிவாக தென்படுகின்றன. அவற்றையெல்லாம் ஒன்றாக சேர்த்து பார்க்கையில் நம் மனக்கண் முன் அதிக தெளிவான ஒரு காட்சி தோன்ற ஆரம்பிக்கிறது: கடவுள் முதல் மனுஷனையும் மனுஷியையும் படைத்து அவர்களை ஒரு பரதீஸில் வைத்தார்; ஆரம்பத்தில் அவர்கள் மிகவும் திருப்தியாகவும் அதிக சந்தோஷமாகவும் இருந்தனர்; ஆனால் சீக்கிரத்திலேயே கலகம் செய்தனர்; அதன் விளைவாக பரிபூரணமான பரதீஸை இழந்தனர்; அதன்பின், கடின உழைப்பும் வேதனையும் துன்பமுமே அவர்கள் வாழ்க்கையானது; இறுதியில் மனிதர் அவ்வளவு மோசமானவர்களாக மாறியதால் ஜலப்பிரளயத்தை வரவழைத்து அவர்கள் அனைவரையும்​—ஒரு குடும்பத்தைத் தவிர​—கடவுள் அழித்தார்; இந்தக் குடும்பம் பெருகியபோது, சிலர் கூட்டுச் சேர்ந்துகொண்டு கடவுளுக்கு எதிராக மிகப் பெரிய ஒரு கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்தனர்; ஆனால் கடவுள் அவர்களுடைய மொழிகளை மாற்றுவதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தி, பூமியின் கடைமுனை வரைக்கும் அவர்களைச் சிதறிப்போகச் செய்தார்; இவ்வாறு அவர்களுடைய திட்டத்தைக் குலைத்துப்போட்டார்.

40பல விவரங்கள் ஒருமித்த இந்தக் காட்சி, எவரோ ஒருவரின் கற்பனையில் தோன்றிய ஒன்றா? இல்லை. அடிப்படையில், பைபிளிலுள்ள ஆதியாகம புத்தகத்தின் முதல் 11 அதிகாரங்களில் கொடுக்கப்பட்டுள்ள காட்சியே இது. பைபிளின் நம்பகத்தன்மையைக் குறித்து நாம் இப்போது கலந்தாலோசிக்கப் போவதில்லை என்றாலும், அநேக பழங்கதைகளில் உள்ள முக்கியமான அம்சங்கள் மனிதனின் ஆரம்ப கால வரலாறு பற்றிய பைபிள் பதிவை அடிப்படையாக கொண்டிருப்பதைக் கவனியுங்கள். b பைபிள் பதிவின்படி, மனிதர் மெசபடோமியாவிலிருந்து நாலாபுறமும் சிதறியபோது தாங்கள் சென்ற இடத்திற்கெல்லாம் தங்கள் நினைவுகளையும், அனுபவங்களையும், கருத்துகளையும் எடுத்துச் சென்றனர். காலப்போக்கில் இவை விரிவுபடுத்தப்பட்டு மாற்றியமைக்கப்பட்டன; இவ்வாறு, உலகின் ஒவ்வொரு பாகத்திலும் உள்ள மதங்களில் இவை பின்னிப்பிணைந்தன. வேறு வார்த்தைகளில் சொன்னால், முன்னர் கூறியபடி, ஆதியாகமத்திலுள்ள பதிவுதான் தெள்ளத் தெளிவான அந்த ஆரம்பகால கருத்துத் தொகுப்பு; இதிலிருந்தே, பல்வேறு மதங்கள் மனிதனின் ஆரம்பத்தையும் வழிபாட்டு முறையின் ஆரம்பத்தையும் பற்றிய அடிப்படை கருத்துகளை பெற்றுக் கொண்டன. இந்தக் கருத்துகளோடு அவரவர் கோட்பாடுகளும் பழக்கவழக்கங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டன, ஆனால் அவற்றிலிருக்கும் தொடர்பு மட்டும் மிகத் தெளிவாக தெரிகிறது.

41குறிப்பிட்ட சில மதங்கள் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பதை இந்தப் புத்தகத்தின் பின்வரும் அதிகாரங்களில் அதிக விவரமாக நாம் கலந்தாலோசிப்போம். ஒவ்வொரு மதமும் மற்றவற்றிலிருந்து எவ்வாறு வித்தியாசப்படுகிறது என்பதை மாத்திரமல்ல, எவ்வாறு ஒத்திருக்கிறது என்பதையும் கவனிப்பது அறிவொளியூட்டுவதாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். அதுமட்டுமல்ல, மனித மற்றும் மத வரலாற்றின் கால அட்டவணையில் ஒவ்வொரு மதமும் எங்கே பொருந்துகிறது என்பதையும்; அதன் பரிசுத்த புத்தகம் அல்லது பதிவுகள் எவ்வாறு மற்றவற்றோடு தொடர்புடையவையாக இருக்கின்றன என்பதையும்; அதன் ஸ்தாபகர் அல்லது தலைவர் எவ்வாறு மற்ற மத கருத்துகளால் செல்வாக்கு செலுத்தப்பட்டார் என்பதையும்; அது எவ்வாறு மனிதவர்க்கத்தின் நடத்தையின் மீதும் வரலாற்றின் மீதும் செல்வாக்கு செலுத்தி வந்திருக்கிறது என்பதையும் உங்களால் கவனிக்க முடியும். இந்தக் குறிப்புகளையெல்லாம் மனதிற்கொண்டு, கடவுளைத் தேடும் மனிதனின் நீண்ட நாளைய முயற்சியைப் பற்றி வாசிக்கையில், மதத்தையும் மத போதனைகளையும் பற்றிய சத்தியத்தை அதிக தெளிவாக உங்களால் காண முடியும்.

[அடிக்குறிப்புகள்]

a பல்வேறு மக்கள் மத்தியில் காணப்படும் ஜலப்பிரளயத்தைப் பற்றிய பழங்கதைகள் வேதாகமத்தின்பேரில் உட்பார்வை என்ற நூலில் விவரமாக ஒப்பிடப்பட்டுள்ளன. இவற்றை தொகுதி 1, பக்கங்கள் 328, 610, 611-ல் காண்க. இந்நூல் யெகோவாவின் சாட்சிகளால் 1988-ல் பிரசுரிக்கப்பட்டது.

b இந்தப் பொருளின்பேரில் விளக்கமான தகவலுக்கு, எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேட்டை தயவுசெய்து காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் 1997-ல் பிரசுரிக்கப்பட்டது.

[கேள்விகள்]

1, 2. மதத்தின் பழமையையும் பல்வகையையும் குறித்து என்ன அறியப்பட்டுள்ளது?

3. உலக மதங்கள் சம்பந்தமாக சிந்திக்க வேண்டிய கேள்விகள் யாவை?

4. மதங்களைத் தோற்றுவித்தவர்களைப் பற்றி நாம் என்ன அறிந்திருக்கிறோம்?

5, 6. எவ்வாறு அநேக மதங்கள் தோன்றின?

7. மதம் சம்பந்தமாக இன்னும் பதிலளிக்கப்பட வேண்டிய கேள்வி எது?

8. பல நூற்றாண்டுகளாக, மதத்தைப் பற்றி மக்களுக்கு எப்படிப்பட்ட மனப்பான்மை இருந்து வந்தது?

9. மதம் எப்படி தோன்றியது, ஏன் தோன்றியது என்பதைக் கண்டுபிடிக்க 19-ம் நூற்றாண்டு முதல் என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன?

10. மதம் தோன்றிய விதத்தை அறிய மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் விளைவு என்ன?

11. ஆன்மவாதம் என்ற கோட்பாட்டை விளக்கவும்.

12. ஆன்மவாதத்துவம் என்ற கோட்பாட்டை விளக்கவும்.

13. ஜேம்ஸ் ஃப்ரேஸர் எடுத்துரைத்த மதக் கோட்பாடு என்ன?

14. மதம் தோன்றிய விதத்தைப் பற்றி சிக்மண்ட் ஃபிராய்ட் எவ்வாறு விளக்கினார்?

15. மதம் தோன்றிய விதத்தைப் பற்றி எடுத்துரைக்கப்பட்ட பெரும்பாலான கோட்பாடுகளுக்கு என்ன நிகழ்ந்திருக்கிறது?

16. பல வருட ஆராய்ச்சிக்குப் பின்னும், மதம் எவ்வாறு தோன்றியது என்பதை ஏன் விளக்க முடியவில்லை?

17. (அ) மதங்களின் நவீன கால சரித்திராசிரியர்கள் எதை அறிவர்? (ஆ) மதத்தை ஆராய்வதன் முக்கிய குறிக்கோள் என்னவென்று தோன்றுகிறது?

18. (அ) மதம் தோன்றிய விதத்தைப் பற்றி விளக்கம் அளிப்பதில் அநேக ஆய்வாளர்கள் ஏன் வெற்றி பெறவில்லை? (ஆ) மதத்தை ஆராயும் “அறிவியல்” ஆய்வாளர்களின் உண்மையான நோக்கம் என்ன?

19. வெற்றிகரமான அறிவியல் ஆராய்ச்சிக்கு பின்னால் இருக்கும் அடிப்படை நியதி என்ன? உதாரணம் தருக.

20. (அ) மதம் தோன்றிய விதத்தைப் பற்றிய “அறிவியல்” ஆராய்ச்சிக்கு அடிப்படையாக இருந்த தவறான ஆதாரம் என்ன? (ஆ) எந்த அடிப்படை தேவையைப் பற்றி வால்டேர் குறிப்பிட்டார்?

21. மதம் தோன்றிய விதத்தைப் பற்றிய அநேக கோட்பாடுகள் தோல்வியை தழுவியதால் என்ன நியாயமான முடிவுக்கு நாம் வரலாம்?

22. கடவுட்களைப் பற்றிய ஏதன்ஸ் மக்களின் பல்வேறு கருத்துகள் எவ்வாறு அவர்களுடைய வழிபாட்டு முறையை பாதித்தன?

23. ஏதன்ஸ் நகர மக்களிடம் கடவுளைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் சொன்ன முற்றிலும் மாறுபட்ட கருத்து என்ன?

24. உண்மை மதத்தைப் பற்றி ஏதன்ஸ் வாசிகளிடம் பவுல் என்ன சொல்லிக் கொண்டிருந்தார்?

25. மனிதவர்க்கத்தின் ஆரம்பத்தைப் பற்றிய பவுலுடைய விவாதத்தின் முக்கிய குறிப்பை விளக்கவும்.

26. பவுலின் முக்கிய குறிப்பை ஆதரிக்கும் விதத்தில், மொழியைப் பற்றி என்ன அறியப்பட்டிருக்கிறது?

27. கடவுளையும் மதத்தையும் பற்றிய மனிதனின் கருத்துகள் ஒரே பொதுவான ஆரம்பத்திலிருந்தே தோன்றியிருக்க வேண்டும் என நினைப்பது ஏன் நியாயமானது?

28. உலகின் மதங்களுக்கு பொதுவான ஒரு ஆரம்பம் இருக்கிறதா என்பதை நாம் எப்படி கண்டுபிடிக்க முடியும்?

29. மதங்கள் மத்தியில் காணப்படும் அநேக வித்தியாசங்களுக்கு காரணம் என்னவாக இருக்கலாம்?

30. ரோமன் கத்தோலிக்க மதத்திற்கும் புத்த மதத்திற்கும் இடையில் என்ன ஒற்றுமைகளைப் பார்க்கிறீர்கள்?

31. மற்ற மதங்கள் மத்தியில் என்ன ஒற்றுமைகளைப் பார்க்கிறீர்கள்?

32, 33. (அ) உலக மதங்கள் மத்தியில் காணப்படும் வியப்பூட்டும் ஒற்றுமைகளிலிருந்து என்ன முடிவுக்கு வரலாம்? (ஆ) என்ன கேள்விக்கு பதில் தேவை?

34. மனிதனின் ஆரம்பத்தைப் பற்றிய என்ன பழங்கதை அநேக மதங்களில் பொதுவாக காணப்படுகிறது?

35. ஆதி பொற்காலத்தைப் பற்றிய பண்டைய சொராஸ்டிரிய மதத்தவரின் நம்பிக்கையை விளக்கவும்.

36. ‘பொற்காலத்தை’ கிரேக்க கவி ஹெஸியாடு எவ்வாறு விவரித்தார்?

37. சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்த ‘பரதீஸ்’ பற்றிய பண்டைய சீன பழங்கதையை விவரியுங்கள்.

38. மனிதனின் ஆரம்பத்தைப் பற்றிய ஒரேவிதமான பழங்கதைகளிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்?

39. மனிதனின் ஆரம்பத்தைப் பற்றிய அநேக பழங்கதைகளில் பொதுவாக காணப்படும் அம்சங்களிலிருந்து என்ன ஒரு காட்சியை பெறலாம்?

40. மதங்கள் தோன்றிய விதத்தைப் பற்றிய பழங்கதைகளோடு பைபிளின் தொடர்பினை விளக்கவும்.

41. இந்தப் புத்தகத்தின் பின்வரும் அதிகாரங்களை வாசிக்கையில் நீங்கள் எவற்றை மனதிற்கொள்ள வேண்டும்?

[பக்கம் 23-ன் சிறு குறிப்பு]

அறிவியல் ஆராய்ச்சியும் பரிணாமக் கோட்பாடும் தோன்றியபோது அநேகர் மதத்தைப் பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்தனர்

[பக்கம் 34-ன் சிறு குறிப்பு]

ஒவ்வொரு மதமும் அதன் அடிப்படை நம்பிக்கைகளை பொதுவான ஒரே ஊற்றுமூலத்திலிருந்து பெற்றது போல தோன்றுகிறது

[பக்கம் 28-ன் பெட்டி]

மனிதன் மதப்பற்றுள்ளவனாக இருப்பது ஏன்?

மனிதனின் மதங்கள் என்ற நூலில் ஜான் பி. நாஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “மனிதன் துணையின்றி தனியாக நிற்பதில்லை, நிற்கவும் முடியாது என்பதை ஏதோவொரு வகையில் எல்லா மதங்களுமே சொல்கின்றன. இயற்கை சக்திகளோடும் சமுதாய சக்திகளோடும் அவனுக்கு முக்கிய தொடர்பு இருக்கிறது. அவற்றை அவன் சார்ந்தும் இருக்கிறான். உலகத்தோடு ஒட்டாமல் தன்னால் தனித்து இயங்க முடியாது என்பதை ஓரளவோ முழுமையாகவோ அவன் அறிந்திருக்கிறான்.”

அதேபோல், உலக மதங்கள்​—பண்டைய வரலாறு முதல் இன்று வரை புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “உயிர் தற்செயலாக தோன்றவில்லை, அது நோக்கமில்லாமலும் தோன்றவில்லை என்ற நம்பிக்கையும், அந்த நோக்கத்தை அறிவதற்கான வாஞ்சையுமே மதத்தின் முக்கிய அம்சமாக இருப்பதை மத ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுவது மனிதனைக் காட்டிலும் உயர்ந்த ஒரு சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வழிநடத்துகிறது. இறுதியில், சர்வலோக அல்லது மனிதனுக்கு அப்பாற்பட்ட நபரின் மீது நம்பிக்கை வைப்பதற்கும் வழிநடத்துகிறது; இந்த நபர், மனித வாழ்க்கைக்குத் தேவையான மிக உயர்ந்த நெறிமுறைகளை சீராக காத்துக்கொள்ளும் எண்ணமும் விருப்பமும் உடையவராக இருக்கிறார்.”

ஆகவே, உணவு நமது பசியை திருப்தி செய்வதைப் போலவே மதம் ஓர் அடிப்படை தேவையை திருப்தி செய்கிறது. பசி வெறியில் கண்டதையும் சாப்பிடுவது கடும் பசியைப் தணிக்கலாம்; ஆனால் காலப்போக்கில் அது நம்முடைய ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும். ஆரோக்கியமாக வாழ உடலுக்கு உகந்த சத்துள்ள உணவு தேவை. அதேவிதமாக, நம்முடைய ஆன்மீக ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ள ஆரோக்கியமான ஆன்மீக உணவு நமக்கு தேவை. அதன் காரணமாகவே பைபிள் நமக்கு இவ்வாறு சொல்கிறது: “மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.”​—உபாகமம் 8:3.

[பக்கம் 39-ன் வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

மனித இனம் மெசபடோமியாவிலிருந்து சிதறிச் சென்றபோது அவர்களுடைய மத கருத்துகளும் நினைவுகளும் அவர்களோடுகூட சென்றன

பாபிலோன்

லிடியா

சீரியா

எகிப்து

அசீரியா

மேதியா

ஏலாம்

பெர்சியா

[பக்கம் 21-ன் படங்கள்]

புத்தர், கன்பூசியஸ், லூத்தர் போன்றவர்கள் ஏற்கெனவே இருந்த மதங்களைத்தான் மாற்றி அமைத்தனர்; புதிதாய் தோற்றுவிக்கவில்லை

[பக்கம் 25-ன் படங்கள்]

தந்தை என்ற ஒருவர் மீதுள்ள பயத்திலிருந்தே மதம் தோன்றியது என ஆஸ்திரியாவைச் சேர்ந்த உளவியல் பகுப்பாய்வாளர் சிக்மண்ட் ஃபிராய்ட் சொன்னார்

[பக்கம் 27-ன் படம்]

பூமியே இப்பிரபஞ்சத்தின் மையம் என எண்ணி வந்ததால் கோள்களின் இயக்கங்கள் பற்றி தவறான முடிவுகள் எடுக்கப்பட்டன

[பக்கம் 33-ன் குறிப்பு]

புத்த மதமும், ரோமன் கத்தோலிக்க மதமும்​—அநேக காரியங்களில் பொதுவாய் இருப்பது ஏன்?

சீனாவின் புத்தமத கருணை தேவதை, குழந்தையுடன்

கத்தோலிக்க மடோனா, குழந்தை இயேசுவுடன்

திபெத்திய புத்த மதத்தவர், பிரார்த்தனை சக்கரத்துடனும் ஜெபமாலையுடனும்

கத்தோலிக்கர், ஜெபமாலையுடன்

[பக்கம் 36-ன் படம்]

பண்டைய காலங்களில் ஹூவாங்-டியின் (எல்லோ எம்பரர்) ஆட்சி காலம் ஒரு பொற்காலமாய் இருந்ததென சீன பழங்கதைகள் சொல்கின்றன