Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மெய்க் கடவுளும் உங்கள் எதிர்காலமும்

மெய்க் கடவுளும் உங்கள் எதிர்காலமும்

அதிகாரம் 16

மெய்க் கடவுளும் உங்கள் எதிர்காலமும்

“புரியாப் புதிர்கள் பல நிறைந்த இப்பிரபஞ்சத்தில் மனிதன் ஒரு விஷயத்தைக் குறித்து நிச்சயமாக இருக்கலாம். அதாவது இப்பிரபஞ்சத்தில் ஆன்மீக உணர்வைப் பெற்றிருப்பதில் உயர்ந்தவன் மனிதன் மட்டுமே அல்ல. . . . மனிதனைவிட பன்மடங்கு உயர்ந்த ஓர் ஆன்மீக சக்தி இப்பிரபஞ்சத்தில் இருக்கிறது. . . . பிரமிக்கத்தக்க இந்த ஆன்மீக சக்தியாக விளங்கும் மெய்ப் பரம்பொருளுடன் ஐக்கியமாவதே மனிதனின் இலட்சியம்.”​—மதத்தைப் பற்றிய ஒரு சரித்திராசிரியரின் நோக்கு (ஆங்கிலம்), ஆர்னால்ட் டாயன்பீ எழுதியது.

கடந்த ஆறாயிரம் வருட காலத்தின் பெரும் பகுதியை அந்தப் ‘மெய்ப் பரம்பொருளைத்’ தேடுவதில் மனிதன் செலவிட்டிருக்கிறான்; சில நேரங்களில் அதிக ஆர்வத்துடனும் சில நேரங்களில் சற்று குறைந்த ஆர்வத்துடனும் தேடியிருக்கிறான். ஒவ்வொரு முக்கிய மதத்திலும் அந்தப் பரம்பொருளுக்கு வித்தியாசமான பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்து மதம், இஸ்லாம் மதம், புத்த மதம், ஷின்டோ மதம், கன்பூசிய மதம், தாவோ மதம், யூத மதம், கிறிஸ்தவ மதம் போன்றவற்றில் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அந்த ‘மெய்ப் பரம்பொருளை’ ஒரு பெயரால் நீங்கள் அழைக்கிறீர்கள். ஆனால் பைபிள் இந்தப் பரம்பொருளுடைய பெயர், ஆள்தன்மை ஆகிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது. ஆம், ஜீவனுள்ள கடவுளாகிய யெகோவா தேவனே அந்தப் பரம்பொருள் என அடையாளம் காட்டுகிறது. ஈடிணையற்ற அந்தக் கடவுள் பெர்சியாவின் மகா கோரேசுவிடம் இவ்வாறு சொன்னார்: ‘நானே யெகோவா, வேறொருவர் இல்லை; என்னைத் தவிர தேவன் இல்லை. நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்.’​—ஏசாயா 45:5, 12, 18; சங்கீதம் 68:19, 20.

யெகோவா​—நம்பகமான தீர்க்கதரிசனங்களின் கடவுள்

2கடவுளுக்கான தேடல் இறுதியில் நம்மை மெய்க் கடவுளாகிய யெகோவாவிடத்தில் கொண்டு சேர்க்கிறது. ஆதிமுதல் அந்தம்வரை அனைத்தையும் சொல்லக்கூடிய தீர்க்கதரிசன கடவுளாக யெகோவா தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். ஏசாயா என்ற தீர்க்கதரிசியின் வாயிலாக அவர் இவ்வாறு சொன்னார்: “முந்திப் பூர்வ காலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகால முதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் . . . அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம் பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்.”​—ஏசாயா 46:9-11; 55:10, 11.

3நம்பகமான தீர்க்கதரிசனங்களை உரைக்கும் இப்பேர்ப்பட்ட கடவுள் நமக்கு இருப்பதால், பிரிவினைகள் நிறைந்த உலக மத அமைப்புகளுக்கு என்ன நேரிடப் போகிறது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அதோடு, உலகின் எதிர்காலமே தங்கள் கைகளில் இருப்பது போல தோன்ற வைக்கும் வலிமையான அரசியல் அமைப்புகளுக்கு என்ன நேரிடும் என்பதையும் நாம் முன்னரே அறிந்துகொள்ள முடியும். பல்வேறு மதங்களைப் பயன்படுத்தி, மனிதவர்க்கத்தை மெய்க் கடவுளான யெகோவாவிடமிருந்து தூர விலக்கி, ‘அவிசுவாசிகளின் மனதைக் குருடாக்கியிருக்கிற’ “இப்பிரபஞ்சத்தின் தேவனான” சாத்தானுக்கு என்ன முடிவு காத்திருக்கிறது என்பதையும் நாம் முன்னரே அறிந்துகொள்ள முடியும். சாத்தான் ஏன் மக்களின் மனதைக் குருடாக்கி வந்திருக்கிறான்? “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு” அவன் அப்படி செய்திருக்கிறான்.​—2 கொரிந்தியர் 4:3, 4; 1 யோவான் 5:19.

4முன்னறிவிக்கப்பட்டுள்ள இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு மேலும் என்னென்ன சம்பவங்கள் நடக்கப் போகின்றன என்பதையும் நாம் தெரிந்துகொள்ள முடியும். இந்தப் பூமியின் நிலைமை இறுதியில் எப்படி இருக்கும்? மாசடைந்திருக்குமா? நாசமாக்கப்பட்டிருக்குமா? காடுகளெல்லாம் அழிக்கப்பட்டிருக்குமா? அல்லது பூமியும் மனித இனமும் புதுப்பொலிவு அடைந்திருக்குமா? இந்த எல்லா கேள்விகளுக்கும் பைபிள் பதில் தருகிறது; அதை பிறகு பார்க்கப் போகிறோம். ஆனால் சமீப எதிர்காலத்தில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப் போகின்றன என்பதை இப்போது சிந்திப்போம்.

“மகா பாபிலோன்” அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது

5பைபிள் புத்தகமான வெளிப்படுத்துதலில் உள்ள விஷயங்கள் பொ.ச. 96-ம் ஆண்டில் பத்மு தீவிலிருந்த அப்போஸ்தலன் யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்டன. கடைசி காலத்தில் நிகழப்போகும் முக்கிய சம்பவங்களை அது தரிசனங்களில் தத்ரூபமாக காட்டுகிறது. பைபிள் அத்தாட்சியின்படி, இந்தக் கடைசி காலம் 1914-ல் ஆரம்பமானது. a அடையாள அர்த்தமுடைய அந்தத் தரிசனங்களில் பகட்டான, படுமோசமான ஒரு வேசியை யோவான் கண்டார்; “மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய்” என அந்த வேசி விவரிக்கப்படுகிறாள். அவள் எந்த நிலைமையில் இருப்பதாக அவர் கண்டார்? “அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்” என அவர் சொன்னார்​—வெளிப்படுத்துதல் 17:5, 6.

6இந்த ஸ்திரீ யாருக்கு படமாக இருக்கிறாள்? இவள் யார் என்பதை நாம் ஊகிக்க வேண்டிய அவசியமே இல்லை. இவள் யாராக இருக்கலாம் என்ற பட்டியலில் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பொருந்தாதவற்றை கழித்துவிட்டு கடைசியில் உண்மையை கண்டுபிடிக்க முடியும். அதே தரிசனத்தில் ஒரு தேவதூதன் பின்வருமாறு சொல்வதை யோவான் கேட்கிறார்: “நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே; அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன்.” பூமியின் ராஜாக்கள், அதாவது ஆட்சியாளர்கள் அவளோடே வேசித்தனம் பண்ணுகிறார்களென்றால் அந்த வேசி உலகிலுள்ள அரசியல் அமைப்புகளுக்குப் படமாக இருக்க முடியாது.​—வெளிப்படுத்துதல் 17:1, 2, 18.

7“பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள்” என்று அதே பதிவு நமக்கு சொல்கிறது. ஆகவே மகா பாபிலோன் என்பது உலகிலுள்ள “வர்த்தக,” அதாவது வியாபார அமைப்புகளுக்குப் படமாக இருக்க முடியாது. ஆனால் ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட வசனம் இவ்வாறு சொல்கிறது: “அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.” அப்படியென்றால் அரசியல் ஆட்சியாளர்களோடு வேசித்தனம் பண்ணி, வியாபாரிகளோடு கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு, ஜனங்கள், கூட்டங்கள், ஜாதிகள், பாஷைக்காரர் ஆகியோர் மீது அகந்தையுடன் அமர்ந்திருக்கும் இந்த விவரிப்புக்குப் பொருத்தமாக இந்த உலகில் இன்னும் மீதமாக விடப்பட்டுள்ள முக்கிய அமைப்பு எது? பல்வகை தோற்றங்களை உடைய பொய் மதமே!​—வெளிப்படுத்துதல் 17:15; 18:2, 3.

8அவளுடைய “சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம் போனார்களே” என்று மகா பாபிலோனை தேவதூதன் கண்டனம் செய்வதிலிருந்து அவள் யார் என்பது ஊர்ஜிதமாகிறது. (வெளிப்படுத்துதல் 18:23) எல்லா வகை சூனியமும் மதம் சம்பந்தப்பட்டது, பிசாசினால் தோற்றுவிக்கப்பட்டது. (உபாகமம் 18:10-12) ஆகவே மகா பாபிலோன் மதம் சம்பந்தப்பட்ட ஒன்றையே குறிக்க வேண்டும். அது சாத்தானின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பொய் மத உலகப் பேரரசு முழுவதையும் குறிக்கிறது என்பதை பைபிள் அத்தாட்சி காட்டுகிறது. மெய்க் கடவுளான யெகோவாவிடமிருந்து ஜனங்களை திசைதிருப்ப வேண்டும் என்பதற்காகவே சாத்தான் பொய் மதத்தை மனிதர் மத்தியில் பரப்பிவிடுகிறான்.​—யோவான் 8:44-47; 2 கொரிந்தியர் 11:13-15; வெளிப்படுத்துதல் 21:8; 22:15.

9சிக்கலான ஒரு தையல் வேலைப்பாடு போல பின்னிப் பிணைந்திருக்கும் உலக மதங்கள் அனைத்திலும் பொதுவான சில நூலிழைகள் ஓடுவதை இப்புத்தகம் பூராவும் நாம் கண்டோம். அநேக மதங்கள் புராணவியலின் அடிப்படையில் அமைந்தவை. மனித ஆத்துமா அழியாதது, மரணத்துக்குப் பின் அது தொடர்ந்து வாழ்கிறது, மறுமைக்குச் செல்கிறது அல்லது வேறொரு உயிரினத்திற்குள் புகுந்துவிடுகிறது போன்ற போதனைகளில் ஏறக்குறைய எல்லா மதங்களுமே ஏதாவதொரு விதத்தில் நம்பிக்கை வைப்பதால் அவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. வேதனையும் வாதனையும் நிறைந்த நரகம் என்ற பயங்கரமான ஓர் இடம் இருப்பதாக பல மதங்கள் நம்புகின்றன. வேறு சில மதங்களோ முக்கடவுட்கள், திரித்துவங்கள், தெய்வத் தாய்கள் போன்ற பழங்கால புறமத நம்பிக்கைகளோடு பிணைக்கப்பட்டுள்ளன. ஆகவே இவை அனைத்தையும் கூட்டாக சேர்த்து வேசியான “மகா பாபிலோன்” என்று அடையாளப்படுத்துவது பொருத்தமானதே.​—வெளிப்படுத்துதல் 17:5.

பொய் மதத்தைவிட்டு ஓடிவர இதுவே நேரம்

10உலகம் முழுவதுமுள்ள இந்த வேசிக்கு வரும் முடிவைப் பற்றி பைபிள் என்ன முன்னறிவிக்கிறது? அரசியல் அமைப்புகளின் கையில்தான் அவளுக்கு அழிவு என வெளிப்படுத்துதல் புத்தகம் அடையாள பாஷையில் விவரிக்கிறது. இந்த அரசியல் அமைப்புகள் ‘பத்து கொம்புகளால்’ அடையாளப்படுத்தப்படுகின்றன. இவை ‘சிவப்பு நிறமுள்ள மிருகமாக’ சித்தரித்து காட்டப்படும் ஐக்கிய நாட்டு சபையை ஆதரிக்கின்றன; இந்தச் சபை, சாத்தானின் இரத்தக் கறைபடிந்த அரசியல் அமைப்பின் சொரூபமாக இருக்கிறது.​—வெளிப்படுத்துதல் 16:2; 17:3-16. b

11சாத்தானுடைய பொய் மத உலகப் பேரரசுக்கு கடவுள் கடுமையான நியாயத்தீர்ப்பு வழங்கியிருப்பதால் சீக்கிரத்தில் அதன் மதங்களெல்லாம் அழிக்கப்படும். மக்களை ஒடுக்கும் அரசியல் அமைப்புகளுடன் இந்த மதங்கள் ‘கள்ளத்தொடர்பு’ வைத்துக்கொண்டு அவற்றிற்கு உடந்தையாக இருந்த காரணத்திற்காக இவை ஆன்மீக வேசித்தனம் செய்த குற்றமுள்ளவையாக இருக்கின்றன. போர்களின்போது பொய் மதம் ஒவ்வொரு தேசத்திலுமுள்ள அரசியல் அதிகாரங்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு தேசப்பற்றை காண்பித்திருப்பதால் அதன் வஸ்திரத்தில் குற்றமற்றவர்களின் இரத்தக்கறை படிந்துள்ளது. எனவே, மகா பாபிலோனுக்கு எதிராக யெகோவா நடவடிக்கை எடுத்து அதை அழிப்பதற்கான தமது யோசனையை நிறைவேற்ற அரசியல் அமைப்பினரின் இருதயங்களை ஏவி விடுகிறார்.​—வெளிப்படுத்துதல் 17:16-18.

12இதுவே உலக மதங்களின் எதிர்காலம் என்பதால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? வானத்திலிருந்து யோவான் கேட்ட சத்தத்தில் பதில் இருக்கிறது: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள். அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்.” ஆகையால், சாத்தானின் பொய் மதப் பேரரசிலிருந்து வெளியே வரும்படி சொன்ன தேவதூதனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து யெகோவாவின் உண்மை வணக்கத்தில் சேர்ந்துகொள்வதற்கு தக்க தருணம் இதுவே. (பக்கம் 377-ல் உள்ள பெட்டியைக் காண்க.)​வெளிப்படுத்துதல் 17:17; 18:4, 5; ஒப்பிடுக: எரேமியா 2:34; 51:12, 13.

அர்மகெதோன் அருகில்

13“அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்” என வெளிப்படுத்துதல் புத்தகம் கூறுகிறது. எல்லா பைபிள் தீர்க்கதரிசனங்களும் குறிப்பிட்டு காட்டுகிறபடி, ‘ஒரே நாளில்,’ அதாவது சடுதியில் தண்டனை நிறைவேற்றப்படவிருக்கிறது, ஆம், வெகு விரைவில்! சொல்லப்போனால், மகா பாபிலோனின் அழிவு ‘மிகுந்த உபத்திரவத்தை’ ஆரம்பித்து வைக்கும்; பிறகு இந்த மிகுந்த உபத்திரவம் ‘சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தத்தில்,’ அதாவது ‘அர்மகெதோனில்’ உச்சக்கட்டத்தை எட்டும். அந்த அர்மகெதோன் யுத்தத்தில் சாத்தானுடைய அரசியல் அமைப்புகள் படுதோல்வியுறும், கடைசியாக சாத்தானே அபிஸிற்குள் தள்ளப்படுவான். அதன் பின்பு, நீதியுள்ள ஒரு புதிய உலகம் உதயமாகும்!​—வெளிப்படுத்துதல் 16:14-16; 18:7, 8; 21:1-4; மத்தேயு 24:20-22.

14முக்கியமான மற்றொரு பைபிள் தீர்க்கதரிசனம் நம் கண் முன்னால் நிறைவேறப் போகிறது. அதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் தீர்க்கதரிசனம் உரைத்து இவ்வாறு எச்சரித்தார்: “சகோதரரே, இவைகள் நடக்குங் காலங்களையும் சமயங்களையுங் குறித்து உங்களுக்கு எழுத வேண்டுவதில்லை. இரவிலே திருடன் வருகிற விதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறது போல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.”​—1 தெசலோனிக்கேயர் 5:1-3.

15ஒன்றுக்கொன்று பகைத்துக்கொண்டும் சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டும் இருக்கிற நாடுகள், உலகளாவிய சமாதானமும் பாதுகாப்பும் அடைந்துவிட்டோம் என அறிவிப்பு செய்யும் சூழ்நிலையை நோக்கி கவனமாக செல்வதுபோல் தோன்றுகிறது. ஆகவே, பொய் மதத்தின் மீதும் நாடுகள் மீதும் அவற்றின் ஆட்சியாளனாகிய சாத்தானின் மீதும் யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாள் வெகு சீக்கிரத்தில் வரப்போவதை இந்தக் கோணத்திலிருந்தும் நாம் அறிந்து கொள்கிறோம்.​—செப்பனியா 2:3; 3:8, 9; வெளிப்படுத்துதல் 20:1-3.

16ஏதோ பொருட்செல்வங்கள்தான் நிலையானவை, பிரயோஜனமானவை என்பது போல இன்று கோடிக்கணக்கானோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சீர்கெட்ட இவ்வுலகம் அள்ளித் தருகிற அத்தனையும் அற்பமானவை, அழியக்கூடியவை. ஆகவேதான் யோவான் கூறும் ஆலோசனை மிகவும் பொருத்தமாக உள்ளது: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” என்றென்றும் வாழ்வதைத் தானே நீங்கள் விரும்புவீர்கள்?​—1 யோவான் 2:15-17.

வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ள புதிய உலகம்

17கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் இந்த உலகை நியாயந்தீர்த்த பிறகு என்ன நடக்கும்? மனிதரைக் குறித்த தமது ஆதி நோக்கத்தை​—பரதீஸான பூமியில் கீழ்ப்படிதலுள்ள மனித குடும்பம் பரிபூரண வாழ்க்கையை அனுபவித்து மகிழ வேண்டுமென்ற ஆதி நோக்கத்தை​—நிறைவேற்றப் போவதாக கடவுள் வெகு காலத்திற்கு முன்னரே எபிரெய வேதாகமத்தில் முன்னுரைத்திருந்தார். அந்த நோக்கத்தை முறியடிக்க சாத்தான் முயற்சி செய்தபோதிலும், கடவுளுடைய வாக்குறுதியை குலைத்துப்போட அவனால் முடியவில்லை. இதனால் தாவீது ராஜா இவ்வாறு எழுதினார்: ‘பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். இன்னுங் கொஞ்ச நேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.’​—சங்கீதம் 37:9-11, 29; யோவான் 5:21-30.

18அதற்குப் பின்பு பூமியின் நிலைமை எப்படி இருக்கும்? முழுவதும் மாசுற்றிருக்குமா? எரிந்து சாம்பலாகியிருக்குமா? காடுகளே இல்லாமல் அழிந்திருக்குமா? நிச்சயமாகவே இல்லை! பூமி சுத்தமாக, சமநிலையுடன், பரதீஸிய பூங்காவாக இருக்க வேண்டும் என்பதே யெகோவாவின் ஆதி நோக்கம். மனிதன் இந்தப் பூமியை துஷ்பிரயோகம் செய்திருக்கிறபோதிலும் அது மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்பும், அத்தகைய ஆற்றல் இப்பூமிக்கு இருக்கிறது. ஆனால் ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கப்’ போவதாக யெகோவா வாக்குறுதி அளித்திருக்கிறார். உலகளாவிய விதத்தில் பூமி கெடுக்கப்பட்டிருப்பதை 20 மற்றும் 21-ம் நூற்றாண்டில்தான் காண முடிந்திருக்கிறது. அப்படியென்றால், தமது படைப்பை, ஆம், தமது சொத்தைப் பாதுகாக்க யெகோவா விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று நாம் நிச்சயமாக நம்பலாம்.​—வெளிப்படுத்துதல் 11:18; ஆதியாகமம் 1:27, 28.

19கடவுளுடைய ஏற்பாடான ‘புதிய வானம் புதிய பூமியில்’ இந்த மாற்றம் சீக்கிரத்தில் நிகழும். ஒரு புதிய வானமும் ஒரு புதிய கோளமும் உருவாகும் என்பதை இது அர்த்தப்படுத்தாது, ஆனால் புதுப்பிக்கப்பட்ட மனித சமுதாயத்தினர் குடியிருக்கப் போகும் இந்தப் பூமியின் மீது ஒரு புதிய தெய்வீக ஆட்சி இருக்கும் என்பதையே இது அர்த்தப்படுத்தும். அந்தப் புதிய உலகில் மனிதர்களோ விலங்குகளோ துஷ்பிரயோகம் செய்யப்பட மாட்டா(ர்கள்). வன்முறையும் இரத்தம் சிந்துதலும் இருக்காது. வீடுவாசல் இல்லாத நிலை இருக்காது, வறுமையும் ஒடுக்குதலும்கூட இருக்காது.​—வெளிப்படுத்துதல் 21:1; 2 பேதுரு 3:13.

20கடவுளுடைய வார்த்தை இவ்வாறு சொல்கிறது: ‘வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப் போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள். . . . ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப் போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்கு செய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று யெகோவா சொல்லுகிறார்.’​—ஏசாயா 65:17-25.

புதிய உலகத்தின் அஸ்திவாரம்

21‘இதெல்லாம் எங்கே நடக்கப்போகுது?’ என நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். ஆனால் இவை நிச்சயமாய் நடக்கும், ஏனென்றால் மனிதர்கள் ஆதியிலிருந்த பரிபூரண நிலைமைக்கு மீண்டும் கொண்டு வரப்படுவார்கள், அவர்கள் நித்திய வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வார்கள் என “பொய்யுரையாத தேவன் ஆதிகால முதல்” வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். இந்த நம்பிக்கைக்கான ஆதாரத்தை அபிஷேகம் செய்யப்பட்ட சக கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு எழுதிய முதல் கடிதத்தில் குறிப்பிட்டார்: ‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவர், இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.’​—தீத்து 1:1, 3; 1 பேதுரு 1:3, 4.

22நீதியுள்ள புதிய உலகம் வருமென்ற நம்பிக்கைக்கு இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஆதாரமாக விளங்குகிறது; ஏனென்றால் புதுப்பிக்கப்பட்ட பூமியை பரலோகங்களிலிருந்து ஆட்சி செய்வதற்குக் கடவுளால் நியமிக்கப்பட்டிருப்பவர் அவரே. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் எவ்வளவு முக்கியம் என்பதை பவுலும் வலியுறுத்தி இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது போல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.”​—1 கொரிந்தியர் 15:20-22.

23ராஜ்ய ஆட்சி என்ற ‘புதிய வானத்திலும்’ புதிய மனித சமுதாயம் என்ற ‘புதிய பூமியிலும்’ நம்பிக்கை வைப்பதற்கு, கிறிஸ்துவின் தியாக மரணமும் அவருடைய உயிர்த்தெழுதலும் ஆதாரமாக இருக்கின்றன. அதோடு, அவரது உண்மையுள்ள அப்போஸ்தலர்கள் செய்த பிரசங்க வேலைக்கும் கற்பிக்கும் வேலைக்கும் அவருடைய உயிர்த்தெழுதல் புதிய உத்வேகத்தை அளித்தது. பதிவு நமக்கு இவ்வாறு சொல்கிறது: “பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே [உயிர்த்தெழுப்பப்பட்ட] இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள். அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்து கொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள். அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.”​—மத்தேயு 19:28, 29; 28:16-20; 1 தீமோத்தேயு 2:6.

24இயேசுவின் உயிர்த்தெழுதல், மனிதவர்க்கம் பெறப் போகும் மற்றொரு ஆசீர்வாதத்திற்கு, அதாவது மரித்தோரின் உயிர்த்தெழுதலுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. மரணத்திலிருந்து லாசருவை இயேசு உயிர்த்தெழுப்பியது எதிர்காலத்தில் பெரிய அளவில் அவர் செய்யப்போகும் உயிர்த்தெழுதலுக்கு அச்சாரமாக இருந்தது. (பக்கங்கள் 249-50-ஐக் காண்க.) இயேசு இவ்வாறு சொல்லியிருந்தார்: “இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்; ஏனென்றால் பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.”​—யோவான் 5:28, 29; 11:39-44; அப்போஸ்தலர் 17:30, 31.

25இறந்துபோன நமது அன்பானவர்களை வரவேற்பது எத்தனை சந்தோஷத்திற்குரிய விஷயம்! ஒவ்வொரு தலைமுறையும் அவ்வாறு அடுத்தடுத்து உயிர்த்தெழுந்து வருகிறவர்களை வரவேற்பதை சற்று எண்ணிப்பாருங்கள்! அந்தப் புதிய உலகின் பரிபூரண சூழலில் மெய்க் கடவுளான யெகோவாவை வணங்கி நித்திய ஜீவனை அனுபவிப்பதா அல்லது அவரை எதிர்த்து ஜீவனை இழப்பதா என்பதை ஒவ்வொருவராலும் அப்போது தீர்மானிக்க முடியும். ஆம், புதிய உலகில் ஒரேவொரு மதம்தான் இருக்கும், அதாவது ஒரேவொரு வழிபாட்டு முறைதான் இருக்கும். எல்லா துதியும் அன்புள்ள படைப்பாளர் ஒருவருக்கே செலுத்தப்படும், கீழ்ப்படிதலுள்ள ஒவ்வொருவரும் சங்கீதக்காரனின் வார்த்தைகளை எதிரொலிப்பார்கள்: ‘ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன். . . . யெகோவா பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது.’​—சங்கீதம் 145:1-3; வெளிப்படுத்துதல் 20:7-10.

26உலகின் முக்கிய மதங்களை இப்போது நீங்கள் ஒப்பிட்டு ஆராய்ந்தீர்கள். எனவே, யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக இருக்கும் கடவுளுடைய வார்த்தையான பைபிளை இன்னும் அதிகமாய் ஆராயும்படி உங்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். மெய்க் கடவுளை நிச்சயம் கண்டுபிடிக்க முடியும் என்பதை உங்களுக்கு நீங்களே ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் இந்து மதத்தவராக, இஸ்லாம் மதத்தவராக, புத்த மதத்தவராக, ஷின்டோ மதத்தவராக, கன்பூசிய மதத்தவராக, தாவோ மதத்தவராக, யூத மதத்தவராக, கிறிஸ்தவ மதத்தவராக அல்லது வேறெந்த மதத்தவராக இருந்தாலும் சரி, உயிருள்ள மெய்க் கடவுளுடன் நீங்கள் வைத்திருக்கும் உறவைக் குறித்து ஆராய்ந்து பார்க்க இதுவே சமயம். நீங்கள் பிறந்த இடம் ஒருவேளை உங்களுடைய மதத்தை தீர்மானித்திருக்கலாம், நடந்து முடிந்ததை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மைதான். என்றாலும், கடவுளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்க்கலாமே, அப்படி செய்வதால் நீங்கள் எதையும் இழக்கப் போவதில்லை. மாறாக, இப்பூமிக்கும் அதில் வாழ்கிற மனிதகுலத்திற்கும் சர்வலோகப் பேரரசராகிய ஆண்டவர் வைத்திருக்கும் நோக்கத்தைத் தெரிந்துகொள்ள வாழ்க்கையில் உங்களுக்கு கிடைக்கும் ஒரே சந்தர்ப்பமாக அது ஒருவேளை இருக்கும். ஆம், இப்புத்தகத்தை உங்களுக்குக் கொடுத்த யெகோவாவின் தூதுவர்களான அவருடைய சாட்சிகளோடு சேர்ந்து பைபிளைப் படிப்பதன் மூலம் மெய்க் கடவுளை நீங்கள் உள்ளப்பூர்வமாய் தேடினால், நிச்சயம் அவரை கண்டடைவீர்கள்.

27“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” என இயேசு காரணமில்லாமல் சொல்லவில்லை. ஏசாயா தீர்க்கதரிசியின் செய்திக்கு செவிசாய்த்தால், மெய்க் கடவுளை தேடிக் கண்டுபிடித்தவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்: ‘யெகோவாவை கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, யெகோவாவிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.’​—மத்தேயு 7:7; ஏசாயா 55:6, 7.

28மெய்க் கடவுளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்புகொள்ள தயங்காதீர்கள். c இன்னமும் காலம் இருக்கும்போதே​—எவ்வித செலவுமின்றி​—தேவனையும் அவருடைய சித்தத்தையும் அறிந்துகொள்ள உங்களுக்கு உதவ அவர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.​—செப்பனியா 2:3.

[அடிக்குறிப்புகள்]

a கடைசி நாட்களைப் பற்றிய விவரங்களுக்கு, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தில் பக்கங்கள் 98-107-ஐக் காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டது.

b வெளிப்படுத்துதலில் உள்ள தீர்க்கதரிசனங்களை விளக்கமாக தெரிந்துகொள்வதற்கு, வெளிப்படுத்துதல்​—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தில் 33-37 அதிகாரங்களைக் காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் 1988-ல் வெளியிடப்பட்டது.

c விலாசங்களுக்கு பக்கம் 384-ஐக் காண்க.

[கேள்விகள்]

1. (முன்னுரையை சேர்த்துக்கொள்ளவும்.) (அ) மனிதனையும் பிரபஞ்சத்தையும் குறித்து சரித்திராசிரியர் ஆர்னால்ட் டாயன்பீ என்ன உணர்ந்து கொண்டார்? (ஆ) அந்த ‘மெய்ப் பரம்பொருளை’ பைபிள் எவ்வாறு அடையாளம் காட்டுகிறது?

2. எதிர்காலத்தைப் பற்றி நம்பகமான தகவலைப் பெற நாம் யாரிடம் செல்ல வேண்டும், ஏன்?

3. (அ) பைபிள் தீர்க்கதரிசனத்தின் வாயிலாக நாம் என்ன சம்பவங்களை முன்னரே அறிந்துகொள்ள முடியும்? (ஆ) அவிசுவாசிகளுக்கு சாத்தான் என்ன செய்திருக்கிறான், ஏன்?

4. பூமி மற்றும் மனிதனுடைய எதிர்காலம் சம்பந்தமாக என்ன கேள்விகள் பதிலளிக்கப்பட வேண்டும்?

5. தரிசனத்தில் யோவான் எதைக் கண்டார்?

6. மகா பாபிலோன் ஏன் உலகிலுள்ள அரசியல் அமைப்புகளுக்குப் படமாக இருக்க முடியாது?

7. (அ) மகா பாபிலோன் என்பது ஏன் வர்த்தக அமைப்புகளுக்குப் படமாக இருக்க முடியாது? (ஆ) மகா பாபிலோன் எதை பிரதிநிதித்துவம் செய்கிறது?

8. மகா பாபிலோன் யார் என்பதை வேறு என்ன உண்மைகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன?

9. அநேக மதங்களில் காணப்படும் பொதுவான நூலிழைகள் யாவை?

10. மத வேசிக்கு என்ன முடிவு முன்னுரைக்கப்பட்டுள்ளது?

11. (அ) பொய் மதத்தை கடவுள் ஏன் கண்டனம் செய்கிறார்? (ஆ) மகா பாபிலோனுக்கு என்ன சம்பவிக்கும்?

12. (அ) மகா பாபிலோன் அழிக்கப்படுகையில் நீங்கள் தப்பிப்பதற்கு இப்போது என்ன செய்ய வேண்டும்? (ஆ) என்ன போதனைகள் மெய் மதத்தை வேறுபடுத்திக் காட்டுகின்றன?

13. சீக்கிரத்தில் என்ன சம்பவங்கள் நிகழவிருக்கின்றன?

14, 15. என்ன பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேறப் போவதாக தெரிகிறது?

16. யோவான் கூறும் ஆலோசனை ஏன் இன்று மிகவும் பொருத்தமாக உள்ளது?

17. மெய்க் கடவுளைத் தேடுவோருக்கு என்ன எதிர்காலம் காத்திருக்கிறது?

18-20. இந்தப் பூமியில் என்ன மாற்றங்கள் நிகழும்?

21. புதிய உலகம் ஏன் நிச்சயமாய் வரும்?

22. புதிய உலக நம்பிக்கைக்கு எது ஆதாரமாக விளங்குகிறது, ஏன்?

23. (அ) கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஏன் மிக முக்கியம்? (ஆ) உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு தமது சீஷர்களுக்கு என்ன கட்டளை கொடுத்தார்?

24. இயேசுவின் உயிர்த்தெழுதல் வேறு என்ன ஆசீர்வாதத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது?

25. (அ) புதிய உலகில் அனைவருக்கும் என்ன வாய்ப்பு இருக்கும்? (ஆ) புதிய உலகில் எத்தகைய மதம் இருக்கும்?

26. கடவுளுடைய வார்த்தையான பைபிளை நீங்கள் ஏன் ஆராய்ந்து பார்க்க வேண்டும்?

27. (அ) இயேசு உங்களிடம் என்ன அழைப்பை விடுக்கிறார்? (ஆ) இந்தப் புத்தகத்தின் கருப்பொருளுக்கு இசைவாக ஏசாயா ஒவ்வொருவரையும் என்ன செய்யும்படி அழைக்கிறார்?

28. மெய்க் கடவுளைக் கண்டுபிடிக்க யார் உங்களுக்கு உதவ முடியும்?

[பக்கம் 377-ன் பெட்டி/படம்]

மெய் மதத்தை அடையாளம் கண்டுகொள்வது எப்படி

1. மெய் மதம் ஒரே உண்மையான கடவுளாகிய யெகோவாவை வழிபடுகிறது.​—உபாகமம் 6:4, 5; சங்கீதம் 146:5-10; மத்தேயு 22:37, 38.

2. மெய் மதம் கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுளிடம் செல்ல உதவுகிறது.​—யோவான் 17:3, 6-8; 1 தீமோத்தேயு 2:5, 6; 1 யோவான் 4:15.

3. மெய் மதம் தன்னலமற்ற அன்பை போதிக்கிறது, கடைப்பிடிக்கிறது.​—யோவான் 13:34, 35; 1 கொரிந்தியர் 13:1-8; 1 யோவான் 3:10-12.

4. மெய் மதம் உலகின் அரசியல், சண்டை சச்சரவுகள் ஆகியவற்றால் கறைபடாமல் காத்துக்கொள்கிறது. போர்க் காலங்களில் நடுநிலை வகிக்கிறது.​—யோவான் 18:36; யாக்கோபு 1:27.

5. மெய் மதம் பைபிளை கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொள்வதன் மூலம் கடவுளே சத்தியபரர் என காட்டுகிறது.​—ரோமர் 3:3, 4; 2 தீமோத்தேயு 3:16, 17; 1 தெசலோனிக்கேயர் 2:13.

6. மெய் மதம் போரையோ தனிநபரின் வன்முறையையோ ஆதரிப்பதில்லை.​—மீகா 4:2-4; ரோமர் 12:17-21; கொலோசெயர் 3:12-14.

7. மெய் மதம் இன, மொழி, குல பாகுபாடின்றி அனைவரையும் ஐக்கியப்படுத்துவதில் வெற்றி சிறக்கிறது. அது தேசப்பற்றையோ பகைமையையோ போதிப்பதில்லை, அன்பையே போதிக்கிறது.​—ஏசாயா 2:2-4; கொலோசெயர் 3:10, 11; வெளிப்படுத்துதல் 7:9, 10.

8. மெய் மதம் அன்பினால் தூண்டப்பட்டு கடவுளுக்கு சேவை செய்யும்படி சிபாரிசு செய்கிறது, தன்னல ஆதாயத்துக்காகவோ சம்பளத்துக்காகவோ அல்ல. மெய் மதம் மனிதரைக் கனப்படுத்துகிறதில்லை, கடவுளையே கனப்படுத்துகிறது.​—1 பேதுரு 5:1-4; 1 கொரிந்தியர் 9:18; மத்தேயு 23:5-12.

9. மெய் மதம் எந்தவொரு அரசியல் அமைப்பையோ சமுதாய தத்துவத்தையோ அல்ல, ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தையே மனிதனின் ஒரே நம்பிக்கையாக அறிவிக்கிறது.​—மாற்கு 13:10; அப்போஸ்தலர் 8:12; 28:23, 30, 31.

10. மெய் மதம் மனிதனுக்கும் பூமிக்குமான கடவுளுடைய நோக்கத்தைப் பற்றிய சத்தியத்தைப் போதிக்கிறது. ஆத்துமா அழியாமை, நரகத்தில் நித்திய வாதனை போன்ற மத சம்பந்தமான பொய்களை அது கற்பிப்பதில்லை. கடவுள் அன்பாகவே இருக்கிறார் என்று அது போதிக்கிறது.​—ஆதியாகமம் 17:14; ஏசாயா 45:12, 18; மத்தேயு 5:5; 1 யோவான் 4:7-11; வெளிப்படுத்துதல் 20:13, 14.

[படம்]

நெதர்லாந்தில் யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிக்கிறார்கள்

[பக்கம் 373-ன் படங்கள்]

இந்தப் பூமி பூங்காவனம் போன்ற பரதீஸாக மாறும் ஆற்றல் படைத்தது​—இதற்கு நிலையான, நீதியுள்ள உலக அரசாங்கம் ஒன்று தேவை, இதையே கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார்

[பக்கம் 374-ன் படம்]

உலகம் முழுக்க நற்செய்தியை பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் வேண்டுமென பரலோகத்திற்குத் திரும்பும் முன் இயேசு தமது சீஷர்களுக்கு கட்டளையிட்டார்

[பக்கம் 379-ன் படம்]

மரித்தோரின் உயிர்த்தெழுதல் முழு மனிதகுலத்திற்கும் சந்தோஷத்தைத் தரும்