Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யூத மதம்—வேதாகமம், பாரம்பரியம் மூலமாக கடவுளைத் தேடல்

யூத மதம்—வேதாகமம், பாரம்பரியம் மூலமாக கடவுளைத் தேடல்

அதிகாரம் 9

யூத மதம்—வேதாகமம், பாரம்பரியம் மூலமாக கடவுளைத் தேடல்

மோசே, இயேசு, மாலர், மார்க்ஸ், ஃப்ராய்ட், ஐன்ஸ்டீன்​—இவர்கள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? இவர்கள் எல்லாருமே யூதர்கள், மனித சரித்திரத்தின் மீதும் கலாச்சாரத்தின் மீதும் வித்தியாசமான வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். எனவே, யூதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பிரபலமானவர்களாக இருந்தது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதற்கு பைபிளும் அத்தாட்சி அளிக்கிறது.

2பண்டைய காலத்திலிருந்த பிற மதங்களையும் கலாச்சாரங்களையும் போல் யூத மதம் புராணக்கதையின் அடிப்படையில் அமையவில்லை, அது வரலாற்றின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. இருந்தாலும் சிலர் இப்படிக் கேட்கலாம்: 500 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட உலகில் சுமார் ஒரு கோடியே எண்பது லட்சம் பேர் மட்டும்தான் யூதர்கள், அப்படியிருக்கும்போது அவர்களுடைய மதத்தில் நாம் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்?

யூத மதத்தில் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்

3யூத மதத்தில் ஆர்வம் காட்ட வேண்டியதற்கு ஒரு காரணம் என்னவென்றால், அது வரலாற்றில் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பமானது; மேலும் மற்ற முக்கிய மதங்கள்​—பெரிய அளவிலோ சிறிய அளவிலோ​—யூத மதத்தின் வேதாகமத்திலிருந்து சில கருத்துகளை பெற்றிருக்கின்றன. (பக்கம் 220-ல் உள்ள பெட்டியைக் காண்க.) முதல் நூற்றாண்டில் வாழ்ந்த யூதராகிய இயேசு (எபிரெயுவில் யெஷூவா) ஸ்தாபித்த கிறிஸ்தவ மதம் எபிரெய வேதாகமத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. இஸ்லாமும்கூட அதிகளவில் எபிரெய வேதாகமத்திலிருந்து கருத்துகளைப் பெற்றிருப்பது குர்ஆனை வாசிக்கும் எவருக்கும் தெளிவாக தெரியவரும். (குர்ஆன், சூறா 2:49-57; 32:23, 24) எனவே நாம் யூத மதத்தை ஆராய்கையில், நூற்றுக்கணக்கான மற்ற மதங்கள் மற்றும் மதப் பிரிவுகளின் ஆரம்பங்களையும் ஆராய்பவர்களாகவே இருப்போம்.

4யூத மதத்தில் ஆர்வம் காட்ட வேண்டியதற்கு இரண்டாவது முக்கிய காரணம், உண்மையான கடவுளைத் தேடும் படலத்தில் அது முக்கியமான ஒரு பாலமாக இருக்கிறது என்பதுதான். சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே யூதர்களின் முற்பிதாவாகிய ஆபிராம் மெய்க் கடவுளை வணங்கி வந்தார் என எபிரெய வேதாகமம் குறிப்பிடுகிறது. a அப்படியானால், யூதர்கள் எப்படி தோன்றினார்கள், அவர்களுடைய மதம் எப்படி தோன்றியது? நியாயமான கேள்விகள் இவை.​—ஆதியாகமம் 17:18.

யூதர்கள் எவ்வாறு தோன்றினர்?

5பண்டைய செமிட்டிக் இனத்தவரில் எபிரெய மொழி பேசியவர்களின் வழிவந்தவர்களே யூதர்கள் என பொதுவாக சொல்லலாம். (ஆதியாகமம் 10:1, 21-32; 1 நாளாகமம் 1:17-28, 34; 2:1, 2) சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன் அவர்களுடைய முற்பிதாவாகிய ஆபிராம் சுமேரிலிருந்த கல்தேயரின் “ஊர்” என்ற செழிப்பான மாநகரத்திலிருந்து கானான் தேசத்திற்கு குடிபெயர்ந்து வந்தார். “உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைப் பங்கிட்டு கொடுப்பேன்” என கடவுள் அவரிடம் சொல்லியிருந்தார். (ஆதியாகமம் 11:31–12:7) ஆதியாகமம் 14:13-ல் ‘எபிரெயனாகிய ஆபிராம்’ என அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்; இப்பெயர் பிற்பாடு ஆபிரகாம் என மாற்றப்பட்டது. (ஆதியாகமம் 17:4-6) இவரிலிருந்தே யூத சந்ததி தோன்றியது, அதாவது இவர் மகன் ஈசாக்கு, பேரன் யாக்கோபு வழியாகவே தோன்றியது; யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்பட்டது. (ஆதியாகமம் 32:27-29) இஸ்ரவேலுக்கு 12 மகன்கள் இருந்தனர், இவர்களே 12 கோத்திரங்களின் ஸ்தாபகர்கள். இவர்களில் ஒருவர் பெயர் யூதா. இவர் பெயரிலிருந்தே ‘யூதர்’ என்ற வார்த்தை பிறந்தது.​—2 இராஜாக்கள் 16:6, JP.

6காலப்போக்கில் ‘யூதர்’ என்ற பதம் யூதாவின் சந்ததியாருக்கு மட்டுமல்ல, அனைத்து இஸ்ரவேலருக்கும் பயன்படுத்தப்பட்டது. (எஸ்தர் 3:6; 9:20) பொ.ச. 70-ல் ரோமர்கள் எருசலேமை அழித்தபோது யூதருடைய வம்சாவளி பதிவுகள் அழிக்கப்பட்டன. ஆகவே இன்று எந்தவொரு யூதனும் தான் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்பதை திட்டவட்டமாக சொல்ல முடியாது. என்றாலும், ஆயிரக்கணக்கான வருடங்களில் யூத மதம் வளர்ச்சியடைந்து மாற்றமடைந்துள்ளது. இன்று இஸ்ரேல் குடியரசில் இருப்பவர்களும் அங்கிருந்து உலகின் பல பாகங்களில் சிதறியிருப்பவர்களுமான லட்சக்கணக்கானோர் யூத மதத்தை பின்பற்றி வருகின்றனர். இந்த மதத்தின் அஸ்திவாரம் என்ன?

மோசே, நியாயப்பிரமாணம், ஒரு தேசம்

7பொ.ச.மு. 1943-ல் b ஆபிரகாமை தமது விசேஷித்த ஊழியக்காரனாக கடவுள் தேர்ந்தெடுத்தார். ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கை உண்மையில் பலி செலுத்தவில்லையென்றாலும், அவ்வாறு பலி செலுத்த முன்வந்ததன் மூலம் தன் விசுவாசத்தைக் காட்டினார்; இதன் காரணமாக கடவுள் அவருக்கு ஒரு வாக்குறுதியை ஆணையிட்டுக் கொடுத்தார். (ஆதியாகமம் 12:1-3; 22:1-14) அந்த ஆணையில் கடவுள் இவ்வாறு சொன்னார்: ‘நீ உன் புத்திரன் என்றும், உன் பிரியமான மகன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால், நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் . . . நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் [“வித்துக்குள்,” JP] பூமியிலுள்ள சகல தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என் பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் [எபிரெயுவில்: יהוה, YHWH] சொல்லுகிறார்.’ இந்த ஆணை ஆபிரகாமின் மகனிடமும் பிறகு அவருடைய பேரனிடமும் மறுபடியும் சொல்லப்பட்டது; பிறகு யூதா கோத்திரத்திற்கும் தாவீதின் வம்சாவளிக்கும் அந்த வாக்குறுதி தொடர்ந்து உறுதி செய்யப்பட்டது. தனிப்பண்புகளைக் கொண்ட ஒரே கடவுள் மனிதருடன் நேரடியாக தொடர்புகொள்கிறார் என்ற கருத்து அக்காலத்தில் ஒரு பிரத்தியேக கருத்தாக இருந்தது, அதுவே பிற்பாடு யூத மதத்தின் அஸ்திவாரமாக ஆனது.​—ஆதியாகமம் 22:15-18; 26:3-5; 28:13-15; சங்கீதம் 89:3, 4, 28, 29, 35, 36.

8ஆபிரகாமுக்குத் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி, ஒரு தேசத்தை உருவாக்குவதற்கான அஸ்திவாரத்தை கடவுள் அமைத்தார்; ஆபிரகாமின் சந்ததியாரோடு விசேஷித்த ஒரு உடன்படிக்கையை செய்வதன் மூலம் அந்த அஸ்திவாரத்தை அமைத்தார். இந்த உடன்படிக்கை கடவுளுக்கும் இஸ்ரவேலுக்கும் மத்தியஸ்தராகவும் எபிரெயரின் பெருந்தலைவராகவும் இருந்த மோசேயின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. மோசே என்பவர் யார், யூதர்களுக்கு ஏன் அவர் முக்கியமானவர்? இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைகளாயிருந்த காலத்தில் ஓர் இஸ்ரவேல் தம்பதியருக்கு எகிப்தில் பிறந்தவர்தான் (பொ.ச.மு. 1593) மோசே என பைபிளிலுள்ள யாத்திராகமம் என்ற பதிவு நமக்கு சொல்கிறது. இவரைத்தான் ‘கர்த்தர் தனிப்பட்ட முறையில்’ தேர்ந்தெடுத்து, தமது ஜனங்களை வாக்குப்பண்ணப்பட்ட தேசமான கானானுக்கு வழிநடத்திச் செல்ல உபயோகித்தார். (உபாகமம் 6:23; 34:10) இஸ்ரவேலருக்கு கடவுள் கொடுத்த நியாயப்பிரமாண உடன்படிக்கையின் மத்தியஸ்தர் என்ற முக்கிய பங்கை மோசே வகித்தார். அதோடு, அவர்களுக்கு தீர்க்கதரிசியாகவும் நியாயாதிபதியாகவும் தலைவராகவும் வரலாற்றாசிரியராகவும் விளங்கினார்.​—யாத்திராகமம் 2:1–3:22.

9இஸ்ரவேலர் ஏற்றுக்கொண்ட நியாயப்பிரமாணத்தில் பத்து கட்டளைகளும் 600-க்கும் மேற்பட்ட சட்டங்களும் இருந்தன. இது அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கு உதவும் அறிவுரைகளும் வழிநடத்துதலும் அடங்கிய விரிவான தொகுப்பாகும். (பக்கம் 211-ல் உள்ள பெட்டியைக் காண்க.) அன்றாட விஷயங்களும் ஆவிக்குரிய விஷயங்களும், சரீரப்பிரகாரமாயும் ஒழுக்கப்பிரகாரமாயும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்களும் கடவுளை வழிபடும் முறையும் அதில் கொடுக்கப்பட்டிருந்தன.

10இந்த நியாயப்பிரமாண உடன்படிக்கை, அதாவது மத சட்டமைப்பு, கோத்திர பிதாக்களின் விசுவாசத்துக்கு அடிப்படையும் ஆதாரமுமாக இருந்தது. இதன் விளைவாக, ஆபிரகாமின் சந்ததியார் கடவுளின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஜனமாக ஆனார்கள். இவ்வாறு யூத மதம் உறுதியாக ஸ்தாபிக்கப்பட்ட மதமானது; கடவுளை வணங்குவதற்கும் அவரை சேவிப்பதற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தேசமாகவும் யூதர்கள் ஆனார்கள். யாத்திராகமம் 19:5, 6-ல் கடவுள் அவர்களுக்கு இவ்வாறு வாக்குறுதி அளித்தார்: “நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், . .  நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த தேசமுமாய் இருப்பீர்கள்.” ஆகவே இஸ்ரவேலர் கடவுளுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ‘தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாக’ ஆவார்கள். ஆனால் இந்த உடன்படிக்கையின் வாக்குறுதிகள் நிறைவேறுவது நிபந்தனைக்கு உட்பட்டிருந்தது, ஆகவேதான் ‘நீங்கள் கைக்கொள்வீர்களானால்’ என சொல்லப்பட்டது. ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்த அந்த தேசம் அச்சமயத்தில் அதன் கடவுளுக்குக் கடமைப்பட்டிருந்தது. எனவேதான் பிற்காலத்தில் (பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில்) யூதர்களிடம் கடவுள் இவ்வாறு சொன்னார்: ‘“நீங்கள் என் சாட்சிகள்” என்கிறார் ஆண்டவர் [எபிரெயு, יהוה, YHWH]; நான் தேர்ந்தெடுத்த என் ஊழியன்.’​—ஏசாயா 43:10, 12, பொது மொழிபெயர்ப்பு.

ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள், ராஜாக்கள் கொண்ட ஒரு தேசம்

11வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு வனாந்தரம் வழியாக இஸ்ரவேலர் சென்று கொண்டிருந்த காலப்பகுதியின்போது, ஆசாரியத்துவம் என்ற ஒன்று ஏற்படுத்தப்பட்டது, மோசேயின் சகோதரனான ஆரோனின் வம்சத்தில் அது ஏற்படுத்தப்பட்டது. தூக்கிச் செல்ல முடிந்த ஒரு பெரிய கூடாரத்தை, அதாவது ஆசரிப்புக் கூடாரத்தை இஸ்ரவேலர் அமைத்தனர்; அது வழிபாட்டிற்கும் பலி செலுத்துவதற்குமுரிய மையமாக விளங்கியது. (யாத்திராகமம், அதிகாரங்கள் 26-28) காலப்போக்கில், வாக்குப்பண்ணப்பட்ட தேசமான கானானுக்கு இஸ்ரவேலர் வந்து சேர்ந்தார்கள், கடவுள் கட்டளையிட்டிருந்தபடியே அதை கைப்பற்றினார்கள். (யோசுவா 1:2-6) இறுதியில் பூமிக்குரிய ஓர் அரசாட்சி ஸ்தாபிக்கப்பட்டது, பொ.ச.மு. 1077-ல் யூதா கோத்திரத்தில் தோன்றிய தாவீது, ராஜாவாக முடிசூட்டப்பட்டார். அவருடைய ஆட்சியில் எருசலேம் புதிதான தேசிய மையமாக விளங்கியது, இங்கே ராஜரீகமும் ஆசாரியத்துவமும் உறுதியாக நிலைநாட்டப்பட்டன.​—1 சாமுவேல் 8:7.

12தாவீதின் மரணத்துக்குப் பின் அவருடைய மகன் சாலொமோன் எருசலேமில் பிரமாண்டமான ஓர் ஆலயத்தைக் கட்டினார்; இது ஆசரிப்புக் கூடாரத்திற்கு மாற்றீடாக அமைந்தது. அரசாட்சி தாவீதின் பரம்பரையில் மாத்திரமே என்றென்றும் நிலைத்திருக்கும் என கடவுள் அவரோடு உடன்படிக்கை செய்திருந்தார்; ஆகவே, அபிஷேகம் செய்யப்பட்ட அரசரான மேசியா ஒருநாள் அவருடைய வம்சாவளியில் தோன்றுவார் என புரிந்துகொள்ளப்பட்டது. இந்த மேசியானிய ராஜா, அதாவது “வித்து”வின் மூலம் இஸ்ரவேல் தேசத்தாரும் மற்றெல்லா தேசத்தாரும் பரிபூரணமான ஆட்சியை அனுபவித்து மகிழுவர் என்பதை தீர்க்கதரிசனம் சுட்டிக்காட்டியது. (ஆதியாகமம் 22:18, JP) யூத மதத்தின் இந்த மேசியானிய நம்பிக்கை வேர்கொள்ள ஆரம்பித்ததோடு, தெள்ளத் தெளிவாகவும் ஆனது.​—2 சாமுவேல் 7:8-16; சங்கீதம் 72:1-20; ஏசாயா 11:1-10; சகரியா 9:9, 10.

13ஆனால் காலப்போக்கில், கானானியரின் பொய் மதமும் அவர்களைச் சுற்றியிருந்த தேசத்தாரின் பொய் மதங்களும் தங்கள் மீது செல்வாக்கு செலுத்தும்படி யூதர்கள் அனுமதித்தனர். இதன் காரணமாக, கடவுளோடு செய்திருந்த உடன்படிக்கை உறவை அவர்கள் மீறினர். அவர்களைத் திருத்துவதற்கும் தம்மிடம் திருப்புவதற்கும் யெகோவா தொடர்ந்து பல தீர்க்கதரிசிகளை அனுப்பினார்; அந்தத் தீர்க்கதரிசிகள் யெகோவாவின் செய்தியை ஜனங்களிடம் அறிவித்தனர். இதனால், யூதர்களின் மதத்தில் தீர்க்கதரிசனம் மற்றொரு விசேஷித்த அம்சமாக ஆனது, எபிரெய வேதாகமத்தின் பெரும் பகுதியாகவும் ஆனது. சொல்லப்போனால், எபிரெய வேதாகமத்தில் 18 புத்தகங்கள் தீர்க்கதரிசிகளின் பெயர்களில் உள்ளன.​—ஏசாயா 1:4-17.

14ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் ஆகியோர் இத்தகைய தீர்க்கதரிசிகளில் குறிப்பிடத்தக்கவர்கள். இஸ்ரவேலர் விக்கிரக வழிபாட்டில் ஈடுபட்டதால் அவர்களுக்கு யெகோவா கொடுக்கவிருந்த தண்டனையைக் குறித்து இந்த எல்லா தீர்க்கதரிசிகளும் எச்சரித்தனர். விசுவாசதுரோகம் செய்ததால் பொ.ச.மு. 607-ல் இஸ்ரவேலர் தண்டிக்கப்பட்டனர்; எருசலேமையும் அதன் ஆலயத்தையும் அழித்து அவர்களை சிறைக்கைதிகளாக கொண்டு செல்வதற்கு அப்போது உலக வல்லரசாக திகழ்ந்த பாபிலோனை யெகோவா அனுமதித்தார். தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தபடியே நடந்தது. இஸ்ரவேலர் பொ.ச.மு. ஆறாவது நூற்றாண்டின் பெரும் பகுதியை 70 வருட சிறையிருப்பில் கழித்தனர்; இதற்கு வரலாற்றுப் பதிவும் உள்ளது.​—2 நாளாகமம் 36:20, 21; எரேமியா 25:11, 12; தானியேல் 9:2.

15பொ.ச.மு. 539-ல் பெர்சியனாகிய கோரேசு பாபிலோனை கைப்பற்றினார்; அதோடு, யூதர்கள் தாயகம் திரும்பி எருசலேம் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்கு அனுமதியும் வழங்கினார். யூதர்களில் சிலர் அதற்கேற்ப செயல்பட்டபோதிலும், அவர்களில் பெரும்பான்மையினர் பாபிலோனிய சமுதாயத்தின் செல்வாக்குப் பிடியிலேயே இருந்துவிட்டனர். பிறகு பெர்சிய கலாச்சாரம் அவர்கள் மீது செல்வாக்கு செலுத்தியது. இதனால் மத்திய கிழக்கிலும் மத்தியதரைக் கடல் பகுதியைச் சுற்றிலும் யூத குடியிருப்புகள் தோன்ற ஆரம்பித்தன. ஒவ்வொரு குடியிருப்பிலும் ஒரு புது வழிபாட்டு முறை உருவானது; ஒவ்வொரு பட்டணத்திலும் யூதர்கள் கூடிவருவதற்காக ஜெபாலயங்கள் (synagogues) ஏற்படுத்தப்பட்டன. இதனால் எருசலேமில் திரும்ப கட்டப்பட்ட ஆலயத்தின் முக்கியத்துவம் குறைந்துபோனது. தொலைதூரம் சென்றிருந்த யூதர்கள் இப்போது உண்மையிலேயே சிதறப்பட்டவர்களாக ஆனார்கள்.​—எஸ்றா 2:64, 65.

கிரேக்க பாணியில் யூத மதம்

16பொ.ச.மு. நான்காவது நூற்றாண்டுக்குள், யூத சமுதாயத்தில் மாற்றங்கள் பல ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இதனால் மத்தியதரைக் கடல் பகுதியிலும் அதற்கு அப்பாலும் வியாபித்திருந்த கலாச்சாரம் யூத மதத்திற்குள் ஊடுருவ ஆரம்பித்தது. முக்கியமாக கிரேக்கருடைய செல்வாக்கு அதிகமாக இருந்தது. விளைவு? அதில் சிக்கிய யூத மதம் பிறகு கிரேக்க பாணியில் வெளிப்பட்டது.

17பொ.ச.மு. 332-ல், கிரேக்க நாட்டு தளபதி மகா அலெக்ஸாண்டர் மத்திய கிழக்கை மின்னல் வேகத்தில் கைப்பற்றினார், அவர் எருசலேமுக்கு வந்தபோது யூதர்கள் அவரை வரவேற்றனர். c அலெக்ஸாண்டருக்கு பின்வந்தவர்களும் கிரேக்க மயமாக்கும் அவருடைய திட்டத்தை தொடர்ந்து பின்பற்றினர்; கிரேக்க மொழியையும் கலாச்சாரத்தையும் தத்துவத்தையும் ராஜ்யமெங்கும் பரப்பினர். இதனால் கிரேக்க கலாச்சாரமும் யூத கலாச்சாரமும் இரண்டற கலந்து, வியத்தகு விளைவுகளை ஏற்படுத்தின.

18சிதறிப்போன யூதர்கள் எபிரெய மொழிக்கு பதிலாக கிரேக்க மொழி பேச ஆரம்பித்தனர். ஆகவே பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், எபிரெய வேதாகமம் முதன்முதலில் கிரேக்கில் மொழிபெயர்க்கப்பட்டது, அது செப்டுவஜின்ட் என அழைக்கப்பட்டது. அதைப் படித்த புறமதத்தினர் பலருக்கு யூத மதத்தின் மீது மதிப்பும் மரியாதையும் பிறந்தது, சிலர் மதமும்கூட மாறினர். d ஆனால் யூதர்களோ கிரேக்க கருத்துகளில் மூழ்கிப்போக ஆரம்பித்தனர். அதுவரை தங்கள் யூத சரித்திரத்திலேயே இல்லாத ஒன்றில், அதாவது தத்துவத்தில் நாட்டம்கொள்ள ஆரம்பித்தனர், சிலர் தத்துவஞானிகளாகவும் மாறினர். இதற்கு ஓர் உதாரணம் பொ.ச. முதல் நூற்றாண்டில் அலெக்ஸாண்டிரியாவில் வாழ்ந்து வந்த ஃபிலோ என்பவர். இவர் யூத மதத்தை கிரேக்க தத்துவத்தின் அடிப்படையில் விளக்க முயன்றார்; அதாவது இவை இரண்டும் இறுதியில் ஒரே உண்மைகளையே வெளிப்படுத்துகின்றன என்பது போல அவர் பேசினார்.

19கிரேக்க கலாச்சாரமும் யூத கலாச்சாரமும் இரண்டற கலந்திருந்த இந்தக் காலப்பகுதியைப் பற்றி யூத நூலாசிரியர் மாக்ஸ் டிமான்ட் இவ்வாறு சொல்கிறார்: “பிளேட்டோவின் சிந்தனை, அரிஸ்டாட்டிலின் வாதம், யூகிலிடின் அறிவியல் ஆகியவற்றை வைத்து, யூத அறிஞர்கள் தோராவை புதிய கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினர். . . . யூத வெளிப்படுத்துதலுக்கு கிரேக்க முலாம் பூச ஆரம்பித்தனர்.” பிற்பாடு கிரேக்க பேரரசு ரோம ஆட்சியின் கீழ் வந்தது, அதைத் தொடர்ந்து பொ.ச.மு. 63-ல் எருசலேமும் அதன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அந்த ரோம ஆட்சியின் கீழ் நடக்கவிருந்த சம்பவங்களெல்லாம் இன்னுமதிக குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு அடிகோலின.

ரோம ஆட்சியில் யூத மதம்

20பொது சகாப்தம் முதல் நூற்றாண்டில் யூத மதம் இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்தது. “கிரேக்க தத்துவத்திற்கும் ரோம பட்டயத்துக்கும்” இடையில் அது ஊசலாடிக் கொண்டிருந்தது என மாக்ஸ் டிமான்ட் கூறுகிறார். யூதர்கள் ரோமர்களால் ஒடுக்கப்பட்டதன் காரணமாக மேசியாவின் வரவை அதிகமாக எதிர்பார்த்தனர்; அதோடு மேசியானிய தீர்க்கதரிசனங்களின், முக்கியமாக தானியேல் தீர்க்கதரிசனங்களின் விளக்கங்கள் காரணமாகவும் அவரை மிக ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால் யூதர்கள் மத்தியில் பிரிவினைகள் நிலவின. பரிசேயர்கள் ஆலய பலிகளுக்குப் பதிலாக வாய்மொழி சட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். (பக்கம் 221-ன் பெட்டியை காண்க.) சதுசேயர்களோ ஆலயத்திற்கும் ஆசாரியத்துவத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். மேலும் யூத துறவியர்களும் ரோம ஆதிக்கத்தை எதிர்த்தவர்களும் ஏரோதியர்களும் இருந்தனர். மத ரீதியிலும் தத்துவ ரீதியிலும் இவர்கள் மத்தியில் அதிக கருத்து வேறுபாடுகள் நிலவின. யூத தலைவர்கள் ரபீக்கள் (எஜமானர்கள், போதகர்கள்) என அழைக்கப்பட்டனர். நியாயப்பிரமாணத்தில் கரைகண்டிருந்ததால் இவர்களுடைய அந்தஸ்து உயர்ந்தது, அதோடு, புதுவிதமான ஆன்மீகத் தலைவர்களாகவும் ஆனார்கள்.

21என்றாலும், யூத மதத்திற்குள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து பிரிவினைகள் ஏற்பட்டன, முக்கியமாக இஸ்ரேல் நாட்டில் அவ்வாறு பிரிவினைகள் ஏற்பட்டன. கடைசியில் ரோமுக்கு எதிராக நேரடியாகவே கலகம் வெடித்தது; பொ.ச. 70-ல் ரோம படைகள் எருசலேமை முற்றுகையிட்டு, அந்தப் பட்டணத்தைப் பாழாக்கி, அங்கிருந்த ஆலயத்தை எரித்து தரைமட்டமாக்கினர், அந்நகரத்தில் குடியிருந்தவர்களோ சிதறடிக்கப்பட்டனர். இறுதியில், யூதர்கள் யாரும் எருசலேமுக்குள் நுழையக் கூடாது என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. அப்பொழுது அவர்களுக்கு ஆலயமும் இல்லாமல் போனது தேசமும் இல்லாமல் போனது; ரோம பேரரசு முழுவதும் ஜனங்கள் சிதறுண்டு போயினர். யூத மதம் அழியாதிருக்க அதற்கு ஒரு புதிய மத வெளிப்பாடு தேவைப்பட்டது.

22ஆலயம் அழிக்கப்பட்டபோது சதுசேயர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோயினர்; பரிசேயர் ஆதரித்துவந்த வாய்மொழி சட்டம் புதிய ரபீனிய யூத மதத்தில் மைய இடத்தைப் பிடித்தது. ஆலய பலிகளுக்கும் புனித யாத்திரைகளுக்கும் பதிலாக, அதிக ஊக்கமான படிப்பும் ஜெபமும் பக்திமிக்க செயல்களும் இடம் பெற்றன. இதனால், ஒருவர் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் எந்தக் கலாச்சார பின்னணியிலும் யூத மதத்தை பின்பற்ற முடிந்தது. ரபீக்கள் வாய்மொழி சட்டங்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்து, அதற்கு விளக்கங்கள் அளித்தனர். பிற்பாடு அந்த விளக்கங்களுக்கு இன்னும் கூடுதலான விளக்கங்களை அளித்தனர், இவையனைத்தும் சேர்ந்து டால்மூட் என்று அழைக்கப்பட்டன.​—பக்கங்கள் 220-1-ல் உள்ள பெட்டியைக் காண்க.

23இத்தகைய பலதரப்பட்ட செல்வாக்குகளின் விளைவு என்ன? யூதர்கள், கடவுள் மற்றும் வரலாறு என்ற ஆங்கில நூலில் மாக்ஸ் டிமான்ட் இவ்வாறு விளக்குகிறார்: யூத மதம் மற்றும் யூத கொள்கைகள் என்ற தீ பந்தத்தை பரிசேயர்கள் ஏந்தியிருந்தபோதிலும் “அந்த பந்தத்தைப் பற்ற வைத்தவர்கள் கிரேக்க தத்துவஞானிகளே.” டால்மூட்டின் பெரும்பகுதி சட்டங்களாக இருந்தாலும், அதிலுள்ள உதாரணங்களிலும் விளக்கங்களிலும் கிரேக்க தத்துவஞானத்தின் தாக்கம் தெளிவாக தெரிந்தது. உதாரணமாக, ஆத்மா அழியாது போன்ற கிரேக்க கருத்துகள் யூதர்களின் பாணியில் விளக்கப்பட்டன. ஆம், அந்தப் புதிய ரபீனிய சகாப்தத்தில், சட்டங்களும் கிரேக்க தத்துவமும் கலந்து உருவான டால்மூட் யூதர்கள் மத்தியில் பெரும் மதிப்பையும் மரியாதையையும் பெற்றது. இடைக்காலத்திற்குள், பைபிளைவிட டால்மூட்டையே யூதர்கள் போற்றிப் புகழ ஆரம்பித்தனர்.

இடைக்காலத்தில் யூத மதம்

24இடைக்காலத்தில் (சுமார் பொ.ச. 500 முதல் 1500 வரை) வேறுபட்ட இரு யூத சமுதாயங்கள் தோன்றின; அவற்றில் ஒன்று, ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சியில் தழைத்தோங்கிய செஃப்பார்டிக் (Sephardic) யூத சமுதாயம்; மற்றொன்று, மத்திப மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்த அஷ்கெனாசி (Ashkenazi) யூத சமுதாயம். வேறுபட்ட இந்த இரு யூத சமுதாயங்களிலும் ரபீனிய கல்விமான்கள் இருந்தனர். இவர்களுடைய புத்தகங்களும் கருத்துகளும்தான் இன்றுவரை யூத மத விளக்கங்களுக்கு அடிப்படையாக இருக்கின்றன. யூத மதத்தில் இன்று காணப்படும் அநேக பழக்கவழக்கங்களும் சமய சடங்காச்சாரங்களும் இடைக் காலத்தில் தோன்றியவை என்பது ஆர்வத்திற்குரிய விஷயம்.​—பக்கம் 231-ல் உள்ள பெட்டியைக் காண்க.

25பல்வேறு நாடுகளிலிருந்து யூதர்களை வெளியேற்றும் படலம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பமானது. என் ஜனங்கள்​—யூதர்களின் கதை என்ற ஆங்கில நூலில் அபா எப்பன் என்ற இஸ்ரேல் ஆசிரியர் இவ்வாறு சொல்கிறார்: “கத்தோலிக்க சர்ச்சின் செல்வாக்கிற்கு அடிபணிந்த எல்லா நாடுகளிலும் . . . யூதர்களுக்கு சம்பவித்தது இதுதான்: பயங்கர அவமானம், சித்திரவதை, படுகொலை, வெளியேற்றம்.” கடைசியாக, 1492-ல் ஸ்பெயின் மறுபடியும் கத்தோலிக்க ஆதிக்கத்திற்குள் வந்தபோது, அங்கிருந்த யூதர்கள் அனைவரும் வெளியேறும்படி அது உத்தரவிட்டது. ஆகவே 15-ம் நூற்றாண்டின் முடிவுக்குள், மேற்கு ஐரோப்பா முழுவதிலிருந்தும் கிட்டத்தட்ட எல்லா யூதர்களும் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் கிழக்கு ஐரோப்பாவுக்குள்ளும் மத்தியதரைக் கடலைச் சுற்றியிருந்த நாடுகளுக்குள்ளும் தஞ்சம் புகுந்தனர்.

26யூதர்கள் ஒடுக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் வந்த இந்த நூற்றாண்டுகளில், உலகின் பல்வேறு இடங்களிலிருந்து மேசியா என்று சொல்லிக்கொண்ட அநேகர் அவர்கள் மத்தியிலிருந்து எழும்பினர். இவர்களில் சிலருக்கு அமோக ஆதரவும் மற்றவர்களுக்கு சிறிதளவு ஆதரவும் கிடைத்தது, ஆனால் அனைவரும் ஏமாற்றத்தையே அளித்தனர். 17-ம் நூற்றாண்டுக்குள், யூதர்களுக்கு புத்துணர்ச்சியூட்டி அவர்களை இந்த இருண்ட காலப்பகுதியிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டுவர புதிய முயற்சிகள் எடுப்பது தேவைப்பட்டது. 18-ம் நூற்றாண்டின் மத்திபத்தில், யூதர்களுக்கு விடிவுகாலம் பிறந்தது போல தோன்றியது. அதுதான் ஹசிடிஸம், (பக்கம் 226-ல் உள்ள பெட்டியைக் காண்க.) அதாவது தினசரி வழிபாட்டிலும் வாழ்க்கையிலும் வெளிப்படும் மறைபொருள் கொள்கையும் மதப் பரவசமும் சேர்ந்த ஒரு கலவையான மதப் பிரிவு. இதற்கு நேர்மாறாக, ஏறக்குறைய அதே காலத்தில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மோசஸ் மென்டல்சான் என்ற யூத தத்துவஞானி ஒருவர் ஹஸ்காலாவின் வழி, அதாவது ஞானோதய வழி என்ற இயக்கத்தின் மூலம் மற்றொரு வழியை காட்டினார். இதுவே ‘நவீன யூத மதமாக’ கருதப்படும் ஒன்றிற்கு வித்திட்டது.

‘ஞானோதயத்தின்’ முடிவும் சீயோனிஸத்தின் ஆரம்பமும்

27டால்மூட்டின் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து மேற்கத்திய கலாச்சாரத்தை யூதர்கள் தழுவினால்தான் மற்றவர்கள் அவர்களை ஏற்றுக்கொள்வர் என்பது மோசஸ் மென்டல்சானின் (1729-86) கருத்து. அவருடைய நாட்களில் புறமத உலகில் பெரும் மதிப்புக்குரியவர்களாக திகழ்ந்த யூதர்களில் இவரும் ஒருவர். ஆனாலும், 19-ம் நூற்றாண்டில் யூதர்களுக்கு எதிராக மீண்டும் மீண்டும் வன்முறை தலைதூக்கியது; குறிப்பாக “கிறிஸ்தவ” நாடான ரஷ்யாவில் இது நிகழ்ந்தபோது இந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் வெகுவாக ஏமாற்றமடைந்தனர். எனவே, யூதர்களுக்கு அரசியல் ரீதியான பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதில் பலர் கவனம் செலுத்தினர். மேசியா வந்து யூதர்களை இஸ்ரேலுக்கு திரும்ப அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையைக் கைவிட்டுவிட்டு தங்களுக்கென்று ஒரு நாட்டை ஸ்தாபிக்கும் சொந்த முயற்சியில் இறங்கினர். பிற்பாடு இதுவே சீயோனிஸத்தின் கோட்பாடானது: “யூதர்களின் மேசியானிய நம்பிக்கை . . . மதச் சார்பற்றதாக ஆனது” என ஓர் புத்தகம் சொல்கிறது.

28நாசி படுகொலையின்போது (1935-45) ஐரோப்பாவிலிருந்த சுமார் அறுபது லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர்; அச்சம்பவம் சீயோனிஸத்திற்கு புதிய உத்வேகத்தை அளித்தது, அது உலக மக்களின் பெரும் அனுதாபத்தை சம்பாதித்தது. இதனால் 1948-ல் சீயோனிஸவாதிகளின் கனவு நனவாகி, இஸ்ரேல் தனி நாடானது. ஆக, இன்றைய யூத மதத்திற்கு இப்போது வருகிறோம்; இன்றைய யூதர்களின் நம்பிக்கைகள் யாவை?

கடவுள் ஒருவரே

29எளிய வார்த்தைகளில் சொன்னால், யூத மதம் என்பது ஒரு ஜனத்தாரின் மதம். ஆகவே இந்த மதத்திற்கு மாறும் ஒருவர் யூத ஜனத்தின் பாகமாகவும் யூத மதத்தின் பாகமாகவும் ஆகிவிடுகிறார். குறிப்பாக சொன்னால், அது ஒரே கடவுளை வழிபடும் மதம். அந்தக் கடவுள் விசேஷமாய் யூதர்களின் சார்பாக மனித வரலாற்றில் தலையிடுகிறார் என்பது இவர்களுடைய நம்பிக்கை. வருடாந்தர பண்டிகைகள் பலவற்றை இவர்கள் கொண்டாடுகின்றனர், பல்வேறு பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிக்கின்றனர். (பக்கங்கள் 230-1-ல் உள்ள பெட்டியைக் காண்க.) எல்லா யூதர்களும் ஏற்றுக்கொள்கிற பொதுவான கோட்பாடுகள் அல்லது கொள்கைகள் எதுவும் இல்லாவிடினும் கடவுள் ஒருவரே என்ற நம்பிக்கை அவர்களுடைய ஜெபாலய வழிபாட்டின் முக்கிய அம்சமாகும். “இஸ்ரவேலே கேள்; நமது தேவனாகிய கர்த்தர் ஒருவரே” என உபாகமம் 6:4-ன் (JP) அடிப்படையில் செய்யப்படும் ஷெமா என்ற ஜெபத்தில் இந்நம்பிக்கை வெளிப்படுகிறது.

30ஒரே கடவுளை வழிபடும் நம்பிக்கை கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதத்திற்குள்ளும் புகுந்தது. டாக்டர் ஜே. எச். ஹெர்ட்ஸ் என்ற ரபீ இவ்வாறு கூறுகிறார்: “ஒரே தெய்வம் என்ற இந்த உயர்ந்த கோட்பாடு பல தெய்வங்கள் என்ற கோட்பாட்டுக்கு எதிரானதாக இருந்தது . . . அதே விதமாக கிறிஸ்தவ கோட்பாடாகிய திரித்துவம் தெய்வீக ஒற்றுமைக்கு எதிராக இருப்பதால் ஷெமா அதை நிராகரிக்கிறது. e அது அப்படியிருக்க, யூதர்கள் மரணத்துக்குப் பின்னான வாழ்க்கையைப் பற்றி என்ன நம்புகிறார்கள் என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.

மரணம், ஆத்மா, உயிர்த்தெழுதல்

31மரணத்துக்குப்பின் சாகாமல் தொடர்ந்து உயிர் வாழும் ஆத்மா உண்டு என்பது நவீன யூத மதத்தின் முக்கிய நம்பிக்கைகளுள் ஒன்று. ஆனால் இந்த நம்பிக்கை பைபிளில் காணப்படுகிறதா? என்ஸைக்ளோப்பீடியா ஜூடேய்க்கா மறைக்காமல் இவ்வாறு ஒப்புக்கொள்கிறது: “ஆத்மா சாவதில்லை என்ற கோட்பாடு கிரேக்க செல்வாக்கின் காரணமாகவே யூத மதத்திற்குள் நுழைந்திருக்க வேண்டும்.” ஆனால் இது கோட்பாடு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையை உருவாக்கியது; அதே நூல் இவ்வாறு சொல்கிறது: “உயிர்த்தெழுதல் நம்பிக்கையும் ஆத்மா சாவதில்லை என்ற நம்பிக்கையும் ஒன்றுக்கொன்று அடிப்படையில் முரண்படுபவை. அவற்றில் ஒன்று, முடிவு காலத்தில் நிகழும் ஒட்டுமொத்த உயிர்த்தெழுதலை, அதாவது இறந்தவர்கள் கல்லறையிலிருந்து எழுந்து வருவதைப் பற்றி குறிப்பிடுகிறது. மற்றொன்று, சரீரம் இறந்தபின் ஆத்மாவுக்கு ஏற்படும் நிலையைப் பற்றி குறிப்பிடுகிறது.” யூதர்களின் இறையியலில் இந்தப் பிரச்சினை எவ்வாறு தீர்த்து வைக்கப்பட்டது? “ஒருவர் மரிக்கையில் அவருடைய ஆத்மா இன்னொரு இடத்திற்கு சென்று தொடர்ந்து உயிர் வாழ்கிறதென விளக்கப்பட்டது, (மோட்சம், நரகம் பற்றிய நம்பிக்கைகள் தோன்றுவதற்கு இது காரணமாயிருந்தது), அவருடைய சரீரமோ இங்கே பூமியில் மரித்தோர் அனைவரும் சரீரத்தில் உயிர்த்தெழுந்து வரும் அந்தக் காலத்துக்காக கல்லறையில் காத்துக்கொண்டிருக்கிறது என்பதாகவும் விளக்கப்பட்டது.”

32பல்கலைக்கழக பேராசிரியர் ஆர்த்தர் ஹெர்ட்ஸ்பர்க் இவ்வாறு எழுதுகிறார்: “மனித வாழ்க்கைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இடம் இந்த உலகமே என [எபிரெய] பைபிள் சொல்கிறது. மோட்சத்தைப் பற்றியோ நரகத்தைப் பற்றியோ அதில் எந்தக் குறிப்புகளும் இல்லை; முடிவு காலத்தில் இறுதியாக நடைபெறும் உயிர்த்தெழுதல் பற்றியே அதிக தகவல்கள் உள்ளன.” இதுவே பைபிள் கோட்பாட்டின் எளிமையான, திருத்தமான விளக்கமாகும், அதாவது ‘மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள் . . . அவர்கள் போகிற பாதாளத்திலே [மனிதவர்க்கத்தின் பொது பிரேதக் குழியிலே] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லை.’​—பிரசங்கி 9:5, 10; தானியேல் 12:1, 2; ஏசாயா 26:19.

33 என்ஸைக்ளோப்பீடியா ஜூடேய்க்கா இவ்வாறு கூறுகிறது: “ரபீக்களின் காலங்களில் மரித்தோரின் உயிர்த்தெழுதல் பற்றிய கோட்பாடு யூத மதத்தின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்றாக கருதப்பட்டது. இது அழியாத ஆத்மா பற்றிய நம்பிக்கையிலிருந்து . . . வித்தியாசமானது. f ஆனால் இன்று யூத மதப் பிரிவுகள் அனைத்தும் ஆத்மா அழியாது என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டாலும் மரித்தோரின் உயிர்த்தெழுதலை ஏற்றுக்கொள்வதில்லை.

34கிரேக்க செல்வாக்கின் காரணமாக டால்மூட்டில் சாகாத ஆத்மாவைப் பற்றிய விளக்கங்களும் கதைகளும் வர்ணனைகளும்கூட ஏராளமாக காணப்படுகின்றன; இவ்வாறு அது பைபிளிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. பிற்பட்ட காலத்தில் தோன்றிய யூத மறைபொருள் இலக்கியமாகிய கபாலா, மறுபிறப்பை பற்றி (ஒருவர் மரிக்கையில் அவருடைய ஆத்மா வேறொருவராக பிறப்பது பற்றி) போதிக்கிறது. இது அடிப்படையில் பூர்வ இந்து மத போதகம். (அதிகாரம் 5-ஐக் காண்க.) இஸ்ரேல் நாட்டில் இன்று இது ஒரு யூத மத போதனையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது ஹசிடிம் என்ற யூத மத பிரிவின் நம்பிக்கையிலும் இலக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக, மார்டின் பூபர் என்பவர் ஹசிடிம் பற்றிய கதைகள்​—பிற்காலங்களில் தோன்றிய எஜமானர்கள் என்ற ஓர் ஆங்கில புத்தகத்தை எழுதினார். எலிமலேக் பிரிவிலிருந்து வந்த லிஷென்சிக் என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு ரபீயின் ஆத்மா பற்றிய கதை இதில் இடம்பெறுகிறது; “பாவநிவாரண நாளில் ரபீ ஆபிரகாம் யெஹோஷூவா என்பவர் அவோதாவை ஒப்பிப்பார். அவோதா என்பது எருசலேம் ஆலயத்தில் பிரதான ஆசாரியன் செய்த சேவையை குறிப்பிடும் ஜெபமாகும். அதை ஒப்பிக்கையில், ‘அவர் இவ்வாறு கூறினார்’ என்ற வார்த்தைகள் வரும்போது ‘நான் இவ்வாறு கூறினேன்’ என்றுதான் எப்போதும் மாற்றிக் கூறுவார். இதற்கு காரணம் எருசலேமில் ஒரு பிரதான ஆசாரியனின் உடலுக்குள் தன் ஆத்மா இருந்த காலத்தை இவர் மறவாதிருந்ததுதான்” என அந்தக் கதை சொன்னது.

35சீர்திருத்த யூத மதம் உயிர்த்தெழுதல் நம்பிக்கையையே நிராகரித்துவிடும் அளவுக்குச் சென்றுவிட்டிருக்கிறது. சீர்திருத்த ஜெப புத்தகத்திலிருந்து அந்த வார்த்தையை நீக்கிவிட்டு ஆத்மா அழியாது என்ற நம்பிக்கையை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது. இதற்கு எதிர்மாறாக, ஆதியாகமம் 2:7-ல் வெளிப்படுத்தப்பட்டுள்ள பைபிளின் கருத்து எவ்வளவு தெளிவாக உள்ளது: ‘தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவ ஆத்துமாவானான்.’ உடலும் ஆவியும், அதாவது உயிர் சக்தியும் சேர்ந்து ‘ஜீவ ஆத்துமாவாக’ ஆகின்றன. g (ஆதியாகமம் 2:7; 7:22; சங்கீதம் 146:4) பாவத்தில் வீழ்ந்த மனிதன் சாகும்போது ஆத்மா சாகிறது. (எசேக்கியேல் 18:4, 20) ஆகவே ஒரு மனிதன் மரிக்கும்போது அவன் இல்லாமல் போகிறான். அவனுடைய உயிர் சக்தி அதைக் கொடுத்த கடவுளிடமே திரும்புகிறது. (பிரசங்கி 3:19; 9:5, 10; 12:7) ஆம், மரித்தவர்களுக்கு பைபிள் அளிக்கும் உண்மையான நம்பிக்கை உயிர்த்தெழுதலாகும்.​—எபிரெயுவில்: டெக்கியாத் ஹாமிதிம், அதாவது “மரித்தோரின் உயிர்ப்பு.”

36இந்த முடிவு அநேக யூதர்களுக்குக்கூட ஆச்சரியமாய் இருக்கலாம் என்றாலும், உண்மை கடவுளை வணங்கியவர்களுக்கு உயிர்த்தெழுதலே உண்மையான நம்பிக்கையாக ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு இருந்து வந்திருக்கிறது. சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன், துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்த உண்மையுள்ள மனிதனான யோபு, எதிர்காலத்தில் ஷியோலிலிருந்து, அதாவது கல்லறையிலிருந்து கடவுள் தன்னை எழுப்பப் போகிற காலம் வரும் என்று சொன்னார். (யோபு 14:13-15) தானியேல் தீர்க்கதரிசியும்கூட “நாட்களின் முடிவிலே” எழுப்பப்படுவார் என்ற வாக்குறுதியைப் பெற்றார்.​—தானியேல் 12:2, 13.

37மரணத்துக்குப்பின் வேறொரு உலகில் தொடர்ந்து வாழும் அழியா ஆத்மா ஒன்று இருந்ததாக அந்த உண்மையுள்ள எபிரெயர்கள் நம்பினதற்கு எந்த ஆதாரமும் பைபிளில் இல்லை. அண்டத்திலுள்ள நட்சத்திரங்களை எல்லாம் எண்ணி அவற்றைக் கட்டுப்படுத்தும் சர்வலோக பேரரசர், உயிர்த்தெழுதல் சமயத்தில் தங்களையும் நினைவுகூருவார் என அவர்கள் நம்பியதற்கு போதுமான ஆதாரம் இருந்தது. அவருக்கும் அவருடைய பெயருக்கும் அவர்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தனர். எனவே, அவரும் அவர்களுக்கு உண்மையுள்ளவராக இருப்பார் என நம்பினர்.​—சங்கீதம் 18:25; 147:4; ஏசாயா 25:7, 8; 40:25, 26.

யூத மதமும் கடவுளுடைய பெயரும்

38கடவுளுடைய பெயர் எழுத்துவடிவில் இருந்தாலும் அது மிகவும் பரிசுத்தமாக இருப்பதால் அதை உச்சரிக்கக் கூடாது என யூத மதம் கற்பிக்கிறது. h இதன் காரணமாகவே கடந்த 2,000 வருடங்களில் அந்தப் பெயரின் சரியான உச்சரிப்பு அறியப்படாமல் போனது. ஆனால் யூதர்கள் எப்போதுமே அப்படி நினைத்தது கிடையாது. சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு மோசேயிடம் கடவுள் இவ்வாறு சொன்னார்: “ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் [எபிரெயுவில்: יהוה, YHWH] என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம்; தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.” (யாத்திராகமம் 3:15; சங்கீதம் 135:13) அந்த பெயரும் பேர்ப்பிரஸ்தாபமும் என்னவாக இருந்தன? தானக் அடிக்குறிப்பு இவ்வாறு சொல்கிறது: “YHWH என்ற பெயர் (அதோனாய், அதாவது “கர்த்தர்” என பாரம்பரியமாக வாசிக்கப்படுவது) ‘இருப்பதற்கு’ என்ற அர்த்தம் தரும் ஹேயா என்ற மூல வார்த்தையோடு சம்பந்தப்பட்டுள்ளது.” ஆகவே இந்த இடத்தில் கடவுளின் பரிசுத்த பெயர் இருக்கிறது; YHWH (யாவே) என்ற அந்த நான்கு எபிரெய மெய்யெழுத்துக்கள்தான், லத்தீன் மொழி வடிவில் ஜெஹோவா என்றழைக்கப்பட்டு பின்னர் அதுவே பல நூற்றாண்டுகளாக ஆங்கிலத்திலும் வழக்கில் இருந்து வருகிறது.

39ஆரம்பத்திலிருந்தே கடவுளுடைய தனிப்பட்ட பெயருக்கு யூதர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றனர். பண்டைய காலம் முதற்கொண்டு அது வழங்கப்படும் முறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் அவ்வாறு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றனர். எவ்ரிமேன்ஸ் டால்மூட் என்ற நூலில் டாக்டர் ஏ. கோஹென் இவ்வாறு கூறுகிறார்: “தெய்வத்தின் ‘தனிச்சிறப்பான பெயருக்கு’ (Shem Hamephorash) விசேஷமான மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நான்கெழுத்தை, அதாவது JHVH என்பதை அவரே இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார்.” கடவுளுடைய பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதற்கு காரணம், அது கடவுளை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் அவருடைய குணங்களை வர்ணிப்பதாகவும் இருந்ததே. இன்னொரு முக்கியமான விஷயம் கடவுள் தாமே தமது பெயரை அறிவித்து, அதைப் பயன்படுத்தும்படி தம் வணக்கத்தாரிடம் சொன்னதாகும். எபிரெய பைபிளில் இந்தப் பெயர் 6,828 தடவை காணப்படுவது அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. பக்திமிக்க யூதர்களோ கடவுளுடைய பெயரை உச்சரிப்பது அவருக்கு அவமரியாதை காட்டுவதாக இருக்கிறதென நினைக்கின்றனர். i

40இந்தப் பெயரை உச்சரிக்கக் கூடாது என்ற பண்டைய ரபீக்களின் (பைபிளுடையது அல்ல) உத்தரவைக் குறித்து தி ஓல்டு ரபீனிக் டாக்ட்ரின் ஆஃப் காட் என்ற புத்தகத்தில் ஏ. மார்மோர்ஸ்டீன் என்ற ஒரு ரபீ இவ்வாறு எழுதினார்: “[கடவுளுடைய பெயரை பயன்படுத்துவதைக் குறித்து] இப்போதிருக்கும் இந்தத் தடையைப் பற்றி அக்காலத்தில் வாழ்ந்த யூதர்களுக்கு ஒன்றுமே தெரியாது . . . எகிப்திலோ பாபிலோனியாவிலோ வாழ்ந்த யூதர்கள் கடவுளுடைய பெயராகிய நான்கெழுத்தை உபயோகிக்கக் கூடாது என்ற சட்டத்தை அறியவும் இல்லை, அதை கடைப்பிடிக்கவும் இல்லை; அக்காலத்தில் சாதாரணமான உரையாடலில் அல்லது வாழ்த்துதல்களில் அந்தப் பெயரைப் பயன்படுத்துவதை எந்த சட்டமும் தடை செய்யவில்லை. இருந்தாலும், பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பொ.ச. மூன்றாம் நூற்றாண்டு வரை இப்படிப்பட்ட ஒரு தடை இருந்தது, அது ஓரளவிற்கு கடைப்பிடிக்கப்பட்டும் வந்தது.” முற்காலங்களில் இந்தப் பெயரைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டது; அது மட்டுமல்லாமல், டாக்டர் கோஹென் சொல்கிற விதமாகவே: “பாமர மக்களும்கூட இந்தப் பெயரை தாராளமாகவும் வெளியரங்கமாகவும் பயன்படுத்துவது ஒரு காலத்தில் வரவேற்கப்பட்டது. . . . [யூதரல்லாதவரிலிருந்து] இஸ்ரவேலனை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்கான விருப்பத்தின் அடிப்படையில் இவ்வாறு வரவேற்கப்பட்டதாக கருத்து தெரிவிக்கப்பட்டது.”

41அப்படியென்றால், கடவுளுடைய பெயரை பயன்படுத்துவதற்கு எவ்வாறு தடை விதிக்கப்பட்டது? டாக்டர் மார்மோர்ஸ்டீன் பதிலளிக்கிறார்: “யூதர்களின் மதத்தை கிரேக்கர்கள் எதிர்த்ததன் காரணமாகவும், ஆசாரியர்கள் மற்றும் பிரபுக்கள் விசுவாச துரோகம் செய்ததன் காரணமாகவும் பரிசுத்த ஸ்தலத்தில் [எருசலேம் ஆலயத்தில்] நான்கெழுத்து உச்சரிக்கப்படக் கூடாது என்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அமல்படுத்தப்பட்டது.” கடவுளுடைய பெயரை வீணிலே வழங்குவதைத் தவிர்ப்பதில் அவர்களுக்கிருந்த அளவுகடந்த வைராக்கியத்தின் காரணமாக பேச்சு வழக்கிலே அதை பயன்படுத்துவதை முழுமையாக தடை செய்து உண்மையான கடவுளை அடையாளம் காண முடியாதபடி செய்துவிட்டனர். எதிர்ப்பினாலும், விசுவாச துரோகத்தினாலும் யூதர்கள் கடவுளுடைய பெயரை பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டனர்.

42இதைப் பற்றி டாக்டர் கோஹென் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “பைபிள் காலங்களில், அன்றாட பேச்சில் [கடவுளுடைய பெயரை] பயன்படுத்தியதில் எந்த தயக்கமும் இருந்ததாக தெரியவில்லை.” முற்பிதாவாகிய ஆபிரகாம் “கர்த்தரை அவருடைய பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.” (ஆதியாகமம் 12:8, Ta) எபிரெய பைபிள் எழுத்தாளர்களில் பெரும்பாலோர் தாராளமாகவும், அதே சமயத்தில் மிகுந்த மரியாதையோடும் அதை பயன்படுத்தியிருக்கிறார்கள்; பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டில் மல்கியா புத்தகம் எழுதப்பட்ட காலம் வரையாகவும் அவ்வாறு செய்திருக்கிறார்கள்.​—ரூத் 1:8, 9, 17.

43பண்டைய எபிரெயர்கள் கடவுளுடைய பெயரை பயன்படுத்தினார்கள், உச்சரித்தார்கள் என்பது தெள்ளத் தெளிவாக உள்ளது. பிற்பாடு நிகழ்ந்த மாற்றத்தைக் குறித்து மார்மோர்ஸ்டீன் பின்வருமாறு அறிவிக்கிறார்: “இந்தச் சமயத்தில், அதாவது [பொ.ச.மு.] மூன்றாவது நூற்றாண்டின் முதல் பாதியில் கடவுளுடைய பெயரை பயன்படுத்தும் விஷயத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. இந்த மாற்றம் யூத இறையியல் மீதும் தத்துவத்தின் மீதும் பலத்த செல்வாக்கை செலுத்தியது, இதன் விளைவுகளை இந்நாள் வரையாகவும் காண முடிகிறது.” பெயர் இல்லாத ஒரு கடவுளைப் பற்றிய கருத்து இறையியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது; இதை, கடவுளுடைய பெயரை உபயோகிக்காததால் ஏற்பட்ட நேரடி விளைவு எனலாம். இதனால் கிறிஸ்தவமண்டலத்தின் திரித்துவ கோட்பாடு மிக எளிதில் உருவானது. jயாத்திராகமம் 15:1-3.

44கடவுளுடைய பெயரை பயன்படுத்த மறுப்பது மெய்க் கடவுளுடைய வணக்கத்தின் தரத்தைக் குறைத்துவிடுகிறது. கருத்துரையாளர் ஒருவர் இவ்விதமாக சொன்னார்: “கடவுளை ‘கர்த்தர்’ என்ற பதத்தில் அழைப்பது திருத்தமாக இருக்கிறபோதிலும் அது உணர்ச்சியற்ற ஒரு பதமாக, மந்தமான தன்மையுடைய பதமாக இருப்பது வருத்தத்திற்குரிய விஷயம். . . . YHWH அல்லது அதோனாய் என்பதை ‘கர்த்தர்’ என்பதாக மொழிபெயர்ப்பதால், பழைய ஏற்பாட்டின் பல பகுதிகள் தெளிவற்றதாகவும், சம்பிரதாயமாகவும், அந்நியமாகவும் தோன்றுகின்றன என்பதை நினைவில் வைக்க வேண்டும். இது மூலவாக்கியத்தோடு கொஞ்சமும் பொருந்தாத விஷயமாக இருக்கிறது.” (பண்டைய இஸ்ரவேலில் கடவுளைப் பற்றிய அறிவு [ஆங்கிலம்]) மூல எபிரெய வாக்கியத்தில் ஆயிரக்கணக்கான தடவை தெளிவாக காணப்படும் மாட்சிமையும் தனிச்சிறப்பும் வாய்ந்த யாவே, அதாவது யெகோவா என்ற பெயர் அநேக பைபிள் மொழிபெயர்ப்புகளிலிருந்து மறைந்துவிட்டிருப்பது எவ்வளவாய் வேதனையளிக்கிறது!​—ஏசாயா 43:10-12.

யூதர்கள் இன்னும் மேசியாவுக்காக காத்திருக்கிறார்களா?

45எபிரெய வேதாகமத்தில் அநேக தீர்க்கதரிசனங்கள் இருக்கின்றன, இவற்றின் அடிப்படையில்தான் 2,000-க்கும் அதிக ஆண்டுகளுக்கு முன்பிருந்தே யூதர்கள் மேசியாவில் நம்பிக்கை வைத்து காத்திருந்தனர். மேசியா தாவீதின் வம்சாவளியில் வருவார் என்பதை 2 சாமுவேல் 7:11-16 சுட்டிக்காட்டியது. ஏசாயா 11:1-10 இவர் நீதியையும் சமாதானத்தையும் மனிதகுலம் முழுவதற்கும் கொண்டு வருவார் என்று முன்னுரைத்தது. தானியேல் 9:24-27 மேசியா எப்போது வருவார், அவர் எப்போது கொல்லப்படுவார் என்பதற்கு காலக்கணக்குகளை அளித்தது.

46 என்ஸைக்ளோப்பீடியா ஜூடேய்க்கா விளக்குகிற விதமாக, முதல் நூற்றாண்டில் வாழ்ந்த யூதர்கள் மேசியாவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தனர். மேசியா “மிகவும் வசீகரமான குணாம்சங்களையுடைய தாவீதின் வம்சத்தாராக இருப்பார், புறஜாதியாரின் நுகத்தை உடைத்து இஸ்ரவேலரின் ராஜ்யத்தை மீட்டு ஆட்சி செய்வதற்காக கடவுளால் எழுப்பப்படுவார் என்பதாக ரோமர்களின் காலத்தில் வாழ்ந்துவந்த யூதர்கள் நினைத்தனர்.” ஆனால் யூதர்கள் எதிர்பார்த்த, அந்த புரட்சிகரமான மேசியா வரவில்லை.

47இருந்தாலும் த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறபடி, கடினமான பல சோதனைகளின் மத்தியிலும் யூத ஜனங்கள் ஒன்றுபடுவதற்கு மேசியானிய நம்பிக்கை மிகவும் அவசியமாக இருந்தது. “யூத மதம் அழியாதிருப்பதற்கு, மேசியானிய நம்பிக்கையைக் குறித்தும் எதிர்காலத்தைக் குறித்தும் அதனுடைய அசைக்க முடியாத நம்பிக்கையே முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை.” ஆனால் 18-வது மற்றும் 19-வது நூற்றாண்டுகளுக்கு இடையே நவீன யூத மதம் தோன்றியபோது அநேகர் மேசியாவுக்காக அமைதியுடன் காத்திருப்பதை விட்டுவிட்டனர். கடைசியில், நாசியின் தூண்டுதலால் விளைந்த படுகொலை காரணமாக அநேகர் தங்கள் பொறுமையையும் நம்பிக்கையையும் இழந்தனர். பிறகு மேசியானிய நம்பிக்கை தங்களுக்கு தடையாக இருப்பது போல கருத ஆரம்பித்தனர்; எனவே, மேசியானிய நம்பிக்கை என்பது செழிப்பும் அமைதியும் நிலவும் ஒரு காலப்பகுதியே என்ற புதிய ஒரு விளக்கத்தைத் தர ஆரம்பித்தனர். அது முதல் பொதுவாக யூதர்கள்​—சிலர் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும்​—மேசியா என்ற ஒரு தனிநபரின் வருகைக்காக காத்திருப்பதாக சொல்ல முடியாது.

48மேசியானிய நம்பிக்கையை இழந்ததில் ஏற்பட்ட இந்த மாற்றம் முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. மேசியா ஒரு தனிப்பட்ட நபர் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யூத மதம் நம்பி வந்தது தவறான கருத்தா? கடவுளுக்கான தேடலில் எந்த வகையான யூத மதம் உதவியாக இருக்கும்​—கிரேக்க தத்துவங்களால் கறைபடிந்த பண்டைய யூத மதமா? அல்லது கடந்த 200 ஆண்டுகளில் படிப்படியாக தோன்றியிருக்கிற, மேசியாவில் நம்பிக்கை இல்லாத யூத மதமா? அல்லது மேசியானிய நம்பிக்கையை உண்மையாகவும் திருத்தமாகவும் காத்துவருகிற வேறு ஏதாவதொரு மார்க்கம் உள்ளதா?

49இந்தக் கேள்விகளை மனதில் வைத்து மேசியாவின் அடையாளங்களை நசரேயனாகிய இயேசுவின் தகுதிகளோடு பரிசீலனை செய்து பார்க்கும்படி உண்மை மனதுள்ள யூதர்களை கேட்டுக்கொள்கிறோம். கிறிஸ்தவமண்டலம் அவரை சித்தரித்திருக்கிறபடி அல்ல, ஆனால் கிரேக்க வேதாகமத்தின் யூத எழுத்தாளர்கள் அவரை விவரிப்பதன் அடிப்படையில் அவ்வாறு செய்து பார்க்கும்படி சிபாரிசு செய்கிறோம். இரண்டுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. யூதர்கள் இயேசுவை நிராகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள திரித்துவ கோட்பாட்டை​—பைபிளில் இல்லாத திரித்துவ கோட்பாட்டை​—கிறிஸ்தவமண்டல மதங்கள் நம்புகின்றன. ஆனால், “நமது தேவனாகிய கர்த்தர் ஒருவரே” என்ற தூய்மையான போதகத்தை உயிரினும் மேலாக நேசிக்கும் எந்த ஒரு யூதரும் இந்தத் திரித்துவ போதகத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார். (உபாகமம் 6:4, JP) ஆகவே, கிரேக்க வேதாகமத்தில் விவரிக்கப்படும் இயேசுவை அறிந்துகொள்வதற்காக திறந்த மனதோடு பின்வரும் அதிகாரத்தை வாசிக்கும்படி உங்களை அழைக்கிறோம்.

[அடிக்குறிப்புகள்]

a ஒப்பிடுக: ஆதியாகமம் 5:22-24; குறிப்பாக, பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு​—துணைக்குறிப்புகளுடன் (ஆங்கிலம்) பைபிளில் 22-ம் வசனத்திற்கான இரண்டாவது அடிக்குறிப்புடன் ஒப்பிடுக.

b இங்கு காணப்படும் காலக்கணக்கு பைபிள் அடிப்படையிலானது. (‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ என்ற புத்தகத்தில் ஆராய்ச்சி எண் 3, “கால ஓட்டத்தில் நிகழ்ச்சிகளை அளவிடுதல்” என்ற அதிகாரத்தை காண்க. இப்புத்தகம் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.)

c அலெக்ஸாண்டர் எருசலேமுக்கு வந்தபோது யூதர்கள் அவரை வரவேற்றனர் என்றும், ‘கிரேக்க தேசத்தின் ராஜாவாக’ அவரது படையெடுப்புகளைப் பற்றி 200 ஆண்டுகளுக்கு முன்பே தானியேல் தீர்க்கதரிசனமாக விளக்கியிருந்ததை அவருக்கு எடுத்துக் காட்டினர் என்றும் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சரித்திராசிரியர் யொசெஃப் பென் மத்தியாகு (ஃபிளேவியஸ் ஜொசிஃபஸ்) கூறுகிறார்.​—யூத மரபுகள் (ஆங்கிலம்), புத்தகம் XI, அதிகாரம் VIII 5; தானியேல் 8:5-8, 21.

d மக்கபேயரின் காலத்தில் (பொ.ச.மு. 165 முதல் 63 வரை எஸ்மோனியர்கள்), ஜான் ஹிர்கானஸ் போன்ற யூத தலைவர்கள் தாங்கள் கைப்பற்றிய இடங்களில் கட்டாய மதமாற்றங்களை பேரளவில் நடப்பித்தனர். பொது சகாப்தத்தின் ஆரம்பத்தில் மத்தியதரைக் கடல் பகுதியில் 10 சதவீதத்தினர் யூதர்களாக இருந்தனர் என்பது ஆர்வத்திற்குரிய விஷயம். யூதர்களின் மதமாற்றம் எந்தளவு தீவிரமாக இருந்தது என்பதை இந்த எண்ணிக்கை படம்பிடித்துக் காட்டுகிறது.

e த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு சொல்கிறது: “கிறிஸ்தவத்தின் திரித்துவ கோட்பாடு . . . ஒரே கடவுளை வழிபடும் கொள்கையுடைய மற்ற இரண்டு பாரம்பரியமிக்க மதங்களிலிருந்து [யூத மதத்திலிருந்தும் இஸ்லாமிலிருந்தும்] அதை தனியே பிரித்து வைக்கிறது.” “கிறிஸ்தவர்களின் பைபிள் திரித்துவ கடவுளைப் பற்றி எதையுமே கூறாதபோதிலும்” அந்தக் கோட்பாட்டை சர்ச் உருவாக்கியுள்ளது.

f உயிர்த்தெழுதல் ஒரு முக்கியமான நம்பிக்கையென பைபிள் மட்டுமல்ல, மிஷ்னாவும் கற்பித்தது (சான்ஹெட்ரின் 10:1), மேலும் மைமானடிஸின் 13 விசுவாச பிரமாணங்களில் இது கடைசியாக சேர்க்கப்பட்டுள்ளது. உயிர்த்தெழுதலை மறுதலிப்பது 20-ஆம் நூற்றாண்டு வரை மதபேதமாக கருதப்பட்டது.

g “ஒரு நபருக்கு ஆத்மா இருக்கிறது என பைபிள் சொல்வதில்லை. ‘நெபெஷ்’ என்பது அந்த நபரை, உணவுக்கான அவருடைய தேவையை, அவரது இரத்தக் குழாய்களில் பாய்ந்துவரும் இரத்தத்தை, முழுக்க முழுக்க அந்த ஆளையே குறிக்கிறது.”​—ஹீப்ரு யூனியன் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் எச். எம். ஆர்லின்ஸ்கி.

h யாத்திராகமம் 6:3-ஐ காண்க; அங்கு தானக் பைபிள் மொழிபெயர்ப்பின் ஆங்கில வாசகத்தில் எபிரெய நான்கெழுத்து காணப்படுகிறது.

i என்ஸைக்ளோப்பீடியா ஜூடேய்க்கா இவ்வாறு சொல்கிறது: “‘YHWH என்ற உன் தேவனின் நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக’ என்ற மூன்றாவது கட்டளை (யாத். 20:7; உபா. 5:11) தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, YHWH என்ற பெயரை பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது. உண்மையில் அதன் அர்த்தம் ‘YHWH என்ற உன் தேவனின் நாமத்தில் பொய்யாய் ஆணையிடாதிருப்பாயாக’ என்பதே.”

j ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் மதம் மற்றும் எபிரெய மொழியின் துணை பேராசிரியராக இருந்த ஜார்ஜ் ஹாவார்ட் இவ்வாறு கூறுகிறார்: “காலம் செல்லச் செல்ல, இந்த இரண்டு நபர்களும் [கடவுளும் கிறிஸ்துவும்] இன்னும் அதிக நெருக்கமாக கொண்டுவரப்பட்டு இவர்களிடையே எந்த வித்தியாசமும் காண முடியாத அளவுக்குச் செய்யப்பட்டது. ஆகவே, நான்கெழுத்து நீக்கப்பட்டதன் விளைவாகவே பிற்பாடு கிறிஸ்துவின் தன்மை சம்பந்தமாகவும் திரித்துவத்தின் தன்மை சம்பந்தமாகவும் பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்க வேண்டும், இவை ஆரம்ப நூற்றாண்டுகளில் சர்ச்சுக்கு அதிக தொல்லை தந்தன. எது எப்படியிருந்தாலும் சரி, நான்கெழுத்து நீக்கப்பட்டதானது, முதல் நூற்றாண்டின் புதிய ஏற்பாட்டு காலத்தில் நிலவிய சூழலிலிருந்து வேறுபட்ட ஓர் இறையியல் சூழல் உருவாக காரணமாகியிருக்கலாம்.”​—பிப்ளிக்கல் ஆர்க்கியாலஜி ரிவ்யூ, மார்ச் 1978.

[கேள்விகள்]

1, 2. (அ) வரலாற்றின் மீதும் கலாச்சாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்திய பிரபல யூதர்கள் சிலர் யாவர்? (ஆ) சிலர் என்ன கேள்வி கேட்கலாம்?

3, 4. (அ) எபிரெய வேதாகமத்தில் என்ன அடங்கியுள்ளது? (ஆ) யூத மதத்தையும் அதன் ஆரம்பத்தையும் நாம் ஆராய சில காரணங்கள் யாவை?

5, 6. யூதர்களும் அவர்களுடைய பெயரும் தோன்றிய விதத்தைப் பற்றி சுருக்கமாய் குறிப்பிடுக.

7. ஆபிரகாமுக்கு என்ன வாக்குறுதியை கடவுள் ஆணையிட்டுக் கொடுத்தார், ஏன்?

8. மோசே யார், இஸ்ரவேலில் என்ன பங்கை அவர் வகித்தார்?

9, 10. (அ) மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம் என்ன? (ஆ) பத்துக் கட்டளைகளில் வாழ்க்கையின் என்னென்ன அம்சங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன? (இ) நியாயப்பிரமாண உடன்படிக்கை இஸ்ரவேலர் மீது என்ன கடமையை சுமத்தியது?

11. ஆசாரியத்துவமும் ராஜரீகமும் எவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டன?

12. தாவீதுக்கு கடவுள் கொடுத்திருந்த வாக்குறுதி என்ன?

13. வழிதவறிய இஸ்ரவேலரைத் திருத்துவதற்கு கடவுள் யாரை பயன்படுத்தினார்? உதாரணம் தருக.

14. தீர்க்கதரிசிகள் சொன்னது சரி என்பதை இஸ்ரவேலில் நிகழ்ந்த சம்பவங்கள் எவ்வாறு நிரூபித்தன?

15. (அ) யூதர்கள் மத்தியில் எவ்வாறு புதிய வழிபாட்டு முறை வேரூன்ற ஆரம்பித்தது? (ஆ) ஜெபாலயங்கள் தோன்றியதால் எருசலேமில் யூதர்களின் வழிபாடு எவ்வாறு பாதிக்கப்பட்டது?

16, 17. (அ) பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டில் மத்தியதரைக் கடல் பகுதி முழுவதிலும் ஊடுருவிய புதிய கலாச்சாரம் என்ன? (ஆ) கிரேக்க கலாச்சாரத்தைப் பரப்ப காரணமானவர்கள் யார், எப்படி பரப்பினர்? (இ) இதனால் யூத மதம் எவ்வாறு உலக அரங்கில் வெளிப்பட்டது?

18. (அ) எபிரெய வேதாகமத்திற்கு ஏன் கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பு அவசியமாக இருந்தது? (ஆ) கிரேக்க கலாச்சாரத்தின் எந்த அம்சம் விசேஷமாக யூதர்களைப் பாதித்தது?

19. கிரேக்க கலாச்சாரமும் யூத கலாச்சாரமும் இரண்டற கலந்த காலப்பகுதியை யூத நூலாசிரியர் ஒருவர் எப்படி விவரிக்கிறார்?

20. பொ.ச. முதல் நூற்றாண்டில் யூதர்கள் மத்தியில் எப்படிப்பட்ட மத சூழல் நிலவியது?

21. பொ.ச. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்த யூதர்களை பயங்கரமாக பாதித்த சம்பவங்கள் யாவை?

22. (அ) எருசலேம் ஆலயம் அழிக்கப்பட்டதால் யூத மதம் எவ்வாறு பாதிப்படைந்தது? (ஆ) யூதர்கள் பைபிளை எவ்வாறு பிரிக்கின்றனர்? (இ) டால்மூட் என்பது என்ன, அது எவ்வாறு தோன்றியது?

23. கிரேக்க சிந்தனை செல்வாக்கு செலுத்தியதால் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது?

24. (அ) இடைக்காலத்தில் யூதர்கள் மத்தியில் தோன்றிய இரு முக்கிய சமுதாயங்கள் யாவை? (ஆ) யூத மதத்தின் மீது அவை எவ்வாறு செல்வாக்கு செலுத்தின?

25. ஐரோப்பாவிலிருந்த யூதர்களை இறுதியாக கத்தோலிக்க சர்ச் எவ்வாறு நடத்தியது?

26. (அ) யூதர்கள் மத்தியில் ஏமாற்றத்திற்கு எது வழிநடத்தியது? (ஆ) யூதர்கள் மத்தியில் என்ன பெரும் பிரிவுகள் தோன்ற ஆரம்பித்தன?

27. (அ) மோசஸ் மென்டல்சானின் கருத்துகள் யூதர்களின் மனநிலையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தின? (ஆ) மேசியா என்ற ஒருவர் மீதிருந்த நம்பிக்கையை அநேக யூதர்கள் ஏன் கைவிட்டனர்?

28. இருபதாம் நூற்றாண்டில் யூதர்களின் மனநிலைகளை பாதித்த சம்பவங்கள் என்ன?

29. (அ) நவீன யூத மதத்தை எவ்வாறு எளிய வார்த்தைகளில் விளக்கலாம்? (ஆ) யூதர்களின் தனித்தன்மை எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது? (இ) யூதர்களின் சில பண்டிகைகளும் பழக்கவழக்கங்களும் யாவை?

30. (அ) கடவுளைப் பற்றிய யூதர்களின் புரிந்துகொள்ளுதல் என்ன? (ஆ) கடவுளைப் பற்றிய யூதர்களின் கருத்து எவ்வாறு கிறிஸ்தவமண்டல கருத்துக்கு நேர் மாறாக உள்ளது?

31. (அ) ஆத்மா சாவதில்லை என்ற கோட்பாடு யூத மத போதனைக்குள் எவ்வாறு நுழைந்தது? (ஆ) ஆத்மா சாவதில்லை என்ற போதனை என்ன பிரச்சினையை உருவாக்கிற்று?

32. மரித்தோரைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

33. உயிர்த்தெழுதல் கோட்பாட்டை ஆரம்பத்தில் யூதர்கள் எவ்வாறு கருதினர்?

34. பைபிளின் கருத்துக்கு நேர்மாறாக, ஆத்மாவைப் பற்றி டால்மூட் எவ்வாறு வருணிக்கிறது, பிற்காலங்களில் தோன்றிய எழுத்தாளர்கள் என்ன கூறுகின்றனர்?

35. (அ) ஆத்மா சாவதில்லை என்ற போதனையின் சம்பந்தமாக சீர்திருத்த யூத மதத்தின் நிலைநிற்கை என்ன? (ஆ) ஆத்மாவைப் பற்றிய பைபிளின் தெளிவான போதனை என்ன?

36, 37. பைபிள் காலங்களில் வாழ்ந்த உண்மையுள்ள எபிரெயர்களுக்கு எதிர்கால வாழ்க்கையைக் குறித்து என்ன நம்பிக்கை இருந்தது?

38. (அ) கடவுளின் பெயரை பயன்படுத்துவதன் சம்பந்தமாக பல நூற்றாண்டுகளாக என்ன சம்பவித்திருக்கிறது? (ஆ) கடவுளுடைய பெயருக்கு ஆதாரம் என்ன?

39. (அ) கடவுளின் பெயர் ஏன் முக்கியமானது? (ஆ) யூதர்கள் கடவுளுடைய பெயரை உச்சரிப்பதை ஏன் நிறுத்திவிட்டனர்?

40. யூத அறிஞர்கள் சிலர் கடவுளுடைய பெயரை பயன்படுத்துவது குறித்து என்ன சொல்லியிருக்கின்றனர்?

41. ரபீ ஒருவருடைய கருத்துப்படி, என்ன காரணங்களால் கடவுளுடைய பெயரை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது?

42. கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட்டதைக் குறித்து பைபிள் பதிவு காட்டுவது என்ன?

43. (அ) யூதர்கள் கடவுளுடைய பெயரை பயன்படுத்தியதன் சம்பந்தமாக எது தெள்ளத் தெளிவாக உள்ளது? (ஆ) கடவுளுடைய பெயரை யூதர்கள் உபயோகிக்காததால் ஏற்பட்ட மறைமுகமான பாதிப்புகளில் ஒன்று என்ன?

44. கடவுளுடைய பெயரை மறைத்துவிட்டதால் ஏற்பட்டுள்ள மற்ற பாதிப்புகள் யாவை?

45. மேசியாவில் நம்பிக்கை வைப்பதற்கு பைபிளில் என்ன ஆதாரம் காணப்படுகிறது?

46, 47. (அ) ரோமரின் ஆட்சியின்கீழ் இருந்த யூதர்கள் என்ன வகையான மேசியாவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்? (ஆ) மேசியாவைக் குறித்த யூதர்களின் எதிர்பார்ப்பில் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது?

48. யூத மதத்தைக் குறித்து என்ன கேள்விகளை கேட்பது நியாயமாக இருக்கிறது?

49. உண்மை மனதுள்ள யூதர்களுக்கு என்ன அழைப்பு கொடுக்கப்படுகிறது?

[பக்கம் 217-ன் சிறு குறிப்பு]

செஃப்பார்டிக் யூதர்களும் அஷ்கெனாசி யூதர்களும் இரு சமுதாயங்களாக உருவானார்கள்

[பக்கம் 211-ன் பெட்டி/படம்]

வழிபாட்டுக்கும் நன்னடத்தைக்கும் பத்துக் கட்டளைகள்

கோடிக்கணக்கானோர் பத்துக் கட்டளைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றனர், ஆனால் வெகு சிலரே அதைப் படித்திருக்கின்றனர். ஆகவே அதன் பெரும்பகுதியை இங்கே கொடுத்திருக்கிறோம்.

“என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

“மேலே வானத்திலும் கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். . . . [மிகவும் முற்பட்ட காலத்திலேயே, அதாவது பொ.ச.மு. 1513-ம் ஆண்டிலேயே விக்கிரகாராதனையை கண்டனம் செய்ததுதான் இக்கட்டளையின் தனிச்சிறப்பு.]

“உன் தேவனாகிய கர்த்தருடைய [எபிரெயு: יהוה] நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக . . .

“ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக. . . . கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து அதைப் பரிசுத்தமாக்கினார்.

“உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

“கொலை செய்யாதிருப்பாயாக.

“விபசாரம் செய்யாதிருப்பாயாக.

“களவு செய்யாதிருப்பாயாக.

“பிறனுக்கு விரோதமாகப் பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக.

“பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; . . . பிறனுடைய மனைவியையும், . . . வேலைக்காரனையும், . . . வேலைக்காரியையும், . . . எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.”​—யாத்திராகமம் 20:3-17.

முதல் நான்கு கட்டளைகள் மட்டுமே மத நம்பிக்கைகளோடும் வழிபாட்டோடும் நேரடியாக தொடர்புடையவையாக இருந்தபோதிலும், படைப்பாளருடன் நல்லுறவை அனுபவிக்க சரியான நடத்தை அவசியம் என்பதை பிற கட்டளைகள் சுட்டிக்காட்டின.

[படம்]

தனிச்சிறப்புமிக்க இந்த நியாயப்பிரமாண சட்டத்தை இஸ்ரவேலர் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்டபோதிலும், தங்களைச் சுற்றி வாழ்ந்த புற மதத்தவரைப் போல அவர்கள் கன்றுக்குட்டியை வழிபட்டனர் (பொன் கன்றுக்குட்டி, பிப்லாஸ்)

[பக்கம் 220, 221-ன் பெட்டி/படங்கள்]

எபிரெயரின் பரிசுத்த நூல்கள்

எபிரெயருடைய பரிசுத்த நூல்களில் முதலாவது “தானக்” (Tanakh). இந்தப் பெயர் யூதருடைய எபிரெய மொழி பைபிளின் மூன்று பிரிவுகளான தோரா (Torah) (நியாயப்பிரமாணம்), நெவியிம் (Nevi’im) (தீர்க்கதரிசிகள்), கெதுவிம் (Kethuvim) (பிற புத்தகங்கள்) என்பவற்றிலிருந்து வருகிறது; அதாவது இந்த ஒவ்வொரு ஆங்கில பெயரின் முதல் எழுத்துக்களைச் சேர்த்தால் தானக் (TaNaKh) என்ற பெயர் வருகிறது. இந்தப் புத்தகங்கள் பொ.ச.மு. 16-ம் நூற்றாண்டு முதல் 5-ம் நூற்றாண்டு வரை எபிரெயுவிலும் அரமேயிக்கிலும் எழுதப்பட்டன.

இவற்றிற்கு வித்தியாசமான அளவுகளில், அதாவது குறைந்துகொண்டே வரும் அளவுகளில் ஆவியின் ஏவுதல் கிடைத்ததாக யூதர்கள் நம்புகின்றனர். ஆகவே பின்வரும் வரிசையில் இவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்:

தோரா​—மோசே எழுதிய ஐந்து புத்தகங்கள், அதாவது ஐந்தாகமம் (கிரேக்கில் “ஐந்து சுருள்கள்”); ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகிய புத்தகங்கள் அடங்கிய நியாயப்பிரமாணம். என்றாலும், யூதருடைய முழு பைபிள், வாய்மொழி பிரமாணம், டால்மூட் (அடுத்த பக்கத்தைக் காண்க) ஆகியவற்றை குறிப்பிடுவதற்கும் “தோரா” என்ற பதம் பயன்படுத்தப்படலாம்.

நெவியிம்​—தீர்க்கதரிசிகள், அதாவது யோசுவா முதல் பெரிய தீர்க்கதரிசிகளான ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் வரையும், பிறகு ஓசியா முதல் மல்கியா வரையான 12 “சிறிய” தீர்க்கதரிசிகளும் எழுதியவை அடங்கும்.

கெதுவிம்​—பிற புத்தகங்கள், அதாவது கவிதை நடையிலுள்ள சங்கீதம், நீதிமொழிகள், யோபு, உன்னதப்பாட்டு, புலம்பல் ஆகிய புத்தகங்கள்; இவற்றோடு ரூத், பிரசங்கி, எஸ்தர், தானியேல், எஸ்றா, நெகேமியா, முதலாம் இரண்டாம் நாளாகமம் ஆகியவையும் அடங்கும்.

டால்மூட்

புற மதத்தவரின் கண்ணோட்டத்தில் பார்த்தால், “தானக்,” அதாவது யூத பைபிள்தான் யூதருடைய நூல்களிலேயே மிகவும் முக்கியமானது. ஆனால் யூதருடைய கண்ணோட்டமோ வேறு. அவர்களில் பலர் அடின் ஸ்டீன்சால்ட்ஸ் என்ற ரபீயின் குறிப்பை ஒப்புக்கொள்வர்: “பைபிள் யூத மதத்தின் மூலைக்கல் என்றால், டால்மூட் அதன் மையத்தூண்; இதுவே அஸ்திவாரத்திலிருந்து உயரமாக எழும்பி ஆன்மீக மற்றும் அறிவுப்பூர்வமான கட்டடத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. . . . யூதருடைய வாழ்வில் கோட்பாட்டளவிலும் செயலளவிலும் இதுபோல் செல்வாக்கு செலுத்திய நூல்கள் வேறு எதுவுமே இல்லை.” (தி எஸ்ஸென்ஷியல் டால்மூட்) அப்படியானால், டால்மூட் என்றால் என்ன?

சீனாய் மலையில் மோசேயிடம் எழுத்து வடிவிலான சட்டத்தை (written law), அதாவது தோராவை மட்டுமல்ல, நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவது சம்பந்தமாக திட்டவட்டமான விளக்கங்களையும் கடவுள் வெளிப்படுத்தினார் என்றும் இவை வாய்மொழியாக கடத்தப்பட வேண்டியிருந்தது என்றும் பாரம்பரியமிக்க யூதர்கள் நம்புகின்றனர்; இவற்றையே வாய்மொழி சட்டம் (oral law) என அழைக்கின்றனர். ஆகவே டால்மூட் என்பது அந்த வாய்மொழி சட்டத்தின் எழுத்துவடிவ சுருக்கமாகும், இதில் கருத்துரைகளும் விளக்கவுரைகளும் பின்னர் சேர்க்கப்பட்டன. இது பொ.ச. இரண்டாம் நூற்றாண்டு முதல் இடைக்காலம் வரை ரபீக்களால் தொகுக்கப்பட்டது.

டால்மூட் பொதுவாக இரண்டு பெரும் பகுதிகளாக பிரிக்கப்படுகிறது:

மிஷ்னா: வேதப்பூர்வ சட்டங்களுக்கு அளிக்கப்பட்ட கருத்துரைகளின் ஒரு தொகுப்பு. இது தனேயிம் [Tannaim (போதகர்கள்)] என அழைக்கப்பட்ட ரபீக்களுடைய விளக்கங்களின் அடிப்படையில் அமைந்தது. பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இது எழுத்து வடிவில் தோற்றுவிக்கப்பட்டது.

கெமேரா (ஆரம்பத்தில் டால்மூட் என்றழைக்கப்பட்டது): பிற்பட்ட காலத்தில் (பொ.ச. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை) ரபீக்கள் மிஷ்னாவுக்கு கொடுத்த விளக்கவுரைகளின் ஒரு தொகுப்பு.

இந்த இரு பெரும் பிரிவுகளோடுகூட இடைக்காலத்தில் ரபீக்கள் கெமேராவுக்கு கொடுத்த கருத்துரைகளும்கூட டால்மூட்டில் உள்ளன. ராஷி, ராம்பாம் என்பவர்களே இந்த ரபீக்களில் குறிப்பிடத்தக்கவர்கள். டால்மூட்டின் கடினமான மொழி நடையை ராஷி (சாலமோன் பென் ஐசக், 1040-1105) எளிமையாக்கினார். ராம்பாம் (மோசஸ் பென் மைமான், மைமானடிஸ் என்று பலரால் அறியப்பட்டவர், 1135-1204) டால்மூட்டை சுருக்கமான வடிவில் (“மிஷ்னே தோரா”) எழுதி, எல்லா யூதருக்கும் கிடைக்கும்படி செய்தார்.

[படங்கள்]

கீழே: ஈரானில் எஸ்தரின் கல்லறை என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து கிடைத்த பண்டைய தோரா; வலது: வேத வசனங்களின் அடிப்படையில் இயற்றப்பட்ட எபிரெய மற்றும் இட்டிஷ் மொழி துதிப்பாடல்கள்

[பக்கம் 226, 227-ன் பெட்டி/படங்கள்]

யூத மதம்​—பல கருத்துகள் அடங்கிய மதம்

பல்வேறு யூத மதப் பிரிவுகளுக்கு இடையே பெரிய வித்தியாசங்கள் உண்டு. மத சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவது யூத மதத்தின் பாரம்பரியமாக இருந்து வந்திருக்கிறது. நம்பிக்கைகளைப் பற்றியல்லாமல் இதுபோன்ற பழக்கவழக்கங்களைப் பற்றி தர்க்கம் செய்ததால் யூதர்கள் மத்தியில் பயங்கர பதற்றநிலை உருவானது, மூன்று முக்கிய பிரிவுகள் உருவாகவும் அடிகோலியது.

ஆர்த்தடாக்ஸ் யூத மதம்​—கடவுளுடைய ஏவுதலால் எபிரெய “தானக்” எழுதப்பட்டது என்று இந்த மதம் நம்புகிறது. அதோடு, சீனாய் மலையில் மோசே கடவுளிடமிருந்து எழுத்து வடிவிலான சட்டத்தைப் பெற்றபோது வாய்மொழி சட்டத்தையும் பெற்றார் என்றும் நம்புகிறது. ஆர்த்தடாக்ஸ் யூதர்கள் இந்த இரண்டு சட்டங்களையும் இம்மியும் பிசகாமல் கடைப்பிடிக்கின்றனர். மேசியா இனிமேல்தான் தோன்றுவார், இஸ்ரேலுக்கு பொற்காலத்தைத் தருவார் என அவர்கள் நம்புகின்றனர். ஆர்த்தடாக்ஸ் தொகுதிக்குள்ளேயே கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டதால் அதிலிருந்து பல்வேறு பிரிவுகள் உருவாகியுள்ளன. அதற்கு ஓர் உதாரணம் ஹசிடிஸம் (Hasidism) என்ற பிரிவாகும்.

ஹசிடிம் (சாசிடிம், “இறைப் பற்றுள்ளவன்” என்ற அர்த்தமுடையது)​—இவர்கள் தீவிர ஆர்த்தடாக்ஸ்காரர்களாக கருதப்படுகின்றனர். கிழக்கு ஐரோப்பாவில் 18-ம் நூற்றாண்டின் மத்தியில் பால் ஷெம் டோவ் (“நற்பெயரின் எஜமான்”) என்று அறியப்பட்ட இஸ்ரேல் பென் எலியாசரால் இது தோற்றுவிக்கப்பட்டது. ஆனந்தப் பரவசமடைய உதவும் இசையையும் நடனத்தையும் வலியுறுத்தும் போதனையை இப்பிரிவினர் கடைப்பிடிக்கின்றனர். மறுபிறப்பு உட்பட அவர்களுடைய அநேக நம்பிக்கைகள் கபாலா என்ற யூத மறைபொருள் நூல்களின் அடிப்படையிலானவை. இன்று இவர்களை ரபீக்கள், அதாவது ஸடிக்கிம் (zaddikim) என்பவர்கள் வழிநடத்துகின்றனர்; இவர்களை மாபெரும் மகான்களாக அல்லது புனிதர்களாக இவர்களது சீஷர்கள் கருதுகின்றனர்.

ஹசிடிம்கள் இன்று பெரும்பாலும் அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் வசிக்கின்றனர். 18-ம், 19-ம் நூற்றாண்டுகளில் கிழக்கு ஐரோப்பாவில் அணியப்பட்ட ஒருவித உடையை, முக்கியமாக கருப்பு நிறத்தில் அணிகின்றனர். இதனால் இன்றைய சமுதாயத்தில் இவர்களை சட்டென அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. இன்று இவர்கள் பல பிரிவுகளாக பிரிந்திருக்கின்றனர், பிரபல ரபீக்கள் பலரை பின்பற்றுகின்றனர். இவர்களில் மிகத் தீவிரமாக செயல்படும் தொதியினரே லூபாவிட்சர்ஸ் (Lubavitchers); யூதர்களை மதம் மாற்றுவதில் இவர்கள் தீவிரம் காட்டுகின்றனர். வேறு சில தொகுதியினரோ, யூதர்களை ஒரு தேசமாக திரும்ப நிலைநாட்டும் உரிமை மேசியாவுக்கு மாத்திரமே இருப்பதாக நம்புகின்றனர், இதனால் இஸ்ரேல் நாட்டை அவர்கள் எதிர்க்கின்றனர்.

சீர்திருத்த யூத மதம் (“முற்போக்கு,” “முன்னேற்றம்” என்றெல்லாம்கூட அழைக்கப்படுகிறது)​—19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த இயக்கம் மேற்கு ஐரோப்பாவில் ஆரம்பமானது. இது மோசஸ் மென்டல்சானுடைய கருத்துகளின் அடிப்படையில் உருவானது. இவர் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு யூத கல்விமான். யூதர்கள் புற மதத்தினரிடமிருந்து தங்களைப் பிரித்து வைத்துக் கொள்வதற்கு பதிலாக மேற்கத்திய கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உறுதியாக நம்பியவர். தோரா கடவுள் வெளிப்படுத்திய சத்தியம் என்பதை சீர்திருத்த யூதர்கள் நம்ப மறுக்கின்றனர். உணவுக் கட்டுப்பாடு, தூய்மை, உடை ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த யூத சட்டங்கள் இக்காலத்துக்கு பொருந்தாதவை என்பது இவர்களது கருத்து. “சர்வலோக சகோதரத்துவம் நிலவும் மேசியானிய சகாப்தம்” என அவர்கள் குறிப்பிடும் ஒரு காலம் வருமென உறுதியாக நம்புகின்றனர். சமீப காலங்களில் அதிக பாரம்பரியமிக்க யூத மதத்திற்கே அவர்கள் திரும்பியிருக்கின்றனர்.

கன்சர்வேடிவ் யூத மதம்​—இது ஜெர்மனியில் 1845-ல் சீர்திருத்த யூத மதத்திலிருந்து ஆரம்பமானது. பாரம்பரிய யூத மதப் பழக்கங்களில் பெரும்பாலானவற்றை சீர்திருத்த யூத மதம் நிராகரித்துவிட்டது என்ற ஆதங்கத்தால் இது உருவானது. வாய்மொழி சட்டத்தை கடவுளிடமிருந்து மோசே பெறவில்லை, யூத மதத்தை புதிய சகாப்தத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க விரும்பிய ரபீக்களே இந்த வாய்மொழி சட்டமான தோராவை கண்டுபிடித்தனர் என கன்சர்வேடிவ் யூத மதத்தினர் கூறுகின்றனர். பைபிள் போதனைகளும் ரபீக்களுடைய சட்டமும் “யூதர்களுடைய வாழ்க்கையின் நவீன தேவைகளுக்கு வளைந்து கொடுக்கும்” என்றால் மட்டுமே கன்சர்வேடிவ் யூதர்கள் அவற்றிற்கு உடன்படுகின்றனர். (த புக் ஆஃப் ஜூயிஷ் நாலெட்ஜ்) அவர்கள் தங்கள் வழிபாட்டில் எபிரெயு மொழியையும் ஆங்கில மொழியையும் பயன்படுத்துகின்றனர், உணவுக் கட்டுப்பாட்டு சட்டங்களை (காஸ்ருத்) கறாராக கடைப்பிடிக்கின்றனர். வழிபாட்டின்போது ஆண்களும் பெண்களும் சேர்ந்து உட்காருவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர், இது ஆர்த்தடாக்ஸ் பிரிவில் அனுமதிக்கப்படுவது கிடையாது.

[படங்கள்]

இடது, எருசலேமில் புலம்பல் சுவருக்கு (Wailing Wall) அருகே யூதர்கள்; மேலே, ஜெபம் செய்யும் யூதர்; பின்புறத்தில், எருசலேம்

[பக்கம் 230, 231-ன் பெட்டி/படங்கள்]

சில முக்கிய பண்டிகைகளும் பழக்கவழக்கங்களும்

யூதர்கள் கொண்டாடும் பெரும்பாலான பண்டிகைகள் பைபிள் அடிப்படையிலானவை; பொதுவாக இவை பல்வேறு அறுவடைக் காலங்களோடு அல்லது வரலாற்று சிறப்புமிக்க சம்பவங்களோடு சம்பந்தப்பட்டவை.

▪ சாபத் (ஓய்வுநாள்)​—யூதர்களின் வார நாட்களில் ஏழாவது நாள் (வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்திலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை) அந்த வாரத்தைப் பரிசுத்தப்படுத்துவதாக கருதப்படுகிறது. இந்த நாளை விசேஷமாக ஆசரிப்பது வழிபாட்டின் முக்கிய பாகம். தோராவை வாசிப்பதற்கும் ஜெபங்கள் செய்வதற்கும் யூதர்கள் அன்று ஜெபாலயத்திற்குச் செல்கின்றனர்.​—யாத்திராகமம் 20:8-11.

▪ யோம் கிப்பூர்​—பாவ நிவாரண நாள், உபவாசத்துடன் சுய பரிசோதனை செய்து பயபக்தியோடு கொண்டாடப்படுகிறது. யூதர்களின் புத்தாண்டான ரோஷ் ஹஷானாவில் ஆரம்பமான பத்து நாள் துக்க அனுஷ்டிப்பு இத்துடன் முடிவடைகிறது. இந்தப் புத்தாண்டு யூதர்களின் தற்போதைய நாட்காட்டியின் பிரகாரம் செப்டம்பரில் வருகிறது.​—லேவியராகமம் 16:29-31; 23:26-32.

▪ சுக்கோத் (மேலே வலது)​—கூடாரப் பண்டிகை அல்லது சேர்ப்பு கால பண்டிகை. அறுவடையையும் வேளாண்மை வருடத்தின் பெரும்பகுதியின் நிறைவையும் கொண்டாடுகின்றனர். இது அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது.​—லேவியராகமம் 23:34-43; எண்ணாகமம் 29:12-38; உபாகமம் 16:13-15.

▪ ஹனுக்கா​—பிரதிஷ்டை பண்டிகை. டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் பிரபலமான பண்டிகை. மக்கபேயரால் சீரிய-கிரேக்க ஆதிக்கத்திலிருந்து யூதர்கள் விடுதலை பெற்று எருசலேம் ஆலயத்தை பொ.ச.மு. 165 டிசம்பரில் மறுபிரதிஷ்டை செய்த நாளை நினைவுகூரும் பண்டிகை. பொதுவாக எட்டு நாட்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி கொண்டாடப்படுவதால் வித்தியாசமானதாக இருக்கிறது.

▪ பூரீம்​—சீட்டுப் பண்டிகை. பிப்ரவரியின் பிற்பகுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் கொண்டாடப்படுகிறது. பொ.ச.மு. ஐந்தாவது நூற்றாண்டில் பெர்சியாவில் யூதர்கள் ஆமானிடமிருந்தும் அவன் படுகொலை சதித்திட்டத்திலிருந்தும் தப்பியதை நினைவுகூரும் நாள்.​—எஸ்தர் 9:20-28.

▪ பெஸக்​—பஸ்கா பண்டிகை. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து (பொ.ச.மு. 1513) இஸ்ரவேலர் விடுதலை பெற்றதை நினைவுகூரும் நாள். யூதர்களின் பண்டிகைகளிலேயே மிகச் சிறப்பு வாய்ந்த, மிகப் பழமையான பண்டிகை இதுவே. (யூத நாட்காட்டியின்படி) நிசான் 14-ஆம் தேதியன்று இது கொண்டாடப்படுகிறது, பொதுவாக மார்ச் மாத கடைசியில் அல்லது ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இது வருகிறது. ஒவ்வொரு யூத குடும்பமும் செடர் எனப்பட்ட பஸ்கா போஜனத்தை பகிர்ந்து கொள்ள ஒன்றுகூடி வருவர். அதைத் தொடர்ந்துவரும் ஏழு நாட்களுக்கு புளிப்பு எதுவும் சேர்க்கப்படுவதில்லை. இந்தக் காலப்பகுதி புளிப்பில்லா அப்பப் பண்டிகை (மட்ஸோட்) என அழைக்கப்படுகிறது.​—யாத்திராகமம் 12:14-20, 24-27.

யூதரின் சில பழக்கங்கள்

▪ விருத்தசேதனம்​—யூத ஆண் குழந்தைகளுக்கு செய்யப்படும் ஒரு முக்கியமான சடங்கு, குழந்தை பிறந்த எட்டாம் நாளில் செய்யப்படுகிறது. விருத்தசேதனம் என்பது கடவுள் ஆபிரகாமோடு செய்துகொண்ட உடன்படிக்கையின் அடையாளமாக இருந்ததால் இது ஆபிரகாமிய உடன்படிக்கை என்று அழைக்கப்படுகிறது. யூத மதத்துக்கு மாறுகிற ஆண்களும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும்.​—ஆதியாகமம் 17:9-14.

▪ பார் மிட்ஸ்வா (கீழே)​—இது யூதர்களின் மற்றொரு முக்கியமான சடங்கு. இதன் நேரடியான அர்த்தம் “கட்டளையின் குமாரன்” என்பதாகும். “ஆன்மீகத்திலும் சட்டப்படியும் முழு வளர்ச்சியடைவதை அர்த்தப்படுத்தும் ஒரு பதமாகும், பையன்கள் 13 வயது முடிந்த மறுநாள் இந்த அந்தஸ்தைப் பெறுவதை வெளிப்படையாக காண்பிக்கும் சந்தர்ப்பமாகும்.” பொ.ச. 15-ம் நூற்றாண்டில்தான் இது யூதர்களின் ஒரு பழக்கமாக ஆனது.​—என்ஸைக்ளோப்பீடியா ஜூடேய்க்கா.

▪ மெசுசா (மேலே)​—வீட்டிற்குள் நுழைகையில் வாசற்கதவின் வலது பக்கத்தில் காணப்படும் மெசுசாவை, அதாவது சுருள் பெட்டியை வைத்தே அது ஒரு யூதருடைய வீடு என சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளலாம். மெசுசா என்பதில் உபாகமம் 6:4-9 மற்றும் 11:13-21-லுள்ள வார்த்தைகள் ஒரு சிறிய தோல் சுருளில் எழுதப்பட்டிருக்கும். அது ஒரு சிறிய பெட்டியில் வைக்கப்பட்டு, தங்குவதற்கான ஒவ்வொரு அறையின் கதவுகளிலும் பொருத்தப்பட்டிருக்கும்.

▪ யார்முல்கி (ஆண்களுக்குரிய தொப்பி)​—என்ஸைக்ளோப்பீடியா ஜூடேய்க்கா-வின் பிரகாரம்: “ஆர்த்தடாக்ஸ் யூதர்கள் . . . ஜெப ஆலயத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தலையை மூடியிருப்பது யூத பாரம்பரியத்தின் மீது ஒருவர் காட்டும் மரியாதைக்கு அடையாளம் என கருதுகிறார்கள்.” வழிபாட்டின்போது தலையை மூடியிருக்க வேண்டும் என “தானக்”கில் எங்குமே குறிப்பிடப்படவில்லை, எனவே விருப்பமிருந்தால் மூடிக்கொள்ளலாம் என டால்மூட் குறிப்பிடுகிறது. ஹசிடிக் பிரிவைச் சேர்ந்த யூத பெண்கள் எல்லா சமயங்களிலும் முக்காடிட்டுக் கொள்கின்றனர் அல்லது தலையை மொட்டையடித்து ‘விக்’ வைத்துக் கொள்கின்றனர்.

[பக்கம் 206-ன் படம்]

யூதர்களின் முற்பிதாவான ஆபிராம் (ஆபிரகாம்), சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பே யெகோவாவை வணங்கினார்

[பக்கம் 208-ன் படம்]

இஸ்ரவேலையும் யூத மதத்தையும் குறிக்கும் சின்னமாகிய தாவீதின் நட்சத்திரம் பைபிள்பூர்வமற்றது

[பக்கம் 215-ன் படம்]

ஒரு யூத வேதபாரகர் எபிரெய பைபிளை பிரதியெடுக்கிறார்

[பக்கம் 222-ன் படம்]

ஹசிடிக் யூத குடும்பம் ஓய்வுநாளை ஆசரிக்கிறது

[பக்கம் 233-ன் படம்]

பக்தியுள்ள யூதர்கள், ஜெப சுருள்கள் அடங்கிய சிறு பெட்டிகளை கையிலும் நெற்றியிலும் அணிந்திருக்கிறார்கள்