Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

6. புத்த மதம்கடவுளின்றி ஞானோதயத்தைத் தேடி

6. புத்த மதம்கடவுளின்றி ஞானோதயத்தைத் தேடி

அதிகாரம் 6

புத்த மதம்—கடவுளின்றி ஞானோதயத்தைத் தேடி

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவிலும் அதற்கடுத்த நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஆசியாவுக்கு வெளியே அறியப்படாதிருந்த புத்த மதம் இன்று ஓர் உலக மதமாக வளர்ந்துள்ளது. சொல்லப்போனால், மேற்கத்திய நாட்டவர் பலர் தங்கள் சுற்றுவட்டாரத்திலும்கூட புத்த மதம் தழைத்தோங்குவதைப் பார்த்து ஆச்சரியமடைகின்றனர். உலகெங்கிலுமிருந்து அகதிகள் இடம் பெயர்ந்து சென்றிருப்பதே அங்கு இம்மதம் தழைத்தோங்க பெரும்பாலும் காரணம். மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அநேக இடங்களில் கணிசமான எண்ணிக்கையில் ஆசிய மக்கள் குடியேறியிருக்கின்றனர். இவர்களில் அநேகர் புதிய நாடுகளில் குடியேறும்போது தங்கள் மதத்தையும் தங்களோடு கொண்டு சென்றிருக்கின்றனர். அதேசமயத்தில் மேற்கத்திய நாடுகளிலுள்ள திரளானோர் புத்த மதத்தை முதன்முறையாக நேருக்கு நேர் கண்டறிகின்றனர். இந்தக் காரணத்தினாலும், பாரம்பரிய சர்ச்சுகள் கண்டிப்பும் கட்டுப்பாடும் இல்லாமல் ஆன்மீகத்தில் வீழ்ச்சியுற்று இருப்பதை பார்த்த காரணத்தினாலும் சிலர் அவற்றிலிருந்து விலகி, இந்தப் “புதிய” மதத்தில் சேர்ந்திருக்கின்றனர்.​—2 தீமோத்தேயு 3:1, 5.

2புத்த மதத்தினர் உலகம் முழுவதிலும் சுமார் 35.6 கோடி பேர் இருக்கின்றனர் என த உவர்ல்டு அல்மனேக் அண்டு புக் ஆஃப் ஃபேக்ட்ஸ் 2001 சொல்கிறது; ஐரோப்பாவில் சுமார் 15 லட்சம் பேரும், வட அமெரிக்காவில் 26 லட்சம் பேரும், லத்தீன் அமெரிக்காவில் 6,35,000 பேரும் இருக்கின்றனர். ஆனால் புத்த மதத்தைச் சேர்ந்த பெரும்பாலோர் இலங்கை, மயன்மார் (பர்மா), தாய்லாந்து, ஜப்பான், கொரியா, சீனா போன்ற ஆசிய நாடுகளில் இன்னமும் இருக்கின்றனர். முதலாவதாக, புத்தர் என்பவர் யார்? இந்த மதம் எவ்வாறு தோன்றியது? புத்த மதத்தின் போதனைகளும் பழக்கவழக்கங்களும் யாவை?

நம்பகமான ஆதாரம் உண்டா?

3“புத்தரின் வாழ்க்கை பற்றிய தகவல்கள் பெரும்பாலும் அதிகாரப்பூர்வ பதிவுகளிலிருந்தே பெறப்பட்டிருக்கின்றன; இவற்றில் பாலி என்ற பண்டைய இந்திய மொழியில் எழுதப்பட்டுள்ள பதிவுகள் மிகவும் விரிவானவை, விவரமானவை” என்று உலக மதங்கள்​பண்டைய வரலாறு முதல் இன்று வரை நூல் சொல்கிறது. ஆக, பொ.ச.மு. ஆறாவது நூற்றாண்டின்போது வட இந்தியாவில் வாழ்ந்த சித்தார்த்த கெளதமரைப் பற்றி​—புத்த மதத்தைத் தோற்றுவித்தவரைப் பற்றி​—அறிந்துகொள்ள அவர் காலத்தில் எழுதப்பட்ட பதிவுகள் எதுவும் இல்லை. இது ஒரு சிக்கலை ஏற்படுத்துகிறது. ஆனால் இதைவிட முக்கியமாக சிந்திக்க வேண்டிய கேள்வி என்னவென்றால், அந்த ‘அதிகாரப்பூர்வ பதிவுகள்’ எப்போது, எவ்வாறு எழுதப்பட்டன என்பதே.

4கெளதமர் மரணமடைந்த பிறகு, 500 பௌத்த பிக்குகள் அடங்கிய ஒரு குழு, குருவின் உண்மையான போதனைகள் என்ன என்பதைத் தீர்மானிக்க உடனடியாக ஒன்றுகூடியதாக புத்த பாரம்பரியம் சொல்கிறது. ஆனால் இப்படி ஒரு குழு உண்மையிலேயே கூடியதா இல்லையா என்பது புத்தமத கல்விமான்கள், சரித்திராசிரியர்கள் ஆகியோர் மத்தியில் இன்னமும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. என்றாலும் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்பு என்னவென்றால், அவர்கள் ஒன்றுகூடி தீர்மானித்த அதிகாரப்பூர்வமான போதனைகள் எதுவும் எழுதி வைக்கப்படவில்லை, சீடர்கள் அவற்றை மனப்பாடம் மட்டுமே செய்துகொண்டார்கள் என்று புத்த மத உரைகள்கூட ஒப்புக்கொள்கின்றன. வருடங்கள் பல உருண்டோடிவிட்ட பின்னர்தான் புனித உரைகள் முறைப்படி எழுதி வைக்கப்பட்டன.

5பாலி மொழியில் மிகப் பழமையான இந்த ‘அதிகாரப்பூர்வ பதிவுகள்’ பொ.ச.மு. முதல் நூற்றாண்டில் வடகாமணி அபயா என்ற ராஜாவின் ஆட்சிக் காலத்தின்போது எழுத்தில் வடிக்கப்பட்டன என்று பொ.ச. நான்காம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளை சேர்ந்த இலங்கை நாட்டின் வரலாற்றுப் பதிவுகள் சொல்கின்றன. புத்தரின் வாழ்க்கை பற்றிய மற்ற விவரங்கள் பொ.ச. முதல் நூற்றாண்டில் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில்தான், அதாவது அவருடைய காலத்துக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்தான் எழுத்தில் வடிக்கப்பட்டன.

6இதன் காரணமாகவே அபிங்டன் டிக்ஷ்னரி ஆஃப் லிவிங் ரிலிஜன்ஸ் இவ்வாறு சொல்கிறது: இவருடைய “‘வாழ்க்கை சரிதைகள்’ காலந்தாழ்த்தி எழுதப்பட்டுள்ளன, அவற்றில் ஏராளமான கற்பனைகளும் கட்டுக்கதைகளும் திணிக்கப்பட்டிருக்கின்றன. மிகப் பழமையான அதிகாரப்பூர்வ பதிவுகளிலும்கூட காலங்காலமாக கடத்தப்பட்ட வாய்மொழி தகவல்களே இடம் பெற்றுள்ளன. அவற்றில் சில திருத்தப்பட்டுள்ளன, பல சேர்க்கப்பட்டுள்ளன.” சொல்லப்போனால், “பதிவாகியுள்ள போதனைகளில் ஒரு வார்த்தையைக்கூட கெளதமர் கூறியதாக நம்மால் நிச்சயத்துடன் சொல்ல முடியாது என வாதிட்டார்” ஒரு கல்விமான். இப்படிப்பட்ட விமர்சனங்கள் நியாயமானவையா?

கருவுறுதலும் பிறப்பும்

7பாலி மொழியிலுள்ள அதிகாரப்பூர்வ புத்தகத் தொகுப்பின் ஒரு பகுதியான ஜட்டக்காவிலிருந்தும், புத்தரின் வாழ்க்கைக் குறிப்பு பற்றிய புத்த-சரிதா (பொ.ச. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது) என்ற சமஸ்கிருத உரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பின்வரும் பகுதியை கவனியுங்கள். முதலாவதாக, புத்தரின் தாயான ராணி மகா மாயாதேவி அவரைக் கருவுற்றதைப் போல் கனவு கண்டதைப் பற்றிய பதிவை கவனியுங்கள்.

“நான்கு காவல் தூதர்கள் வந்து அவளை மஞ்சத்தோடு சேர்த்து இமய மலைக்கு கொண்டு சென்றனர். . . . பிறகு இந்தக் காவல் தூதர்களின் மனைவிமார் வந்து அவளை அனோதாதா என்ற ஏரிக்கு அழைத்துச் சென்று எல்லா மனித கறையும் நீங்கும்படி குளிப்பாட்டினர். . . . அருகே ஒரு வெள்ளி மலை இருந்தது, அதில் ஒரு தங்க அரண்மனையும் இருந்தது. அங்கே தலைப்பகுதி கிழக்கு பார்த்தவண்ணமாக ஒரு தெய்வீக மஞ்சத்தை விரித்து அதில் அவளைக் கிடத்தினர். புத்தராக பிறக்கவிருந்தவர் இப்போது அழகான ஒரு வெள்ளை யானையாக மாறினார் . . . அவர் வெள்ளி மலை மீது ஏறி வந்து, . . . வலதுபுறமாக தன் தாயின் மஞ்சத்தைச் சுற்றி மூன்று முறை பிரதட்சணம் செய்த பின், அவளுடைய வலது பக்கத்தை தட்டி கருப்பைக்குள் நுழைந்தது போல கண்டாள். இப்படியாக மத்திப கோடைகால விழாவின்போது அவள் கருவுற்றாள்.”

8அந்த ராணி தான் கண்ட கனவை தன் கணவனிடம் கூறியபோது, பிரபல இந்து பூசாரிகள் 64 பேரை அவர் வரவழைத்து அவர்களுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் கொடுத்து இந்தக் கனவை விளக்குமாறு கேட்டார். அவர்கள் கொடுத்த விளக்கம் இதுவே:

“கவலை வேண்டாம் மாமன்னரே! . . . உமக்கு ஒரு மகன் பிறப்பார். அவர் இல்வாழ்க்கையில் இணைந்து நின்றால், இவ்வுலகையே ஆளும் அரசராவார்; இல்வாழ்க்கையிலிருந்து விலகி துறவை நாடினால் புத்தராவார்; அப்போது இந்த உலகிலிருந்து பாவத்தையும் மடமையையும் போக்கியருள்வார்.”

9அதன் பின்பு 32 அற்புதங்கள் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது:

“பத்தாயிரம் உலகங்களும் திடீரென அதிர்ந்தன, நடுங்கின, ஆட்டங்கண்டன. . . . எல்லா நரகங்களிலும் நெருப்பு அணைந்துபோனது; . . . மனிதர் மத்தியில் நோய்கள் மறைந்தன; . . . எவரும் இசைக்காதபோதே எல்லா இசைக் கருவிகளிலிருந்தும் நாத ஒலி கிளம்பின; . . . பெரும் சமுத்திரங்களில் தண்ணீர் தித்திப்பாயிற்று; . . . பத்தாயிரம் உலகங்களும் ஒன்றாக சேர்ந்து அற்புதமே உருவான மாலைகளின் ஒரு பெருங்குவியலாயிற்று.”

10அதன் பிறகு புத்தர் மிகவும் அசாதாரணமான முறையில் லும்பினி சோலை என்றழைக்கப்பட்ட சால் மர தோட்டத்தில் பிறந்தார். ராணி அச்சோலையில் இருந்த மிக உயரமான சால் மரத்தின் கிளையைப் பிடித்துக்கொள்ள விரும்பினாள், எனவே அந்த மரம் அவள் கைக்கு எட்டும் வகையில் தன் கிளையை சாய்த்துக் கொடுத்து உதவியது. கிளையைப் பிடித்துக்கொண்டு நின்றவாறே அவள் தன் மகனை ஈன்றாள்.

“தாயின் கருப்பையில் இருக்கும் அசுத்தம் எதுவும் உடலில் ஒட்டாமல், மத போதகர் ஒருவர் தன்னுடைய ஆசனத்திலிருந்து இறங்கி வருவது போல, அல்லது படிக்கட்டுகளிலிருந்து ஒருவர் இறங்கி வருவது போல தன் கை கால்களை நீட்டிக்கொண்டு தாயின் கருப்பையிலிருந்து அவர் வெளிப்பட்டார். . . . ”

“[எதிர்கால புத்தர்] பிறந்தவுடனே தரையில் காலூன்றி நின்றார், வட திசை நோக்கி ஏழு அடிகள் எடுத்து வைத்தார், தலைக்கு மேலே வெள்ளை விதானம் ஒன்றிருக்க உலகின் ஒவ்வொரு மூலையையும் நோட்டமிட்டு ஈடிணையற்ற கம்பீரமான குரலில் இவ்வாறு சொன்னார்: உலகம் முழுவதிலும் யாமே பெரியவர், சிறந்தவர், பிரதானமானவர்; இதுவே எமது கடைசி பிறப்பு; இனி மீண்டும் ஜனிக்க மாட்டேன்.”

11இது தவிர, அவருடைய பிள்ளைப் பருவத்தைப் பற்றியும், அவருடைய அபிமானிகளான இளம் பெண்களை சந்தித்தது பற்றியும், பல இடங்களில் அவர் சுற்றித் திரிந்தது பற்றியும், ஏன் அவரது வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றியும் இன்னும் பல விரிவான கதைகளும் இருக்கின்றன. அதனால்தானோ என்னவோ இவை எல்லாமே கட்டுக்கதைகளென்றும், புராணக் கதைகளென்றும் சொல்லி பெரும்பாலான அறிஞர்கள் அவற்றை ஒதுக்கிவிட்டார்கள். “ஏராளமான கட்டுக்கதைகளும் அற்புதங்களும்” இருப்பதால் “புத்தரின் நிஜ வாழ்க்கை வரலாற்றைக் கண்டுபிடிப்பது இயலாத காரியம்” என்று பிரிட்டிஷ் அருங்காட்சியக அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

12இத்தகைய கதைகள் வலம் வருகிறபோதிலும், புத்தரின் வாழ்க்கை பற்றி எங்கும் அறியப்பட்ட பாரம்பரிய பதிவு ஒன்று உள்ளது. இலங்கையிலுள்ள கொழும்புவில் வெளியிடப்பட்ட புத்த மத கையேடு என்ற நவீன ஆங்கில புத்தகம் கீழ்க்காணும் இந்த எளிய விவரத்தைத் தருகிறது.

“கி.மு. 623-ம் ஆண்டு மே மாதம் பெளர்ணமி தினத்தன்று சித்தாத்த கோதம a என்ற பெயர் கொண்ட இந்திய இளவரசர் நேப்பாளம் மாவட்டத்தில் சாக்கிய வம்சத்தில் பிறந்தார். ராஜா சுத்தோதனன் அவரது தந்தை; ராணி மகா மாயா அவரது தாய். குழந்தையை ஈன்றெடுத்த சில நாட்களில் அவள் உயிர் நீத்தாள். மகா பிரஜாபதி கெளதமி அவரின் செவிலித் தாயானாள்.

“அவர் பதினாறு வயதில் யசோதரை என்ற அழகிய இளவரசியை சொந்தத்தில் திருமணம் செய்துகொண்டார்.

“அரண்மனைக்கு வெளியே இருந்த வாழ்க்கையின் துயரங்களை அறியாதவராக சுமார் பதிமூன்று ஆண்டுகள் இல்லற வாழ்வில் இன்பமாகவும் செல்வச் செழிப்போடும் வாழ்ந்து வந்தார்.

“காலம் செல்லச் செல்ல, படிப்படியாக அவருக்கு உண்மை புரிய ஆரம்பித்தது. 29-வது வயதில் அவருக்கு இராகுலன் என்ற மகன் பிறந்தபோது அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புக்கட்டம் ஏற்பட்டது. அவர் தமது மகனை ஓர் இடையூறாக கருதினார், ஏனென்றால் பிறப்புக்கும் பிணிக்கும் மரணத்துக்கும் யாருமே நீங்கலாக இல்லை என்ற உண்மை அவருக்கு விளங்கியது. இவ்வாறு, உலகெங்கிலும் துயரங்கள் காணப்படுவதை உணர்ந்து, மரணத்திலிருந்து உலகை உய்விப்பதற்காக ஒரு சர்வரோக நிவாரணியைக் கண்டுபிடிக்க உறுதிபூண்டார்.

“ஆகையால் அரண்மனை இன்பங்களைத் துறந்து, ஓர் இரவு . . . தன் தலைமுடியை சிரைத்து, காவியுடை அணிந்து, வீட்டைவிட்டு வெளியேறி, மெய்யறிவைத் தேடி அலைய ஆரம்பித்தார்.”

13அவருடைய வாழ்க்கை பற்றிய இக்குறிப்புகள் ‘அதிகாரப்பூர்வ பதிவுகளில்’ காணப்படும் திகைப்பூட்டும் குறிப்புகளுக்கு நேர் மாறாக இருப்பது தெளிவாக உள்ளது. அவர் பிறந்த ஆண்டைப் பற்றிய விஷயத்தைத் தவிர அதிலுள்ள மற்ற குறிப்புகள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

ஞானோதயம்​—அது கிடைத்த விதம்

14மேற்கூறப்பட்டபடி, எது ‘அவரது வாழ்க்கையில் பெரிய திருப்புக்கட்டமாய்’ அமைந்தது? நோயுற்றிருந்த ஒரு மனிதனையும், ஒரு கிழவனையும், ஒரு சடலத்தையும் முதன்முறையாக கண்ட சமயம்தான் வாழ்க்கையில் அவருக்கு ஒரு திருப்புக்கட்டமாய் அமைந்தது. துன்பங்களை அனுபவித்து, மூப்படைந்து செத்துப்போகவே மனிதன் பிறக்கிறானா, இதுதான் வாழ்க்கையின் அர்த்தமா? என்று அச்சம்பவங்கள் அவரை சிந்திக்க வைத்தன; மனவேதனை அடையச் செய்தன. பிற்பாடு, மெய்யறிவை நாடி உலக வாழ்வைத் துறந்த ஒரு சன்னியாசியை அவர் கண்டதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகுதான், தன் குடும்பத்தையும் செல்வங்களையும் இளவரசர் பட்டத்தையும் துறந்து, தன் மனதில் எழுந்த கேள்விக்கான பதிலைத் தேடி இந்து மத ஆசான்களிடமும் குருக்களிடமும் செல்ல தூண்டப்பட்டார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு இப்படி அலைந்து திரிந்தபோதிலும் அவருக்கு பதில் கிடைக்கவே இல்லை. தியானம், விரதம், யோகாசனம், கடும் சன்னியாசம் போன்ற பல வழிகளை அவர் முயன்றதாக பதிவுகள் சொல்கின்றன. ஆனாலும் அவருக்கு ஆன்மீக அமைதி கிட்டவில்லை, ஞானோதயமும் பிறக்கவில்லை.

15முன்பு அனுபவித்த ராஜபோக வாழ்க்கை எப்படி பயனற்றதோ அதே விதமாக கடும் சன்னியாச வாழ்க்கையும் பயனற்றது என்பதை இறுதியில் உணரத் தொடங்கினார். ஆகவே, இந்த இரண்டு வாழ்க்கையையும் விட்டுவிட்டு மத்திப மார்க்கம் என்ற ஒன்றை கடைப்பிடிக்க ஆரம்பித்தார். கேள்விகளுக்கான பதில் தன் சொந்த உணர்வில் உண்டு என நினைத்து, ஒரு போதி மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தார். மாறன் என்ற பிசாசின் தாக்குதல்களையும் சோதனைகளையும் சமாளித்து நான்கு வாரங்களுக்கு (சிலர் ஏழு வாரங்களுக்கு என்று சொல்கின்றனர்) கடும் தியானம் செய்தார். அதன் பிறகு எல்லா அறிவுக்கும் புரிந்துகொள்ளுதலுக்கும் மேலான ஞானோதயத்தை அவர் பெற்றார் என சொல்லப்படுகிறது.

16இவ்வாறு, புத்த மதத்தின் சொல் வழக்குப்படி, கெளதமர் புத்தரானார்​—அறிவொளி, அதாவது ஞானோதயம் பெற்றவரானார். கடைசியாக நிர்வாணம் என்ற நிலையை அடைந்தார், அதாவது ஆசாபாசங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் விடுபட்டு பூரண அமைதியையும் ஞானோதயத்தையும் அடைந்தார். சாக்கியமுனி (சாக்கியர் குலத்து முனிவர்) என்றும்கூட அவர் அறியப்பட்டார். அடிக்கடி தன்னை ததாகதர் ([போதிக்க] வந்தவர்) என அழைத்துக்கொண்டார். ஆனால் இந்த விஷயத்தைப் பற்றி பல்வேறு புத்தமத பிரிவுகளிலும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. தானாகவே ஞானோதயம் பெற்று அதை தன் சீடர்களுக்குக் கற்பித்த ஒரு மனிதராக மட்டுமே அவரை சிலர் கருதுகின்றனர். மற்றவர்களோ, புத்தரின் உபதேசத்தை அல்லது அவரது மார்க்கமாகிய தர்மத்தை (பாலி மொழியில், தம்மா) போதிக்கவும் புதுப்பிக்கவும் உலகிற்கு வந்த புத்தர்களில் கடைசியானவராக அவரை கருதுகின்றனர். இன்னும் சிலர் அவரை போதிசத்வர், அதாவது தான் ஞானோதயம் பெற்றாலும் மற்றவர்கள் ஞானோதயம் பெற உதவ வேண்டும் என்பதற்காக நிர்வாணம் எனும் நிலைக்குள் பிரவேசிப்பதைத் தள்ளிப்போட்டவர் என்று கருதுகின்றனர். எது உண்மையாயிருந்தாலும், அவர் ஞானோதயம் பெற்றது அதிமுக்கியமான ஒரு நிகழ்ச்சியென்று புத்த மதத்தின் அனைத்துப் பிரிவினருமே கருதுகின்றனர்.

ஞானோதயம்​—அது என்ன?

17ஞானோதயம் பெற்றதும், புத்தர் தான் புதிதாய் கண்டடைந்த மெய்யறிவை, தனது தர்மத்தை, மற்றவர்களுக்குப் போதிப்பதற்காக புறப்பட்டார்; ஆரம்பத்தில் ஏற்பட்ட தயக்கத்தை ஓரளவு சமாளித்துக் கொண்டு புறப்பட்டு சென்றார். தனது முதல், மிக முக்கிய உபதேசத்தை பனாரஸ் நகரிலுள்ள மான் சோலையில் ஐந்து பிக்குகளுக்கு​—சீடர்கள் அல்லது துறவிகளுக்கு கொடுத்தார். அந்த உபதேசத்தின்படி, விடுதலை அடைவதற்கு ஒருவர் சுகவாசத்தையும், துறவு வாழ்க்கையையும் தவிர்த்து, மத்திப மார்க்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்; பின்பு, ஒருவர் நான்கு உயரிய சத்தியங்களைப் புரிந்துகொண்டு அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று போதித்தார். (எதிர்ப் பக்கத்திலுள்ள பெட்டியைக் காண்க.) அவற்றை கீழ்க்கண்டவாறு சுருக்கமாக கூறலாம்:

(1வாழ்க்கையே துன்ப மயமானது.

(2ஆசை அல்லது அவாவே துன்பத்திற்குக் காரணம்.

(3ஆசைகளை ஒழித்தால் துன்பம் தீரும்.

(4ஒருவருடைய நடத்தை, சிந்தனை, நம்பிக்கை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, அஷ்டாங்கிக மார்க்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் ஆசைகளை ஒழித்திடலாம்.

18மத்திப மார்க்கமும், நான்கு உயரிய சத்தியங்களும் பற்றிய உபதேசம் ஞானோதயத்தின் சாராம்சமாகும். இந்த உபதேசமே புத்தரின் அனைத்து போதனைகளின் இரத்தின சுருக்கம் என்பதாக கருதப்படுகிறது. (அதனுடன், மத்தேயு 6:25-34; 1 தீமோத்தேயு 6:17-19; யாக்கோபு 4:1-3; 1 யோவான் 2:15-17 ஆகிய வசனங்களை ஒப்பிட்டு வேறுபாட்டைக் காண்க.) இந்த உபதேசம் கடவுளிடமிருந்து வந்ததாக கெளதமர் சொல்லவில்லை. ஆனால் இது “ததாகதர் கண்டறிந்தது” என கூறுவதன் மூலம் தானே அந்த உபதேசத்தை தோற்றுவித்தவர் என்பதை வெளிப்படுத்தினார். மரணப் படுக்கையில் புத்தர் தன் சீடர்களுக்கு இவ்விதமாக சொன்னதாக கூறப்படுகிறது: “எவருடைய உதவியையும் நாடாமல் சத்தியத்திலே தன்னந்தனியாக நின்று முக்தியை நாடித் தேடுங்கள்.” ஆக, ஞானோதயம் தெய்வத்திடமிருந்து வருவது இல்லை, ஆனால் நல்ல சிந்தனை, நல்ல செயல்கள் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள ஒருவர் எடுக்கும் சொந்த முயற்சியிலிருந்துதான் வருகிறது என்பது புத்தரின் கருத்தாகும்.

19அச்சமயத்திலிருந்த இந்தியர்கள் மத்தியில் இந்தப் போதனை ஏன் நல்ல வரவேற்பை பெற்றது என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். ஒரு பக்கத்தில் இந்து மத பிராமணர்கள், அதாவது புரோகித ஜாதியினர் முன்னேற்றுவித்த பேராசைமிக்க, மோசமான பழக்கவழக்கங்களை இந்தப் போதனை கண்டனம் செய்தது. மறுபக்கத்தில் சமண மதத்தவரும், மற்ற மறைஞான பிரிவுகளும் கடைப்பிடித்து வந்த கடும் துறவறத்தையும் கண்டனம் செய்தது. அதுமட்டுமல்ல, பலிகளுக்கும் சடங்குகளுக்கும், எண்ணற்ற தெய்வங்கள் மற்றும் தேவிகளின் வணக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்ததோடு, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் அடக்கி ஆண்ட ஜாதிப் பிரிவுகளையும் ஒழித்துக்கட்டியது. சுருங்கச் சொன்னால், புத்தரின் மார்க்கத்தை பின்பற்ற விரும்பிய எவருக்கும் அது விடுதலை தருவதாக வாக்குறுதி அளித்தது.

புத்த மதம் பாரெங்கும் பரவுகிறது

20புத்தரின் போதனைகளை அந்த ஐந்து பிக்குகள் ஏற்றுக்கொண்டபோது, அவர்களே அதன் முதல் சங்கத்தின் அங்கத்தினர்கள் ஆனார்கள், அதாவது பிக்குகளின் முதல் தொகுதியினர் ஆனார்கள். இவ்வாறு மக்களை ஞானோதயத்திற்கு வழிநடத்தும் என்பதாக கருதப்பட்ட புத்த மதத்தின் “மூன்று இரத்தினங்கள்” (திரிரத்னம்) அதாவது புத்தம், தர்மம், சங்கம் ஆகியவை பூரணமாயின. இவ்வாறு நன்கு தயாரானவராய், கெளதம புத்தர் கங்கை சமவெளியின் நான்கு திக்குகளுக்கும் சென்று போதிக்க ஆரம்பித்தார். மேல்மட்டம் கீழ்மட்டம் என சமூகத்தின் எல்லா நிலை மக்களும் அவருடைய போதனைகளை கேட்பதற்காக அவரைத் தேடி வந்தனர், பிறகு, அவருடைய சீடர்களாயினர். தன்னுடைய 80-வது வயதில் புத்தர் இறந்துபோனார்; ஆனால் அதற்குள் அவர் புகழ் பாரெங்கும் பரவியிருந்தது, அனைவரின் மரியாதைக்குரியவராகவும் ஆகியிருந்தார். பின்வரும் வார்த்தைகளே அவர் தன் சீடர்களுக்குச் சொன்ன கடைசி ஞானோபதேசம் என சொல்லப்படுகிறது: “உரு எடுத்தவையெல்லாம் உரு அழியும். நீங்களாகவே கடுமையாக முயன்று விடுதலை பெறுங்கள்.”

21புத்தர் மரணமடைந்து சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின், பொ.ச.மு. மூன்றாவது நூற்றாண்டில், புத்த மதத்தை பெரிதும் ஆதரித்த ஒருவர் தோன்றினார். அவரே இந்திய நாட்டில் பெரும்பகுதியை ஆட்சி செய்த அசோக சக்கரவர்த்தி ஆவார். தான் தொடுத்த போர்களில் பல்லாயிரக்கணக்கானோர் மாண்டதையும், அதனால் ஏற்பட்ட கொந்தளிப்புகளையும் கண்டு மன வேதனையடைந்தார். இதனால் அசோகர் புத்த மதத்திற்கு மாறினார். தன் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளிலெல்லாம் அதைப் பரப்ப திட்டமிட்டார். இவர் பெளத்த மதத்தைப் பரப்புவதற்கு மத நினைவு மண்டபங்களைக் கட்டினார், மாநாடுகளை நடத்தினார், புத்தரது அருள்நெறியைப் பின்பற்றும்படி மக்களுக்கு அறிவுரை வழங்கினார். புத்த மதத்தைப் பரப்புவதற்கு இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும், இலங்கைக்கும், சீரியாவுக்கும், எகிப்துக்கும், கிரேக்க நாட்டிற்கும் மிஷனரிகளை அனுப்பினார். அசோகர் அரும்பாடுபட்டதாலேயே இந்தியாவில் மட்டும் காணப்பட்ட இந்த புத்த மதம், உலக மதம் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தது. இதனால்தான் இவரை புத்த மதத்தின் இரண்டாவது ஸ்தாபகராக சிலர் நியாயமாகவே கருதுகிறார்கள்.

22இலங்கையிலிருந்து புத்த மதம் கிழக்கே மயன்மாருக்கும் (பர்மா) தாய்லாந்துக்கும் இந்தோ-சீனாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. வடக்கே, காஷ்மீர், மத்திப ஆசியா ஆகிய இடங்களுக்கும் புத்த மதம் பரவியது. அந்த இடங்களிலிருந்த புத்த பிக்குகள் கடக்க முடியாத மலைகளையும் பாலைவனங்களையும் கடந்து தங்கள் மதத்தை பொ.ச. முதல் நூற்றாண்டிலேயே சீனாவுக்கு கொண்டு சென்றனர். சீனாவிலிருந்து அது கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எளிதில் பரவியது. இந்தியாவுக்கு வடக்கே இருக்கும் திபெத்து நாட்டிலும்கூட அது பரவியது. அந்நாட்டவரின் நம்பிக்கைகளோடு அது இரண்டறக் கலந்து லாமாயிஸம் என்ற மதப்பிரிவாக உருவெடுத்தது; அது மதத்தின் மீதும் அரசியல் மீதும் அதிக செல்வாக்கைச் செலுத்த ஆரம்பித்தது. பொ.ச. ஆறாவது அல்லது ஏழாவது நூற்றாண்டுக்குள், புத்த மதம் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் தூர கிழக்கிலும் ஆழமாக வேரூன்றியது. ஆனால் இந்தியாவில்?

23மற்ற நாடுகளில் புத்த மதத்தின் புகழ் பரவி வருகையில் இந்தியாவில் அதன் ஒளி படிப்படியாக மங்கிக்கொண்டிருந்தது. தத்துவ ஞானத்திலும் வாழ்க்கை சம்பந்தப்பட்ட கோட்பாடுகளிலும் பிக்குகள் ஆழ்ந்துவிட்டதால் பாமர மக்களோடு அவர்களுக்கு தொடர்பே இல்லாமல் போனது. அதுமட்டுமல்ல, இம்மதத்திற்கு அரச குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் போனது, இந்து மத கருத்துகளும் பழக்கவழக்கங்களும்கூட இம்மதத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டன; இவையெல்லாம் சேர்ந்து இந்தியாவில் புத்த மதம் வீழ்ச்சியுற காரணமாயின. புத்தர் பிறந்த இடமாகிய லும்பினி சோலை, அவர் “ஞானோதயம்” அடைந்த இடமாகிய புத்த கயை ஆகிய புனித ஸ்தலங்களும்கூட பாழிடங்களாயின. 13-வது நூற்றாண்டுக்குள், புத்த மதம் எங்கு தோன்றியதோ அங்கிருந்தே, அதாவது இந்தியாவிலிருந்தே மறைந்து போனது.

24இருபதாம் நூற்றாண்டின்போது, புத்த மதத்திற்கு மீண்டும் பெரியதோர் சோதனை வந்தது. சீனா, மங்கோலியா, திபெத்து, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் இந்த மதத்திற்கு மரண அடியாக அமைந்தன. ஆயிரக்கணக்கான புத்த விகாரங்களும் ஆலயங்களும் இடிக்கப்பட்டன, நூறாயிரக்கணக்கான பிக்குகளும் பெண் துறவிகளும் துரத்தப்பட்டனர், சிறையில் அடைக்கப்பட்டனர், ஏன் கொலையும் செய்யப்பட்டனர். என்றபோதிலும் இந்நாடுகளிலுள்ள ஆட்களின் சிந்தனையிலும் பழக்கவழக்கங்களிலும் புத்த மதம் அதிகளவு செல்வாக்கு செலுத்துவதை இன்றும் காண முடிகிறது.

25நமக்குள்ளாகவே “மெய்யறிவை” தேடி கண்டுபிடிக்க முயல வேண்டும் என்ற புத்த மத கருத்து ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலுமுள்ள மக்களின் மனதை மிகவும் கவர்ந்திருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமல்ல, தியானம் செய்கிற பழக்கம் ஆரவாரமிக்க மேற்கத்திய வாழ்க்கை முறையிலிருந்து விடுபட்டு, அமைதியான வாழ்க்கையை அடைவதற்கு ஒரு வழியாக கருதப்படுகிறது. உயிருள்ள புத்த மதம் என்ற ஆங்கில புத்தகத்தின் முன்னுரையில், நாடுகடத்தப்பட்டிருந்த திபெத்து நாட்டவரான தலாய் லாமா டென்சின் கையாட்சோ பின்வருமாறு எழுதியது சுவாரஸ்யமான விஷயம்: “தங்கள் வாழ்க்கையில் ஆன்மீக அம்சம் என்ற ஒன்று உண்டு என்பதை மேற்கத்திய நாட்டவருக்கு புத்த மதம் இன்று ஒருவேளை நினைப்பூட்டிக் கொண்டிருக்கிறது போலும்.”

புத்த மதத்தின் பலதரப்பட்ட வழிகள்

26பெளத்த மதத்தை ஒரே மதம் என்று குறிப்பிடுவது வழக்கமாக இருப்பினும், இதில் பல்வேறு தொகுதிகள் உண்டு. புத்தருடைய சுபாவம், அவருடைய போதனைகள் ஆகியவற்றை பற்றிய வித்தியாசமான விளக்கங்களின் அடிப்படையில், ஒவ்வொரு தொகுதியும் அவற்றிற்கே உரிய சொந்த கோட்பாடுகளையும் பழக்கவழக்கங்களையும் பிடகங்களையும் (scriptures) கொண்டுள்ளது. இந்தத் தொகுதிகள் இன்னும் பல பிரிவுகளாகவும் உட்பிரிவுகளாகவும் பிளவுற்றிருக்கின்றன. இவற்றில் அநேக பிரிவுகள் உள்ளூர் கலாச்சாரங்களையும் பாரம்பரியங்களையுமே பெருமளவு சார்ந்திருக்கின்றன.

27புத்த மதத்தின் ஒரு தொகுதி, தேரவாதம் (மூப்பர்களின் வழி) அல்லது ஈனயானம் (தாழ்ந்த வழி) என்பதாகும், இது இலங்கை, மயன்மார் (பர்மா), தாய்லாந்து, கம்ப்பூச்சியா (கம்போடியா), லாவோஸ் ஆகிய இடங்களில் கொடிகட்டிப் பறக்கிறது. இதை ஒரு பழமைவாத தொகுதியாக சிலர் கருதுகின்றனர். ஒருவர் ஞானம் பெற்று தன் சொந்த விடுதலைக்காக தானே பாடுபட வேண்டுமென்றும், இதை செய்வதற்காக உலகையே வெறுத்து, துறவறம் பூண்டு, தியானத்தில் ஈடுபட்டு, புத்த விகாரத்தில் சேர்ந்து படிக்க வேண்டுமென்றும் இந்தத் தொகுதி வலியுறுத்துகிறது.

28கூட்டங்கூட்டமான இளைஞர்கள் தலைமுடியை முழுமையாக சிரைத்துக் கொண்டு, காவியுடை அணிந்து திருவோடு ஏந்தி வெறுங்காலுடன் நடந்து சென்று தினமும் உணவு யாசிப்பதை இந்நாடுகளில் பொதுவாக காணலாம். இவர்களுக்கு உணவளிப்பது பாமர பக்தர்களின் கடமையாகும். ஆண்கள் தங்கள் வாழ்நாளில் கொஞ்ச காலத்தையாவது புத்த விகாரத்தில் செலவழிப்பது வழக்கமாகும். அரகந்த நிலையை, அதாவது ஆன்மீக பரிபூரணத்தை அடைந்து மறுபிறப்பு சுழற்சியிலுள்ள துன்பத்திலிருந்தும் துயரத்திலிருந்தும் விடுதலை பெறுகிற நிலையை இறுதியில் அடைவதே துறவறத்தின் நோக்கமாகும். புத்தர் வழி காட்டியிருக்கிறார்; அதைப் பின்பற்றுவதோ அவரவரின் கடமையாகும்.

29 மகாயானம் (உயர்ந்த வழி) என்ற புத்த மதத்தின் மற்றொரு தொகுதியானது பொதுவாக சீனாவிலும் கொரியாவிலும் ஜப்பானிலும் வியட்நாமிலும் காணப்படுகிறது. “குகையில், புத்த விகாரத்தில், வீட்டில் என எங்கு வாழ்ந்தாலும் சரி, மெய்யறிவும் விடுதலை மார்க்கமும் உலகைத் துறந்து விடுகிறவர்களுக்கு மாத்திரமே உரியதல்ல, . . . அது அனைவருக்குமுரியது” என்ற புத்தரின் போதனையை வலியுறுத்தியதால்தான் இந்தத் தொகுதி மகாயானம் என்ற பெயரை பெற்றது. புத்தர் அந்தளவு அன்பும் இரக்கமும் உருவானவராக இருப்பதால் எவருக்குமே விடுதலை தராமல் இருந்துவிட மாட்டார் என்பதே மகாயானத்தின் அடிப்படைக் கருத்தாகும். புத்தரின் அத்தகைய குணாதிசயம் நம் அனைவரிலுமே இருப்பதால் ஒவ்வொருவரும் புத்தராக, ஞானோதயம் பெற்றவராக அல்லது போதிசத்வராக மாற முடியுமென்று அது கற்பிக்கிறது. ஞானோதயம் என்பது உடலை ஒடுக்கி வருத்துவதால் வருவதில்லை, புத்தரில் நம்பிக்கை வைத்து எல்லா உயிரினங்களிடமும் அன்பு செலுத்துவதால் மாத்திரமே வருகிறது. தெளிவாகவே, நடைமுறையாக சிந்திக்கும் மக்கள் மத்தியில் இதற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் இப்படி எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் பரந்த மனப்பான்மை காரணமாக எண்ணற்ற பிரிவுகளும் உட்பிரிவுகளும் புத்த மதத்தில் தோன்றியுள்ளன.

30சீனாவிலும் ஜப்பானிலும் வளர்ந்து வந்திருக்கும் மகாயான பெளத்த மதத்தின் அநேக உட்பிரிவுகளில் பியூர் லாண்ட் மற்றும் சென் பிரிவுகள் உள்ளன. பியூர் லாண்ட் பிரிவினருக்கு, அமித புத்தரின் காக்கும் வல்லமையில் அலாதி நம்பிக்கை. தன்னுடைய பக்தர்களுக்கு, தெய்வங்களும் மனிதர்களும் சந்தோஷக் களிப்புடன் வாழ்கிற இடமாகிய பியூர் லாண்டில், அதாவது வெஸ்டர்ன் பாரடைஸில் மறுபிறப்பு நிச்சயம் என்பதாக அமித புத்தர் உறுதியளித்தார். அங்கிருந்து நிர்வாணம் எனும் நிலையை அடைவது சுலபமென்று நம்பப்பட்டது. “அமித புத்தரில் நம்பிக்கை வைக்கிறேன்” என்ற ஜெபத்தை நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான தடவை திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் ஒரு பக்தர் ஞானோதயம் அடைவதற்கு அல்லது பியூர் லாண்டில் மறுபடியும் பிறப்பதற்கு தன்னையே தூய்மைப்படுத்திக் கொள்கிறார்.

31 சென் புத்த மதம் (சீனாவிலுள்ள சான் பிரிவு), தியானப் பயிற்சியிலிருந்து இந்தப் பெயரை பெற்றுக்கொண்டது. சான் (சீன மொழி), சென் (ஜப்பானிய மொழி) ஆகிய வார்த்தைகள் “தியானம்” என்று அர்த்தம் தரும் தியானா என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வருகின்றன. படிப்பும் நற்செயல்களும் சடங்குகளும் பிரயோஜனமற்றவை என்று சென் புத்த மதம் கற்பிக்கிறது. ‘ஒரு கையை மட்டுமே தட்டும்போது எழும் ஓசை என்ன?,’ ‘எதுவுமே இல்லாத இடத்தில் நாம் காண்பது என்ன?’ போன்ற சிந்தனைக்கு அப்பாற்பட்ட புரியா புதிர்களைப் பற்றி சிந்தித்தாலே போதும் ஒருவருக்கு ஞானோதயம் கிடைத்துவிடும் என்பதாகவும் அது கற்பிக்கிறது. பூ அலங்கரிப்பு, அழகிய கையெழுத்துக் கலை, இங்க் பெயின்டிங், கவிதை, தோட்டக்கலை போன்றவற்றில் சென் புத்த மதத்தின் மறைபொருள் தன்மை வெளிப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் இவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்று அந்நாடுகள் பெரும்பாலானவற்றில் சென் தியான மையங்கள் காணப்படுகின்றன.

32கடைசியாக திபெத்திய புத்த மதம், அதாவது லாமாயிஸம் என்ற பிரிவு உண்டு. இதில் மந்திரங்கள் சொல்வது முக்கியமாக இருப்பதால் இந்த வகையான புத்த மதம் சில சமயங்களில் மந்திராயனம் (மந்திர வழி) என்று அழைக்கப்படுகிறது. இப்பிரிவினர், அர்த்தமுள்ள அல்லது அர்த்தமற்ற பல பதங்களை மந்திரமாக நீண்ட நேரம் ஓதுகின்றனர். ஞானத்தை அல்லது இரக்கத்தை வலியுறுத்துவதற்கு மாறாக சடங்குகள், பிரார்த்தனைகள், மாயமந்திரம், ஆவியுலகத் தொடர்பு ஆகியவற்றை வலியுறுத்துகின்றனர். ஜெப மாலைகளையும் பிரார்த்தனை சக்கரங்களையும் பயன்படுத்தி ஒரு நாளில் ஆயிரக்கணக்கான தடவை ஜெபம் செய்கின்றனர். சிக்கலான சடங்குகளை லாமாக்களிடமிருந்து, அதாவது துறவி மடத் தலைவர்களிடமிருந்து வாய்மொழியாக மாத்திரமே கற்றுக்கொள்ள முடியும். அவர்களில் தலாய் லாமாவும் பஞ்சன் லாமாவுமே மிகப் பிரபலமானவர்கள். ஒரு லாமா இறந்த பிறகு, அடுத்த ஆன்மீகத் தலைவரை நியமிப்பதற்கு, அவர் மறுபடியும் எந்தக் குழந்தையாக அவதாரம் எடுத்திருக்கிறார் என்று கண்டறிய தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. ஆனால் பிக்குகள் அனைவருக்குமேகூட லாமா என்ற பெயர் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது; ஒரு சமயம் திபெத்து நாட்டு ஜனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதி லாமாக்கள் இருந்தார்கள் என ஒரு கணக்கெடுப்பு காட்டுகிறது. அவர்கள் ஆசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும், நில சொந்தக்காரர்களாகவும், அரசியல் பிரமுகர்களாகவும்கூட இருந்தார்கள்.

33புத்த மதத்திலுள்ள இந்த முக்கிய பிரிவுகள் இன்னும் அநேக தொகுதிகளாக, அதாவது உட்பிரிவுகளாக பிளவுபட்டிருக்கின்றன. இவற்றில் சில பிரிவுகள் குறிப்பிட்ட ஒரு தலைவரைப் பின்பற்றுகின்றன. அப்படிப்பட்ட தலைவர்களில் ஒருவரே ஜப்பானிலுள்ள நிச்சிரன்; அவர் மகாயான லோட்டஸ் சூத்ராவில் மட்டுமே புத்தரின் உண்மையான போதனைகள் உள்ளன என்பதாக கற்பித்தார். மற்றொருவர் தைவானிலுள்ள நுன் சின்-ஹாய்; அவரை திரளான மக்கள் பின்பற்றினர். இப்படிப் பார்த்தால், புத்த மதத்திற்கும் அநேக பிரிவுகளும் உட்பிரிவுகளும் உள்ள கிறிஸ்தவமண்டலத்திற்கும் அதிக வித்தியாசம் இல்லாதது தெரிகிறது. சொல்லப்போனால், தாவோ மதம் மற்றும் ஷின்டோ மத பழக்கங்களையும், முன்னோர் வழிபாட்டையும், ஏன், கிறிஸ்தவமண்டல பழக்கங்களையும்கூட புத்த மதத்தை சேர்ந்தோர் சிலர் பின்பற்றுவதை நாம் சர்வசாதாரணமாக காணலாம். b இந்த எல்லா பிரிவினருமே புத்தருடைய போதனைகளின் அடிப்படையில்தான் தங்கள் நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் இருப்பதாக சொல்லிக் கொள்கின்றனர்.

மூன்று பெட்டிகளும் புத்த மதத்தின் மற்ற பிடகங்களும்

34புத்தரின் போதனைகள் வாய்மொழியாகவே கடத்தப்பட்டன, புத்தர் இவ்வுலகை விட்டு மறைந்து பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரே இவை எழுத்தில் வடிக்கப்பட்டன. ஆகவே, அவர் என்னென்ன சொன்னாரென்றும் செய்தாரென்றும் பிற்பாடு வந்த சீடர்கள் நினைத்தார்களோ அவற்றைத்தான் அவர்கள் எழுதி வைத்தார்களென்று சொல்லலாம். அதுமட்டுமல்ல, அந்த சமயத்திற்குள்ளாக புத்த மதத்தில் அநேக தொகுதிகள் தோன்றியிருந்ததால் புத்தரின் போதனைகளை புரிந்துகொள்வதில் அதிகப்படியான சிக்கல் ஏற்பட்டது. இதனால்தான் பல்வேறு புத்தகங்கள் புத்த மதத்தைப் பற்றி வெவ்வேறு விளக்கங்களைத் தருகின்றன.

35புத்தரின் தாய்மொழியோடு சம்பந்தப்பட்ட பாலி மொழியில் புத்த மதத்தின் மிகப் பழமையான புத்தகங்கள் சுமார் பொ.ச.மு. முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டன. அவற்றை தேரவாத தொகுதியினர் நம்பகமானதாக ஏற்றுக்கொள்கின்றனர். அவற்றில் 31 புத்தகங்கள் மூன்று தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. இவை திரிபிடகம் (சமஸ்கிருதம், ட்ரிபிட்டக்கா) என்றழைக்கப்படுகின்றன. இதன் அர்த்தம் “மூன்று பெட்டிகள்” அல்லது “மூன்று தொகுதிகள்” என்பதாகும். வினய பிடகத்தில் ([Vinaya Pitaka] சிட்சை பெட்டி) பிக்குகளுக்கும் பெண் துறவிகளுக்குமான சட்டதிட்டங்கள் முக்கியமாக அடங்கியுள்ளன. சுத்த பிடகத்தில் ([Sutta Pitaka] பேருரை பெட்டி), புத்தரும் முன்னணி வகித்த சீடர்களும் கொடுத்த சொற்பொழிவுகள், உதாரணங்கள், பழமொழிகள் ஆகியவை அடங்கியுள்ளன. கடைசியாக அபிதம்ம பிடகத்தில் ([Abhidhamma Pitaka] உன்னத கோட்பாட்டு பெட்டி) புத்த மதக் கோட்பாடுகளின் விளக்கவுரைகள் இடம்பெற்றுள்ளன.

36மறுபக்கத்தில், மகாயான பிரிவின் புத்தகங்கள் பெரும்பாலும் சமஸ்கிருதம், சீன மொழி, திபெத்திய மொழி ஆகியவற்றில் எழுதப்பட்டுள்ளன, அவை ஏராளமாகவும் இருக்கின்றன. சீன மொழியில் மாத்திரமே 5,000-க்கும் அதிகமான தொகுப்புகள் இருக்கின்றன. முந்தைய புத்தகங்களில் காணப்படாத அநேக கருத்துகளை இவற்றில் காண முடிகிறது. அதாவது கங்கையின் மணலத்தனையாக இருந்த புத்தர்களைப் பற்றிய விவரங்கள் இதில் இடம்பெறுகின்றன. அவர்கள் பல கோடிக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் புத்த ராஜ்யத்தில் தலைவர்களாக இருந்ததாகவும் அவை சொல்கின்றன. “இந்தப் புத்தகங்களில் ஒருவர் காண்பதெல்லாம் பல்சுவையும், விநோத கற்பனைகளும், சுவாரஸ்யமான கதாபாத்திரங்களும், திரும்பத் திரும்ப மிதமிஞ்சிய அளவுக்கு விஷயங்கள் சொல்லப்பட்டதுமே” என்பதாக ஒரு நூலாசிரியர் கருத்து தெரிவித்திருப்பது மிகையல்ல.

37மிகவும் சிக்கல் வாய்ந்த இந்த விஷயங்களை வெகு சிலரால் மட்டுமே புரிந்துகொள்ள முடிகிறது என்பதை சொல்லவே வேண்டியதில்லை. இத்தகைய மாற்றங்களின் காரணமாக பௌத்த மதம், புத்தரின் ஆரம்ப நோக்கத்திலிருந்து வெகு தூரம் விலகிச் சென்றிருக்கிறது. படிப்பறிவுள்ளவர்கள் மாத்திரமல்ல, எல்லாவித ஆட்களும் தம்முடைய போதனைகளை புரிந்துகொள்ள வேண்டும் என்று புத்தர் விரும்பினதாக வினய பிடகம் சொல்கிறது. இதற்காக தன்னுடைய கருத்துகள் பாமர மக்களின் மொழியிலேயே கற்பிக்கப்பட வேண்டும் என்றும் இந்து மதத்தின் மறைந்துபோன புனித மொழியில் கற்பிக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தினார். இப்புத்தகங்கள் அதிகாரப்பூர்வமற்றவை என ஆட்சேபணை தெரிவித்த தேரவாத பிரிவினருக்கு மகாயான பிரிவினர் சொன்ன பதில் இதுவே: ‘கெளதம புத்தர் முதலில் கல்லாதவர்களுக்கும் அறியாமையுள்ளவர்களுக்குமே கற்பித்தார், ஆனால் கற்றவர்களுக்கும் ஞானிகளுக்கும் பிற்பாடு மகாயான புத்தகங்களில் எழுதப்பட்ட போதனைகளை வெளிப்படுத்தினார்.’

கர்மம், சம்சாரம் ஆகியவற்றின் சுழற்சி

38புத்த மதம் இந்து மதத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து மக்களை ஓரளவு விடுவித்தபோதிலும் அதின் அடிப்படைக் கருத்துகளான கர்மம், சம்சாரம் ஆகியவை இந்து மத போதனைகளாகவே இருந்தன. சாகாத ஆன்மா என ஒன்று இல்லை, ஆனால் “உடல் சக்திகளும் மன சக்திகளும் ஒருங்கிணைந்தவனே” மனிதன் என சொல்வதன் மூலம் புத்தர் கற்பித்த அசல் புத்த மதம் இந்து மதத்திலிருந்து வேறுபடுகிறது. c என்றபோதிலும், எல்லா மனிதர்களும் எண்ணிலடங்கா மறுபிறப்புகள் (சம்சாரம்) மூலமாக ஓர் உயிரிலிருந்து மற்றொன்றுக்கு தாவிக்கொண்டும் கடந்த கால, தற்கால செயல்களின் (கர்மவினைகளின்) விளைவுகளால் வருந்திக்கொண்டும் இருக்கிறார்கள் என்ற கருத்துகளைச் சுற்றியே அதன் உபதேசங்கள் அமைந்திருக்கின்றன. ஞானோதயம் பெறுவது பற்றிய உபதேசமும், இந்தச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவது பற்றிய உபதேசமும் மனதைக் கவருவது போல இருந்தாலும் சிலர் இவ்வாறு கேட்கின்றனர்: இதற்கு எந்தளவு உறுதியான ஆதாரம் இருக்கிறது? துன்பங்கள் அனைத்துக்கும் முற்பிறவியில் ஒருவர் செய்த செயல்களே காரணம் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது? முற்பிறவி என ஒன்று உள்ளதென நம்புவதற்கு முதலாவது ஏதேனும் அத்தாட்சி இருக்கிறதா?

39கர்மம் என்ற சட்டத்தைப் பற்றி ஒரு விளக்கம் இவ்வாறு சொல்கிறது:

“கம்மா [பாலி மொழியில் கர்மம் என்ற சொல்லுக்கு இணையான சொல்] என்பது ஒரு சட்டம். ஆனால், இது ஒரு சட்டம் என்பதற்காக அதை இயற்ற ஒருவர் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. புவியீர்ப்பு சக்தி போன்ற சாதாரண இயற்கை சட்டங்களை இயற்ற ஒருவர் அவசியமில்லை. அவ்வாறே, கம்மா சட்டத்தை இயற்றவும் ஒருவர் அவசியமில்லை. புறம்பான எந்த சக்தியின் தலையிடுதலும் இல்லாமலேயே அது இயங்குகிறது.”​—புத்த மத கையேடு.

40இது நியாயமான விளக்கமாக தோன்றுகிறதா? இயற்கை சட்டங்களுக்கு அவற்றை இயற்ற ஒருவர் தேவையில்லை என்பது உண்மையா? விண்கல நிபுணர் டாக்டர் வெர்ன்ஹர் வான் பிரான் ஒரு சமயம் இவ்வாறு சொன்னார்: “பிரபஞ்சத்தில் காணப்படும் இயற்கை சட்டங்கள் அந்தளவு துல்லியமாக இருப்பதால் சந்திரனுக்கு விண்கலம் ஒன்றை அனுப்புவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை, அதன் பயண நேரத்தை நொடிப்பொழுதும் பிசகாமல் கணக்கிட்டு சொல்லவும் முடியும். இந்தச் சட்டங்களை யாரோ ஒருவர் கட்டாயம் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.” காரண காரிய சட்டத்தைப் பற்றி பைபிளும்கூட சொல்கிறது: “தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” (கலாத்தியர் 6:7) இந்தக் காரண காரிய சட்டத்துக்கு அதை இயற்ற ஒருவர் தேவையில்லை என்று சொல்வதற்கு பதிலாக, “தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்” என்று குறிப்பிடுவதன் மூலம் இந்தச் சட்டத்தை ஆரம்பித்து வைத்தவரும் அதை இயற்றியவரும் யெகோவா தேவனே என்பதை இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது.

41கூடுதலாக, “பாவத்தின் சம்பளம் மரணம்” என்றும் ‘மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறான்’ என்றும் பைபிள் சொல்கிறது. நீதிமன்றங்கள்கூட ஒருவருக்கு எந்தக் குற்றத்துக்கும் இருமுறை தண்டனை அளிப்பதில்லையே. அப்படியென்றால் மரிப்பதன் மூலம் ஏற்கெனவே தன் பாவங்களுக்கு தண்டனையை அனுபவித்துவிட்ட ஒருவர், மீண்டும் பிறந்து அதே கடந்த கால பாவங்களுக்காக இன்னொரு முறை துன்பம் அனுபவிக்க வேண்டியது ஏன்? அதுமட்டுமல்ல, முற்பிறவியில் செய்த என்ன பாவங்களுக்காக இப்போது தண்டிக்கப்படுகிறார் என்பதை ஒருவர் அறியாமலிருக்கையில் அவர் எவ்விதமாக மனம் வருந்தி தன்னை திருத்திக்கொள்ள முடியும்? இதை நியாயம் என்று சொல்ல முடியுமா? புத்தரின் விசேஷித்த குணம் என்பதாக சொல்லப்படும் இரக்கத்துக்கும் இந்த போதனைக்கும் சம்பந்தம் இருக்கிறதா? இதற்கு நேர்மாறாக, பைபிளானது, “பாவத்தின் சம்பளம் மரணம்” என்று குறிப்பிட்ட பிறகு, “தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்” என்று சொல்கிறது. ஆம், எல்லா சீர்கேடுகளையும் பாவத்தையும் மரணத்தையும் நீக்கி மனிதவர்க்கத்துக்கு விடுதலையையும் பரிபூரணத்தையும் கடவுள் கொடுப்பார் என பைபிள் வாக்குறுதி அளிக்கிறது.​—ரோமர் 6:7, 23; 8:21; ஏசாயா 25:8.

42மறுபிறப்பு குறித்து புத்த மத கல்விமான் டாக்டர் வால்போலா ராகுலா பின்வரும் இந்த விளக்கத்தை அளிக்கிறார்:

“உடல் சக்திகளும் மன சக்திகளும் ஒருங்கிணைந்ததே ஓர் உயிராகும். உடலின் இயக்கங்கள் முழுவதுமாக நின்று போகையில் அதை மரணம் என்று சொல்கிறோம். உடல் இயங்காமல் போகையில் இந்த எல்லா சக்திகளும் ஒட்டுமொத்தமாக நின்று விடுகிறதா? ‘இல்லை’ என்கிறது புத்த மதம். வாழ வேண்டும், தொடர்ந்து ஜீவிக்க வேண்டும், அதிகமதிகமாக சாதிக்க வேண்டும் என்ற ஒருவருடைய விருப்பம், தீர்மானம், ஆசை, தாகம் ஆகியவையே மிகப் பெரிய சக்தியாக இருந்து முழு வாழ்க்கையை, ஏன் முழு உலகையும்கூட ஆட்டிப் படைக்கிறது. இதுதான் உலகிலேயே மிகப் பெரிய சக்தி, மிகப் பெரிய ஆற்றல். புத்த மதத்தின்படி, மரணத்தின்போது உடலின் இயக்கங்கள் நின்றுபோனாலும், அந்தச் சக்தி மட்டும் நின்றுவிடுவதில்லை. அது தொடர்ந்து வேறொரு வடிவில் தன்னை வெளிப்படுத்தி மீண்டும் வாழ்கிறது, அதுவே மறுபிறப்பு என்றழைக்கப்படுகிறது.”

43கருத்தரிக்கும் கணத்தில், ஒரு நபர் தன் தாயிடமிருந்தும், தந்தையிடமிருந்தும் 50 சதம் என்ற கணக்கில் ஜீன்களை பெற்றுக்கொள்கிறார். ஆகவே, அவர் 100 சதம் முற்பிறவியிலிருந்த யாரோ ஒருவரைப் போல இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. சொல்லப்போனால் மறுபிறப்புக்கு அறிவியலில் எந்த ஆதாரமுமில்லை. முன்பின் அறிந்திராதவர்களையும், நடந்த சம்பவங்களையும், பார்க்காத இடங்களையும் பற்றி அப்படியே சொல்லும் ஆட்களுடைய அனுபவங்களை சுட்டிக்காட்டி மறுபிறப்பு உண்டு என்று சிலர் சொல்கின்றனர். இது நியாயமாகப்படுகிறதா? முற்பிறவியில் நடந்தவற்றை நினைவுகூரக்கூடிய ஒருவர் அந்தக் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று சொல்வோமானால், எதிர்காலத்தை முன்னறிவிப்பதாக உரிமை பாராட்டும் அநேகரும்கூட எதிர்காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டியிருக்கும். ஆனால், நமக்கு தெரிந்திருக்கிறபடி அது சாத்தியமே இல்லை.

44புத்தர் தோன்றுவதற்கு 400-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன், ஓர் உயிர் சக்தியைப் பற்றி பைபிள் பேசியது. ஒரு நபரின் மரணத்தின்போது என்ன நடக்கிறது என்பதை விவரிக்கையில் அது இவ்வாறு சொல்கிறது: ‘இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகிறது.’ (பிரசங்கி 12:7) “ஆவி” என்ற வார்த்தை ருவாக் என்ற எபிரெய வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. மனிதர், விலங்கினங்கள் என எல்லா உயிரினங்களுக்கும் உயிரூட்டுகிற உயிர் சக்தி என்பது இதன் அர்த்தம். (பிரசங்கி 3:18-22) ஆனால் ருவாக் ஆளுருவற்ற சக்தி என்பதுதான் முக்கிய வித்தியாசம்; அதற்கென்று சுயமாக விருப்பம் கிடையாது அல்லது மரித்துப்போன நபரின் ஆள்தன்மையையோ எந்த ஒரு பண்பையோ அது தக்கவைத்துக் கொள்வதும் கிடையாது. மரணத்தின்போது அது ஒரு நபரிடமிருந்து மற்றொருவரிடமாக செல்லாமல் ‘தன்னைத் தந்த தேவனிடத்திற்கே மறுபடியும் செல்கிறது.’ மற்றொரு விதத்தில் சொன்னால் அந்த நபரின் எதிர்கால நம்பிக்கை​—உயிர்த்தெழுதல் நம்பிக்கை—முழுவதும் கடவுளுடைய கையில்தான் இருக்கிறது என்பதை அர்த்தப்படுத்துகிறது.​—யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 17:31.

நிர்வாண நிலை​—அடைய முடியாததை அடைவதா?

45இப்பொழுது ஞானோதயம் மற்றும் விடுதலை பேரிலான புத்தரின் போதனைக்கு வருவோம். புத்த மதத்தின்படி, விடுதலை என்பது கர்மவினையிலிருந்தும் சம்சாரம் என்ற சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று நிர்வாண நிலையை அடைவதாகும். நிர்வாண நிலை என்பது என்ன? அதை விவரிக்கவோ விளக்கவோ முடியாது, அதை அனுபவத்தில்தான் உணர முடியும் என்று புத்த மத நூல்கள் கூறுகின்றன. மரணமடைந்த பின்பு ஒருவர் அடையும் மோட்சத்தை அது குறிப்பதில்லை, ஆனால் இங்கேயே இப்போதே அனைவருக்கும் கிடைக்கக்கூடிய பேறுநிலை அது. நிர்வாண நிலை என்ற வார்த்தையின் அர்த்தமே “அணைத்துவிடுதல், அவித்துவிடுதல்” என்பதாக சொல்லப்படுகிறது. அது எல்லா ஆசாபாசங்களும் ஒழிக்கப்பட்ட நிலை; வேதனை, பயம், அன்பு, விருப்பு, வெறுப்பு போன்ற அனைத்து உணர்வுகளிலிருந்தும் விடுபட்ட நிலை; நித்திய சமாதானமும், ஓய்வுமுள்ள மாற்றமில்லாத நிலை என்பதாக சிலர் சொல்கின்றனர். தனிநபரின் வாழ்வு முடிவுக்கு வருவதையே அது பொதுவாக அர்த்தப்படுத்துகிறதென சொல்லப்படுகிறது.

46ஞானோதயத்தையும் விடுதலையையும் குறிக்கும் நிர்வாணம் என்ற பூரண நிலை, எந்தக் கடவுளிடமிருந்தோ புறம்பான சக்தியிடமிருந்தோ வருவதில்லை, மாறாக, நற்செயல்களிலும் நற்சிந்தனைகளிலும் ஒருவர் எடுக்கும் தனிப்பட்ட முயற்சியிலிருந்துதான் வருகிறது என்பதாக புத்தர் கற்பித்தார். அப்படியென்றால், அபூரணமான ஒன்றிலிருந்து பரிபூரணமான ஒன்று வர முடியுமா என்ற கேள்வியை இது எழுப்புகிறது. எபிரெய தீர்க்கதரிசியாகிய எரேமியா சொன்னது போல ‘மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல, தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல’ என்பதை நம்முடைய அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் நமக்குச் சொல்லவில்லையா? (எரேமியா 10:23) அப்படியானால், சாதாரண தினசரி அலுவல்களைக்கூட ஒருவர் தன் முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாதபோது, அவர் தன்னுடைய சொந்த முயற்சியிலேயே நித்திய விடுதலையை அடைந்துவிடுவார் என்று நினைப்பது நியாயமாகப் படுகிறதா?​—சங்கீதம் 146:3, 4.

47புதைமணலில் சிக்கிக்கொண்ட ஒருவனால் எப்படி தானாகவே அதிலிருந்து வெளிவர முடியாதோ அதே விதமாக பாவத்திலும் மரணத்திலும் சிக்கிக்கொண்டிருக்கும் மனிதர்கள் அனைவரும் தங்களைத் தாங்களே அவற்றிலிருந்து விடுவித்துக்கொள்ள முடியாது. (ரோமர் 5:12) ஆனால், சொந்த முயற்சியினால் மாத்திரமே ஒருவர் விடுதலை அடைய முடியும் என்பதாக புத்தர் கற்பித்தார். அவர் தன் சீடர்களிடம் சொன்ன கடைசி அறிவுரை: “உன்னையே நம்பியிரு, பிறரிடமிருந்து உதவியை எதிர்பார்க்காதே. ஒரு விளக்கைப் போல மெய்யறிவை பற்றிக்கொண்டிரு; மெய்யறிவில் தன்னந்தனியாக இருந்து விடுதலையை நாடித் தேடு; உன்னிடமே அல்லாமல் வேறு யாரிடமும் உதவியை நாடாதே.”

ஞானோதயமா ஏமாற்றமா?

48இப்படிப்பட்ட ஒரு கொள்கை என்ன பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது? இதை நம்புகிறவர்கள் மெய் விசுவாசத்தோடும் பக்தியோடும் இருக்குமாறு இது அவர்களை உந்துவிக்கிறதா? உயிருள்ள புத்த மதம் நூல் இவ்வாறு சொல்கிறது: சில புத்த மத நாடுகளில் “பிக்குகள்[கூட] தங்கள் மதத்தின் சிறப்பம்சங்களை அவ்வளவாக நினைத்துப் பார்ப்பதில்லை. நிர்வாண நிலையை அடைவது உண்மையில் கைகூடாத ஆசை என்ற பரவலான கருத்து நிலவி வருகிறது, தியானமும் அரிதாகவே செய்யப்படுகிறது. திரிபிடகத்தை அவர்கள் எப்போதாவது படிக்கிறார்கள்; அதோடு சமுதாயத்துக்கு பிரயோஜனமான செயல்கள் செய்வதற்கும் சமாதான சூழலை உருவாக்குவதற்குமே தங்களை அர்ப்பணிக்கிறார்கள்.” சமீப காலமாக மறுபடியும் புத்த மத போதனைகளில் ஜனங்கள் ஆர்வம் காண்பிப்பதைக் குறித்து உவர்ல்ட் என்ஸைக்ளோப்பீடியா (ஜாப்பனீஸ்) இவ்வாறு கூறுகிறது: “புத்த மதத்தை நுணுக்கமாக ஆராய ஆராய, அது எந்தளவுக்கு ஆதி நோக்கத்திலிருந்து​—மக்களுக்கு நல்வழிகாட்ட வேண்டுமென்ற நோக்கத்திலிருந்து​—வெகுவாக விலகியிருக்கிறது என்பது தெரியவருகிறது. இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கையில், புத்த மதத்தைப் பற்றிய இத்தகைய தீவிர ஆராய்ச்சியால் இந்த மதம் மறுமலர்ச்சி அடையும் என சொல்ல முடியாது. மாறாக, ஒரு மதத்தை சிக்கல் வாய்ந்த தத்துவ ஆராய்ச்சிக்கு உட்படுத்தும்போது அதன் வலிமை குறையவே செய்கிறது.”

49அறிவும் புரிந்துகொள்ளுதலும், ஞானோதயத்துக்கும் இரட்சிப்புக்கும் வழிநடத்துகின்றன என்பதே புத்த மதத்தின் அடிப்படைக் கருத்தாகும். ஆனால் பல்வேறு புத்த மத பிரிவுகளின் சிக்கலான கோட்பாடுகள் மேற்கூறப்பட்ட அந்தக் “கைகூடாத” நிலைக்கு​—பெரும்பாலான பக்தர்களின் புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்ட நிலைக்கு​—வழிநடத்தியுள்ளன. நல்லதைச் செய்வோம், சில சடங்குகளையும் எளிமையான நல்லொழுக்க போதனைகளையும் கடைப்பிடிப்போம், புத்த மதத்தைப் பின்பற்ற அவை போதும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், நாம் எங்கிருந்து வருகிறோம்? நாம் ஏன் இங்கே இருக்கிறோம்? மனிதனின் எதிர்காலமும் பூமியின் எதிர்காலமும் என்ன? போன்ற வாழ்க்கையைக் குறித்த சிக்கலான கேள்விகளுக்கு இவை விடையளிப்பதில்லை.

50புத்த மதத்தில் இன்று காணப்படும் சிக்கல் வாய்ந்த கோட்பாடுகளாலும் சுமையான சடங்குகளாலும் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் நல்மனமுள்ள புத்த மதத்தினரில் சிலர் உணர்ந்திருக்கின்றனர். புத்த மத தொகுதிகளும் சங்கங்களும் மனிதநேயத்தின் அடிப்படையில் எடுக்கும் முயற்சிகள் அநேகரின் துயரத்தையும் துன்பத்தையும் ஒருவேளை துடைத்திருக்கலாம். ஆனால், அனைவருக்கும் ஞானோதயத்தையும் விடுதலையையும் அளிக்கும் விஷயத்தில் புத்த மதம் அதன் வாக்கை காப்பாற்றியிருக்கிறதா?

கடவுள் இல்லாமல் ஞானோதயமா?

51ஒரு சந்தர்ப்பத்தில், புத்தரும் அவருடைய சீடர்களும் ஒரு காட்டில் இருந்ததாக புத்தரின் வாழ்க்கைப் பதிவுகள் சொல்கின்றன. கை நிறைய சருகுகளை அள்ளி அவர் தன் சீடர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நான் உங்களுக்குக் கற்பித்தவை என் கையிலிருக்கும் சருகுகளுக்குச் சமம், நான் உங்களுக்குக் கற்பிக்காதவை இந்தக் காடு முழுவதுமுள்ள சருகுகளுக்குச் சமம்.” அதாவது, தனக்குத் தெரிந்தவற்றில் சிறிதளவை மாத்திரமே தான் கற்பித்ததாக புத்தர் அர்த்தப்படுத்தினார். ஆனால் முக்கியமான ஒன்றை கெளதம புத்தர் சொல்லாமல் விட்டுவிட்டார்; ஆம், கடவுளைப் பற்றி அவர் அதிகமாக எதுவும் சொல்லவில்லை. அதோடு, தானே கடவுள் என்றும் அவர் ஒருபோதும் உரிமை பாராட்டவில்லை. பார்க்கப்போனால் தன் சீடர்களுக்கு அவர் இப்படி சொன்னதாக குறிப்பிடப்படுகிறது: “ஒருவேளை கடவுள் என்று ஒருவர் இருந்தாலும், அவருக்கு என்னுடைய அன்றாட வாழ்க்கை மீது அக்கறை இருக்குமென்று கற்பனை செய்யக்கூட முடியவில்லை, மனிதனுக்கு உதவி செய்ய விருப்பமுள்ள அல்லது அதற்குரிய சக்தியுள்ள எந்தக் கடவுளும் இல்லை.”

52இந்தக் கருத்தில் பார்த்தால், மெய்க் கடவுளைத் தேடும் படலத்தில் புத்த மதத்தின் பங்கு மிகக் குறைவே. “ஆரம்ப கால புத்த மதம் கடவுளைப் பற்றி கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்கவில்லை, நிச்சயமாகவே கடவுள் நம்பிக்கையை கற்பிக்கவுமில்லை, அது அவசியம் என்று சொல்லவும் இல்லை” என்று உலக மதங்களின் கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது. ஒவ்வொருவரும் தன் சொந்த முயற்சியில் விடுதலையைத் தேட வேண்டுமென்றும் சொந்த மனதை அல்லது உணர்வை நாடுவதன் மூலம் ஞானோதயம் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தும் புத்த மதம் உண்மையில் அறியொணாமைக் கொள்கையுடையது, இன்னும் சரியாக சொன்னால் நாத்திக கொள்கையுடையது. (பக்கம் 145-ல் உள்ள பெட்டியைக் காண்க.) இந்து மத மூடநம்பிக்கைகள் எனும் சங்கிலியிலிருந்தும் அதன் ஏராளமான புராண தெய்வங்களிலிருந்தும் விடுபடுவதற்கு புத்த மதம் எடுத்த முயற்சியில் அது மறுகோடிக்கு சென்றுவிட்டிருக்கிறது. யாரால் அனைத்தும் உண்டாகி இயங்கிக் கொண்டிருக்கிறதோ அந்த உன்னத கடவுளைப் பற்றிய அடிப்படைக் கருத்தையே அது புறக்கணித்திருக்கிறது.​—அப்போஸ்தலர் 17:24, 25.

53சுயநலமும், சுயாதீனமுமிக்க இந்தச் சிந்தனையின் காரணமாக, மிக சிக்கலான கட்டுக்கதைகள், பாரம்பரியங்கள், குழப்பமுள்ள கோட்பாடுகள், விளக்கங்கள் ஆகியவற்றை புத்த மதத்தின் அநேக பிரிவுகளும் உட்பிரிவுகளும் பல நூற்றாண்டுகளில் உருவாக்கியிருக்கின்றன. வாழ்க்கையின் சிக்கலான பிரச்சினைகளுக்கு எளிய தீர்வைக் கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி, பெரும்பாலான மக்களால் புரிந்துகொள்ள முடியாத தத்துவ கருத்துகள் நிறைந்த ஒரு மதமாக உருவாகி விட்டிருக்கிறது. புத்த மதத்தை பின்பற்றுகிற சராசரி நபர்கள் இப்போது விக்கிரகங்களையும் நினைவுச் சின்னங்களையும், கடவுட்களையும் பேய்களையும், ஆவிகளையும் முன்னோர்களையும் வணங்குவதிலேயே மூழ்கிப்போயிருக்கிறார்கள்; அதோடு புத்தர் கற்பிக்காத அநேக சடங்குகளையும் பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிப்பதிலுமே மூழ்கிப்போயிருக்கிறார்கள். ஆம், கடவுளைப் புறக்கணித்துவிட்டு ஞானோதயம் அடைய முயலுவது பிரயோஜனமற்றது என்பது வெகு தெளிவாக இருக்கிறது.

54ஞானோதயம் பெறுவதற்கான வழியை கெளதம புத்தர் தேடிக்கொண்டிருந்த அதே சமயத்தில்தான் ஆசிய கண்டத்தின் வேறொரு பகுதியில் லட்சக்கணக்கானவர்களைக் கவர்ந்த இரண்டு தத்துவஞானிகள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் லாவொட்ஸேயும் கன்பூசியஸும் ஆவர். தலைமுறை தலைமுறையாக சீனர்களும் மற்றவர்களும் இவர்களை தெய்வமாக வணங்கி வந்தனர். இவர்கள் என்ன கற்பித்தனர், கடவுளுக்கான மனிதகுலத்தின் தேடலில் இவர்கள் ஆற்றிய பங்கு என்ன? இதைத்தான் அடுத்த அதிகாரத்தில் சிந்திக்க இருக்கிறோம்.

[அடிக்குறிப்புகள்]

a இது பாலி மொழியில் அவரது பெயரின் எழுத்துப் பெயர்ப்பாகும். சமஸ்கிருத எழுத்துப் பெயர்ப்புப்படி சித்தார்த்த கெளதமர். ஆனால் அவர் பிறந்தது பொ.ச.மு. 560, 563, அல்லது 567 என வித்தியாசமான தேதிகள் குறிப்பிடப்படுகின்றன. பெரும்பாலானவர்கள் 560-ஐ ஏற்றுக் கொள்கின்றனர், அப்படி இல்லையென்றால் அவர் பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில் பிறந்தவர் என்றாவது ஒப்புக்கொள்கின்றனர்.

b ஜப்பானிலுள்ள அநேக புத்த மதத்தவர் மிகவும் ஆடம்பரமாக “கிறிஸ்மஸ்” கொண்டாடுகின்றனர்.

c அநாத்மம் (சூன்யம்) போன்ற புத்த மத கோட்பாடுகளின்படி மாறாத அல்லது அழியாத ஆத்மா என ஒன்று கிடையாது. ஆனால் இன்று பெரும்பாலான புத்த மதத்தவர், குறிப்பாக கிழக்கத்திய நாடுகளில் இருப்பவர்கள் சாவாமையுடைய ஆத்மா மறுபிறவி எடுப்பதாக நம்புகிறார்கள். மூதாதையரை வழிபடும் அவர்களது பழக்கமும் மரணத்துக்குப் பின் நரகத்தில் வாதிக்கப்படுவதில் அவர்களுக்கிருக்கும் நம்பிக்கையும் இதை தெளிவாக காட்டுகின்றன.

[கேள்விகள்]

1. (அ) மேற்கத்திய சமுதாயத்தில் எவ்வாறு புத்த மதம் புகுந்தது? (ஆ) அது மேற்கில் தழைத்தோங்க காரணங்கள் யாவை?

2. புத்த மதத்தவர்களை இன்று எங்கே காணலாம்?

3. புத்தரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ள என்ன தகவல்கள் உள்ளன?

4. புத்தரின் உண்மையான போதனை முதலில் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது?

5. பாலி மொழியில் எப்போது பதிவுகள் எழுதப்பட்டன?

6. ‘அதிகாரப்பூர்வ பதிவுகளுக்கு’ எதிராக எழுப்பப்படுகிற விமர்சனங்கள் யாவை? (2 தீமோத்தேயு 3:16, 17-ஐ ஒப்பிடுக.)

7. புத்தமத உரைகளின்படி, புத்தரின் தாய் அவரை எவ்வாறு கருவுற்றாள்?

8. புத்தரின் எதிர்காலத்தைப் பற்றி என்ன முன்னுரைக்கப்பட்டது?

9. புத்தரின் எதிர்காலத்தைப் பற்றிய அறிவிப்பை தொடர்ந்து என்ன அற்புதங்கள் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது?

10. புத்த மத புனித உரைகள் புத்தரின் பிறப்பை எவ்வாறு வர்ணிக்கின்றன?

11. புனித உரைகளில் காணப்படும் புத்தரின் வாழ்க்கைக் குறிப்பு பற்றி அறிஞர்கள் சிலர் என்ன முடிவுக்கு வந்திருக்கின்றனர்?

12, 13. (அ) புத்தரின் வாழ்க்கை வரலாறு பற்றிய பாரம்பரிய கருத்து என்ன? (ஆ) புத்தர் எப்போது பிறந்தார் என்பதைக் குறித்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் கருத்து என்ன? (லூக்கா 1:1-4-ஐ ஒப்பிடுக.)

14. கெளதமரின் வாழ்க்கையில் எது திருப்புக்கட்டமாக அமைந்தது?

15. கெளதமர் கடைசியாக எவ்வாறு ஞானோதயத்தைப் பெற்றார்?

16. (அ) கெளதமர் என்னவாக ஆனார்? (ஆ) புத்தரைப் பற்றிய வித்தியாசமான கருத்துகள் யாவை?

17. (அ) எங்கே, யாருக்கு புத்தர் முதன்முதலாக உபதேசம் செய்தார்? (ஆ) நான்கு ஆரிய சத்தியங்களை சுருக்கமாக விளக்கவும்.

18. ஞானோதயம் யாரிடமிருந்து வருவதாக புத்தர் கூறினார்? (ஒப்பிடுக: யோபு 28:20, 21, 28; சங்கீதம் 111:10.)

19. புத்தரின் போதனை அந்தச் சமயத்தில் ஏன் வரவேற்பை பெற்றது?

20. (அ) புத்த மதத்தின் “மூன்று இரத்தினங்கள்” யாவை? (ஆ) புத்தரின் உபதேசம் எந்தளவுக்குப் பரவியது?

21. (அ) புத்த மதம் பரவுவதற்கு பெரிதும் உதவியது யார்? (ஆ) அவர் எடுத்த முயற்சிகளின் பலன் என்ன?

22. ஆசியா முழுவதிலும் புத்த மதம் எவ்வாறு பரவியது?

23. இந்தியாவில் புத்த மதத்திற்கு என்ன ஆனது?

24, 25. இருபதாம் நூற்றாண்டில் வேறு என்ன வளர்ச்சிகள் புத்த மதத்தில் ஏற்பட்டன?

26. புத்த மதம் எவ்வாறு பிரிவுற்றிருக்கிறது?

27, 28. தேரவாதம் என்ற புத்த மத பிரிவை நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்? (பிலிப்பியர் 2:12; யோவான் 17:15, 16-ஐ ஒப்பிடுக.)

29. மகாயான பௌத்த மதத்தின் சிறப்பம்சங்கள் யாவை? (1 தீமோத்தேயு 2:3, 4; யோவான் 3:16-ஐ ஒப்பிடுக.)

30. “பியூர் லாண்ட்” புத்த மத பக்தர்களின் குறிக்கோள் என்ன? (மத்தேயு 6:7, 8; 1 இராஜாக்கள் 18:26, 29-ஐ ஒப்பிடுக.)

31. சென் புத்த மதத்தின் சிறப்பு அம்சங்கள் யாவை? (பிலிப்பியர் 4:8-ஐ ஒப்பிடுக.)

32. திபெத்திய புத்த மதம் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது?

33. புத்த மதப் பிரிவுகள் எவ்வாறு கிறிஸ்தவமண்டல பிரிவுகளைப் போலவே உள்ளன? (1 கொரிந்தியர் 1:10-ஐ ஒப்பிடுக.)

34. புத்த மத போதனைகளை சிந்திக்கும்போது நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?

35. புத்த மதத்தின் பரிசுத்த புத்தகங்களில் மிகப் பழமையானவை யாவை?

36. மகாயான பிரிவினருடைய புத்தகங்களின் சிறப்பம்சங்கள் யாவை?

37. மகாயான புத்தகங்களால் என்ன பிரச்சினைகள் வந்தன? (பிலிப்பியர் 2:2, 3-ஐ ஒப்பிடுக.)

38. (அ) புத்த மத உபதேசங்களும் இந்து மத உபதேசங்களும் எவ்வாறு ஒத்திருக்கின்றன? (ஆ) கோட்பாட்டளவிலும் நடைமுறையிலும் ஆத்மாவைப் பற்றிய புத்த மத கருத்து என்ன?

39. கர்மம் என்ற சட்டத்தை புத்த மத நூல் ஒன்று எவ்வாறு விளக்குகிறது?

40. (அ) இயற்கை சட்டங்கள் இருப்பது எதைச் சுட்டிக்காட்டுகிறது? (ஆ) காரண காரியத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

41. (அ) கர்மம் என்ற சட்டத்தையும் நீதிமன்றங்களின் சட்டத்தையும் எவ்வாறு ஒப்பிட்டுப் பேச முடியும்? (ஆ) கர்ம வினைக்கும் பைபிளின் வாக்குறுதிக்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டவும்.

42. புத்த மத கல்விமான் ஒருவர் மறுபிறப்பை எவ்வாறு விவரிக்கிறார்?

43. (அ) உயிரியலின்படி ஒருவருடைய ஜீன் அமைப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? (ஆ) மறுபிறப்பை ஆதரிப்பதற்கு எது “அத்தாட்சியாக” சில சமயங்களில் சொல்லப்படுகிறது? (இ) மறுபிறப்புக்கு “அத்தாட்சியாக” சொல்லப்படும் இது, அனைவருடைய அனுபவத்திற்கும் ஒத்திருக்கிறதா?

44. “ஆவி” பற்றி பைபிள் போதிப்பதை புத்த மதக் கோட்பாடாகிய மறுபிறப்போடு ஒப்பிடுக.

45. நிர்வாண நிலையைப் பற்றிய புத்த மத கருத்து என்ன?

46, 47. (அ) புத்த மத போதனைகளின்படி, விடுதலை எங்கிருந்து கிடைக்கிறது? (ஆ) விடுதலை எங்கிருந்து கிடைக்கிறது என்பதைப் பற்றிய புத்த மத கருத்து ஏன் அனைவருடைய அனுபவத்திற்கும் நேர்மாறாக உள்ளது?

48. (அ) நிர்வாணம் போன்ற புத்த மதத்தின் புரிந்துகொள்ள கடினமான கருத்துகளின் பாதிப்பை ஒரு புத்தகம் எவ்வாறு விவரிக்கிறது? (ஆ) சமீப காலமாக புத்த மத போதனைகளின் மீதுள்ள ஆர்வம் சில இடங்களில் என்ன விளைவை ஏற்படுத்தி இருக்கிறது?

49. அநேகருக்கு புத்த மதத்தைப் பின்பற்றுவதில் எது மட்டுமே உட்பட்டுள்ளது?

50. நல்மனமுள்ள சில புத்த மதத்தவரின் அனுபவத்தை பார்க்கையில் என்ன கேள்வி மனதுக்கு வருகிறது? (கொலோசெயர் 2:8-ஐ ஒப்பிடுக.)

51. (அ) புத்தரின் உபதேசங்களைப் பற்றி அவரது வாழ்க்கைப் பதிவு ஒன்று என்ன சொல்கிறது? (ஆ) புத்தரின் உபதேசங்களில் முக்கியமான என்ன விஷயம் விடுபட்டுள்ளது? (ஒப்பிடுக: 2 நாளாகமம் 16:9; சங்கீதம் 46:1; 145:18.)

52. (அ) கடவுளைப் பற்றி புத்த மதத்தின் கருத்து என்ன? (ஆ) புத்த மதம் எதைப் புறக்கணித்திருக்கிறது?

53. கடவுளைப் புறக்கணித்துவிட்டு ஞானோதயம் பெற முயலுவது குறித்து என்ன சொல்லப்படலாம்? (ஒப்பிடுக: நீதிமொழிகள் 9:10; எரேமியா 8:9.)

54. வேறு எந்த கிழக்கத்திய மத சிந்தனையாளர்களின் உபதேசங்கள் அடுத்து சிந்திக்கப்படும்?

[பக்கம் 139-ன் பெட்டி]

புத்தரின் நான்கு உயரிய சத்தியங்கள்

புத்தர் தன்னுடைய அடிப்படை போதனையை நான்கு உயரிய சத்தியங்களாக விவரித்தார். தரும-சகதப்-பிரவர்த்தனா சூத்திரம் (நீதியுள்ள ராஜ்யத்தின் அஸ்திவாரம்) என்பதிலிருந்து டி. டபிள்யு. ரைஸ் டேவிட்ஸ் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததை இங்கே மேற்கோள் காட்டுகிறோம்:

▪ “பிக்குகளே, துக்கத்தைப் பற்றிய உயரிய சத்தியம் இதுவே. பிறவியும் துக்கம்; முதுமையும் துக்கம்; நோயும் துக்கம்; சாவும் துக்கம்; விரும்பாதவை வருவதும் துக்கம்; விரும்பியவை பிரிவதும் துக்கம்; விரும்பியது கிடைக்காமல் போவதும் துக்கம்.. . .

▪ “பிக்குகளே, துக்கத்தின் ஆரம்பத்தைப் பற்றிய உயரிய சத்தியம் இதுவே. துக்கத்திற்குக் காரணம் ஆசை. மேலும், பிறவி எடுப்பதில் ஆசை, மகிழ்ச்சியில் ஆசை, பல சந்தர்ப்பங்களிலும் மகிழ்வதில் ஆசை, காமத்தில் ஆசை, உயிரில் ஆசை, வெற்றியில் ஆசை. . . .

▪ “பிக்குகளே, துக்கத்தின் அழிவைப் பற்றிய உயரிய சத்தியம் இதுவே. இது ஆசைகளை அறவே ஒழித்தல், ஆசைகளே இல்லாமை ஆகும்; ஆசையை தள்ளி வைப்பது, ஒழித்துக்கட்டுவது, விட்டு விலகியிருப்பது, இனியும் வளர்த்துக் கொள்ளாதிருப்பது. . . .

▪ “பிக்குகளே, துக்கத்தை நீக்க உதவுகிற மார்க்கம் பற்றிய ஆரிய சத்தியம் இதுவே. இது அஷ்டாங்கிக மார்க்கம். அதாவது, சரியான கருத்துகள்; சரியான ஈடுபாடுகள்; சரியான பேச்சு; சரியான நடத்தை; சரியான வாழ்க்கை; சரியான முயற்சி; சரியான கவனம்; சரியான சிந்தனை.”

[பக்கம் 145-ன் பெட்டி]

புத்த மதமும் கடவுளும்

“கடவுளே இல்லாமல் முழுநிறைவான நற்குணத்தையும் ஞானத்தையும் பெறுவதற்குரிய வழியை புத்த மதம் கற்பிக்கிறது; கடவுளிடமிருந்து எந்த ‘வெளிப்படுத்துதலும்’ இல்லாமல் உன்னத அறிவை அடைவதற்குரிய வழியை கற்பிக்கிறது; . . . ஒரு மீட்பர் இல்லாமல் மீட்பை பெறுவதற்கான வழியை புத்த மதம் கற்பிக்கிறது; நமக்கு நாமே இரட்சகராக இருந்து இரட்சிப்பை பெற முடியுமென கற்பிக்கிறது.”​—பிக்கு சுபத்திரா எழுதிய புத்த மதத்தின் செய்தி (ஆங்கிலம்); புத்த மதம் என்பது என்ன? (ஆங்கிலம்) என்ற புத்தகம் மேற்கோள் காட்டியபடி.

அப்படியென்றால் புத்த மதத்தினர் நாத்திகர்களா? லண்டனில் புத்திஸ்ட் லாட்ஜ் பிரசுரித்திருக்கும் புத்த மதம் என்பது என்ன? புத்தகம் பதிலளிக்கிறது: “தனியொரு கடவுள் இருப்பதை நிராகரிப்பவரே நாத்திகர் என்று நீங்கள் கருதினால் நாங்களும் நாத்திகர்கள்தான்.” தொடர்ந்து அது சொல்வதாவது: “கண்ணால் காண முடியாத அந்த நபரை, தொலைதூரத்தில் அறியாத இடத்தில் வசிக்கும் அந்த நபரை, ஏதோ ஒரு காலத்தில் சூனியத்திலிருந்து ஒரு பிரபஞ்சத்தை​—இப்போது பகை, அநீதி, சம வாய்ப்பில்லாமை, முடிவில்லாத துயரம், சண்டை ஆகியவை நிறைந்து காணப்படுகிற ஒரு பிரபஞ்சத்தை—உண்டாக்கிய அந்த நபரைப் பற்றிய கருத்தை ஒருவர் எளிதாக ஏற்றுக்கொள்கிறார் என்றால், நிலையான சட்டங்கள்தான் இப்பிரபஞ்சத்தை வழிநடத்துகின்றன என்ற கருத்தையும் அவர் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியும்.”

எனவே, கோட்பாட்டளவில் புத்த மதம் கடவுளிலோ ஒரு படைப்பாளரிலோ நம்பிக்கை வைப்பதை ஆதரிப்பதில்லை. என்றபோதிலும், புத்த மதம் கடைப்பிடிக்கப்படுகிற கிட்டத்தட்ட ஒவ்வொரு தேசத்திலும் புத்த ஆலயங்கள் காணப்படுகின்றன; அங்கே புத்தர், போதிசத்துவர் ஆகியோரின் உருவங்களையும் நினைவுச் சின்னங்களையும் வைத்து பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள், காணிக்கைகளைச் செலுத்தி வணங்குகிறார்கள். கடவுள் என்று தன்னை ஒருபோதும் உரிமைபாராட்டிக் கொள்ளாத புத்தர் எல்லா விதத்திலும் கடவுளாகவே ஆக்கப்பட்டுள்ளார்.

[பக்கம் 142-ன் வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

பொ.ச. ஏழாவது நூற்றாண்டுக்குள் புத்த மதம் இந்தியாவிலிருந்து கிழக்கு ஆசியா முழுவதிலும் பரவியிருந்தது

இந்தியா

பனாரஸ்

புத்த கயை

பொ.ச.மு. 3-ம் நூற்றாண்டு இலங்கை

பொ.ச.மு. 1-ம் நூற்றாண்டு காஷ்மீர்

மத்திய ஆசியா

பொ.ச. 1-ம் நூற்றாண்டு சீனா

மயன்மார்

தாய்லாந்து

கம்பூச்சியா

ஜாவா

பொ.ச. 4-ம் நூற்றாண்டு கொரியா

பொ.ச. 6-ம் நூற்றாண்டு ஜப்பான்

பொ.ச. 7-ம் நூற்றாண்டு திபெத்து

[பக்கம் 131-ன் படங்கள்]

உலகெங்கிலும் பல்வேறு வடிவிலுள்ள புத்த ஆலயங்கள்

செங்டூ, வட சீனா

கோப், ஜப்பான்

நியூ யார்க் நகரம், அ.ஐ.மா.

சியாங் மை, தாய்லாந்து

[பக்கம் 133-ன் படம்]

பாகிஸ்தானிலுள்ள கந்தாராவில் மாயா கனவு காண்பதை சித்தரிக்கும் செதுக்கோவியம்; பிறக்கவிருந்த புத்தரைக் குறிக்கும் வெள்ளை நிற யானை (ஒளிவட்டத்தில்) ராணி மாயாவின் வயிற்றில் வளர அவளின் வலது பக்கமாக பிரவேசிப்பதைக் காட்டுகிறது

[பக்கம் 134-ன் படங்கள்]

நியூ யார்க் நகரின் ஒரு ஆலயத்தில் புத்த பிக்குகளும் பக்தர்களும்

[பக்கம் 141-ன் படங்கள்]

பல்வேறு நிலைகளில் புத்தரின் சிலைகள்

நிர்வாணம் எனும் நிலைக்குள் பிரவேசிக்கிறார்

உபதேசிக்கிறார்

தியானிக்கிறார்

சோதனைகளை எதிர்க்கிறார்

[பக்கம் 147-ன் படம்]

டோக்கியோவில் புத்தரின் பிறந்த நாளை கெளரவிக்க நடத்தப்படும் அணிவகுப்பு. பின்னால் இருக்கும் வெள்ளை யானை புத்தரைக் குறிக்கிறது

[பக்கம் 150-ன் படங்கள்]

சீன மொழியில் லோட்டஸ் சூத்ராவின் (10-ம் நூற்றாண்டு) பக்கங்கள், போதிசத்வரான குயான்-யின் என்பவருக்கு அக்கினியிலிருந்தும் ஜலப்பிரளயத்திலிருந்தும் காப்பாற்றும் வல்லமை இருந்தது பற்றி விளக்குகின்றன. வலது படத்திலுள்ள போதிசத்வரான சிட்டிகார்பா, 14-ஆம் நூற்றாண்டின்போது கொரியாவில் மிகப் பிரபலமானவராக இருந்தார்

[பக்கம் 155-ன் படம்]

ஜப்பானிலுள்ள கியோடோவில் கிடைத்த புத்த மத சுருள், “நரக” வாதனைகளைச் சித்தரிக்கிறது

[பக்கம் 157-ன் படங்கள்]

புத்த மதத்தவர் இந்த உருவங்களுக்கு முன் வழிபடுகிறார்கள்; மேலே இடமிருந்து: தாய்லாந்திலுள்ள பாங்காக்கில் ஒரு லிங்கம்; இலங்கையிலுள்ள கண்டியில் புத்தரின் நினைவுச் சின்னமாகிய பல்; சிங்கப்பூரிலும் நியூ யார்க் நகரிலும் புத்தரின் உருவங்கள்

[பக்கம் 158-ன் படங்கள்]

வீட்டிலுள்ள பூஜை பீடத்திற்கு முன்னால் புத்த மத பெண்மணி பிரார்த்திக்கிறார், பிள்ளைகள் ஆலயத்தில் பூஜிக்கிறார்கள்