Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

7. தாவோ, கன்பூசியம்விண்ணுலகம் காட்டும் வழியைத் தேடி

7. தாவோ, கன்பூசியம்விண்ணுலகம் காட்டும் வழியைத் தேடி

அதிகாரம் 7

தாவோ, கன்பூசியம்—விண்ணுலகம் காட்டும் வழியைத் தேடி

தாவோ மதம், கன்பூசிய மதம், புத்த மதம் ஆகியவைதான் சீனாவிலும் தூரக் கிழக்கு நாடுகளிலும் உள்ள மூன்று முக்கிய மதங்களாகும். ஆனால் புத்த மதத்தைப் போல தாவோ மதமும் கன்பூசிய மதமும் உலக மதங்களாக வளரவில்லை. அவை சீனா மற்றும் சீன கலாச்சாரம் பரவியுள்ள இடங்களில் மாத்திரமே பெரும்பாலும் உள்ளன. சீனாவில் இந்த மதங்களைத் தழுவியவர்கள் இப்பொழுது எத்தனை பேர் இருக்கின்றனர் என்பதை அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதுவுமில்லை. என்றாலும், தாவோ மதமும் கன்பூசிய மதமும் கடந்த 2,000 ஆண்டுகளாக உலக மக்கள் தொகையில் சுமார் நான்கில் ஒரு பகுதியினரின் ஆன்மீக வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தி வந்திருக்கின்றன.

‘மலர்கள் நூறு மலரட்டும்; தொகுதிகள் நூறு போட்டி போட்டு எழட்டும்.’ 1956-⁠ல், சீனாவின் மக்கள் குடியரசைச் சேர்ந்த மா சே துங் ஆற்றிய ஒரு சொற்பொழிவில் இந்த வார்த்தைகளைக் கூறினார்; பிற்பாடு இந்த வார்த்தைகள் மிகவும் பிரபலமாயின. ஆனால் உண்மையில், பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் மூன்றாம் நூற்றாண்டு வரை சீனாவில் நிலவிய சூழ்நிலைமையை விவரிக்க சீன அறிஞர்கள் ஏற்கெனவே பயன்படுத்திய சொற்றொடரையே அவர் தொகுத்து சொல்லியிருந்தார். அந்தக் காலப்பகுதி “போரிடும் மாநிலங்களின் காலம்” என அழைக்கப்பட்டது. ஒருசமயம் கொடிகட்டிப் பறந்த சௌ பேரரசு (சுமார் பொ.ச.மு. 1122-256) அப்போது வலுவிழந்திருந்தது. அது சிறு மாநிலங்களாக பிளவுற்று பிரபுக்களால் ஆட்சி செய்யப்பட்டது. இந்த மாநிலங்கள் சதா போரிட்டுக் கொண்டிருந்ததால் பொதுமக்கள் மிகவும் அல்லல்பட்டனர்.

2போர்களால் ஏற்பட்ட கலவரமும் துன்பமும் தலைமுறை தலைமுறையாக ஆட்சி செய்தவர்களின் அதிகாரத்தை ஆட்டங்காண வைத்தன. உயர்குடியினரின் இஷ்டத்திற்கெல்லாம் வளைந்துகொடுத்து அதன் விளைவுகளை மெளனமாக அனுபவித்து வந்த பொதுமக்கள் இனியும் பொறுத்துக்கொள்ள தயாராயில்லை. இதனால் நீண்ட காலமாக அவர்களுக்குள் உறங்கிக் கிடந்த எண்ணங்களும் ஆசைகளும் “மலர்கள் நூறு” மலருவது போல குபீரென வெளிப்பட்டன. வித்தியாசமான தொகுதிகள் அதனதன் கருத்துகளைப் பரப்ப ஆரம்பித்தன; ஆம், வாழ்க்கையைச் சற்று சகஜ நிலைக்குக் கொண்டுவர அரசாங்கம், சட்டம், சமுதாய ஒழுங்கு, நடத்தை, நன்னெறி ஆகியவற்றின் பேரிலும் வேளாண்மை, இசை, இலக்கியம் போன்றவற்றின் பேரிலும் அவை கருத்துகளைப் பரப்ப ஆரம்பித்தன. அவை “தொகுதிகள் நூறு” என்று அழைக்கப்பட்டன. அத்தொகுதிகளில் பெரும்பாலானவற்றால் நிலையான தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் அவற்றில் இரண்டு தொகுதிகள் மட்டும் பிரபலமடைந்து 2,000-⁠க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சீனருடைய வாழ்வில் செல்வாக்கு செலுத்தி வந்திருக்கின்றன. இவையே காலப்போக்கில் தாவோ மதம் என்றும் கன்பூசிய மதம் என்றும் அழைக்கப்படலாயின.

தாவோ​—⁠அது என்ன?

3சீனா, ஜப்பான், கொரியா, மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளில் தாவோ மதமும் கன்பூசிய மதமும் ஏன் மிக ஆழமாகவும் உறுதியாகவும் வேரூன்றிக் கொண்டன என்பதைப் புரிந்துகொள்வதற்கு தாவோ பற்றிய சீனர்களின் அடிப்படைக் கருத்தை ஓரளவு புரிந்துகொள்வது அவசியம். தாவோ என்பதன் அர்த்தம் “வழி, மார்க்கம், அல்லது பாதை” என்பதாகும். விரிவான கருத்தில், “முறை, நியமம், அல்லது கொள்கை” என்றும் அது அர்த்தப்படலாம். பிரபஞ்சத்தில் தாங்கள் கண்ட இசைவையும் ஒழுங்கையும் தாவோவின் வெளிப்பாடாகவே சீனர்கள் கருதினர். இது ஒருவித தெய்வீக சித்தமாக அல்லது சட்டமாக இந்தப் பிரபஞ்சத்தில் இருந்து அதை ஒழுங்குபடுத்துவதாக அவர்கள் கருதினர். வேறு வார்த்தையில் சொன்னால், பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் படைப்பாளரான ஒரு கடவுளில் நம்பிக்கை வைப்பதற்கு பதிலாக அனைத்துக்கும் விண்ணுலகின் விருப்பமே, அல்லது விண்ணுலகமே காரணமென நம்பினர்.

4தாவோ பற்றிய கருத்தை மனித விவகாரங்களுக்குப் பொருத்துகையில், எல்லாவற்றையும் செய்வதற்கு இயல்பான, சரியான ஒரு வழி உண்டு என்றும், எல்லாவற்றுக்கும் எல்லாருக்கும் சரியான இடமும் சரியான கடமையும் உண்டு என்றும் சீனர்கள் நம்பினர். உதாரணமாக, குடிமக்களிடம் அரசன் நியாயமாக நடந்து மேலுலகத்தோடு சம்பந்தப்பட்ட பலிக்குரிய சடங்குகளைச் செய்தால் தேசத்தில் அமைதியும் செழுமையும் உண்டாகும் என்பது அவர்கள் நம்பிக்கை. அதைப் போலவே மக்களும் அந்த வழியைத் தேடி, அதாவது தாவோவை தேடி அதைப் பின்பற்றினால், அனைத்தும் இணக்கமாயும் அமைதியாயும் பயனுள்ளதாயும் அமையுமென நம்பினர். ஆனால் அவர்கள் அதற்கு முரணாக சென்றால் அல்லது அதை எதிர்த்து நின்றால், அதன் விளைவு குழப்பமும் நாசமுமே என்றும் நம்பினர்.

5தாவோவின் வழியில் குறுக்கிடாமல் அதன் போக்கிலேயே செல்ல வேண்டும் என்பதுதான் சீனர்களின் தத்துவ மற்றும் மத சிந்தனையின் மையக் கருத்தாகும். தாவோ மதமும் கன்பூசிய மதமும் ஒரே கருத்தின் வெவ்வேறு வெளிப்பாடுகள் எனலாம். தாவோ மதம் இயற்கைக்கு அப்பாற்பட்ட நோக்குநிலை உடையது. செயல்படாதிருத்தல், அமைதியாயிருத்தல், அடக்கமாயிருத்தல், சமுதாயத்தைவிட்டு ஒதுங்கி இயற்கையோடு ஒன்றியிருத்தல் ஆகியவற்றை ஆரம்ப காலத்தில் தாவோ மதம் பரிந்துரை செய்தது. மக்கள் எதையும் செய்யாமல் வெறுமனே அமைதியாயிருந்து இயற்கையை அதன் போக்கில் செயல்பட விட்டுவிட்டால் எல்லாம் நலமாக நடக்கும் என்பதே அதன் அடிப்படைக் கருத்து. மறுபட்சத்தில், கன்பூசிய மதத்தின் நோக்குநிலை நடைமுறையானது. ஒவ்வொருவரும் தான் செய்ய வேண்டியதை செய்து தன் கடமையை ஆற்றினால் சமுதாயத்தில் ஒழுங்கைக் காத்துக்கொள்ள முடியும் என்று அது கற்பிக்கிறது. அதற்கு உதவியாக எல்லாவித மனித உறவுகளையும் தொகுத்து​—⁠அரசன்-குடிமகன், தந்தை-மைந்தன், கணவன்-மனைவி என்றெல்லாம் தொகுத்து​—⁠அவை அனைத்திற்கும் வழிகாட்டுதல்களை அளிக்கிறது. ஆகவே பின்வரும் கேள்விகள் எழுகின்றன: இந்த இரண்டு மதங்களும் எவ்வாறு தோன்றின? அவற்றின் ஸ்தாபகர்கள் யார்? அவை இன்று எவ்விதமாக கடைப்பிடிக்கப்படுகின்றன? கடவுளுக்கான மனிதவர்க்கத்தின் தேடலில் அவை ஆற்றிய பங்கென்ன?

தாவோ மதம்​—⁠ஒரு தத்துவமாக ஆரம்பமானது

6ஆரம்ப காலகட்டங்களில் தாவோ ஒரு மதமாக இருந்ததென சொல்வதைவிட ஒரு தத்துவமாக இருந்ததென்றே சொல்லலாம். அதன் ஸ்தாபகர் லாவொட்ஸே, தான் வாழ்ந்துவந்த காலத்தில் இருந்த குழப்பத்தையும் கலவரத்தையும் பொறுக்க முடியாமல் அவற்றிலிருந்து விடுபடுவதற்கு சமுதாயத்தை விட்டு விலகி இயற்கையோடு ஒன்றிவிட முயன்றார். பொ.ச.மு. ஆறாவது நூற்றாண்டில் வாழ்ந்ததாக சொல்லப்படும் இந்நபரைப் பற்றி அதிகம் தெரியவில்லை. அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றிகூட நிச்சயமாக சொல்வதற்கில்லை. “வயதான எஜமான்” அல்லது “வயதானவர்” என அர்த்தப்படுத்தும் லாவொட்ஸே என்ற பெயரால் அவர் பொதுவாக அழைக்கப்படுகிறார். ஏனென்றால், அவரது தாய் நீண்ட காலமாக அவரை கருவில் சுமந்தபடியால் பிறக்கும்போதே அவர் தலைமயிர் நரைத்துப் போயிருந்தது என ஒரு பழங்கதை கூறுகிறது.

7பொ.ச.மு. இரண்டாம் மற்றும் முதலாம் நூற்றாண்டுகளின் மதிப்புக்குரிய அரசவை வரலாற்றாசிரியர் சு-மா ஷயன் எழுதிய ஷி ஜி (வரலாற்றுப் பதிவுகள்) என்ற புத்தகமே லாவொட்ஸே பற்றிய நம்பகமான ஒரே பதிவாகும். இதில் லாவொட்ஸேயின் உண்மை பெயர் லி யெர் என்றும், இவர் மத்திய சீனாவின் லோயாங் நகரிலிருந்த அரசு ஆவணக் காப்பகத்தில் குமாஸ்தாவாக பணியாற்றி வந்தார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் முக்கியமாக, லாவொட்ஸே பற்றி பின்வரும் குறிப்பை இப்புத்தகம் அளிக்கிறது:

“லாவொட்ஸே தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை செள பேரரசிலேயே கழித்தார். செள பேரரசின் வீழ்ச்சியை முன்கூட்டியே அவர் உணர்ந்தபோது அங்கிருந்து விலகி எல்லைப் பகுதிக்கு சென்றார். ‘ஐயா, நீர் ஓய்வுபெற விரும்புவதால், எனக்காக ஒரு புத்தகத்தையாவது எழுதித் தந்துவிட்டுப் போகுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று சுங்கச் சாவடி அதிகாரியான இன் ஷி அவரிடம் வேண்டிக் கொண்டார். அதற்கு ஒப்புக்கொண்ட லாவொட்ஸே, இரண்டு பகுதிகளுடைய ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்ட ஒரு நூலை எழுதினார். இதில் வழி [தாவோ], சக்தி [தேஹ்] ஆகியவற்றைப் பற்றி எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார். அவர் எங்கே உயிர் நீத்தார் என்பது யாருக்கும் தெரியாது.”

8இந்தப் பதிவு உண்மையா என கல்விமான்கள் பலர் சந்தேகிக்கின்றனர். எப்படியிருந்தாலும், லாவொட்ஸே எழுதிய நூல் தாவோ மதத்தின் முக்கிய நூலாக கருதப்படுகிறது; அதன் பெயர் தாவோ தேஹ் ஜிங் என்பதாகும் (“வழி மற்றும் சக்தியின் உயர்தர நூல்” என இது பொதுவாக மொழிபெயர்க்கப்படுகிறது). அது புதிர் நிறைந்த வாக்கியங்களில் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது; சில சமயங்களில் அந்த வாக்கியங்களில் மூன்று அல்லது நான்கு வார்த்தைகளே உள்ளன. இதன் காரணமாகவும், லாவொட்ஸே வாழ்ந்த காலம் முதற்கொண்டு ஒரு சில எழுத்துக்களின் அர்த்தம் கணிசமாக மாறியிருப்பதன் காரணமாகவும் இந்நூலுக்கு பல்வேறு விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன.

“தாவோ தேஹ் ஜிங்”​—⁠ஒரு பார்வை

9 தாவோ தேஹ் ஜிங்-⁠ல், இயற்கையின் உன்னத வழியான தாவோவைப் பற்றி லாவொட்ஸே அதிகப்படியாக விளக்கமளித்ததோடு, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் அதைப் பொருத்தினார். தாவோ தேஹ் ஜிங் பற்றி சுருக்கமாக தெரிந்துகொள்வதற்கு கியா-ஃபூ ஃபெங் மற்றும் ஜேன் இங்லிஷ் ஆகியோரது நவீன மொழிபெயர்ப்பிலிருந்து இங்கே மேற்கோள் காட்டுகிறோம். அது தாவோவைப் பற்றி பின்வருமாறு விளக்குகிறது:

“விண்ணும் மண்ணும் தோன்றும் முன்னே,

விளக்க முடியாத ஏதோவொன்று உருவானது. . . .

பத்தாயிரம் பொருட்களை ஈன்றெடுத்த அன்னையாக அது இருக்கலாம்.

அதன் பெயரை நான் அறியேன்.

அதை தாவோ என்று அழைக்கலாமே.”​—⁠அதிகாரம் 25.

“அனைத்தும் தாவோவிலிருந்தே தோன்றுகிறது.

ஒழுக்கம் [தேஹ்] அவற்றை ஊட்டி வளர்க்கிறது.

சடப்பொருளிலிருந்து அவை உருவாகின்றன.

சுற்றுச்சூழல் அவற்றிற்கு வடிவம் தருகிறது.

இதனால் பத்தாயிரம் பொருட்களும் தாவோவுக்கு மரியாதை செலுத்துகின்றன

ஒழுக்கத்திற்கு [தேஹ்] கனம் சேர்க்கின்றன.”​—⁠அதிகாரம் 51.

10விளங்கிக்கொள்ள முடியாத இந்தப் பகுதிகளிலிருந்து நாம் என்ன அறிகிறோம்? தாவோ என்பது சடப்பொருள் பிரபஞ்சம் உருவாவதற்கு காரணமாயிருந்த ஏதோவொரு மர்ம சக்தி​—⁠மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி​—⁠என்று தாவோ மதத்தவர் நம்புகிறார்கள் என்பதை அறிகிறோம். தாவோவைத் தேடி, உலகை துறந்துவிட்டு, இயற்கையோடு ஒன்றிப்போய்விடுவதே தாவோ மதத்தின் குறிக்கோள். மனித நடத்தையைக் குறித்த தாவோ மதத்தின் கருத்தும் இதன் அடிப்படையிலானதே. தாவோ தேஹ் ஜிங்-⁠ல் ஒரு பகுதி இந்தக் கொள்கையைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது:

“வழிய வழிய நிரப்புவதைவிட குறைவாக நிரப்புவதே மேல்.

கத்தியை அளவுக்கதிகம் கூர்மையாக்கினால் ஓரம் சீக்கிரமாக மழுங்கிவிடும்.

பொன்னையும் விலையுயர்ந்த கற்களையும் குவித்துக் கொண்டால், யாராலும் அவற்றை பாதுகாக்க இயலாது.

செல்வத்தையும் அந்தஸ்தையும் தேடிப்போனால் அழிவு பின்தொடர்ந்து வரும்.

வேலை முடிந்தவுடன் ஓய்வுபெறு.

இதுவே விண்ணுலகம் காட்டும் வழி.”​—⁠அதிகாரம் 9.

11ஆரம்பத்தில் தாவோ மதம் ஒருவித தத்துவமாக இருந்தது என்பதை இந்த சில உதாரணங்கள் காட்டுகின்றன. பிரபுக்களின் கொடூரமான ஆட்சியினால் அந்தச் சமயத்தில் எங்கும் அநீதியும் துன்பமும் அழிவும் வீண் காரியங்களுமே தலைவிரித்தாடின. இதனால் தாவோ மதத்தினர் மனமுடைந்து போயினர்; எனவே, ராஜாக்களும் மந்திரிகளும் பொதுமக்களை அடக்கி ஆண்ட காலத்துக்கு முற்பட்ட பண்டைய காலத்துக்கு திரும்பினால் மாத்திரமே அமைதியையும் ஒற்றுமையையும் காண முடியுமென்று நம்பி வந்தனர். இயற்கையோடு இசைந்து அமைதியாக வாழும் கிராமப்புற வாழ்க்கைக்கு திரும்புவதே அவர்களது லட்சியமாக இருந்தது.​—நீதிமொழிகள் 28:15; 29:⁠2.

தாவோ மதத்தின் இரண்டாவது குரு

12லாவொட்ஸேயின் தத்துவத்தை அவருடைய முதன்மை வாய்ந்த வாரிசாக கருதப்படும் சுவாங் சௌ, அதாவது சுவாங்-⁠ட்ஸே (பொ.ச.மு. 369-286) மேலும் விரிவுபடுத்தினார். இவரது பெயருக்கு “மாஸ்டர் சுவாங்” என்று அர்த்தம். இவர் சுவாங் ட்ஸே என்ற புத்தகத்தில் தாவோ பற்றி விரிவாக எழுதியதோடு யீ-ஜிங்-⁠ல் முதல் முதலாக விவரிக்கப்பட்டிருந்த இன், யாங் பற்றிய கருத்துகளையும்கூட விவரித்தார். (பக்கம் 83-ஐக் காண்க.) எதுவுமே உண்மையில் நிரந்தரமாக அல்லது முழுமையாக இல்லை, அனைத்து காரியங்களுமே எதிரும் புதிருமாக மாறிக்கொண்டே இருக்கின்றன என்பது அவர் கருத்து. “இலையுதிர்கால வெள்ளப்பெருக்கு” என்ற அதிகாரத்தில் அவர் இவ்வாறு எழுதினார்:

“பிரபஞ்சத்தில் நிலையானதென்று எதுவுமே இல்லை, ஏனெனில் அனைத்துமே சாகிற காலம் வருகிற வரைதான் உயிருடன் இருக்கின்றன. ஆரம்பமோ முடிவோ இல்லாத தாவோ மாத்திரமே எப்போதும் நிலைத்திருக்கிறது. . . . வாழ்க்கையை, முழு வேகத்தில் நான்கு கால் பாய்ச்சலில் ஓடும் குதிரைக்கு ஒப்பிடலாம்​—⁠அது ஒவ்வொரு நொடிப்பொழுதும், இடைவிடாமல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. அப்படியென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? உங்கள் செயல் உண்மையில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.”

13எதுவும் செய்யாமல் இருப்பதை ஊக்குவிக்கும் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில், தாவோ மதத்தவர் கருதுவதாவது: இயற்கை துவங்கி வைத்த எவ்வித செயல்பாடுகளிலும் குறுக்கிடுவது அர்த்தமற்றது. இன்றோ நாளையோ அனைத்தும் தலைகீழாக மாறிவிடப் போகிறது. தாங்க முடியாத சூழ்நிலையாக இருந்தாலும் சீக்கிரத்தில் அது மாறப் போகிறது. இன்பம் பொங்கும் சூழ்நிலையாக இருந்தாலும் அதுவும் சீக்கிரத்தில் மறையப் போகிறது. (இதற்கு நேர்மாறாக, பிரசங்கி 5:18, 19-ஐ காண்க.) இந்தத் தத்துவ கருத்து சுவாங்-⁠ட்ஸே கண்ட ஒரு கனவில் வெளிப்படுகிறது. பின்வரும் அந்தக் கனவின் காரணமாகவே பாமர மக்கள் முக்கியமாக அவரை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள்:

“தன் இஷ்டப்படி உல்லாசமாக சிறகடித்து பறந்து செல்லும் சந்தோஷமுள்ள ஒரு வண்ணத்துப்பூச்சியாக தான் இருப்பதுபோல் ஒரு சமயம் சுவாங் சௌ கனவு கண்டார். அதில் தான் சுவாங் சௌ என்பது அப்போது அவருக்குத் தெரியவில்லை. திடீரென விழித்தபோது, சாட்சாத் சுவாங் சௌவாக குத்துக்கல் போல் தான் அங்கே இருப்பதைக் கண்டார். ஆனால் சுவாங் சௌவாக இருந்துகொண்டு வண்ணத்துப்பூச்சியாக இருப்பதுபோல் கனவு கண்டாரா அல்லது வண்ணத்துப்பூச்சியாக இருந்துகொண்டு சுவாங் சௌவாக இருப்பதுபோல் கனவு கண்டாரா என்பதை அறியாதிருந்தார்.”

14இந்தத் தத்துவத்தின் செல்வாக்கை பிற்பட்ட காலங்களில் தோன்றிய சீன கவிதைகளிலும் ஓவியங்களிலும் காண முடிகிறது. (பக்கம் 171-ஐக் காண்க.) ஆனால் தாவோ வெறும் தத்துவமாகவே இருந்துவிடவில்லை, அது சீக்கிரத்தில் மாறவிருந்தது.

தத்துவம் மதமாகிறது

15இயற்கையோடு ஒன்றிவிட தாவோ மதத்தவர் முயற்சி செய்தபோது, இயற்கைக்கு வயது கிடையாது என்ற உண்மையும், அது தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் திறன் பெற்றது என்ற உண்மையும் அவர்களது சிந்தனையை ஆக்கிரமித்தன. தாவோ, அதாவது இயற்கையின் வழியில் சென்றால், அதன் இரகசியங்களைக் கண்டுபிடித்து உடல் உபாதைகள், நோய்கள், மரணம் போன்றவற்றின் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிட முடியும் என்று அவர்கள் ஊகித்தார்கள். இதை ஒரு முக்கியமான விஷயமாக லாவொட்ஸே சொல்லாவிட்டாலும் தாவோ தேஹ் ஜிங்-⁠ல் உள்ள பகுதிகள் இந்தக் கருத்தையே ஆதரிப்பது போல் தெரிகிறது. உதாரணமாக, 16-⁠ம் அதிகாரம் இவ்வாறு சொல்கிறது: “தாவோவுடன் ஒன்றியிருப்பது நித்தியமானது. சரீரம் செத்தாலும் தாவோ ஒருபோதும் அழியாது.” a

16சுவாங்-⁠ட்ஸேவும்கூட இப்படிப்பட்ட ஊகங்களுக்கு காரணமாக இருந்திருக்கிறார். உதாரணமாக, அவரது புத்தகமாகிய சுவாங் ட்ஸே-⁠யில் ஒரு கற்பனை கதாபாத்திரம் மற்றொருவரிடம் இவ்வாறு கேட்கிறது: “உனக்கு அதிக வயதாகிவிட்டாலும் உன் சருமம் ஒரு குழந்தையினுடையது போல உள்ளதே. அது எப்படி?” அதற்கு, “நான் தாவோவை கற்றுக்கொண்டு விட்டேன்” என்று பதில் வருகிறது. இன்னொரு தாவோ தத்துவஞானியைப் பற்றி சுவாங்-⁠ட்ஸே இவ்வாறு எழுதினார்: “இப்போது லைட்ஸி என்பவரால் காற்றில் சவாரி செய்ய முடியும். குளிர்ந்த தென்றலில் பதினைந்து நாட்கள் வரை மிதந்து சென்று வர முடியும். இத்தகைய மகிழ்ச்சியை அனுபவிக்கும் மனிதனை ஜனங்களுக்குள் காண்பது அரிது.”

17இப்படிப்பட்ட கதைகள் தாவோ மதத்தினரின் கற்பனைகளை வெகுவாக தூண்டிவிட்டன. எனவே தியானம், உணவுக் கட்டுப்பாடு, சுவாசப் பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் சரீர சிதைவையும் மரணத்தையும் தாமதப்படுத்த முடியும் என்று கருதி அவற்றை அவர்கள் பரிசோதிக்க ஆரம்பித்தனர். மேகங்களில் பறந்து, இஷ்டம் போல் தோன்றி மறைந்து, புனித மலைகளில் அல்லது தொலை தூர தீவுகளில் எண்ணிலடங்கா ஆண்டுகள் வசித்து, பனியினாலோ மந்திரசக்தி வாய்ந்த பழங்களை உண்டதாலோ உயிர் வாழ்ந்த சாகா வரம் பெற்றவர்களைப் பற்றிய பழங்கதைகள் வேகமாக பரவின. பொ.ச.மு. 219-⁠ல் சின் பேரரசர் ஷி ஹூவாங்-டி, சாகா வரம் பெற்றவர்கள் வாழ்ந்ததாக புராணங்கள் கூறும் பிஎங்-லாய் என்ற தீவைக் கண்டுபிடித்து சாவாமை தரும் மூலிகையை அங்கிருந்து கொண்டுவரும்படி 3,000 சிறுவர் சிறுமிகளை கப்பல்களில் அனுப்பி வைத்ததாக சீன வரலாறு கூறுகிறது. ஆனால் அவர்கள் இந்த காயகல்பத்தோடு திரும்பி வரவேயில்லை; என்றாலும், ஜப்பான் என்று பின்னர் அழைக்கப்பட்ட தீவுகளில் அவர்கள் குடியேறியதாக பாரம்பரியம் சொல்கிறது.

18ஹான் பேரரசின் காலத்தில் (பொ.ச.மு. 206-பொ.ச. 220) தாவோ மதத்தின் மாயமந்திர பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பது ஒரு புதிய உச்சநிலையை அடைந்தது. ஊ டி என்ற பேரரசர் கன்பூசிய மத போதனைகளையே அதிகாரப்பூர்வ கொள்கையாக ஆதரித்து வந்தபோதிலும் சாவாமை பற்றிய தாவோ மத கருத்திடம் வெகுவாக கவரப்பட்டார். முக்கியமாக, இரசவாதத்தின் மூலம் ‘சாவாமை மாத்திரைகளைக்’ கண்டுபிடிப்பதில் மூழ்கிப்போனார். எதிரும் புதிருமான இன், யாங் (ஆண்-பெண்) சக்திகள் இணையும்போது உயிர் உருவாகிறது என்பது தாவோ மதத்தின் கருத்து. இவ்வாறு, ஈயத்தை (இருள், அதாவது இன்) பாதரசத்தோடு (வெளிச்சம், அதாவது யாங்) கலப்பதன் மூலம் வேதியியலர் இயற்கை நிகழ்வை காப்பியடித்தனர்; இவ்வாறு சாவாமை மாத்திரையை உருவாக்க முடியும் என்று கருதினர். யோகாசனம் போன்ற பயிற்சிகள், சுவாசக் கட்டுப்பாட்டுப் பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடு, குறிப்பிட்ட பாலுறவு பழக்கங்கள் ஆகியவை சக்தியைக் கூட்டி வாழ்நாளை நீடிக்கச் செய்யும் என்று கருதி தாவோ மதத்தினர் அவற்றையும் கடைப்பிடித்தனர். மந்திரித்த தாயத்துக்களை வைத்திருந்தால் யாருமே அவர்களைப் பார்க்க முடியாது, எந்த ஆயுதத்தாலும் அவர்களைத் தாக்க முடியாது, தண்ணீர் மீது நடந்து செல்ல முடியும், விண்வெளியில் பறந்து செல்லவும் முடியும் என்றெல்லாம் அவர்கள் நம்பினர். பொதுவாக இன், யாங் அடையாளங்களைக் கொண்ட மந்திர முத்திரைகளை கட்டிடங்களிலும் கதவுகளிலும் அவர்கள் பதித்து வைத்திருந்தனர். இவை தீய ஆவிகளையும் காட்டு மிருகங்களையும் விரட்டி அடித்துவிடும் என்று நம்பினர்.

19பொ.ச. இரண்டாவது நூற்றாண்டுக்குள், தாவோ மதம் ஒழுங்கமைக்கப்பட்டது. சாங் லிங், அதாவது சாங் தாவோ-லிங் என்பவர் மேற்கு சீனாவில் தாவோ மதத்தின் ஓர் இரகசிய ஸ்தாபனத்தை நிறுவி மந்திர சக்தியால் சுகப்படுத்தவும் இரசவாத முறையை பயன்படுத்தவும் ஆரம்பித்தார். உறுப்பினர் ஒவ்வொருவரிடமிருந்து ஐந்தளவு அரிசி கட்டணமாக பெறப்பட்டதால் இவருடைய இயக்கம் ஐந்தளவு-அரிசி தாவோ (wu-tou-mi tao) என பெயர் பெற்றது. b லாவொட்ஸே தனிப்பட்ட விதமாக தனக்கு காட்சி அளித்ததாக சொல்லிய சாங், முதல் “விண்ணுலக எஜமானர்” ஆனார். என்றென்றும் உயிர் வாழத் தேவையான காயகல்பத்தைக் கண்டுபிடிப்பதில் கடைசியாக அவர் வெற்றி பெற்றதாகவும், ஜியாங்சி மாகாணத்திலுள்ள லுங்-ஹூ மலையிலிருந்து (டிராகன்-புலி மலையிலிருந்து) புலி மீது சவாரி செய்தவாறு மேலுலகுக்கு உயிரோடே ஏறிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. சாங் தாவோ-லிங்-⁠ல் ஆரம்பித்து, பல நூற்றாண்டுகளாக அடுத்தடுத்து அநேக “விண்ணுலக எஜமானர்கள்” வந்தனர்; அவர்கள் ஒவ்வொருவரும் சாங்கின் அவதாரங்களாக கருதப்பட்டனர்.

புத்த மதத்தின் சவாலை சமாளித்தல்

20ஏழாவது நூற்றாண்டிற்குள், டாங் பேரரசின் காலத்தில் (பொ.ச. 618-907) புத்த மதம் சீனர்களின் ஆன்மீக வாழ்க்கையில் நுழைய ஆரம்பித்திருந்தது. இதைத் தடுப்பதற்காக, சீனாவிலிருந்தே தோன்றிய ஒரு மதமாக தாவோ மதம் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டது. லாவொட்ஸே தெய்வமாக வணங்கப்பட்டார். தாவோ மத பதிவுகள் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றன. கோவில்கள், துறவிமடங்கள், கன்னிகா மடங்கள் ஆகியவை கட்டப்பட்டன. ஏறக்குறைய புத்த மத பாணியிலேயே துறவிகள் மற்றும் கன்னிகாஸ்திரீகளின் அமைப்புகள் ஸ்தாபிக்கப்பட்டன. அதுமட்டுமல்ல, தாவோ மத தெய்வங்களோடுகூட, சீனர்களின் பழங்கதைகளில் காணப்படும் தெய்வங்கள், தேவிகள், வனதேவதைகள், நாடோடிக் கதைகளில் வரும் சாவாமையுள்ளவர்கள் ஆகியோரும் வணங்கப்பட்டனர். இந்த சாவாமையுள்ளவர்களில், எட்டு அமரர்கள் (பா ஷியான்), அடுப்படியின் தெய்வம் (சாஒ ஷென்), நகர தெய்வங்கள் (ஷெங் ஹூயங்), வாயில் காவலர்கள் (மென் ஷென்) போன்றோர் அடங்குவர். எனவே, முடிவில் புத்த மதத்தின் சில கொள்கைகள், பாரம்பரிய மூடநம்பிக்கைகள், ஆவியுலகத் தொடர்பு, மூதாதையர் வழிபாடு ஆகியவற்றின் ஒரு கலவை உருவானது.​—1 கொரிந்தியர் 8:⁠5.

21காலம் செல்லச் செல்ல, தாவோ மதத்தில் விக்கிரகாராதனையும் மூடநம்பிக்கைகளும் பெருகின; ஆகவே மெதுமெதுவாக அதன் தரம் குறைந்தது. ஒவ்வொருவரும் உள்ளூர் கோவிலில் தங்களுடைய இஷ்ட தெய்வத்தை வழிபட ஆரம்பித்தனர். தீய சக்திகளுக்கு எதிராக தங்களை காக்கும்படியும் செல்வங்களை அருளும்படியும் வேண்டிக் கொண்டனர். சவ அடக்க நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், கல்லறை, வீடு, வியாபாரம் ஆகியவற்றிற்கு அனுகூலமான இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும், மரித்தோரிடம் பேசுவதற்கும், தீய சக்திகளையும் பேய்களையும் விரட்டியடிப்பதற்கும், விழாக்களை கொண்டாடுவதற்கும், வேறு பல சடங்குகளைச் செய்வதற்கும் மத குருக்களை பணம் கொடுத்து அமர்த்தினர். இவ்வாறு, புரியா தத்துவங்கள் அடங்கிய தொகுதியாக ஆரம்பித்த தாவோ மதம், சாகாத ஆவிகள், நரக அக்கினி, அரைதெய்வங்கள் ஆகிய நம்பிக்கைகளில் ஆழமாக வேரூன்றிவிட்ட ஒரு மதமாக மாறியது​—⁠இவை அனைத்துமே பண்டைய பாபிலோனிய பொய் மத நம்பிக்கைகளின் தொகுப்பிலிருந்து பெறப்பட்ட கருத்துகளாகும்.

சீனாவின் மற்றொரு பிரபலமான குரு

22தாவோ மதத்தின் எழுச்சி, வளர்ச்சி, வீழ்ச்சி ஆகியவற்றை சிந்தித்தோம்; ஆனால் போரிடும் மாநிலங்களின் காலத்திலே சீனாவில் மலர்ந்த ‘தொகுதிகள் நூறில்’ இது ஒரு தொகுதி மட்டுமே என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். இறுதியில் பிரபலமடைந்த, சொல்லப்போனால் முதன்மையான இடத்தைப் பிடித்த மற்றொரு தொகுதி கன்பூசிய தொகுதியாகும். ஆனால் அது ஏன் இந்தளவு பிரபலமானது? மற்ற எல்லா சீன குருக்களையும்விட சீனாவுக்கு வெளியே பிரபலமானவர் கன்பூசியஸ்தான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் உண்மையில் அவர் யார்? அவர் என்ன கற்பித்தார்?

23கன்பூசியஸைப் பற்றி தெரிந்துகொள்ள நாம் மறுபடியும் சு-மா-ஷயனின் ஷி ஜி (வரலாற்றுப் பதிவுகள்) புத்தகத்தைப் பார்க்க வேண்டும். லாவொட்ஸே பற்றி சுருக்கமான குறிப்புகளே உள்ள இதில், கன்பூசியஸைப் பற்றி விளக்கமான பதிவுகள் உள்ளன. சீன கல்விமான் லின் யூதாங்கின் மொழிபெயர்ப்பிலிருந்து கன்பூசியஸின் வாழ்க்கையைப் பற்றி சில விவரங்கள்:

“லூ நாட்டில் சாங்பிங் மாவட்டத்தில் டிஸோ என்ற ஊரில் கன்பூசியஸ் பிறந்தார். . . . [அவருடைய தாய்] நிச்சியூ மலையில் பிள்ளை வரம் கேட்டு பிரார்த்தனை செய்ய, அதன் விளைவாக கன்பூசியஸ் பிறந்தார். அது லூவின் டியூக் ஷியாங்கின் இருபத்து இரண்டாம் ஆட்சி ஆண்டாகும் (கி.மு. 551). பிறப்பின் சமயத்தில் அவருடைய தலையில் ஒரு புடைப்பு எடுப்பாக தெரிந்தது. அதன் காரணமாக அவர் ‘சியூ’ (“குன்று” என அர்த்தம்) என்று அழைக்கப்பட்டார். அவருடைய இலக்கிய பெயர் சுங்னி, அவருடைய குடும்பப் பெயர் குவாங்.” c

24அவர் பிறந்த சில நாட்களுக்குள் அவருடைய தந்தை காலமானார். வறுமையில் இருந்த தாய் எப்படியோ அவரை நல்ல விதமாக படிக்க வைத்தார். அவருக்கு வரலாறு, செய்யுள், இசை ஆகிய பாடங்களில் அதிக ஈடுபாடு இருந்தது. 15-⁠ம் வயதில் அவர் புலமை பெறும் நோக்கத்தோடு கல்விக்காக தன்னை அர்ப்பணித்தார் என கன்பூசிய மதத்தின் நான்கு புத்தகங்களில் (ஆங்கிலம்) ஒன்றான இலக்கிய தொகுப்பு (ஆங்கிலம்) என்ற புத்தகம் சொல்கிறது. 17-⁠ம் வயதில் அவருடைய சொந்த நாடான லூ-வில் அவருக்கு ஒரு சிறிய அரசாங்க உத்தியோகம் கிடைத்தது.

25அதன்பின், அவருடைய பொருளாதார நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. எனவே, 19-⁠ம் வயதில் திருமணம் செய்துகொண்டார். அடுத்த ஆண்டு அவருக்கு ஒரு மகன் பிறந்தான். சுமார் 25 வயதுள்ளவராகையில் அவருடைய தாய் காலமானார். இதனால் அவர் மிகவும் மனமுடைந்து போனார். பண்டைய பாரம்பரிய பழக்கங்களை மிகவும் கண்டிப்புடன் கடைப்பிடித்த அவர், பொது வாழ்க்கையை விட்டு விலகி 27 மாதங்கள் அவருடைய தாயின் கல்லறையில் துக்கம் அனுஷ்டித்தார். இவ்வாறு, பெற்றோரிடம் பிள்ளைகள் காண்பிக்க வேண்டிய பற்றுக்கு சிறந்த முன்மாதிரியை சீனர்களுக்கு வைத்தார்.

ஆசிரியராக கன்பூசியஸ்

26அதன் பிறகு அவர் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து சென்றார். கல்விபுகட்டும் ஆசிரியராக எல்லா இடங்களுக்கும் சென்றார். இசை, செய்யுள், இலக்கியம், குடியியல், நன்னெறி, அறிவியல், அதாவது அந்தச் சமயத்தில் அறியப்பட்டிருந்த அறிவியல் ஆகிய பாடங்களையெல்லாம் கற்பித்தார். ஒரு சமயம் அவரிடம் சுமார் 3,000 மாணவர்கள் கல்வி பயின்றதாக சொல்லப்படுவதால் அவர் மிகவும் பிரபலமடைந்தவராகத்தான் இருந்திருக்க வேண்டும்.

27கன்பூசியஸ் மாபெரும் ஆசிரியர் என்பதற்காகவே கிழக்கத்திய நாடுகளில் முக்கியமாய் மதிக்கப்படுகிறார். சொல்லப்போனால், ஷான்துங் மாகாணத்தில் சியு-ஃபோவிலுள்ள அவருடைய கல்லறையில் செதுக்கப்பட்ட வாசகம் அவரை “பழம்பெரும், மகா புனித ஆசிரியர்” என்று குறிப்பிடுகிறது. மேற்கத்திய எழுத்தாளர் ஒருவர் அவருடைய கற்பிக்கும் முறையை இவ்வாறு வர்ணிக்கிறார்: “‘வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கருத்துகளை ஏற்றுக்கொண்டவர்களுடன் சேர்ந்து பல இடங்களுக்கு’ அவர் நடந்தே சென்றார். தூரதேசம் பிரயாணம் செய்தபோதெல்லாம் அவர் மாட்டு வண்டியில் பயணித்தார். மாடு மெதுவாக சென்றதால் அவரது வண்டிக்குப் பின்னாலேயே அவருடைய மாணவர்களால் நடந்து வர முடிந்தது. அத்தகைய சந்தர்ப்பங்களின்போது, சாலையில் நிகழ்ந்த சம்பவங்களை வைத்தே அவர் பெரும்பாலும் சொற்பொழிவாற்றினார் என்று சொல்லப்படுகிறது.” பிற்காலத்தில் இயேசுவும் இதுபோன்ற போதிக்கும் முறையை தாமாகவே பயன்படுத்தியது ஆர்வத்திற்குரிய விஷயமாகும்.

28கிழக்கத்திய நாட்டவர் மத்தியில் ஓர் ஆசிரியராக கன்பூசியஸ் பெற்ற மதிப்புக்குக் காரணம் அவர் ஒரு நல்ல மாணவராக இருந்ததே என்பதில் சந்தேகமில்லை; முக்கியமாக வரலாறு, நன்னெறி ஆகிய பாடங்களில் அவர் சிறந்த மாணவராக விளங்கினார். “கன்பூசியஸ் அவருடைய காலத்தில் வாழ்ந்த மிகப் பெரிய ஞானி என்பதால் அல்ல, ஆனால் அவர் மிகச் சிறந்த கல்விமான் என்பதாலேயே மக்கள் அவரைத் தேடி வந்தனர்; அந்தக் காலத்தில் அவரால் மாத்திரமே தொன்மையான நூல்களையும் பூர்வீக ஞானத்தையும் கற்றுத்தர முடிந்ததால் மக்கள் அவரிடம் வந்தனர்” என்று லின் யூதாங் எழுதினார். கற்றுக்கொள்ளும் ஆர்வமே மற்ற தொகுதிகளைவிட கன்பூசிய மதம் வெற்றி பெற முக்கிய காரணமாக இருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டி, விஷயத்தை லின் இவ்வாறு தொகுத்துக் கூறினார்: “கன்பூசிய மத ஆசிரியர்களுக்கு போதிக்க திட்டவட்டமான விஷயம் இருந்தது, கன்பூசிய மாணவர்களுக்கும் கற்றுக்கொள்ள திட்டவட்டமான விஷயம் இருந்தது; அதுதான் பூர்வீக ஞானம். ஆனால் மற்ற தொகுதியினரோ அவர்களுடைய சொந்த கருத்துகளை மாத்திரமே கற்பிக்க வேண்டியிருந்தது.”

“விண்ணுலகமே என்னை அறியும்!”

29ஆசிரியராக கன்பூசியஸ் சிறந்து விளங்கியபோதிலும் கற்பிப்பதை தன்னுடைய வாழ்நாள் பணியாக அவர் கருதவில்லை. ஆளுனர்கள் அவரையோ அவருடைய மாணவர்களையோ தங்களுடைய அரசாங்கத்தில் வேலைக்கு அமர்த்தினால், நன்னெறி, ஒழுக்கநெறி பற்றிய அவருடைய கருத்துகளை பின்பற்றினால் துன்பமிக்க உலகம் மேம்படும் என்று அவர் எண்ணினார். இதற்காக அவரும் அவருடைய மிக நெருங்கிய சீடர்கள் சிலரும் சேர்ந்து அவருடைய சொந்த நாடான லூவைவிட்டுப் புறப்பட்டு அரசாங்கம், சமுதாய ஒழுங்கு ஆகியவற்றின் பேரில் அவருடைய கருத்துகளை ஏற்க மனதாயிருக்கும் ஞானமுள்ள ஆட்சியாளரைத் தேடி ஒவ்வொரு மாநிலமாக பயணம் செய்தனர். விளைவு என்ன? நடந்ததை ஷி ஜி இவ்வாறு சொல்கிறது: “கடைசியாக அவர் லூவை விட்டுப் புறப்பட்டார். சீயில் அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சுங், வேய் ஆகிய இடங்களிலிருந்து துரத்தப்பட்டார். சேன் என்ற இடத்திலும் டிசாய் என்ற இடத்திலும் வசித்ததற்கு இடைப்பட்ட காலத்தில் வறுமையில் வாடினார்.” 14 ஆண்டு கால பயணத்துக்குப் பின் ஏமாற்றத்தோடு அவர் லூவுக்குத் திரும்பினார். என்றாலும் அவர் மனமுடைந்து போகவில்லை.

30மீதமிருந்த வாழ்நாளில் இலக்கியம் படைப்பதற்கும் போதிப்பதற்கும் அவர் தன்னை அர்ப்பணித்தார். (பக்கம் 177-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.) தன்னுடைய கருத்துகள் எடுபடாமல் போனதைக் குறித்து அவர் வருந்தியபோதிலும் இவ்வாறு சொன்னார்: “விண்ணுலகுக்கு எதிராக நான் முறுமுறுக்க மாட்டேன். மனிதனையும் குறைசொல்ல மாட்டேன். நான் இங்கே பூமியில் என் கல்வியைத் தொடருகிறேன், விண்ணுலகோடும் எனக்குத் தொடர்பு உள்ளது. விண்ணுலகமே என்னை அறியும்!” கடைசியாக பொ.ச.மு. 479-⁠ம் ஆண்டில் 73-⁠ம் வயதில் அவர் காலமானார்.

கன்பூசிய மதத்தின் சாராம்சம்

31அறிஞராகவும் ஆசிரியராகவும் கன்பூசியஸ் தலைசிறந்து விளங்கியபோதிலும் அவர் எந்த வகையிலும் அறிஞர்களின் வட்டத்துக்குள் மட்டுமே செல்வாக்கு பெற்றவராக இருக்கவில்லை. நடத்தை அல்லது நன்னெறி பற்றி கற்பிப்பது மட்டுமே உண்மையில் கன்பூசியஸின் நோக்கமாக இருக்கவில்லை. அந்தச் சமயத்தில் ஆட்சி செய்து வந்த பிரபுக்கள் ஓயாமல் சண்டைபோட்டுக் கொண்டிருந்தபடியால் சமுதாயத்தில் சீர்குலைந்து போயிருந்த ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்ட வேண்டும் என்பதும்கூட அவருடைய நோக்கமாக இருந்தது. அந்த நோக்கம் நிறைவேறுவதற்கு, அரசன் முதல் ஆண்டி வரை அனைவருமே சமுதாயத்தில் தங்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து அதன்படி வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று கற்பித்தார்.

32கன்பூசிய மதத்தில் இந்தக் கோட்பாட்டுக்கு லி என்று பெயர். இந்தக் கோட்பாடு சரியான நடத்தை, மரியாதை, காரியங்களின் வரிசை ஆகியவற்றை உட்படுத்துகிறது. அதோடு விரிவான கருத்தில், சடங்கு, ஆசாரங்கள், பயபக்தி ஆகியவையும் இதில் உட்பட்டிருக்கின்றன. “உயர்வான அந்த லி என்பது என்ன?” என்ற கேள்விக்கு கன்பூசியஸ் பின்வரும் விளக்கத்தை அளித்தார்:

“ஜனங்கள் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்கும் எல்லாவற்றையும்விட லி மட்டுமே மிக உயர்ந்தது. அது இல்லாமல் பிரபஞ்சத்தின் ஆவிகளை சரியானபடி எவ்வாறு வணங்குவது என்பதை தெரிந்துகொள்ளவே முடியாது; இதே விதமாக, அரசன்-அமைச்சர்கள், ஆட்சி செய்வோர்-ஆட்சி செய்யப்படுவோர், முதியோர்-இளையோர் ஆகியோருக்கு உள்ள சரியான அந்தஸ்தை எவ்வாறு நிர்ணயிப்பதென அறிய முடியாது. அதுமட்டுமல்ல, ஆண் பெண்ணுக்கிடையே, பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே, சகோதரர்களுக்கிடையே தார்மீக உறவுகளை நிர்ணயிப்பது எவ்வாறு என்பதும், குடும்பத்தில் பல்வேறு உறவுகளை வேறுபடுத்திக் காண்பது எவ்வாறு என்பதும் நமக்குத் தெரியாதிருக்கும். இதன் காரணமாகத்தான் ஒரு நல்ல குடிமகன் லி-ஐ மிக உயர்வாக மதிக்கிறான்.”

33ஆகவே, உண்மையான ஒரு கண்ணியவான் (ஜுன்-⁠ட்ஸே, “உயர்ந்தோன்” என்பதாக சில சமயங்களில் மொழிபெயர்க்கப்படுகிறது) எல்லாரிடமும் நடந்துகொள்கிற விதம்தான் லி ஆகும். அனைவரும் அவ்வாறே செய்ய முயலும்போது “குடும்பத்தில், நாட்டில், உலகில் எல்லாமே நேர்த்தியாக இருக்கும்” என கன்பூசியஸ் சொன்னார். அப்போதுதான் அனைத்தும் தாவோவின், அதாவது விண்ணுலகின் வழியில் செய்யப்படும். ஆனால் லி எவ்வாறு வெளிக்காட்டப்படுகிறது? இது கன்பூசிய மதத்தின் மற்றொரு முக்கிய கோட்பாட்டுக்கு நம்மை வழிநடத்துகிறது. அதுதான் சென் (ரென் என்று உச்சரிக்கப்படுகிறது), அதாவது மனிதாபிமானம் அல்லது மனிதநேயம் ஆகும்.

34புறம்பான விதிமுறைகளை கடைப்பிடிப்பதை லி வலியுறுத்துகிறது, ஆனால் மனித இயல்பினை, அதாவது உள்ளான மனிதனைப் பற்றி சென் வலியுறுத்துகிறது. கன்பூசிய கருத்துப்படி, விசேஷமாக கன்பூசியஸின் முக்கிய சீடராகிய மென்சியஸ் விளக்குகிறபடி, மனித இயல்பு என்பது அடிப்படையில் நல்லதாகவே உள்ளது. ஆகவே அனைத்து சமுதாய சீர்கேடுகளுக்குரிய பரிகாரம் சுய-பண்படுத்துதலில் சார்ந்துள்ளது; இது கல்வியோடும் அறிவோடும் ஆரம்பிக்கிறது. மகா கல்வி (ஆங்கிலம்) புத்தகத்தின் முதல் அதிகாரம் இவ்வாறு சொல்கிறது:

“மெய்யறிவை முயன்று பெறும்போது ஒருவருடைய விருப்பம் நேர்மையானதாக மாறிவிடுகிறது, விருப்பம் நேர்மையாக இருக்கும்போது இருதயம் செம்மையாகிறது . . . இருதயம் செம்மையாகும்போது தனிப்பட்ட வாழ்க்கை பண்பட்டதாகிறது, தனிப்பட்ட வாழ்க்கை பண்பட்டதாகும்போது குடும்ப வாழ்க்கை ஒழுங்காகிறது. குடும்ப வாழ்க்கை ஒழுங்காகும்போது தேசிய வாழ்க்கை சீராகிறது; தேசிய வாழ்க்கை சீராகும்போது இந்த உலகில் அமைதி நிலவுகிறது. அரசன் முதல் ஆண்டி வரை எல்லாருமே தங்கள் சொந்த வாழ்க்கையைப் பண்படுத்திக் கொள்வதை வேராக, அதாவது அஸ்திவாரமாக கருத வேண்டும்.”

35ஆகவே, கன்பூசியஸின் தத்துவத்தை பின்வருமாறு விளக்கலாம்: லி-ஐ ஜனங்கள் கடைப்பிடித்தால் எல்லா சமயத்திலும் ஒழுங்காக நடந்துகொள்ள முடியும், சென்-ஐ கடைப்பிடித்தால் அனைவரையும் கனிவோடு நடத்த முடியும். இதன் பலனாக கோட்பாட்டளவில் சமுதாயத்தில் அமைதியும் ஒத்திசைவும் நிலவும். லி மற்றும் சென் என்ற நியமங்களை அடிப்படையாகக் கொண்ட கன்பூசிய மதத்தின் சிறந்த கொள்கையை பின்வருமாறு தொகுத்துரைக்கலாம்:

“தந்தை தயவுள்ளவர், மகன் மரியாதையுள்ளவன்

மூத்த சகோதரன் மென்மையுள்ளவர், இளையவன் மனத்தாழ்மையும் மதிப்பும் காட்டுபவன்

கணவன் நல்நடத்தையுள்ளவர், மனைவி கீழ்ப்படிதல் காண்பிப்பவள்

மூத்தவர்கள் மனிதநேயம் காண்பிப்பவர்கள், பிள்ளைகள் மரியாதை உள்ளவர்கள்

ஆட்சி செய்வோர் உதார குணமுள்ளவர்கள், அமைச்சர்களும் குடிமக்களும் விசுவாசம் காண்பிப்பவர்கள்.”

குடும்ப பந்தங்கள், கடின உழைப்பு, கல்வி, சமுதாயத்தில் அவரவருக்குரிய இடத்தை அறிந்து செயல்படுதல் போன்றவற்றுக்கு பெரும்பாலான சீனர்களும் மற்ற கிழக்கத்திய நாட்டவரும்கூட ஏன் அதிக முக்கியத்துவம் தருகின்றனர் என்பதை புரிந்துகொள்ள இது உதவுகிறது. இந்த கன்பூசிய மதக் கருத்துகள் நூற்றாண்டு காலமாக சீனர்களுக்கு போதிக்கப்பட்டு வந்ததால், விளைவு எப்படிப்பட்டதாக இருப்பினும் அவர்களின் மனதில் அவை ஆழமாக பதிந்துவிட்டிருக்கின்றன.

கன்பூசிய மதம் அரசாங்க மதமானது

36கன்பூசிய மதம் தலைதூக்கியபோது, ‘நூறு தொகுதிகளின்’ காலம் முடிவுக்கு வந்தது. அரசனுக்கு விசுவாசம் காட்ட வேண்டுமென்று கன்பூசிய மதம் கற்பித்தது; தங்கள் ஆட்சியை நிலையாக்கிக்கொள்ள இதுவே தேவை என்று ஹான் சாம்ராஜ்யத்தின் அரசர்கள் நினைத்தார்கள். தாவோ மதத்தின் சம்பந்தமாக நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட ஊ டி என்ற அரசனின் ஆட்சியில் கன்பூசிய மதம் ஓர் அரசாங்க மதம் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தது. கன்பூசிய மத இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் மாத்திரமே அரசாங்க அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கன்பூசிய மத இலக்கியத்தின் அடிப்படையில் நாடு முழுவதிலும் நடத்தப்பட்ட தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு மட்டுமே அரசாங்க உத்தியோகம் கிடைத்தது. கன்பூசிய மத சடங்குகளும் ஆசாரங்களும் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்களின் மதமாக உருவாயின.

37இந்த மாற்றங்கள் சீனர்களின் சமுதாயத்தில் கன்பூசியஸின் அந்தஸ்தை மிகவும் உயர்த்தின. ஹான் பேரரசர்கள் கன்பூசியஸின் கல்லறையில் பலிகளைச் செலுத்தும் பழக்கத்தை துவக்கி வைத்தனர். கன்பூசியஸுக்கு பல பட்டப்பெயர்கள் சூட்டி கெளரவித்தனர். பின்னர் பொ.ச. 630-⁠ல் டாங் அரசரான டியா துங், பேரரசு முழுவதிலும் ஒவ்வொரு மாகாணத்திலும் மாவட்டத்திலும் கன்பூசியஸுக்கு கோவில்கள் எழுப்பி தவறாமல் பலிகளைச் செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டார். ஆக, கடவுள் ஸ்தானத்திற்கு கன்பூசியஸ் உயர்த்தப்பட்டார். கன்பூசிய மதம் தாவோ மதத்திலிருந்தும் புத்த மதத்திலிருந்தும் வித்தியாசப்படுத்த முடியாத ஒன்றாகிவிட்டது.​—⁠பக்கம் 175-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.

கிழக்கத்திய ஞானத்தின் சொத்து

38சீனாவில் 1911-⁠ல் அரச குல ஆட்சி முடிவுக்கு வந்த சமயத்திலிருந்து கன்பூசிய மதமும் தாவோ மதமும் கடுமையான விமர்சனத்தையும், ஏன் துன்புறுத்தலையும்கூட சந்தித்திருக்கின்றன. மாயமந்திர பழக்கங்களாலும் மூடநம்பிக்கைகளாலும் தாவோ மதத்தின் மதிப்பு குறைந்துவிட்டது. கன்பூசிய மதம், நிலப்பிரபுத்துவ முறையை (feudalism) ஆதரிப்பதாகவும், மக்களை​—⁠விசேஷமாக பெண்களை​—⁠அடக்கி வைக்கும் மனப்பான்மையை ஆதரிப்பதாகவும் முத்திரை குத்தப்பட்டது. இப்படி பகிரங்கமாக குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும் இந்த மதங்களுடைய அடிப்படை கருத்துகள் சீனர்கள் மனதில் அத்தனை ஆழமாக பதிந்துவிட்டிருப்பதால் இன்னமும் அநேக ஆட்களின் மீது அவை பலமான ஒரு பிடியைக் கொண்டிருக்கின்றன.

39“சீனர்களின் சமய சடங்குகள் பெய்ஜிங்கில் அபூர்வம், ஆனால் கரையோர பகுதிகளில் பிரபலம்” என்ற தலைப்பை 1987-⁠ல் கனடா நாட்டு செய்தித்தாள் குளோப் அண்டு மெய்ல் வெளியிட்டது. சுமார் 40 ஆண்டுகளாக நாத்திக கொள்கையினரே சீனாவில் ஆட்சி செய்திருக்கிற போதிலும் ஈமச்சடங்குகளும் ஆலயப் பணிகளும் அநேக மூடநம்பிக்கைகளும் நாட்டுப்புறங்களில் இன்னமும் சர்வசாதாரணமாக காணப்படுகிறதென அது அறிவித்தது. “பெரும்பாலான கிராமங்களில் ஃபெங்ஷூயி என்ற ஒரு நபர் இருக்கிறார்; மூதாதையரின் கல்லறையாக இருந்தாலும், புதிய வீடாக இருந்தாலும், வரவேற்பு அறை ஃபர்னிச்சராக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் பொருத்தமான ஒரு இடத்தைத் தீர்மானிக்க காற்று (feng) மற்றும் தண்ணீரின் (shui) ஆற்றலை கண்டுகொள்வதில் தேர்ச்சிபெற்ற வயதான கிராமவாசி அவர்” என்று அந்த அறிக்கை சொல்கிறது.

40உலகின் மற்ற இடங்களில், பாரம்பரியமான சீன கலாச்சாரம் எங்கெல்லாம் காணப்படுகிறதோ அங்கெல்லாம் தாவோ மதத்தையும் கன்பூசிய மதத்தையும் காண முடியும். தைவானில், சாங் தாவோ லிங்கின் வாரிசாக தன்னை சொல்லிக் கொள்ளும் ஒருவர் “விண்ணுலக எஜமான்” என்ற பதவியோடு தலைமை தாங்கி நடத்துகிறார், இவர் தாவோ மத குருக்களை (Tao Shih) நியமிக்க அதிகாரம் பெற்றவர். புகழ்பெற்ற மாட்சு தேவதை “மேலுலக புனித தாய்” என்று கருதப்படுகிறார். தங்கள் தீவுக்கும் மாலுமிகளுக்கும் மீனவருக்கும் இந்தத் தேவதையே புனித காவலரென கருதி மக்கள் அவளை வழிபடுகின்றனர்; அதோடு, ஆறுகள், மலைகள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் ஆவிகளுக்கும், சகல விதமான தொழில்களின் காவல் தெய்வங்களுக்கும், ஆரோக்கியம், அதிர்ஷ்டம், செல்வம் ஆகியவற்றின் தெய்வங்களுக்கும் பொதுமக்கள் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதில் மும்முரமாக ஈடுபடுகின்றனர். d

41கன்பூசிய மதத்தைப் பற்றி என்ன? மதம் என்ற அந்தஸ்திலிருந்து தேசிய நினைவுச்சின்னம் என்ற நிலைக்கு அது தள்ளப்பட்டுவிட்டது. சீனாவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுப்பதற்காக கன்பூசியஸ் பிறந்த இடமான சியு-ஃபோவில் உள்ள கன்பூசியஸின் ஆலயத்தையும் அவரின் குடும்பத்துக்குச் சொந்தமான நிலங்களையும் அரசாங்கம் பராமரித்து வருகிறது. சைனா ரீகன்ஸ்ட்ரக்ட்ஸ் என்ற பத்திரிகையின்படி, அங்கே “கன்பூசியஸுக்கு உரிய சடங்குமுறையான வணக்கத்தை செய்து காட்ட” நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சிங்கப்பூரிலும் தைவானிலும் ஹாங்காங்கிலும் கிழக்கு ஆசியாவிலுள்ள மற்ற இடங்களிலும் இன்றுகூட மக்கள் கன்பூசியஸின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

42கன்பூசிய மதமும் தாவோ மதமும் என்னதான் நியாயமானதாகவும் நல்லெண்ணமுடையதாகவும் இருந்தாலும் அவை மனித ஞானத்தையும் பகுத்தறிவையுமே அடிப்படையாக கொண்டிருக்கின்றன. எனவே மெய்க் கடவுளுக்கான தேடலின் முயற்சியில் இறுதியாக தோல்வியையே அடைந்திருக்கின்றன. ஏன்? ஏனென்றால் முக்கியமான ஒரு விஷயத்தை அவை கவனியாது விட்டுவிட்டிருக்கின்றன, அதாவது ஆளுருவுள்ள கடவுளின் சித்தத்தையும் அவர் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும் கவனியாது விட்டுவிட்டிருக்கின்றன. நன்மை செய்வதற்கு தூண்டும் சக்தியாக இருப்பது மனித சுபாவமே என கன்பூசிய மதம் சொல்கிறது. தாவோ மதமோ இயற்கையே எல்லாம் என்கிறது. ஆனால் இவை வீணான நம்பிக்கைகளே. ஏனெனில் இவை படைப்பாளரை விட்டுவிட்டு படைக்கப்பட்ட பொருட்களை வணங்குவதற்கு சமமாக இருக்கின்றன.​—சங்கீதம் 62:9; 146:3, 4; எரேமியா 17:⁠5.

43மறுபட்சத்தில், மூதாதையரையும் விக்கிரகங்களையும் வழிபடுவது, விண்ணுலகின் மீது வைக்கும் பக்தி, இயற்கையிலுள்ள ஆவிகளை வழிபடும் பழக்கம், அவற்றோடு சம்பந்தப்பட்ட சடங்குகள், ஆசாரங்கள் ஆகியவை சீனர்கள் மனதில் மிக ஆழமாக பதிந்துவிட்டதால் இவற்றை மறுக்க முடியாத உண்மைகளாகவே ஏற்றுக்கொள்கின்றனர். ஒரு சீனரிடம் தனிப்பட்ட ஒரு கடவுளை அல்லது படைப்பாளரைப் பற்றி பேசுவது மிகவும் கடினமான விஷயம், ஏனென்றால் அந்தக் கருத்து அவருக்கு மிக விநோதமான ஒன்றாகும்.​—ரோமர் 1:20-25.

44அதிசயங்களாலும் ஞானத்தினாலும் இயற்கை நிறைந்திருக்கிறது என்பதையும், மனிதர்களான நமக்கு பகுத்தறிவும் மனசாட்சியும் அற்புத திறன்களாக அருளப்பட்டிருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் புத்த மதம் பற்றிய அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இயற்கை உலகில் காணப்படுகிற அதிசயங்கள் வடிவமைப்பாளர் அல்லது படைப்பாளர் ஒருவர் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கே பகுத்தறிவுள்ளவர்களை வழிநடத்தியுள்ளது. (பக்கங்கள் 151-2-ஐக் காண்க.) அப்படியானால், படைப்பாளரைத் தேட நாம் முயற்சி எடுப்பது நியாயமாக இருக்கும் அல்லவா? உண்மையில் அப்படிச் செய்யும்படி படைப்பாளரே நம்மை இவ்வாறு அழைக்கிறார்: “உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப் பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே.” (ஏசாயா 40:26) படைப்பாளரின், அதாவது யெகோவா தேவனின் அழைப்பின்படி அவரைத் தேடினால் அவர் யார் என்பதை மட்டுமல்ல, எதிர்காலத்தில் அவர் நமக்காக என்ன செய்யப் போகிறார் என்பதையும் நாம் அறிந்துகொள்வோம்.

45கிழக்கத்திய நாடுகளில் மக்களின் ஆன்மீக வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்திருக்கும் புத்த மதம், கன்பூசிய மதம், தாவோ மதம் ஆகியவற்றோடுகூட ஜப்பானிய மக்களுக்கே உரிய மற்றொரு மதம் இருக்கிறது, அதுவே ஷின்டோ மதம். அது எவ்வாறு மற்ற மதங்களிலிருந்து வித்தியாசப்படுகிறது? அதன் ஆரம்பம் என்ன? அது மெய்க் கடவுளிடம் மக்களை வழிநடத்தியுள்ளதா? இதை அடுத்த கட்டுரையில் நாம் சிந்திப்போம்.

[அடிக்குறிப்புகள்]

a லின் யூதாங்கின் மொழிபெயர்ப்பில் இந்தப் பகுதி இவ்வாறு இருக்கிறது: “தாவோவுடன் இசைந்திருக்கும் ஒருவர் நித்தியமானவர். அவருடைய வாழ்க்கை முழுவதும் ஆபத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது.”

b முகத்தலளவையில் இதன் அளவு ஏறக்குறைய 9 லிட்டர் ஆகும்.

c “கன்பூசியஸ்” என்ற வார்த்தை குவாங்-ஃபூ-⁠ட்ஸே என்ற சீன வார்த்தையின் லத்தீன் எழுத்துப்பெயர்ப்பாகும். இதன் அர்த்தம் “எஜமானராகிய குவாங்” என்பதாகும். 16-⁠ம் நூற்றாண்டில் சீனாவுக்கு வந்த ஜெஸ்யூட் பாதிரிகள் ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் அதிகாரப்பூர்வ “புனிதர்” வரிசையில் கன்பூசியஸ் சேர்க்கப்பட வேண்டும் என்று ரோமிலிருந்த போப்பிடம் பரிந்துரை செய்தபோது இந்த லத்தீன் பெயரை உருவாக்கினர்.

d தைவானில் டியன் தாவோ (விண்ணுலகின் வழி) என்றழைக்கப்படும் ஒரு தாவோ மதத் தொகுதி, உலகிலுள்ள ஐந்து மதங்களின்​—⁠தாவோ மதம், கன்பூசிய மதம், புத்த மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம் ஆகியவற்றின்​—⁠கலவை என சொல்லிக்கொள்கிறது.

[கேள்விகள்]

1. (முன்னுரையை சேர்த்துக்கொள்ளவும்.) (அ) தாவோ மதமும் கன்பூசிய மதமும் எங்கே உள்ளன, இம்மதங்கள் எந்தளவு பரவியுள்ளன? (ஆ) இவற்றின் போதனைகளை ஆராய எந்தக் காலத்துக்கு நம் கவனத்தைத் திருப்புகிறோம்?

2. (அ) “தொகுதிகள் நூறு” தோன்ற எது வழிநடத்தியது? (ஆ) ‘தொகுதிகள் நூறில்’ மிஞ்சியிருப்பவை யாவை?

3. (அ) தாவோ பற்றிய சீனர்களின் கருத்து என்ன? (ஆ) அனைத்துக்கும் காரணம் படைப்பாளர் என்று நம்புவதற்கு பதிலாக சீனர்கள் எதை நம்பினர்? (எபிரெயர் 3:4-ஐ ஒப்பிடுக.)

4. சீனர்கள் தாவோ பற்றிய கருத்தை மனித விவகாரங்களுக்கு எவ்வாறு பொருத்தினர்? (நீதிமொழிகள் 3:5, 6-ஐ ஒப்பிடுக.)

5. (அ) தாவோவைக் குறித்ததில் தாவோ மதத்தின் நோக்குநிலை என்ன? (ஆ) தாவோவைக் குறித்ததில் கன்பூசிய மதத்தின் நோக்குநிலை என்ன? (இ) என்ன கேள்விகள் பதிலளிக்கப்பட வேண்டும்?

6. (அ) தாவோ மத ஸ்தாபகரைப் பற்றி என்ன அறியப்பட்டிருக்கிறது? (ஆ) தாவோ மத ஸ்தாபகருக்கு லாவொட்ஸே என்று பெயர் வரக் காரணம் என்ன?

7. “வரலாற்றுப் பதிவுகள்” என்ற புத்தகத்திலிருந்து லாவொட்ஸே பற்றி நாம் என்ன அறிந்துகொள்கிறோம்?

8. (அ) லாவொட்ஸே என்ன நூலை எழுதியதாக சொல்லப்படுகிறது? (ஆ) இந்த நூலுக்கு பல்வேறு விளக்கங்கள் தரப்படுவதற்கு காரணம் என்ன?

9. தாவோ தேஹ் ஜிங்-⁠ல் தாவோவைப் பற்றி லாவொட்ஸே எவ்வாறு விவரித்தார்?

10. (அ) தாவோ மதத்தின் குறிக்கோள் என்ன? (ஆ) தாவோ மதத்தவரின் இந்தக் கருத்து மனித நடத்தைக்கு எவ்வாறு பொருத்தப்படுகிறது?

11. தாவோ மதத்தவரின் லட்சியத்தை எவ்வாறு விளக்கலாம்?

12. (அ) சுவாங் சௌ என்பவர் யார்? (ஆ) லாவொட்ஸேயின் மூலபோதனைகளோடு அவர் எதைக் கூட்டினார்?

13. (அ) சுவாங்-⁠ட்ஸேயின் விளக்கத்தின்படி, வாழ்க்கையைப் பற்றிய தாவோ மதத்தவரின் கருத்து என்ன? (ஆ) சுவாங்-⁠ட்ஸே கண்ட என்ன கனவு இன்னும் நினைவுகூரப்படுகிறது?

14. தாவோவின் செல்வாக்கு எந்தத் துறைகளிலெல்லாம் காணப்படுகிறது?

15. (அ) இயற்கையின் மீது ஏற்பட்ட கவர்ச்சி தாவோ மதத்தவரை எந்த கருத்துக்கு வழிநடத்தியது? (ஆ) தாவோ தேஹ் ஜிங்-⁠ல் காணப்படும் என்ன வாக்கியங்கள் இந்தக் கருத்துக்கு காரணமாயிருந்தன?

16. சுவாங்-⁠ட்ஸேவின் எழுத்துக்கள் எவ்வாறு தாவோ மதத்தின் மாயமந்திர நம்பிக்கைகளுக்குப் பங்களித்தன?

17. ஆரம்ப கால ஊகங்களின் அடிப்படையில் தாவோ மதத்தவர் கடைப்பிடித்த பழக்கங்கள் யாவை, இதன் விளைவு என்ன? (ரோமர் 6:23; 8:6, 13-ஐ ஒப்பிடுக.)

18. (அ) ‘சாவாமை மாத்திரைகள்’ சம்பந்தமாக தாவோ மதத்தவரின் கருத்து என்ன? (ஆ) தாவோ மதம் வேறு என்ன மாயமந்திர பழக்கங்களை உருவாக்கியது?

19. தாவோ மதம் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டது?

20. புத்த மதத்தின் செல்வாக்கை தடுப்பதற்கு தாவோ மதம் எவ்வாறு முயன்றது?

21. கடைசியாக தாவோ மதம் என்னவாக உருமாறியது, எவ்வாறு?

22. சீனாவில் எந்தத் தொகுதி முதன்மையான இடத்தைப் பிடித்தது, என்ன கேள்விகளை நாம் சிந்திப்பது அவசியமாகும்?

23. கன்பூசியஸின் வாழ்க்கையைப் பற்றி “வரலாற்றுப் பதிவுகள்” என்ன விவரங்களைத் தருகின்றன?

24. கன்பூசியஸின் இளமைக் கால வாழ்க்கை எப்படி இருந்தது?

25. கன்பூசியஸின் தாயினுடைய மரணம் அவரை எவ்வாறு பாதித்தது? (ஒப்பிடுக: பிரசங்கி 9:5, 6; யோவான் 11:33, 35.)

26. தாயின் மறைவுக்குப்பின் கன்பூசியஸ் என்ன வேலை செய்தார்?

27. ஓர் ஆசிரியராக கன்பூசியஸைப் பற்றி என்ன விஷயங்களை நாம் அறிகிறோம்? (ஒப்பிடுக: மத்தேயு 6:26, 28; 9:16, 17; லூக்கா 12:54-57; யோவான் 4:35-38.)

28. லின் யூதாங் என்ற சீன எழுத்தாளரின் பிரகாரம் என்ன காரணத்தால் கன்பூசியஸ் மதிப்புக்குரிய ஆசிரியராக கருதப்பட்டார்?

29. (அ) வாழ்க்கையில் கன்பூசியஸின் உண்மையான இலட்சியம் என்னவாக இருந்தது? (ஆ) தன் இலட்சியத்தை அடைய அவர் எவ்வாறு முயன்றார், அதற்கு என்ன பலன் கிடைத்தது?

30. என்ன இலக்கிய படைப்புகள் கன்பூசிய மதத்திற்கு அடிப்படையாக உள்ளன?

31. சமுதாய ஒழுங்கை முயன்று அடைவதற்கு என்ன வழி இருப்பதாக கன்பூசியஸ் கற்பித்தார்?

32, 33. (அ) லி பற்றிய கன்பூசிய மதக் கருத்து என்ன? (ஆ) கன்பூசியஸின் பிரகாரம், லி-ஐ கடைப்பிடிப்பதால் வரும் நன்மை என்ன?

34. சென் பற்றிய கன்பூசிய மதக் கருத்து என்ன, சமுதாய சீர்கேடுகளை சமாளிக்க அது எவ்வாறு உதவுகிறது?

35. (அ) லி, சென் ஆகியவற்றிலுள்ள நியமங்களை எவ்வாறு தொகுத்துரைக்கலாம்? (ஆ) சீனர்களின் வாழ்க்கை முறையில் இவையெல்லாம் எவ்வாறு பிரதிபலிக்கப்படுகின்றன?

36. கன்பூசிய மதம் எவ்வாறு ஓர் அரசாங்க மதம் என்ற அந்தஸ்தைப் பெற்றது?

37. (அ) கன்பூசிய கொள்கை எவ்வாறு ஒரு மதமானது? (ஆ) உண்மையில் கன்பூசிய மதம் ஏன் வெறும் ஒரு தத்துவம் அல்ல?

38. (அ) தாவோ மதத்திற்கும் கன்பூசிய மதத்திற்கும் 1911 முதற்கொண்டு என்ன நடந்திருக்கிறது? (ஆ) ஆனால் இந்த மதங்களின் அடிப்படை கருத்துகள் பற்றியதில் எது இன்னும் உண்மையாக இருக்கிறது?

39. சீனாவின் மத சம்பந்தமான மூடநம்பிக்கைகளைப் பற்றி செய்தி அறிக்கை ஒன்று என்ன சொல்கிறது?

40. தைவானில் என்ன மதப் பழக்கங்கள் காணப்படுகின்றன?

41. இன்று கன்பூசிய மதம் எவ்வாறு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது?

42. மெய்க் கடவுளுக்கான தேடலில் வழிகாட்டிகளாக இருப்பதில் தாவோ மதமும் கன்பூசிய மதமும் எவ்வாறு குறைவுபடுகின்றன?

43. சீனர்களின் சமய பாரம்பரியங்கள் முழுவதும் எவ்வாறு மெய்க் கடவுளுக்கான தேடலில் அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்திருக்கின்றன?

44. (அ) இயற்கையில் காணப்படும் அதிசயங்களைக் கண்டு பகுத்தறிவுள்ளவர்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்? (ஆ) நாம் என்ன செய்யும்படி உற்சாகப்படுத்தப்படுகிறோம்?

45. அடுத்ததாக எந்த கிழக்கத்திய மதத்தைப் பற்றி நாம் சிந்திக்கப் போகிறோம்?

[பக்கம் 175-ன் பெட்டி]

கன்பூசியஸின் கொள்கை—⁠தத்துவமா அல்லது மதமா?

கடவுளைப் பற்றி கன்பூசியஸ் அதிகம் பேசாததால் அவரது கொள்கை ஒரு மதம் அல்ல, வெறும் தத்துவமே என்று பலர் கருதுகின்றனர். ஆனால் அவர் சொன்னவற்றையும் செய்தவற்றையும் பார்த்தால் அவர் மதப் பற்றுள்ளவர் என்பது புலனாகிறது. இதை இரண்டு விதங்களில் காணலாம். முதலாவதாக, அவருக்கு சர்வலோகத்தின் உன்னத ஆன்மீக சக்தியிடம் பயபக்தி இருந்தது. இதை சீனர்கள் டியன் அதாவது விண்ணுலகம் என்கின்றனர். இதுதான் எல்லா நல்லொழுக்கத்துக்கும் தார்மீக நற்குணத்துக்கும் ஊற்றுமூலம்; இதன்படிதான் எல்லா காரியங்களும் இயங்கி வருகின்றன என்று அவர் கருதினார். இரண்டாவதாக, மேலுலக வழிபாடு, இறந்த முன்னோரின் ஆவி வழிபாடு ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நுணுக்கமாக கடைப்பிடிப்பதை அவர் மிகவும் வலியுறுத்தினார்.

இக்கருத்துகளை ஒரு மதம் என்ற பெயரில் கன்பூசியஸ் பரப்பாவிடினும் தலைமுறை தலைமுறையாய் சீனர்களுக்கு இதுவே மதமாக இருந்து வந்திருக்கிறது.

[பக்கம் 177-ன் பெட்டி/படங்கள்]

கன்பூசியஸின் நான்கு புத்தகங்களும் ஐந்து இலக்கியங்களும்

நான்கு புத்தகங்கள்

1. மகா கல்வி (தா ஷூஹ்) கண்ணியவானின் கல்விக்கு அடிப்படை புத்தகம், பண்டைய சீனாவில் பள்ளிக் குழந்தைகள் படித்த முதல் புத்தகம்

2. நடுநிலை கோட்பாடு (சுங் யுங்) நடுநிலையோடிருந்து மனித இயல்பை முன்னேற்றுவிப்பதன் பேரில் ஆய்வுக் கட்டுரை

3. இலக்கிய தொகுப்பு (லூன் யூ) கன்பூசியஸின் உபதேசங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு, கன்பூசிய கருத்துகள் அடங்கிய முக்கிய நூலாக கருதப்படுவது

4. மென்சியஸின் புத்தகம் (மெங்-⁠ட்ஸே) கன்பூசியஸின் மிக முக்கிய சீடரான மெங்-⁠ட்ஸே, அல்லது மென்சியஸ் என்பவரின் பதிவுகளும் கருத்துகளும்

ஐந்து இலக்கியங்கள்

1. பாடல் நூல் (ஷி ஜிங்) ஆரம்ப செள காலத்தின் தினசரி வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டும் 305 பாடல்கள் (பொ.ச.மு. 1000-600)

2. வரலாற்று நூல் (ஷூ ஜிங்) ஷாங் பேரரசு காலத்திலிருந்து சீனர்களின் 17 நூற்றாண்டு கால வரலாறு (பொ.ச.மு. 1766-1122)

3. மாற்றங்களின் நூல் (ஈ ஜிங்) குறி சொல்வது சம்பந்தப்பட்ட நூல், ஆறு முழுமையான அல்லது பகுதியான நேர்க்கோடுகளின் சேர்க்கைகளால் உருவாகக்கூடிய 64 சேர்மானங்களின் விளக்கங்கள் அடிப்படையிலான புத்தகம்

4. சடங்குகளின் நூல் (லி ஜி) சடங்குகள், சம்பிரதாயங்கள் பேரில் விதிமுறைகள் அடங்கிய ஒரு நூல்

5. இளவேனிற்கால, இலையுதிர்கால நிகழ்ச்சிகளின் நூல் (சுன் சியூ) பொ.ச.மு. 721-478 வரை, கன்பூசியஸின் சொந்த ஊராகிய லூவின் வரலாறு

[படங்கள்]

மேலே, ஐந்து இலக்கியங்கள்; இடது பக்கத்தில், பக்கம் 181-⁠ல் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் மகா கல்வி புத்தகத்தின் (நான்கு புத்தகங்களில் ஒன்றின்) ஒரு பகுதி

[பக்கம் 163-ன் படம்]

தாவோ, ‘ஒரு நபர் செல்ல வேண்டிய வழி’

[பக்கம் 165-ன் படம்]

லாவொட்ஸே, எருமை மீது சவாரி செய்யும் தாவோ மத தத்துவஞானி

[பக்கம் 166-ன் படம்]

‘மேலுலக புனித தாயான’ மாட்சுவின் தாவோ மத கோவில், தைவான்

[பக்கம் 171-ன் படம்]

சீனர்கள் மிகவும் விரும்பித் தீட்டும் காட்சிகளான பனி மூடிய குன்றுகள், சலனமற்ற தண்ணீர், அசைந்தாடும் மரங்கள், ஒதுங்கி வாழும் அறிஞர்கள் ஆகியவை இயற்கையோடு இணக்கமாக வாழ வேண்டுமென்ற தாவோ மதத்தவரின் கொள்கையைப் பிரதிபலிக்கின்றன

[பக்கம் 173-ன் படங்கள்]

இடதுபுறத்தில் தாவோ மதத்தவரின் பண்டைய செதுக்கு வேலைப்பாட்டில் நீண்ட ஆயுளின் கடவுளையும் சாகா வரம் பெற்ற எட்டுப் பேரையும் காணலாம்.

வலதுபுறம் தாவோ மதகுரு தனது பிரத்தியேக உடையில் சவ அடக்க நிகழ்ச்சியை நடத்துகிறார்

[பக்கம் 179-ன் படம்]

சீனாவின் முதன்மையான ஞானியாகிய கன்பூசியஸ், ஒழுக்கத்தையும் நன்னெறியையும் கற்பித்த ஆசிரியராக மதிக்கப்படுகிறார்

[பக்கம் 181-ன் படம்]

கன்பூசிய சடங்குகளைப் பேணிக் காக்கும் இசையோடு கூடிய கொண்டாட்டங்கள்; இடம்: 14-வது நூற்றாண்டைச் சேர்ந்த கன்பூசியஸ் கல்வி மையமான சுங் குன் குவான், சியோல், கொரியா

[பக்கம் 182-ன் படங்கள்]

இடப் பக்கத்திலிருந்து: புத்த மதம், தாவோ மதம், கன்பூசிய மதம் என எம்மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சீனர்கள் தங்கள் வீட்டில் மூதாதையருக்கு அஞ்சலி செலுத்தி, செல்வங்களின் கடவுளை வழிபட்டு, பண்டிகை நாட்களின்போது கோவில்களில் பலி செலுத்துகிறார்கள்