Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

8. ஷின்டோஜப்பானியர் கடவுளைத் தேடி

8. ஷின்டோஜப்பானியர் கடவுளைத் தேடி

அதிகாரம் 8

ஷின்டோ—ஜப்பானியர் கடவுளைத் தேடி

“என் அப்பா ஷின்டோ மதகுரு. அதனால் ஒவ்வொரு நாளும் காலையில் சாப்பிடுவதற்கு முன் காமிதானாவுக்கு [வீட்டிலிருக்கும் ஷின்டோ பூஜை பீடத்துக்கு] முன் ஒரு டம்ளர் தண்ணீரும் ஒரு கப் சோறும் படைக்க வேண்டும் என்பது அவரது உத்தரவு. இப்படி படைத்த பின்புதான் அந்த சோற்றை எடுத்து சாப்பிடுவோம். இதைச் செய்யும்போது தெய்வங்கள் எங்களுக்குப் பாதுகாப்பாய் இருப்பார்கள் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.

“நாங்கள் புது வீடு வாங்கியபோது, பழைய வீட்டுடன் ஒப்பிட இது ராசியான இடத்தில்தான் அமைந்திருக்கிறதா என ஆவி மத்தியஸ்தர் ஒருவரிடம் கேட்டு உறுதிசெய்து கொண்டோம். மூன்று பேய் வாசல்கள் அதில் இருப்பதாக அவர் எங்களை எச்சரித்தார். என் அப்பா சொன்னபடியே தூய்மைப்படுத்தும் சடங்குகளைச் செய்ய வேண்டுமென்றும் கூறினார். அதனால் அந்த இடங்களை மாதமொரு முறை நாங்கள் உப்பிட்டு தூய்மைப்படுத்தினோம்.”​—மாயூமி டி.

ஷின்டோ என்பது முக்கியமாக ஜப்பானில் மட்டுமே காணப்படுகிற ஒரு மதமாகும். நிஹான் சுக்கியோ ஜிட்டென் (ஜப்பானிய மதங்களின் கலைக்களஞ்சியம்) சொல்கிறபடி, “ஷின்டோ மதம் ஏறக்குறைய ஜப்பானிய கலாச்சாரத்தைப் போன்றதே. ஜப்பானிய சமுதாயத்தைத் தவிர வேறெங்கும் பின்பற்றப்படாத ஒரு சமய கலாச்சாரம் இது.” ஆனால் ஜப்பானியரின் வியாபாரமும் கலாச்சாரமும் இன்று எங்கும் பரவியிருப்பதால் அவர்களுடைய வரலாற்றின் மீதும், குணாதிசயங்கள் மீதும் இந்த மதம் எவ்விதத்தில் செல்வாக்கு செலுத்தியிருக்கிறது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள நாம் ஆர்வமாயிருக்க வேண்டும்.

2ஜப்பானின் மக்கள் தொகையில் ஷின்டோ மதத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் முக்கால் பாகம், அதாவது 9,10,00,000-க்கும் அதிகமானோர் என்பதாக சொல்லப்பட்டாலும், 20,00,000 பேர், அதாவது பெரியவர்களில் 3 சதவீதத்தினர் மட்டுமே ஷின்டோவில் நம்பிக்கை வைத்திருப்பதாக ஒரு சுற்றாய்வு காண்பிக்கிறது. இருந்தாலும் ஷின்டோ மத ஆய்வாளர் சுகாட்டா மசாக்கி இவ்வாறு சொல்கிறார்: “ஷின்டோ மதம், ஜப்பானியரின் தினசரி வாழ்க்கையில் பிரிக்க முடியாதளவுக்கு பின்னிப் பிணைந்திருப்பதால் அப்படியொன்று தனியாக இருப்பதையே மக்கள் அறியாதிருக்கின்றனர். ஜப்பானியருக்கு அது ஒரு மதம் என்பதைவிட அவர்கள் சுவாசிக்கும் காற்றைப் போல வாழ்க்கையின் இன்றியமையாத ஓர் அம்சமாகவே இருக்கிறது.” மதத்தில் ஈடுபாடு இல்லை என்று சொல்லிக்கொள்பவர்கள்கூட பயணத்தின்போது ஷின்டோ பாதுகாப்பு தாயத்துக்களை வாங்கி அணிந்துகொள்கின்றனர், திருமணங்களை ஷின்டோ சம்பிரதாயப்படி செய்துகொள்கின்றனர், வருடந்தோறும் ஷின்டோ பண்டிகைகளுக்கு ஏராளமான பணத்தை செலவழிக்கின்றனர்.

எவ்வாறு ஆரம்பமானது?

3“ஷின்டோ” என்ற பெயர் பொ.ச. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது; ஜப்பானில் அப்போது பரவி வந்த புத்த மதத்திலிருந்து இந்தப் பாரம்பரிய மதத்தை வித்தியாசப்படுத்தவே இப்பெயர் கொடுக்கப்பட்டது. “உண்மையில், ‘ஜப்பானியரின் மதம்,’ . . . புத்த மதம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பிருந்தே இருந்து வந்தது, ஆனால் அது அடிமனதிலிருந்த மதமாக, பல சடங்குகளையும் ‘பழக்கவழக்கங்களையும்’ கொண்டதாக இருந்து வந்தது. என்றாலும் புத்த மதம் பரவ ஆரம்பித்தபோது முந்தைய பழக்கவழக்கங்கள்தான் ஜப்பானிய மதம் என்பதையும், அந்நிய மதமாகிய புத்த மதத்திலிருந்து இது வேறுபட்டது என்பதையும் மக்கள் உணர்ந்து கொண்டார்கள்” என ஜப்பானிய மதங்களை ஆய்வு செய்யும் சச்சியா ஹீரோ விளக்கம் தருகிறார். இந்த ஜப்பானிய மதம் எவ்வாறு தோன்றியது?

4ஆரம்ப கால ஷின்டோ, அதாவது “ஜப்பானியரின் மதம்” முதன்முதலில் எப்போது தோன்றியது என்பதை திட்டவட்டமாக குறிப்பிடுவது கடினம். நன்செய் நிலத்தில் நெல் பயிர் செய்யப்பட ஆரம்பித்த சமயத்திலிருந்து, “நன்செய் வேளாண்மைக்கு, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஸ்திரமான சமுதாயங்கள் தேவைப்பட்டன. பிற்காலத்தில் ஷின்டோவின் முக்கிய பாகமாக ஆன வேளாண்மை சடங்குகள் அப்போதுதான் உருவாக்கப்பட்டன” என்பதாக கோடன்ஷா என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ஜப்பான் விளக்குகிறது. பண்டைய காலத்தில் வாழ்ந்த அந்த மக்கள் எண்ணற்ற இயற்கை தெய்வங்களை உருவாக்கி வழிபட்டு வந்தனர்.

5அதோடு, உடலைவிட்டுப் பிரிந்துபோகும் ஆத்மாக்களுக்கு அவர்கள் பயப்பட்டதால் அவற்றை சாந்தப்படுத்துவதற்கு சடங்குகளையும் செய்தனர். இதுவே பின்னால் மூதாதையரின் ஆவி வழிபாடாக ஆனது. ஷின்டோ நம்பிக்கையின்படி, “பிரிந்துபோகிற” ஆத்மாவுக்கு மரித்த நபருடைய அதே குணாதிசயம் இருக்கிறது; அந்நபர் மரித்தவுடன் அவருடைய ஆத்மா மரண தீட்டுக்குள்ளாகிறது. துக்கம் அனுஷ்டிப்பவர்கள் ஞாபகார்த்த சடங்குகளைச் செய்யும்போது அந்த ஆத்மா தூய்மைப் பெற்று எல்லா பொல்லாப்பும் நீங்கி அமைதியாகவும் மற்றவர்களுக்கு நன்மை செய்கிறதாகவும் மாறிவிடுகிறது. காலப்போக்கில் அந்த ஆவி, மூதாதை அல்லது காவல் தெய்வம் என்ற நிலைக்கு உயர்ந்துவிடுகிறது. எனவே, ஆத்மா சாவதில்லை என்ற நம்பிக்கை இந்த ஷின்டோ மதத்திற்கும்கூட அடிப்படையாக இருப்பதை கவனிக்கிறோம்; அதோடு, இம்மதத்தாரின் மனோபாவத்தின் மீதும் செயல்களின் மீதும் செல்வாக்கு செலுத்தி வருவதையும் கவனிக்கிறோம்.​—சங்கீதம் 146:4; பிரசங்கி 9:5, 6, 10.

6இயற்கை தெய்வங்களும் மூதாதை தெய்வங்களும் ஆவிகளாக காற்றில் “மிதந்து” அதில் வியாபித்திருப்பதாகக் கருதப்பட்டது. விழாக் காலங்களில், தாங்கள் தூய்மைப்படுத்தி வைத்திருக்கும் சில இடங்களுக்கு இறங்கி வருமாறு தெய்வங்களை மக்கள் வேண்டினர். அவர்கள் வழிபட்ட மரங்கள், கற்கள், கண்ணாடிகள், வாள்கள் போன்றவற்றின் மீது இத்தெய்வங்கள் வந்து தற்காலிகமாய் தங்கியதாக அவர்கள் நம்பினர்; இப்பொருட்களை ஷின்டாய் என்றழைத்தனர். தெய்வங்களை இறங்கிவரும்படி கூப்பிடுவதற்கு ஆவி மத்தியஸ்தர்கள் சடங்குகளை நடத்தினர்.

7விழாக் காலங்களில் கடவுட்கள் தற்காலிகமாய் ‘வந்திறங்குவதற்காக’ தூய்மை செய்யப்பட்ட ‘இடங்களுக்கு’ மக்கள் காலப்போக்கில் நிரந்தர வடிவம் கொடுத்தனர். அருட்கொடைமிக்க தெய்வங்களுக்கு அவர்கள் கோயில்களைக் கட்டினர்; அத்தெய்வங்கள் தங்களுக்கு ஆசி நல்கியதாக நம்பினர். ஆரம்பத்தில் அவர்கள் கடவுட்களுக்கு உருவங்களை உண்டுபண்ணவில்லை, தெய்வங்களின் ஆவிகள் தங்கியிருப்பதாக சொல்லப்பட்ட பொருட்களையே, அதாவது ஷின்டாய்களையே வணங்கி வந்தனர். ஃபியூஜி போன்ற பெரிய மலைகூட வழிபடுவதற்குரிய ஷின்டாயாக இருந்தது. காலப்போக்கில் ஜப்பானியர் லட்சக்கணக்கில் தெய்வங்களை வழிபட ஆரம்பித்தபோது யாயோரோசு-நோ-காமி என்ற ஒரு சொற்றொடரை உருவாக்கினர். இதன் அர்த்தம் “எண்பது லட்சம் தெய்வங்கள்.” (“காமி” என்றால் “கடவுட்கள்” அல்லது “தெய்வங்கள்”) ஷின்டோ மத தெய்வங்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே இருப்பதால் இப்போது இந்தச் சொற்றொடர் “எண்ணற்ற தெய்வங்கள்” என அர்த்தப்படுகிறது.

8ஷின்டோ சடங்குகள் பெரும்பாலும் கோயில்களிலேயே நடத்தப்பட்டன; ஆகவே ஒவ்வொரு குலமும் தன் தன் சொந்த காவல் தெய்வத்திற்கு கோயில் கட்டியது. ஆனால் பொ.ச. ஏழாவது நூற்றாண்டில் ஜப்பானிய அரச குடும்பம் நாட்டை ஐக்கியப்படுத்தியபோது அவர்கள் தங்கள் சூரிய தேவதையான அமட்டரசு ஒமிகாமியை தேசிய கடவுளாகவும் ஷின்டோ கடவுட்களிலேயே தலையாய கடவுளாகவும் உயர்த்தினர். (பக்கம் 191-ல் உள்ள பெட்டியைக் காண்க.) காலப்போக்கில், அரசர் சூரிய தேவதையின் சந்ததியில் நேரடியாக வந்தவர் என்ற புராணக்கதை உருவானது. இதற்கு வலுவூட்ட கோசிகி, மற்றும் நிஹான் சோக்கி என்ற இரு பெரும் ஷின்டோ நூல்கள் பொ.ச. எட்டாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டன. அரச குடும்பத்தினர் தெய்வங்களின் வம்சாவளியில் வந்தவர்கள் என்ற புராணக்கதைகளை விவரிப்பதன் மூலம் இந்த நூல்கள் ஜப்பானிய பேரரசர்களின் உன்னத அதிகாரத்தை நிலைநாட்ட உதவின.

பண்டிகைகளும் சடங்குகளும் நிறைந்த மதம்

9ஆனால் ஷின்டோ புராணங்களின் இந்த இரண்டு நூல்களும் இறை நூல்களாக கருதப்படவில்லை. ஷின்டோ மதத்திற்கு ஸ்தாபகர் என்ற ஒருவரோ புனித புத்தகம் என்ற ஒன்றோ இல்லை; இது ஆர்வத்திற்குரிய விஷயம். “ஷின்டோ மதத்தில் அநேக விஷயங்கள் ‘இல்லை.’ திட்டவட்டமான கோட்பாடுகள் இல்லை, விளக்கமான இறையியல் இல்லை, கடைப்பிடிப்பதற்கு நெறிமுறைகள் இல்லை. . . . ஷின்டோ மத குடும்பத்தில் நான் வளர்ந்தபோதிலும் எவ்வித சமய கல்வியும் கற்றுக் கொடுக்கப்பட்டதாக எனக்கு நினைவே இல்லை” என ஷின்டோ மத கல்விமான் ஷோயிச்சி சேயிக்கி விளக்குகிறார். (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) ஷின்டோ மதத்தவருக்கு கொள்கைகளும் நன்னெறிகளும் முக்கியமல்ல, சில சமயங்களில் எதை வணங்குகிறார்கள் என்பதுகூட முக்கியமல்ல. “ஒரே கோயிலிலுள்ள தெய்வமும்கூட அடிக்கடி மாற்றப்பட்டது, அங்கு தெய்வத்தை வழிபட்டு பிரார்த்தனை செய்தவர்கள் அவ்வாறு அது மாற்றி வைக்கப்பட்டிருந்ததைக்கூட சிலசமயம் அறியாமலே இருந்தார்கள்” என்று ஒரு ஷின்டோ ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார்.

10அப்படியென்றால், ஷின்டோ மதத்தவருக்கு எதுதான் முக்கியம்? ஜப்பானிய கலாச்சாரத்தை விவரிக்கும் ஒரு புத்தகம் பின்வருமாறு விளக்குகிறது: “ஒரு சிறிய சமுதாயத்தில் நல்லிணக்கத்தையும் பொருளாதார செழுமையையும் ஊக்குவிக்கும் செயல்கள் ‘நல்லவை’ என்றும், அவற்றுக்குத் தடையாக இருப்பவை ‘கெட்டவை’ என்றும் ஷின்டோக்கள் ஆரம்பத்தில் கருதினர்.” தெய்வங்களோடும் இயற்கையோடும் சமுதாயத்தோடும் இணக்கமாக இருப்பதே மிக உயர்ந்த மதிப்புடையதென கருதப்பட்டது. சமுதாயத்தின் சமாதானத்திற்கும் இணக்கத்திற்கும் இடையூறாக இருந்த எதுவுமே​—அது தார்மீக ரீதியில் நல்லதோ கெட்டதோ—தீயதாகவே கருதப்பட்டது.

11ஷின்டோவுக்கு முறையான கோட்பாடு என்றோ உபதேசம் என்றோ ஒன்றும் இல்லாததால் சமுதாயத்தில் சமாதானத்தை ஊக்குவிக்க அது சடங்குகளையும் பண்டிகைகளையும் கடைப்பிடிக்கிறது. “ஷின்டோ மதத்தில் அதிமுக்கியமானது பண்டிகைகளைக் கொண்டாடுகிறோமா இல்லையா என்பதுதான்” என்று நிஹான் சுக்கியோ ஜிட்டென் என்ற கலைக்களஞ்சியம் விளக்குகிறது. (பக்கம் 193-ல் உள்ள பெட்டியைக் காண்க.) பண்டிகைகளின்போது மூதாதை தெய்வங்களுக்கு முன்னால் ஒன்றாக சேர்ந்து விருந்துண்டது நெல் சாகுபடி செய்த அந்தச் சமுதாயத்தினர் மத்தியில் கூட்டுறவு மனப்பான்மையை வளர்க்க உதவியது. முக்கிய பண்டிகைகள் அன்று நெல் சாகுபடியோடு சம்பந்தப்பட்டிருந்தன, இன்றும் அவ்வாறே இருக்கின்றன. இளவேனில் காலத்தில், “நெற்பயிர் தெய்வம்” தங்கள் கிராமத்துக்கு வந்திறங்கி நல்ல விளைச்சலைத் தரும்படி கிராமவாசிகள் வேண்டிக் கொள்கின்றனர். இலையுதிர் காலத்தில் அறுவடைக்காக தங்கள் கடவுட்களுக்கு நன்றி செலுத்துகின்றனர். பண்டிகை நாட்களில் தங்கள் தெய்வங்களை மிக்கோஷி என்ற ஒருவித பல்லக்கில் வைத்து ஊர்வலமாக செல்கின்றனர்; பின்னர் வழிபாட்டின் பாகமாக அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை மதுபானத்தையும் (சாகியையும்) உணவையும் தெய்வங்களோடு சேர்ந்து உண்பதாகக் கருதி சாப்பிடுகின்றனர்.

12ஆனால் கடவுட்களோடு ஐக்கியமாவதற்கு ஒழுக்க சம்பந்தமான அசுத்தத்திலிருந்தும், பாவத்திலிருந்தும் ஒருவர் சுத்திகரிக்கப்பட்டு தூய்மையடைய வேண்டும் என்று ஷின்டோ மதத்தினர் நம்புகின்றனர். இதற்குத்தான் சடங்குகள் உதவுகின்றன. ஒரு நபரை அல்லது ஒரு பொருளைத் தூய்மைப்படுத்த இரண்டு வழிகள் பின்பற்றப்படுகின்றன. ஒன்று ஓஹாரை, மற்றொன்று மிசோகி. ஓஹாரையில் ஷின்டோ மதகுரு பசுமை மாறா சாகாக்கி மரக்கிளையின் நுனியில் காகிதத்தை அல்லது லேசான சணல் துணியைக் கட்டி விசிறிவிடுவதன் மூலம் ஒரு பொருளை அல்லது நபரை புனிதப்படுத்துவார். மிசோகியில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. இந்தத் தூய்மைப்படுத்தும் சடங்குகள் ஷின்டோ மதத்தில் அந்தளவு முக்கியமானவையாக இருப்பதால் ஜப்பானிய நூல் ஒன்று இவ்வாறு சொல்கிறது: “இந்தச் சடங்குகள் இல்லையென்றால் ஷின்டோ [என்ற மதமே] இல்லை என்று உறுதியாக கூற முடியும்.”

தேவைக்கேற்ப ஷின்டோ மாறிக்கொண்டே இருக்கிறது

13பல ஆண்டுகளாக ஷின்டோ மதத்தில் அநேக மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறபோதிலும் அதன் பண்டிகைகளும் சடங்காச்சாரங்களும் மறைந்துவிடவில்லை. அப்படி என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? ஒரு ஷின்டோ மத ஆய்வாளர் ஷின்டோவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உடை மாற்ற முடிந்த ஒரு பொம்மைக்கு ஒப்பிடுகிறார். புத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஷின்டோ மதம் புத்த மத உபதேசங்களை உடுத்திக்கொண்டது. மக்களுக்குத் தார்மீக தராதரங்கள் தேவைப்பட்டபோது அது கன்பூசிய மதத்தை உடுத்திக்கொண்டது. இவ்விதத்தில் ஷின்டோ தேவைக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டே இருந்திருக்கிறது.

14சமய சமரசம், அதாவது ஒரு மதத்தின் அம்சங்களை மற்றொன்றுடன் கலப்பது, ஷின்டோ வரலாற்றின் ஆரம்ப காலகட்டத்திலேயே நிகழ்ந்தது. “இன் மற்றும் யாங் மார்க்கம்” என்பதாக ஜப்பானில் அறியப்பட்ட கன்பூசிய மதமும் தாவோ மதமும் ஷின்டோ மதத்திற்குள் ஊடுருவியிருந்த போதிலும் புத்த மதமே ஷின்டோவுடன் பெருமளவில் கலந்திருந்தது.

15சீனா வழியாகவும் கொரியா வழியாகவும் புத்த மதம் தங்கள் நாட்டில் நுழைந்தபோது ஜப்பானியர் தங்கள் பாரம்பரிய மதப் பழக்கங்களுக்கு ஷின்டோ, அதாவது “தெய்வங்களின் வழி” என்று பெயரிட்டனர். ஆனால் இந்தப் புதிய மதம் தோன்றிய பிறகு, புத்த மதத்தை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்ற கருத்து வேற்றுமையின் அடிப்படையில் ஜப்பானில் பிரிவினை ஏற்பட்டது. ‘அண்டை நாடுகள் அவ்விதமாக வணங்கும்போது, ஜப்பான் மட்டும் ஏன் வித்தியாசமாக இருக்க வேண்டும்?’ என புத்த மத ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ‘அண்டை நாட்டவரின் தெய்வங்களை நாம் வணங்கினால் நம்முடைய தெய்வங்களின் கோபத்துக்கு ஆளாவோம்’ என புத்த மதத்தை எதிர்த்தவர்கள் பதிலளித்தனர். பல ஆண்டு கால மோதலுக்குப் பிறகு புத்த மத ஆதரவாளர்கள் வெற்றி பெற்றனர். பொ.ச. ஆறாவது நூற்றாண்டின் முடிவிற்குள், ஷோட்டுக்கு என்ற இளவரசன் புத்த மதத்தைத் தழுவியபோது புதிய மதமான ஷின்டோ நன்கு வேரூன்றிய மதமாகியிருந்தது.

16கிராமப் புறங்களில் புத்த மதம் பரவ ஆரம்பித்தபோது, அங்கு ஏற்கெனவே ஷின்டோ தெய்வங்கள் இருந்தன, அவை மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் செல்வாக்கு செலுத்தி வந்தன. ஆகவே இரண்டு மதங்களும் நிலைத்திருப்பதற்கு அவை இரண்டுமே விட்டுக்கொடுத்து சமரசம் செய்துகொள்ள வேண்டியிருந்தது. சுயக்கட்டுப்பாட்டுடன் மலைகளில் வாழ்ந்து கொண்டிருந்த புத்த பிக்குகள் இவ்விரண்டு மதங்களும் இரண்டற கலப்பதற்கு உதவினர். ஷின்டோ தெய்வங்கள் மலைகளில் வாழ்வதாக கருதப்பட்டது, புத்த பிக்குகளோ மலைகளில் துறவறத்தை கடைப்பிடித்தனர்; ஆகவே இந்த இரண்டு விஷயங்களின் அடிப்படையில் ஷின்டோவுடன் புத்த மதத்தை கலந்துவிடும் எண்ணம் பிறந்தது; அதோடு, ஜின்குஜி (jinguji) என்ற “கோயில்-ஆலயங்கள்” கட்டப்படுவதற்கும் வழிநடத்தியது. a சமயக் கோட்பாடுகளை உருவாக்க புத்த மதம் முன்முயற்சி எடுக்கவே, படிப்படியாக இரண்டு மதங்களும் இரண்டற கலந்துவிட்டன.

17இதற்கிடையில் ஜப்பான் ஒரு தெய்வீக நாடு என்ற நம்பிக்கை வேர்பிடிக்க ஆரம்பித்தது. மங்கோலிய இனத்தவர் 13-வது நூற்றாண்டில் ஜப்பானைத் தாக்கியபோது காமிகாஸி என்பதில் நம்பிக்கை ஏற்பட்டது; அதன் நேரடி அர்த்தம் “தெய்வீகக் காற்று” என்பதாகும். மங்கோலியர்கள் ஏராளமான படையோடு வந்து கியூஷூ தீவை இரண்டு முறை தாக்கினார்கள், ஆனால் அந்த இரண்டு முறையும் சூறாவளி காற்று வீசி அவர்களைப் புறமுதுகு காட்டி ஓடும்படி செய்தது. ஜப்பானியர் இந்தச் சூறாவளிக்கு அல்லது காற்றுக்கு (காஸி) தங்கள் ஷின்டோ தெய்வங்களே (காமி) காரணம் என்றனர். இது அவர்களுடைய தெய்வங்களுக்குப் பெரும் புகழ் சேர்த்தது.

18ஷின்டோ தெய்வங்களில் நம்பிக்கை வளர்ந்தபோது, அவைதான் அசல் தெய்வங்கள் என்ற கருத்து பரவ ஆரம்பித்தது; அதே சமயத்தில், புத்தர்கள் (“ஞானோதயம் பெற்றவர்கள்”) மற்றும் போதிசத்துவர்கள் (ஞானோதயம் பெற மற்றவர்களுக்கு உதவும் எதிர்கால புத்தர்கள்; பக்கங்கள் 136-8, 145-6-ஐ காண்க) தெய்வங்களின் தற்காலிக அவதாரங்களே என்ற கருத்தும் பரவ ஆரம்பித்தது. இப்படி ஷின்டோவும் புத்த மதமும் மோதிக் கொண்டபோது பல்வேறு ஷின்டோ தொகுதிகள் தோன்ற ஆரம்பித்தன. சில தொகுதிகள் புத்த மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தன, சில தொகுதிகள் ஷின்டோ தெய்வங்களை உயர்த்தின, இன்னும் மற்றவை தங்கள் போதனைகளுக்கு மெருகூட்ட நவீன கன்பூசிய மத உபதேசங்களைப் பயன்படுத்தின.

பேரரசர் வணக்கமும் அரசு ஷின்டோவும்

19பல ஆண்டுகால மத சமரசத்துக்குப்பின், ஷின்டோ இறையியலர்கள் தங்களுடைய மதம் சீன மத சிந்தனையால் கறைபடுத்தப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு வந்தனர். ஆகவே பண்டையக் கால ஜப்பானியரின் வழிக்குத் திரும்ப வேண்டும் என அவர்கள் வற்புறுத்தினர். புதுப்பிக்கப்பட்ட ஷின்டோ என்ற பெயரில் ஒரு புதிய தொகுதி தோன்றியது. 18-வது நூற்றாண்டைச் சேர்ந்த அறிஞர் நோரினகா மோட்டோரி என்பவர் அதன் முதன்மையான இறையியலர். ஜப்பானிய கலாச்சாரத்தின் ஆரம்பத்தைக் கண்டுபிடிக்க அவர் இலக்கியங்களை, முக்கியமாக கோசிகி என்றழைக்கப்படும் ஷின்டோ பதிவுகளை ஆராய்ந்தார். சூரிய தேவதையான அமட்டரசு ஒமிகாமியே எல்லாவற்றுக்கும் மேலானவள் என்று அவர் கற்பித்தார், ஆனால் இயற்கை நிகழ்வுகளுக்கான காரணத்தை தெளிவாக விளக்காமல் அது கடவுட்களுக்கே தெரியும் என்று விட்டுவிட்டார். அதுமட்டுமல்ல, தெய்வ சித்தம் என்பது முன்னறிய முடியாதது, அதை மனிதன் புரிந்துகொள்ள முயலுவது அவமரியாதை காட்டுவதாக இருக்கும் எனவும், எந்தக் கேள்வியும் கேளாமல் தெய்வ சித்தத்துக்கு மனிதன் கீழ்ப்படிய வேண்டும் எனவும் அவர் போதித்தார்.​—ஏசாயா 1:18.

20நோரினகாவின் சீடர்களில் ஒருவரான அட்சுட்டனே ஹிராட்டா, அவருடைய கருத்தை விரிவாக்கி, ஷின்டோவை தூய்மைப்படுத்துவதற்காக “சீன” செல்வாக்குகள் அனைத்தையும் அதிலிருந்து களைந்துபோட முயன்றார். அதற்காக ஹிராட்டா என்ன செய்தார்? ஷின்டோவை விசுவாசதுரோக “கிறிஸ்தவ” இறையியலோடு இணைத்தார்! கோசிகி-யில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தெய்வமாகிய அமெனோமினாக்கானுஷூ-நோ-காமியை “கிறிஸ்தவத்தின்” கடவுளோடு ஒப்பிட்டு, அண்டத்தில் தலைமை தாங்கும் இந்தக் கடவுளுக்கு இரண்டு துணைக் கடவுட்கள் இருப்பதாக விளக்கினார். இவர்கள் “ஆணையும் பெண்ணையும் பிரதிநிதித்துவம் செய்வதாக தோன்றும் தாக்கமி-முசுபி மற்றும் காமி-முசுபி” என்பவர்கள் என தான் எழுதிய ஒரு புத்தகத்தில் (ஜப்பானில் மதங்கள்) குறிப்பிட்டார். ஆம், ரோமன் கத்தோலிக்கரின் திரித்துவ கடவுள் போதனையை அவர் ஏற்றார், என்றாலும் அதுவே ஷின்டோ மதத்தின் முக்கிய போதனையாக ஆகவில்லை. கிறிஸ்தவமண்டலத்தை ஷின்டோவோடு ஹிராட்டா கலந்தபோது ஷின்டோ மதத்தவர் மனதில் ‘ஒரே-கடவுள்’ பற்றிய கிறிஸ்தவமண்டலத்தின் கோட்பாடு பதிந்துவிட்டது.​—ஏசாயா 40:25, 26.

21‘பேரரசரை வணங்கு’ என்ற இயக்கத்துக்கு ஹிராட்டாவின் இறையியல் அடித்தளமாக அமைந்தது. இந்த இயக்கத்தால் இராணுவ சர்வாதிகாரிகளான ஷோகன்களின் செல்வாக்கு வீழ்ந்தது, 1868-ல் பேரரசர் ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்பட்டது. இந்த ஆட்சியில் ஹிராட்டாவின் சீடர்கள் ஷின்டோ வணக்கத்துக்குரிய அரசு ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் ஷின்டோவை அரசாங்க மதமாக்குவதற்கு ஓர் இயக்கமாக உழைத்தனர். அப்போதிருந்த புதிய அரசியலமைப்பு சட்டத்தின்படி, சூரிய தேவதையான அமட்டரசு ஒமிகாமியின் சந்ததியில் நேரடியாய் வந்ததாக எண்ணப்பட்ட பேரரசர், “புனிதராகவும் அவமதிக்கவே முடியாதவராகவும்” கருதப்பட்டார். இவ்வாறு அவர் அரசு ஷின்டோவின் உன்னத கடவுளாக ஆக்கப்பட்டார்.​—சங்கீதம் 146:3-5.

ஷின்டோவின் “புனித நூல்”

22ஷின்டோவின் பண்டைய பதிவுகள், சடங்குகள், பிரார்த்தனைகள் ஆகியவை கோசிகி, நிஹோங்கி, யங்கிசிகி ஆகிய நூல்களில் இடம் பெற்றிருந்தாலும், அரசு ஷின்டோவுக்கு இப்போது ஒரு புனித நூல் தேவைப்பட்டது. 1882-ல், படைவீரர்களுக்கும் மாலுமிகளுக்குமான அரசாணை ஒன்றை மேஜி என்ற பேரரசர் வழங்கினார். அது பேரரசரிடமிருந்து வந்ததால் ஜப்பானியர் அதை புனித நூலாக கருதினர். இராணுவத்திலிருந்தவர்கள் அதை வைத்தே தினசரி தியானம் செய்தனர். வேறு எவரையும்விட, கடவுளாக இருந்த பேரரசருக்கே​—அவருக்கு செலுத்த வேண்டிய கடன்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளுக்குமே​—ஒருவர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென அது வலியுறுத்தியது.

23அக்டோபர் 30, 1890-ல் கல்வி சம்பந்தமான அரசாணை ஒன்றை பேரரசர் வழங்கினார், அது ஷின்டோவின் மற்றொரு புனித நூலானது. “கல்வியின் அடிப்படை அம்சங்களை அது வலியுறுத்தியது மட்டுமல்லாமல், அதுவே உண்மையில் அரசு ஷின்டோவின் புனித நூலானது” என அரசு ஷின்டோ ஆய்வாளரான ஷிகயோஷி முராக்காமி விளக்குகிறார். புராணக்கதைகளில் பேரரசர்களுக்கும் அவர்களுடைய குடிமக்களுக்கும் இடையே இருந்த “சரித்திரப்பூர்வ” உறவே கல்வியின் அஸ்திவாரம் என்பதை அந்த அரசாணை தெளிவாக்கியது. இவ்விரண்டு அரசாணைகளை ஜப்பானியர் எவ்வாறு கருதினர்?

24“அப்போது நான் பள்ளிச் சிறுமி. எங்கள் [பள்ளி] துணை முதல்வர் மரப்பெட்டி ஒன்றை கண்ணுக்கு எதிராக தூக்கிப் பிடித்தவாறு, பயபக்தியோடு மேடைக்கு வருவார். பேரரசர் வழங்கிய கல்வி சம்பந்தமான அரசாணை அடங்கிய சுருள் அதில் இருக்கும். அந்தப் பெட்டியை எங்கள் முதல்வர் அவரிடமிருந்து பெற்றுக்கொள்வார். பிறகு அந்தச் சுருளை எடுத்து அவர் வாசிப்பார். அப்போது நாங்கள் தலை வணங்கி நிற்போம். ‘மாண்புமிகு அரசரின் பெயரும் முத்திரையும்’ என்ற முடிவான வார்த்தைகள் வாசிக்கப்படுவதை கேட்கும்வரை அப்படியே நின்றுகொண்டிருப்போம். அந்த வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு எங்களுக்கு மனப்பாடமே ஆகிவிட்டது” என ஆசானோ கோஷினோ என்பவள் சொல்கிறாள். 1945 வரையாக, புராணவியலின் அடிப்படையில் அமைந்த கல்வித் திட்டத்தின் மூலம் முழு தேசமும் பேரரசருக்கு தன்னையே அர்ப்பணிக்கும்படி பயிற்றுவிக்கப்பட்டது. அரசு ஷின்டோ முதன்மையான மதமாக கருதப்பட்டது, பல்வேறு கொள்கைகளைக் கற்பித்து வந்த மற்ற 13 ஷின்டோ மதங்கள் ஷின்டோ உட்பிரிவுகள் என்று அழைக்கப்பட்டன.

ஜப்பானிய மதத்தின் நோக்கம்​—உலக வெற்றி

25அரசு ஷின்டோ மதத்தில் வழிபாட்டுக்குரிய விக்கிரகமும் இருந்தது. “காலைதோறும் அமட்டரசு ஒமிகாமி என்ற தேவதையின் சின்னமான சூரியனை நோக்கி கைதட்டி, பிறகு கிழக்கே அரசரின் அரண்மனை இருக்கும் திசைநோக்கி பேரரசரை தொழுதுகொள்வேன்” என மசாட்டோ என்ற ஜப்பானிய முதியவர் கூறுகிறார். குடிமக்கள் பேரரசரை தெய்வமாக வணங்கினர். அவர் சூரிய தேவதையின் வாரிசு என நம்பப்பட்டதால் அரசியலிலும் மதத்திலும் உன்னதராக கருதப்பட்டார். ஜப்பானிய பேராசிரியர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நமது பேரரசர்தான் மனிதனாக வெளிப்பட்டுள்ள கடவுள். அவரே கடவுளின் திருவுருவம்.”

26இதன் விளைவாக பின்வரும் போதனை பரவ ஆரம்பித்தது: “பிரமாண்டமான இந்த உலகின் மையமாக இருப்பது மிக்காடோவின் [பேரரசரின்] தேசமே; இந்த மகா தேசத்தை இங்கிருந்து உலகம் முழுவதிலும் பரப்ப வேண்டும். . . . மகா ஜப்பானை உலகளவில் விரிவாக்கி முழு உலகையும் தெய்வங்களின் நாடாக உயர்த்த வேண்டும்; இதுவே இப்போது செய்யப்பட வேண்டிய அவசர வேலை. இதுவே நமது நித்திய நோக்கம், மாறாத நோக்கம்.” (டி. சி. ஹோல்டம் எழுதிய த பொலிட்டிக்கல் ஃபிலாசஃபி ஆஃப் மார்டன் ஷின்டோ) ஆம், மதமும் அரசியலும் பிரிக்க முடியாதபடி இணைந்திருந்தன!

27 மனிதனின் மதங்கள் என்ற நூலில் ஜான் பி. நாஸ் இவ்வாறு கூறுகிறார்: “இந்தக் கண்ணோட்டத்தை ஜப்பானிய இராணுவத்தினர் உடனடியாக தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்டனர். ஜப்பானியரின் புனித நோக்கம் பிற நாடுகளை வென்று கைப்பற்றுவதுதான் என்று அவர்கள் இராணுவ பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். அப்படிப்பட்ட பிரச்சாரங்களில், மதத்தின் எல்லா அம்சங்களையும் தேசப்பற்றோடு கலந்ததன் விளைவை நம்மால் தெளிவாக காண முடிகிறது.” ஷின்டோ கட்டுக்கதையை அடிப்படையாக வைத்து பேரரசரை தெய்வமாக ஏற்றிருந்ததன் காரணமாகவும், மதத்தை தேசப்பற்றோடு கலந்ததன் காரணமாகவும் ஜப்பானியருக்கும் மற்றவர்களுக்கும் எப்பேர்ப்பட்ட வேதனைகள் காத்திருந்தன!

28அரசு ஷின்டோ மதத்திலும், ஏகாதிபத்திய ஆட்சியிலும் பேரரசரை வழிபடுவதைத் தவிர ஜப்பானியருக்கு வேறு வழியே இருக்கவில்லை. ‘எந்தக் கேள்வியும் கேட்காமல் தெய்வ சித்தத்துக்கு உன்னை கீழ்ப்படுத்து’ என்ற நோரினகா மோட்டோரியின் போதனை ஜப்பானியரின் மனதெங்கும் வியாபித்து அவர்கள் சிந்தனையைக் கட்டுப்படுத்தியது. இதனால் 1941-க்குள், அரசு ஷின்டோ மதத்தின் தலைமையிலும், “உயிருள்ள மனித-தெய்வத்துக்கு” அர்ப்பணமாகவும் முழு தேசமும் இரண்டாம் உலகப் போருக்கு தயாரானது. ‘ஜப்பான் தெய்வீக நாடு, எனவே நெருக்கடிநிலை ஏற்படுகையில் நிச்சயம் காமிகாஸி என்ற தெய்வீகக் காற்று வீசும்’ என்று ஜப்பானியர் நம்பினர். போரில் வெற்றி பெறுவதற்காக போர் வீரர்களும் அவர்கள் குடும்பத்தினரும் தங்கள் காவல் தெய்வங்களை வேண்டிக்கொண்டனர்.

29“தெய்வீக” நாடு 1945-ல் தோல்வியைத் தழுவியது; அணுகுண்டுகள் ஹீரோஷிமாவையும் நாகசாகியின் பெரும் பகுதியையும் தரைமட்டமாக்கியபோது ஷின்டோவுக்கு பயங்கரமான நெருக்கடிநிலை ஏற்பட்டது. வெல்ல முடியாத தெய்வீக பேரரசராக கருதப்பட்ட ஹீரோஹிட்டோ ஒரே இரவில் தோல்வியைத் தழுவிய சாதாரண மனித அரசரானார். ஜப்பானியரின் மத நம்பிக்கை சுக்கு நூறாகிப் போனது. காமிகாஸி ஜப்பானை ஏமாற்றிவிட்டது. நிஹான் சுக்கியோ ஜிட்டென் கலைக்களஞ்சியம் இவ்வாறு கூறுகிறது: “ஏமாற்றப்பட்டோம் என்ற எண்ணமே ஜப்பானியர் மனக்கசப்பு அடைந்ததற்கான காரணங்களில் ஒன்றாகும். . . . [தோல்வியின்] விளைவாக ஏற்பட்ட சந்தேகங்களுக்கு ஷின்டோ மதத் தரப்பிலிருந்து மேம்பட்ட, பொருத்தமான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்பது அதைவிட வேதனைக்குரிய விஷயம். ஆக, முதிர்ச்சியோடு சிந்திக்காமல் ‘கடவுளும் இல்லை, புத்தரும் இல்லை’ என்று சொல்வது ஜனங்கள் மத்தியில் சகஜமானது.”

உண்மையான நல்லிணக்கத்துக்கு வழி

30ஒவ்வொருவரும் தங்கள் பாரம்பரிய மத நம்பிக்கைகளை ஆராய்ந்து பார்ப்பது அவசியம் என்பதை அரசு ஷின்டோ மதத்திற்கு ஏற்பட்ட முடிவு நமக்குக் காண்பிக்கிறது. ஷின்டோ மதத்தினர் தங்கள் ஜப்பானிய அயலகத்தார் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஒருவேளை போரை ஆதரித்திருக்கலாம். ஆனால், அது உலகம் முழுவதிலும் நல்லிணக்கம் நிலவ உதவவில்லை. கணவன்மார்களும் மகன்களும் போரில் பலியானதால் குடும்பங்களிலும் அது அமைதியை ஏற்படுத்தவில்லை. எனவே, தனிப்பட்ட விதமாக நம்மை எவருக்காவது அர்ப்பணிக்குமுன், யாருக்காக, என்ன காரணத்துக்காக நம்மை நாமே அர்ப்பணிக்கிறோம் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒருகாலத்தில் பேரரசரை வணங்கிய ரோமர்களிடம் கிறிஸ்தவ போதகர் ஒருவர் பின்வருமாறு சொன்னார்: “நீங்கள் [“பகுத்தறியும் ஆற்றலை பயன்படுத்தி,” NW] உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, . . . உங்களை வேண்டிக் கொள்கிறேன்.” யாருக்குத் தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ரோம கிறிஸ்தவர்கள் தங்கள் பகுத்தறியும் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டியிருந்தது; அதைப் போலவே, யாரை வணங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க நாமும் பகுத்தறியும் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும்.​—ரோமர் 12:1, 2.

31குறிப்பிட்ட ஒரு கடவுளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்பது பொதுவாக ஷின்டோ மதத்தவருக்கு முக்கியமல்ல. “பொதுமக்களைப் பொறுத்தவரை, கடவுட்களும் ஒன்றுதான் புத்தர்களும் ஒன்றுதான், அவை எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணுவதில்லை. ஆகையால், கடவுட்களாக இருந்தாலும் சரி புத்தர்களாக இருந்தாலும் சரி, நல்ல விளைச்சல், நோயில்லாத வாழ்க்கை, குடும்ப பாதுகாப்பு ஆகியவற்றிற்காக செய்யப்படும் வேண்டுதல்களுக்கு பலன் கிடைத்தால் அதுவே அவர்களுக்கு போதுமானது” என ஜப்பானிய சமய வரலாற்று ஆசிரியர் ஹிடனோரி சுஜி கூறுகிறார். ஆனால் அது அவர்களை உண்மையான கடவுளிடம் வழிநடத்தியதா? அவருடைய ஆசியைப் பெற உதவியதா? வரலாறு இதற்குத் தெளிவான பதிலை அளித்திருக்கிறது.

32கடவுளைத் தேடும் முயற்சியில் ஷின்டோ மதத்தவர், புராணவியலை ஆதாரமாகக் கொண்டு, ஒரு சாதாரண மனிதனாகிய தங்கள் பேரரசரை சூரிய தேவதையான அமட்டரசு ஒமிகாமியின் வாரிசு என்று சொல்லி அவரை கடவுளாக்கினர். ஆனால் ஷின்டோ மதம் தோன்றுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மெசபடோமியாவில் இருந்த செமிட்டிக் இனத்தைச் சேர்ந்த விசுவாசமுள்ள ஒருவருக்கு உண்மையான கடவுள் தம்மை வெளிப்படுத்தியிருந்தார். பெருஞ்சிறப்பு வாய்ந்த அந்த நிகழ்ச்சியையும் அதன் விளைவுகளையும் பற்றி எமது அடுத்த கட்டுரை ஆராய்கிறது.

[அடிக்குறிப்பு]

a ஜப்பானில் ஷின்டோ மதத்தவரின் வழிபாட்டு தலங்கள் கோயில்கள் (shrines) என்றும் புத்த மதத்தவருடையது ஆலயங்கள் (temples) என்றும் கருதப்படுகின்றன.

[கேள்விகள்]

1. (முன்னுரையை சேர்த்துக்கொள்ளவும்.) ஷின்டோ மத அங்கத்தினர்கள் முக்கியமாக எங்கே உள்ளனர், அதில் என்ன உட்பட்டிருப்பதாக அதைப் பின்பற்றுகிற சிலர் நினைக்கின்றனர்?

2. ஜப்பானியரின் வாழ்க்கையில் ஷின்டோ மதம் எந்தளவுக்கு செல்வாக்கு செலுத்துகிறது?

3, 4. ஜப்பானியரின் மதம் எவ்வாறு முதன்முதலாக ஷின்டோ என்ற பெயரைப் பெற்றது?

5. (அ) மரித்தோரைப் பற்றிய ஷின்டோ மதத்தவரின் கருத்து என்ன? (ஆ) மரித்தோரைப் பற்றிய ஷின்டோ மதக் கருத்து பைபிள் கருத்திலிருந்து எவ்வாறு வித்தியாசப்படுகிறது?

6, 7. (அ) ஷின்டோ மதத்தினர் தங்கள் கடவுட்களை எவ்வாறு கருதினர்? (ஆ) ஷின்டாய் என்பது என்ன, அது ஷின்டோ மதத்தில் ஏன் முக்கியமானதாய் உள்ளது? (ஒப்பிடுக: யாத்திராகமம் 20:4, 5; லேவியராகமம் 26:1; 1 கொரிந்தியர் 8:5, 6.)

8. (அ) ஷின்டோ புராணக்கதையின்படி, அமட்டரசு ஒமிகாமி எவ்வாறு உருவாக்கப்பட்டு ஒளி கொடுக்கும்படி வற்புறுத்தப்பட்டது? (ஆ) அமட்டரசு ஒமிகாமி தேசிய கடவுளாக்கப்பட்டது எப்படி, பேரரசர்கள் எவ்வாறு அந்தக் கடவுளோடு சம்பந்தப்படுத்தப்பட்டனர்?

9. (அ) ஷின்டோ மதத்தில் அநேக விஷயங்கள் ‘இல்லை’ என ஒரு கல்விமான் சொல்வதற்கு காரணம் என்ன? (ஆ) போதனைகளைப் பொறுத்தவரையில் ஷின்டோ எந்தளவு கண்டிப்பானது? (ஒப்பிடுக: யோவான் 4:22-24.)

10. ஷின்டோ மதத்தவருக்கு எது மிக முக்கியம்?

11. ஷின்டோ வணக்கத்திலும் தினசரி வாழ்க்கையிலும் பண்டிகைகள் என்ன பங்கை வகிக்கின்றன?

12. தூய்மைப்படுத்துவதற்கு என்ன வகையான சடங்குகள் ஷின்டோவில் பின்பற்றப்படுகின்றன, என்ன நோக்கத்துக்காக?

13, 14. ஷின்டோ எவ்வாறு மற்ற மதங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றி அமைத்திருக்கிறது?

15, 16. (அ) ஷின்டோ மதத்தவர் புத்த மதம் பரவ ஆரம்பித்தபோது எவ்வாறு பிரதிபலித்தனர்? (ஆ) ஷின்டோ மதமும் புத்த மதமும் எவ்வாறு இரண்டற கலந்தன?

17. (அ) காமிகாஸி என்பதன் அர்த்தம் என்ன? (ஆ) ஜப்பான் ஒரு தெய்வீக நாடு என்ற நம்பிக்கை எவ்வாறு காமிகாஸியுடன் சம்பந்தப்பட்டிருந்தது?

18. ஷின்டோ எவ்வாறு மற்ற மதங்களோடு போட்டிபோட்டது?

19. (அ) புதுப்பிக்கப்பட்ட ஷின்டோவின் நோக்கம் என்னவாக இருந்தது? (ஆ) நோரினகா மோட்டோரி என்பவரின் உபதேசங்களால் மக்கள் என்ன நினைக்க ஆரம்பித்தனர்? (இ) நம்மை என்ன செய்யும்படி கடவுள் அழைக்கிறார்?

20, 21. (அ) ஷின்டோ இறையியலர் ஒருவர் “சீன” செல்வாக்கினை எவ்வாறு ஷின்டோவிலிருந்து களைய முயன்றார்? (ஆ) ஹிராட்டாவின் தத்துவம் எந்த இயக்கம் உருவாக வழிநடத்தியது?

22, 23. (அ) பேரரசர் வழங்கிய இரண்டு அரசாணைகள் யாவை? (ஆ) இந்த அரசாணைகள் பரிசுத்தமானவையாக கருதப்பட்டதற்கு காரணம் என்ன?

24. (அ) அரசரின் ஆணைகளை மக்கள் எவ்வாறு கருதினர் என்பதற்கு ஓர் உதாரணம் கொடுக்கவும். (ஆ) அரசு ஷின்டோ மதம் எவ்வாறு பேரரசர் வணக்கத்துக்கு வழிநடத்தியது?

25. ஜப்பானிய பேரரசரை மக்கள் எவ்வாறு கருதினர்?

26. பேரரசர் வணக்கம் என்ன போதனைக்கு வழிநடத்தியது?

27. இராணுவத்தினர் எவ்வாறு ஜப்பானிய பேரரசர் வணக்கத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்?

28. ஜப்பானிய போரில் ஷின்டோவின் பங்கு என்ன?

29. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு அநேகர் நம்பிக்கை இழந்ததற்கு காரணம் என்ன?

30. (அ) இரண்டாம் உலகப் போரில் ஷின்டோவுக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (ஆ) வணக்கம் சம்பந்தமாக பகுத்தறியும் ஆற்றலை நாம் பயன்படுத்துவது ஏன் முக்கியம்?

31. (அ) பெரும்பாலான ஷின்டோ மதத்தவருக்கு எது போதுமானதாக இருந்திருக்கிறது? (ஆ) என்ன கேள்வி பதிலளிக்கப்படுவது அவசியம்?

32. அடுத்த அதிகாரம் எதைப் பற்றி ஆராய்கிறது?

[பக்கம் 191-ன் பெட்டி]

ஷின்டோ புராணக்கதையில் சூரிய தேவதை

முன்னொரு காலத்தில் இசனாகி என்ற தெய்வம் “தன் இடது கண்ணைக் கழுவியதால் மகா தேவதையான சூரிய தேவதை அமட்டரசு பிறந்தாள்” என்பதாக ஷின்டோ புராணக்கதை கூறுகிறது. அதன் பிறகு ஒரு நாள் சமுத்திர பரப்பின் கடவுளான சூசானூ அவளை அந்தளவு பயமுறுத்தியதால் அமட்டரசு “விண்ணில் ஒரு குகைக்குள் ஓடி ஒளிந்துகொண்டு அதன் நுழைவாயிலை ஒரு கற்பாறையால் மூடிக்கொண்டாள். உலகம் இருளில் மூழ்கியது.” ஆகவே, அமட்டரசுவை குகையிலிருந்து வெளியே கொண்டுவர தெய்வங்கள் ஒன்றுசேர்ந்து ஒரு திட்டம் தீட்டின. விடியலை அறிவிக்கும் சேவல்களை ஒன்று திரட்டின, பிறகு ஒரு பெரிய கண்ணாடியையும் தயார்படுத்தி வைத்தன. சாகாக்கி மரங்களில் ஆபரணங்களையும் நீண்ட துணிகளாலான கொடிகளையும் தொங்கவிட்டன. அப்போது அமா நோ உசுமி என்ற தேவதை ஒரு தொட்டியின் மீது நடனமாட ஆரம்பித்தாள்; அதன் மீது தன் கால்களால் தாளம் தட்டினாள். ஆட்ட வெறியில் அவள் தன் ஆடைகளைக் களைந்துவிட தெய்வங்கள் சிரிப்பை அடக்க முடியாமல் குபீரென்று சிரித்துவிட்டன. இந்தச் செயல்கள் அனைத்தும் அமட்டரசுவின் ஆர்வத்தைத் தூண்டிவிட அவள் வெளியே எட்டிப் பார்த்தாள், அப்போது கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்தாள். கண்ணாடியில் தன்னையே பார்த்தவுடன் மெதுவாக வெளியே வந்தாள். வந்த உடனேயே விசையின் தெய்வம் அவள் கையைப் பிடித்து எல்லாருக்கும் முன்பாக இழுத்துக் கொண்டு வந்தது. “மீண்டுமாக சூரிய தேவதையின் கதிர்களால் உலகம் ஒளி பெற்றது.”​—நியூ லாரோஸி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் மித்தாலஜி.​—ஒப்பிடுக: ஆதியாகமம் 1:3-5, 14-19; சங்கீதம் 74:16, 17; 104:19-23.

[பக்கம் 193-ன் பெட்டி]

ஷின்டோ​—பண்டிகைகளின் மதம்

ஜப்பானியர் வருடம் முழுவதும் மட்சுரி-களை, அதாவது பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். இதோ சில முக்கிய பண்டிகைகள்:

ஷோ-கட்சு, அதாவது புத்தாண்டு பண்டிகை, ஜனவரி 1-3.

செட்சுபன், “பிசாசுகளே வெளியே போ, அதிர்ஷ்டமே உள்ளே வா” என்று கூவிக்கொண்டே வீடுகளின் உள்ளேயும் வெளியேயும் அவரை விதைகளை வீசுவது; பிப்ரவரி 3.

ஹினா மட்சுரி, மார்ச் 3-ல் கொண்டாடப்படும் சிறுமிகளுக்கான பொம்மை பண்டிகை. பண்டைய அரச குடும்பத்தினரை சித்தரிக்கும் பொம்மைகளை வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டாடுவர்.

சிறுவர்கள் பண்டிகை, மே 5; கோய்-நொபோரி (பலத்தைக் குறிக்கும் கெண்டை மீன் கொடிகள்) கம்பங்களில் பறக்கவிடப்படுகின்றன.

ட்சுகிமி, மத்திப இலையுதிர்கால முழு நிலவின் அழகை ரசித்துக்கொண்டு அரிசியால் தயாரிக்கப்பட்ட சிறிய வட்டவடிவ பலகாரங்களையும் தானிய விளைச்சலின் முதற்பலனையும் காணிக்கையாக செலுத்தும் பண்டிகை.

கண்ணமி-சாய், அக்டோபரில் விளைச்சலின் முதல் நெல் சாகுபடியை அரசர் காணிக்கையாக செலுத்தும் பண்டிகை.

நிய்யிணமி-சாய், இப்பண்டிகையை நவம்பர் மாதத்தில் அரச குடும்பம் கொண்டாடுகிறது. ஷின்டோ அரசின் பிரதான குருவாக தலைமையேற்கும் பேரரசன் புதிதாக விளைந்த அரிசியை ருசிபார்க்கும் பண்டிகை.

ஷிச்சி-கோ-சான், இதன் அர்த்தம் “ஏழு-ஐந்து-மூன்று”; ஷின்டோ குடும்பங்கள் இப்பண்டிகையை நவம்பர் 15-ம் தேதி கொண்டாடுகின்றன. ஏழு, ஐந்து, மூன்று என்பவை முக்கியமான மாற்றங்களுக்குரிய ஆண்டுகளாக கருதப்படுகின்றன; வண்ண வண்ண கிமோனோ உடையை உடுத்திய பிள்ளைகள் குடும்ப கோயிலுக்குச் செல்கின்றனர்.

அநேக புத்த மதப் பண்டிகைகளும்கூட கொண்டாடப்படுகின்றன. புத்தரின் பிறந்த நாள் ஏப்ரல் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஓபான் பண்டிகை ஜூலை 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின் முடிவில், “முன்னோர்களின் ஆவிகள் மீண்டும் அடுத்த உலகிற்கு செல்ல வழிகாட்டுவதற்காக” கடலில் அல்லது நீரோடையில் விளக்குகள் மிதக்கவிடப்படுகின்றன.

[பக்கம் 188-ன் படம்]

தெய்வத்தின் அருள் வேண்டி நிற்கும் ஷின்டோ பக்தை

[பக்கம் 189-ன் படம்]

ஷின்டோ, ‘தெய்வங்களின் வழி’

[பக்கம் 190-ன் படம்]

ஃபியூஜி போன்ற பெரிய மலையும் சில சமயங்களில் ஒரு ஷின்டாயாக, அதாவது வணக்கப் பொருளாக கருதப்படுகிறது

[பக்கம் 195-ன் படங்கள்]

ஷின்டோ மதத்தினர் மிக்கோஷி என்ற ஒருவித பல்லக்கை சுமந்துகொண்டு போகின்றனர்; மேலே, கியோடோவில் ஆய் பண்டிகையின்போது ஹோலிஹாக் (ஆய்) இலைகளை அணிதல்

[பக்கம் 196-ன் படங்கள்]

பசுமை மாறா மரக்கிளையில் இணைக்கப்பட்ட காகிதத்தை அல்லது லேசான சணல் துணியை விசிறிவிடுவது மனிதனையும் பொருட்களையும் சுத்திகரித்து பாதுகாப்பதாக கருதப்படுகிறது

[பக்கம் 197-ன் படங்கள்]

ஷின்டோ பீடத்திற்கும் (இடது) புத்த பீடத்திற்கும் முன்னால் நின்று பிரார்த்தனை செய்வதில் எந்த முரண்பாடும் இல்லை என்பதாக ஜப்பானியர் நினைக்கின்றனர்

[பக்கம் 198-ன் படம்]

(மேடையில் நிற்கும்) பேரரசர் ஹீரோஹிட்டோ சூரிய தேவதையின் வாரிசாக வணங்கப்பட்டார்

[பக்கம் 203-ன் படம்]

ஓர் இளம் பெண் தான் வாங்கிவந்த எம்மா என்ற பிரார்த்தனை மரத்துண்டை கோயிலில் தொங்க விடுகிறாள்