Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 2—துன்பத்திலிருந்து விடுபட்ட ஒரு பூமி

பகுதி 2—துன்பத்திலிருந்து விடுபட்ட ஒரு பூமி

பகுதி 2துன்பத்திலிருந்து விடுபட்ட ஒரு பூமி

என்றபோதிலும், உலகம் முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கானோர் முற்றிலும் வித்தியாசமான ஒரு கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மனிதவர்க்கத்துக்கு மகத்தான ஓர் எதிர்காலத்தை முன்னறிகிறார்கள். இங்கே பூமியிலேயே வெகுசீக்கிரத்தில், பொல்லாப்பிலிருந்தும் துன்பத்திலிருந்தும் முழுமையாக விடுபட்ட ஓர் உலகம் இருக்கப்போகிறது என்பதாக அவர்கள் சொல்லுகிறார்கள். கெட்டவையாக இருப்பவை வெகுசீக்கிரத்தில் துடைத்தழிக்கப்பட்டு முற்றிலும் புதியதோர் உலகம் ஸ்தாபிக்கப்படும் என்ற உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இந்தப் புதிய உலகத்தின் அஸ்திவாரம் இப்பொழுதே போடப்பட்டுவருகிறது என்பதாகவும்கூட அவர்கள் சொல்லுகிறார்கள்!

2புதிய உலகம் போர், கொடுமை, குற்றச்செயல், அநீதி மற்றும் வறுமையிலிருந்து விடுபட்டதாக இருக்கும் என்று இந்த ஆட்கள் நம்புகிறார்கள். அது வியாதி, துக்கம், கண்ணீர், மரணம்கூட இல்லாத ஓர் உலகமாக இருக்கும். அந்தச் சமயத்தில் மக்கள் பரிபூரணத்துக்கு வளர்ந்து, ஒரு பூமிக்குரிய பரதீஸில் மகிழ்ச்சியில் என்றுமாக வாழ்வார்கள். ஏன், மரித்துவிட்டிருப்பவர்களும்கூட உயிர்த்தெழுப்பப்பட்டு என்றும் வாழும் வாய்ப்புடையவர்களாக இருப்பர்!

3எதிர்காலத்தைப் பற்றிய இந்தக் கருத்து வெறும் ஒரு கனவாக, வெறும் விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட எண்ணமாக இருக்கிறதா? இல்லவே இல்லை. வரவிருக்கும் இந்தப் பரதீஸ் தவிர்க்கமுடியாதது என்பது உறுதியான ஆதாரமுள்ள விசுவாசத்திலிருந்து வருகிறது. (எபிரெயர் 11:1) ஏன் அவர்கள் அத்தனை நிச்சயமாக இருக்கிறார்கள்? ஏனென்றால் பிரபஞ்சத்தின் சர்வவல்லமையுள்ள சிருஷ்டிகர் அதை வாக்களித்திருக்கிறார்.

4கடவுளுடைய வாக்குத்தத்தங்களைப்பற்றி, பைபிள் சொல்கிறது: “உங்கள் தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை . . . அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.” “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; . . . அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?” “நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார்.”—யோசுவா 23:14; எண்ணாகமம் 23:19; ஏசாயா 14:24.

5இருந்தபோதிலும், துன்பத்திலிருந்து விடுபட்ட ஒரு பூமிக்குரிய பரதீஸை ஸ்தாபிப்பது கடவுளுடைய நோக்கமாக இருந்தால், முதலிடத்தில் கெட்ட காரியங்கள் சம்பவிக்கும்படி அவர் ஏன் அனுமதித்தார்? தவறானதை திருத்துவதற்கு இப்பொழுது வரையாக ஏன் ஆறாயிரம் வருடங்களாக அவர் காத்திருந்தார்? அந்த எல்லாத் துன்பமான நூற்றாண்டுகளும், கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இல்லை அல்லது கடவுள் இல்லை என்பதையும்கூட சுட்டிக்காண்பிப்பதாக இருக்குமா?

[கேள்விகள்]

1, 2. என்ன வித்தியாசமான கருத்து அநேகருக்கு இருக்கிறது?

3, 4. இப்படிப்பட்ட ஆட்கள் தங்கள் கருத்தைக் குறித்து ஏன் அவ்வளவு நம்பிக்கையுள்ளவர்களாக உணருகிறார்கள்?

5. என்ன கேள்விகள் பதிலளிக்கப்படுவது அவசியமாயிருக்கிறது?