Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 3—கடவுள் ஒருவர் இருப்பதை நாம் எவ்விதமாகத் தெரிந்துகொள்ளமுடியும்

பகுதி 3—கடவுள் ஒருவர் இருப்பதை நாம் எவ்விதமாகத் தெரிந்துகொள்ளமுடியும்

பகுதி 3கடவுள் ஒருவர் இருப்பதை நாம் எவ்விதமாகத் தெரிந்துகொள்ளமுடியும்

கடவுள் ஒருவர் இருக்கிறாரா என்பதைத் தீர்மானிப்பதற்கு ஒரு வழி நன்கு நிலைநாட்டப்பட்ட இந்த நியமத்தைப் பொருத்துவதாகும்: உண்டாக்கப்பட்டிருப்பது உண்டாக்கினவர் ஒருவரைத் தேவைப்படுத்துகிறது. உண்டாக்கப்பட்ட பொருள் அதிக சிக்கலானதாக இருக்கும் பட்சத்தில், உண்டாக்கினவர் அதிக திறமைசாலியாக இருக்கவேண்டும்.

2உதாரணமாக, உங்கள் வீட்டைச் சுற்றிப்பாருங்கள். மேசைகள், நாற்காலிகள், சாய்வுமேசைகள், கட்டில்கள், மட்கலங்கள், வாணலிகள், தட்டுகள் இன்னும் உண்பதற்காக பயன்படும் பாத்திரங்கள் அனைத்துமே, சுவர்களையும், தரைகளையும், கூரைகளையும் போலவே உண்டாக்கினவர் ஒருவரை தேவைப்படுத்துகிறது. என்றபோதிலும், ஒப்பிடுகையில் அந்தப் பொருட்கள் செய்வதற்கு எளிமையானவைகள். எளிமையான பொருட்களுக்கே உண்டாக்கினவர் தேவையாயிருக்க, சிக்கலான பொருட்களுக்கு இன்னுமதிக புத்திக்கூர்மையுள்ள உண்டாக்கினவர் தேவைப்படுவது நியாயமாக இருக்கிறதல்லவா?

பிரமிக்கவைக்கும் நமது பிரபஞ்சம்

3ஒரு கைக்கடிகாரத்துக்கு கைக்கடிகாரம் செய்பவர் ஒருவர் தேவைப்படுகின்றார். நூற்றாண்டு நூற்றாண்டுகளாக, இத்தனை துல்லிபத்துடன் சூரியனையும் அதனைச் சுற்றிவரும் அதன் கோள்களையும், கொண்ட மிக அதிக சிக்கலான நம்முடைய சூரியகுடும்பத்தைப் பற்றியதென்ன? பால்வீதி மண்டலம் என்று அழைக்கப்படும், 10,000 கோடி நட்சத்திரங்கள் கொண்ட, நாம் வாழ்கின்ற, பிரமிக்கவைக்கும் பால்மண்டலத்தைப் பற்றியதென்ன? இரவில் பால்வீதிமண்டலத்தைக் காண எப்போதாவது நின்றிருக்கிறீர்களா? நீங்கள் மனம் கவரப்பட்டதுண்டா? அப்படியானால் நம்முடைய பால்வீதிமண்டலத்தைப் போன்று சொல்லப்படாத 100 கோடி பால்மண்டலங்களைக் கொண்டுள்ள நம்பமுடியாத அளவு பரந்த இந்தப் பிரபஞ்சத்தை எண்ணிப்பாருங்கள்! மேலும், இந்த வானொளிக் கோளங்கள் அவற்றின் இடப்பெயர்ச்சியில் அத்தனை நம்பகமானவையாக இருப்பதன் காரணமாக, நூற்றாண்டு நூற்றாண்டுகளாக அவை துல்லியமான கடிகாரங்களுக்கு ஒப்பிடப்பட்டிருக்கின்றன.

4ஒப்பிடுகையில் எளிமையான ஒரு கைக்கடிகாரம், கைக்கடிகாரம் செய்தவர் ஒருவர் இருப்பதை சுட்டிக்காண்பிக்கக்கூடுமானால், நிச்சயமாகவே மிக அதிக சிக்கலானதும் பிரமிக்க வைப்பதுமான பிரபஞ்சம் வடிவமைப்பாளரும் உண்டுபண்ணினவருமான ஒருவர் இருப்பதை சுட்டிக்காண்பிக்கிறது. அதன் காரணமாகத்தான் பைபிள் ‘கண்களை ஏறெடுத்துப் பார்க்’கும்படியாக நம்மை அழைத்து பின்னர், “அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்?” என்று கேட்கிறது. பதில்: “அவர் [கடவுள்] அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.” (ஏசாயா 40:26) இவ்விதமாக இந்தப் பிரபஞ்சம் இருப்பதற்கு காணக்கூடாத, கட்டுப்படுத்தும், புத்திக்கூர்மையுள்ள வல்லமை காரணமாயிருக்கிறது—கடவுள்.

தனித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டது

5விஞ்ஞானிகள் பூமியை அதிகமதிகமாக ஆராய்கையில், அதிகமதிகமாக இது மனிதகுடியிருப்புக்காகவே தனித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதை உணருகிறார்கள். அது சரியான அளவு வெளிச்சத்தையும், உஷ்ணத்தையும் பெறும்படி, சூரியனிலிருந்து சரியான அளவு தூரத்திலுள்ளது. அது சரியான அளவு கோணத்தில் சாய்ந்தபடி, பூமியின் பல பாகங்களிலும் பருவகாலங்களை உண்டாக்கியபடி, வருடத்துக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றிவருகின்றது. ஒவ்வொரு 24 மணிநேரத்திலும் பூமி தன்னுடைய அச்சுக்கோட்டின் மேல் தன்னைத்தானே சுற்றி, வெளிச்சம் மற்றும் இருளின் ஒழுங்கான காலப்பகுதிகளைக் கொடுக்கின்றது. நாம் சுவாசிக்கவும், வானவெளியிலிருந்து வரும் பாதிக்கின்ற கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கப்படவும் வேண்டிய அளவு சரியான வாயுக்களின் கலவையை பூமியின் வளிமண்டலம் கொண்டுள்ளது. அது அத்தியாவசியமான தண்ணீரையும், உணவை வளர்க்கத் தேவையான மண்ணையும்கூட கொண்டுள்ளது.

6இந்த எல்லா ஆக்கக்கூறுகளும் இன்னும் மற்றவைகளும் ஒன்றுசேர்ந்து இயங்காவிட்டால், உயிர் இருக்கவே முடியாது. இது எல்லாம் ஒரு விபத்தா? அறிவியல் செய்திகள் [Science News] கூறுகின்றது: “இத்தகைய குறிப்பிட்ட, துல்லியமான நிலைமைகள் தற்செயலாக வந்திருக்கமுடியாது என்று தோன்றுகிறது.” இல்லை, அவை வரமுடியாது. அவை தலைச்சிறந்த வடிவமைப்பாளரின் நோக்கமுள்ள வடிவமைப்பை உட்படுத்தின.

7நீங்கள் ஓர் அழகான வீட்டினுள் சென்று, அங்கு தாராளமாக உணவுப்பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருப்பதையும், சிறந்த உஷ்ணம் மற்றும் குளிர்சாதன அமைப்புகளும், நீர் வழங்க நல்ல குழாய் அமைப்பையும் அது கொண்டிருப்பதைக் கண்டால் என்ன முடிவுசெய்வீர்கள்? அது எல்லாம் தானாக வந்தது என்றா? இல்லை, புத்திக்கூர்மையுள்ள ஒரு நபர் மிகுந்த அக்கறையோடு அதை வடிவமைத்து உண்டாக்கியிருக்கிறார் என்ற முடிவுக்கே நிச்சயமாக வருவீர்கள். பூமியும்கூட அதில் வசிப்பவர்களுக்கு என்ன தேவையோ அதைத் தருகின்ற விதத்தில் வடிவமைக்கப்பட்டு, மிகுந்த அக்கறையோடு உண்டாக்கப்பட்டுள்ளது. அது எந்த வீட்டையும்விட சிக்கலானதாகவும் வசதிகள் நிரம்பியும் உள்ளது.

8மேலுமாக வாழ்க்கைக்கு இன்பத்தைக் கூட்டுகின்ற அநேக காரியங்களை சிந்தித்துப்பாருங்கள். மனிதர்கள் அனுபவிக்கும் இனிய மணத்துடன் கூடிய, பலவகையான அழகிய நிறங்கொண்ட மலர்களைப் பாருங்கள். பின்பு, நம்முடைய சுவைக்கு இனிய பலவகையான உணவுகள் உள்ளன. காடுகள், மலைகள், ஏரிகள், மற்றும் காண்பதற்கு இனிய மற்ற சிருஷ்டிப்புகள் உள்ளன. மேலும், வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கூட்டும் அழகான சூரிய அஸ்தமனங்களைப் பற்றி என்ன? விலங்கினங்களில், நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகள் மற்ற விலங்கின் குட்டிகளின் விளையாட்டு கூத்தைக் கண்டு நாம் மகிழ்ந்துபோவதில்லையா? எனவே உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அத்தியாவசியமாகத் தேவையில்லாத அநேக இன்பமான வியப்புக்களைப் பூமி தருகின்றது. இவை பூமி, மனிதர்களை மனதில்கொண்டு, நாம் வெறுமனே உயிருடன் இருப்பவர்களாக இல்லாமல் வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும் என்ற அன்பான அக்கறையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.

9ஆகவே பைபிள் எழுத்தாளரைப் போலவே இந்த எல்லா காரியங்களையும் கொடுத்தவரை ஏற்றுக்கொள்வதே நியாயமான முடிவாக இருக்கிறது. யெகோவா தேவனைப் பற்றி அவர் சொன்னார்: “நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.” என்ன நோக்கத்துக்காக? “பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின”வர், என்று கடவுளை விவரிப்பதன் மூலம் அவர் பதிலைக் கொடுக்கிறார்.—ஏசாயா 37:16; 45:18.

வியப்பூட்டும் உயிரணு

10உயிர்வாழ்பவைகளைப் பற்றியதென்ன? அவை ஓர் உண்டாக்கினவரைத் தேவைப்படுத்தவில்லையா? உதாரணமாக, உயிரணுவின் வியப்பூட்டும் சில அம்சங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அணுதிரண்ம உயிரியல் அறிஞர் மைக்கேல் டென்டன், பரிணாமம்: நெருக்கடியிலுள்ள ஒரு கோட்பாடு [Evolution: A Theory in Crisis] என்ற தன்னுடைய புத்தகத்தில் கூறுகின்றார்: “பூமியில் இன்று உயிர்வாழ்பவைகள் எல்லாவற்றிலும் எளிமையான நுண்ணுயிர் உயிரணுக்கள்கூட அளவுக்கு மீறி சிக்கலான பொருட்களாக இருக்கின்றன. மிகச்சிறிய நுண்ணுயிர் உயிரணுக்கள், நம்பமுடியாத அளவு சிறியதாக இருந்தாலும்கூட, . . . அவை ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான நுட்பமாக வடிவமைக்கப்பட்ட புரிந்துகொள்ளமுடியாத அணுதிரண்ம இயந்திரங்களைக் கொண்டுள்ள, உண்மையான, மிகமிகச் சிறிய தொழிற்சாலை ஆகும் . . . மனிதனால் கட்டப்பட்ட எந்த இயந்திரத்தையும்விட சிக்கலானது, மேலும் உயிரற்றவைகளின் உலகத்தில் இதற்கு இணை கிடையாது.”

11ஒவ்வொரு உயிரணுவிலுமுள்ள மரபுவழிக்கோட்பாடு பற்றி இவர் கூறுகிறார்: “டிஎன்ஏ-வின் செய்திகளைச் சேர்த்து வைக்கும் திறமை, அறியப்பட்ட எந்த அமைப்பையும்விட அதிகம் உயர்ந்ததாக இருக்கின்றது; மனிதனைப் போன்ற ஒரு சிக்கலான உயிரினத்தைக் குறிப்பிடத் தேவையான எல்லா செய்திகளும் சேர்ந்து ஒரு கிராமில் சில பத்துலட்சங்களின் பாகத்தைவிட குறைந்த எடையுடன் இருப்பது அதன் திறமையைக் காட்டுகின்றது. . . . உயிரின் அணுதிரண்ம இயங்திரங்கள் காட்டும் சிக்கல் மற்றும் புத்திக்கூர்மையின் அளவுடன் ஒப்பிடும்போது, நம்முடைய மிகவும் முன்னேற்றமான [பொருட்களும்] கூட அலங்கோலமாக காணப்படுகின்றன. நாம் தாழ்வாக உணரவைக்கப்படுகின்றோம்.”

12டென்டன் மேலுமாக சொல்கிறார்: “அறியப்பட்ட உயிரணுவகைகளில் எளிமையானதின் அமைப்பு மிக சிக்கலானதாக உள்ளது. எனவே அதைப்போன்ற ஒரு பொருள் தான்தோன்றித்தனமாக, நடந்திருக்க முடியாத ஒரு நிகழ்ச்சியினால் தூக்கி எறியப்பட்டு ஒன்றானது என்பதை நம்பமுடியவில்லை.” அது ஒரு வடிவமைப்பாளரை, உண்டாக்கினவரை கொண்டிருக்கவேண்டும்.

திகைக்கவைக்கும் நம்முடைய மூளை

13இந்த விஞ்ஞானி பின்பு கூறுகிறார்: “சிக்கல்தன்மையைப் பொறுத்தவரையில் பாலூட்டிகளின் மூளையுடன் ஒப்பிடும்போது, தனிப்பட்ட உயிரணுவானது ஒன்றுமேயில்லை. மனித மூளை, ஆயிரம் கோடி அளவான நரம்பு உயிரணுக்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நரம்பு உயிரணுவும் மூளையிலுள்ள மற்ற நரம்பு உயிரணுக்களுடன் தொடர்புகொள்ள பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரையான இணைக்கும் நாரிழைகளைக் கொண்டிருக்கின்றன. மொத்தத்தில் மனித மூளையிலுள்ள இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை . . . பத்துகோடிகோடியை நெருங்குகின்றது.”

14டென்டன் தொடர்கிறார்: “மூளையின் இணைப்புகளில் நூறிலொரு பங்கை திட்டவட்டமாக அமைத்தால் அதுவும்கூட, பூமியிலுள்ள எல்லா செய்தித்தொடர்பு இணைப்புகளிலும் உள்ள திட்டவட்டமான இணைப்புகளின் எண்ணிக்கையைவிட மிக அதிக எண்ணிக்கையைக் கொண்ட அமைப்பை பிரதிநிதித்துவம் செய்யும்.” பின்பு அவர் கேட்கிறார்: “முழுமையாகத் தற்செயலாக நிகழ்ந்த எந்த இயக்கமாவது அதைப்போன்ற அமைப்பை கூட்டியமைக்க முடியுமா?” வெளிப்படையாக, பதில் இல்லை என்பதாகும். மூளை ஓர் அக்கறையுள்ள வடிவமைப்பாளரையும் உண்டாக்கினவரையும் கொண்டிருக்க வேண்டும்.

15மனிதமூளை வெகுமுன்னேறிய கம்ப்யூட்டர்களையும்கூட நயமற்ற ஆரம்பக்காலத்தைச் சேர்ந்ததாக ஆக்குகின்றது. விஞ்ஞான எழுத்தாளர் மோட்டன் ஹன்ட் சொன்னார்: “தற்கால ஆராய்ச்சிக்கான கம்ப்யூட்டர்களைவிட நம்முடைய சுறுசுறுப்பான ஞாபகசக்தியானது பல கோடிக்கணக்கான தடவை செய்திகளைக் கொண்டுள்ளது.” எனவே, மூளை அறுவை சிகிச்சையாளர் டாக்டர் ராபர்ட் J. வைய்ட் முடிக்கின்றார்: “மனிதனால் புரிந்துகொள்வதற்கு முடியாத இந்தத் திகைக்க வைக்கும் மூளை-மனித உறவை வடிவமைத்து வளர்ப்பதற்குக் காரணமாக இருந்த உன்னதமான, புத்திக்கூர்மை இருக்கின்றது என்பதை ஒப்புக்கொள்வதைத் தவிர எனக்கு வேறுவழியில்லை. . . . இவை எல்லாம், ஓர் அறிவார்ந்த தொடக்கத்தைக் கொண்டுள்ளது, ஒருவர் அவற்றை நிகழச் செய்தார் என்பதை நான் நம்பியே ஆகவேண்டும்.” அந்த ஒருவர் அக்கறையுள்ளவராகவும் இருக்க வேண்டும்.

தனித்தன்மைவாய்ந்த இரத்த அமைப்பு

16உணவுச்சத்துக்களையும், பிராணவாயுவையும் கடத்தி, நோய்க்கிருமிகளுக்கு எதிராகப் பாதுகாப்புத் தரும் இரத்த அமைப்பைப் பாருங்கள். இந்த அமைப்பின் முக்கிய பாகமாகிய, சிவப்பு அணுக்கள் பற்றி ஏபிசி ஆப் தி ஹூயூமன் பாடி என்ற புத்தகம் சொல்கின்றது: “ஒரு துளி இரத்தம் 25 கோடி தனி இரத்த அணுக்களுக்கு மேலாகக் கொண்டுள்ளது . . . நம் உடல் ஒருவேளை 25 லட்சம்கோடி அணுக்களைக்கொண்டு இருக்கும். இவற்றைப் பரப்பினால் நான்கு டென்னிஸ் மைதானங்களை மூடப்போதுமானதாக இருக்கும். . . . ஒவ்வொரு விநாடிக்கும் 30 லட்சம் புதிய செல்கள் என்ற வேகத்தில் பதிலீடுகள் செய்யப்படுகின்றன.”

17தனித்தன்மைவாய்ந்த இரத்த அமைப்பின் மற்றொரு பாகமாகிய வெள்ளை அணுக்களைப் பற்றி இதே மூலம் நமக்குக் கூறுகின்றது: “சிவப்பணுவில் ஒரே ஒரு வகையிருக்க, வெள்ளை அணுக்கள் பல வகைகளில் வருகின்றது, ஒவ்வொரு வகையும் உடலின் போர்களில் வித்தியாசப்பட்ட வகையில் போரிடக்கூடியது. எடுத்துக்காட்டாக, ஒரு வகை, இறந்த அணுக்களை அழிக்கும். மற்ற வகைகள், நச்சுக்கிருமிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்புப்பொருட்களை உண்டாக்குகின்றன, அந்நிய பொருட்களின் நச்சுத்தன்மையை நீக்குகின்றன, அல்லது சொல்லர்த்தமாகவே நுண்ணுயிர்களைச் சாப்பிட்டு ஜீரணிக்கின்றன.”

18என்னே வியப்பூட்டும் வெகுவாக ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் அமைப்பு! இவ்வளவு நன்றாக ஒன்றிணைக்கப்பட்ட, முழுமையாக பாதுகாக்கப்பட்ட எதுவும் மிகவும் புத்திக்கூர்மையுள்ள அக்கறையுள்ள அமைப்பாளரைக் கொண்டிருக்கவேண்டும்—கடவுள்.

மற்ற அதிசயங்கள்

19மனித உடலில் வேறுபல அதிசயங்கள் உள்ளன. ஒன்று கண், எந்த நிழற்படக்கருவியும் அதற்கு நிகராக முடியாத விதத்தில் மிகச்சிறப்பான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வானியலறிஞர் ராபர்ட் ஜாஸ்ட்ரா சொன்னார்: “கண் வடிவமைக்கப்பட்டதாகக் காணப்படுகிறது; எந்தத் தொலைநோக்கி வடிவமைப்பாளரும் இதைவிட நன்றாகச் செய்திருக்க முடியாது.” பாப்புலர் போட்டோகிராஃபி என்ற வெளியீடு சொல்கிறது: “நிழற்படத் தகட்டைவிட மனித கண்கள் அதிக தூரம் பார்க்கின்றன. அவை முப்பரிமாணங்களை, வெகு விரிவான கோணத்திலும், உருச்சிதைவு இன்றியும், தொடர்ந்து நகருபவைகளையும் காண்கின்றன . . . நிழற்படக்கருவியை மனித கண்ணுடன் ஒப்பிடுவது நேர்மையான ஒப்புவமை அல்ல. மனிதனால் செய்யப்பட்ட நிழற்படக்கருவி அல்லது கம்ப்யூட்டர் கருவிகளைவிட புரியமுடியாத அளவு முன்னேற்றமான, செயற்கை அறிவுடன் செய்திகளைப் பகுக்கும் இயல்புடன், வேகத்துடன், வித்தியாசமான இயக்கங்களுடன் கூடிய முன்னேற்றமடைந்த மிகச்சிறந்த கம்ப்யூட்டரைப் போன்றது மனித கண்.”

20நம்முடைய உணர்வுடன்கூடிய முயற்சியின்றி நுட்பமான நம் உடல் உறுப்புக்கள் ஒத்துழைத்து இயக்கும் விதத்தையும் எண்ணிப்பாருங்கள். உதாரணமாக, நம்முடைய வயிற்றில் நாம் வித்தியாசப்பட்ட உணவு மற்றும் பானங்களைப் போடுகின்றோம். எனினும் உடல் அதை பகுத்து ஜீரணித்து சக்தியை உண்டாக்குகிறது. ஒரு மோட்டார் வாகனத்தின் வாயுக் கலனில் அத்தகைய பல வகைப்பொருட்களைப் போட்டு அது எவ்வளவு தூரம் போகிறது என்று பாருங்கள்! மேலும் பிறப்பின் அந்த அற்புதம் இருக்கிறது, அழகான குழந்தையைப் பிறப்பிக்கிறது—வெறும் ஒன்பதே மாதங்களில் பெற்றோரின் நகல். சில வருடங்களே வயதான குழந்தையின், சிக்கலான மொழிபேசும் திறமையைப் பற்றியதென்ன?

21ஆம், மனித உடலிலுள்ள வியப்பூட்டும் நுட்பமான சிருஷ்டிப்புகள் நம்மை பிரமிப்பினால் நிரப்புகின்றன. எந்தப் பொறியாளரும் இதற்கு நிகராகப் பொருட்கள் செய்யமுடியாது. இவை கண்மூடித்தனமான தற்செயலானவைகளின் கிரியைகளாக இருக்கமுடியுமா? நிச்சயமாகவே முடியாது. மாறாக, மனித உடலின் எல்லா அதிசயமான அம்சங்களையும் சிந்தித்துப்பார்த்துவிட்டு, நியாயமான ஆட்கள் சங்கீதக்காரனைப் போன்று சொல்கின்றனர்: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் [கடவுளைத்] துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்.”—சங்கீதம் 139:14.

உன்னதமான கட்டிட அமைப்பாளர்

22பைபிள் சொல்கிறது: “உண்மையில் எந்த வீடும் ஒருவனால் கட்டப்படுகிறது, ஆனால் இருக்கின்ற எல்லாவற்றையும் கட்டியவர் தேவன்.” (எபிரெயர் 3:4, தி ஜெருசலம் பைபிள்) எவ்வளவு எளிமையானதாய் இருந்தாலும், எந்த வீடும் ஒரு கட்டுபவரைக் கொண்டிருக்க வேண்டும். அப்படியென்றால் பலவிதமான உயிரினங்களைக் கொண்டுள்ள பூமியுடன்கூட, வெகு சிக்கலான பிரபஞ்சம் நிச்சயமாகவே ஒரு கட்டிட அமைப்பாளரைக் கொண்டிருக்க வேண்டும். விமானங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் கம்ப்யூட்டர்களைக் கண்டுபிடித்தவர்கள் இருப்பதை நாம் ஒப்புக்கொள்வதன் காரணமாக, அத்தகைய பொருட்களைச் செய்ய மூளையை மனிதர்களுக்குக் கொடுத்த ஒருவர் இருக்கிறதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டாமா?

23பைபிள், “வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும் . . . கொடுக்கிறவருமான யெகோவா [NW] தேவன்,” என்று அவரை அழைத்து அதை ஒப்புக்கொள்கிறது. (ஏசாயா 42:5) பைபிள் சரியாகவே அறிவிக்கிறது: “யெகோவாவே, [NW] தேவரீர், மகிமையையும், கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்வதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.”—வெளிப்படுத்துதல் 4:11.

24ஆம், அவர் உண்டாக்கியிருக்கும் பொருட்களின் மூலம் நாம் கடவுள் இருக்கிறார் என்பதை அறிய முடியும். “எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய [கடவுளுடைய] [குணாதிசயங்கள், NW] . . . என்பவைகள் [கடவுளால்] உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்.”—ரோமர் 1:20.

25உண்டாக்கப்பட்ட ஏதோவொன்று தவறாகப் பயன்படுத்தப்படுகின்ற உண்மைதானே அதனை உண்டுபண்ணினவர் ஒருவர் இல்லை என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. ஒரு விமானம் ஒரு பயணவிமானமாக சமாதானமான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம். ஆனால் ஒரு வெடிகுண்டுவிமானமாக அது அழிக்கவும்கூட பயன்படுத்தப்படலாம். சாவு-தொடர்பான முறையில் அது பயன்படுத்தப்பட்டுவருவது அதனை உண்டுபண்ணினவர் ஒருவர் இல்லை என்பதை அர்த்தப்படுத்தாது.

26அதேவிதமாக, மனிதர்கள் அடிக்கடி தீங்கு செய்கிறவர்களாக இருப்பது அவர்களை உண்டுபண்ணினவர் ஒருவர் இல்லை, கடவுள் இல்லை என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. ஆகவே பைபிள் சரியாகவே சொல்கிறது: “ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ? உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக் குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ?”—ஏசாயா 29:16.

27சிருஷ்டிகர் தாம் உண்டுபண்ணியிருப்பவற்றிலிருக்கும் வியப்பூட்டும் நுணுக்கங்களின் மூலமாக தம்முடைய ஞானத்தைக் காண்பித்திருக்கிறார். பூமியை வாழ்வதற்கு சரியானதை உண்டுபண்ணுவதன் மூலமும், நம்முடைய உடல்களையும் மனங்களையும் இத்தகைய அதிசயமான முறையில் உண்டுபண்ணுவதன் மூலமும், நாம் அனுபவித்துக்களிக்க இத்தனை அநேக நல்ல காரியங்களை உண்டு பண்ணுவதன் மூலமும் அவர் நம்மீது உண்மையில் அக்கறையுள்ளவராக இருப்பதைக் காண்பித்திருக்கிறார். நிச்சயமாகவே பின்வரும் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடைகளைத் தெரியப்படுத்துவதன் மூலம் அவர் அதேபோன்ற ஞானத்தையும் அக்கறையையும் காண்பிப்பார்: கடவுள் ஏன் துன்பத்தை அனுமதித்திருக்கிறார்? அதைக் குறித்து அவர் என்ன செய்வார்?

[கேள்விகள்]

1, 2. எந்த நியமம் கடவுள் ஒருவர் இருக்கிறாரா என்பதைத் தீர்மானிப்பதற்கு நமக்கு உதவிசெய்கிறது?

3, 4. கடவுள் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள பிரபஞ்சம் எவ்வாறு நமக்கு உதவிசெய்கிறது?

5-7. பூமியைப் பற்றிய என்ன உண்மைகள் அதற்கு வடிவமைப்பாளர் ஒருவர் இருப்பதைக் காண்பிக்கின்றன?

8. பூமியைப் பற்றியதில் நம்மிடமாக கடவுளுடைய அன்புள்ள அக்கறையைக் காண்பிக்கும் வேறு என்ன இருக்கிறது?

9. பூமியை யார் உண்டாக்கினார், அவர் அதை ஏன் உண்டாக்கினார்?

10, 11. உயிரணு ஏன் வியப்பூட்டுவதாக உள்ளது?

12. உயிரணுவின் ஆரம்பத்தைப் பற்றி ஒரு விஞ்ஞானி என்ன சொன்னார்?

13, 14. மூளை ஏன் ஓர் உயிரணுவைக் காட்டிலும் அதிக வியப்பூட்டுவதாக இருக்கிறது?

15. மூளையைப் பற்றி மற்றவர்கள் என்ன குறிப்புகளைச் சொல்கிறார்கள்?

16-18. (என்ன விதங்களில் இரத்த அமைப்பு தனித்தன்மைவாய்ந்ததாக இருக்கிறது? (பிநாம் என்ன முடிவுக்கு வரவேண்டும்?

19. கண் எவ்வாறு மனிதனால் உண்டுபண்ணப்பட்ட கருவிகளோடு ஒப்பிடுகிறது?

20. மனித உடலின் வியப்பூட்டும் மற்ற சில அம்சங்கள் யாவை?

21. உடலின் அதிசயங்களைச் சிந்திக்கையில், நியாயமான ஆட்கள் என்ன சொல்கிறார்கள்?

22, 23. () சிருஷ்டிகர் இருப்பதை நாம் ஏன் ஒப்புக்கொள்ளவேண்டும்? (பிபைபிள் கடவுளைப் பற்றி சரியாகவே என்ன சொல்கிறது?

24. கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?

25, 26. ஏதோவொன்றின் தவறான உபயோகம் ஏன் அதை உண்டுபண்ணினவர் ஒருவர் இருப்பதற்கு எதிரான ஒரு வாதமாக இல்லை?

27. துன்பத்தைப் பற்றிய நம்முடைய கேள்விகளுக்கு கடவுள் பதிலளிக்க நாம் ஏன் எதிர்பார்க்கலாம்?

[பக்கம் 5-ன் படம்]

அதன் பாதுகாப்பான வளிமண்டலத்தோடுகூட பூமி, அக்கறையுள்ள ஒரு கடவுள் நமக்காக வடிவமைத்திருக்கும் தனித்தன்மைவாய்ந்த வீடாகும்

[பக்கம் 6-ன் படம்]

வாழ்க்கையை நாம் முழுமையாக அனுபவிக்கும்பொருட்டு பூமி அன்புள்ள அக்கறையோடு உண்டாக்கப்பட்டது

[பக்கம் 7-ன் படம்]

‘ஒரு மூளை பூமியிலுள்ள எல்லா செய்தித்தொடர்பு இணைப்புகளிலும் இருப்பதைக்காட்டிலும் அதிகமான இணைப்புகளைக் கொண்டுள்ளது.’—அணுதிரண்ம அறிவியலர்

[பக்கம் 8-ன் படம்]

“கண் வடிவமைக்கப்பட்டதாகக் காணப்படுகிறது; எந்தத் தொலைநோக்கி வடிவமைப்பாளரும் இதைவிட நன்றாகச் செய்திருக்க முடியாது.”—வானியலறிஞர்