Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 8—கடவுளுடைய நோக்கம் நிறைவேற்றத்தை நோக்கி முன்னேறிச்செல்கிறது

பகுதி 8—கடவுளுடைய நோக்கம் நிறைவேற்றத்தை நோக்கி முன்னேறிச்செல்கிறது

பகுதி 8கடவுளுடைய நோக்கம் நிறைவேற்றத்தை நோக்கி முன்னேறிச்செல்கிறது

கலகத்தனமான மனிதர்கள் மற்றும் பேய்களின் ஆட்சி மனிதகுடும்பத்தை பல நூற்றாண்டுகளாக கீழ்நிலைநோக்கி இழுத்துச்சென்றிருக்கிறது. இருப்பினும் கடவுள் நம்முடைய துன்பங்களைக் கண்டும் காணாததுபோல் இருந்துவிடவில்லை. மாறாக, இந்த எல்லா நூற்றாண்டுகளின்போதும் மனிதர்களைப் பொல்லாப்பு மற்றும் துன்பத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக ஏற்பாடு செய்துவந்திருக்கிறார்.

2ஏதேனில் கலகம் ஏற்பட்ட சமயத்தில், கடவுள் இந்தப் பூமியை மக்களுக்கு ஒரு பரதீஸான வீடாக மாற்றவிருந்த ஓர் அரசாங்கத்தை அமைக்க தாம் நோக்கங்கொண்டிருந்ததை வெளிப்படுத்த ஆரம்பித்தார். (ஆதியாகமம் 3:15) பின்னால், கடவுளின் முக்கிய பிரதிநிதியாக, இயேசு வரவிருந்த கடவுளின் இந்த அரசாங்கத்தை தம்முடைய போதனையின் பொருளாக்கினார். அது மனிதவர்க்கத்தின் ஒரே நம்பிக்கையாக இருக்கும் என்பதாக அவர் சொன்னார்.—தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10; 12:21.

3இயேசு வரவிருந்த கடவுளின் அந்த அரசாங்கத்தை “பரலோக ராஜ்யம்” என்றழைத்தார், ஏனென்றால் அது பரலோகத்திலிருந்து ஆட்சிசெய்யவிருந்தது. (மத்தேயு 4:17) அவர் அதை “தேவனுடைய ராஜ்யம்” என்றும்கூட அழைத்தார், ஏனென்றால் கடவுளே அதை ஏற்படுத்தப் போகிறவர். (லூக்கா 17:20) கடந்த நூற்றாண்டுகளாக, திரும்பத் திரும்ப கடவுள் அந்த அரசாங்கத்தை உண்டுபண்ணுகிறவர்கள் யார், மற்றும் அது எதைச் சாதிக்கும் என்பதைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை எழுதுவதற்கு தம்முடைய எழுத்தாளர்களை தம்முடைய ஆவியினால் ஏவினார்.

பூமியின் புதிய அரசர்

4சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக இருக்கப்போகிறவரைப் பற்றிய அநேக தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றியவர் இயேசுவே ஆவார். மனிதவர்க்கத்தின் மீது அந்தப் பரலோக அரசாங்கத்தின் ஆட்சியாளருக்கு அவரே கடவுளுடைய தெரிவாக நிரூபித்தார். அவருடைய மரணத்துக்குப் பிறகு, கடவுள் இயேசுவை வல்லமையுள்ள சாவாமையுள்ள ஆவி சிருஷ்டியாக பரலோகத்தில் வாழ்வதற்கு உயிர்த்தெழுப்பினார். அவருடைய உயிர்த்தெழுதலுக்கு அநேக சாட்சிகள் இருந்தனர்.—அப்போஸ்தலர் 4:10; 9:1-9; ரோமர் 1:1-4; 1 கொரிந்தியர் 15:3-8.

5இயேசு பின்னர், “தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.” (எபிரெயர் 10:12) அங்கே அவர் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் அரசராக நடவடிக்கை எடுப்பதற்கு கடவுள் அவருக்கு அதிகாரமளிக்கும் அந்தக் காலத்துக்காக காத்திருந்தார். இது சங்கீதம் 110:1-லுள்ள தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது, அங்கே கடவுள் அவரிடம் சொல்கிறார்: “நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும்.”

6பூமியிலிருக்கையில், இயேசு அப்படிப்பட்ட ஒரு ஸ்தானத்துக்கு தாம் தகுதிப்பெற்றிருப்பதைக் காண்பித்தார். துன்புறுத்தலின் மத்தியிலும், அவர் கடவுளுக்குத் தம்முடைய உத்தமத்தைக் காத்துக்கொள்ள தெரிந்துகொண்டார். அவ்விதமாகச் செய்வதன் மூலம், சோதனையின் கீழ் எந்த மனிதனும் கடவுளுக்கு உண்மையுள்ளவனாக இருக்கமாட்டான் என்பதாக சாத்தான் உரிமைபாராட்டியபோது அவன் பொய்யே சொல்லியிருந்தான் என்பதை அவர் காண்பித்தார். ‘இரண்டாம் ஆதாமாகிய’ பரிபூரண மனிதன் இயேசு, பரிபூரண மனிதர்களைச் சிருஷ்டிப்பதில் கடவுள் தவறு செய்யவில்லை என்பதை காண்பித்தார்.—1 கொரிந்தியர் 15:22, 45; மத்தேயு 4:1-11.

7தம்முடைய ஊழியத்தின் ஒருசில ஆண்டுகளில் இயேசு செய்ததுபோல இத்தனை நன்மைகளை எந்த ஆட்சியாளர் எக்காலத்திலும் சாதித்திருக்கிறார்? கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வல்லமை பெற்று, இயேசு வியாதியஸ்தரை, ஊனமுற்றோரை, குருடரை, செவிடரை, ஊமையரை குணமாக்கினார். அவர் மரித்தோரையும்கூட உயிர்த்தெழுப்பினார்! ராஜ்ய வல்லமையில் வருகையில் உலகளாவிய அளவில் மனிதவர்க்கத்துக்கு அவர் என்ன செய்வார் என்பதை ஒரு சிறிய அளவில் அவர் செய்துகாட்டினார்.—மத்தேயு 15:30, 31; லூக்கா 7:11-16.

8இயேசு பூமியிலிருக்கையில் அவ்வளவு நன்மையைச் செய்ததால், அவருடைய சீஷனாகிய யோவான் இவ்வாறு சொன்னார்: “இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்.”—யோவான் 21:25. a

9இயேசு தயவும் பரிவிரக்கமுமுடையவராக, மக்களிடம் மிக அதிகமாக அன்புகொண்டவராக இருந்தார். அவர் ஏழ்மையிலிருந்தவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உதவிசெய்தார், ஆனால் செல்வம் அல்லது அந்தஸ்திலிருந்தவர்களுக்கு எதிராக அவர் தப்பெண்ணங்கொண்டவராக இருக்கவில்லை. நேர்மையான இருதயமுள்ளவர்கள் இயேசுவின் அன்பான அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். அவர் சொன்னார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” (மத்தேயு 11:28-30) கடவுள் பயமுள்ள ஆட்கள் அவரிடம் திரண்டுவந்து, அவருடைய ஆளுகையை எதிர்நோக்கி இருந்தார்கள்.—யோவான் 12:19.

கூட்டு அரசர்கள்

10மனித அரசாங்கங்கள் கூட்டுநிர்வாகிகளைக் கொண்டிருப்பது போலவே, கடவுளுடைய பரலோக ராஜ்யமும் கொண்டிருக்கிறது. இயேசுவைத் தவிர மற்றவர்கள் பூமியின் மீது ஆட்சிசெய்வதில் பங்குகொள்ளவிருக்கிறார்கள். ஏனென்றால் இயேசு தம்முடைய நெருங்கிய கூட்டாளிகளிடம், அவர்கள் தம்மோடுகூட மனிதவர்க்கத்தின் மீது ராஜாக்களாக ஆட்சிசெய்வார்கள் என்று வாக்களித்தார்.—யோவான் 14:2, 3; வெளிப்படுத்துதல் 5:10; 20:6.

11ஆகவே இயேசுவுடன், குறிப்பிட்ட எண்ணிக்கையான மனிதர்களும் பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள். இவர்கள் மனிதவர்க்கத்துக்கு நித்திய ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் கடவுளுடைய ராஜ்யத்தை உண்டுபண்ணுகிறார்கள். (2 கொரிந்தியர் 4:14; வெளிப்படுத்துதல் 14:1-3) ஆகவே சகாப்தங்களினூடாக, யெகோவா மனிதகுடும்பத்துக்கு நித்திய ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் ஓர் ஆட்சிக்கு அடித்தளத்தைப்போட்டிருக்கிறார்.

தனித்தியங்கும் ஆட்சி முடிவுக்கு வர உள்ளது

12இந்த நூற்றாண்டில் கடவுள் பூமியின் விவகாரங்களில் நேரடியாக செயல்பட்டிருக்கிறார். இந்தச் சிற்றேட்டின் 9-ம் பகுதி கலந்தாலோசிக்கப்போகும் விதமாக, கிறிஸ்துவின் கீழ் கடவுளுடைய ராஜ்யம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்டு, இப்பொழுது அது சாத்தானின் முழு ஒழுங்கையும் நொறுக்குவதற்கு தயார் நிலையில் இருப்பதை பைபிள் தீர்க்கதரிசனம் காண்பிக்கிறது. அந்த ராஜ்யம், “[கிறிஸ்துவின்] சத்துருக்களின் நடுவே ஆளுகைசெய்ய” ஆயத்தமாயிருக்கிறது.—சங்கீதம் 110:2.

13இதன் சம்பந்தமாக, தானியேல் 2:44-லுள்ள தீர்க்கதரிசனம் சொல்கிறது: “அந்த ராஜாக்களின் [இப்பொழுது இருப்பவை] நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை [பரலோகத்தில்] எழும்பப்பண்ணுவார்; அதன் அரசுரிமை வேறொரு ஜனத்துக்குவிடப்படுவதில்லை [மனித ஆட்சி மறுபடியும் ஒருபோதும் அனுமதிக்கப்படுவதில்லை]. அது [கடவுளுடைய ராஜ்யம்] இந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—ரிவைஸ்ட் ஸ்டான்டர்டு வெர்ஷன்.

14கடவுளைச் சார்ந்திராத எல்லா ஆட்சிகளும் வழியிலிருந்து நீக்கப்பட்டபின் பூமியின் மீது கடவுளுடைய ராஜ்ய ஆளுகை முழுமையாக இருக்கும். ராஜ்யம் பரலோகத்திலிருந்து ஆளுகைச் செய்வதன் காரணமாக, அது மனிதர்களால் ஒருபோதும் கெடுக்கப்படாது. ஆளும் அதிகாரம் முதலிடத்தில் எங்கிருந்ததோ அங்கே பரலோகத்தில் கடவுளிடம் இருக்கும். கடவுளுடைய ஆட்சி பூமி முழுவதையும் கட்டுப்படுத்தப் போவதன் காரணமாக, எவருமே பொய் மதங்கள் அல்லது அதிருப்தியான மனித தத்துவங்கள் மற்றும் அரசியல் கோட்பாடுகளால் இனிமேலும் தவறாக வழிநடத்தப்படமாட்டார்கள். அந்தக் காரியங்களில் எதுவுமே இருக்க அனுமதிக்கப்படாது.—மத்தேயு 7:15-23; வெளிப்படுத்துதல், அதிகாரங்கள் 17 முதல் 19 வரை.

[அடிக்குறிப்புகள்]

a இயேசுவின் முழு வாழ்க்கை பற்றிய விவரங்களுக்கு உவாட்ச்டவர் சொஸையிட்டி 1991-ல் வெளியிட்டிருக்கும் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை பார்க்கவும்.

[கேள்விகள்]

1, 2. துன்பத்தை நீக்கிப்போட எவ்விதமாக கடவுள் ஏற்பாடு செய்துவந்திருக்கிறார்?

3. பூமிக்கு வரவிருந்த அரசாங்கத்தை இயேசு என்னவென்று அழைத்தார், ஏன்?

4, 5. இயேசுவே தம்முடைய அங்கீகரிக்கப்பட்ட அரசர் என்பதை கடவுள் எவ்விதமாகக் காண்பித்தார்?

6. இயேசு கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக இருப்பதற்கு தகுதிபெற்றிருப்பதை எவ்விதமாகக் காண்பித்தார்?

7, 8. பூமியின் மீதிருக்கையில் இயேசு என்ன நல்ல காரியங்களைச் செய்தார், அவர் என்ன செய்துகாட்டினார்?

9. நேர்மையான இருதயமுள்ளவர்கள் ஏன் இயேசுவிடம் திரண்டுவந்தார்கள்?

10, 11. இயேசுவோடுகூட பூமியின் மீது ஆட்சிசெய்வதில் யார் பங்குகொள்வார்?

12, 13. கடவுளுடைய ராஜ்யம் இப்பொழுது என்ன செய்வதற்கு ஆயத்தமாயிருக்கிறது?

14. மனித ஆட்சி முடிவுக்கு வருவதன் விளைவாக வரப்போகும் சில நன்மைகள் யாவை?

[பக்கம் 18-ன் படம்]

இயேசு தாம் புதிய உலகில் என்ன செய்வார் என்பதைக் காண்பிப்பதற்கு பூமியிலிருக்கையில் வியாதியஸ்தரை குணப்படுத்தி, மரித்தோரை எழுப்பினார்

[பக்கம் 19-ன் படம்]

கடவுளுடைய பரலோக ராஜ்யம், அவரை சார்ந்திராத எல்லா வகையான ஆட்சியையும் நொறுக்கி இல்லாமற்போகும்படிச் செய்யும்