Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிருக்கும் இரத்தத்திற்கும் மரியாதை காண்பித்தல்

உயிருக்கும் இரத்தத்திற்கும் மரியாதை காண்பித்தல்

பாடம் 12

உயிருக்கும் இரத்தத்திற்கும் மரியாதை காண்பித்தல்

நாம் உயிரை (1), கருக்கலைப்பை (1) எப்படி கருத வேண்டும்?

கிறிஸ்தவர்கள், தாங்கள் பாதுகாப்பு உணர்வுள்ளவர்கள் என்பதை எவ்வாறு காண்பிக்கிறார்கள்? (2)

மிருகங்களைக் கொல்லுவது தவறா? (3)

உயிருக்கு மரியாதை காண்பிக்காத சில பழக்கங்கள் யாவை? (4)

இரத்தத்தைப் பற்றிய கடவுளுடைய சட்டம் என்ன? (5)

இது இரத்தமேற்றுதல்களை உட்படுத்துகிறதா? (6)

1. யெகோவா, உயிரின் ஊற்றுமூலமாக இருக்கிறார். உயிருள்ள அனைத்தும் தங்கள் உயிருக்காக கடவுளுக்குக் கடன்பட்டிருக்கின்றன. (சங்கீதம் 36:9) உயிர், கடவுளுக்குப் பரிசுத்தமானது. தன் தாயினுள் இருக்கும் பிறவாத குழந்தை ஒன்றின் உயிரும்கூட யெகோவாவுக்கு மிகவும் மதிப்பானது. வளர்ச்சியடைந்து வருகிற அப்படிப்பட்ட ஒரு குழந்தையை வேண்டுமென்றே கொல்லுவது கடவுளுடைய பார்வையில் தவறானது.—யாத்திராகமம் 21:22, 23; சங்கீதம் 127:4.

2. உண்மை கிறிஸ்தவர்கள் பாதுகாப்பு உணர்வுள்ளவர்கள். அவர்களுடைய கார்களும் அவர்களுடைய வீடுகளும் பாதுகாப்பானவையாக இருப்பதை அவர்கள் நிச்சயப்படுத்திக் கொள்கிறார்கள். (உபாகமம் 22:8) வெறுமனே இன்பத்திற்காகவோ கிளர்ச்சிக்காகவோ கடவுளுடைய ஊழியர்கள் உயிருக்கு ஆபத்தான அவசியமற்ற துணிச்சலான காரியங்களை மேற்கொள்வதில்லை. ஆகவே வேண்டுமென்றே மற்றவர்களைக் காயப்படுத்துகிற வன்முறையான விளையாட்டுக்களில் அவர்கள் பங்குகொள்வதில்லை. வன்முறையை ஊக்குவிக்கும் பொழுதுபோக்கை அவர்கள் தவிர்க்கிறார்கள்.—சங்கீதம் 11:5; யோவான் 13:35.

3. மிருக உயிரும் படைப்பாளருக்குப் பரிசுத்தமானது. உணவையும் உடையையும் அளிப்பதற்காக அல்லது தன்னை நோயிலிருந்தும் ஆபத்திலிருந்தும் காத்துக்கொள்வதற்காக ஒரு கிறிஸ்தவன் மிருகங்களைக் கொல்லக்கூடும். (ஆதியாகமம் 3:21; 9:3; யாத்திராகமம் 21:28) ஆனால் மிருகங்களை தவறாக நடத்துவது அல்லது வெறும் விளையாட்டுக்காக அல்லது இன்பத்திற்காக அவற்றைக் கொல்லுவது தவறு.—நீதிமொழிகள் 12:10.

4. புகைத்தல், பாக்கு மெல்லுதல், இன்பத்திற்காக போதைப்பொருட்களை உட்கொள்ளுதல் ஆகியவை கிறிஸ்தவர்களுக்கு ஏற்றவை அல்ல. இந்தப் பழக்கங்கள் தவறானவை, ஏனென்றால், (1அவை நம்மை அவற்றிற்கு அடிமைகளாக்குகின்றன, (2நம் உடல்களுக்குக் கெடுதலை ஏற்படுத்துகின்றன, மற்றும் (3அவை அசுத்தமான பழக்கங்கள். (ரோமர் 6:19; 12:1; 2 கொரிந்தியர் 7:1) இந்தப் பழக்கங்களை விட்டுவிடுவது மிகக் கடினமாக இருக்கலாம். ஆனால் யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்காக நாம் அவ்வாறு செய்ய வேண்டும்.

5. இரத்தமும் கடவுளுடைய பார்வையில் பரிசுத்தமானது. ஆத்துமா, அல்லது உயிர், இரத்தத்தில் இருக்கிறது என்று கடவுள் சொல்லுகிறார். ஆகவே இரத்தத்தைச் சாப்பிடுவது தவறு. சரியான விதத்தில் இரத்தம் வெளியேற்றப்பட்டிராத ஒரு மிருகத்தின் மாம்சத்தைச் சாப்பிடுவதும் தவறு. ஒரு மிருகம், கழுத்தை நெரித்து கொல்லப்பட்டால் அல்லது ஒரு கண்ணியில் சிக்கி செத்தால், அதைச் சாப்பிடக் கூடாது. அது ஈட்டியால் குத்தப்பட்டு அல்லது சுட்டுக் கொல்லப்பட்டதாக இருந்து, சாப்பிடுவதற்குப் பயன்படுத்தப்போவதாக இருந்தால், அதிலிருந்து இரத்தம் விரைவாக வெளியேற்றப்பட வேண்டும்.—ஆதியாகமம் 9:3, 4; லேவியராகமம் 17:13, 14; அப்போஸ்தலர் 15:28, 29.

6. இரத்தமேற்றுதல் ஒன்றை ஏற்றுக்கொள்வது தவறானதா? நாம் இரத்தத்திலிருந்து விலகியிருக்க வேண்டுமென்று யெகோவா தேவைப்படுத்துகிறார் என்பதை நினைவில் வையுங்கள். மற்றவர்களுடைய இரத்தத்தை அல்லது சேமித்து வைக்கப்பட்ட நம் சொந்த இரத்தத்தைக்கூட, நாம் நம்முடைய உடல்களுக்குள் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 21:25) ஆகவே உண்மை கிறிஸ்தவர்கள் இரத்தமேற்றுதல் ஒன்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இரத்தமில்லாத பொருட்களை ஏற்றிக்கொள்வது போன்ற மற்ற மருத்துவ சிகிச்சை முறைகளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் வாழ விரும்புகிறார்கள், ஆனால் கடவுளுடைய சட்டங்களை மீறுவதன்மூலம் தங்கள் உயிரைக் காப்பாற்ற அவர்கள் முயற்சிசெய்ய மாட்டார்கள்.—மத்தேயு 16:25.

[பக்கம் 25-ன் படம்]

கடவுளைப் பிரியப்படுத்த, இரத்தமேற்றுதல்கள், அசுத்தமான பழக்கங்கள், அவசியமற்ற துணிச்சலான காரியங்கள் ஆகியவற்றை நாம் தவிர்க்க வேண்டும்