Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுக்கு வெறுப்பூட்டும் நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும்

கடவுளுக்கு வெறுப்பூட்டும் நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும்

பாடம் 11

கடவுளுக்கு வெறுப்பூட்டும் நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும்

என்ன வகையான நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் தவறானவை? (1)

கடவுள் ஒரு திரித்துவம் என்பதாகக் கிறிஸ்தவர்கள் நம்ப வேண்டுமா? (2)

உண்மை கிறிஸ்தவர்கள் ஏன் கிறிஸ்மஸ், ஈஸ்டர், அல்லது பிறந்தநாட்களைக் கொண்டாடுவதில்லை? (3, 4)

இறந்தவர்கள் உயிரோடிருப்பவர்களுக்குக் கேடு செய்ய முடியுமா? (5) இயேசு ஒரு சிலுவையில் இறந்தாரா? (6) கடவுளைப் பிரியப்படுத்துவது எவ்வளவு முக்கியமானது? (7)

1. எல்லா நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் தவறானவை அல்ல. ஆனால் அவை பொய் மதத்திலிருந்து தோன்றியிருந்தால் அல்லது பைபிள் போதனைகளுக்கு விரோதமாக இருந்தால், கடவுள் அவற்றை அங்கீகரிப்பதில்லை.—மத்தேயு 15:6.

2. திரித்துவம்: யெகோவா ஒரு திரித்துவமா—ஒரு கடவுளில் மூன்று ஆட்களா? இல்லை! யெகோவா என்றழைக்கப்படும் பிதா, ‘ஒன்றான மெய்த்தேவன்.’ (யோவான் 17:3; மாற்கு 12:29) இயேசு அவருடைய முதற்பேறான குமாரன், அவர் கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார். (1 கொரிந்தியர் 11:3) பிதா குமாரனிலும் பெரியவர். (யோவான் 14:28) பரிசுத்த ஆவி என்பது ஓர் ஆள் அல்ல; அது கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தியாகும்.—ஆதியாகமம் 1:2, NW; அப்போஸ்தலர் 2:18.

3. கிறிஸ்மஸ் மற்றும் ஈஸ்டர்: இயேசு, டிசம்பர் 25 அன்று பிறக்கவில்லை. அவர் ஏறக்குறைய அக்டோபர் 1-ல் பிறந்தார்; ஒரு வருடத்தில், மேய்ப்பர்கள் இரவில் தங்கள் மந்தைகளை வெளியே தங்கவைத்த காலப்பகுதியாக அது இருந்தது. (லூக்கா 2:8-12) இயேசு, தம்முடைய பிறப்பைக் கொண்டாடும்படியாக ஒருபோதும் கிறிஸ்தவர்களுக்குக் கட்டளையிடவில்லை. மாறாக, அவர் தம்முடைய மரணத்தை நினைவுகூரும்படி, அல்லது ஞாபகத்தில் வைக்கும்படி தம்முடைய சீஷர்களிடம் சொன்னார். (லூக்கா 22:19, 20) கிறிஸ்மஸும் அதோடு சம்பந்தப்பட்ட பழக்கங்களும் பண்டைய பொய் மதங்களிலிருந்து தோன்றின. முட்டைகள் மற்றும் முயல்களைப் பயன்படுத்துவது போன்ற ஈஸ்டர் பழக்கங்களைக் குறித்ததிலும் அதுவே உண்மையாக இருக்கிறது. பூர்வக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸை அல்லது ஈஸ்டரைக் கொண்டாடவுமில்லை, இன்றைய உண்மை கிறிஸ்தவர்கள் அவற்றைக் கொண்டாடுவதுமில்லை.

4. பிறந்தநாட்கள்: பைபிளில் சொல்லப்பட்டுள்ள இரண்டே இரண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள், யெகோவாவை வணங்காதவர்களால் கொண்டாடப்பட்டன. (ஆதியாகமம் 40:20-22; மாற்கு 6:21, 22, 24-28) பூர்வக் கிறிஸ்தவர்கள் பிறந்தநாட்களைக் கொண்டாடவில்லை. பிறந்தநாட்களைக் கொண்டாடும் பழக்கம் பண்டைய பொய் மதங்களிலிருந்து தோன்றுகிறது. வருடத்தின் மற்ற சமயங்களில், உண்மை கிறிஸ்தவர்கள் அன்பளிப்புகளைக் கொடுக்கிறார்கள், ஒன்றுகூடி நல்ல நேரங்களை அனுபவிக்கிறார்கள்.

5. இறந்தவர்களைப் பற்றிய பயம்: இறந்தவர்கள் எதையும் செய்யவோ எதையும் உணரவோ முடியாது. நாம் அவர்களுக்கு உதவி செய்ய முடியாது; அவர்களும் நமக்குக் கெடுதல் செய்ய முடியாது. (சங்கீதம் 146:4; பிரசங்கி 9:5, 10) ஆத்துமா சாகிறது; மரணமடைந்தபின் அது தொடர்ந்து வாழ்வதில்லை. (எசேக்கியேல் 18:4) ஆனால் சில சமயங்களில் பேய்கள் எனப்பட்ட பொல்லாத தூதர்கள், இறந்தவர்களின் ஆவிகளைப் போல நடிக்கின்றனர். இறந்தவர்களைப் பற்றிய பயம் அல்லது அவர்களை வணங்குவதுடன் தொடர்புடைய எவ்விதமான பழக்கங்களும் தவறானவை.—ஏசாயா 8:19.

6. சிலுவை: இயேசு ஒரு சிலுவையில் இறக்கவில்லை. அவர் ஒரு கம்பத்தில், அல்லது ஒரு மரத்தில் இறந்தார். அநேக பைபிள்களில் “சிலுவை” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, வெறும் ஒரு மரத் துண்டையே அர்த்தப்படுத்தியது. சிலுவை அடையாளம் பண்டைய பொய் மதங்களிலிருந்து தோன்றுகிறது. சிலுவையானது, பூர்வ கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப்படவோ வணங்கப்படவோ இல்லை. ஆகவே, வணக்கத்தில் சிலுவையைப் பயன்படுத்துவது சரியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?—உபாகமம் 7:26; 1 கொரிந்தியர் 10:14.

7. இந்த நம்பிக்கைகளிலும் பழக்கவழக்கங்களிலும் சிலவற்றைக் கைவிடுவது மிகவும் கடினமாக இருக்கக்கூடும். உங்கள் நம்பிக்கைகளை மாற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தி உங்களை இணங்க வைக்க உங்கள் உறவினர்களும் நண்பர்களும் முயற்சிக்கக்கூடும். ஆனால் மனிதரைப் பிரியப்படுத்துவதைவிட கடவுளைப் பிரியப்படுத்துவது அதிக முக்கியமானது.—நீதிமொழிகள் 29:25; மத்தேயு 10:36, 37.

[பக்கம் 22-ன் படம்]

கடவுள் ஒரு திரித்துவம் அல்ல

[பக்கம் 23-ன் படம்]

கிறிஸ்மஸும் ஈஸ்டரும் பண்டைய பொய் மதங்களிலிருந்து தோன்றின

[பக்கம் 23-ன் படம்]

இறந்தவர்களை வணங்குவதற்கோ அவர்களிடம் பயப்படுவதற்கோ எவ்வித காரணமுமில்லை