Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய ஊழியர்கள் சுத்தமாக இருக்க வேண்டும்

கடவுளுடைய ஊழியர்கள் சுத்தமாக இருக்க வேண்டும்

பாடம் 9

கடவுளுடைய ஊழியர்கள் சுத்தமாக இருக்க வேண்டும்

நாம் ஏன் எல்லா விதத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும்? (1)

ஆவிக்குரிய விதத்தில் சுத்தமாக இருத்தல் (2),

ஒழுக்க சம்பந்தமாக சுத்தமாக இருத்தல் (3), மனம் சம்பந்தமாக சுத்தமாக இருத்தல் (4), உடல் சம்பந்தமாக சுத்தமாக இருத்தல் (5)

என்பது எதை அர்த்தப்படுத்துகிறது? என்ன வகை அசுத்தமான பேச்சுக்களை நாம் தவிர்க்க வேண்டும்? (6)

1. யெகோவா தேவன் தூய்மையும் பரிசுத்தமுமானவர். அவருடைய வணக்கத்தார், ஆவிக்குரிய விதத்திலும், ஒழுக்க சம்பந்தமாகவும், மனம் சம்பந்தமாகவும், உடல் சம்பந்தமாகவும் சுத்தமாக இருக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். (1 பேதுரு 1:16) கடவுளுடைய பார்வையில் சுத்தமாக நிலைத்திருப்பதற்கு உண்மையான முயற்சி தேவைப்படுகிறது. நாம் ஓர் அசுத்தமான உலகில் வாழ்கிறோம். தவறு செய்வதற்கான நம் சொந்த மனச்சாய்வுகளுக்கு எதிராக நாம் ஒரு போராட்டத்தையும் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் முயற்சியைக் கைவிட்டுவிடக் கூடாது.

2. ஆவிக்குரிய சுத்தம்: நாம் யெகோவாவைச் சேவிக்க விரும்பினால், பொய் மதத்தின் போதகங்கள் அல்லது பழக்கவழக்கங்கள் எவற்றையும் நாம் தொடர்ந்து கடைப்பிடித்துக் கொண்டிருக்க முடியாது. நாம் பொய் மதத்தை விட்டு, வெளியே வரவேண்டும்; அதை எந்த விதத்திலும் ஆதரிக்கக் கூடாது. (2 கொரிந்தியர் 6:14-18; வெளிப்படுத்துதல் 18:4) கடவுளைப் பற்றிய சத்தியத்தைப் படித்துவிட்டோமென்றால், பொய்யைப் போதிக்கிறவர்களால் தவறாக வழிநடத்தப்படாதபடி நாம் கவனமாக இருக்க வேண்டும்.—2 யோவான் 10, 11.

3. ஒழுக்க சம்பந்தமான சுத்தம்: தம்மை வணங்குகிறவர்கள் எல்லா சமயங்களிலும் உண்மை கிறிஸ்தவர்களாக நடந்துகொள்ள வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். (1 பேதுரு 2:12) நாம் செய்கிற எல்லா காரியங்களையும், நாம் ரகசியமாகச் செய்பவற்றையும்கூட அவர் பார்க்கிறார். (எபிரெயர் 4:13) பாலின ஒழுக்கக்கேட்டையும் இந்த உலகத்தின் மற்ற அசுத்தமான பழக்கவழக்கங்களையும் நாம் தவிர்க்க வேண்டும்.—1 கொரிந்தியர் 6:9-11.

4. மனம் சம்பந்தமான சுத்தம்: சுத்தமான, தூய எண்ணங்களால் நம் மனங்களை நாம் நிரப்பினால், நம்முடைய நடத்தையும் சுத்தமானதாக இருக்கும். (பிலிப்பியர் 4:8) ஆனால் நாம் அசுத்தமான காரியங்களிலேயே நம் கவனத்தை ஊன்றவைத்துக் கொண்டிருந்தால், அது பொல்லாத செயல்களில் விளைவடையும். (மத்தேயு 15:18-20) நம் மனங்களைக் கறைபடுத்தக்கூடிய வகையான பொழுதுபோக்குகளை நாம் தவிர்க்க வேண்டும். கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன்மூலம் நாம் நம் மனங்களைச் சுத்தமான எண்ணங்களால் நிரப்பலாம்.

5. உடல் சம்பந்தமான சுத்தம்: கிறிஸ்தவர்கள் கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்வதால், அவர்கள் தங்கள் உடல்களையும் உடைகளையும் சுத்தமாக வைக்க வேண்டும். நாம் கழிவறைக்குச் சென்று வந்ததும் நம் கைகளைக் கழுவ வேண்டும்; சாப்பிடுவதற்கு முன்பு அல்லது உணவு பொருட்களைக் கையாளுவதற்கு முன்பு கைகளைக் கழுவ வேண்டும். கழிவுப்பொருள் அகற்றும் சரியான அமைப்புமுறைகள் இல்லையென்றால், கழிவறை கழிவுகள் புதைக்கப்பட வேண்டும். (உபாகமம் 23:12, 13) உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது நல்ல உடல் நலத்தை அளிக்கிறது. ஒரு கிறிஸ்தவனின் வீடு, உள்ளேயும் வெளியேயும் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும். அந்தச் சமுதாயத்திலேயே ஒரு நல்ல முன்மாதிரியாக அது தனிச் சிறப்புடன் திகழ வேண்டும்.

6. சுத்தமான பேச்சு: கடவுளுடைய ஊழியர்கள் எப்போதுமே உண்மையைப் பேச வேண்டும். பொய் பேசுகிறவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார்கள். (எபேசியர் 4:25; வெளிப்படுத்துதல் 21:8) கிறிஸ்தவர்கள் கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்துவதில்லை. அவர்கள் மோசமான கேலிப் பேச்சுகளை அல்லது அசுத்தமான கதைகளைக் கேட்பதோ சொல்வதோ இல்லை. அவர்களுடைய சுத்தமான பேச்சின் காரணமாக, அவர்களுடைய வேலையில் அல்லது பள்ளியிலும் சுற்றுவட்டாரத்திலும் வித்தியாசப்பட்டவர்களாக தனிச்சிறப்புடன் காணப்படுகின்றனர்.—எபேசியர் 4:29, 31; 5:3.

[பக்கம் 19-ன் படம்]

கடவுளுடைய ஊழியர்கள் எல்லா வகையிலும் சுத்தமானவர்களாக இருக்க வேண்டும்