Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் யார்?

கடவுள் யார்?

பாடம் 2

கடவுள் யார்?

உண்மையான கடவுள் யார், அவருடைய பெயர் என்ன? (1, 2)

அவருக்கு என்ன வகையான உடல் இருக்கிறது? (3)

அவருடைய தலைசிறந்த பண்புகள் யாவை? (4)

அவரை நாம் வழிபடும்போது, உருவங்களையும் அடையாள சின்னங்களையும் பயன்படுத்த வேண்டுமா? (5)

கடவுளைப் பற்றி நாம் கற்றுக்கொள்ளக்கூடிய இரண்டு வழிகள் யாவை? (6)

1. மக்கள் அநேக பொருட்களை வழிபடுகிறார்கள். ஆனால் ஒரே ஒரு உண்மையான கடவுளே இருக்கிறார் என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது. அவர் வானத்திலும் பூமியிலுமுள்ள எல்லாவற்றையும் படைத்தார். அவர் நமக்கு உயிரைக் கொடுத்ததால், நாம் வழிபட வேண்டியவர் அவர் ஒருவரே.—1 கொரிந்தியர் 8:5, 6; வெளிப்படுத்துதல் 4:11.

2. கடவுளுக்கு அநேக பதவிப்பெயர்கள் இருக்கின்றன, ஆனால் அவருக்கு ஒரு பெயர் மட்டுமே இருக்கிறது. அந்தப் பெயர் யெகோவா. பெரும்பாலான பைபிள்களில், கடவுளுடைய பெயர் நீக்கப்பட்டு, ஆண்டவர் அல்லது கர்த்தர் என்ற பதவிப்பெயர்களால் மாற்றீடு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் பைபிள் எழுதப்பட்டபோது, யெகோவா என்ற பெயர் அதில் சுமார் 7,000 தடவை காணப்பட்டது!—யாத்திராகமம் 3:15, NW; சங்கீதம் 83:17.

3. யெகோவாவுக்கு ஓர் உடல் இருக்கிறது, ஆனால் அது நம்முடையதைப் போன்றது அல்ல. “தேவன் ஆவியாயிருக்கிறார்,” என்று பைபிள் சொல்லுகிறது. (யோவான் 4:24) ஆவியாயிருக்கிற ஒருவர், நம்முடையதைவிட அதிக உயர்ந்த உயிர் வகையைச் சேர்ந்தவர். எந்த மனிதனும் கடவுளை ஒருபோதும் கண்டதில்லை. யெகோவா பரலோகத்தில் வாழ்கிறார், ஆனால் அவரால் எல்லாவற்றையும் பார்க்க முடியும். (சங்கீதம் 11:4, 5; யோவான் 1:18) பரிசுத்த ஆவி என்பதுதான் என்ன? அது கடவுளைப் போல ஓர் ஆள் அல்ல. மாறாக, அது கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தியாக இருக்கிறது.—சங்கீதம் 104:30.

4. பைபிள், யெகோவாவின் ஆளுமையை நமக்கு வெளிப்படுத்துகிறது. அன்பு, நீதி, ஞானம், வல்லமை ஆகியவை அவருடைய தலைசிறந்த பண்புகள் என்று அது காண்பிக்கிறது. (உபாகமம் 32:4; யோபு 12:13; ஏசாயா 40:26; 1 யோவான் 4:8) அவர் இரக்கமும், தயவும், மன்னிக்கும் தன்மையும், தாராள குணமும், பொறுமையும் உள்ளவர் என்றும் பைபிள் நமக்குச் சொல்லுகிறது. நாம், கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகளைப் போல, அவரைப் பின்பற்ற முயல வேண்டும்.—எபேசியர் 5:1, 2.

5. நம்முடைய வழிபாட்டில் நாம் உருவங்கள், படங்கள், அல்லது அடையாள சின்னங்களுக்கு தலைவணங்கவோ அவற்றிடம் ஜெபிக்கவோ வேண்டுமா? இல்லை! (யாத்திராகமம் 20:4, 5) நாம் யெகோவாவை மட்டுமே வழிபட வேண்டும் என்று அவர் சொல்லுகிறார். அவர் தம்முடைய மகிமையை வேறு யாரோடும் அல்லது வேறு எதனோடும் பகிர்ந்துகொள்ள மாட்டார். நமக்கு உதவிசெய்வதற்கான எவ்வித சக்தியும் உருவங்களுக்கு இல்லை.—சங்கீதம் 115:4-8; ஏசாயா 42:8.

6. இன்னும் சிறந்த முறையில் எவ்வாறு நாம் கடவுளை அறிந்துகொள்ளலாம்? ஒரு வழியானது, அவர் படைத்திருக்கிற காரியங்களைக் கவனித்து, அவை நமக்கு என்ன சொல்லுகின்றன என்பதைக் குறித்து ஆழமாகச் சிந்திப்பதன் மூலமாகவும் ஆகும். கடவுளுக்கு அதிக வல்லமையும் ஞானமும் இருக்கிறது என்று அவருடைய படைப்புகள் நமக்குக் காண்பிக்கின்றன. அவர் உண்டாக்கியிருக்கும் எல்லாவற்றிலும் அவருடைய அன்பை நாம் பார்க்கிறோம். (சங்கீதம் 19:1-6; ரோமர் 1:20) கடவுளைப் பற்றி கற்றுக்கொள்வதற்கு மற்றொரு வழியானது, பைபிளைப் படிப்பதன் மூலமாகும். அதில் அவர், தாம் எப்படிப்பட்ட கடவுள் என்பதைப் பற்றி இன்னுமதிகத்தை நமக்குச் சொல்லுகிறார். அவர் தம்முடைய நோக்கத்தைக் குறித்தும் நாம் என்ன செய்யும்படி அவர் விரும்புகிறார் என்பதைக் குறித்தும் நமக்குச் சொல்லுகிறார்.—ஆமோஸ் 3:7; 2 தீமோத்தேயு 3:16, 17.

[பக்கம் 5-ன் படங்கள்]

பைபிளிலிருந்தும் படைப்பிலிருந்தும் நாம் கடவுளைப் பற்றி கற்றுக்கொள்கிறோம்